Monday, April 21, 2014

படைப்பு சுதந்திரம்: சில விவாதங்கள்
நேற்று அகநாழிகையில் நடந்த “படைப்பு சுதந்திரம்” பற்றின கூட்டத்தில் எதிர்பார்த்த்து போல் ஜோ டி குரூஸ் பற்றியும் பலர் பேசினார்கள். மோடியை அவர் ஆதரித்த்து தவறு என தான் பொதுவான மனநிலை இருந்தது. “ஏங்க ஆதரிக்கக் கூடாதா?” என யாரும் கேட்காதது ஆறுதலாக இருந்த்து. அதற்காக புத்தகத்தை மொழிபெயர்க்க மாட்டேன் என கூறுவது அநீதி என பரமேஸ்வரி உள்ளிட்டோர் கூறினர். எனக்கு அப்போது வேறு சில கேள்விகள் எழுந்தன.

திமுக காலத்தில் பாரதிதாசன் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டார். அதற்கு முன்பும் பெரியார் கொள்கைகளின் வெளிப்படையான ஆதரவு தான் அவரது முகமாக இருந்தது. திராவிட கழகத்தினர் அவரை கவிதைக்காக கொண்டாடவில்லை. இலக்கிய அரசியல் முகமாக விளங்கினார். ஒருவேளை அவர் திடுதிப்பென காங்கிரஸ் ஆதரவை தெரிவித்து தன்னை அஸ்திகராக மாற்றிக் கொண்டிருந்தால் என்னவாகி இருக்கும்? அப்படியே கழகத்தினர் கைவிட்டிருப்பார்கள்.
தாகூரை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்து ஐரோப்பாவில் மக்கள் நம்பிக்கைகளை, விழுமியங்களை இழந்து வெறுமையாக இருந்த காலகட்டம் அது. அப்போது தாகூர் தன் கவிதைகளை தானே மொழியாக்கி, கவிஞர் யேட்ஸின் உதவியுடன் இங்கிலாந்துக்கு கொண்டு போகிறார். அப்போதைய வெறுமையான மனநிலையில் அவரது கவிதைகளின் ஆன்மீக சாரம், லட்சிய ஊற்று மக்களுக்கு ஆசுவாசமளிக்கிறது. அவருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. இதற்கு சில மாதங்களுக்கு முன் ஒருவேளை தாகூர் தன்னை ஹிட்லரின் ஆதரவாளர் என அறிவித்து அவரைப் புகழ்ந்து ஒரு நூல் எழுதுகிறார் என கொள்வோமே. அப்போது அவருக்கு இதே பரிசை கொடுப்பார்களா? மாட்டார்கள்.
எதற்கு இதை சொல்கிறேன் என்றால் இலக்கியம் என்றுமே அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. குரூசின் நாவலை லஷ்மி ஹோம்ஸ்டுரோம் போன்ற ஒருவர் பெங்குயினுக்காக மொழிபெயர்க்கிறார் என்று வைப்போமோ. அப்போது இதே போல் அரசியல் காரணத்துக்காக பின்வாங்கினால் தவறு தான். ஆனால் இது அப்படி அல்ல. நவயானா ஆனந்தும் கீதாவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக இயங்குபவர்கள். அவர்கள் “ஆழிசூழ் உலகை” ஒரு முழுமுதல் இலக்கிய பிரதியாக மட்டுமே படித்து தேர்வு செய்ய மாட்டார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை பேசும் அதன் அரசியல் சாரம் அவர்களுக்கு பிரதானம். அப்போது ஒடுக்கப்பட்டவர்களை படுகொலை செய்யும் மோடி போன்றவர்களை குரூஸ் ஆதரித்தால் எப்படியான முரணாக இது இருக்கும். பிரதியும் அதை எழுதுகிற ஆளும் அரசியல் தளத்தில் வேறுவேறல்ல. ஒருவேளை வண்ணதாசனின் கவிதைகளை மொழிபெயர்க்கிறார்கள் என்றால் வேறு விசயம். அவர் மோடியை ஆதரித்தாலும் அவர் கவிதைகளை படிக்கலாம். ஆனால் இவ்விசயம் அப்படி இல்லையே! முழுக்க இலக்கிய பிரதியாக யாரும் “ஆழி சூழ் உலகை” பார்க்கவில்லை.
நான் இந்த அரசியலை எல்லாம் நியாயப்படுத்தவில்லை. இதன் பின்னுள்ள தர்க்கத்தை விளக்க பார்க்கிறேன்.
கூட்டத்தில் கௌதம சித்தார்த்தன் ஒரு வினா எழுப்பினார். இந்நூல் இந்துத்துவா சார்பு உள்ளது என ஏற்கனவே கண்டனங்கள் உண்டு. அப்படி இருக்க குரூஸ் இப்படியானவர் என கீதாவுக்கு இப்போது தான் தெரிய வந்ததா? இது ஒரு மேலோட்டமான கேள்வி. “ஆழிசூழ் உலகை” அப்படி இந்துத்துவா படைப்பு என சுருக்க முடியாது. ”விஷ்ணுபுரத்தை” மட்டும் வைத்து கூட ஜெ.மோவை இந்துத்துவாவாதி என கூற முடியாது. அதனால் தான் ”வெள்ளையானை” தலித்துகளை கவர்ந்த்து. ஆனால் “வெள்ளையானை” வெளியாகிற தருணத்தில் தர்மபுரி கலவரம் சரிதான் என ஜெமோ கூறியிருந்தால் தலித்துகள் நாவலை கடுமையாக வெறுத்து எதிர்த்திருப்பார்கள். ஆனால் ”விஷ்ணுபுரம்” வெளியாகிற போது அவர் அப்படி ஒரு ஏற்க முடியாத அரசியல் கூற்றை வைத்தால் அது நாவலை பாதித்திருக்காது. ஏனென்றால் ஒன்று அரசியல் படைப்பு, இன்னொரு அரசியலற்ற (நேரடியாக) படைப்பு.
இவை முழுக்க பொதுமக்களின் மனநிலை. இதற்கும் இலக்கிய ரசிகனுக்கும் சம்மந்தமில்லை. அதனால் இலக்கியவாதிகளின் கருத்து சுதந்திர கோரிக்கை நாம் இங்கு எழுப்ப முடியாது.
இது ஒரு வெற்றுக்கூச்சல், நாளை கீதா நாவலை மொழியாக்க ஒத்துக் கொண்டால் நீங்கள் பேசுவதெல்லாம் வீணாகி விடும் என்றார் கெ.என் சிவராமன். நானும் விஷ்ணுபுரம் சரவணனும் அப்படி ஆகாது என்றோம். அரசியல் எதிர்ப்பு என்பது ஒரு தருணத்தை ஒட்டியே நிகழ முடியும். ஆனால் அதற்கு தொடர்ச்சி இல்லை என பொருள் இல்லை. எதிர்ப்பு தொடரும். ஏனென்றால் இவ்வெதிர்ப்புக்கு ஒரு கருத்தியல் பின்னணி உள்ளது.
சிவராமன் தொடர்ந்து இன்றைய மக்கள் சமரசம் ஏதாவது செய்தே வாழ வேண்டியுள்ளது; அதனால் கராறான அரசியல் எதிர்ப்புகளில் அர்த்தமில்லை; “மயிர்பிளக்கும் ஆரவாரங்கள்” பாசாங்கானவை என்றார்.
எனக்கு இரண்டு விசயங்கள் இதை ஒட்டி தோன்றியது. சிவராமன் தீவிர இலக்கியம் படிக்கக் கூடியவர். ஆனால் வெகுஜன இதழில் இயங்கி வெகுஜன நாவல் எழுதக் கூடியவர். ஆக அவர் தெளிவாகவே ஒரு சமரசம் மேற்கொள்கிறார். இது அவருக்குள் ஒரு இயல்பான முரணை ஏற்படுத்தும். பிற பத்திரிகையாளர்களுக்கு எப்படியோ ஆனால் சிவராமன் போன்ற விசயம் தெரிந்தவர்களுக்கு “நான் ஏன் படிப்பது ஒன்று செய்வது ஒன்று” என இருக்கிறோம் என தோன்றாமல் இராது. அதற்காக அவர் ஒரு சமரச தத்துவத்தை கண்டுபிடிக்கிறார். சமரசமே எதார்த்தம் என்கிறார். ஓரளவு உண்மை தான். ஆனால் மிகச்சிறந்த படைப்புகள், தத்துவங்கள், கோட்பாடுகள், சாதனைகள் எதிர்நிலையில் இருந்து தான் தோன்றுகிறது. ஒன்றை எதிர்த்து தான் புதிதாக ஒன்று வளரும். முரணியக்கம் தான் வளர்ச்சியின் அடிப்படை. சமரசமாக இருப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு கருத்து கூட தோன்றாது. ரொம்ப அப்பிராணியாக தெரியும் அரசியலற்ற அசோகமித்திரனே கடுமையான விருப்புவெறுப்புகள் கொண்டவர். இங்குள்ள சிறுகதை எழுத்து முறையை “எதிர்க்கிறார்”. அப்படித்தான் அவருக்கு அந்த தனித்துவமான கதையுலகு அமைகிறது. எதிர்ப்பே இருப்பு.
சமரசம் போதும் என்பவர்கள் பிடித்து வைத்த பிள்ளையார் போல் நிகழ்வதை வேடிக்கை பார்க்கலாம்; ஆனால் நிகழ்த்துபவர்களாக இருக்க முடியாது. இது ஒரு தவறான எதிர்மறையான அணுகுமுறை. கொஞ்சம் கோபமும் எதிர்ப்பும் உடைத்தெறிகிற ஆவேசமும் இல்லாமல் நீங்கள் இங்கு ஒன்றும் செய்ய முடியாது.
மோடி எதிர்ப்பரசியலை முன்வைத்தல்ல பொதுவான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இதையே பொருத்தி பேசுகிறேன். மோடியை எதிர்த்து கோப்ப்படுபவர்கள் நாளை ஒரு கட்டுரை எழுதலாம், நாவல் கூட எழுதலாம். படைப்பூக்க உத்வேகம் கோபத்தில் இருந்து தான் தோன்றுகிறது. அலுவலகத்தில் ஆபீசர் திட்டினால் வீட்டில் மனைவி திட்டினால் சும்மா தானே இருக்கிறோம், அரசியலில் மட்டும் ஏன் பொங்குகிறோம் என யோசிப்பவர்கள் செயலற்று போவார்கள். தனித்துவமாக ஒன்றுமே எழுத மாட்டார்கள் (நான் சிவராமனை சொல்லவில்லை).
இன்னும் பல சுவாரஸ்யமான கருத்துக்களும் பேசப்பட்டன. கௌதம சித்தார்த்தன் கூட்டத்தை கலகலப்பாக்கினார். யார் பேசினாலும் அதற்கு ஒரு முத்தாய்ப்பு தீர்ப்பு கூறியதால் நாங்கள் அவரை நடுவர் என கலாய்த்தோம். அவரிடம் ஒரு விட்டேந்தியான துணிச்சல் உள்ளது. தான் வேலை பார்க்கிற பத்திரிகையை கூட விமர்சிக்கிறார். அவர் பேச ஆரம்பித்ததும் பானைக் கடைக்குள் யானை புகுந்த்து போல் ஒரு உணர்வு வருகிறது. யானையை எந்த குழந்தைக்கு தான் பிடிக்காது?

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

முரணியக்கம் தான் வளர்ச்சியின் அடிப்படை. சமரசமாக இருப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு கருத்து கூட தோன்றாது.