Monday, April 7, 2014

யுவ்ராஜ் தன்னையே வருத்திக் கொள்ள வேண்டுமா?


மனம் வேறெங்கோ!


நேற்றைய T20 உலகக் கோப்பை ஆட்ட்த்தில் இந்தியா தோற்க யார் காரணம்? தெரியவில்லை. ஆனால் ஊடகங்களுக்கு ஒரு எளிய பலிகடா மாட்டியுள்ளார். யுவ்ராஜ் சிங். முக்கியமான கட்டத்தில் அவரது 21 பந்து 11 ஓட்டங்கள் இந்தியாவின் மட்டையாட்ட வேகத்தை சறுக்குமர விளையாட்டு போல் ஆக்கியது. ரசிகர்கள் யுவ்ராஜ் சிங்கின் வீட்டின் மேல் கல்லெறிந்து கோபத்தை காட்டி உள்ளார்கள். ஊடகங்களில் அவர் மீது கடும் கண்டனங்கள் எழுகின்றன. இறுதி ஆட்டம் முடிந்ததும் யுவ்ராஜ் ஒவ்வொரு வீர்ராக சென்று கை கொடுத்தார். அப்போது விராத் கோலி மட்டும் கோபத்தில் விலகிச் சென்றாராம்.

போன வாரம் நான் அடையார் பக்கமாய் பொய்க் கொண்டிருந்த போது ஊழல் பேர்வழி ஸ்ரீனிவாசனின் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவன அலுவலகம் பார்த்தேன். இறங்கி ஒரு கல்விட்டு எறியலாமா என தோன்றியது. பிறகு எதுக்கு வம்பு என வந்து விட்டேன். ஆனால் கல்லெறியும் துணிச்சல் கொண்டவர்கள் ஏன் ஸ்ரீனிவாசன் போன்ற ஊழல் நிர்வாகிகளை விட்டு வைக்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை.
யுவ்ராஜை விமர்சிக்கும் போது அவர் சில நாட்களுக்கு முன்பு தான் தன்னந்தனியாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ஆட்டத்தை வென்றளித்தார் என மறந்து விடுகிறோம். யுவ்ராஜ் சர்ச்சைக்கு சரியான பதிலை தோனி அளித்தார்: “யாரும் மோசமாக ஆட வேண்டும் என நினைப்பதில்லை. யுவ்ராஜ் முடிந்தளவு முயன்றார்”.
“முயன்றார்” தான். அப்படித் தான் யுவ்ராஜின் மறுவருகையை பார்க்க வேண்டும். ஏன் அவரது முயற்சிகள் வெற்றியடைவில்லை என நாம் யோசிக்க வேண்டும். ஆட்டநிலை (form) பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் மிக சென்சிட்டிவான உடல்நிலை பற்றி விவாதிக்க ஒரு சின்ன தயக்கம் எல்லா விமர்சகர்களிடம் இருக்கிறது. ஆனால் அது தான் முக்கியம்.
ஆரோக்கியமும் களத்தடுப்புக்கும் தொடர்புண்டு. நல்ல வலுவான உடல்நிலை கொண்டவர்களால் தான் நன்றாக களத்தடுக்க முடியும். ஜடேஜா, கோலி நல்ல உதாரணம். யுவ்ராஜ் ஒரு காலத்தில் அட்டகாசமான களத்தடுப்பாளராக இருந்தார். எப்படி அவர் புற்றுநோய்த் தாக்குதலுக்கு பின் மட்டமான களத்தடுப்பாளராக ஆனார்? ஒன்று அவருக்கு உடல் சார்ந்த ஒரு கூச்சம் வந்து விட்டது. விழுந்தால் அடிபடுமோ என்கிற உள்ளார்ந்த தயக்கம்.
அடுத்து அவர் களைப்பாக தென்படுகிறார். ஆட்டம் ஆரம்பிக்கிற சில நிமிடங்களிலேயே வெகுவில் களைத்து விடுகிறார். வேறு எந்த வீர்ரையும் விட அவருக்கு அதிகம் வியர்க்கிறது. மட்டையாட்டத்துக்காக நாற்காலியில் காத்திருக்கும் போது கூட அவர் பூங்காவில் மூச்சு வாங்க வாக்கிங் போன தாத்தா போல் தோன்றுகிறார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அவர் காட்சை தவற விடுவதற்கு முன்பு கூட அவரை டி.வியில் பார்த்த போது இன்று சொதப்ப போகிறார் எனத் தோன்றியது. அவரது உடல்மொழி காற்றிறங்கிய பலூன் போல் இருந்த்து. முகமெல்லாம் வியர்வை கொட்டியபடி குழப்பமாக நின்று கொண்டிருந்தார். அவரது மனம் கிரிக்கெட்டில் இல்லை என்பது தெளிவு. தன் உடல்நிலை குறித்த கவலை உள்ளுக்குள் இருக்கையில் எப்படி மனம் கிரிக்கெட்டில் இருக்க முடியும்?
இது யுவ்ராஜின் தவறு மட்டுமல்ல. பொதுவாக அவர் களத்தடுப்பு செய்வதை வைத்தே இதை தேர்வாளர்களும், அணித்தலைவர்களும் ஊகித்திருக்க வேண்டும். இன்றைய நிலையில் 50% ஆரோக்கியம் கொண்டவர்களுக்கு எந்த கிரிக்கெட் அணியிலும் இடமில்லை. யுவ்ராஜ் வெளிநாட்டுக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தார். இச்செய்தி மீடியாவுக்கு பரப்பப்பட்ட்து. அவர் அணிக்கு திரும்பியதற்கு இந்த விளம்பரமும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் புற்றுநோய் அவரது ஆற்றலை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. மனதளவிலும் அவர் தன்னம்பிக்கையுடன் இல்லை. இந்த தன்னம்பிக்கை இழப்பு வெறும் ஆட்டநிலை சம்மந்தப்பட்டதில்லை. உடல் குறித்த அச்சம் அவரை பின்னுக்கு தள்ளிக் கொண்டே இருக்கிறது.

