Thursday, May 8, 2014

முகமத் காயிப்: முழுமையடாத ஒரு அசார்
கேயிப்பை முதலில் பார்த்த போது எனக்கு அசருதீன் தான் நினைவு வந்தார். என் நண்பர்களும் அவர் கால்பக்கம் சொடுக்கும் ஷாட்டை பார்த்து அசரே தான் என்றார்கள். அசரைப் பொன்று ஒடிசலான ”போய் டீ வாங்க வரவா” என்கிற மாதிரியான துறுதுறுவென்ற தோற்றம். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் கங்குலியின் கீழ் கண்டறியப்பட்ட சேவாக், யுவ்ராஜ் போன்றோர்களுடன் காயிப்பும் முக்கியமான திறமையாகவே கணிக்கப்பட்டார். ஆனால் பின்னர் மத்திய வரிசை மட்டையாளர்களின் நெருக்கடியில் காணாமல் போனார்.
காயிப் பந்தை அடிக்கும் போது எனக்கு நொறுக்குத் தீனியை மெல்கிறாற் போன்ற மொறுக் எனும் உணர்வு தோன்றும். அப்படி ரொம்ப கூர்மையான மட்டையாளர். திராவிட் போல் நீண்ட நேரம் ஆடக் கூடியவர். அதேவேளை இன்னும் நளினமானவர்.

சில விசயங்களில் துரதிஷ்டவசமானவர். திராவிட் இந்திய அணிக்கு தோன்றிய காலகட்டத்தில் காயிப் இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் ஒருநாள் மட்டையாட்டம் கணிசமான மாற்றங்களைக் கண்டது. இன்னும் அதிரடியாய் பரபரப்பாய் காயிப்பின் ஆளுமைக்கு தோதில்லாமல் ஆனது. நேட்வெஸ்ட் தொடர் இறுதி ஆட்டத்தில் அவரது 87 பிரபலமானது. ஆனால் அந்த ஆட்டத்தில் கூட அவர் நீண்ட நேரம் ஆட யுவ்ராஜின் அதிரடி ஆட்டம் தான் ஒரு ஆக்ஸிஜன் குழாய் போல் உதவியது.
பின்னர் காயிப்பை எண் 6 அல்லது 7 இல் அனுப்பினார்கள். அந்தளவுக்கு இந்திய மத்திய வரிசை மட்டையாட்டம் செழுமையாக இருந்தது. கேயிப்பின் முக்கிய குறை அவரால் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைக்க முடியவில்லை என்பது. 45வது ஓவரில் வந்தால் முதல் சில பந்துகளை தடுத்தாடுவார். பின்னர் ஒற்றை ஓட்டங்களை எடுப்பார். இது பார்க்க எரிச்சலாக இருக்கும். அவர் அந்த சூழலை விரும்பவில்லை என்பது தெளிவாய் தெரியும்.
இன்னொரு குறை அவருக்கு காட்பாதர் யாரும் இல்லை என்பது. ரோஹித் ஷர்மா உருப்படியாய் ஒரு சதம் அடிக்க அவருக்கு நூற்றுக்கு மேல் ஆட்டங்களை வாய்ப்பாக அளித்தார் தோனி. ஆனால் கேயிப் தான் இறுதியாக ஆடிய டெஸ்ட் ஆட்டங்களில் ஆஸி அணிக்கு எதிராக 90 மற்றும் மே.இ தீவுகளுக்கு சென்று 145உம் அடித்தார். ஆனாலும் அவர் அடுத்து வந்த ஆட்டங்களில் நீக்கப்பட்டார். ஒரு பேட்டியில் கேயிப்பிடம் இது ஏன் எனக் கேட்கிறார்கள். “எனக்கே தெரியல” என சோகமாய் சொல்கிறார்.
திராவிட் மற்றும் அப்போதைய தேர்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களுக்கு என்று சில விருப்புவெறுப்புகள் இருக்கும். தேர்வை தர்க்கரீதியாய் செய்ய மாட்டார்கள். காயிப்பின் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை கொண்டு வந்தார்கள். கார்த்திக் அநியாயத்துக்கு பதற்றமானவர். ஒன்றை யோசித்தபடி இன்னொன்றை பண்ணியபடி புதிதாய் இன்னொன்றை திட்டமிடுவார். அதனால் தான் அவரால் இன்றைக்கும் அணியில் நிலைக்க முடியவில்லை. ஆனால் கார்த்திக்குக்கு உள்ள குறைந்த பட்ச ஆதரவு காயிப்புக்கு இல்லாமல் போனது துரதிஷ்டவசமானது.
இன்னொரு பக்கம் காயிப்பும் பொறுப்பு தான். அவர் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின் உள்ளூர் ரஞ்சி தொடர்களில் ஓட்டங்களை குவிக்கவில்லை. வி.வி.எஸ் லஷ்மணை அணியில் இருந்து நீக்கியதும் அவர் மூன்று முச்சதங்களை அடித்தார். ரவீந்திர ஜடேஜா கூட அவரே கூச்சப்படும்படியாய் அதே சாதனையை செய்தார். ஆனால் காயிப் கடந்த 9 வருடங்களில் எந்த ரஞ்சி தொடரிலும் ஒருமுறை கூட ஆயிரம் ஓட்டங்களை அடையவில்லை. இதற்கு ஒரு காரணம் நத்தை போல் ஒடுங்கும் அவரது ஆட்ட முறை. ரொம்ப தடுப்பாட்டத்தில் மூழ்கி விடுவார். 120 பந்துகளை சந்தித்து 30 ஓட்டங்களை எடுப்பார். அப்பாடா என நினைக்கும் போது அவுட்டாகி விடுவார். அவரது உள்ளூர் ஆட்ட சராசரி 40%. அவரை விட சுமாரானவர்கள் 50% மேல் வைத்திருக்கிறார்கள். சதங்களின் எண்ணிக்கையும் சராசரி வீர்ர்களுடன் ஒப்பிடுகையில் குறைவு – 18. ஆனால் ஒரு வீரரின் திறமையை தரத்தை வெறும் எண்களைக் கொண்டு அளவிடக் கூடாது தான்.
வெற்றியடைய திறமை, உழைப்பை கடந்து வேறேதோ ஒன்று தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் 32 வயது வரை வெறும் மிதவேக வீச்சாளராக இருந்து மும்பை அணிக்குள் கூட இடம் தரப்படாமல் அதற்கு மேல் கால்சுழல் பந்து வீச ஆரம்பித்து 42 வயதில் ஐ.பி.எல்லில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரவீன் தாம்பேவை எப்படி புரிந்து கொள்ள?
காயிப் இப்போது நடக்கும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் போட்டியிடுகிறார். இரண்டாம் இன்னிங்ஸில் என்னாகிறார் பார்ப்போம்!

No comments: