Saturday, March 22, 2014

உண்மை சொல்லலாமா? “பொன் முட்டை இடுந்ந தாறாவில்” பொய் கூறும் பூசாரி


(அமிர்தாவில் வெளியான “அறிந்ததும் அறியாததும்” பத்தியின் இறுதிக் கட்டுரை)
நம்முடைய கணிசமான அழுத்தங்களும் வலியும் குற்றவுணர்வில் இருந்து வருகின்றன. குற்றவுணர்வு உண்மை வெளிப்படுத்தல் பற்றின கற்பிதத்தில் இருந்து வருகிறது. உண்மையை கறுப்பு வெள்ளையாய் பார்ப்பதில் இருந்து வருகிறது.
ஒன்று நாம் உண்மை என நினைக்கிற ஒன்று முக்கியமானது என்கிற ஒரு கற்பனை நமக்கு உள்ளது. பல சமயங்களில் நாம் அடக்கி வைத்திருக்கிற உண்மைகள் அற்பமாய் அசட்டுத்தனமாய் பிறருக்கு தோன்றும். என் 18 வயதில் ரயில் பயணத்தில் ஒரு வெள்ளைக்காரரை பார்த்தேன். இளைஞர். நானும் குடும்பத்தோடு அல்லாமல் நண்பர்களோடு பயணித்தேன். அதனால் அவரிடம்வெளிப்படையாகபேசிக் கொண்டிருந்தேன். நான் அவர் எந்த வயதில் முதலில் செக்ஸ் வைத்துக் கொண்டார் எனக் கேட்டேன். தயங்காமல், பெரிய உண்மையை சொல்லுகிறோம் என்கிற சல்ஜாப்பு இல்லாமல் 14 வயதில் என்றார். இதுவே என்னிடம் இந்த கேள்வியைக் கேட்டால் இவ்வளவு சாதாரணமாய் கூச்சமின்றி சொல்லி விட முடியாது. அவருக்கு அற்பமான தகவலாக இருக்கிற ஒரு உண்மை எனக்கு இருண்மை கலந்த ஒரு ரகசியமாக இருக்கிறது.

இதே தான் கொலைக்குற்றம், தகாத உறவுகள் இவை சார்ந்த உண்மைகளுக்கும் உள்ள நிலைஅவை பண்பாட்டுக்கு பண்பாடு ரகசியங்களாகவோ வெளிப்படையாக பேசத் தக்க வறட்டுத் தகவலாகவோ மாறும். மதுரையை சேர்ந்த என் தோழி ஒரு சம்பவம் சொன்னார். கல்லூரியில் படிக்கையில் ஒரு நாள் அவரது கூடப்படிக்கிற பெண் வகுப்புக்கு வருவதை நிறுத்தினார். காணாமலே போனார். தோழி அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தால் அவரது அம்மாஇதோ நீங்க நிக்கிறீங்களே இதுக்கு கீழே தான் பொதச்சோம்என்று சாதாரணமாய் சொல்லி இருக்கிறார், அந்த பெண் யாரையோ காதலித்து ஓடிப் போக முயன்றதால் அடித்து வீட்டிற்குள்ளேயே புதைத்து விட்டார்களாம். கிராமத்தில் இந்த விசயம் அவர்களுக்கு ஒரு குடும்ப ரகசியம் அல்ல. ஆனால் இன்னொருவர் ஒரு கொலை செய்து விட்டு அதை வெளியே சொல்ல முடியாமல் குற்றவுணர்விலும் தனிமையிலும் வாழ்நாளெல்லாம் புழுங்கிக் கொண்டிருப்பார்.
ஆனால் உண்மையை இன்னொருவரிடம் பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி, மனத்திளைப்பு, நிம்மதி இருக்கிறது. அது பெரும் முக்கியத்துமுள்ள உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு அற்பமான தகவலைக் கூட நெடுநாளாய் மனதிற்குள் புதைத்து வைத்து ஒரு நாள் இன்னொருவரிடம் நம்பி சொல்வதில் ஒரு சந்தோசம் இருக்கிறது. இது நம்  மனதின் குணாம்சம். இதே மனத்திளைப்பு தான் இன்னும் பண்பட்ட வடிவில் வாசிப்பு, சினிமா பார்த்தல், புராதன சடங்குகளில் ஈடுபதிலின் போது நமக்கு கிடைக்கிறது. வெளிப்படுகிற விசயம் அல்ல வெளிப்பாடு தான் நிம்மதியையும் கிளர்ச்சியையும் தருகிறது. உண்மையை வெளிப்படுத்த ஆசைப்படுபவர்கள் இரண்டையும் குழப்பிக் கொள்கிறார்கள். அதனாலே உண்மையை சொல்லும் வரை ஒரு செயற்கையான மனவேதனையை அனுபவிக்கிறார்கள். உண்மை என்பது ஒரு நாடகத்தின் வசனங்கள் மட்டும் தான்.
இன்று நாம் அதிகம் உண்மை வெளிப்படுத்தல்களின் காலத்தில் வாழ்கிறோம். மீடியா திறந்து கிடக்கிறது. மீடியா தனிமனிதனுக்கான ஒரு கருவியாக மாறி இருக்கிறது. ஆனால் அது ஒரு நிபந்த்னையுடன் தான் நம்மை உள்ளே அனுமதிக்கிறது. நம் வாழ்வைப் பற்றி வெளிப்படையாக தயங்காமல் பேச வேண்டும். அப்படியான வெளிப்படையான பதிவுகளுக்கு பேஸ்புக்கில், வலைதளங்களில், ரியாலிட்டி ஷோக்களில் ஒரு மதிப்பு தரப்படுகிறது. அங்கு வெளிப்படுகிற உண்மை ஒரு நாய்க்குட்டி மேல் வண்டியேற்றினேன், ஒருவரை மனதுக்குள் பழித்தேன் என்கிற அளவில் இருக்கலாம். மோடி கூட நாய்க்குட்டி மீது கார் ஏறிவிட்டதோ என தான் பயந்ததாய் ஒரு உண்மை வெளிப்படுத்தலை செய்யும் அளவுக்கு மீடியா இன்று எளிய, மனதுக்கு அணுக்கமான விசயங்களை மறைக்காமல் தொடர்ந்து பிறருடன் பகிரும்படியாய் அனைவருக்கும் ஒரு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் அதேவேளை ஒருவர் செய்கிற மாபாதகங்களுக்கு, பெருந்தவறுகளுக்கு நம் மீடியாவில் இடம் இருப்பதில்லை; மக்களுக்கும் பெரும் பிரச்சனைகள் மேல் ஆர்வம் போய் விட்டது.
தேவையில்லாத அளவுக்கு இன்று கருத்து வெளிப்பாடுகளும் மலை போல் குவிகின்றன. இது ஒரு புறம் நமக்கு கிளர்ச்சியை தந்தாலும் இன்னொரு புறம் கடும் நெருக்கடியையும் தருகிறது. இந்த முரண்பாடு ஏன்? தெரியாமல் சின்ன வயதில் திருடிய அனுபவத்தை ஒருவர் ரியாலிட்டி ஷோவில் வெளிப்படுத்துகிறார். அந்த வெளிப்படைத் தன்மை பாராட்டப்படுகிறது. அடுத்தடுத்து பல ஷோக்களில் அவர் தேடித் தேடி உண்மை சொல்கிறார். ஆனால் ஆழ்மனதில் அவருக்கும் அவரைச் சுற்றி உள்ளோருக்கும் ஒரு கசப்பு இது குறித்து உருவாகிக் கொண்டிருக்கும். உண்மை சொல்வது நல்லது என்றால் ஏன் உண்மை நம் வாழ்வை கசப்பாக குழப்பமாக மாற்றுகிறது?
நம் நடைமுறை வாழ்வுக்கு ஒரு ஒழுங்கமைவு, ஒரு ரிதம், ஒழுக்கு இருக்கிறது. எழுதப்படாத விதிமுறைகள் நம் வாழ்வை கட்டிப் பாதுகாக்கின்றன. உண்மை என்பது இந்த ஒழுங்கை சிதைக்கிறது. அசலான உண்மை என்பது அராஜகமானது. உதாரணமாய் ஒரு குழந்தை வகுப்புக்கு கட் அடிக்கிறது. அது ரெண்டு விதங்களில் உண்மையை தன் அம்மாவிடம் சொல்லலாம். அம்மா கண்டுபிடித்து திட்டினதும் ஒத்துக் கொண்டு அழுது மன்னிப்பு கேட்கலாம். அது ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அந்த குழந்தை ஒவ்வொரு நாளும் கட் அடித்து விட்டோ, வேறாதாவது தவறு செய்து விட்டோ தன் அம்மா கேட்காமலே நேரடியாக போய் சொல்லுகிறது என்றால் அப்போது அம்மா அதிகம் அதிர்ச்சி அடைவாள். குழப்பம் கொள்வாள். அந்த நடவடிக்கை தான் நடைமுறை ஒழுங்கை அதிகம் குலைக்கக் கூடியதாக இருக்கும். குழந்தை ஏன் தப்பு பண்ணுகிறது என்பதை விட ஏன் அதை மறைக்காமல் தன்னிடம் வந்து தவறாமல் சொல்லுகிறது என்று அம்மா குழம்பிப் போவாள். அப்படியான பயமில்லாத கூச்சமில்லாத குழந்தையை தண்டிப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை. பிறகு திருத்துவதை பற்றி யோசிக்கவே முடியாது. அந்த அம்மா அனைத்து தவறுகளையும் தவறாமல் தன்னிடம் சொல்லாத குழந்தையை தான் உள்ளூர விரும்புவாள், வெளியே அவள் நேரெதிராய் கோரினாலும்.
இப்படித் தான் அன்றாட வாழ்வில் பாசாங்குக்கும் பொய்க்கும் அதிக மதிப்புள்ளதாய் நாம் நம்பத் துவங்குகிறோம். உண்மையில் நம் பிரச்சனை பொய்யோ உண்மையோ அல்ல. வாழ்க்கையை எளிதாய் தர்க்கப்படி புரிந்து கொள்கிறோம். உண்மையை ஒரு தகவலாகத் தான் பார்க்கிறோம். இன்னொருவர் நமக்கு தேவையான அளவு தகவல்கள் தந்தால் போதும் என நினைக்கிறோம். இன்னொருவரின் உண்மை நம் வாழ்வு குறித்த சட்டகத்துள் பொருந்தும் விதமாய் இருந்தால் போதும் என நினைக்கிறோம். சட்டென்று சம்மந்தமில்லாதபடி ஒருவர் நடந்து கொள்ளும் போது தான் நாம் அதிகம் நெருக்கடிக்கு உள்ளாகிறோம்.
ஒருவர் பொய் சொல்லுகிறார் என புரிந்தால் போதும், நிம்மதியாய் அவரை கையாளூவோம். ஆனால் ஒருவர் உண்மைகள் சொல்லிக் கொண்டே இருப்பார். அதில் ஒன்று பொய் என்று பின்னால் தெரிய வந்தால் மனம் வேதனைப்படுகிறது. இவரை எப்படித் தான் சரியாய் புரிந்து நம் கருத்துச் சட்டகத்துள் வைப்பது என்கிற கவலையே இந்த வேதனையை ஏற்படுத்துகிறது. ஒருவர் நண்பர் அல்லது துரோகி என தெளிவாக இருக்க வேண்டும். நம் பிரச்சனையே துரோகிகள் எப்போதும் நண்பர்களாகத் தான் இருக்கிறார்கள் என்பது.
உண்மை என்பது அளந்து வெளியே தரும் தகவல்கள் என்று கொள்வோம். இதில் எந்தளவுக்கு நாம் மறைக்கிறோம், வெளியே தருகிறோம் என்பது பொறுத்து இது உண்மை அது பொய் என வகைப்படுத்த முடியுமா? இது மிக மிக சிரமம். குற்றங்களை எடுப்போம். கணிசமான குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப் படுவதில்லை. இது சாட்சியங்களின் போதமையினால் அல்ல. பொதுவாக ஒரு குற்றம் நடக்கையில் அது எந்த நொடியில் அல்லது கட்டத்தில் குற்றவாளியால் உத்தேசிக்கப்படுகிறது என சொல்ல முடியாது. அதனால் தான் பாதிக்கு மேல் வழக்குகள் சமைக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களால் தீர்ப்பாகின்றன. ராஜீவ் காந்தி படுகொலையை நிகழ்த்தியது புலிகள். ஆனால் புலிகளை விட பெரிய ஒரு அமைப்பு அவர்களை கருவியாக பயன்படுத்தியதாக கூறுகிறார்புலிகளுக்கு அப்பால்எனும் நூலில் ராஜீவ் சர்மா. சி.பி. மீதுள்ள குற்றச்சாட்டே அவர்கள் குறைந்த பட்ச தகவல்களை மட்டுமே உண்மையாக முன்வைக்கிறார்கள் என்பது. ஆனால் எந்தளவுக்கு உண்மை தான் உண்மை?
ஒரு எளிய மனிதன் செய்யக் கூடிய கொலைக் குற்றத்தை எடுப்போம். நான் ஒருவரை கொலை செய்ய திட்டமிடுகிறேன். அவரை தனிமையான ஒரு இடத்திற்கு வர வைக்கிறேன். ஆனால் வந்த பிறகு அவரை கொல்லும் ஆர்வம் அல்லது ஊக்கம் இல்லாமல் ஆகிறது. நான் கொல்ல வேண்டாம் என முடிவு செய்த பிறகு அவர் என்னிடம் கோபத்தை தூண்டும்படியாய் நடந்து கொள்கிறார். ஆத்திரத்தில் அவரை தாக்க அவர் இறந்து போகிறார். இந்த கற்பனை சம்பவத்தில் அவரை கொல்லுவதற்கான அத்தனை திட்டங்களையும் தீட்டிய பின்னரும் குற்றம் நடக்கும் போதும் எனக்கு அந்த உத்தேசம் இல்லை. ஆனால் இதை ஒரு விபத்து என்றோ உணர்ச்சிவயப்பட்ட குற்றம் என்றோ நிறுவ முடியுமா? ஒருவேளை எதேச்சையாய் குற்றம் நடந்தாலும் அதற்கு சில நொடிகள் முன்பு எனக்குள் உள்ள கொலை செய்யும் இச்சை தூண்டப்பட்டிருந்தால்? ஆக எந்தளவுக்கு தகவல்களை சேர்க்கிறோமோ விடுகிறோமோ அதைப் பொறுத்து உண்மை மாறிக் கொண்டே இருக்கும்.
நாம் உண்மை எனும் போது பல சமயங்களில் உண்மைத்தன்மையை தான் உத்தேசிக்கிறோம். “உண்மையை சொல்லு”, “நிஜமாவா?” என்று அடிக்கடி யாரிடமாவது கேட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஒருவர் சத்தியசீலர் என்றால் உண்மையானவர். ஆனால் உண்மையும் பொய்யும் மாற்றி மாற்றி சொல்லுகிறவர்கள் நாம் நம்மில் பலரும். அதனால் நாம் எந்தளவு உண்மைத்தன்மையுடன் இருக்கிறோம் என்று தான் அடுத்தவர் அக்கறைப்படுகிறார்கள். சரி, நாம் எந்தளவு உண்மைத்தன்மையுடன் இருந்தால் அடுத்தவர்களுக்கு என்ன? சரி, தவறு என்கிற ஒழுக்கம் சார்ந்த கண்ணோட்டத்தை விடுத்து யோசிப்போம். ஏன் நேர்மை அவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கிறது? காதலர்கள், தம்பதிகள் மற்றும் நெருக்கமான அனைத்து உறவுகளிலும் சந்தேகம் ஒரு கனலாக அடியில் புகைந்து கொண்டே இருக்கிறது. நேர்மையை, கற்பை, உண்மைத்தன்மையை கராறாக அளக்க முடியாது என அறிவோம். ஆனாலும் இது குறித்த ஒரு பயம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.
இதற்கான காரணம் ஏன் பொய் சொல்லுகிறோம் என்பதில் இருக்கிறது. பொய் இயல்பாக வருகிறது. ஆனால் உண்மை பேச நாம் மெல்ல மெல்ல பயிற்றுவிக்கப்படுகிறோம். குழந்தைகள் முதன்முதலாக எந்த வயதில் பொய் சொல்ல, ஏமாற்ற கற்கிறதோ அப்போதில் இருந்து அவர்களுக்கு ஒரு தனித்துவம் உருவாகிறது. தம் அடையாளம் குறித்த கவனம் தோன்றுகிறது. குழந்தைகளுக்கு மிக மிக சிறு வயதில் இருந்தே தம்மை பிற குழந்தைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட ஆசை வருகிறது. என்னிடம் இன்னன்ன விளையாட்டுப் பொருட்கள் உண்டு என காட்டி தம் அடையாளத்தை ஸ்தாபிக்கிறார்கள். பிறகு வளர வளர தம் தோற்றம், ஆடை மற்றும் திறமை மூலம் அடையாளத்தை வலுப்படுத்துகிறார்கள். இது இயலாத போது எதையாவது வித்தியாசமாக குறும்பாக செய்ய முயல்கிறார்கள். சில குழந்தைகள் குற்ற வாழ்க்கையை நோக்கி திரும்புகிறார்கள். இந்த தனிமனிதனாகும் முயற்சிகளின் ஒரு பகுதி தான் பொய் சொல்லுவது. அது எப்படி?
உண்மை என்பது எப்படி தகவல்களை வெளிப்படுத்துவதோ பொய்யை அதே போல் தகவல்களை மறைப்பது எனலாம். நம்முடைய தனித்துவம் நாம் எதை வெளிப்படுத்துகிறோம் என்பதில் அல்ல எதை மறைக்கிறோம் என்பதிலேயே இருக்கிறது. அதனால் தான் ரகசியங்களும் அந்தரங்கங்களும் நமக்கு அவ்வளவு அவசியமாய் இருக்கின்றன. எனக்கும் உங்களுக்கும் ஒரே உடல் உறுப்புகள் தாம். ஆனால் என் நிர்வாணம் எனக்கு என் பணம், பொருட்களை விட முக்கியமானது. இதன் கூச்சத்தினால் மட்டும் அல்ல. நிர்வாணத்தை இழக்கும் போது நான் என் தனித்துவத்தை கொஞ்சம் இழக்கிறேன். இன்னொருவரின் கைப்பொருள் போல் உணர்கிறேன்.
நான் பொய் சொல்லும் போது என்னுடைய நண்பரோ காதலியோ ஆன நீங்கள் பதற்றமாகிறீர்கள். உங்களை ஏமாற்றுகிறேன் என்பதல்ல பிரச்சனை. துரோகங்கள் வாழ்க்கையை மாற்றுவதில்லை. உறவுநிலையை பாதிப்பதில்லை. எதனால் அந்த உறவு ஏற்பட்டதோ அதன் நோக்கத்தை இல்லாமல் பண்ணுவதில்லை. ஆனால் அது ஒரு வேற்றுமையை உருவாக்குகிறது. பொய் சொல்ல சொல்ல தனித்துவம் அதிகமாகி நான் உங்களிடம் இருந்து விலகுகிறேன். நீங்கள் தனிமையாய் உணர்கிறீர்கள். நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன் செய்த ஒரு தவறை தயங்கி தயங்கி ஒரு நாள்குற்ற ஒப்புதல்அளிக்கிறீர்கள். அப்போது கேட்பவர் சொல்வார்அதெல்லாம் பரவாயில்ல, ஏன் நீ இவ்வளவு நாளா சொல்லாம மறைச்சே?”. மறைப்பது தான், மறைத்த விசயத்தை விட பெரிய குற்றமாக கருதப்படும். நாம் இதை புரியாமல் விசயம் பெரிது என எண்ணி இத்தனை நாளாய் மறைத்திருப்போம். மறைப்பதன் வழி நம் அணுக்கமான உறவுகளிடம் இருந்து அந்நியப்பட்டு நமக்குள் ஒடுங்கிக் கொண்டிருப்போம்.
பொய் கூறுவது ஒரு நவீன சமூகத்துக்கு அவசியமான விசயம். இன்றைய மாணவர்களுக்கு மென்திறன் (softskills) என்ற பெயரில் சூழ்நிலைக்கு ஏற்றபடி மொழியையும் உடல்மொழியையையும் நாசூக்கமாய், கொஞ்சம் பொய்யாய் பயன்படுத்த கற்றுத் தருகிறோம். வெற்றி பெற நம் உண்மை சுயத்தை மறைத்து புதிய ஒரு வசீகரமான முகமூடியை நம் ஆளுமைக்கு மேல் அணிவது அவசியம் என்று அறிவுறுத்துகிறோம். உதாரணத்திற்கு, ஒரு நேர்முகத்தேர்வுக்கு அல்லது டேட்டிங்குக்கு போவது எப்படி என்று கூகுளில் தேடிப் பாருங்கள். எப்படி சூழ்ச்சி செய்வது என்று தான் நாகரிகமான தளுக்கான மொழியில் விளக்கி இருப்பார்கள். பொய் கூறுவது ஒரு சகஜமான நடைமுறையாக மாறி வரும் சூழ்நிலையில் இருக்கிறோம். தனிமனிதனை நோக்கி குவிகிற எந்த சமூகமும் அப்படித் தான் இருக்க முடியும். மாறாக, நிலப்பிரபுத்துவ சமூகத்தில் தனிமனிதனை விட கூட்டுமனப்பான்மை தான் முக்கியமாக இருக்கும். தமிழகத்தில் வெள்ளாந்தியான மனிதர்கள் மேல் ஒரு நம்பிக்கையும், புத்திசாலிகள் மீது அவநம்பிக்கையும் பரவலாக பார்க்கலாம். இது நாம் இன்னும் முழுக்க நவீனப்படவில்லை என்பதையே காட்டுகிறது.

பொன் முட்டை இடுந்ந தாறாவு” (பொன்முட்டை இடும் வாத்து) எனும் ஒரு மலையாளப்படம் உண்டு. இப்படம் பொய் என்பது எப்படி நம் உறவுகள் எனும் எந்திரம் தடங்கல் இன்றி இயங்குவதற்கான எஞ்சின் ஆயில் போல் இருக்கிறது என்பதை சித்தரிக்கிறது. ஒரு பொன் ஆசாரி கணியான் சாதியை சேர்ந்த பெண்ணை காதலிக்கிறான். அவளுக்கு ஒரு பத்து பவன் தங்க மாலை பரிசளிக்கிறான். அவள் அவனை ஏமாற்றி இன்னொருவரை மணக்கிறாள். அவன் தன் மாலையை திரும்ப கேட்க அவள் அப்பா அப்படி ஒரு மாலையே இல்லை என்கிறார். பின்னர் அந்த மாலையை வரதட்சணையாக தன் மருமகனுக்கு அளிக்கிறார். ஆசாரி எவ்வளவு பெரிய ஏமாளி என ஊர்க்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள். அவனும் சோகத்தில் குடித்து புலம்பி ஒரு கைவிடப்பட்ட காதலனாக கொஞ்ச நாள் இருக்கிறான். பின் ஒரு நகைக்கடை ஆரம்பிக்கிறான். அவனது முன்னாள் காதலியின் கணவன் அவனிடம் ஒரு பத்து பவன் மாலையை விற்க வருகிறான். அது அவன் அவளுக்கு முன்பு பரிசளித்த மாலை தான். ஆசாரி இப்போது ஒரு குண்டை போடுகிறான். அது தங்கம் அல்ல, தங்க முலாம் பூசிய செம்பு மாலை என்கிறான். கணவன் கோபத்தில் மனைவியை கேட்க, அவள் பழியை முன்னாள் காதலன் மீது இட, கணவன் குற்றம் யார் மீது என புரியாமல் குழம்பிட, அவனது மாமனார் ஆசாரி தான் ஏமாற்றி விட்டதாக கூறுகிறார்
பரஸ்பரம் ஏமாற்றும் காதலர்கள்

 ஒரு உச்ச அபத்தமான காட்சியில் தன் மனைவிக்கு செம்பு மாலையை ஏமாற்றி அளித்த அவள் காதலனுடன் கணவன் சண்டை இடுகிறான். அப்போது இன்னொரு முக்கிய பாத்திரம் அங்கு வருகிறார். ஆசாரியின் அப்பா. நோயாளியான அவர் படுக்கையில் இருந்து தூக்கி எடுக்கப்பட்டு அங்கு கொண்டு வரப்படுகிறார். அவர் மகனிடம்உனக்கு யார் இப்படி தங்க முலாம் பூசி செம்பு மாலை செய்ய கற்றுத் தந்தது?” எனக் கேட்கிறார். மகன் சொல்கிறான்நீங்க எங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிறச்சே பரிசா கொடுத்த நகையெல்லாம் அப்படி தங்கம் பூசி செய்த செம்பு நகை தானே”. படம் இத்துடன் முடிகிறது.
படத்தில் இப்படி யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்பது ஒரு சங்கிலித் தொடர் போல் நீண்டு கொண்டே போகிறது. ஏமாற்றுவதன் வழியாகத் தான் உறவுகள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்கிறது இப்படம். மேலும் தாம் ஏமாற்றப்பட்டதாய் புகார் கூறும் எல்லோருமே இன்னொரு பக்கம் சரிசமமாய் பிறரி ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்கிறது. குற்றநோக்கம் இல்லாத வரையில் இது ஒரு நல்ல விளையாட்டு. வாழ்க்கை இந்த விளையாட்டால் தான் சுவாரஸ்யமாக போகிறது.
ஆசாரியின் அப்பா படத்தின் ஆரம்பம் முதல் தொடர்ந்து அவ்வப்போது மயக்கம் போடுவார். இறந்து போனது போல் கிடப்பார். உடனே கூட்டம் கூடி ஒப்பாரி வைக்கும் போது எழுந்து விடுவார். அவர் இதோ இறக்கப் போகிறார் என ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். அந்தளவுக்கு பலவீனமாய் ஜீவனில்லாமல் தெரிவார். ஆனால் எப்படியோ உயிர் பிழைத்தபடி இருப்பார். இது ஒரு வெறும் ஜோக் அல்ல, ஒரு குறியீடு என படத்தின் இறுதியில் தான் விளங்கும். வீழ்ச்சி அடையப் போவதாய் தொடர்ந்து பாவிப்பதன் வழி தான் ஒரு மனிதன் தன்னை தக்க வைக்க, பிரச்சனைகளின் போது பிழைத்துக் கொள்ள முடியும். புயலடிக்கும் போது நெடிதுயர்ந்து நிற்கும் மரங்கள் ஒடிந்து விழும். ஆனால் அடிக்கும் புயலுக்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கும் மூங்கில் ஒடியாது. வளைவது போல் வளைகிறவர்கள் தான் வாழ்க்கையில் தலைநிமிர்கிறார்கள்.

1 comment:

சேக்காளி said...

ஆறாவது அறிவு தானே எல்லாவற்றிற்கும் காரணம்.