Wednesday, May 14, 2014

வெளிச்சம்

அன்று வெளிச்சம் கடுமையாக இருந்தது. இரவு முழுக்க ஒரு விநோதமான வெப்பம் அவரை தொந்தரவு செய்தது. மதிய வேளை தூக்கம் போல் அசுவஸ்தையாக புரண்டு புரண்டு படுத்தார். உடல் முழுக்க சருமம் தீப்புண் பட்டது போல் எரிந்தது. தயக்கமாக ஒரு அந்நிய உரையாடலுக்குள் நுழைவது போல் மெல்ல மெல்ல தூங்க முயன்றார்.
கோடை ரொம்ப சீக்கிரமாகவே வந்து விட்டிருந்தது. வானிலை மையம் மழை பெய்யும் என்று ஊகித்திருந்தது. வெறும் ஊகம் தான். வானம் தகிடு போல் பளபளத்தது. மொட்டை மாடிக்கு சென்று சுவர் விளிம்பில் சாய்ந்து அமர்ந்தார்.

கடந்த எத்தனையோ வாரங்களாக இப்படித்தான். இரவு அடர்த்தியானதும் மொட்டை மாடிக்கு வந்து அமர்ந்து கொள்வார். தூங்க முயலமாட்டார். விளிம்பில் ஒட்ட விழுவது போல் அமர்வார். அடிக்கடி கீழே பார்ப்பார். அப்போது எதிர்பாராமல் மறந்து போன நினைவுகள் எல்லாம் மீள வரும். எப்படியோ பாதி தூக்கம் வந்து விடும். அப்போது கீழே அரைபிரக்ஞையில் சென்று படுத்துக் கொள்வார். அவரைப் பொறுத்தவரையில் தூக்கம் என்பது தூங்குவதற்கு முன்னான நிலை தான்.
தம்பி மனைவி ஜலஜா அவருக்கு தூக்கமில்லாத வியாதி என்று நினைத்து அக்கறைப்பட்டாள். காலை எழுந்ததும் தேனில் பச்சை வெங்காயத்தை அரைத்து கலைந்து தந்தாள். உணவில் ஆரைகீரையும் தயிரும் அதிகம் சேர்த்தாள். வாராந்திர பத்திரிகைகளில் பார்த்த மருத்துவ குறிப்புகளை மிகுந்த அக்கறையுடன் வேளை வரும் போதெல்லாம் சொன்னாள். மூலிகை சேர்த்து காய்ச்சின எண்ணெயை தலைக்கு தேய்க்க சொன்னாள். அது நல்ல குளிர்ச்சியாக இருந்தது. படுக்கைக்கு மேல் கொல்லங்கோவை செடியை கட்டி தொங்க விட்டாள். அதன் வாசனை சுகந்தமாக இருந்தது; ஆனால் அதே வேளை அவரது வாயில் கசப்பை சுரந்தது. இரவு படுக்கும் முன் பாலுடன் அவள் ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் இருந்து வாங்கி வந்த லேகிய உருளையை விழுங்கத் தந்தாள். அது கூழாங்கல் போல் வயிற்றுக்குள் உருண்டது. வயிற்றுக்குள் அந்த பிரக்ஞை சற்று நிம்மதி தந்த்து. பின்னர் அடுத்து என்ன பண்ணுவது என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவார். இரவில் பண்ணுவதற்கு தூக்கம் மட்டுமே தனிமையற்ற காரியம். வேறு என்ன செய்தாலும், டி.வி பார்த்தாலும், படித்தாலும், பாட்டு கேட்டாலும், அது டி.வி பார்ப்பதாகவோ படிப்பதாகவோ பாட்டு கேட்பதாகவோ இல்லை. அவர் ஒரு இரவுப் பிராணி அல்ல. தூங்காமல் இருக்கும் போது தான் ஏதோ குற்றம் இழைத்து விட்டதாக அவருக்கு தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கும். ஜன்னல் கதவுகளை இறுக்கமாக மூடி திரைகளை இழுத்து விட்டு போர்த்திக் கொள்வார். அப்போதும் வெளிச்சம் கசிந்து கசிந்து அந்த இடம் ஒரு மெல்லிய பிரகாசம் கொண்டு விடும். அது அவருக்கு தாங்க முடியாத உக்கிரமான வெளிச்சமாக தோன்றியது.
அவர் ஜலஜாவிடம் தனக்கு வியாதி ஏதும் இல்லை என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவள் அவர் கூச்சப்பட்டு தயங்குவதாக நினைத்துக் கொண்டாள். தம்பி அவருக்கு மனோவியாதி என்று சொன்னான். அவனுக்கு தெரிந்த எழுத்தாளர் இது போல் இரவு தூங்காமல் இருந்து இருந்து ஒரு நாவலே முடித்து விட்டார். அவரை காட்டும் ஒரு பிரபலமான மருத்துவரிடமும் அழைத்துப் போவதாய் மறைமுகமாய் குறிப்பிட்டான். கீழ்வீட்டு நொண்டி ஐயங்கார் தாத்தா வயதாக வயதாக தூக்கம் வராமல் ஆவது இயல்பு தான் என்றார். அவரது மனைவி ஒரு கல்யாணம் செய்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்றாள்.
அவருக்கு நரைகூட எல்லாம் இல்லை. கவலை என்றோ ஏமாற்றம் என்றோ ஒன்றுமில்லை. அவற்றை உணர்வதற்கான தீர்க்கமான நம்பிக்கைகளும் லட்சியங்களும் தனக்கு இல்லை என்று உணர்கிற வயது. காம ஏக்கம் சிறுநீர் கழிக்கும் உந்துதல் போல் ஆகி விட்டிருந்தது. அவருடையது சாதிப்பதற்கும் சாதித்ததை எண்ணி ஆறுதல் அடைவதற்கும் இடைப்பட்ட வயது. பொத்தான் அழுத்தியதும் நிறுத்தின வேகத்தில் வேலையை ஆரம்பிக்கிற வயது. அடுத்தவர்களுக்காக கவலைப்பட்டு அதை தன் கவலை என்று எண்ணிக் கொள்ள கற்றிருந்தார்.
மொட்டை மாடியில் பகலின் வெப்பம் அகலவில்லை. கண்ணாடியில் மின்விளக்கை அடித்தது போல் வெளிச்சம் எங்கிருந்தோ வந்து அவர் மீது எதிரொலித்தது. யாரோ தன்னை அழைப்பதான உள்ளுணர்வு தோன்றிக் கொண்டிருந்தாலும் அவர் வழக்கம் போல் திரும்பிப் பார்க்கவில்லை. மூச்சை நன்றாக இழுத்து விட்டார். இப்போதெல்லாம் மூச்சு விட்டாலே அதில் ஏதாவது உடற்பயிற்சி உண்டோ என்று தோன்ற ஆரம்பித்தாகி விட்டது. சுற்றுமுற்றும் பார்த்தார்.
இந்த நகரம் சீக்கிரமாகவே தூங்கப் போய் விடுகிறது. ஆனால் தெருவிளக்குகளும் ஓசைகளும் வாகன விளக்குகளும் ஓய்வதில்லை. ரகசியமாய் விழித்திருக்கும் யாரோ ஒருவருக்காக இந்த நகரம் தனியாக இயங்குகிறது; தனி பரிபாஷையில் தனி கண்களுடன் விநோத ஓசைகளுடன் உரையாடுகிறது.
வழக்கம் போல் பாதி தூக்கம் வருவது வரை கொட்ட கொட்ட விழித்திருந்தார்.
அன்று அவருக்கு பல வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் மீண்டும் நினைவு வந்தது. தனது தூக்கமின்மைக்கு காரணம் அதுவாகக் கூட இருக்கலாம் என்று நினைத்தார். 1990 ஆகஸ்டு மாதம். மேற்கு வங்கத்தில் காலிகட்டில் ஒரு இருவார ஆடுதள தயாரிப்பு முகாம் முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். மனோஹர் போக்கூர் சாலை வழியாக ஹாஸ்ரா கிராஸிங் வந்து அங்கே தன் நண்பன் சுப்ரதோ தாஸுக்காக காத்திருந்தார். இருவருமாக ஒரு மலையாளிக் கடையில் தேநீர் அருந்தி விட்டு ரயில்நிலையம் சென்று சேர்வதற்கு நேரம் சரியாக இருக்குமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். அன்று மாநில பந்த். பேருந்து, ரிக்ஷா, ஆட்டோ ஒன்றும் ஓடவில்லை. சில காங்கிரஸ் தொண்டர்கள் வேறு தாக்குதலில் மாண்டிருந்ததால் நிலைமை கொதி நிலையை எட்டி விட்டிருந்தது. தாஸ் தனது மாமாவின் பைக்கை எடுத்து வருவதாக சொன்னான். அவர்களுக்கு அன்று தில்லிக்கு சென்றாக வேண்டிய கட்டாயம். தாஸ் டீக்கடைக்காரரின் சைக்கிளை கடன் வாங்கி சின்னங்சிறு சந்துகளின் ஊடே புகுந்து சென்றான். அவர் காத்திருந்தார். அப்போது தான் அது நேர்ந்தது.
இரு எறும்பு சாரிகள் எதிர்பாராமல் சந்தித்து குழம்பி ஒன்றில் ஒன்று கலக்குமே அப்படித் தான் இரு எதிரிக் கட்சிகளின் தொண்டர்கள் அன்று அந்த சந்திப்பில் ஒன்றோடொன்று கலந்தார்கள். கொஞ்ச நேரத்தில் யார் எங்கே என்றே புரிய வில்லை. அவர் ஒரு குட்டை மதில் மேல் ஏறி குத்திட்டு அமர்ந்தார். அந்த கூச்சல் அமளியில் ஓடிப் போவதற்கு எந்த பக்கமும் இடமில்லை. மேலும் ஓடுபவர்கள் வேறு கூட்டத்தில் சிக்கி மிதிபட்டனர். அவர்களின் ஆங்கார கத்தல் தான் உச்சமாக கேட்டது. சிவப்புக் கொடிகள் தென்பட்டன. ஆனால் அவற்றில் கட்சி சின்னமில்லை. இது அவருக்கு விநோதமாக பட்டது. தலைக்கவசம் அணிந்து இடுப்பில் துப்பாக்கியும் கையில் கழியுமாய் மப்டியில் பத்து பதினைந்து பேர் வந்தனர். போலீஸ் என்று தான் பலரும் ஆரம்பத்தில் நினைத்தார்கள். மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட இவர்களை நோக்கி கைகளை ஆட்டியபடி மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றனர். ஆனால் அவர்கள் கூட்டத்தை கலைக்காமல் அன்றைய காங்கிரஸ் கட்சி இளம்தலைவி ஒருவரை நோக்கி உன்னிப்பாக சென்றானர். வழியில் வந்தவர்களை தாக்கி மிதித்தனர். அந்த பெண் பார்க்க சாதாரணமாக இருந்தார். அவரிடம் அந்த சூழ்நிலையில் உறுதியோ வீரமோ ஒன்றும் தென்பட இல்லை. முதன்முறையாக கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பை காணும் குழந்தையை போல் நின்று கொண்டிருந்தார். அப்போதுஒக்க்கெ மெரே தே” (கொல்லுடா அவளை) என்று யாரோ கத்தினார்கள். தலைக்கவசக்காரர்களின் கழிகள் பட்பட் என்று விழுந்தன. சதசதவென்று தசை சிதையும் ஓசை. மக்கள் திமுதிமுவென்று ஓடினர். சுவரில் இருந்து அவர் கீழே விழுந்தார். எழுந்து ஓடப்பார்த்த போது தலைக்கவசம் அணிந்த ஒரு ரவுடி ரத்தம் தோய்ந்த கழியால் அவரது தலையில் ஓங்கி அடித்தான். அவர் உடனே மயங்கவில்லை. தலையை பிடித்தபடி உட்கார்ந்திருந்தது தான் நினைவிருக்கிறது. சுற்றி நடந்தது எதுவும் மனதில் பதியவில்லை.
தன்னோடு அதே வேளை அந்த இளம் தலைவியின் மண்டையும் உடைக்கப்பட்டது என்று பின்னர் செய்தித்தாள் வழி அறிந்து கொண்டார். மண்டை உடைந்ததில் இருந்து அந்த தலைவியின் அரசியல் வாழ்வு பாதை மாறியது. எதிர்பாராத வளர்ச்சியை கண்டாள். முன்னில்லாத மூர்க்கத்தை பெற்றாள்; சதா சாவை பற்றி எண்ணியபடி இருந்ததால் அவளுக்கு சாவு பயமே இல்லாமல் ஆகியது. தன் மரணத்தை நோக்கி ஒவ்வொரு காயாக நகர்த்தி போன அவளை பின் எந்த சக்தியாலும் இயக்கத்தாலும் தடுக்க முடியவில்லை. ஆனால் அவரது வாழ்க்கை அப்படியான அதிரடி முன்னேற்றங்களை ஒன்றும் காணவில்லை. நிதானமான கதியில் மெல்ல மெல்ல அங்கீகாரங்களையும் உயர்பதவியையும் அடைந்தார். தாக்குதலுக்கு பின் முன்னிருந்ததை விட மென்மையானவராக எதற்கும் எதிர்ப்பு காட்டாதவராக மாறினார். சக-ஊழியர்களிடமும் மேலதிகாரிகளுடம் இதுவே அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேற்சொன்ன தலைவிக்கும் அவருக்கும் ஒரே ஒற்றுமை தூக்கமின்மையில் மட்டும் இருந்தது. பொதுவாக தினசரிகளில் அத்தலைவியின் படத்தை பார்க்கும் போது அவருக்கு தன் தலைக்காயம் நினைவுக்கு வந்ததில்லை. ஒரு பெரும் அரசியல் நிகழ்வுடன் அற்பமாய் சம்மந்தப்பட்டுள்ளதன் குற்றவுணர்வு மட்டுமே எழும். ஆனால் அன்று இரவு அவருக்கு முதன் முறையாக தன் பிரச்சனை தலைக்காயத்தால் இருக்கக் கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். மெல்ல மெல்ல களைத்து அரைத்துக்கத்தில் நடந்து தன் அறையை அடைந்தார். சில்லென்ற தரையில் படுத்தார்.
விளக்கு அணைந்திருந்தது; வெளியே தெருவிளக்குகளும் உயிர்க்கவில்லை. ஆனாலும் மொட்டை மாடி போலவே அறையும் ஒளியில் எரிவதாக அவருக்கு பட்டது. வெளிச்சத்தில் மூழ்கியபடி கனவில் நுழைந்தார். பாதங்கள் சுட்டன. சுரீரென்ற சூட்டில் மார்புக்கணுக்கள் கூசின. அந்தரங்க உறுப்புகள் எரிந்தன. நிர்தாட்சண்ணியமற்ற வெயிலில் கட்டாந்தரையில் நிர்வாணமாய் ஓடிக் கொண்டிருந்தார். யாரோ அவரை துரத்துவதாக கனவு பாதியில் மாறியது. ஆனால் துரத்தும் நபரின் உருவம் தெளிவாக இல்லை. ஆனால் துரத்தும் உருவம் அவரை விட வேகமாய் திரை விலக்கியதும் ஒளி முன்னே பாய்வது போல் முன்னே ஓடி மறைந்தது. எதிர்பாராத திசைகளில் இருந்து வெளிப்பட்டு அவரை விரட்டியது. தன்னை எளிதில் முந்திச் செல்லும் உருவம் அவ்வப்போது தன்னை முன்னே ஓட விட்டு ஏன் துரத்துகிறது என்று அவருக்கு விளங்கவில்லை. களைக்கும் வரை, கால்கள் துவளும் வரை ஓடினார். பின்னர் மறைவான இடம் தேடி பதுங்கிக் கொண்டார். ஆனால் அந்த பிரதேசத்தில் மறைவு என்பதே சாத்தியமில்லை என பட்டது. வானம் கூட முப்பரிமாணமாக ஒரு கூடாரம் போல் அவர் மீது குவிந்து இருந்தது.
வெளிச்சம் மழை போல் கொட்டியது. வெளிச்சம் பெருகும் போது எங்குமே பதுங்க முடியாது. ஒரு லாந்தர் விளக்கைப் போல் வெளிச்சம் அவருக்குள் இருந்து பாய்வதை பார்த்தார். ஒரு பூச்சி விளக்கை சுற்றி பறக்கிறது. சுற்றி சுற்றி வரவர அதன் உருவம் சிறுக்கிறது. அவரது மொத்த உலகமும் சுழல்கிறது. தலை கிறுகிறுக்க எழுந்தார். அசதியாக இருந்தது. முட்டி வலித்தது. தோள் கனத்தது. எழுந்து குழாயில் இருந்து கொட்டும் இயற்கையான வெதுவெது நீரில் குளித்தார். குளித்து வந்ததும் அவருக்கு தூங்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வாரக்கணக்கான தூங்காமல் வேலை பார்த்த ஒருவரின் இச்சை போல் இருந்தது அது. ஆனால் நீண்ட நாள் சரியாக சாப்பிடாத ஒருவர் முன் உணவு போல் அவருக்கு தூக்கம் அப்போது இருந்தது.
சி.எம்.சி அரங்கம். சென்று சேர்ந்ததும் முதலில் ஆடுதளத்தை பார்வையிட்டார். முந்தின இரவு பார்த்ததில் இருந்து சில வேறுபாடுகள் தெரிந்தது. அவர் குனிந்து அமர்ந்து ஆடுதளத்தின் பரப்பை வருடினார். பார்த்தால் தெரியாததை வருடியும் செவியால் கேட்டுமே மேலும் சூட்சுமமாக அறிய முடியும். சில இடங்களில் புற்கள் மழிக்கப்பட்டது போல் வழவழவென்று இருந்தது. மைதான தளத்தின் பராமரிப்பு தலைமை பணியாளர் ஆறுமுகத்தை அழைத்து சுட்டிக் காட்டினார். அவர் தலையாட்டிக் கொண்டு மருந்து கொண்டு வந்து தெளித்தார். அவர் பூஞ்சாண் பிடித்த அந்த பகுதிகளை மெல்ல சுரண்டி களிமண் கலவையை பூசி புற்களை நடும்படி கேட்டார்.
 ஆறுமுகம் வழக்கம் போல் தனதான விளக்கத்தை அளித்தார். அவருக்கு அறுபது வயது கடந்து விட்டது. நாற்பது வருட அனுபவம். அறிவியல் தெரியாவிட்டாலும் ஆடுதளங்களை ஒரு தாயைப் போல் அறிந்தவர். ”திரும்பவும் மண் படிவம் அமைத்தால் பூஞ்சாண் பரவும் சார்என்று ஆரம்பித்து குனிந்த தலையுடன் தன் தரப்பை பேசினார். அவர் ஏற்கனவே கவனித்து காலையிலேயே மருந்து தெளித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்தால் அது ஆடுதளத்தின் ஒருமித்த தன்மையை பாதிக்கும் என்றும் சொன்னார். ஆனாலும் ஆறுமுகம் போன தலைமுறை மனிதர்களின் கண்ணியத்துடன் மேலதிகாரியை சுணங்காமல் பின்பற்றினார்.
அவர் அடுத்து ஆறுமுகத்திடம் விளிம்புப் பகுதிகளில் மைதானத்தின் புற்கள் புகுந்து பரவி இருப்பதை காட்டி களைகளை அகற்ற சொன்னார். களைகள் தளத்துக்குள் புகாமல் இருக்கும் பொருட்டு தான் பிளாஸ்டிக் தாள்களை எல்லையில் ஆழமாக ஒரு வேலி போல் புதைத்து வைத்ததை ஆறுமுகம் பதிலாக சொன்னார். என்ன வேலை சொன்னாலும் தான் கடமையில் இருந்து வழுவவில்லை என்று ஒருமுறை நிரூபித்து விட்டே போனால் போகட்டும் என்கிற பாவனையில் சொன்னதை செய்வார். ஆறுமுகத்தின் பதில்கள் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
மூத்த ஆடுதள பணியாளர்கள் ஆடுதள அமைப்பை ஒரு சடங்காக பார்க்கிறார்கள். இந்தியாவில் ஆடுதளங்கள் பால் உள்ள அத்தனை குறைகளுக்கும் இவர்களே காரணம் என்று அவருக்கு தோன்றியது. சரியான பௌதிக, வேதியல் காரணிகளின் செயல்பாடும், போதுமான வெயிலும், நீரும், சரியான அறிவியல் ரீதியான பராமரிப்பும் சோதனை முறைகளும் இருந்தால் தான் ஒரு லட்சிய ஆடுதளத்தை உருவாக்க முடியும். இயற்கைச் சூழலில் ஒரு ஆய்வகம் நடத்துவது போன்றது இவ்வேலை; ஒவ்வொன்றையும் அளந்து சீராக துல்லியமாக செய்து நினைத்த சுபாவத்தை ஆடுதளத்துக்கு தர முடியும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். ஆனால் போன தலைமுறையாளர்கள் ஒரு ஆடுதளத்துக்கு என்று தனி விதி மற்றும் தீர்மானிக்கப்பட்ட சுபாவம் உண்டென்று நம்புகிறார்கள். அவர்கள் ஆடுதளத்தின் இயல்பில் குறுக்கிடவே விரும்ப மாட்டார்கள். நிஜத்தில் ஒரு ஆடுதளம் ஒரு கணித சூத்திரம் போன்றது. அதன் ஒவ்வொரு சிறுகூறுக்கும் காரணங்களும் விளக்கங்களும் உள்ளன. சூத்திரத்தில் தவறு என்றால் அது சந்தேகமில்லாமல் மனிதத் தவறு தான்.
இப்படித்தான் ஜெய்ப்பூர் மைதானம் ஒன்றிற்கு ஆடுதள மேற்பார்வையாளராக வாரியம் சார்பில் அனுப்பப்பட்டிருந்தார். கடந்த சில வருடங்களாக அந்த ஆடுதளம் மிக மந்தமாக இருந்தது. பந்து நண்டு போல் ஊர்ந்து சாந்தமாக எழுந்தது. சாதாரணமாக அணிகள் இரு இன்னிங்ஸை நிறைவு செய்தாலே பெரிய காரியம் என்ற நிலை இருந்தது. அவர் போனதுமே உள்ளூர் ஆடுதள தயாரிப்பாளர்கள் தளத்துக்கு ரொம்ப வயதாகி விட்டது. அதன் காலம் முடிந்து விட்டது; அதனால் தான் மெத்தனம் என்றார்கள். ஆனால் அவர் தனது அறிக்கையில் இதை மறுத்து எழுதினார்.
ஆடுதளத்துக்கு வயதாவது ஒன்றும் இல்லை. அது குறிப்பிட்ட சில அடுக்குகளால் ஆனது. தொடர்ந்த பயன்பாட்டில் அடுக்குகள் சீர்குலையும்; வீணான புல் இலைகளும் காய்ந்த வேர்களும் அதில் மிகுந்து அதை ஸ்பாஞ்ச் போன்று மாற்றும். குப்பைகளை அகற்றி அடுக்குகளை சீரமைத்தால் ஆரோக்கியமாக மாற்றி விடலாம் என்று அவர் சொல்லியது மட்டுமின்றி வரும் மாதங்களில் நிரூபித்தும் காட்டினார்; ஆனால் அங்கு அவர் சீரமைத்த ஆடுதளத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் நான்கு நாட்களில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. தோல்வியின் பொறுப்பு ஆடுதளத்தின் சுபாவத்தை மாற்றிய தள-அமைப்பாளரான அவர் மீது விழுந்தது. அவர் தனது சாகச விழைவு காரணமாய் அந்த ஆடுதளத்தை ஆஸ்திரேலிய ஆடுதளம் போல் அமைத்து விட்டதாய் பழி வந்தது.
ஒரு இந்தியக் கணவனுக்கு மனைவியின் சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் என் அம்மா போல் நீ சமைக்கவில்லை என்று சொல்வான். இந்திய சுபாவத்துக்கு அந்நியமாக ஆடுதளத்தை மாற்றியதாக அவர் மீது மீடியா விசாரணை, அணித்தலைவரின் குற்றச்சாட்டு மட்டுமல்ல வாரியத்தின் அதிகார பூர்வ எச்சரிக்கையும் வந்தது. மோசமான மெத்தனமான ஆடுதளம் தான் இந்திய மரபு என்றால் நம் ஆட்டத்தரம் எப்படி மேம்படும் என்று பழைய சம்பவத்தை நினைத்து கறுவியபடி அவர் தன் தயாரிப்பில் இருந்த அடுத்த கொண்டிருந்த ஆடுதளத்துக்கு சென்றார்.
இம்முறை நான் யாரது வற்புறுத்தலுக்கும் பணிய மாட்டேன். இந்த ஆடுதளம் ஒரு சரிசமமான ஆட்டத்துக்கு துணை போகும் படி அறிவியல் துல்லியத்துடன் அமைப்பேன். திறமையானவர்கள் ஜெயிக்கட்டும்என்று சொல்லிக் கொண்டார்.
இரண்டாவது ஆடுதளத்தின் இளம்பழுப்பு நிறம் அவருக்கு அதிருப்தியாக இருந்தது. விரல் கணுவால் மெல்ல முட்டி காதை தரையோடு ஒட்ட வைத்து கேட்டார். பிறகு பவுன்ஸ் சோதிக்கும் கருவியை கொண்டு வந்து பார்த்தார். அவரது ஊகம் சரியாகவே இருந்தது. துள்ளல் அளவு சர்வதேச தரப்படி இல்லை. ஆழத்தில் படிந்திருந்த காய்ந்த இலை வேர் போன்ற குப்பைகள் சரியாக அகற்றப்படவில்லை. தான் என்னதான் படித்து படித்து சொன்னாலும் தலைமை பணியாளரில் இருந்து கீழே இருப்பவர் வரை முழுமையாக கடைபிடிப்பதில்லை; அத்தியாவசியமான விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள்.
தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சில பணியாளர்களை அழைத்து தளத்தின் அங்கங்கே கோடு கோடாக கொத்தி குப்பைகளை அகற்ற சொன்னார். பின்னர் அதுவும் திருப்திப் படாமல் வெண்டிரி கட்டர் எந்திரத்தை வரவழைத்து உள்ளிருந்த காய்ந்த வேர்களை அகற்ற சொன்னார்.
மைதானத்தில் என்ன கடுமையான வெயிலில் அடித்தாலும் அவருக்கு களைப்பதில்லை. அது அவரது வேலையின் பகுதி. அதன் அளப்பரிய ஒளி அவரை உற்சாகப்படுத்தியது. இதே போன்றொரு பிரகாசமான காலையில் சுமார் ஒரு லட்சம் பேர் இங்கு நடக்கப் போகும் ஆட்டத்தை காணப்போகிறார்கள். இருபத்திரண்டு பேர் சுணங்காமல் ஆடப்போகிறார்கள். அவர் அறிந்த வரை வெயில் தான் சிறந்த கிரிக்கெட்டுக்கான அடிப்படை தேவை. விளக்கை சுற்றி பறக்கும் பூச்சிகள் போல மக்கள் இங்கு கூடுவது அந்த அபரிதமான வெளிச்சத்தில் மனிதன் தன்னைக் கடந்து மேலெழுவதை பார்க்கத் தான். வெயில் மனிதனை தூண்டி எழ வைப்பதைப் போல தான் ஆடுதளத்தையும் உயிர்கொள்ள வைக்கிறது. அதன் ஜீவனே வெயிலில் இருந்து பெறும் ஒளியில் தான் உள்ளது.
அன்று எவ்வளவு அங்குலம் புல்லை கத்தரிக்க வேண்டும் எந்த எடை ரோலரை பிரயொகிக்க வேண்டும் என்று ஆடுதளங்களுக்கு ஏற்ப குறிப்பாக சொல்லி விட்டு படிகள் ஏறி தன் அலுலக அறைக்கு சென்றார். அங்கு வெளிச்சம் மந்தமாக இருந்தது.
அச்சூழல் மோசமாக படமாக்கப்பட்ட ஒரு எம்.எம்.எஸ் காட்சியை போல் கரகர ஒலியுடன் ரகசியமாய் கண்காணிக்கப்படும் அந்தரங்க உணர்வுடன் இருந்தது. அவருக்கு அந்த வெளிச்சம் தரும் கண்காணிப்பு உணர்வு எரிச்சலாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு சில நாட்கள் தொடர்ந்து பெய்த மழை நினைவு வந்தது.
அவருக்கு ஆக கசப்பாக இருந்த நாட்கள் அவை. ஒரு பெரிய ஏரி போல் மூழ்கி விட்டது மைதானம். மூன்று மாதங்களாக அவர் தயாரித்த ஆடுதளங்கள் முழுக்க பாழாகின. நீர் வடிக்கும் அமைப்பு நவீனமாக இருந்ததால் மழை நின்று சில நாட்களில் ஓரளவு வடிந்து பயன்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது. பிறகு பூஜ்யத்தில் இருந்து வேலையை துவக்கினார். பின்னர் இரு வாரங்களுக்கு முன் மீண்டும் சில நாட்கள் தூறல் போட்டது. ஆனால் இன்று பார்த்தால் மழையின் தடமே தெரியவில்லை.
இன்னும் இரு வாரங்களில் இந்தியா-தென்னாப்பிரிக்கா சர்வதேச ஒருநாள் ஆட்டம் துவங்க உள்ளது. ஆடுதளம் தயாரிப்பதற்கான போதுமான அவகாசமோ பருவநிலையோ இல்லை தான். மழையில் என்னதான் மூடி வைத்தாலும் தளத்தின் ஆழத்தில் ஈரம் இருக்கவே செய்தது. புற்கள் வளர வளர வேர்கள் மூலம் அந்த ஈரம் மேலே வரும். அந்த பயம் ஒரு ஓரமாய் அவரை உறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் ஆட்டம் நெருங்கி வருவதால் அறிவியல்படி சில மணிநேரங்கள் தினசரி திறந்து வைத்தால் போதாது. வெளிநாட்டு களிமண். வெளிநாட்டு புற்கள். ஈரம் அதிகமானால் ஆடுதளம் ஆபத்தானது என்று கடுமையான கண்டனங்கள் எழும். ஆட்டம் ரத்தாகலாம். மைதானம் சில வருடங்கள் தடை செய்யப்பட்டாலும் ஆகலாம். அவர் தான் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக வேண்டும்.
இதையெல்லாம் கருதித் தான் வெயிலுக்காக அவர் இருவாரங்களாக தவமிருந்தார். சரியாக ஆட்டத்துக்கு முன்பு கடுமையான வெயில் அடித்து வந்தது. அவருக்கு சில வேளை ஆடுதளத்திற்கு என்று தலைவிதி ஏதும் இருக்குமோ என்று சந்தேகம் கூட ஏற்பட்டது.
எவ்வளவு வெயில் அடித்தும் அவருக்கு போதாமல் இருந்தது. அப்போது தான் இது தன்னைக் கடந்த ஆற்றல்என்று சமாதானம் கொள்வார். ஆனால் பிறகு சுதாரித்து நடைமுறைப்படி என்ன செய்யலாம் என்று சிந்திப்பார். போர்வையை திறந்து ஆடுதளத்தை நாள் முழுதும் காய விடும் முடிவை அப்படித்தான் எடுத்தார். இதில் மூத்த பணியாளர்களுக்கு பொதுவாக உடன்பாடில்லை தான். ஆனால் அவர் வழக்கம் போல் விடாப்பிடியாக தன் முடிவைத் தான் நடைமுறைப்படுத்தினார்.
வழக்கமான பயன்படுத்தப்படும் புல்வகை அல்ல என்பதால் அதன் உயரமும் அடர்த்தியும் சற்று சிக்கலாக இருந்தது. வேர் அழுத்தமாக மண்ணைப் பிடிக்கும் வகை என்பதால் ஆடுதளத்தை உறுதியாக வைத்திருக்கும் என்று வெளிநாட்டு நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதனால் அவர் நாள் பூரா காயவிடலாம், எளிதில் வெடிப்புகள் உருவாகாது என்று நம்பினார். அதனாலேயே புற்களை வழக்கத்தை விட குறைவாகவே கத்தரித்து வந்தார். ஆட்டத்துக்கு முந்தின நாள் தான் முழுமையாக மழிப்பார். கூடவே லைட் ரோலரும் போட்டு விட்டால் கச்சிதம்.
நான்கு நாட்களுக்கு பிறகு ஆடுதளத்தில் குனிந்து விரலால் சுண்டி காதை வைத்து கேட்டார். பொத்தலாக சத்தம் வந்தது. பணியாளர்களை அழைத்து அவர்கள் போதுமான நீர் விடவில்லை என்று கத்தினார். ஆறுமுகம் வந்து நியாயப்படுத்தினார். அவர் அறிவுறுத்தல் படி சற்றும் பிசகாமல் வேலை நடந்து வருகிறது. இந்த ஆடுதளத்தை நாற்பது வருடங்களாக அறிவார். அதன் சுபாவம் எப்போதும் இப்படி மெத்தனமாகவே இருக்கும், தட்டினால் தொப்பென்ற ஓசை கேட்கும். ஆடுதளத்தின் பண்பை ஒரேயடியாக மாற்ற முடியாது; அதற்காக முயல்வதும் எதிர்விளைவுகளையே தரும். இங்கு வரும் அணிகள் மும்பை அல்லது பஞ்சாப் ஆடுதளங்கள் போல் எகிறும் என்று எதிர்பார்ப்பதில்லையே!
நாற்பது வருடங்களாய் செய்தால் ஒரு தவறு நியாயமாகி விடுமா என்று அவர் ஆறுமுகத்திடம் திரும்ப கேட்டார். இந்த தளத்துக்கு நோய் வந்திருக்கிறது, அதை குணப்படுத்த வேண்டும் என்றார். ஆறுமுகம் விநோதமாக அவரை பார்த்தார். பின் தலையாட்டி விட்டு குத்திட்டு அமர்ந்தார். பலவீனமான பகுதிகளை ஆறுமுகம் அவர் சொன்னது போல் குறித்துக் கொண்டார். சில பகுதிகளில் ஈரம் அதிகமாக உள்ளதையும் பிற பகுதிகள் அதிக வறட்சியாக உள்ளதையும் காட்டி ஆடுதளம் அமைக்கும் போதே ஏதோ ஆதார தவறு நேர்ந்துள்ளது என்று அவர் நிரூபித்தார். ஆறுமுகம் அதனால் என்ன என்பது போல் வறட்டு புன்னகை செய்தார்.
மதியமானதும் வேலை முடிந்து பணியாட்கள் கிளம்பினர். அவர் ஆடுதளத்தில் சப்பணமிட்டு அமர்ந்தார். தன்னைச் சுற்றி பார்த்தார். மைதானம் பன்மடங்கு பெரிதாக தோன்றியது. கண்ணை மூடிக் கொண்டார். வேறேங்கும் இல்லாத ஒரு அமைதி. அந்த அமைதி இருளாக மாறியது. மனிதன் ஒளியை விழையும் பூச்சி என்றாலும் அவனுக்கு நிம்மதி இருளில் தான் உள்ளது என்று அவருக்கு தோன்றியது.
இன்னும் ஏழு நாட்கள் இருந்தன. தேசிய அணித்தலைவர் அவருடன் ஆடுதள மேற்பார்வைக்கு வந்த போது அதில் ஓடிய விரிசல் ஒன்றை சுட்டிக் காட்டினார். வறட்சியாக விரிசல்களுடன் இருந்தால் பரவாயில்லை, ஆனால் இது மேற்கிந்திய பார்படோஸ் தீவின் ஆடுதளங்களைப் போல் பச்சையாக அல்லவா உள்ளது என்று ஏமாற்றமாக சொன்னார். சுழலர்களுக்கு அல்ல, எதிரணி வேகவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக போகிறது என்று அவர் கவலைப்படுவது தெரிந்தது. அணியில் மொத்தம் மூன்று வேக வீச்சாளர்களையே தேர்ந்திருந்தார்கள். அதில் மூத்த வீச்சாளர் காயமுற்றிருந்தார். பதிலுக்கு ஒரு சுழல்பந்து ஆல்ரவுண்டரை அணித்தலைவரின் விருப்பபடி எடுத்திருந்தார்கள். அவருக்கு அணித்தலைவரின் இப்போதைய தர்மசங்கடம் புரிந்தது. ஆனால் புற்களை அதிகமாக வெட்டினாலோ மழித்தாலோ தளம் முழுக்க வறட்சியாகி மேல்தளம் இளகிக் போய் விடும். ஆட்டத்தின் முதல் ஓவரிலே பந்து கடுமையாக சுழன்று எகிறும். நாற்பது ஓவர்களில் 160க்கு ஆல் அவுட் ஆகி ஆட்டம் முடிந்தால் பிறகு ஸ்பான்சர்கள், மீடியா, சர்வதேச கவுன்சில் மற்றும் உள்ளூர் நிர்வாகம் அவரைத் தான் பலிகடா ஆக்குவார்கள்.
இரண்டு நாட்கள் முன்பு தூறல் போட்டதும் அதனால் படிந்த ஈரமும் தான் விரிசலுக்கு காரணம். எதிர்பாராத வெயிலும் தூறலும் சுருங்கி விரிய வைப்பதால் தளம் விரிசலடைய வாய்ப்புண்டு. அவர் மேலும் ஆராய்ந்து மண் அடுக்குகளில் ஒன்று இளகி உள்ளதை அறிந்தார். அதை சீர் செய்ய சொன்னார். அது மிக சிரமமான நேரம் பிடிக்கிற வேலையாக இருந்ததால் பணியாளர்கள் முணுமுணுத்தபடி இருந்தனர். அன்று வெயில் வழக்கத்தை விட கடுமையாக நாற்பது டிகிரி இருந்தது. கடவுள் தன் பக்கம் இருக்கிறார் என்று அவர் நினைத்துக் கொண்டார். காலை அலுவலகம் வந்ததும் தன் அறை ஜன்னலை திறந்தும் பால்கனியில் நின்றபடியும் வெயிலை வெறித்து பார்த்தபடி இருப்பார். மைதானத்தில் திட்டுத்திட்டாய் விழும் வெளிச்சம் மெல்ல மெல்ல வெண்குஷ்டம் போல் பரவுவதை பார்ப்பார்.
இரவு வேளை ஒருமுறையும் நீர்தெளிக்க சொன்னார். காலை தெளிக்கும் நீர் பகல் உஷ்ணத்தில் ஆவியாகி விட ஆடுதள மண்ணின் கீழுள்ள உப்பு மேலே வருகிறது; இது தான் வெடிப்புக்கு காரணம் என்று ஆறுமுகத்தை அழைத்து விளக்கினார். இது போன்ற விளக்கங்கள் தரும் சலிப்பு ஆறுமுகத்தின் முகத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. இரவில் நீர்தெளிக்கப்படுவதை அவர் நேரடியாக கூட இருந்து கண்காணித்தார்.
ஆனால் இறுதி மூன்று நாட்கள் வானம் மந்தமாக இருந்தது. அவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார். ஆடுதளத்தில் அமர்ந்து மண்ணை வாசனை பிடித்து பார்த்தார். பராமரிப்பை இன்னும் கராறாக ஆக்கினார். இன்னும் சில நாட்கள் வெயில் இருந்தால் தான் அவரது கணிப்பு போல் ஆடுதளம் அமையும். இல்லையென்றால் எல்லா தயாரிப்பும் வீணாகி விடும். அவர் அங்கு தலைமை ஆடுதள அமைப்பாளராக வரும் முன்பிருந்த அதே ஆமை வேக ஆடுதளம் போலத் தான் இப்போதும் அமையும். கையை பிசைந்து கொண்டு வானம் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
அடுத்தநாள் ஒருமணி நேரம் மழை ஆங்காரமாக கொட்டியது. அவர் ஆடுதளத்தை மூடி மேலே கூரை அமைக்க சொல்லி விட்டு அறைக்குள் சென்று ஜன்னல்களை சாத்தி அமர்ந்து கொண்டார். மழைத்தாரைகள் ஜன்னல் கண்னாடிகளில் மோதும் போது யாரோ கல்லடிப்பது போல் திடுக்கிட்டு கொண்டார்.
மழை நின்றது; ஆனால் தூறல் இரவு வரை விடவில்லை. நகரம் போர்க்களத்தில் அங்கஹீனனாக ரத்தம் கசியக் கிடக்கும் தேகம் போல் தோன்றியது. அவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. வடிகால் அமைப்பு நன்றாக வேலை செய்வதால் மைதானத்தில் தண்ணீர் தேங்கவில்லை என்பது மட்டுமே அவருக்கு ஆறுதலாக இருந்தது. ஒவ்வொரு மணிக்கு ஒருமுறையும் வந்து பார்த்தார். குடை பிடித்தபடி மைதானத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பார்த்தார். பார்க்க தூறல் நின்று விட்டதாகவே பலசமயம் தோன்றியது. ஆனால் வெளியே நின்றால் பத்து நிமிடத்தில் உடை ஈரமாகி விடும். காற்று மாறி மாறி அடித்ததில் மழை குறுக்குமறுக்காய் தெறிப்பது பிளட் லைட் ஒளிபிம்பத்தில் அரைவெட்டு தோற்றமாய் தெரிந்தது. யாரோ அலட்சியமாய் காற்றில் வெற்றிலையை பீய்ச்சி துப்புவது போல என்று நினைத்துக் கொண்டார்.
