டாஸ்மாக்குக்கும் அம்மா உணவகத்துக்கும் இடையே...
தமிழகம் வேறு எந்த மாநிலங்களை விடவும் சிறப்பான பல இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக இலவச மருத்துவ காப்பீடு. போன ஆட்சியில் தி.மு.க இலவச டி.வி வழங்கியதை ஒரு பெருந்திரள்வாத (populist) அணுகுமுறையாக பார்த்தனர். மறைமுகமாக அது சன் அலைவரிசைகளுக்கு உதவினால் இன்னொரு புறம் சாதாரண மக்களுக்கு இடையே முன்கண்டிராத அளவு ஊடக தொடர்புவலையை தமிழகம் முழுக்க ஏற்படுத்தியது. மக்களின் முன் உலகின் வாசலை திறந்து வைத்தது. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் இலவச மிக்ஸி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இலவசங்கள் வழங்குவது ஆட்சியாளர்களுக்கிடையே ஒரு போட்டியாகவே மாறியது. ஆனால் நாம் கவனிக்காத ஒரு நுணுக்கமான தளத்தில் ஜெயலலிதா உற்பத்தி துறை சார்ந்த சில திட்டங்களை கொண்டு வந்து இங்குள்ள அரசியலில் ஒரு புது திருப்பத்தை கொண்டு வந்தார். இதை அரசு-சார் கார்ப்பரேட்வாதமாக நாம் பார்க்கலாம்.
2004இல் ஜெயலலிதா அரசு டாஸ்மாக் மூலம் ஒட்டுமொத்த மது விற்பனையை தன்வசம் எடுத்தது தான் முக்கிய திருப்புமுனை. வேறு எந்த துறையிலும் அரசு இது போல் தனியார் நிறுவனங்களை கையகப்படுத்தி தானே நடத்த முனைந்ததில்லை.

டாஸ்மாக்கின் முக்கிய நோக்கம் அரசு கஜானாவுக்கான பணத்தை சம்பாதிப்பது. டாஸ்மாக் விற்பனையை விமர்சிக்கிற பலரும் இதன் அறத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அதாவது அரசாங்கம் சாராயம் விற்கலாமா என கொச்சையாக கேட்கிறார்கள். அதேவேளை அரசாங்கம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் லாப நோக்கில் ஒரு துறையை எடுத்து நடத்தலாமா என ஏனோ யாரும் வினவவில்லை. டாஸ்மாக்கை நடத்தும் அரசாங்கம் அதையொத்த லாபம் தரும் பிற தொழில்கள், பொழுதுபோக்கு துறைகளான காட்சி ஊடகங்கள் மற்றும் சினிமா போன்றவைகளை எடுத்து நடத்தக் கூடாதா? ஏன் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்த முடியாதா? அந்த நாள் சமீபத்தில் தான் உள்ளதா? 

இக்கேள்வியை சந்திக்கிறவர்கள் ஒரு கேலிப்புன்னகையுடன் “இந்த அரசாங்கத்தால் பல பொதுத்துறை நிறுவனங்களையே ஒழுங்காய் நடத்த முடியவில்லை, பல நிறுவங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன, மக்களுக்கு ஒழுங்காய் சேவை செய்வதில்லை, ஊழியர்கள் சரியாய் வேலை செய்வதில்லை, அரசுக்கு தன்னையே ஒழுங்காய் நிர்வகிக்க தெரியவில்லை, இந்நிலையில் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதா?” என தங்களுக்குள் நினைக்கலாம். இப்படி யோசிப்பவர்கள் மின்வாரியம், போக்குவரத்து போன்ற நிறுவனங்களை விட டாஸ்மாக் வித்தியாசமான முறையில் இயங்குவதை கவனிக்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பிற அரசு ஊழியர்களின் நிரந்தர வேலை உட்பட்ட பிற பாதுகாப்பு உரிமைகள் இல்லை. அவர்கள் அரசு நிர்ணயிக்கும் விற்பனை இலக்கை எட்டும் படி வலியுறுத்தப்படுகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களுக்கு தனியார் ஊழியர்கள் அளவுக்கு வேலை நெருக்கடி உண்டு. திருவிழா வேளைகளில் டாஸ்மாக் மது பொத்தல்கள் அதன் ஊழியர்களால் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகின்றன. அந்தளவுக்கு அரசு ஒரு குருட்டுமூர்க்கத்துடன் செல்போன் நிறுவனம் விற்பனை பிரதிநிதிகளை முடுக்கி வீடு வீடாய் சிம் கார்டு விற்பது போல் மது விற்கிறது. பேருந்து நிறுவனத்தை நஷ்டத்தில் ஓட விடும் அரசு மது நிறுவனத்தை முற்றிலும் வேறொன்றாய் பார்க்கிறது. டாஸ்மாக் விசயத்தில் இதே அரசு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கரார்தன்மையுடன் இரக்கமின்மையுடன் தன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்கிறது. ஆக அரசு நினைத்தால் ஒரு தனியாரை விட தீவிரமாய் (இரக்கமின்றி) லாப வியாபாரத்தில் இறங்க முடியும், ஊழியர்களை வேலை வாங்க வைக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அரசாங்கத்தின் வேலை மக்களுக்கு சேவை செய்வது, லாபம் சம்பாதிப்பதோ உற்பத்தியில் ஈடுபடுவதோ அல்ல என கோருபவர்கள் டாஸ்மாக் விற்பனை இல்லாமல் தமிழக அரசு வருவாயில் துண்டு விழுந்து அன்றாட செலவுகளை தத்தளிக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும். டாஸ்மாக் விற்பனையின் மூலமாய் பினாமி பெயரில் டிஸ்டிலரிகள் நடத்தும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் லாபம் பெறுகிறார்கள் என்றாலும் மகாராஷ்டிரா போன்று வேறு எந்த குறிப்பிட்ட வளமான தொழில் உற்பத்தி அமைப்புகள் அற்ற, கேரளா போன்று அரபுநாட்டு அந்நிய செலவாணி இல்லாத மாநிலமான தமிழகம் இவ்வளவு இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இதே மது விற்பனை தான் பயன்படுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் நாம் எந்த குறிப்பிட்ட உற்பத்தி சாலைகளையும் ஏற்படுத்தவில்லை. விவசாயம் செழிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. வேலைவாய்ப்புக்கு நாம் முழுக்க பன்னாட்டு பி.பி.ஓ நிறுவனங்களையே நம்பி இருக்கிறோம். பி.பி.ஓ பொருளாதாரம் வீழ்ந்தால் கணிசமான பேர் வேலையில்லாமல் தெருவில் இறங்க நேரிடும் அளவுக்கு நாம் தொழில்துறை சார்ந்து எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தொலைநோக்கின்றி இருக்கிறோம். இந்த சூழல் தான் நம்மை மதுவிற்பனையை முழுக்க நம்பியிருக்கும் நிலைமை நோக்கி தள்ளி இருக்கிறது.

மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலை இலவச சிற்றுண்டி, மதிய உணவுகள் வழங்கி விட்டு இன்னொரு பக்கம் அவர்களின் ஆரோக்கியத்தை மதுவை ஊற்றிக் கொடுத்து அழிக்கிறது அரசு என்கிற வாதத்தில் நியாயம் உள்ளது. மதுவிலக்கை கோரும் முன் நாம் மதுவிற்பனைக்கு பதிலாக வருவாய்க்கு அரசு என்ன செய்யலாம் என விவாதிக்க வேண்டும். அரசு ஒன்றுமே செய்யத் தேவையில்லை என்ற நிலைமையை நாம் என்றோ கடந்து விட்டோம். இன்று பொருளாதாரம் இருக்கிற பலவீனமான நிலையில் ஒன்று அரசு கார்ப்பரேட்டுகளுக்கு முன் முன்யோசனையின்றி மண்டியிட வேண்டும். இதை மத்திய அரசு செய்கிறது. அல்லது கார்ப்பரேட்டாக தானே மாற வேண்டும். இதை ஒரு சின்ன அளவில், ஆனால் தவறான முறையில், தமிழக அரசு செய்கிறது. கார்ப்பரேட்டுகள் சாத்தான்கள், கார்ப்பரேட்டுகளை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும் என்கிற தட்டையான வாதம் நடைமுறையை கருத்தில் கொள்ளாத ஒன்று. மேற்சொன்ன இரு சாத்தியங்களில் ஏதாவது ஒன்றை அரசாங்கங்கள் இன்று தேர்வு செய்ய வேண்டி உள்ளது.

கார்ப்பரேட்டுகளின் தாக்கம் அல்லது அரசியல் அதிகாரம் முன்னெப்போதையும் விட இன்று மிக பரவலாக வலுவாக உள்ளதற்கு வெறும் ஊழல் மட்டும் காரணம் அல்ல. அரசியல்வாதிகள் தம் சுயநலத்துக்காக மட்டுமே டாட்டா, அம்பானிகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவதில்லை. இந்தியாவின் மத்திய, மேல்மத்திய வர்க்கத்தினர் இந்த கார்ப்பரேட் சார்புவாதத்தை தான் அரசிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறார்கள். இன்று காங்கிரஸ் மீது உருவாகியுள்ள பரவலான அதிருப்தி என்பது ஊழல் குற்றச்சாட்டுகளால் மட்டுமல்ல, காங்கிரஸ் அரசால் பல தொழில் முதலீடுகள் முடங்கி உள்ளதாய் மீடியா குற்றம் சாட்டுகிறது. அதனால் தான் தொழில் முதலீடுகளை இருகரங்களால் வரவேற்கும் மோடி போன்றவர் அடுத்த பிரமரானால் நம் தேசிய பொருளாதாரம் மேம்படும் என மேற்தட்டினரும் அவர்கள் சார்ந்த மீடியாவும் எதிர்பார்க்கிறார்கள். இதே காரணத்தினால் தான் கணிசமான கார்ப்பரேட்டுகளும் பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாய் கூறப்படுகிறது. இது சரியோ தவறோ கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி எனும் நிலவரம் தெளிவானது. இது எதிர்காலத்தில் மாறப் போவதில்லை.

முகேஷ் அம்பானியின் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் இருந்து எடுக்கும் கச்சா எண்ணெய்க்கு சர்வதேச எண்ணெயின் விலையை நிர்ணயிக்கிறது. அதே போல் தான் இறக்குமதி கச்சா எண்ணெயை இந்தியாவில் சுத்திகரித்து பெட்ரோலாக்கும் போதும் சர்வதேச பெட்ரோல் விலையை அதற்கு கோருகிறது அம்பானியின் நிறுவனம். இதனால் தான் பெட்ரோல் விலையை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. சர்வதேச அளவில் பெட்ரோல் விலை உயர்ந்தால் இந்தியாவில் மளமளவென விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்கிறது. வறுமையும் நெருக்கடியும் நம் குரல்வளையை நெரிக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் கள்ளசந்தையில் பொருட்களை பதுக்கும் வியாபாரிகள் சம்பாதிப்பது போல் அம்பானியின் ஜேப்பில் பணம் பிதுங்குகிறது. இன்னொரு புறம் அம்பானிக்காக அரசாங்கம் வரி சலுகைகளும் வேறு வழங்குகிறது. இயற்கை வாயு விலையை அதிகப்படுத்த அம்பானியை மத்திய அரசு அனுமதிக்க இதன் மூலம் 1.2 லட்சம் கோடி லாபம் அம்பானிக்கு கிடைத்தது. அரசுக்கு ஆண்டுக்கு 54, 500 கோடி ரூபாய் நஷ்டம். நிலக்கரி ஒதுக்கீட்டின் போதும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை மத்திய அரசு வழங்கியதை பார்த்தோம். மிக சல்லிசான விலையில் நிலக்கரியை தனியார் நிறுவனங்கள் எடுத்து பயன்படுத்தலாம் என்றது காங்கிரஸ் அரசு. இலவசமாய் நிலக்கரியை பெற்ற நிறுவனங்களோ நிலக்கரியை பிரித்து வெளியே விற்று லாபம் பார்த்தன. இன்னொரு பக்கம் கணிசமான நிலக்கரி பயன்படுத்தப்படவில்லை. இதிலும் அரசுக்கு 1.86 லட்சம் கோடி நஷ்டம். இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது ஒரு தடுக்க முடியாத போக்காக மாறி உள்ளது வெறும் கார்ப்பரேட் சுயநலத்தினால் மட்டுமல்ல. பொருளாதார தக்க வைப்புக்கு நாம் கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்கிற கொள்கை முடிவை நம் அரசுகள் எடுத்து இரு பத்தாண்டுகள் கடந்து விட்டன. இது மறைமுகமாய் தனியாருடன் சேர்ந்து நாட்டை கொள்ளையடிக்கும் போக்காக மாறி விட்டது.

அதே சமயம் இன்றுள்ள நவமுதலாளித்துவ சூழலில் கார்ப்பரேட்டுகளை முற்றிலும் புறக்கணித்து இந்தியா நகரவும் சாத்தியமில்லை. குஜராத்தில் தொழிற்சாலைகள் நிறுவ கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு மோடி அரசு இன்னும் நஷ்ட ஈடு வழங்கவில்லை. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான, பாட்டாளி சார்பான கம்யூனிஸ்ட் கட்சி வங்காளத்தில் டாட்டாவுக்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்து கடுமையாக ஒடுக்க முற்பட்டது. நாளை காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு பதில் இடதுசாரிகள் மத்தியில் அதிகாரத்தில் வந்தாலும் பெயரளவில் அமெரிக்காவையும் தனியார்மயமாதலையும் எதிர்த்தாலும் இதே கார்ப்பரேட் ஆதரவுநிலைப்பாட்டை தான் அவர்களும் எடுத்தாக வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் தேர்தல் முடிவுகளை ஒட்டி ஒரு அழுத்தமான போக்கு காணப்படுகிறது – தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் பொருளாதார அழுத்தம் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தால், அதுவரையில் அரசாங்கம் எந்தளவுக்கு சிறந்த முறையில் ஆட்சி செய்திருந்தாலும் தேர்தலில் அது தோற்கும். சர்வதேச பொருளாதார மாற்றங்களால் கூட இந்தியாவில் ஒரு கட்சி தன் அதிகாரத்தை இழக்கலாம். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இணையாக விலைவாசியும் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. இப்போதுள்ள சிக்கலான சூழலில் விலைவாசியை கட்டுப்படுத்துகிற அதிகாரமும் மத்திய அரசிடம் இல்லை. மானியங்கள் மூலம் ஓரளவு தற்காலிகமாய் விலையை கட்டுப்படுத்தலாம். ஆனால் விரைவில் மானியங்கள் பொருளாதார வீக்கத்தை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும்.

இன்னொரு பக்கம் தேர்தல் செலவுகளுக்கு கட்சிகள் கார்ப்பரேட்டுகளை முழுக்க நம்பி உள்ளன. இதன் மூலம் கட்சி அரசியலையும் அம்பானிகள் கைப்பற்றி விட்டார்கள். அம்பானிக்கு எதிராக இயற்கை வாயு விலை அதிகரிப்பு விவகாரத்தில் வழக்கு தொடுத்த கேஜ்ரிவால் கூட ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பிரச்சாரத்துக்காக பறந்தார். இச்செலவை ஏற்றுக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் எது?

ஒரு புறம் கட்சியை நடத்த கார்ப்பரேட்டுகளின் முதலீடு தேவை, இன்னொரு புறம் பொருளாதாரத்தை தக்க வைக்க கார்ப்பரேட்டுகளை கண்மூடித்தனமாய் ஆதரிக்கும் கொள்கைகள். நாம் எவ்வளவு தான் கார்ப்பரேட்டுகளை வெறுத்தாலும் அவற்றின் கிடுக்கிப் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்க முடியாது. தீவிரமாய் கார்ப்பரேட் எதிர்ப்பை கடைபிடிப்பவர் கூட சினிமா எடுக்க, மீடியாவில் இயங்க, பொருட்களை வாங்க, விற்க, மருத்துவம் பார்க்க, கல்வி, வேலைக்கு என கார்ப்பரேட்டுகளையே நாட வேண்டியுள்ளது.

இந்த பிரச்சனைக்கு ஒரு மாற்று டாஸ்மாக்கும் அம்மா உணவகம் மற்றும் குடிதண்ணீர் பாட்டில் இரண்டும் சந்திக்கும் புள்ளியில் உள்ளது. மது விற்பனை அறத்திற்கு எதிரானது, ஒழுக்கக் கேடானது. மலிவுவிலை உணவகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் நடைமுறைக்கு உகந்தவை அல்ல. சமூகத்திற்கு தீங்கில்லாத ஒரு லாபம் தரும் நிறுவனத்தை டாஸ்மாக்கை போல் ஒரு முதல்வர் நடத்தினால் என்னவாகும் என நாம் யோசிக்க வேண்டும்.

அரசாங்கங்கள் சேவை மட்டுமே செய்ய வேண்டும் என கோரும் காலம் கடந்து விட்டது என்பதை தான் மேற்சொன்ன கார்ப்பரேட் ஆதிக்கவாதம் காட்டுகிறது. கார்ப்பரேட் ஆதிக்கத்தினால் தான் இன்று மிக மோசமான சமநிலைக்குலைவு, பொருளாதார பாகுபாடு இந்தியாவில் உருவாகி உள்ளது. வேறெந்த வளரும் நாட்டையும் விட இங்கு தான் ஒரு புறம் வறுமை உக்கிரமாக இன்னொரு புறம் பணம் மலை மலையாய் குவிகிறது. இந்த பாகுபாட்டை சரி செய்ய அனைத்து தட்டு மக்களுக்கும் இலவச தரமான கல்வி கொடுக்க வேண்டும். நிறைய வேலை வாய்ப்புகளும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் சூழலும் வேண்டும். இவை எதுவுமே உருவாக்கும் திட்டங்கள் எழுபதுகளுக்கு பின் உருவாக்கப்படவில்லை. இலவச திட்டங்கள் தாம் இந்த பாகுபாட்டை ஓரளவுக்கு தாக்குப்பிடிக்க மக்களுக்கு உதவுகிறது. ஆனால் இலவச திட்டங்களால் நெடுங்காலம் மக்களை காப்பாற்ற முடியாது.
லாபம் ஒரு சிலரிடம் குவிவதை தடுக்க சிறந்த வழி அதில் சரிபாதியாவது அரசாங்கத்திடம் செல்ல செய்வது. ரியல் எஸ்டேட் மாபியாவில் ஆளுங்கட்சி பினாமியினர் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு பதிலாக அரசே ஏன் தனியாருடன் சேர்ந்து இது போன்ற வியாபாரங்களில் இறங்கக் கூடாது? மக்களை நேரடியாக ஏமாற்றாமலே நியாயமாக லாபம் சம்பாதிக்கவும் அரசின் கூட்டணி உதவும். சிவில் சமூகமும் கண்காணிக்க முடியும். லாபத்தில் சரிபாதியை அரசு கோர வேண்டும். நிலம், சலுகைகள், குறைந்த பட்ச முதலீடு அரசின் பங்களிப்பாக இருக்கும். இதில் வரும் லாபம் கொண்டு அரசு ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரலாம். இப்போதும் கிட்டத்தட்ட இதே மாடல் தான் நிலுவையில் உள்ளது. ஒரே மாறுபாடு தனியார் தரும் பங்கு லஞ்சமாக மந்திரிகளின் ஸ்விஸ் வங்கி கணக்குகளுக்கு போகிறது. இப்பணத்தை அரசின் கஜானா நோக்கி ஏன் திருப்பக் கூடாது?

ரியல் எஸ்டேட் என்றால் முகம் சுளிப்போரால் அதை தவிர்க்கவும் இயலாது. இன்று பொருளாதாரம் உள்ள பலவீனமான நிலையில் மக்கள் நிலத்தில் முதலீடு செய்வதையே விரும்புகிறார்கள். அப்போது ரியல் எஸ்டேட் தவிர்க்க முடியாத தொழிலாக வளரத் தான் செய்யும். தனியார் வசம் இருக்கும் வரையில் சிவில் சமூகத்தால் இத்தொழிலின் விதிமீறல்களை தணிக்கை செய்யவோ, லாபம் ஒரு வர்க்கத்தினரிடம் குவிவதையோ, செயற்கையாக ஒரு இட்த்தின் விலை உயர்த்தப்படுவதையோ தவிர்க்க முடியாது. மாறாக அரசு ஒரு பாழான இடத்தில் முதலீடு செய்து விட்டு அங்கு புது வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்து அதன் விலைமதிப்பை ஒரேயடியாக உயரச் செய்யலாம். இவ்விசயத்தில் வேறெந்த தனியார் நிறுவனமும் அரசுடன் போட்டியிட முடியாது. இந்த லாபத்தை மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு திருப்பலாம்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் எனும் போட்டித்தொடரை வியாபார மார்க்கமாய் கொண்டு கோடானுகோடி சம்பாதித்து அதன் மூலம் நாடு முழுக்க மாநில கிரிக்கெட் வாரியங்கள் சிறப்பாக செயல்படவும், இளைஞர்கள் அபாரமான பயிற்சி கட்டமைப்புகள் பெறவும் வழி செய்கிறது. ஐ.பி.எல் லாபத்தை எந்த ஒரு தனியார் முதலாளியும் திருட முடியாது. அது ஒரு பொது அமைப்பின் கணக்கில் பணமாக இருக்கும். ஐ.பி.எல்லுக்கு முன் ஐ.சி.எல் எனும் T20 போட்டித் தொடரை எஸ்ஸெல் தனியார் நிறுவனம் ஆரம்பித்தது. அதை இந்திய கிரிக்கெட் வாரியம் முடக்கி அழித்து அவ்விடத்தில் ஐ.பி.எல்லை ஆரம்பித்தது. இல்லாவிட்டால் அந்த கோடானுகோடி லாபம் முழுக்க இன்று சுப்ரதோ ராய் எனும் முதலாளியின் வங்கிக்கணக்குக்கு சென்றிருக்கும். ஐ.சி.எல் என்பது ஜெயலலிதா மதுக்கடைகளை மொத்தமாய் தனியாரிடம் இருந்து பறித்து நடத்தியது போல் ஒரு செயல் தான்.

இன்று தேர்தல் போக்கில் ஒரு விநோத போக்கு உள்ளது. மக்கள் சீட்டு குலுக்குவது போல் ஆளுங்கட்சியை தீர்மானிக்கிறார்கள். காங்கிரஸ் வந்தாலும் ஊழல், பா.ஜ.க வந்தாலும் ஊழல் என மக்கள் அறிவார்கள். எந்த கழகம் வந்தாலும் தமிழகம் ஒரே போல் தான் இருக்கும் எனவும் அவர்கள் அறிவார்கள். அவர்கள் ஆளுக்கு நான்கு வருடங்கள் என மாற்றி மாற்றி அளிக்கிறார்கள். அப்படியே ஒரே கட்சியை இரண்டாம் முறையாய் தேர்ந்தால் மக்கள் மிகவும் நொந்து போகும் விதமாய் இரண்டாம் ஆட்சி இருக்கிறது. இதன் விளைவாக தான் இன்று கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் (ஒன்று நடைமுறை சாத்தியமற்ற கோரல்களை செய்கின்றன அல்லது எல்லா கட்சிகளுக்கும் பொத்தாம் பொதுவாய் உள்ளன. பா.ஜ.க தன் அறிக்கையை வேண்டுமென்றே தாமதமாக வெளியிட்டது. அந்தளவுக்கு தேர்தல் அறிக்கைகள் காலாவதியாகி விட்டன; நகைப்புக்குரிய சம்பிரதாயங்கள் ஆகி விட்டன. எதிர்காலத்தில் இந்த அறிவிப்புகளுக்கு பதில் ஆட்சி முடிவில் அரசுகள் ஏன் தம் லாப கணக்கை மக்களிடம் சமர்ப்பிக்க கூடாது? லாப நோக்கிலான வியாபாரம் மூலம் எம் அரசு இவ்வளவு பணம் சம்பாதித்து, அதன் மூலம் மக்களுக்கு இலவச போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட பல சேவைகள், கட்டமைப்பு வசதிகள், தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு இலவச கடன் போன்ற விசயங்களில் செலவழித்தோம் என ஏன் கோரக் கூடாது? இதற்கெல்லாம் கார்ப்பரேட்டுகளை நம்பியிராமல் ஒரு பாதி கூட்டு வியாபாரம் மூலம் அரசே ஏன் தன் வருமானத்தை தானே உருவாக்கக் கூடாது? டாட்டா அம்பானிகளிடம் குவியும் பணம் அரசு கஜானாவுக்கு பாதியேனும் வருமானால் இந்நாட்டு பிரஜைகள் வரியே கட்ட தேவையிராத நிலைமை கூட வரலாமே! இலவச ரயில், பேருந்து, கல்லூரி கல்வி, தொலைதொடர்பு எவையும் கனவல்ல சாத்தியமே.
எந்த அரசும் வெற்றிகரமாய் இவ்வாறு கார்ப்பரேட்டுகளாய் மாறியதில்லை தான். ரஷ்யாவில் சோசலிச ஆட்சி இதை முயன்று தோல்வியுற்றது தான். அரசு தொழிற்துறையை கைப்பற்றுவது போட்டியை முடக்கும் தான். லாபம் மீண்டும் முதலீடு செய்யப்படாமல் இலவச திட்டங்களுக்கு பயன்படுத்துவது வணிக நியதிக்கு விரோதமானது தான். இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகளுக்கு மேலோட்டமாய் இக்கருத்துக்கள் உவப்பற்றதாய் தோன்றலாம். ஆனால் இந்த குறைகளை எல்லாம் நாம் விவாதித்து மெருகேற்ற முடியும். அல்லது இது போல் மற்றொரு சாத்தியத்தை யோசிக்க முடியும். என்னவாயினும் கார்ப்பரேட்டுகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அரசாங்கம் பலவீனமான நடுவர் போன்று செயலாற்றுவது எதிர்வரும் காலத்தில் எடுபடாது. சமத்துவம் என்பதை கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பதினால் அல்ல, கார்ப்பரேட்டுகளை கையிலெடுத்து நமக்கு ஏற்றாற் போல் மாற்றுவதன் மூலமே உருவாகும்!

நன்றி மே 2014 உயிர்மை

Comments

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்து
வகுத்தலும் வல்ல தரசு.

இதில் வள்ளுவன் சொன்ன ஈட்டல் இப்பொருளீட்டல் தான்.