எந்தளவுக்கு பின்னே போய் நிற்கிறார் பாருங்கள்

புற்றுநோயில் இருந்து திரும்பிய பின் யுவ்ராஜிடம் நாம் காணும் முக்கிய மாற்றம் அவர் பின்ன்ங்காலில் ஆடவே அதிகம் எத்தனிக்கிறார் என்பது. இது முக்கியம். அவர் முன்னர் பிரதானமான முன்னங்கால் ஆட்டக்கார்ராக இருந்தார். இப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றும் போது ஒரு சுயபாதுகாப்பு நடவடிக்கையாய் தான் அவர் பின்னங்காலுக்கு செல்கிறார். இதனால் தான் அவர் பல முறை முழுநீள பந்து அல்லது யார்க்கருக்கு பவுல்டானார். முன்னங்காலில் சென்றால் எகிறும் பந்து உடலில் படுமோ என அஞ்சுகிறார். மேலும் நேரே வரும் வேகப் பந்தின் லைனில் இருந்து விலகி நிற்க முயல்வதும் அவரது வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம். பந்து தன் மீது படக்கூடாதே என்கிற உள்ளுணர்வு அவரை லெக் பக்கமாய் தள்ளுகிறது. விளைவு அவர் வேகவீச்சை பார்க்கும் no 11 வீச்சாளர் போன்று தான் மட்டையாடுகிறார். அத்துடன் உடல் சோர்வு காரணமாய் அவர் சுழல்பந்துக்கு சுறுசுறுப்பாய் இறங்கி வந்து ஆடவும் தயங்குகிறார். இதுவும் இயல்பானது தான். உடல் நன்றாய் இருக்கையில் நீங்கள் நாற்காலியில் முன்வந்து பேசுவீர்கள். முடியாமல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து பேசுவீர்கள். இதனால் தான் யுவ்ராஜ் முன்னை விட அதிகமாய் சுழல்பந்து வீச்சின் முன் வீழ்கிறார்.
யுவ்ராஜால் இரட்டை ஓட்டங்களுக்கு ஓட முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் தான் கோலி ரய்னா, தோனி, ரஹானே முதலிவர்களுடன் ஆடும் போது வருவது போல் இரட்டை ஓட்டங்கள் யுவ்ராஜுடன் ஆடும் போது வருவதில்லை. ஓடவே போவதில்லை என்கிற மனநிலையுடன் தான் யுவ்ராஜ் வருகிறார். இது அவருடன் ஆடும் பிற மட்டையாளர்களின் ரிதமை பெருமளவில் பாதிக்கிறது.
இதே பிரச்சனை கிறிஸ் கெயிலுக்கு இம்முறை t20 உலக்க் கோப்பையில் இருந்த்தை கவனிக்கலாம். அவருக்கு முட்டி காயம். அவரால் ஓட முடியவில்லை. முன்னங்காலிலும் நகர்ந்து அடிக்க முடியவில்லை. இது அவரது ஆட்டத்தின் ரிதமை பாதித்த்து. அவருடம் ஆடுகிற ஸ்மித் போன்றோரின் ஆட்டத்தையும் பாதித்த்து.
நட்சத்திர வீர்ர்கள் ஒற்றைக்காலிலும் ஆடலாம் என எண்ணுகிற அணி மேலாண்மைகளின் சலுகை மனப்பான்மை மிகவும் கண்டிக்கத்தக்கது.
யுவ்ராஜ் “முயன்று” கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவர் தன் விளையாட்டை ரசிக்கிறாரா, முழுக்க விரும்பி தான் ஆடுகிறாரா என அவர் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வளவு வருத்திக் கொண்டு அவர் யாருக்கு எதை நிரூபிக்க விரும்புகிறார்? அவர் தான் பதிலளிக்க வேண்டும். அடுத்த முறை யுவ்ராஜ் இந்தியாவுக்காக களமிறங்கும் போது பிற வீர்ர்களைப் போல் உற்சாகமாக தோன்ற வேண்டும், துறுதுறுப்பாக ஆர்வமாக வேகமாக களத்தடுக்க வேண்டும். களத்தில் இருக்கையில் அவர் மனம் களத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஆடுவதில் அர்த்தமில்லை. அவர் தன்னை வருத்துகையில், பாதி ஈடுபாட்டுடன் ஆடுகையில் பார்க்கிறவர்களையும் தான் வருத்துகிறார். வேண்டாமே!

2 comments:

ஜீவன் சுப்பு said...

சரிதான். முன்பிருந்த அந்த Consistent Aggressive approach இல்லாமல் போய்விட்டது .

ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியமான காரணமாக இருந்தார் என்பதாலேயே இப்பொழுது வாய்ப்புக் கொடுப்பார்கள் போல தெரிகிறது .

இதே தொடரில் , ரோகித் கூட ஒரு முறை உடல் மொழியால் தன் எதிர்ப்பை தெரிவித்தார் .

சீனு said...

He is definitely not in form. In this case, what he should do is either hit or out. He did not do both that too in that situation, which is unacceptable for the player like him.

This is not any other match. This is WC Final.

He already played 5 matches and scored in only one match. Even, in that match his body language tells that he is definitely not in form.

He stood there yesterday, not hitting, not giving the balls to Kohli (when Kohli wanted 2, he stayed for 1. What for?) and finally ended up with a poor shot to get out, later only 11 balls for others to play.

Rahane scored single digit. Did anyone complain about him?