Sunday, March 23, 2014

மோடியும் இந்தியர்களும்: நமக்கு அறத்தில் நம்பிக்கை இல்லையா?
இன்றைய ஹிந்துவில் தீமையின் சகஜத்தன்மை (The Banality of Evil) என்றொரு முக்கிய கட்டுரை வந்துள்ளது. எவ்வளவு எளிதாக நம்மால் இனப்படுகொலைகள், குற்றங்களை மன்னித்து மோடி போன்றவர்களை முன்னேற்றத்தின் பெயரில் ஏற்க முடிகிறது என இக்கட்டுரை வியக்கிறது. இன்றைய காலத்தின் மிகப்பெரிய துரதிஷ்டம் நமக்கு இப்படியெல்லாம் மோடியை நியாயப்படுத்த தோன்றுவது தான். அதேவேளை இது வெறும் ஒரு காலகட்டத்தின் பிரச்சனை என நாம் சுருக்க முடியுமா என நாம் யோசிக்க வேண்டும். மோடியின் குற்றங்களை மட்டுமல்ல ராஜீவ் காந்தியின் கீழ் சீக்கியர்களை காங்கிரசார் எண்பதுகளின் இறுதியில் வேட்டையாடி கொன்றதையும் தான் எளிதில் மன்னித்து கடந்து விட்டோமே என கட்டுரையாளர் நிஸிம் கேட்கிறார். இங்கிருந்து நாம் விவாத்த்தை துவக்க வேண்டும். ஒருவேளை இந்தியர்களுக்கு அடிப்படையில் நீதி, அறம் மீதெல்லாம் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லையோ? நாம் அறம் என இன்று நினைப்பது ஒரு ஐரோப்பிய அளவுகோலோ?

ஒரு நல்லது நடக்க பொய் சொல்ல்லாம் என வள்ளுவர் சொன்னார். ஒரு போரில் நன்மை ஜெயிக்க எவ்வளவு மாபாதகங்களையும் செய்யலாம் என கிருஷ்ணர் சொன்னார். உண்மை ஜெயிக்க பொய் சொல்லுபவர் பொய்யன் ஆக மாட்டாரா? நன்மை ஜெயிக்க தீமை செய்பவர் தீயவர் ஆக மாட்டாரா? இந்த கேள்வியெல்லாம் ஒரு ஐரோப்பிய மனம் கேட்க்க் கூடியது. இந்திய அறம் என்பது நன்மை - தீமை, சரி – தவறு ஆகியவற்றை கடந்த்தாக இருக்கிறது. எல்லாம் மொத்த்த்தில் சம்மாகி விடும் என்பது இந்திய மனப்பான்மை. அதனால் தான் மோடி 2002இல் இஸ்லாமிய படுகொலைகளுக்கு வழிகாட்டி ஆதரித்திருக்கலாம். ஆனால் அதன் பிறகு அவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை. இஸ்ரத் ஜெஹானை என்கவுண்டர் செய்தார்களே? இருக்கலாம். ஆனால் அதன் பிறகு ஒன்றும் செய்யவில்லையே, அவர் குஜராத்தை பெருமளவில் முன்னேற்றி இருக்கிறாரே என கேட்கிறது சராசரி இந்தியனின் குரல். இதே சராசரி இந்தியன் தான் பெரும் ஊழல்களில் ஈடுபட்டோரை, கொலைக்குற்றம் சுமத்தப்பட்டோரை மீண்டும் மீண்டும் தேரதலில் தேர்ந்தெடுத்து அதிகாரம் அளிக்கிறான். குஜராத்தில் இஸ்லாமியர் வேறு வழியின்றி மோடியை ஆதரிக்கிறார்கள் என நியாயப்படுத்த பார்த்தாலும் அவர் எப்படி மீண்டும் அங்கு ஜெயித்தார் என்பது முக்கியமான கேள்வி.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது குற்றம் இழைத்த வெள்ளை அதிகாரிகளை விசாரித்து தண்டிக்கும் வழக்கம் இருந்த்து. என்னதான் கொள்ளை அடித்தாலும் சட்டரீதியாய் சரியாய் இருக்க அவர்கள் முயன்றார்கள். பொதுவாக அவர்களுக்கு ஒரு அறவுணர்வு இருந்த்து. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான டையரை ஆங்கில பாராளுமன்றம் கண்டித்து ஓய்வு பெற்று இந்தியாவை விட்டு வெளியேறும் படி கட்டளையிட்டது. இந்தியாவில் இப்படி ஒரு விசயத்தை தொண்ணூறுகளில் ராஜீவ் காந்திக்கு எதிராகவோ, 2002இல் மோடிக்கு எதிராகவோ ஒரு அதிகாரபூர்வ அமைப்பு, நீதிமன்றமோ பாராளுமன்றமோ, செய்யுமா? இல்லை. இந்திய மக்களின் மனசாட்சி மோடியை வெறுத்து ஒதுக்குமா? இல்லை.
மோடி தன் அமைச்சர்களுடன் சேர்ந்து சில கன்னிப்பெண்களை கற்பழித்து கொன்றிருந்தால் அவரது அரசியல் வாழ்வு எப்போதோ முடிந்திருக்கும். இந்தியாவில் இரு விசயங்கள் தான் கடுமையாக கண்டிக்கப்படுபவை, மன்னிப்பற்றவை. ஒன்று கற்பழிப்பு. இன்னொன்று பெரும்பான்மையினரின் மத சின்னங்களை, சமூக அடையாளத்தை அவமானித்தல். ஒரு நாஸ்திகரான அரசியல் தலைவர் பெரிய கோயிலுக்கு சென்று சிவன் அல்லது பெருமாள் போன்ற தெய்வத்தின் சிலை மீது ஒன்றுக்கடித்து அவமதித்தார் என்று கற்பனை செய்வோம். அதன் ஒரு புகைப்படமும் வெளியாகி பதிவாகிறது. அதன் பின் அவரால் இந்திய அரசியலில் இயங்கவே முடியாது. இங்கு மத்த்தை விமர்சித்து கேள்வி கேட்கலாம். ஆனால் அவமானப்படுத்த முடியாது. சட்டத்தை, கலைகளை, ஞானத்தை எதை வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம். ஆயிரம் பேரைக் கொல்ல்லாம். ஆனால் இரண்டு விசயங்களை மட்டும் தொடாமல் இருந்தால் இந்தியர்கள் உங்களை மன்னித்து விடுவார்கள்.
 ஐரோப்பியர்கள் போல் நமக்கு ஒரு கராறான அறவுணர்வு இல்லை. யூதர்களை ஹிட்லர் கொன்றதற்கு கடுமையான விசாரணை நட்த்தி அவருக்கு உதவிய அதிகாரிகளை பின்னர் தண்டித்தார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு கொடூரம் நடந்திருந்தால் விசாரித்து தண்டிக்க மக்கள் ஒருக்காலும் கோர மாட்டார்கள். மறந்து மன்னித்து கடந்து விடுவார்கள்.
ஒன்று நாம் அறத்தை ஐரோப்பியர்களைப் போல் சரி தவறு என்றல்லாமல் வேறுவிதமாய் புரிந்து கொள்கிறோம். அல்லது அடிப்படையில் நமக்கு அறத்தில் நம்பிக்கையில்லை. நமக்கு பாலியல் ஒழுக்கம் மற்றும் மதம், சாதி போன்ற குழு அடையாளங்களில் மட்டுமே நம்பிக்கை உள்ளது. ஏதோ ஒரு கோளாறு உள்ளது.
ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஒரு சாதியினரை மலம் அள்ள மட்டுமே பயன்படுத்தின சமூகம் நாம். அதற்காய் சிறிதும் நாம் குற்றவுணர்வு அடைந்ததில்லை. லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட சாதியினரை மலம் அள்ள வைக்கும் வேலையை இன்றும் இந்திய ரயில்வே கூச்சமில்லாமல் செய்து வருகிறது. இது நம் கூட்டுமனசாட்சியை கொஞ்சமும் தொந்தரவு செய்யவில்லை கேரளா படித்த மக்கள் கொண்ட மாநிலம். அங்கே ஏகப்பட்ட பொது கழிப்பறைகள் உள்ளன, ஆனால் மக்களுக்கு அவற்றை சுத்தப்படுத்துவதில் அக்கறை இல்லை என்கிறது ஒரு சேதி. இதில் ஒரு சாதிய மனப்பான்மை ஒளிந்துள்ளது. படித்து பண்பாட்டில் மேம்பட்ட மாநிலத்தவர் கூட அறமற்றவர்கள் தான். ஆக இதை மக்களின் பின்புலம் சம்மந்தப்பட்ட விசயமாகவும் கருதமுடியாது. மோடியின் படுகொலைகளை தீவிரமாக ஆதரிப்போர் நல்ல கல்வியறிவு பெற்று சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர் தான்.
இந்திய மனம் எனும் எந்திரம் கோளாறாகி உள்ளது – சில நட் போல்டுகளை காணவில்லை. இதை சரி செய்யாமல் மோடிகள் உருவாவதையோ பதவியை பிடிப்பதையோ தடுக்க முடியாது.

2 comments:

சேக்காளி said...

ப்ளாட்டுகளில் வசிப்போர் அவர்களாகவேதானே கழிவறையை சுத்தம் செய்து கொள்கின்றனர்.கழிவறை கோப்பைகளை சுத்தம் செய்ய பயன் படுத்தும் கிளீனர்கள் மலம் அள்ளும் சாதியினருக்காக விளம்பரப்படுத்த படுவதில்லை என்பது என் எண்ணம்.துணிகளை துவைப்பது,சாப்பாட்டு பாத்திரங்களை கழுவுவது,அல்லது நமக்கு நாமே கழுவிக்கொள்ளுவதை குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதை போன்று கழிவறைகளை சுத்தப்படுத்துவதையும் சொல்லிக்கொடுத்தால் மாற்றம் நிகழுமல்லவா.அதை தொழிலாய் செய்யும் மக்களை பார்த்து முகம் சுழிப்பதாவது குறையுமே.

makesh k said...

நம் அறமே சாதியின் பின்னால் தான் இருக்கிறது. கற்பழிப்பு கூட நடுத்தரவர்க்க, உயர்சாதி, இடைச்சாதி பெண்ணாக இருந்தால் தான் நீங்க சொல்ற effect எல்லாம்...