அடுத்த நாளும் அதே நிலைதான். பணியாளர்கள் மழைக்கோட்டு சகிதம் அமைதியாக ஆவி பறக்கும் தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தனர். நூற்றாண்டுகளாய் நடக்கும் ஒரு சடங்கில் கேள்வியின்றி பங்கேற்கும் பூர்வகுடிகளை போல் தோன்றினார்கள் அவர்கள். மழை பெய்வதை ஒரு குழந்தை விளையாடுவதை கவனிப்பது போல் ஏற்பு முகபாவத்துடன் பார்த்தார்கள். அடுத்த நாள் உள்ளிட்டு முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் புயல் மழையால் பாதிக்கப்படும் என்றது வானிலை அறிக்கை. போட்டி ரத்தாகும் என்று பரவலாக பேசிக் கொண்டார்கள். தேசிய அணி வீரர்கள் ஹோட்டல் அறையில் வீடியோ கேம் ஆடினார்கள். சிலர் மனைவிகளுடன் ஷாப்பிங் போனார்கள். வெள்ளைக்காரர்கள் உட்புற வலையில் பயிற்சி மேற்கொண்டனர். சென்னையில் தமக்கு பிடித்தது மசாலா தோசை என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர்.
ஆட்டத்தின் முந்தின நாள் மாலையும் மழை வலுப்பதும் குறைவதுமாக இருந்ததால் ஆடுதளத்தை திறக்க முடியவில்லை. ஆறுமுகத்தையும் வேறு பணியாளர்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு காவலாளிகளுடன் அவர் மட்டும் அன்றிரவு அங்கேயே தங்கினார். நள்ளிரவு தாண்டியதும் குடை எடுக்காமல் நனைந்தபடியே வெளியே வந்தார்.
அந்த மழையிலும் அடுத்த நாள் ஆட்ட டிக்கெட்டுக்காக மக்கள் விடிகாலை இரண்டு மணிக்கே வரிசைகளில் கூட்டமாக மழைக்கோட்டிலும் குடைகள் ஏந்தியும் வந்து நின்றனர். ஒரு மணிநேரமாவது ஆட்டத்தை பார்த்து விடலாம் என்கிற நூலிழை நம்பிக்கை பார்வையாளர்களிடம் இருந்தது. சிலர் வரிசையில் இருந்து விலகி நடைபாதையில் தனித்தனியாக கூட்டமிட்டு நின்றனர். எப்படியும் காலை எட்டரை மணிக்கு மேல் தான் கவுண்டர் திறப்பார்கள். அப்போது வரிசைக்குள் நுழைந்து விடலாம், அதுவரை காத்து ஒழுங்காய் நிற்பது அபத்தம் என்று நினைத்திருக்கலாம். இன்னும் சிலர் சாய்வாகவும் சிலர் முழுசாகவும் மரங்களின் கீழும் மறைவான இடங்களிலும் துண்டு விரித்து படுத்துக் கிடந்தனர். அவர்கள் ரசிகர்களா வழக்கமான நடைபாதைவாசிகளா என்று தெரியவில்லை. ஆனால் அடிக்கடி விழித்துக் கொண்டு தலையை மெல்ல தூக்கி காத்திருப்பு வரிசைகளை பார்க்க அவர்கள் தவறவில்லை.
தெருவிளக்கின் அழுகை ஒளியில் பூச்சிகள் பறந்தன. மழை பெய்து கொண்டே இருந்தாலும் மெல்ல மெல்ல வெளிச்சம் தோன்றி வந்தது. வானத்தின் ஒருபக்கம் அடிவயிறு போல் வெளுத்து வந்தது. மழைக்கும் இளங்காலை ஒளிக்குமான சேர்க்கையில் தோன்றின அந்த குளிர் எவ்வளவு இதம் என்று நினைத்துக் கொண்டார். கொஞ்சம் நடந்து அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழே சென்று அமர்ந்தார். அது இருளா நிழலா என்று தெரியவில்லை.
இருவர் சைக்கிள் உருட்டியபடி வந்தார்கள். வழக்கம் போல் டிக்கெட் விலை, கவுண்டர் திறக்கும் நேரம், வானிலை, ஆடுதளம் பற்றி தூக்க சோம்பலுடன் அரை ஆர்வத்துடன் பேசிக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் பீடி புகைத்தபடி அவரிடம் வந்து ஆலோசனை சொன்னான்: “நீ இங்கினே ஒட்காந்திணு இருந்தே கியு அது பாட்டுக்கிணு வளர்ந்துக்கிட்டே போவும் சாமி. கியுவாண்டே போய் சொல்லிக் கிட்டு பிளாட்பாரத்திலே படுத்துக்கோ என்னா”.
அவர் எழுந்து வரிசைகளிடம் சென்றார். முழுக்க நனைந்தும் நனையாமலும் அங்கு நிற்கும் கூட்டத்தை பார்க்க உற்சாகமாக இருந்தது. அவர்களோடு போய் நின்று கொண்டார். விடிகாலை மணி மூன்றிருக்கும். அப்போதே ஆச்சரியமாக மேற்கே வானம் நன்றாக துலங்குவதை பார்த்தார். பக்கத்தில் நிற்பவர் ஏதோ ஒவ்வாமை போல் ஈரத்தலையை கையால் துவட்டி மீண்டும் மீண்டும் உதறினார். தூக்கமில்லாமல் அவரது கண்களும் முகமும் வீங்கியிருந்தன. அவரிடம்இவ்வளவு சீக்கிரம் விடிந்து விட்டதே. ராத்திரி ஆரம்பிக்கிறதுக்கு முன்னே முடிஞ்சிருச்சுஎன்றார். அந்நபர் கசப்பாய் புன்னகைத்தார்.

No comments: