Saturday, April 5, 2014

ஆயிரத்தில் ஒருவன்: அசல் தமிழ் சினிமா எது?  

1965இல் வெளியானஆயிரத்தில் ஒருவனின்டிஜிட்டல் ரீதியாய் மேம்படித்தப்பட்ட வடிவம் வெளியாகி உள்ளது. பொதுவாக சத்யம் திரையரங்களில் அந்த வகையான கூட்டத்தை பார்த்ததில்லை. அவர்கள் எழுபதுகளில் பிறந்தவர்கள். டிஸைனர், பிரண்டட் சட்டை போடாதவர்கள். கறுப்பாய் தொப்பை வைத்தவர்கள். நளினமாய் தளுக்காய் நடக்க தெரியாதவர்கள். கள்ளமின்றி முரட்டுத்தனமாய் பேசி பழகுபவர்கள். படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே சத்தமாய் அதற்கு எதிர்வினை செய்பவர்கள். சாந்தம் பால்கனி அவர்களாலே நிரம்பி இருந்தது. மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார்கள்.

கரைவேட்டி ஆட்களும் இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி அம்மா என செருமினார்கள். ஜெயலலிதாவுக்கு இப்படம் வெளியாகும் போது 14 வயது. குழந்தைக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்த முகத்தில் பாசாங்கில்லாத ஒரு அழகு ஜொலிக்கிறது. ராஜசுலோச்சனா பக்கம் நிற்கிற ஒரு மிட்ஷாட்டில் அவருடைய இடை ஒப்பிடுகையில் எவ்வளவு குறுகிறது என வியப்பாகிறது. கண்களிலும், மூக்கின் நுனியிலும் ஜெயலலிதாவுக்கே உரித்தான அந்த scorn (மட்டம் தட்டும் சிரிப்பு) இருக்கிறது. பிறகுள்ள படங்களில் போல் அது இன்னும் அவர் உடல்மொழியில் தோன்றவில்லை. ஜெயலலிதா தோன்றும் முதல் காட்சியிலே செங்கப்பன் அவரிடம் சொல்கிறார்நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரி ஆகி ஆளப் போகிறாய் அம்மா”. அது வரலாற்றில் பலித்து விட்டது பாருங்கள்.
எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்தது 1972இல். இப்படம் ஏழு வருடங்களுக்கு முன் வருகிறது. ஆனாலும் இப்படத்தை இப்போது பார்க்கையில் திமுக அதிமுக உருவான வரலாறை பேசுகிற ஒரு உருவகக் கதை போலவே இருக்கிறது. நாஞ்சில் நாட்டில் இருந்து சுதந்திர போராளிகள் அல்லது கலகக்காரர்கள் கைது செய்யப்பட்டு கன்னித்தீவில் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். இது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தமிழர்களை விடுவிப்பதற்காக திமுகவின் போராட்டமும், அதன் நெருக்கடிகளும் எனக் கொள்ளலாம். இதில் எதேச்சையாக எம்.ஜி.ஆர் சிக்கிக் கொள்கிறார். எதேச்சையாக என்பது முக்கியம். அவர் அப்படித் தான் தன் அரசியல் வாழ்வை சித்தரிக்க விரும்புகிறார். அதாவது மக்கள் சேவைக்காக மட்டுமே உழைக்கிறவர். பதவியை, அதிகார சுகத்தை விரும்பாத தியாகி. இந்த பிம்பத்தை பின்னர் ரஜினி இன்னும் நுணுக்கமாக, தத்துவார்த்த பார்வையுடன் வளர்த்தெடுத்தார்.
