Sunday, April 13, 2014

குஷ்வந்த் சிங்: ஒரு நூற்றாண்டின் மறைவு


-   


குஷ்வந்த சிங் தமிழக பத்திரிகையாளர்களைப் போல் அல்லாமல் ஒரு தலைவரை பெயர் போட்டு அழைக்கும் அதிகார பீடிகையும் தன்னம்பிக்கையும் கொண்ட அரசியல், சமூக விசயங்களை துணிச்சலாய் விமர்சித்து எழுதிய வடக்கத்திய பத்திரிகையாளர். எழுத்தாள அந்தஸ்தும், தில்லியின் அதிகார வட்டத்தில் தாக்கமும், பரவலான வாசக பரப்பும் கொண்டவர். ஒரு கலைமாமணி வாங்க நாம் இங்கு தலைவர்களின் காலடியில் தவம் இருக்க அவர் தனக்கு 74இல் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை சீக்கிய படுகொலைகளை கண்டிக்கும் நோக்கில் 84இல் திருப்பி அளித்தவர். ஆனாலும் அரசாங்கம் 2007இல் பத்ம விபூஷனை அவருக்கு அளித்தது.

குஷ்வந்த் சிங் 85 புத்தகங்கள் எழுதினார். பெரும்பாலானவை கட்டுரை நூல்கள். அவரது சீக்கிய வரலாற்று நூற்கள் முக்கியமானவை. அவரது உரைநடை கொஞ்சம் பழையது - பிரித்தானிய முறுக்கும் அறிவார்ந்த நகைச்சுவையும் நேரடி பகடியும் கொண்டது. புனைவில் அவரது நடை துல்லியமானது, பாசாங்கற்ற விவரணையின் காரத்தன்மை கொண்டது. Train to Pakistan (1956) மிக பிரபலமான நாவல். குஷ்வந்த் பிரிவினைக்கு முன் பாகிஸ்தானிய பகுதியாக இப்போது உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். இஸ்லாமியர் மத்தியில் வளர்ந்தவர். இந்நாவலில் பிரிவினையின் போது எவ்வாறு இந்துத்துவா சக்திகள் ஒரு அமைதியான கிராமத்தில் முகாமிட்டு அங்கு மத பிரிவினையை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என கூறுகிறார். அவரைப் பொறுத்தமட்டில் இந்து-முஸ்லீம் வெறுப்பு என்பது செயற்கையாய் திட்டமிட்டு இந்துத்துவா சக்திகளால் உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர் கிராமத்தில் இருந்து கூட்டங்கூட்டமாய் விரட்டப்படுகின்றனர். இரவில் பாகிஸ்தான் செல்லும் ஒரே ஒரு ரயில் வரும். அதன் மீது கணிசமான இஸ்லாமியர் ஏறித் தப்பிக்க போகிறார்கள். மதவெறியர்கள் ரயிலின் பாதையில் வானில் ஒரு கயிறைக் கட்டி வைக்கிறார்கள். ரயில் போகும் வேகத்தில் மேலே உட்கார்ந்திருப்பவர்கள் அதில் பட்டு வெட்டப்பட்டும் கீழே விழுந்தும் இறக்க வேண்டும் என்பது திட்டம். இந்த பலியாகப் போகும் கூட்டத்தில் ஒரு இஸ்லாமிய பெண். அவள் வயிற்றில் ஒரு இந்துக்காதலனின் கரு வளர்கிறது. அவளை அவன் எப்படி காப்பாற்ற போகிறான் என்பது கிளைமேக்ஸ். “தில்லி” (1990) மற்றொரு முக்கிய நாவல்.
The Company of Women (1999) போர்னோவின் விளிம்பில் தடுமாறி நடக்கும் நாவல். இந்நாவலை அவர் 83வது வயதில் எழுதத் துவங்கினார். இது பற்றி ஓரிடத்தில்ஒருவருக்கு வயதாகும் போது செக்ஸ் ஆசை இடுப்புக்கு கீழிருந்து தலைக்கு பயணிக்கிறதுஎன்றார். மோகன் குமார் எனும் ஒரு பணக்கார ஆண் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னுடன் சில காலம் செக்ஸ் மற்றும் பணத்துக்காக தங்க விரும்பும் பெண்களுக்காய் பத்திரிகை விளம்பரம் தருகிறார். அப்புறம் நடப்பது தான் கதை. குஷ்வந்த் சிக்கலான ஆழமான மனிதர் அல்ல. அவரது நாவல்களும் இயல்பாக கொஞ்சம் தட்டையானவை தான். ரஷ்டி போல் இலக்கிய மினுமினுப்புகளும் இல்லாத சுவாரஸ்ய எழுத்து அவரது. ஆனாலும் அங்கங்கே வரும் அவதானிப்புகள் நம்மைக் கவரும். உதாரணமாக சரோஜினி பரத்வாஜ் எனும் ஆங்கில ஆசிரியை மோகனின் விளம்பரம் பார்த்து அவரை நாடி வருகிறார். முதல் நாள் அவர் காரில் ஷாப்பிங் போகிறார். எதிரே ஒரு காரில் ஒரு குறைந்த ஆடை அணிந்த பெண்ணைப் பார்த்துச்சீ தேவடியாஎன நினைத்துக் கொள்கிறார். அப்போது சட்டென்று அவருக்கு தோன்றுகிறது தான் தேவடியாவா சமூக அந்தஸ்து கொண்ட ஆசிரியையா எனஅவர் இரண்டும் இல்லை. அவர் இரண்டுக்கும் நடுவே இருக்கிறார்.

குஷ்வந்த் சிங் கடுமையான பா.. எதிர்ப்பாளர். பா..கவினர் அவரைஇந்தியாவில் வாழும் கடைசி பாகிஸ்தானிஎன வர்ணித்தனர். அவர் மதம் சார்ந்த அரசியல் நாட்டை சீரழிக்கும் என நம்பினார். ஆனாலும் அவரது 99வது பிறந்த நாளில் அத்வானி அவரை சந்தித்து வாழ்த்தினார். குஷ்வந்த் சிங் அனைவராலும் விரும்பப்படுகிற வெறுக்கப்படுகிற மனிதராக ஒரே சமயத்தில் இருந்திருக்கிறார்.
குஷ்வந்த் சிங் 1915இல் ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தில் பிறந்தார். பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் கவர்னராக இருந்த உஜ்ஜல் சிங் இவரது மாமா. தில்லியிலும் லண்டனிலுமாய் படிப்பை முடித்தவர் வக்கிலாக பணியாற்ற விரும்பினார். ஆனால் அத்துறை ஏமாற்றமளிக்க ..எஸ் தேர்வாக முயன்றி அதிலும் தோற்றார். வேறு வழியின்றி சில காலம் அரசு ஊழியராக பணியாற்றினார். பிறகு ஊடகத்துறையில் நுழைந்தார். The Illustrated Weekly of India, The National Herald, Hindustan Times ஆகியவற்றில் ஆசிரியராக செயல்பட்டார். எண்ணற்ற பத்திகள் எழுதினார். உருது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கினார். 1980இல் இருந்து 86வரை ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் குஷ்வந்த் எழுதிக் கொண்டே இருந்தார். எண்ணற்ற பத்திகள் எழுதினார். Malice Towards One and All இவரது மிக பிரபலமான பத்தி.
ஆங்கில ஊடகத்தில் தவிர்க்க முடியாத குரலாக மாறினார். 99 வயதில் இறுதி மூச்சு விடும் வரை அவர் எழுத்தில் ஓய்வு பெறவே இல்லை. அவரது ஆயுள் என்பது இந்தியாவின் ஆன்மாவை சிதைத்த பிரிவினை வன்முறை, நேருவின் சோசலிஸ கொள்கைகள், இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸி, சீக்கிய படுகொலைகள், பாபர் மசூதியில் இந்துத்துவா மதவெறி, உலகமயமாதல், பொருளாதார எழுச்சி, லட்சியங்களின் வீழ்ச்சி என இந்தியாவின் வரலாற்றின் ஒரு சுழற்சி பருவமும் தான். தான் பார்த்த மாற்றங்கள் பற்றி அவர் பலவிதங்களில் எதிர்வினையாற்றினார். எமர்ஜென்ஸியை ஆதரித்தது, மன்மோகன் சிங்கை தொடர்ந்து பாராட்டியது கேலிக்கும் சர்ச்சைக்கும் ஆளானது. ஆனால் அவர் அனைத்தையும் பார்த்தார், எழுதினார். இந்தியாவின் போக்கோடு முகிழ்த்து மலர்ந்து வாடினார். ஒரு முழுமையான வாழ்வு!
நன்றி: ஏப்ரல் 2014 உயிர்மை

1 comment:

Krishna moorthy said...

நன்றி .அழகிய பதிவு .