Monday, May 26, 2014

அந்தியின் பாடல் - கென்னத் பியரிங்
தூங்கு மக்கேட்
பகலை மடித்து வை. அது ஒரு பளீரென்ற ஸ்கார்ப் அல்லவா.
தூக்கிப் போடு அதை.
உன்னை சீட்டு கோபுரம் போல் தனித்தனியாய் கழற்றி வை.
ஒரு உயர்ந்த கட்டிட்த்தில் சாம்பல் நிற எலி ஆகிட நேரம் வந்து விட்டது.
அங்கே செல். செல் இப்போது.
பெரும் ஆணிகளைப் பார். குழாய்களுக்கு பின்னால் ஓடு.
சுவர்களில் குடுகுடுவென ஓடு.
உன்னை அழைக்கிற அப்பெண்ணிடம் ஊர்ந்து போ, அவள் முலைகள் வெதுவெதுப்பானவை.
ஆனால் இங்கே ஒரு பிரேதம். கொலைகாரன் யார்?
உன் துப்பாக்கியால் அவனைக் கொல். அவனைக் கடந்து ஊர்ந்து அப்பெண்ணிடம் போ.

உறங்கு மக்கேட்.
ஒரு கையை படுக்கையில் பக்கவாட்டில் போடு.
கைக்கடிகாரத்தை முடுக்கு.
நீ ஒரு கனவான் அல்லவா, முக்கியமானவனும் கூட.
கொட்டாவி விடு. போ தூங்கு.


சூரியனை நோக்கி மெல்ல திரும்பும் கண்டம் அமைதியாக உள்ளது.
உன் கடிகார முள் நாளைக் காலைக்காக காத்திருக்கிறது.
மேலும் நீ இன்னும் உயிருடன் இருக்கிறாய்.
உன்னைப் புதைப்பதற்கு இன்னும் ரொம்ப காலம் இருக்கிறது.
எப்போதோ, ஆனால் இப்போது அல்ல.
எப்போதோ நிகழும் தான், எப்போதோ, அது உறுதி.

உன் மூளையை உதிரி உதிரியாய் பிரி,
அதில் பசித்த உன் வாய்களை மூடு,
ரொம்ப நாளாய் உணவு ஊட்டப்பட்டாயிற்று.
இப்போது தூங்கு, நீ ஒரு கனவான் அல்லவா. மக்கேட், உயிருடன், மனசமநிலை இழக்காமல்.
சமூகத்தில் உயர்ந்த இடம் கொண்ட ஒரு கனவான்.
சீமாட்டியைப் பார்த்தால் உன் தொப்பியை சரித்து மரியாதை தெரிவி.
மேயரிடம் பேசு.
நீ மேயரின் நெருங்கிய நண்பன் அல்லவா?
உண்மை. மேயரின் நண்பன்.
ரோமானியாவின் அரசியை சந்தித்தாய் அல்லவா. உண்மை.

சரி நீ தூங்கு.
பழைய சூரியனின் கீழ் உறங்கும் நாயாக இரு.
ஆப்பியன் வேயில், பழைய சூரியனின் கீழ் சோம்பிக் கிடக்கும் பூடில் நாயாக இரு.
புல்வெளியில் படுத்தபடி கடந்து செல்லும் ராணுவ வீர்ர்களை வேடிக்கைப் பார்க்கும் நாயாக இரு.
அழைக்கிற பெண்ணின் பின்னால் ஓடு.
வாள் ஏந்திய காவலரைப் பார்த்தால் ஓடித் தப்பு. அது உன் எலும்புகளை நொறுக்கிடும்.
பெரும் அச்சம் கொள்.
ஐந்தாவது அவென்யுவில் உள்ள நடைபாதையில் பழைய சூரியனுக்கு கீழ்
சுருண்டு சோம்பித் தூங்கு.
தூங்கு மக்கேட்.
கொட்டாவி விடு.
தூங்கு.

2 comments:

Raja M said...

அபிலாஷ், நலந்தானே?

நல்ல கவிஞர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துகிறீர்கள்.

இந்தக் கவிதையின் முதல் இரண்டு வரிகள்:
" ... இரவை மடித்து வை. அது ஒரு பளீரென்ற ஸ்கார்ப் அல்லவா"

என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். இரவு எப்படி பளீரென்ற ஸ்கார்ஃப் ஆகும்? என நெருடலாகப் பட்டது. இரவை மடித்தபின் வருவது பகலல்லவா? மூலத்தைப் பார்த்ததில்:

Sleep, McKade.
Fold up the day. It was a bright scarf.
Put it away.
Take yourself to pieces like a house of cards.

என்று உள்ளதே?


அன்புடன்,
ராஜா

Abilash Chandran said...

அன்புள்ள ராஜா
பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விட்டேன். கவனப் பிழை.
ஆர்.அபிலாஷ்