Sunday, April 13, 2014

சந்தியா ராகம்: வயோதிகத்தின் பாடல்
வயோதிகம் குறித்து ஒரு சிறு அச்சம் நமக்குள் ஆழத்தில் உள்ளது. வயோதிகத்தை தனிமை, நிராகரிப்பு ஆகியவற்றின் ஒரு பொட்டலமாக பார்க்கிறோம். குஷ்வந்த சிங் ஒரு கட்டுரையில் வயோதிகத்தின் போது நிம்மதியாக இருக்க நிறைய பணமும், நல்ல ஆரோக்கியமும் அவசியம் என்கிறார். எண்பது வயதுக்கு மேல் என்னென்ன வசதிகள் தேவைப்படும் என அவர் இடுகிற பட்டியல் பார்த்தால் நாமெல்லாம் அறுபது வயதுக்குள் போய் சேர்ந்து விட வேண்டும் என மனதுக்குள் பிரார்த்தித்துக் கொள்வோம்.

முதுமையின் அவலம் என்பது பொதுவாக மாற்றுசினிமாவில் தேய்ந்து அண்டர்வேர் கிழிந்து விட்ட ஒரு கருப்பொருள். ஆனால் பாலு மகேந்திராவின்  சந்தியா ராகம்இப்பிரச்சனையை ஒரு மாற்றுப்பார்வையுடன் சித்தரிக்கிறது. வயோதிகத்தை ஒரு அசலான இந்திய மனம் எப்படி கடக்கிறது என்பதைக் கூறுகிறார். இதை மிக மிக நுணுக்கமாக காட்டுகிறார்.
முதலில் பார்க்கும் போது இதில் வருகிற அனாதைத் தாத்தா, சொக்கலிங்கம், தன் குடும்பத்தை இழந்து, உறவுகளால் கைவிடப்பட்டு துயரத்தில் வாடுவதாய் தோன்றும். ஆனால் படத்தில் துளியும் இரக்க தொனி ஏற்படாதபடி பாலு மகேந்திரா எடுத்திருக்கிறார். இது வேறு விதமான படம், வயோதிகத்தை துன்பியல் நாடகமாக அவர் பார்க்கவில்லை என்பதை இந்த தொனியை கவனிக்கும் போது தான் நாம் புரிந்து கொள்ள துவங்குகிறோம்.
உதாரணமாய் ஒரு காட்சி. சொக்கலிங்கம் தன் மனைவியின் மரணத்துக்கு பின் தன் தம்பி மகனான வாசுவின் வீட்டிற்கு தங்க வருகிறார். கடுமையான நெருக்கடியில் வாழும் மத்திய வர்க்க குடும்பம் அது. ஒரு இரவில் கணவனும் மனைவியும் படுக்கையறையில் பேசிக் கொள்கிறார்கள். இருக்கிற குடும்ப வருமானத்துக்குள் புதிதாக வந்துள்ள சொக்கலிங்கத்தை தொடர்ந்து பார்த்துக் கொள்ள தன்னால் இயலாது என மனைவி கூறுகிறாள். அப்போது கோபத்தில் கணவன் கத்த அச்சத்தம் பக்கத்து அறையில் தூங்கும் சொக்கலிங்கத்துக்கு கேட்கிறது. ஆனால் பாலு மகேந்திரா அவரது முகத்தையோ அதில் உள்ள பாவனை மாற்றங்களையோ காட்டுவதில்லை. முழுக்க கணவன் மனைவிக்கு இடையிலான வாக்குவாதம், அதனால் மனைவி அழுவது ஆகியவற்றையே காட்டுகிறார். சொல்லப் போனால் இப்படத்தில் அன்றாட நெருக்கடிகளின் அழுத்தங்கள் மொத்தத்தையும் அப்பெண் தான் அதிகம் அனுபவிக்கிறாள். படம் முழுக்க மனம் கசந்து அழுதபடியே இருக்கிறாள். உண்மையில் இப்படம் அப்பெண்ணின் துக்க சங்கீதம் தான், சந்தியா ராகம் அல்ல. இது முக்கியம். இதன் வழியாக பாலு மகேந்திரா அந்த சொக்கலிங்கத்தின் மன வலியை காட்டுவதை தவிர்க்கிறார். வழக்கமாக பிற இயக்குநர்கள் பண்ணுவது போல் இரக்கத்தின் வயலின் மீட்டலில் முதியவர் வாடும் சித்திரத்தை தருவதை தவிர்க்கிறார்.
இப்படத்தில் வரும் முதியவரான சொக்கலிங்கம் கசப்புகளையும் வருத்தங்களையும் பட்பட்டென்று மறந்து கடந்து விடும் ஒரு கனிவு கொண்டவராக இருக்கிறார். அப்பழுக்கக்கற்ற நதியில் கொஞ்சம் சாக்கடை கலந்தாலும் அது தூய்மையுடனே ஓடுவது போல் அவர் ஏமாற்றம், வலி ஆகியவற்றை ஏற்று தன்னில் கலந்து மறைந்திட அனுமதிக்கிறார். ஆனால் இந்த முதியவரை ஒரு ஜென் துறவி என நாம் நினைக்க வேண்டாம். அவர் நாம் இந்நாட்டில் காணும் களங்கமற்ற சிரிப்பு கொண்ட பல வயோதிகர்களுள் ஒருவர்.
வறுமையை, நெருக்கடிகளை இந்தியர்கள் எதிர்ப்பதில்லை. அதன் காரணங்களை அலசுவதில்லை. அது தம்மை கண்ணாடியில் ஒளி போல் ஊடுருவி கடந்து போக அனுமதிக்கிறார்கள். வறுமை சிரமங்களைத் தான் தரும், ஆனால் துக்கம் ஏற்படுத்தாது என நாம் உள்ளார்ந்து உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
சந்தியா ராகத்தில்வரும் முதியவர் இந்த மனநிலையில் பழுத்து கனிந்தவர். அதனாலே அவர் தன்னை நோகடிக்கும் யாரையும் பழிப்பதில்லை. படம் பூரா வாசுவின் மனைவி அவரை பல்வேறு வகையில் அவமதிக்கிறாள். ஆனால் அவர் இறுதி வரை ஒரு பரிபூரண அன்பை அவள் மீது செலுத்திக் கொண்டே இருக்கிறார். ஒரு முறை அப்பெண்ணின் மகளுக்கு, அதாவது முதியவரின் பேத்திக்கு, சாலையில் ஒரு கடையில் இருந்து வடை வாங்கிக் கொடுக்க, குழந்தைக்கு அதனால் உடல் நலமில்லாமல் ஆகிறது. குழந்தையின் அம்மா முதியவரை கடுமையாக கண்டிக்கிறாள். “உபத்திரவம் பண்ணாமல் எங்கேயாவது ஓரமாய் போய் இருக்கலாமேஎன்கிறாள். இது முதியவரின் மனதை கடுமையாக காயப்படுத்துகிறது. அன்றிரவு உணவருந்த மறுக்கிறார். விடிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி ஒரு முதியோர் இல்லத்தில் சேர்கிறார். பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் கூறும் மூன்று வசனங்கள் முக்கியமானவை. முதியவரின் அபூர்வமான மனநிலையை புரிந்து கொள்ள இவை அவசியம்.
இரவில் வாசு வந்து அவரிடம் தன் மனைவியின் தவறுக்காக வருந்தி அவரை உணவருந்த அழைக்கிறான். அவர்அதெல்லாம் இல்லப்பா, அவளுக்காக நான் சாப்பிடாம் இருக்கல. சீச்சீ, எனக்கு பசிக்கல அதான்என்கிறார். முதியோர் இல்லம் போகிறார். அங்கே அவரிடம் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த காரணம் கேட்கிறார்கள். “இத்தனைக்காலம் சுயமரியாதையோடு வாழ்ந்தாச்சு. வயசான காலத்திலயும் அது இழக்க விரும்பலஎன்கிறார், தன் மருமகளின் நடத்தையை மறைமுகமாய் குறித்தபடி. அடுத்து மருமகள் மிகவும் மனம் வருந்துகிறாள். குற்றவுணர்ச்சியாள் துடிக்கிறாள். முதியோர் இல்லத்தில் அவரைத் தேடி வருகிறாள். தன்னுடன் வந்து விடுமாறு கேட்கிறாள். அவர் மறுக்கிறார். அவள் மீது எந்த குற்றமும் இல்லை; அவருக்கு கோபமும் இல்லை என்கிறார். அவர்களது வறுமையில் தான் அவர்களுக்கு பாரமாய் இருப்பது நல்லதல்ல என்கிறார். மேலும்காக்கா உட்கார்ந்ததும் பனம் பழம் விழுந்த மாதிரி நீ அன்னிக்கு திட்டினதும் நான் கிளம்பி இங்கே வந்துட்டேன். மத்தபடி நீ இதுக்கு காரணமில்ல. இப்படி ஒரு இடம் இருக்கிறது தெரிஞ்சிருந்தா உங்க வீட்டுக்கு வந்திருக்கவே மாட்டேன். நேரே இங்கே வந்திருப்பேன்என்கிறார்.
முதியவரின் பேச்சில் உள்ள முரண்பாட்டை கவனியுங்கள். மருமகளின் அவமரியாதைப் பேச்சு சகிக்காமல் வந்ததாய் தானே நிர்வாகிகளிடம் கூறினார். பின் ஏன் இங்கே மருமகளிடம் மாற்றி சொல்கிறார்? பாசாங்கா? அல்ல.
கவனித்தோமானால் அவர் நிர்வாகிகளிடம் பேசும் போது கூட தன் மருமகளை பழிக்கவில்லை. ஆனால் நிராதரவான ஒரு முதியவர் அப்படியான ஒரு குடும்பச்சூழலில அவமானப்பட்டு சுயமரியாதை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் என அவர் நினைக்கிறார். அதைத் தான் சொல்கிறார். அப்படியென்றால் சொக்கலிங்கம் சுயமரியாதை இழந்ததற்கு, கசப்புற்றதற்கு மருமகள் பொறுப்பில்லையா?
மருமகளை பழிக்க அவசியமே இல்லை என அவர் நினைக்கிறார். அவளது சூழலில் அப்படி பேசுகிறாள். அதனால் அவள் மோசமானவள் இல்லை என ஒரு புரிதல் அவருக்கு இருக்கிறது. யோசித்து பார்த்தால் இது ஒரு ஆழமான தத்துவார்த்த நிலை. ஒரு செயலின் பொறுப்பை அதை செய்பவருக்கு பொருத்த வேண்டியதில்லை. கெட்டதை செய்வதனால் ஒருவன் கெட்டவனோ, நல்லதை செய்வதனால் ஒருவன் நல்லவனோ அல்ல என்கிற நிலைப்பாடு இது. இந்த நிலையின் ஒரு எளிய வாழ்க்கை பார்வை சார்ந்த முதிர்ச்சியை தான் சொக்கலிங்கம் வெளிப்படுத்துகிறார். நீங்கள் நினைக்கலாம், அவரது மருமகள், அதனால் அவர் பொறுத்துக் கொள்கிறார் என. இங்கே அவருக்கு தன் மனைவி மற்றும் பேத்தியுடன் உள்ள உறவை நாம் பார்க்க வேண்டும்.
மனைவி இறந்ததும் சொக்கலிங்கம் அவள் பிணத்தைக் கட்டிக் கொண்டு மனம் உடைந்து கதறுகிறார். ஆனால் அடுத்த காட்சியில் முள்தாடியுடன் விட்டம் பார்த்து ஏக்க நினைவுகளுடன் அமர்ந்திராமல் பையை தூக்கிக் கொண்டு நகரத்துக்கு தன் தம்பி பையனுடன் வாழ வந்து விடுகிறார். பிறகு எப்போதும் அவருக்கு மனைவியின் நினைவுகள் தோன்றி மனம் கலக்கமடைவதாக ஒரு காட்சி கூட கிடையாது. சொக்கலிங்கம் தன் மனைவியை ஒரு மூடுபனித்திரையை போல் கடந்து விடுகிறார். திரும்பிப் பார்ப்பதே இல்லை. திரும்பிப் பார்த்தாலும் மூடுபனி மறைந்திருக்குமே!
அடுத்த பேத்தியுடன் மிக நெருக்கமாக இருக்கிறார். அவளை பள்ளிக்கு அழைத்து போய் விடுகிறார். கேட்கிற தின்பண்டங்கள் வாங்கித் தருவது, அவளுக்கு இரவில் கதைகள் கூறுவது என பொழுதை கழிக்கிறார். பேத்தியும் தாத்தாவுடன் அப்படி ஒட்டிக் கொள்கிறாள். பேத்திக்கு உடல் நலமில்லாமல் ஆக ஆஸ்பத்திரியில் பதற்றமாய் தேடி வருகிறார். ஆனால் வீட்டை விட்டு வந்த பின் அவர் தன் பேத்தியின் நினைவுகளையும் தன விட்டு வந்து விடுகிறார். தன்னை தேடி வரும் மருமகளிடம் பேத்தியை பற்றி அவர் விசாரிப்பதே இல்லை. பொதுவாக எந்த தாத்தாவும் தன் பேத்தி அல்லது பேரனைப் பற்றி தான் முதலில் விசாரிப்பார்கள். ஆனால் சொக்கலிங்கம் அவ்வாறு செய்யாதது அவரது பிரத்யேக விட்டேந்தி மனநிலையால் தான்.
இவ்வாறு எதிலும் ஒட்டிக் கொள்ளாததனால் தான் அவரால் எல்லோருடனும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. அன்புக்கும் ஒட்டிக் கொள்வதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஒட்டிக் கொள்ளும் போது நாம் ஒருவரது குணநலன்களை நம்மைப் போல் மாற்ற முயல்கிறோம்; அல்லது அவரைப் போல் நம்மை மாற்றிக் கொள்கிறோம். சுவரில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டுவது போலத் தான். நீக்கும் போது சுவரின் காரையும் பெயர்ந்து வரும். இதனால் தான் நாம் ஒருவருடன் ஒட்ட ஒட்ட அன்பு மிகுதியாவதாய் உணர்கிறோம். ஆனால் வெறுப்பு தான் மிகுதியாகிறது. ஒருவரை நெருங்க நெருங்க அவரை வெறுப்பதற்கான ஆயிரம் காரணங்களை கண்டுபிடிக்கிறோம். நமக்கு நிகழ்வதற்கெல்லாம் அவரை பொறுப்பாக்கி குற்றம் சாட்ட ஆரம்பிக்கிறோம். கொஞ்சம் விலகி நின்று காட்டுவது தான் பூரணமான அன்பு.
நம்முடைய அன்பு என்பது ஒருவருடைய கழுத்தை நெரிப்பதாகத் தான் உள்ளது. முழுமையான அன்பு ஒரு போதும் உரிமை பாராட்டுவதில்லை. பூரணமான அன்பு நேசிப்பவரின் கையை பற்றி இறுக்காமல் நெகிழ்வாக வைத்திருக்கும்; எப்போதும் விடுவித்து விலகிப் போக அனுமதிக்கும். சொக்கலிங்கம் அப்படித் தான் அன்பைப் பார்க்கிறார். அவர் தன் மனைவியை அவ்வாறு தான் மரணத்தின் போது சுலபமாய் செல்ல அனுமதிக்கிறார். சூழ்நிலை காரணமாய் பேத்தியையும் அவ்வாறு தான் தன்னை விலகி இருக்க விடுகிறார். இதை அவர் ஒரு பிரிவாக பார்ப்பதில்லை. “நான் உங்களோடு தானே இருக்கிறேன், எப்போது வேண்டுமானாலும் உங்க வீட்டுக்கு நான் வரலாம், நீங்க இங்கே வரலாம்என தன் மருமகளிடம் முதியோர் இல்லத்தில் வைத்து கூறுகிறார்.
படத்தில் அவர் தன் பேத்தியோடு கழிக்கும் கணிசமான திரைநேரம் அவளது கையை பற்றி அழைத்துப் போவதாகத் தான் இருக்கும். தாத்தா பேத்தி உறவு கையோடு கை பற்றி நடக்கும் அந்த முத்திரை காட்சியால் தான் உணர்த்தப்படும். பேத்தியை பிரிந்த பின் இன்னொரு காட்சி வருகிறது. வாசுவின் மனைவி இரண்டாம் முறை குழந்தை பெறுகிறாள். அவளை பார்க்க ஆஸ்பத்திரிக்கு போகிறார். அங்கு குழந்தை இவரை பார்த்து சிரிக்கிறது. கையை நீட்டுகிறது. இவர் அதன் கையை பற்றுகிறார். காட்சி உறைகிறது. படம் அங்கே முடிகிறது. அவர் தன் எதிர்காலத்தை பற்றிக் கொள்வதாக இதை நம்பிக்கையூட்டும் குறியீடாக பார்க்கலாம். உறவின் மற்றொரு கையை நெரிக்காமல் நெகிழ்வாக பற்றிக் கொள்கிறார் என்றும் பார்க்கலாம். இந்த நெகிழ்வு தான் அவரை வாழ்வை களங்கமற்ற மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள உதவுகிறது.
முதியவரின் பாத்திரம் ரேயின்பதேர் பாஞ்சாலியில்வரும் பாட்டியை நினைவுபடுத்துகிறது. அப்பாட்டியும் மருமகளால் அவமானப்படுத்தப்பட்டு வீட்டை விட்டு விரட்டப்படுகிறார். பின்னர் மருமகளுக்கு குழந்தை பிறந்ததும் ஒன்றுமே நடக்காதது போல் திரும்ப வந்து பேரனை பார்த்துக் கொள்கிறார். அவர் தன் மகனிடம் ஒரு நல்ல கம்பளி கேட்கிறார். ஆனால் வேறெதுமே அவர் தன் குடும்பத்திடம் இருந்து எதிர்பார்க்காதவராக இருப்பார். அடிக்கடி மருமகளிடம் கோபித்துக் கொண்டு வெளியே போய் விடுவார். அப்படி ஒரு வெளியேற்றத்தின் போது இரவில் கடுங்குளிரில் நடுங்கி இறந்து போகிறார். இறந்து விரைத்த அவரது உடலை அவரது பேரக்குழந்தைகள் வெளியே ஒரு தோட்டத்தில் எதிர்பாராமல் கண்டுபிடிக்கும் காட்சி அழகானது. ஒரு மலர் உதிர்வதைப் போன்று அவர் இறந்து போகிறார். அக்காட்சியிலும் ரே எவ்வித துன்பியல் உணர்ச்சிகளையும் கிளர்த்தாமல் அன்றாட வாழ்வின் மற்றொரு நிகழ்வாக எதேச்சையானதாக அதை சித்தரித்திருப்பார். இப்பாட்டி தான் இன்னொரு மொழியில் புலத்தில்சந்தியா ராகத்தில்சொக்கலிங்கமாக வருகிறார்.
பதேர் பாஞ்சாலிக்கும்” “சந்தியா ராகத்திற்கும்அதன் காட்சியமைப்பில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. கிராமத்தில் மனிதர்கள் பாதைகளில் அவரவர் காரியங்களை நோக்கி சாவகாசமாய் நடந்து செல்லும் காட்சிகள், அல்லி பூத்த குளம், கூட்டமாய் விளையாடித் தெரியும் குழந்தைகள் என்பதான காட்சிகள் ஆகட்டும், கிழவரின் மருமகள் இருளில் விளக்கை ஏற்றும் போது கீழிருந்து மேலாக ஒளி அரும்பி பொங்கி அவள் முகத்தை அரைவெளிச்சத்தில் துலங்க செய்யும் காட்சிகளாகட்டும் ரேயை நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன. பாலு மகேந்திரா சித்தரிக்கும் அந்த கூட்ட நெரிசல் மிக்க மெட்ராஸ் கூடபதேர் பாஞ்சாலியின்அடுத்த பாகமான அபுர் சன்சாரில்வருகிற கொல்கத்தா போலவே உள்ளது.
இந்த பாட்டியும் தாத்தாவும் பொதுவாக வயோதிகம் குறித்த நமக்குள்ள கவலைகளை ஏற்றுக் கொள்வதன் வழி எளிதாய் சமாளிக்கிறார்கள். வாழ்வின் ஒரு கட்டத்தில் தாம் உறவுகளில் இருந்து விலகி வாழ்வதும், குடும்ப அமைப்பில் இருந்து வறுமை காரணமாய் வெளியேற்றப்படுவதும் அவர்களுக்கு மற்றொரு வாழ்க்கை மாற்றமாக மட்டும் தான் இருக்கிறது. ஒன்று எப்படி இருந்ததோ அப்படியே இல்லாமல் ஆகிறது என புரிந்து கொள்கிறார்கள். குடும்பமோ உறவின் ஆதரவோ இல்லாமல் போவது கூட வாழ்வின் மற்றொரு பருவம் என நினைக்கிறார்கள். அதனால் தான் தனிமை அவர்களை தீண்டுவதில்லை. புறக்கணிப்பு வாட்டுவதில்லை.
இன்று வயோதிகம் நம்மை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இதற்கு காரணம் குடும்பம், வேலை, சமூக அந்தஸ்து என ஒவ்வொன்றுமே நாமாக உருவாக்கியது என நாம் நம்ப ஆரம்பிப்பதால் தான். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்து, சில பட்டங்களை பெற்றால் குடும்பமும் வேலையும் நாட்காட்டியில் தாளை கிழிக்கும் போது புது நாள் தோன்றுவது போல் அதன் பாட்டுக்கு உருவாகின்றன. அதே போல் அவை நம்மை விட்டு செல்லலாம் தானே? இப்படங்களில் வரும் முதியவர்களுக்கு இது குறித்த ஒரு புரிதல் அல்லது உள்ளுணர்வு இருக்கிறது. அவர்கள் எதையும் இறுக்கப் பற்றிக் கொள்வதில்லை, அதனாலே எதையும் இழப்பதாகவும் எண்ணுவதில்லை.
இன்னொரு பக்கம் இவர்கள் தம் அடையாளம் என்ன என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இரு முதியவர்களும் சுயசார்புள்ள தனிமனிதர்கள். அதனாலே சுயமரியாதை முக்கியமாகிறது.
இறுதியாக, அடைதலோ இழப்போ அல்ல வாழ்க்கை என்கிற புரிதலும் உள்ளது. எந்த கட்டத்திலும் இவர்கள் பளிச்சென்று சிரிக்க, மகிழ்ச்சியை நிபந்தனையில்லாமல் ஏற்க தவறுவதில்லை. “சந்தியா ராகத்தில்வரும் சொக்கலிங்கம் நல்ல உதாரணம். யாராவது கண்டிக்கும் போது அல்லது வருத்தமேற்படுத்தும் கேள்விகள் கேட்கும் போது முகம் வாடுவார். ஆனால் அடுத்த கணம் அத்தனையும் மறந்து வெள்ளைப்பற்கள் காட்டி சிரிப்பார். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கொண்டாடுவதற்கான, மகிழ்ச்சியை துய்ப்பதற்கான ஏதோ ஒரு சந்தர்ப்பம் நமக்காக காத்திருக்கிறது. “சந்தியா ராகத்தின்ஆரம்பத்தில் தாத்தாவுக்கு பாட்டி தேநீர் கொடுப்பார். அதை வாங்கி அருந்தியதும் ஒரு மனம் நிறைந்த புன்னகை பூப்பார். அது போல் குழந்தைகள் நொண்டி விளையாடும் போது அதிலும் தயக்கமின்றி கலந்து கொள்வார். மருமகளால் துரத்தப்பட்டு முதியோர் இல்லம் போன பிறகு மனம் திருந்தி தன்னை நாடி வருகிற அவளை இல்லத்து வாசிகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பார். அதில் ஒரு பாட்டி இவளைப் பார்த்துஇவ தான் உன்னை துரத்தி விட்டவளா?” என கோபமாக கேட்பாள். உடனே சொக்கலிங்கம்அவளே என்னை திருப்பி அழச்சிட்டு போக வந்திருக்கா, நீ வேற என்னை துரத்தி விட்டதா சொல்லிக்கிட்டு இருக்கிறே. நானா அடம் பிடிச்சு இங்கே இருந்திக்கிட்டு இருக்கேன் தெரியுமாஎன குழந்தை போல் புலம்பிக் கொண்டே போவார். அவருக்கு மருமகள் ஒரு முறை காயப்படுத்தினாள் என்பதற்காக இப்போது தன்னிடம் அவள் அன்பு காட்டும் போது வரும் மகிழ்ச்சியும் நிறைவும் துளியும் குறைந்ததாக ஆகாது. அப்போது எந்தளவுக்கு முழுமையாய் வருத்தப்பட்டாரோ இப்போது அந்தளவுக்கு முழுமையாக சந்தோஷப்படுகிறார். இரண்டும் தனித் தனி, இரண்டும் முழுமையானது. இந்த கனிவும் தெளிவும் இல்லாததனால் தான் பிற இல்லவாசிகள்  தனிமையால் பீடிக்கப்பட்டு தன்னை திரும்ப அழைத்துப் போக குடும்ப உறவுகள் வர மாட்டார்களா என ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சொக்கலிங்கம் தான் எங்கே இருந்தாலும் தான் தனியாக இல்லை என நம்புகிறார். 
இப்படத்தில் வரும் இன்னும் இரு முதியவர்கள்  விவாதிக்க வேண்டியவர்கள்.
ஒரு முதியவர் ஒரு ஐயர். ஊனமுற்றவர். அவர் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். முதுமையில் சுகவாழ்வை விரும்புபவர். ஆனால் பிள்ளைகளும் மருமகள்களும் அவரை வீட்டு வேலைகள் செய்ய சொல்லி அலைகழிக்கிறார்கள். அவர் சதா தன் நிலையை எண்ணி, இந்த கால தலைமுறையினரை குற்றம் சொல்லி புலம்பியபடியே இருக்கிறார். இவரை படத்தின் பிரதான பாத்திரத்துக்கு ஒரு முரணாக இயக்குநர் முன்வைக்கிறார். வாழ்க்கை மாற்றத்தோடு சமாதானம் அடைய முடியாமல் தத்தளிக்கிற மனிதராக அவர் இருக்கிறார். ஒரு காலத்தில் தன் முன் தலை நிமிர்ந்து நிற்க துணியாத மகன்கள் இப்போது தன்னை ஏய்ப்பது அவருக்கு புரியவில்லை. இந்த அபத்தம் அவரை கசப்படைய வைக்கிறது. எல்லாம் ஏன் எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை அவரது கேள்வி. அவரது கோபமான கேள்விகளுக்கு சொக்கலிங்கம் புரிதலுடன் உள்ளார்ந்து புன்னகைத்தபடி பார்க்கும் இடங்கள் படத்தில் அற்புதமானவை. இரு மாறுபட்ட வாழ்க்கை நோக்குகள் ஒன்றோடுன்று கைகுலுக்கும் இக்காட்சியை பாலுமகேந்திரா அழகாய் அமைத்திருப்பார்.
இன்னொரு முதியவர் படத்தின் ஆரம்பத்தில் மிகச்சில நொடிகள் மட்டும் தோன்றுகிற சவரத் தொழிலாளி. சொக்கலிங்கம் டீக்கடைக்கு போகிறார். அவர் பக்கத்தில் ஒரு வயதான சவரத்தொழிலாளி யார் கன்னத்தையோ மழித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் ஒரே வயது. சொக்கலிங்கம் காலையில் எழுந்து தன் கால் முட்டியை பிடித்து விட்டு வாய் கொப்புளித்து தேநீர் அருந்தி குளத்துக்கு சென்று குளித்து, வழியில் குழந்தைகளுடன் விளையாடி முதுமையில் ஒரு குழந்தையாக அன்றாட பிரச்சனைகளுடன் பட்டும்படாமல் வாழ்கிறார். இவ்வாறு தன் முதுமையை அனுபவிக்க அவரது மேல் சாதி பின்புலமும், சமூக அனுகூலங்களும் காரணமாக இருக்கின்றன.
அவர் இளமையில் நாடக நடிகர். ஆனால் அது ஒரு கலை நாட்டத்தினால் ஆன பொழுதுபோக்கு வேலை தான். கொஞ்ச காலம் கணக்குப்பிள்ளையாக இருந்ததாகவும் கூறுகிறார். அவர் எங்கும் நிலைத்து கடும் வேலைகள் செய்தததில்லை. வயோதிகத்திலும் அவருக்கான அன்றாட வேலைகளை மனைவி செய்து தந்து அவரை வசதியாக வைக்கிறார். இதனால் தான் அவரால் அன்றாட கவலைகள் அறியாமல் விட்டேந்தியாக திரிய முடிகிறது. மனைவி இறந்த பின்னும் அவர் வேலை பார்க்க நினைப்பதில்லை. தம்பி மகனின் குடும்பத்தை நாடி செல்கிறார். அங்கு நிராகரிக்கப்பட்டதும் முதியோர் இல்லம் செல்கிறார். அவர் வாழ்க்கையை தொடர்ந்து துய்க்கிற மனநிலையில் இருக்கிறார். வேலையை தன் வாழ்வின் ஒரு பகுதியாக  அவர் நினைப்பதில்லை. மாறாக அந்த சவரத் தொழியாளி தாத்தா இவரைப் போல் முதிர்ந்து களைத்த வயதிலும் யாருடைய கன்னத்தையாவது மழித்து தான் பிழைத்தாக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அவரும் யாரையவது ஒண்டிப் பிழைக்கலாம் தான். ஆனால் உழைப்பை நம்பி வாழ்கிற வர்க்கத்தை சேர்ந்த அவருக்கு முதுமையில் கூட இன்னொருவர் வீட்டு திண்ணையில் படுத்து பொழுதை கழிப்பது பற்றி சிந்திக்க இயலாது.
ஆக அன்றாட வாழ்க்கையில் உழைப்பில் ஒன்றிப் போய் வாழ்வதன்  பின்னால் ஒரு சமூக உளவியல் இருக்கிறது. அதே போல் விட்டேந்தியாய் திரிவதன் பின்னும் ஒரு பண்பாட்டு மனநிலை உண்டென கூறலாம். இதை ஒரு வெள்ளாள மனநிலையாகவும் பார்க்கலாம். விட்டேந்தியாய் இருப்பதும் சாகும் வரை உழைப்பதும் எந்தளவுக்கு ஒரு சுயதேர்வாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஒரு சாதிய உளவியலாகவும் தான் உள்ளது. இந்தியாவில் விட்டேந்தி மனப்பான்மை சில சாதிகளில், குறிப்பாக மேல் சாதிகளில், மிக வலுவாக வெளிப்படுகிற ஒன்று. வறுமையில் கூட சிலர் உழைப்பதை ஒரு சாத்தியமாக கருத மாட்டார்கள். இதை ஒரு குற்றமாக அல்ல ஒரு சாதிய பண்பாடாக தான் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் நம் சாதிய பண்பாடு நம் குணத்தை, வாழ்க்கை நோக்கை நம்மை அறியாமலே தீர்மானிக்கிறது.
முதுமையை அணுகுவதில் ஒரு தத்துவார்த்த நோக்கும் சாதிய பார்வையும் இப்படத்தில் உள்ளன. ஆனால் இவ்விசயங்கள் படத்தில் மிக மிக நுணுக்கமாக உள்பொதிந்து உள்ளன. பாலுமகேந்திராவின் சிறப்பு இது தான். அவர் மிஷ்கினைப் போல் நான் தத்துவம் பேசுகிறேன் என ஒவ்வொரு காட்சியிலும் நம் முகத்தில் அறைந்து கூவுவதில்லை.

நன்றி: ஏப்ரல் 2014 காட்சிப்பிழை

2 comments:

முருகேசன் பொன்னுச்சாமி said...

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்த திரைபடத்தை யூ tube வலை தலத்தில் பார்த்தேன். மிகவும் அருமையான படம். தங்களின் கருத்தாழம் மிக்க இப்பட விமர்சனம் தெள்ளத் தெளிவாக தெளிந்த நீரோடை போல், வாசிப்பதற்கு இனிமையாக இருந்தது.

Jayakanthan Palani said...

ஆகச்சிறந்த பார்வை.., உங்களது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன்.ஆனால், ஏனோ, பல கட்டுரைகளில் நான் பாதியிலேயே வெளியேறி விடுகிறேன்...ஆனால்,இந்த வயோதிகத்தின் பாடல்..மிகமிக நேர்த்தியான வடிவத்துடன், தெளிவான சிந்தனையுடன், நூல் பிடித்த நடையில் என்னை கரம் பிடித்து அழைத்துச்செல்வதுபோல் இருந்தது. வாசித்து முடித்தவுடன், மனதில் இனம்புரியா மகிழச்சி,அதே நேரம், இந்த படைப்பு, பாலுமகேந்திராவின் பார்வையில் படாமல் போய்விட்டதே, என்றொரு வருத்தம் ஏற்ப்பட்டது. மற்ற கட்டுரைகளில், நீங்கள் புடவையிலிருந்து, நூலுக்கு, நூலில் இருந்து பஞ்சுக்கு என நுட்பமாக பயணிக்கும்போது, ஏதோ ஒரு வறட்சி தட்டுப்படும்..ஆக, இந்தக்கட்டுரையில் கூடுதலாக ஏதோ ஒன்று உங்களுக்கு வசப்பட்டிருக்கிறதாகவே கருதுகிறேன்.அடிக்கடி இப்படியும் எழுதுங்கள்..வாழ்த்துகிறேன்..பாராட்டுகிறேன்..நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்...,