Sunday, April 6, 2014

புது எழுத்தாளன், இலக்கிய பத்திரிகை மற்றும் வெகுஜன மீடியா


   

புது எழுத்தாளர்கள் என நான் கூறுவது இணையம் மற்றும் பேஸ்புக்கில் அல்லது இடைநிலை பத்திரிகைகளில் அதிகம் அறிமுகமாகாதாவர்கள். அந்த வகையில் பல நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறுபத்திரிகையில் பிரசுரமாவது கூட அவ்வளவு எளிதல்ல. ஒரு காலத்தில் பிரபல எழுத்தாளர்கள் கூட சின்ன பத்திரிகை வழி தான் நீர்ப்பரப்புக்கு மேல் தலைதூக்கி சுவாசித்தனர். சுஜாதா கூட சிவாஜி எனும் ஊர் பேர் தெரியாத பத்திரிகையில் முதலில் எழுதினார். தன் முதல் கதை பிரசுரமானதும் அவசரமாக இன்னொரு கதை எழுதி சூட்டோடு சூடாக பத்திரிகை ஆசிரியரை தேடி அவர் வீட்டுக்கு போனார். கதவைத் திறந்தவர் வேண்டா வெறுப்பாக “என்ன வேணும்?” எனக் கேட்கிறார். தன் முதல் கதை அவர் பத்திரிகையில் வந்திருக்கிறது, அதனால் இன்னொரு கதையும் தயாரித்து கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார். தொடர்ந்து எழுத விரும்புவதாக தெரிவிக்கிறார். ஆசிரியருக்கு சுஜாதாவின் உற்சாகம் அபத்தமாக தெரிகிறது. சரி, பார்த்து விட்டு சொல்கிறேன் என சொன்னவர் கதைத் தாளை தன் தோளில் இருந்த குழந்தையின் கையில் கொடுக்கிறார். அடுத்து என்ன நடந்திருக்கும் என நம்மை ஊக்கிக்க சொல்கிறார்.

சின்ன பத்திரிகைகள், இலக்கிய பத்திரிகைகள் கூட இன்று புது எழுத்தாளர்களை எளிதில் வரவேற்பதில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக புது எழுத்தை கண்டடைந்து அதில் ஆர்வம் கொண்டு ஊக்குவிக்கும் மனம் நம் ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை. அல்லது வெகுவில் அதை இழந்து விடுகிறார்கள். யார் என்ன எழுதினால் என்ன எனும் ஒரு அலுப்பு ஏற்படுகிறது. வழக்கமாய் எழுதுகிறவர்களிடமே எந்திரத்தனமாக வாங்கி போடுகிறார்கள். அல்லது தனிப்பட்ட முறையில் பரிச்சயமானவர்களை பிரசுரிக்கிறார்கள்.
என் நண்பர் ஒருவர் கேட்டார் “ஏன் விகடனில் துணை இயக்குநர்கள் அதிகம் தொடர் எழுதுகிறார்கள்?” என்று. ஓரளவு உண்மை தான். இது எதேச்சையாக நடப்பதாக கூட இருக்கலாம். ஆனால் இவ்விசயத்தில் இலக்கிய, இடைநிலை பத்திரிகைகளும் ஒன்றும் மேலில்லை. நீங்கள் ஏற்கனவே எங்காவது சின்ன இடமொன்றை கைப்பற்றி மூலையில் கொடி நாட்டியவராக இருந்தால் தான் இடைநிலை, இலக்கிய பத்திரிகைகளும் உங்களை கவனிக்கும், வரவேற்கும். எனக்கு இது குறித்து ஒரு சுவாரஸ்யமான அனுபவம் உண்டு. ஏழு வருடங்களுக்கு முன் கற்றது தமிழ் படத்தை சமூக உளவியல் ரீதியாய் அலசும் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதை ஒரு பிரபல வணிக பத்திரிகையின் இலக்கிய பத்திரிகைக்கு எடுத்துப் போனேன். ஏற்கனவே காலதாமதமாகியதால் ஆசிரியரிடம் நேரடியாக கொடுத்தேன். அவர் வேண்டாவெறுப்பாக வாங்கிக் கொண்டார். அவர் அதை திறந்து கூட பார்க்கவில்லை. பின்னர் நான் அது பிரசுரமாகுமா என போனில் கேட்டதற்கு என்னிடம் கத்தி மிரட்டினார். நான் பயந்து விட்டேன். ஏதோ பெண்ணை கையைப் பிடித்து இழுத்தது போல் ஏன் நடந்து கொள்கிறார் என யோசித்தேன். பிறகு சில மாதங்கள் கழித்து உயிரோசை இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட்து. நான் அதில் தொடர்ந்து எழுதினேன். அப்போது என்னை வாசித்த மேற்சொன்ன ஆசிரியர் என்னை பாராட்டி தன் பிளாகில் எழுதினார். எனக்கு இது அபத்த நகைச்சுவையாக பட்டது. ஒன்று அவர் பாராட்டுவது உண்மையில் அவர் ஒருமுறை அவமானப்படுத்திய உதாசீனித்த எழுத்தாளன் என மறந்து விட்டார். அடுத்து, இப்போது தான் என்னை முதன்முதலில் படிக்கிறார். இதை அவர் முன்னமே செய்திருந்தால் நியாயமாகவும் பத்திரிகை தர்மத்துக்கு ஏற்றபடியாகவும் இருந்திருக்குமே. ஒரு கட்டுரை அல்லது கதையின் நாலு வரிகளை படித்தாலே அது தரமானதா என தெரிந்து விடும். ஆனால் அதற்கு கூட அவகாசமில்லை என்றால் ஆர்வம் இல்லை என்றால் அப்படி அந்த வேலையில் வேறு என்ன தான் கிழிக்கிறார்கள்?
பிரச்சனை தனிமனிதர் சம்மந்தப்பட்டது கூட அல்ல. பத்திரிகை வேலை நம்மை எந்திரத்தனமாய் மாற்றுகிறது. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் பார்க்க வைக்கிறது. உயிரோசை கட்டுரைகள் படிக்கும் போது அவர் என்னை ஒரு வாசகராக மட்டும் அணுகினார். அதனால் கண்டுகொண்டார். பத்திரிகை ஆசிரியர்கள் ஒரு மனக்கண்ணாடி அணிந்து கொள்கிறார்கள். இது அவர்கள் பார்வையை ஒரு எறும்பினுடையதாக மாற்றி விடுகிறது.
மனுஷ்யபுத்திரன் இரு பிரபல வணிக பத்திரிகைகளில் பத்தி எழுதி வருகிறார். நான் அவரிடம் கேட்டேன்: “இருபது வருடங்களாய் நீங்களும் எழுதிக் கொண்டு தான் இருந்தீர்கள். அப்போது வாய்ப்பளிக்காதவர்கள் ஏன் இப்போது எழுத சொல்கிறார்கள்?”. டி.வியில் தொடர்ந்து தோன்றுவது தான் காரணம் என்றார். டி.வியில் தோன்றிய பின் இவர் ஒரு பிரபல ஆள் எனும் எண்ணம் பத்திரிகைகளுக்கு ஏற்படுகிறது. உடனே எழுதக் கேட்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம். பொதுவாக உளவியலில் ஒன்று சொல்வார்கள். ஒரு வகுப்பில் ஒரு அழகான பெண்ணும் சுமாரான பெண்ணும் இருப்பார்கள். சுமாரான பெண்ணை ஆண்கள் குழு ஒன்றில் ஒருவன் காதலிப்பான். உடனே அக்குழுவில் உள்ள பிற ஆண்களுக்கு அவள் மீது ஆர்வம் பிறக்கும். அழகான பெண்ணை கண்டுகொள்ள மாட்டார்கள். அதாவது அணில் கடித்த பழம் தான் அதிக சுவையாம்!
மேலும் எழுத்தாளனை பயன்படுத்திக் கொள்வதை விட புகழை பயன்படுத்துவது தான் பத்திரிகைகளின் நோக்கம். என் நண்பர் ஒருவர் ஒரு இலக்கிய பத்திரிகைக்கு கட்டுரை அனுப்பினார். அது பிரசுரமாகவில்லை. எனக்கு அனுப்பித் தந்தார். நல்ல கட்டுரையாக இருக்கிறதே என வியந்தேன். பிரசுரமாவது எப்படி என நான் அவருக்கு ஒரு உபாயம் சொன்னேன். பிளாகில் தொடர்ந்து எழுத வேண்டும். அதன் மூலம் வாசகர்களை ஈர்க்க வேண்டும். பேஸ்புக்கிலும் மும்முரமாக இயங்க வேண்டும். கவனம் பெற வேண்டும். பத்திரிகை ஆசிரியர் உங்கள் பெயரை அடிக்கடி கேள்விப்படுவார். இவனுக்கு ஏதோ சில வாசகர்கள் உண்டு என நினைப்பார். இப்போது அதே கட்டுரையை பிரசுரிப்பார். இன்று புது எழுத்தாளர்களுக்கு மேலே ஏறி வர ஒரே மார்க்கம் இணையம் தான். பிளாகில் தொடர்ச்சியாக எழுதி கவனம் பெற்று இன்று காட்சிப்பிழை மற்றும் உயிர்மையில் மாதாமாதம் பிரசுரமாகும் சுரேஷ் கண்ணன் நல்ல உதாரணம்.
இது தொடர்பாக யோசிக்கையில் “நினைவின் நதியில்” சு.ராவின் காலச்சுவடு பற்றி ஜெ.மோ எழுதியது நினைவு வருகிறது. காலச்சுவடின் முதல் இதழுக்கு கட்டுரைகள் கேட்டு பல எழுத்தாளர்களுக்கு அவர் கடிதம் எழுதுகிறார். சு.ராவின் ஆசானான க.நா.சுவும் ஒருவர். க.நா.சு கட்டுரை அனுப்புகிறார். அக்கட்டுரை காலாவதியான கருத்துக்களை கொண்டிருப்பதாக கருதி சு.ரா அதை நிராகரிக்கிறார். இன்றுள்ள இடைநிலை இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களுக்கு இது போல் ஒரு பெரும் ஆளுமையின் கட்டுரையை தரம் கருதி நிராகரிக்கும் துணிவு இருக்குமா? இல்லை. புகழை பயன்படுத்துவது இன்று எல்லோருக்கும் பொதுவிதி ஆகி விட்டது.
எழுத்துக்கு முற்றிலும் மாறான ஒன்று சமூகமாக்கல். அதாவது ஆள்பிடிப்பது. எழுத்தாளன் தனியாக வாசித்து யோசித்து இயங்கக் கூடியவன். பத்திரிகை ஆசிரியர்களை தேடிக் கண்டுபிடித்து நட்பு பாராட்டுவது எழுத்துக்கு புறம்பான ஒன்று. ஆனால் இதை டைம்டேபிள் போட்டு கராறாக செய்யும் இலக்கிய எழுத்தாளர்கள் கூட உண்டு. வண்டியெடுத்து ஒவ்வொரு ஆசிரியரையாய் போய் பார்த்து ஆஜர் போட்டு தன் படைப்பை போடும்படி கேட்பார்கள். தொடர்ந்து மோதி மோதி ஒருநாள் கதவு திறக்கும். அங்கங்கே அவர்கள் பெயர் கண்ணில் பட ஆரம்பிக்கும். இதற்கு ஒரு அபார மனத்திராணி வேண்டும். அலுக்காமல் ஜால்ரா போட வேண்டும். ஈகோ இருக்கக் கூடாது. ஆனால் எழுத்தாளனின் ஆற்றலே ஈகோ எனும் ஊற்றில் இருந்து தானே வருகிறது? ஆனால் உங்களை விட தரத்தில் கீழே இருப்பவரின் காலடியில் போய் அமர்ந்து பூ போடாவிட்டால் வேலைக்காகாது. எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அவரது படைப்பை நீங்களே கேட்டு வாங்கி போட்டால் கூட மானே தேனே என உங்களை புகழ்வார். பழகி விட்டது, பாவம்! சமீபமாக சாகித்ய அகாதமி விருது வாங்கின ஒரு எழுத்தாளர் கூட இப்படித் தான் விகடனில் பத்தி எழுத வாய்ப்பு பெற்றார் என கேள்விப்பட்டேன்.
இன்று கணிசமான இலக்கிய எழுத்தாளர்களுக்கு விகடன் போன்ற பிரபல பத்திரிகையில் பத்தி எழுத ஆசை உண்டு. இது தவறல்ல. எழுத்தாளன் தன்னை பரவலான ஒரு வாசக பரப்பின் முன்வைக்க நினைப்பது நியாயம் தான். ஆனால் காலம் மாறி விட்டது. முன்பு நீங்கள் பத்து, இருபது வருடங்கள் தொடர்ந்து ஒரு வணிக பத்திரிகையில் தொடர்கதை எழுதலாம். அதன் மூலம் வாசகர் மத்தியில் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும். சுஜாதா எழுதி வந்த இட்த்தை யாரோ ஒரு சுப்பிரமணிக்கு கொடுக்க மாட்டார்கள். அவ்விடத்தை அடைய நீங்கள் போராடி சாதிக்க வேண்டும். இன்று அப்படி அல்ல. பிரபல பத்திரிகைகளில் நீங்கள் ஒரு வருடத்துக்கு மேல் எழுத முடியாது. மிக நன்றாக பிரபலமாய் எழுதினால் ரெண்டு வருடங்கள் அனுமதிப்பார்கள். இந்நேரம் கொண்டு நீங்கள் சுஜாதாவின் புகழை ஒன்றும் அடைய முடியாது. சின்ன அளவில் அறியப்படலாம். ஆனால் உங்கள் இட்த்தை நிரந்தரமாய் நிறுவ முடியாது. வாசகனிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்க முடியாது. அதன் வழி அவனுக்கு அணுக்கமாக மாற முடியாது. பத்திருபது வருடங்கள் ஒரே பத்திரிகையில் எழுத வேண்டுமென்றால் அது இன்று இலக்கிய பத்திரிகைகளில் தான் சாத்தியம். மேல்தட்டு சமூகங்களில் இருவர் சந்திக்கையில் மூக்கும் மூக்கும் உரசுகிற மாதிரி முத்தம் இடுவார்கள். இது ஒரு ஜெராக்ஸ் முத்தம் மட்டும் தான். விகடனில், குமுதம், குங்குமத்தில் பத்தி எழுதுவதும் இப்படித் தான். இதைக் கொண்டு குழந்தை எல்லாம் பிறக்காது. இன்னொரு கொடுமை நீங்கள் பிரமாதமாய் எழுதிய இடத்தில் அடுத்த வருடம் ஒரு டுபாக்கூர் ஆளும் பத்தி எழுதுவார். அடுத்த வருடம் இன்னொருவர். வாசகர்கள் போகப் போக எல்லா மாவும் புளித்த மாவு தான் என நினைக்க தொடங்குவார்கள்.
எழுதலாம். இதனால் உங்கள் வாழ்க்கை ஒன்றும் மாறி விடாது. ஒன்று ராஜூமுருகன் போல் இந்த புகழை பயன்படுத்தி சினிமாவுக்கு நகர வேண்டும். இல்லையென்றால் திரும்ப இலக்கிய பத்திரிகைகளுக்கு வந்து மாங்குமாங்கென்று எழுத வேண்டும். எழுத்தாளனாக உருவெடுக்க விரும்புகிறவர்களை விட சினிமாவுக்கு பாதை தேடுகிறவர்களுக்கு தான் இது அதிகம் பயன்படும் என்பது வெளிப்படை.

No comments: