Saturday, April 5, 2014

கார்ப்பரேட் மயமாகும் உலக கிரிக்கெட்டில் ஒரு இந்திய காட்பாதர்
-   

இன்று 14 டெஸ்டுகளை வெளிநாடுகளில் தொடர்ந்து இழந்த நிலையில் தோனியின் மீது கடும் விமர்சன்ங்கள் வைக்கப்படுகிறது. அவரது பதவியை பறிக்க வேண்டும் என இயன் சேப்பல் கோருகிறார். ஆனால் தோனியின் பதவி அவர் கையில் இல்லை. அவர் விரும்பினால் கூட நாற்காலியை காலி செல்ல முடியுமா என்பது சந்தேகமே!
தோனியின் எதிர்காலமும் இந்திய கிரிக்கெட் அணியின் நிலையும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அரசியலோடு முன்னெப்போதும் நிகழாத வகையில் லாக் ஆகி உள்ளது. தி.மு.கவுக்கு எதிராக சி.பி.ஐ வழக்குகள் தொடுக்கப்பட்ட போது எப்படி அக்கட்சி காங்கிரசுடன் லாக் ஆனதோ அது போன்றே உள்ளது இந்திய கிரிக்கெட்டின் நிலையும்.


சச்சின் மற்றும் கங்குலியின் தலைமை காலகட்டங்களில் இந்திய கிரிக்கெட்டின் அரசியல் துண்டுபட்டிருந்த்து. ஒரு புறம் மாநில வாரியான கிரிக்கெட் வாரியங்களின் பிரதிநுத்துவ அரசியல், உள் ஊழல், அவர்களை ஒருங்கிணைத்து தலைமையில் நிலைப்பதற்கான இந்திய கிரிக்கெட் தலைவர் செய்யும் அரசியல், தேர்வாளர்களுக்கும் அணித்தலைவருக்கும் இடையிலான கசப்பும், துவேசமும் கலந்த போட்டி அரசியல், அணிக்குள்ளே உருவாகும் குழு அரசியல் இப்படி இருந்த்து. சச்சின் தலைவராக இருந்த போது ஒரு முறை மேற்கிந்திய பயணத் தொடரின் போது ஸ்ரீனாத் காயமுற அவரிடத்தில் ஒரு நல்ல சுழலரை கேட்டார் சச்சின். ச்ச்சின் மீது பெரும் கசப்பில் இருந்த தேர்வாளர்கள் அவரை அவமானப்படுத்த நோயல் டேவிட் எனும் அநாமதேயமான ஹைதராபாத் வீரரை அணிக்கு தேர்ந்தெடுத்தார்கள். அவரைப் பார்த்த்தும் சச்சின் புரியாமல் “யார் இவர்?” எனக் கேட்டாராம்.
 அதே போன்று அன்றெல்லாம் தொடர் தோல்விகள் ஏற்படும் போது அணித்தலைவரின் பதவி மார்பு புடைத்த பெண்ணின் தாவணியை போல் தடுமாற்றமாகவே சதா இருந்தது. இந்தியாவில் நிலைத்து ஆதிக்கம் செலுத்திய முதல் அணித்தலைவர் கங்குலி தான். கபில், அசார், சச்சின் கூட பெரும் ஆளுமைகளாக இருந்தும், தேர்வாளர்கள் மற்றும் வாரிய அதிகாரிகளின் மனநிலைக்கு ஏற்ப பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். கங்குலி இயல்பில் சாமர்த்தியமாய் அரசியல் பண்ணக் கூடியவர். மேலும் அவர் வெறுமனே அணியை வழிநடத்தாமல் அவரே அணியாகவும் இருந்தார். அவரது ஆவேசமும், துணிச்சலும் அணியின் குணமாக மாறியது. வெளிநாடுகளில் டெஸ்டுகள் வென்று, உலகக் கோப்பை இறுதி வரை அணியை கொண்டு சென்று தன் அதிகார எல்லையை பெருமளவில் விரிவு படுத்திக் கொண்டார். 2005 வரை அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவரும், கங்குலிக்கு நெருக்கமானவருமான சக-வங்காளி ஜெக்மோகன் தால்மியாவின் அதரவு இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்க சக்தியாக அவரை மாற்றியது. ஆனாலும் தால்மியாவுடனான உறவு அரசியல் போட்டி காரணமாய் கசந்த்தும், இன்னொரு புறம் தனிப்பட்ட ஆட்டநிலை சீரழிந்து, பயிற்சியாளர் சேப்பலுடன் மோதல் ஏற்பட்டதும் எளிதில் தூக்கி வீசப்படுகிற அளவில் தான் கங்குலியின் நாற்காலி பலம் கொண்டிருந்த்து. ஆனால் அது அரசியல்வாதிகள் கிரிக்கெட்டை கட்டுப்படுத்திய ஒரு எளிய காலகட்டம். தோனியின் அணித்தலைமை இன்னும் சிக்கலான ஒரு அரசியல் பொருளாதார கட்டத்தை சேர்ந்த்து.
தோனி தான் தலைமை தாங்கிய முதல் T20 உலகக் கோப்பையை வென்றார் என அறிவோம். அதையடுத்து அவர் மிக திறமையான ஒரு தலைவராக பார்க்கப்பட்டார். அப்படியே மட்டும் இருந்திருந்தால் அவர் 2011 உலகக் கோப்பை வெற்றியுடனோ சில மாதங்கள் கழித்தோ பதவி விலகியிருக்க வேண்டியது தான். ஆனால் தோனியின் காலகட்டத்தில் வேறு ஒரு முக்கிய மாற்றம் பரவலாக எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்தது. அரசியல், மீடியா, சினிமா, இலக்கியம் என எங்கும் கார்ப்பரேட் மயம் துவங்கியது. அரசியலில் கார்ப்பரேட்களின் ஆதிக்கம் பற்றி தனியே சொல்ல வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்களும் கழக பினாமிகளும் தயாரிப்பு மற்றும் வெளியீட்டை முழுக்க கட்டுப்படுத்துவதை பார்க்கிறோம். வெகுஜன பத்திரிகைகள் ஒரு ஆலையை போல் சரக்கை உற்பத்தி பண்ண முடியும் என நம்பிட, எழுத்தாளர்களும், இதழாளர்களும் முன்பிருந்த முக்கியத்துவத்தையும் இடத்தையும் இழந்தனர். தினசரிகள் கார்ப்பரேட் நிழலுக்குள் வருவது தி ஹிந்து தமிழ் பதிப்போடு ஆரம்பமாகிறது. அடுத்து டைம்ஸ், டெக்கான் ஆகியவை வரப் போகின்றன. டி.வி சேனல்கள் கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்வது வெளிப்படையாகவே தெரிகிறது. தமிழ் சேனல்களில் வரும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு அவற்றில் கட்சிகள் மீது விமர்சனமே கிட்டத்தட்ட இல்லை என்பதும், பேசவே தெரியாத கட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து பங்கேற்பதையும் பார்க்கலாம். பூக்கோ இன்று அதிகாரம் செயல்படும் விதத்தை விளக்க சிறைச்சாலைக்குள் இருக்கும் கண்காணிப்பு கோபுரம் பற்றி சொல்லுவார். கைதிகளுக்கு தம்மை யாரோ கண்காணிக்கிறார்கள் என்கிற உணர்வு தொடர்ந்து இருக்கும். ஆனால் யார் கண்காணிக்கிறார்கள் எனத் தெரியாது. இன்று அரசியல், பொருளாதாரத்தில் இருந்து மீடியா வரை பிரதான முடிவுகளை யாரோ உச்சி கோபுரத்தில் இருந்து எடுப்பதை நம்மால் உணர முடிகிறது. இந்த மறைமுக ஆதிக்கவாதம் இன்னும் ஆபத்தானது. இதை விமர்சிப்பதோ கண்டிப்பதோ எளிதல்ல. இருட்டில் பாயும் நிழலை எப்படி கண்டறிவது? கிரிக்கெட்டிலும் இதே பூடகம் தான் நிலவுகிறது.
ஐ.பி.எல் மற்றும் ஸ்ரீனிவாசனின் தலைவர் பதவியுடன் தான் தோனியின் உண்மையான ஆதிக்க பருவம் துவங்குகிறது எனலாம். தால்மியா, முத்தையா போன்ற முன்னாள் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீனிவாசன் மாறுபட்டவர். அவர் முழுக்க ஒரு சர்வாதிகாரியோ, அரசியல்வாதியோ அல்ல. அவர் ஒரு கலவை. காட்பாதரில் வரும் டான் கார்லியானோ போன்றவர். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என சினிமாவில் பஞ்ச் வசனம் வருமே அதற்கு பொருத்தமானவர். தால்மியா போல் பிறருடன் தனிப்பட்ட விரோதங்கள் வளர்க்காதவர். இந்திய அதிகார அமைப்பின் நாடித்துடிப்பை அறிந்தவர். இங்கு நமக்கு பரஸ்பரம் ஆயிரம் புகார்கள் இருக்கும். சதா குழி தோண்ட முயன்று கொண்டே இருப்போம். ஆனால் இந்த புகார்கள் எளிய தேவைகள் நிறைவேறாத அற்பமான ஏமாற்றங்களில் இருந்து வருவன. அவரவருக்கு தேவையான எலும்புத் துண்டுகளை தூக்கிப் போட்டால் எல்லோரும் அமைதியாக இருப்பார்கள் என ஸ்ரீனிவாசன் அறிவார். ஜக்மோகன் தால்மியா ஒரு காலத்தில் அவருக்கு எதிரியாக இருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன் தால்மியாவுக்கு உள்ளூர் வாரிய அரசியலில் உதவி தேவைப்பட்ட போது ஸ்ரீனிவாசன் அதை செய்து தந்து அவரது விசுவாசத்தை பெற்றார். அதனால் ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சூதாட்ட வழக்கில் மாட்டி கடும் சர்ச்சை நிலவிய போது தால்மியா அவர் உதவிக்கு வந்தார். ஸ்ரீனிவாசன் அவரை அதிகாரமற்ற இடைக்கால தலைவராக நியமித்தார்.
இதைப் போல் சதா ஏதாவது விமர்சனங்களை முன்வைக்கும் முன்னாள் வீர்ர்களை சட்டைப் பையில் போட்டுக் கொள்ள அவர்களுக்கு ஐ.பி.எல் லாபத்தில் இருந்து சில கோடிகளை ஆதரவு தொகையாக வழங்கினார். அதாவது நூற்றுக்கணக்கில் முன்னாள் வீர்ர்கள் தாம் ஆடிய காலத்தில் சில ஆயிரங்களை மட்டுமே சம்பாதித்தவர்கள் ஸ்ரீனிவாசனின் “கருணையால்” தலா ஒரு கோடியாவது பெற்ற போது பட்டென்று வாயை பெவிகாலால் மூடிக் கொண்டனர். பின்னர் அவர்கள் இந்திய அணியை எதிர்த்து இன்று வரை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஸ்ரீனிவாசனின் பதவிக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஐ.சி.எல் எனும் போட்டி தொடரில் கலந்து கொண்டதால் கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டிருந்தார். அவருக்கு இந்த தொகை கொடுக்கக் கூடாது என சிலர் வாதிட்டனர். ஆனால் ஸ்ரீனிவாசன் கபிலுக்கு சில கோடிகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.
இதையெல்லாம் பார்க்கும் போது இவர் ரொம்ப நல்லவரோ என தோன்றும் தான். ஆனால் ஸ்ரீனிவாசனின் மருமகன் சூதாட்ட்த்தில் மாட்டிக் கொண்ட போது இந்த “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்ததன்” நற்பயனை அறுவடை செய்தார். ஸ்ரீனிவாசனுக்கு எதிராக ஊடகங்களில் பேச ஒரு முன்னாள் வீர்ர் கூட முன்வரவில்லை. சச்சினையே ஒரு கட்டத்தில் விமர்சிக்கும் துணிச்சல் காட்டிய சஞ்சய் மஞ்சிரேக்கர் கூட ஸ்ரீனிவாசனை தூய்மையானவர், உண்மையான கிரிக்கெட் காதலர் என வர்ணிக்கிறார். ஒரு கராறான ஆசாமியையே கூஜா தூக்க வைக்க முடிகிறதென்றால் ஸ்ரீனிவாசன் எப்படியான “நாய்க்கர் ஐயா” என புரிந்து கொள்ளுங்கள். இன்னாள் வீர்ர்களும் வாய் திறக்கவில்லை. அவர்களிடம் “கருணை” காட்டியவர் அல்லவா. சச்சினின் இறுதியாக ஓய்வு பெறும் ஆட்டத்தை இந்தியாவில் நட்த்தி, அவருக்கு விழா எடுக்கும் பட்சம் தென்னாப்பிரிக்க தொடரை பாதியாக முறித்து, மே.இ தீவினரை இந்தியாவுக்கு வரும்படி செய்தார். ஒரு தனிப்பட்ட வீர்ருக்காக ஒரு டெஸ்ட் தொடர் நடத்தப்பட்ட்து இது தான் வரலாற்றில் முதல்முறை. ஆனால் ஸ்ரீனிவாசன் வரலாறு, விதிமுறைகள் எல்லாம் தாம்பூலம் போடுவதற்கு முன்பா பின்பா என கேட்கக் கூடியவர். அவர் இதை செய்யும் போது உலக கிரிக்கெட்டின் போக்கையே மாற்றி அமைக்கப் போகிறார் என யாரும் ஊகிக்கவில்லை. அதற்கு பின்னால் வருவோம்.
கும்பிளே ஓய்வுக்கு பின் கர்நாடக கிரிக்கெட் வாரிய தேர்வில் போட்டியிட்டு முக்கிய பதவியை அடைந்தார். என்.சி.ஏ எனும் கிரிக்கெட் அகாதெமிக்கு கும்பிளேவை பொறுப்பாக்கினார் ஸ்ரீனிவாசன். இவ்வாறு கும்பிளாவுக்கும் அவரது அரசியல் ஆசீர்வாதம் தேவைப்பட்டது. திராவிட் ஐ.பி.எல்லில் ஏற்கனவே ஆடிக் கொண்டிருந்தார். அவர் வர்ணனையாளராகவும் இருந்தார். கிரிக்கெட் வாரியம் ஈ.எஸ்.பி.என்.என் அலைவரிசைக்கு தொலைக்காட்சி உரிமைகள் வழங்கிய போது ஒரு நிபந்தனை போட்டார். வர்ணனையாளர்கள் யார், அவர்கள் பேசுவது என்ன என்பதில் தனக்கு கட்டுப்பாடு வேண்டும் என்றார். விளைவாக ஸ்ரீனிவாசனை எதிர்ப்பவர்கள் வர்ணனையாளராக இருந்து சம்பாதிக்க முடியாது. திராவிட் இதனால் மௌனமானார். சூதாட்ட சர்ச்சை எழுந்த போது ஏன் சச்சின் உள்ளிட்ட முக்கிய வீர்ர்கள் அமைதி காக்கிறார்கள் என மீடியாவில் விமர்சனம் எழுந்த்து. சச்சின் ”இந்த நிலை என்னை வருத்தமுற வைக்கிறது” என ஒரு பட்டும்படாத அறிக்கை அளித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். தால்மியா, முத்தையாவின் ஆட்சி காலத்தில் இது போன்ற சர்ச்சை வந்திருந்தால் முன்னாள் வீர்ர்கள் சூழ்ந்து நின்று லாடம் கட்டி இருப்பார்கள். இப்போது கிரிக்கெட் வாரியம், அதில் சம்மந்தப்பட்ட வீர்ர்கள் அனைவரும் கொடூர மௌனம் காத்தார்கள்.
சஞ்சய் மஞ்சிரேக்கர் ஒரு ஸ்ரீனிவாசன் விசுவாசி என்றேன். ஆனால் கிரிக் இன்போ இணையதளம் சூதாட்ட விவகாரத்தைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பியது. இதில் கலந்து கொள்ள பிற வீர்ர்கள் தயங்கிய நிலையில் வாய்த்துடுக்கு காரணமாய் மஞ்சிரேக்கர் முன்வந்தார். அப்போதும் அவர் முழுக்க முழுக்க ஸ்ரீனிவாசன் குற்றமற்றவர் எனத் தான் பேசினார். ஆனாலும் ஸ்ரீனிவாசனுக்கு எதிரான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே காரணத்துக்காக அவர் டி.வி வர்ணனையாளர் குழுவில் இருந்து விலக்கப்பட்டார். இது லேசாய் மந்தையை விட்டு எட்டு வைக்க முயல்பவருக்கான எச்சரிக்கை போல் இருந்த்து.
யாருக்கு வாயில் எதை போட்டு அடைக்க வேண்டும் என ஸ்ரீனிவாசன் அறிந்திருந்ததால் இவ்வளவு மோசமான ஊழல் சர்ச்சையில் மாட்டிய பின்னரும் கூட அவருக்கு எதிராக வாக்களிக்க பிற மாநில வாரிய பிரதிநிதிகள் மறுத்தனர். அவரை மீண்டும் வாக்களித்து இரண்டாம் முறையாக தலைவராக்கினார்கள். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் சூதாட்ட சர்ச்சை எழுந்த போது அசார், ஜடேஜா போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கிரிக்கெட் வாரியம் பெரும் விமர்சனங்களுக்கு உட்பட்ட்து. ஆனால் இம்முறை சில உள்ளூர் வீர்ர்களும், ஸ்ரீசாந்தும் மட்டும் தண்டிக்கப்பட்டார்கள். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஊழலில் ஈடுபட்டது என்பது தான் போலீஸ் குற்றச்சாட்டு. இதை முழுமையாய் விசாரிக்க தோனி உள்ளிட்ட அணி வீர்ர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப் பட வேண்டும். ஆனால் இதை ஒட்டி எந்த விசாரணையும் நடைபெறவில்லை. குருநாத் மெய்யப்பன் மட்டும் தனியே சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க முடியாது. ஆனால் சென்னை அணி பாதுகாக்கப்பட்டது அது ஸ்ரீனிவாசனின் ஐ.பி.எல் அணி என்பதனால் மட்டுமே.
ஐ.பி.எல்லில் தோனி ஸ்ரீனிவாசனின் அணிக்கு தலைவர் ஆனதும் அவர் முன்னெப்போதும் கற்பனை பண்ண முடியாதபடியான ஒரு அதிகார உச்சத்தில் போய் அமர்கிறார். இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் தொட்ர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்த போது அவரை பதவி விலக்க அப்போதைய தேர்வுக்குழு தலைவர் அமர்நாத் முற்பட்டார். ஆனால் ஸ்ரீனிவாசன் அதை தடுத்தார். அப்படித் தான் தோனியின் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட தலைமை காலம் துவங்கியது. தோனியின் அணித்தலைமை முறை பற்றி பல விமர்சனங்கள் உள்ளன. அவர் புது வீர்ர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை, டெஸ்ட் ஆட்டங்களில் களம் அமைக்க சாமர்த்தியம் இல்லை, ரொம்ப எதிர்மறையாக திட்டமிடலும் அணுகுமுறையும் உள்ளது என அவரது குறைகள் விரிவாக பேசப்பட்டு உள்ளன. ஆனால் அவர் இதையெல்லாம் பொருட்படுத்துவது இல்லை. ஜெயித்தாலும் தோற்றாலும் 2015 உலகக் கோப்பை வரை, அதில் தோற்கும் பட்சத்தில் இன்னும் ஒரு வருடமேனும் தான் தலைவராக நீடிப்போம் என தோனி அறிவார். இடைப்பட்ட காலத்தில் அவர் எத்தனை ஆட்டங்கள் தோற்றாலும் பொருட்டில்லை. இதே போலத் தான் தோனியின் நண்பர்களான ரெய்னா, ரோஹித், இஷாந்த் போன்றோர் ஒன்றில் இருந்து நான்கு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து மோசமாக ஆடினாலும் அணியில் நிலைத்தார்கள். இன்று ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என எந்த அணியில் இப்படியான சொகுசு தலைவருக்கோ வீர்ர்களுக்கோ கிடையாது. ஒன்றோ ரெண்டோ தொடர்களை தொடர்ந்து இழந்தால் நிச்சயம் தூக்கி விடுவார்கள். ஆனால் தோனி நான்கு தொடர்களை இழந்து விட்டார். இந்தியாவில் எந்த சலனமும் இல்லை.
இந்தியாவில் கடவுளுக்கு அடுத்தபடியாய் சாஸ்வதமானவராய் தோனி இருப்பதற்கு காரணம் கங்குலியை போல் அவரது கிரிக்கெட் சார்ந்த செல்வாக்கு அல்ல. கார்ப்பரேன் நலன் தான் அவரை காப்பாற்றுகிறது. தோனிக்கு இந்திய அணி வெற்றி பெறுவதை விட ஐ.பி.எல் அணி நன்றாக ஆடுவது முக்கியம். ஐ.பி.எல்லில் அவர் அதிகம் பணம் சம்பாதிக்கிறார் என்பது ஒரு புறம். அவரது தேசிய அணித்தலைமையே ஐ.பி.எல் மதிப்பை நம்பித் தான் உள்ளது. தேசிய அணித்தலைவராக அவர் நீக்கப்பட்டால் அவரது நட்சத்திர மதிப்பு வெகுவாக குறையும். கோலி தோனியின் இடத்தை பிடித்துக் கொள்வார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர மதிப்பை வெகுவாக குறைக்கும். இதனால் தான் ஸ்ரீனிவாசன் தோனி விசயத்தில் தொடர்ந்து தன் திருடனான மகனை விட்டுக் கொடுக்காத, அதனால் தூக்கில் தொங்கும் முன் அதே மகனால் காது கடிக்கப்பட்ட அந்த அம்மா போல் நடந்து கொள்கிறார். ஐ.பி.எல் நலன் போக தோனி சென்னை சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருக்கிறார்.
இப்படி ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட்டை தன் கிடுக்கிப் பிடியில் வைத்திருப்பது வெறும் சர்வாதிகாரம், ஊழல் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்ல. அவர் கிரிக்கெட்டின் லட்சியத்தை முழுக்க பொருளாதாரம் சார்ந்த ஒன்றாக மாற்றியமைத்து விட்டார். இந்தியாவுக்கு ஐ.பி.எல் வருமானம் சர்வதேச ஆட்ட வருமானத்தை விட அதிகம். இதனால் தேசிய அணி எவ்வளவு மோசமாக ஆடினாலும் பொருட்டில்லை என்கிற நிலைக்கு இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் வந்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸின் நலனுக்காக தேசிய அணியை சீரழிய விடுவதே இன்று அப்பட்டமாக நடக்கிறது. நம் கிரிக்கெட் வாரியத்தின் முழுகவனமும் ஐ.பி.எல் நோக்கியே குவிந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை முடிந்து ஓய்வில்லாமல் ஐ.பி.எல்லும் ஆடி சஹீர், சேவாக், ஹர்பஜன் போன்ற வீர்ர்கள் இங்கிலாந்து தொடரில் காயமுற்று விலக நேர்ந்த்து. கிரிக்கெட் வாரியம் இதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை. வீர்ர்கள் சர்வதேச ஆட்டத்தில் ஆடி களைத்து அதனால் ஐ.பி.எல்லில் சோடை போனால் நம் வாரியம் கவலைப்பட ஆரம்பிக்கும். தோனியை டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து மட்டும் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கலாம் என ஒரு பரிந்துரை வந்தது. அதற்கு மறைமுகமாக பதிலளித்த தோனி தான் அவ்வாறு நீக்கப்பட்டால் அனைத்து வடிவங்களில் இருந்து ஓய்வு பெற வேண்டி வரும் என எச்சரித்தார். உலகக் கோப்பைக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் தோனியை மொத்தமாக இழக்க தேர்வாளர்கள் விரும்ப மாட்டார்கள். உலகில் வேறெங்கும் இது போல் அணித்தலைவர் ஒரு வாரியத்தை ஆட்ரா ராமா என துள்ள வைப்பது நடக்காது.
இந்த கார்ப்பரேட் மயத்தை ஸ்ரீனிவாசன் அடுத்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு எடுத்து போயிருக்கிறார். பொதுவாக இந்தியாவுக்கு சர்வதேச ஆட்டங்களில் சில தான் லாபம் தருபவை. ஜிம்பாப்வே, நியுசீலாந்து, மே.இ தீவுகள், இலங்கை ஆகிய நாடுகளுடன் இந்திய ஆடும் போது லாபம் குறைவு தான். அதாவது இந்த நாட்டு மக்கள் கிரிக்கெட்டை இந்தியர்கள் அல்லது ஆஸ்திரேலியர்கள் போல் வெறித்தனமாய் பின்பற்றுவது இல்லை என்பதால் டி.வி விளம்பர பணமும், மைதானத்தில் கூட்டமும் குறைவாக இருக்கும். இதுவரை கிரிக்கெட் அதன் விழுமியங்களுக்காக, அழகியலுக்காக ஆடப்பட்டது. கிரிக்கெட்டின் சர்வதேச பரவலுக்கு தேவைப்படும் என்பதால் வரும் லாபத்தில் இருந்து நியுசிலாந்து, இலங்கை, மே.இ தீவுகள் போன்ற சிறு நாடுகளுக்கும் சரிசம்மான வருமானம் பிரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட்து. அது போல் வலுவான அணிகள் சிறிய நாடுகளுக்கு பயணம் போவதும் கட்டாயமாக்கப்பட்டது. இப்பயணங்களால் வலுவான நாடுகளுக்கு லாபம் இருக்காது. ஆனால் சிறு நாடுகளின் வருமானத்தை தக்க வைக்கவும், அங்கு கிரிக்கெட்டை ஊக்குவிக்கவும் இப்பயணங்கள் அவசியமானவை. இந்தியா சிறு நாடுகளுக்கு வேண்டாவெறுப்பாகத் தான் பயணம் மேற்கொண்டு வந்துள்ளது. இன்னொரு புறம் ஐ.பி.எல் மூலம் இந்தியாவுக்கு வரும் கணிசமான வருமானத்தை அவர் பிற நாட்டு வாரியங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை டோனி கிரெயிக் போன்றோர் முன்வைத்தனர். இதற்கு ஸ்ரீனிவாசனின் எதிர்வினை தலைகீழாக இருந்த்து.
இதுவரை பெரிய அணிகளின் வருமானம் சரிசமமாக பிரித்து சிறு அணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த்து. இது அநாவசியம் என ஸ்ரீனிவாசன் வாதிட்டார். அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய பிற பெரிய நாடுகளுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இம்மூன்று நாடுகளையும் தன் வருமானத்துக்கு நம்பி இருக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவற்றின் முன் இறுதியில் மண்டி இட்டது. சர்வதேச கிரிக்கெட் வாரிய குழு என ஒன்று அமைக்கப்பட்ட்து. இதற்கு ஸ்ரீனிவாசன் தான் சேர்மேன். அதாவது ஸ்ரீனிவாசனுக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் இப்புதுப் பதவியையே உருவாக்கியது. இக்குழுவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டும் மொத்த அதிகாரத்தை கொண்டிருக்கும். இனி பிற நாடுகளை கட்டுப்படுத்தும் முக்கிய முடிவுகளை இம்மூன்று நாடுகளுமே எடுக்கும். அதாவது இம்மூன்றில் அதிக பலசாலியான இந்தியா, குறிப்பாய் ஸ்ரீனிவாசன், தான் இனி உலக கிரிக்கெட்டின் வேலு நாய்க்கராக இருப்பார். ஜிம்பாப்வேவோ இலங்கையோ வந்து நின்றால் நாலு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பார். மற்றபடி எல்லாம் அவர் வைத்த்து தான் தீர்மானம். இனி இந்தியா தனக்கு லாபம் வராத நாடுகளுக்கு பயணம் போக வேண்டியதில்லை. மூன்று நாடுகளின் கணிசமான லாபத்தை அவர்களுக்குள் பங்கிட்டு கொள்ளலாம். அதை சிறு நாடுகளுக்கு கொடுக்க வேண்டியதில்லை. இதற்கு சிறு எதிர்ப்புகள் வந்ததால் இரண்டு சமரசங்களுக்கு ஸ்ரீனிவாசன் ஒத்துக் கொண்டார். ஒன்று, தாம் எடுக்கிற முடிவை சிறு நாடுகளுடன் பெரிய நாடுகள் விவாதிக்கும். அதாவது சோனியா மன்மோகனிடம் ஆலோசனை கேட்பது போல. முடிவுகளை இந்தியா தான் எடுக்கும். ஒரு சிறு தொகையை இம்மூன்று நாடுகளும் தமக்கு தோதுபடுகிற வகையில் சிறு நாடுகளுக்கு அளிக்கும். சிறு நாடுகளுக்கு இதை ஏற்காமல் வேறு வழியில்லை. ஏனென்றால் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பயணிக்க மறுத்தால், எதிர்த்து ஆடுவதை தவிர்த்தால் இந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் போண்டியாகி விடும்.
கிரிக்கெட்டில் ஆகப் பெரும் இழுக்கு சூதாட்ட குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டில் மாட்டிய, இன்னும் முழுக்க சந்தேகம் விலகாத ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து நீக்கப்படுவாரா என கொஞ்ச காலத்துக்கு முன் ஊடகங்களில் கடும் விவாதம் நடந்த்து. இப்போது அவர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்துக்கே தலைவராகி பிற நாடுகளை மண்டியிட வைத்திருக்கிறார். இதன் மூலம் ஸ்ரீனிவாசன் விட்டோ கார்லியானோவைப் போல் உலகில் எல்லோருக்கும் ஒரு விலை உள்ளது என நிரூபித்திருக்கிறார்: பழைய காட்பாதர் கூட பிறருக்கு விலையை சொல்லும் அவகாசத்தை அளிப்பார். ஸ்ரீனிவாசன் அதையும் அவரே தான் தீர்மானிப்பார்.

நன்றி: உயிர்மை மார்ச் 2014

1 comment:

iplay gamehut said...

ஸ்ரீனிவாசனை எதிர்க்கிறேன் என்று தோனியின் தலைமைத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது அபத்தம். முதலில் உங்கள் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ஸ்ரீனிவாசனுக்காக வக்காலத்து வாங்கவில்லை. ஏதோ ஸ்ரீனிவாசனால் மட்டுமே தோனி பிழைத்துக்கொண்டிருப்பதாக சொல்ல வேண்டாம்