இப்படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆரை நாஞ்சில் நாட்டுத்தலைவர் ஆகும்படி அந்நாட்டு மன்னரே வேண்டுகிறார். மக்கள் கெஞ்சி கத்தி ஆர்ப்பரித்து வற்புறுத்துகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது லட்சியம் சிறந்த மருத்துவராக இருப்பதே என அறிவித்து பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்புகிறார். இதைஎன்னை தலைவனாக்க மக்கள் துடிக்கிறார்கள், ஆனால் இப்போதைக்கு நடிப்பே லட்சியம்என அவர் திமுக தலைவரை நோக்கி சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த படத்தின் வெற்றி எம்.ஜி.ஆரின் பிற்கால அரசியல் எழுச்சிக்கு பெரிதும் பயன்பட்டது என்கிறார்கள். அந்தளவுக்கு கச்சிதமாக திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள் அவரது பாத்திரத்தைவீரன், நல்லவன், தன்னலமற்றவன், பெண்களை, ஏழைகளை தனக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொண்டு காப்பவன், இதனூடாக மென்மையான ஒரு ஆளுமை மற்றும் அட்டகாசமான ரொமான்ஸ் அவருக்கு ஒரு தனி கவர்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்போது மறுதிரையிடலில் இந்த இறுதிக் காட்சியை பார்த்து அவர் டாக்டராவப் போறாராம்என்று அதிமுகவினரே கலாய்க்கிறார்கள். ஆனால் இதே காட்சியை பாட்ஷா, முத்து, அருணாச்சலத்தில் ரஜினி தனது விட்டேந்தி தத்துவத்தை முன்வைத்து அதிகாரத்தை, பணத்தை கைவிட்டு வெறுங்கை வீசி கிளம்புவதாய் மாற்றி, ரஹ்மான் பின்னணி இசையுடன் சித்தரிக்கையில் நாம் மீண்டும் ஈர்க்கப்படுகிறோம். வெறும் அரசியல்ரீதியான கடமை, கண்ணியம் எல்லாம் இன்று வேடிக்கைக்குரியவை ஆகி விட்டன.


படத்தின் நடுவே ஒரு சுவாரஸ்யமான பகுதி வருகிறது. அதுவும் அரசியல் போராட்டம் பற்றின உருவகம் தான். தீவில் அடிமையாக விற்கப்பட்ட பின் போராளிகள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கட்டத்தில் அலுப்பாகிறது, தம் லட்சியம் பாழாகிறதோ என அவநம்பிக்கை ஏற்படுகிறது. நாஞ்சில் நாட்டின் விடுதலைக்காக போராடாமல் ஏன் இன்னொரு தீவில் மரம் வெட்டிக் கொண்டிருக்க வேண்டும் என கொதிப்பாக கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர் கவலைப்படாமல் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி ஒரு குறிப்பும் போராளிகளின் உரையாடல் இடையே வருகிறது. அவரது அப்பா அவரை ஒரு பெரும் வீரனாக்கும் பொருட்டு வாட்பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் அளித்தார். ஆனால் எம்.ஜி.ஆரோ மருத்துவராகும் ஆர்வத்தில் வாட்கலையை துறந்து விடுகிறார். இப்போது அவர் எந்த அக்கறையுமில்லாமல் தீவுக்காய் உழைப்பதில் லயித்திருக்கிறார். இந்த மேலோட்டமான அக்கறையின்மை போராளிகளை கொதிப்படைய செய்கிறது. அப்போது நாகேஷ் அங்கு வந்து எப்போது எதை செய்ய வேண்டும் என ஒரு தலைவனுக்கு தெரியும் என்கிறார். அடுத்து எம்.ஜி.ஆர் வந்துஅங்கிருந்து தப்பித்து சென்று சொந்த நாட்டை கொடுங்கோலனிடம் இருந்து காப்பாற்ற நாம் அமைதியாக இருக்க வேண்டும், பொறுமையாக காத்திருக்க வேண்டும்என்கிறார். அப்போது தான் அந்த அருமையானஏன் என்ற கேள்விபாடல் வருகிறது. முக்கியமான சில வரிகள் இதில் உள்ளன.
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே
இங்கே பகுத்தறிவு என்பது பெரியாரின் கொள்கைகளையும், உணர்ச்சிகள் தமிழ் இன உணர்வையும் குறிக்கிறது என புரிந்திருக்கும். அடுத்த வரிகளில் பாட்டில் ஒரு சின்ன தாவல் வருகிறது.
பெரியாரும் அண்ணாவும் முழங்கிய கொள்கைகள் உடனடியாக சமூகத்தை மாற்றுமா? திமுக ஆட்சிக்கு வந்தது பெரியாரின் கொள்கைத் தயிரை மோராக்கி விட்டுத் தான் என அறிவோம். கடவுள் மறுப்பு, கராறான சாதிய எதிர்ப்பு தேவையில்லை என அண்ணா முடிவெடுத்தார். இனவுணர்வை கூட அரசியல்ரீதியாக அன்றி பண்பாட்டு ரீதியாக முன்னெடுக்கவே அண்ணா முனைந்தார். கலைஞர் அவ்வழி சென்றவர் தான். இதன் நீட்சியாக ஒரு மேனன் சாதியை சேர்ந்தவரும், ஐயங்காரும் திராவிட கழக கிளையில் இருந்து முகிழ்த்து கட்சிகள் ஆரம்பித்து தமிழக முதல்வர்களானது எதேச்சை அல்ல. சமூக அடுக்குகளை மாற்றி மாற்றி அடுக்கி வைத்து ஆனால் பெரிய அளவில் எதையும் கலைக்காமல் இருப்பது தான் இந்திய புரட்சி. இன்றுள்ள திமுகவினரிடம் பேசிப் பாருங்கள்கழகத்தின் ஆதாரக் கொள்கைகளை நேரடியாக நடைமுறைப்படுத்துவதே பின்பற்றுவதோ இன்று சாத்தியம் அல்ல என தயங்காமல் கூறுவார்கள். உண்மையில் இது இந்திய சமூகத்தின் பிரச்சனை தான். திராவிட கட்சிகளை குற்றம் சொல்லி பயனில்லை; அவர்களால் இவ்வளவு தான் செய்ய முடிந்தது. இந்த தவிர்க்க முடியாத சமரசத்தை தத்துவார்த்தமாய் நியாயப்படுத்தும் அடுத்து வரும் வரிகள்.
 ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வருங்காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என முழங்கட்டுமே
அதாவது பெரியார் சொன்னவை நடக்க நூற்றாண்டுகள் ஆகும், அதுவரை தொண்டர்கள் பொறுக்க வேண்டும். நம் சமூகம் பகுத்தறிவை ஏற்பது இப்போதைக்கு நடக்காது. பகுத்தறிவை பேசிக் கொண்டே அதை கடந்து போகிற பாணியை பின்னர் எம்.ஜி.ஆர் தன் அரசியலில் நேரடியாகவே பின்பற்றினார். அவர் கலைஞரைப் போல் இந்து மதத்தை கேலி பண்ண மாட்டார். எம்.ஜி.ஆர் நேரடியாய் தன்னை விசுவாசி என அறிவிக்காவிட்டாலும் கோயிலுக்கு போவதை மறுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு அந்த தயக்கம் கூட இல்லை. பொதுவாகபார்ப்பான்கள்மீதான பெரியாரின் விமர்சனங்களைப் பற்றி அவர் என்ன கருதுகிறார் என எந்த தைரியமுள்ள பத்திரிகையாளராவது கேட்டால் அவர் பதில் சுவாரஸ்யமாக இருக்கும்.
அடுத்த வரிகள் இன்னும் அழகானவை
நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள்வலியால் அந்த நாள் வரும்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
நாம் செய்கிற வேலைக்கான பலனுக்கு எந்தளவுக்கு நாம் பொறுப்பு? நன்றாக வேலை செய்தும் லாபம் இல்லை, முன்னேற்றம் இல்லை, பதவியுயர்வு இல்லை என்றால் அது நம் தவறா? ஒரு இந்திய மனம் இல்லை எனும்.
ஓடை வெட்டுவது தான் நம் வேலை. மழை வந்து, ஓடைகள் நிரம்ப வேண்டும். அது காலத்தின் பணி. ஆக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதிலுள்ள ஒரு பகவத் கீதை சாரத்தை நீங்கள் கவனிக்கலாம். படம் முழுக்க எம்.ஜி.ஆர் அதிகம் கவலைப்படாத போராளி தான். இறுதி சண்டைகளில் ஒன்றில் நம்பியாருடன் மோதக் கிளம்பும் போது கூடகொஞ்சம் விளையாடி விட்டு வருகிறேன்என்று தான் கத்தியை எடுத்துக் கொண்டு மலர்ந்து முகமுடன் போகிறார். உடனே ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.
சண்டைகளில் ஒரு புறம் ஆட்கள் சாக அவர் சிரித்துக் கொண்டே ரசித்தபடி கொஞ்சம் கோணங்கி நகைச்சுவையுடன் நாகேஷுடன் சேர்ந்து எதிரிகளை தாக்குகிறார். இந்த அலட்டாத உடல்மொழி இப்பாடலில் வெளிப்படும் தத்துவத்தோடு ஒத்துப் போகிறது. அதனால் தான் இப்படத்தில் எம்.ஜி.ஆரின் பாத்திர அமைப்பு நமக்கு அணுக்கமாக உள்ளது. நெருக்கடியான நேரங்களில் ஆட்டோவில் உட்கார்ந்து ஜாலியாக கலைத்தபடி கலகலப்பாய் வாடிக்கையாளரிடம் பேசும்பாஷாவைநினைவுபடுத்துகிறது.
தீவில் வெட்டுகிற மரங்களை ஆற்றில் ஒழுக விட்டு பதுக்கி கட்டுமரம் கட்டி தப்பிக்க திட்டமிடுகிறார் எம்.ஜி.ஆர். ஆனால் எதிர்பாராமல் கடற்கொள்ளையர்கள் தாக்க, அவர்களை எதிர்த்து விரட்டினால் சுதந்திரம் தருவதாய் தீவின் தலைவர் செங்கையன் சொல்கிறான். விரட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் தராமல் ஏமாற்றுகிறான். அடுத்து அவர்களே அங்கிருந்து தப்பித்து கொள்ளையர் கப்பலில் ஏறி கொள்ளையர்களை தோற்கடித்து கைப்பற்றி அதன் மூலம் தப்பிக்க பார்க்கிறார்கள். ஆனால் கொள்ளையர்களிடமே கைதிகளாக பின்னர் சூழ்ச்சியால் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படிப் போகிறது கதை. கிட்டத்தட்ட இறுதிக் காட்சி வரை அடிமைகளை அவர் காப்பாற்றுகிறேன் என அழைத்துப் போய் மேலும் மேலும் பிரச்சனைகளில் தான் மாட்டி விடுகிறார். மேலும் அவராக திட்டமிட்டு வெற்றி பெறுவதை விட அதுவாக அமைகிற சந்தர்பங்களை பயன்படுத்தி ஒவ்வொரு காயாக நகர்த்துகிறார். விதி அவரை விடுதலையை நோக்கி இட்டு செல்கிறதா அல்லது அவராகவே போராடி ஜெயிக்கிறாரா என்பது இத்திரைக்கதையில் குழப்பமான ஆனால் முக்கியமான கேள்வி.

 ஒரு அதிகாரப் போட்டியில் ஜெயிப்பதற்கான ஒரு கருணையற்ற மன உறுதி அற்றவராகவே எம்.ஜி.ஆர் பாத்திரம் இருக்கிறது. இவ்விதத்தில் நம்பியாரின் பாத்திரம் முக்கியமானது. அவர் தான் கொடுங்கோல மன்னனை இறுதிக் காட்சியில் கத்தி எறிந்து கிட்டத்தட்ட கொல்கிறார். ஆனால் நம்பியார் எவ்வளவோஅவன் சாகட்டும் விடுங்கள்எனக் கேட்டும் எம்.ஜி.ஆர் அவருக்கு வைத்தியம் பண்ணி காப்பாற்றுகிறார். ஆனால் உயிர்பிழைத்ததும் கொடுங்கோலன் அவர்களை கைது பண்ணி தன் நாட்டுக்கு கொண்டு செல்கிறான். நல்லவேளை அவன் மனம் திருந்தி விடுவதாய் காட்டுவதால் பிரச்சனை தீர்கிறது. ஆனால் ஒரு தலைவனாக எம்.ஜி.ஆர் பாத்திரமான காந்தியவாத தாக்கம் கொண்ட மணிமாறன் சொதப்பல் பேர்வழி. அவருக்கு பதில் நம்பியார் இந்த அடிமைகளுக்கு தலைமை ஏற்றிருந்தால் படம் ஆரம்பித்து முதல் அரைமணி நேரத்தில் ஒரே சண்டையில் கொடுங்கோலனைக் கொன்று வென்றிருப்பார் எனத் தோன்றுகிறது. ஒரு விதத்தில் இந்த படத்தின் நிஜமான ஹீரோ நம்பியார் தான். ஆனால் இந்த சொதப்பல்களும் கபடமின்மையும் தான்ஏழைகளின் நாயகனாக”, ”நல்லவனாகஎம்.ஜி.ஆரை ஒரு அணுக்கமான நாயகனாக கட்டமைக்கிறது.
நல்லது செய்வதா, வேண்டாமா, கெட்டதன் பக்கம் நிற்கையில் நல்லது செய்ய முடியுமா ஆகிய கேள்விகள் நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி நமக்குள் எழுபவை. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஒரு குழப்பமான வழுக்கலான பாதையில் தினமும் நடக்கும் சொதப்பலானவர்கள் தானே நாம். அதனால் தான் நமக்கு இதிலுள்ள எம்.ஜி.ஆரின் குழப்பங்களும், நடைமுறை திறனற்ற, மென்மையான அசட்டுத்தனமும் பிடித்துப் போகிறது. அதனால் தான் தமிழக அரசியலில் ராஜதந்திரியும் துடுக்கான கடற்கொள்ளையர் தலைவனான நம்பியாருக்கு திரும்ப ஆட்சியை பிடிக்க 1989 வரை 12 வருடங்கள் காத்திருக்க வேண்டியதாகிறது.

திட்டமிட்டு அமைத்தார்களோ இல்லையோ இதில் வருகிற எம்.ஜி.ஆர் நம்பியார் மோதல்கள் எம்.ஜி.ஆர் × கலைஞர் அதிகார போட்டியை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக அவர்கள் வாட்சண்டை இடும் முன்சினங்கொண்ட வேங்கை என்ன செய்யும் தெரியுமா?”
மதம் கொண்ட யானையிடம் தோற்று ஓடும்
ஆகிய பஞ்ச் வசனங்கள் பேசிக் கொள்ளும் போது இன்றும் கூட ரசிகர்கள் அந்த அரசியல் குறிப்பை உணர்ந்து கைதட்டி சிரிக்கிறார்கள், ரசிக்கிறார்கள். திரைக்கதையில் ஜெயலலிதாவும் இவர்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொள்ள அரசியல் குறியீடு இன்னும் சுவாரஸ்யமாக மாறுகிறது. குறிப்பாக நம்பியார் ஜெயலலிதாவை அடைய முயலும் காட்சிகள். கடைசியில் மனம் திருந்துகிற நம்பியார்சகோதரிஎன சிலமுறை அவ்வளவு பாசமாய் அழைக்கிறார். அதை இன்றைய சூழலோடு பொருத்தி பார்க்க ரொம்ப தமாஷாக இருக்கிறது.
இப்படம் 1935இல் வந்த Pilot Bloodஇன் தழுவல் என்கிறார்கள். கிட்டத்தட்ட இதே கதை தான். அசல் படத்தின் அரசியல் பின்னணி உணர்ந்தால் தமிழ் தழுவலின் சாமர்த்தியமும் படைப்பூக்கமும் விளங்கும். 1685இல் இங்கிலாந்தில் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஜேம்ஸ் கத்தோலிக்கர். ஆனால் இங்கிலாந்தில் பெரும்பான்மை புரொட்டஸ்டெண்டினர். இதனால் ஒரு மறைமுக மத விரோதம் புகைந்தபடியே இருக்கிறது. ஜேம்ஸுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஜேம்ஸின் மரணத்துக்குப் பின் அவரது மகன் ஆட்சிக்கு வருவதாய் தெரிய இந்த எதிர்ப்பாளர்கள் கொதித்து போகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஜேம்ஸின் மகளான புரொட்டெஸ்டண்ட் கிறுத்துவர் மேரி ஆட்சிக்கு வருவார் என எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் ஜேம்ஸின் சகோதரரான முன்னாள் மன்னருக்கு தகாத உறவில் தோன்றிய மகனான ஜேம்ஸ் ஸ்காட் என்பவரை கலகம் பண்ணுமாறு தூண்டி விடுகிறார்கள். ஆனால் அவரது உள்நாட்டுபுரட்சி தோற்றுப் போகிறது. ஸ்காட்டை கழுவிலேற்றுகிறார்கள். இந்த ஸ்காட்டுக்கு வைத்தியம் பார்த்ததற்காக ஒரு மருத்துவரை பிடித்து ஒரு மேற்கிந்திய தீவுக்கு அடிமையாக விற்கிறார் மன்னர். இவர் கடற்கொள்ளையரின் அகப்படுகிறார். பிறகு அவர்களிடம் இருந்து தப்பி இங்கிலாந்து வருகிறார். அப்போதைக்கு இரண்டாம் ஜேம்ஸ் பதவி நீக்கப்பட்டு புது ஆட்சி ஏற்பட்டிருக்க மருத்துவர் நிம்மதியாக மீண்டும் இங்கிலாந்தில் வாழ்க்கையை தொடர்கிறார். இது உண்மைக்கதை. இதை வைத்து ஒரு சாகச நாவல் எழுதப்படுகிறது. நாவலை தழுவி எடுக்கப்பட்டது தான் மேற்சொன்ன ஆங்கிலப்படம். தமிழில் இந்த அரசியல் சூழல் கிட்டத்தட்ட பொருந்திப் போவதை கவனியுங்கள்.
பெரும்பான்மை புரொட்டொஸ்டெண்டினரை அடக்கியாளும் சிறுபான்மை கத்தோலிக்கர்இது அப்படியான பெரும்பான்மை திராவிட மத்திய சாதியினரை அடக்கி ஆளும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் என படத்தில் நுணுக்கமாக மாறுகிறது. காங்கிரஸை பதவி இறக்குவதற்கான முயற்சி தான் கலகம். திமுகவினர் அடிமைகளாக கடத்தப்பட்டு துன்பப்படுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற, தலைமையில் ஆர்வமற்ற, ஆனால் கடமையுணர்வு கொண்ட, எம்.ஜி.ஆர் வருகிறார் என ஒரு தொன்மம் உருவாக்கப்படுகிறது. மேற்கில் இருந்தது போல் இங்கு அடிமை வர்த்தக வரலாறு இல்லை. ஆனால் அதை விட ஆபத்தான, மறைமுக அடிமை அமைப்பான வர்ணாசிரமம் இருந்தது. ஆக பிராமணர் அல்லாதோர் அடிமைகளாக இருக்கிறார்கள், விடுதலைக்கு துடிக்கிறார்கள் என்பது தமிழ் சூழலுக்கு அழகாக பொருந்திப் போகிறது. பிராமணர்கள் கீழ் வர்ணாஸ்ரம அமைப்பின் கீழ் ஏன் அர்த்தமின்றி உழைக்க வேண்டும் என மத்திய சாதியினர் கலங்குகிறார்கள். இன்னும் கொஞ்ச காலம் பொறுக்கும் படிஏன் என்ற கேள்விபாடலில் திமுக தலைமை கேட்டுக் கொள்கிறது. இந்த இடங்கள் அந்த காலத்தில் எப்படியான உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கும் என கூறத் தேவையில்லை. நான் சத்யம் திரையரங்கில் ஒரு பிராமண முகத்தை கூட பார்க்கவில்லை. எல்லாரும் மத்திய சாதி கறுப்பர்கள் தான் அன்று. இதுவும் எதேச்சையாக இருக்க முடியாது.
நான் பெரிய திரையில் எம்.ஜி.ஆரைப் பார்ப்பது இது முதல் அனுபவம். அபாரமான அழகு கொண்டவர் தான். சின்ன டி.வி திரையில் அவர் வீங்கின முகம் கொண்டவராக தோன்றுவார். ஆனால் பெரிய திரையில் அப்படியே மனதை கொள்ளை கொள்கிறார். அவரது துள்ளலான நடை, துடிப்பான சைகைகள், எப்போதும் உடலை அசைத்து, வெட்டி தலை திருப்பி பேசும் அந்த பாணி பெரிய திரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் வந்ததும் நம் கவனம் முழுக்க அவர் மீதே குவிகிறது. இந்த திரை இருப்பு (screen presence) எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினிக்கு மட்டுமே கைவந்திருக்கிறது. இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணையாய் நம் கவனத்தை கட்டிப் போடுபவர் நாகேஷ். அரங்கில் அவருக்கு தொடர்ந்து கைத்தட்டலும் விசிலும் பறக்கிறது. அவருக்கும் எம்.ஜி.ஆரைப் போன்று ஸ்பிரிங் உடல் அசைவுகள் உண்டு. பொதுவாக நாகேஷ் இப்படத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். அவர் தன் தாக்கத்தை வடிவேலு போல் நுணுக்கமான முகபாவனைகள், தோள் அசைவுகள், குரல் ஏற்ற இறக்கங்கள், வட்டார வழக்கு சொல்லாடல், உச்சரிப்பு மூலம் செய்வதில்லை. நாகேஷ் தன் மொத்த உடலையும் ஒரு திரை போல் மாற்றி அதில் நகைச்சுவை நிகழ்த்துபவர். அதனால் தான் டிவியில் விட பெரிய திரையில் அவரைப் பார்க்க இன்னும் அமர்க்களமாக இருக்கிறது. அவரைப் பார்க்கையில் சார்லி சாப்ளினைக் கூட நாம் திரையரங்கில் தான் பார்க்க வேண்டுமோ எனத் தோன்றுகிறது.
பெரிய திரையில் ஆட்கள் நின்ற இடத்தில் சிலை போல் பேசுவதை விட துடிப்பாய் இயங்கிக் கொண்டிருப்பது உடனடியாய் ஒரு காட்சிபூர்வ தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய தமிழ் சினிமா மனித உடல் மொழியை கடந்து போய் விட்டது. “ஆயிரத்தில் ஒருவனில்ஏகப்பட்ட நாடகீய காட்சிகள் உண்டு. ஆனால் சமகால சினிமா ஒரு மெத்தனமான எதார்த்தவாதத்துக்குள் போய் விட்டது. நிறைய close-up, mid, panaromic காட்சிகள் தான் வைக்கிறார்கள். புறக்காட்சிகள் மூலம் மிரட்ட முயல்கிறார்கள்.  ஆயிரத்தில் ஒருவன்முற்றிலும் வேறுவகையான சினிமா. திரைக்கதையிலும் நிறைய மெனக்கட்டிருக்கிறார்கள் இன்று இது போல் திரைக்கதை மூலம் நம்மை உறைய வைக்கும் படங்கள்நேரம்”, “சூது கவ்வும்போல் அரிதாகவே வருகின்றன. அதனால் தான் நவீன பார்வையாளர்கள், குழந்தைகள் உள்ளிட்டு, மொத்தஆயிரத்தில் ஒருவனையும்அசையாமல் கவனம் கலையாமல் முணுமுணுக்காமல் இன்று திரையரங்கில் பார்க்கிறார்கள். இது சாதாரண விசயம் அல்ல. அவ்வளவு திருப்பங்கள், காட்சியில் வேகம், நாடகீயம், அட்டகாசமான பாடல்கள், இசை என உங்களை இமைக்கவே இப்படம் அனுமதிப்பதில்லை. சமகால படங்கள் ஓடும் போது பெரும்பாலும் ரசிகர்கள் ஆர்வம் இழந்து செல்போனிலோ, அதுவும் முடியாவிட்டால் தமக்குள்ளே சத்தமாய் பேசும் அவல நிலைக்கு ஆளாகிறார்கள். திரைக்கதை மீது மீண்டும் நம் பிடியை முறுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அன்று திரையரங்கில் ஒருவர் இவ்வாறு பேசிக் கொண்டார்புதுப்படம் பார்க்குறதுக்கு இது போல பழைய படங்களை திரும்ப போட்டா உட்கார்ந்து பார்க்கலாம்யா, அவ்வளவு நல்லா இருக்கு”.
கடந்த பத்து வருடங்களில், அதாவது கிட்டத்தட்டகாதல்வெளியானதில் இருந்து ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றம் காதலை உடல் அணுக்கம் இல்லாமல் சித்தரிப்பது. சமகால காதலர்களைப் பார்க்க சகோதர சகோதரிகள் போல் இருக்கிறார்கள். அணைத்தால் கூட ஒரு தயக்கம் வெளிப்படுகிறது. இயக்குனர்களும் காதல் தூய்மையானது என நம்புகிறார்கள் போல. நாயகிகளை ஒரு புறம் முகம் அலம்ப விடாமல் அழுக்கு தாவணி போட்டு சேப்பியார் டோனில் நடக்க விடுகிறார்கள். நாயகன் அவளைப் பார்த்து டவுசர் தெரிய வேட்டியை மடித்துக் கட்டிஆசைப்படலாமா வேணாமா?” என்கிற தயக்கத்துடன் சிரித்துக் கொண்டு போய் விடுகிறான். போகிற வழியில் கோபம் வந்து பத்து பதினைந்து பேரை கொன்று விடுகிறான். இதைப் பார்த்து நாயகிக்கு காதல் வருகிறது. ஆனால் அதற்காக காதல் செய்ய அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. சும்மா எட்ட நின்று பார்த்துஏலேய்என பாட்டு பாடிக் கொள்வார்கள். இது ஒரு தூய்மைவாதம் என்றால் காதலில் காமத்தை தவிர்க்காதஆதலினால் காதல் செய்வீர்போன்ற படங்கள் ஒழுக்கவாதம் பேசுகின்றன. ஏன் தமிழ் சினிமாவுக்கு காமத்தின் மீது இவ்வளவு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது என நாம் யோசிக்க வேண்டும்.
காமத்துக்காக ஏன் தனியாக ஒரு குலுக்கு நடிகை வந்து ஆட வேண்டும்? நாயகியிடம் அந்த காம ஈர்ப்பு இருக்க கூடாது? இது இயல்பற்றது அல்லவா? இந்த படத்தில் ஜெயலலிதாவின் உடல் காமத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி போலவே இருக்கிறது. எம்.ஜி.ஆரை மயக்க முயலும் காட்சிகளில் (குறிப்பாய் நாணமோபாடல்) பிரமாதப்படுத்துகிறார். இன்றைய நாயகிகளின் உடல்மொழியில் ஒரு வறட்சி, விலகல் வந்து விட்டது. கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து நள்ளிரவில் தப்பித்து வந்து விட்ட பெண்கள் போல் மிரட்சியாக இருக்கிறார்கள். வெறும் அரூபமான எண்ணம் மட்டுமே காதல் என நம் இயக்குனர்களுக்கு யார் சொல்லியது? வேறொப்போதையும் விட செல்போன் வசதி மற்றும் போர்னோ காரணமாய் நிர்வாண உடல் பிம்பங்கள் நம் பிரக்ஞைகள் மிக அதிகமாய் சிதறிக் கிடக்கின்றன. இதன் இன்னொரு எல்லை போல் இன்றைய தமிழ் சினிமா கிறித்துவ பயிற்சி சாமியார்களுக்கு மடத்தில் காட்டும் போதனைப்படங்கள் போல் வெளியாகின்றன. எம்.ஜி.ஆர் படக் காதலில் தான் அந்த இயல்பு, உண்மைத்தன்மை உள்ளது. அந்த பார்வையில், தொடுகையில் ஆசையும் அன்பும் உள்ளது. உடலைத் தவிர்க்க நினைக்காத ஒரு எதார்த்த காதல் இச்சை உள்ளது.
எதார்த்தவாத சினிமா என்றால் நாடகீயம், துள்ளலான ஆட்டங்கள், ஆர்ப்பாட்டமான இசை, இச்சை, கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற அடிப்படை உணர்வுகளின் இயல்பான சித்தரிப்பு ஆகியவற்றை முழுக்க தவிர்க்க அவசியமில்லை. ஆட்டமும், ஆர்ப்பாட்டமும், நாடக சுபாவமும் தமிழ் வாழ்வின் இயல்புகள். தமிழ் சினிமா இன்று மூன்று நாட்களுக்கு மேல் ஓடாததற்கு ஒரு காரணம் எதார்த்தம், பரீட்சார்த்ததின் பெயரில் நாம் ஒரு சினிமாவில் இருந்து இன்னொரு சினிமாவை எடுக்க முயல்வது. அடிப்படையான மனித உணர்ச்சிகளை நாடகமாக்குவதில் ஆர்வம் இழந்துள்ளது இன்னொரு காரணம். வேகவேகமாய் காட்சிகளை வெட்டி நகர்த்தினால் வேகம் வந்து விடும் என இன்றைய இயக்குநர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சாமர்த்தியமான திரைக்கதை தான் படத்தை சலிப்பில் இருந்து காப்பாற்றும் என்பதை பழைய படங்கள் நமக்கு மீண்டும் கற்றுத்தருகின்றன. அவ்விதத்தில் பாலா கூட பாக்கியராஜிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. நாடகீயமான காட்சிகளை எப்படி மெல்ல மெல்ல முறுக்கேற்றி கொண்டு வர வேண்டும் என்பதற்கு “ஆயிரத்தில் ஒருவனிலும்” வேறு பழைய படங்களிலும் சில நல்ல உதாரணங்கள் உள்ளன. இன்றைய படங்களில் சேப்பியார் டோனில் அழுக்காக உடல் முழுக்க சேற்றை அப்பி வரும் மனிதர்களை விட பழைய மசாலா பட பாத்திரங்கள் அசலாக தோன்றுகிறார்கள்.
கையில் ஒரு கோடி தேறினால் தேர்தலில் நிற்கலாம் அல்லது ஒரு படம் எடுக்கலாம் என கிளம்பாமல், அனர்த்தமான படங்களை புதுசுபுதுசாய் வெளியிட்டு மக்களை திரையரங்குகளில் இருந்து முழுக்க விரட்டாமல் நாம் நம்முடைய தமிழ் கிளாச்சிக்குகளை மீண்டும் பார்க்க தொடங்கலாம். இது போல் எண்பது, தொண்ணூறுகளின் கிளாசிக்குகளையும் டிஜிட்டல் மேம்பாடு செய்து வெளியிடுவதை நாம் பரிசீலிக்கலாம். திரும்ப செல்வது சில சமயம் முன்னே போவதற்கு உதவலாம்.

நன்றி: உயிர்மை, மார்ச் 2014

No comments: