Sunday, March 16, 2014

கேஜ்ரிவால்: நாடகமான தர்ணா அரசியல்
(பிப்ரவரி மாத உயிர்மையில் வெளியான கட்டுரை)
ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அன்னா ஹசாரே மற்றும் அதிகாரிகளின் பங்களிப்பு மற்றும் பா.ஜ.கவின் மறைமுக ஆதரவு காரணமாய அதன் மீது அவநம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். அருந்த்தி ராய் இக்கட்சிக்கு எதிராய் தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தில் இடதுசாரி சாய்வு கொண்டவர்கள் இடத்து கணிசமாய் தாக்கம் ஏற்படுத்தின. என் கல்லூரியில் ஆம் ஆத்மியினர் வந்து ஒரு கருத்தரங்கு நட்த்திய போதும் நான் வகுப்பில் மாணவர்களிட்த்து என் அவநம்பிக்கையையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டேன். பின்னர் அன்னா ஹசாரே விலகியது ஒரு நல்ல சகுனமாக பட்ட்து. தேர்தல் நெருங்க ஆம் ஆத்மியிர் பா.ஜ.கவிடம் இருந்தும் தம்மை விலக்கி தனி அணியாக காட்ட முற்பட்டனர். இன்று பா.ஜ.க கடுமையாக விமர்சிக்கும் இட்த்திற்கு ஆம் ஆத்மியினர் வந்துள்ளதும் அவர்களின் தனித்துவத்தையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது; இது பாராட்டுக்குரியது.

ஆம் ஆத்மியினர் அரசியல் பண பின்புலம் இல்லாதவர்களை தேர்தலில் நிறுத்தப் போவதாய் அறிவித்த போது நான் அதை வெறும் அரசியல் பாவனையாக பார்த்தேன். ஆனால் அவர்கள் மக்களிடம் இருந்து நன்கொடை பெற்று, எந்த கட்சி பலமும் இல்லாமல் முழுக்க ஆதரவாளர்களின் துணை கொண்ட தில்லி தேர்தலில் எதிர்பாராதளவு சீட்கள் வென்றது என்னை மீண்டும் கவர்ந்த்து. ஆனால் அதற்கு பின் தான் ஆம் ஆத்மிக்கு நிஜமான சவால்கள் ஆரம்பித்தன. கேஜ்ரிவால் மெட்ரோ ரயிலில் சென்று சத்திய பிரமாணம் எடுக்கப் போவதாய் சொல்ல ரயில்நிலையம் மக்களால் திமிறியது. இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. இது போன்று அவர் மக்களின் புகார்களை கேட்க நேரில் வருவதாக கூறியபோதும் கூட்டம் அலைமோதி அவர் பாதியில் வெளியேறும்படி ஆனது. இவ்வளவு கூட்டம் வருமென எதிர்பார்க்காத்தால் சிறிய இடத்தை தேர்ந்தெடுத்த்தாய் கூறி கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார். அவரது வெளிப்படைத்தன்மை கவர்ந்தாலும் வெகுளித்தனமும் திட்டமிடாத அவசரமும் ஆட்சித்திறமையை சந்தேகப்பட வைத்தது. அவர் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என மறுத்ததும், இன்னும் தன் சொந்த வீட்டில் இருந்து, எளிய காரில் பயணிப்பதும் பலரையும் போல் என்னையும் கவர்கிறது.
கேஜ்ரிவாலிடம் ஒரு லட்சியவாதம் உள்ளது. வெறும் பணமும் சூழ்ச்சியும் மட்டுமே அரசியல் என்கிற பொதுவான சூழலில் இது புத்துணர்ச்சி தரும் ஒன்று. கேஜ்ரிவாலின் பேட்டிகளைப் பார்க்கையில் அவரிடம் ஒரு விரிவான தெளிவான திட்டம் ஒன்றும் இல்லை எனத் தெரிகிறது. அவருடையது சில லட்சியங்களை முன்வைத்து மக்களை ஒருங்கிணைக்கும் எதிர்ப்பரசியல். பல்வேறு மாநில மக்களுக்கான பிரச்சனைகள் பரந்துபட்டவை. பிற மாநிலங்களில் ஆம் ஆத்மியினரால் ஒழுக்க அரசியல் கொண்டு பிரபலமாக முடியாது. மக்கள் இடையே வேலை பார்த்து அவர்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு ஆதரவளித்து மெல்ல மெல்ல வளர வேண்டும். கட்சி அமைப்பு வலுப்பெற வேண்டும். சரியான உள்ளூர் தலைவர்கள் உருவாக வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைகள் மாறுபடலாம். தமிழகத்தில் சாதிய, மொழி அரசியல் தான் இதுவரை கோலோச்சுகிறது. இங்கு நகரம் சார்ந்த அரசியலை முன்வைத்து தனியாக இயங்குவார்களா அல்லது சிறுபான்மையினர் பக்கம் நிற்க முடிவு செய்வார்களா?
கேஜ்ரிவால் மெல்ல மெல்ல வளர்ந்து இதையெல்லாம் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு பதில் இந்தியா முழுக்க லட்சியவாத்த்தில் நம்பிக்கை கொண்டவர்கள் சாதிய மத அடையாளங்கள் கடந்து அமைப்புகள் தோற்றுவித்து போராட முன்வர வேண்டும். தமிழகத்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியோ அறிவுஜீவியோ பத்திரிகையாளரோ அந்த பொறுப்பை எடுக்க்லாம். உண்மையில் மக்கள் பிரிவினைவாத, ஊழல் மலிந்த, குறுகின மனப்பான்மை மிக்க அரசியலால் அலுத்து போய் விட்டார்கள். லட்சியங்களை முன்னிறுத்துகிற எளிமையான தலைவர்களுக்காக நாம் எந்தளவுக்கு ஏங்குகிறோம் என்பதை கேஜ்ரிவால் காட்டியிருக்கிறார். பெரும் அரசியல் கட்சிகள் இதனால் விழித்துக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். புது வழிகளை நாமே இனி தேட வேண்டும். இதற்குக் காரணம் இவ்வளவு பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி தன் குறைகளை மெல்ல மெல்ல சமீபத்தில் நிரூபித்து வருகிறது தான்.
முதலில், எல்லா பிரச்சனைகளையும் தன்னால் மக்களை சந்தித்து சரி செய்ய முடியும் என சித்தரிக்க கேஜ்ரிவால் முயன்றது தவறு. புகார்கள் மலை போல் குவிய இவற்றில் கணிசமானவை அன்றாட அரசு அலுவல் சம்மந்தப்பட்டவை, அவற்றை சரி செய்ய நேரம் எடுக்கும் என அவரே ஒத்துக் கொண்டார். மக்களுக்கு தேவை குற்றவாளிகளை பேட்மேன் போல் பிடித்து உதைத்து தெருக்கம்பத்தில் தொங்கப் போடும் முதல்வர் அல்ல. தினசரி வாழ்க்கை தொல்லை இல்லாமல் நடக்க வேண்டும், அடிப்படை உரிமைகளும், முன்னேற சமத்துவமான வாய்ப்புகளும் வேண்டும். ஒடுக்கப்படும் மக்களை மேலும் அழுத்தும் சட்டச்சிக்கல்களும், ஏற்றத்தாழ்வுகளும் மறைய வேண்டும். அதற்கு பொறுமையாக உழைக்க பெரும் திட்டங்கள் தீட்டி காத்திருக்க வேண்டும். தான் அதற்கு தயாரில்லை என கேஜ்ரிவால் காட்டி விட்டார். வரும் தேர்தலில் இன்னும் அதிக வாக்குகள் பெற தாம் தொடர்ந்து ஒரு போராளியாக மக்கள் முன் நிற்க வேண்டும். அதற்காக சமீபமாய் ஒரு அற்பப் பிரச்சனைக்காக தர்ணா செய்து தில்லி மக்களை போக்குவரத்து நெருக்கடியில் தள்ளி குழப்பத்தில் ஆழ்த்தினார். அது மட்டுமல்ல ஆயிரங்கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை குடியரசு தின அணிவகுப்பில் காட்டப் போகிறார்கள். அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யும் அவகாசம் இப்போது கேஜ்ரிவால் செய்த தர்ணாவால் இல்லாமல் போய் விட்ட்து. அரைகுறை பாதுகாப்புடன் தான் அணிவகுப்பு நடக்கப் போகிறது. இந்தளவுக்கு பொறுப்பற்றவராக கேஜ்ரிவால் தன்னை இவ்வளவு அவசரமாக சித்தரித்திருக்க வேண்டும்.
ஒரு முதலமைச்சரே கலகம் செய்யலாமா, தர்ணா இருக்கலாமா என்கிற கேள்விகளைக் கேட்டு மீடியா அவரை கடுமையாக சாடியது. இது சட்டமீறல் என்றது. இருக்கலாம். ஆனால் அராஜகவாதியாக இருக்க, கலக அரசியல் செய்ய கேஜ்ரிவாலுக்கு உரிமை உண்டு. ஏனென்றால் அவருடையதைப் போன்று வலுவான அமைப்பற்ற சிறு கட்சியால் காங்கிரஸை வேறு எப்படியும் எதிர்க்கவோ எதிர்கொள்ளவோ முடியாது. தில்லியில் முதலமைச்சராய் இருப்பது தமிழகத்தில் கவர்னராக இருப்பது போல. முடிவெடுக்கும் உரிமை சுத்தமாய் இல்லை. ஆலோசனை மட்டும் வழங்கலாம். வெறும் ரப்பர் ஸ்டாம்ப் முதலமைச்சராக இருந்தால் இளம்பெண் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட போது மக்கள் முன் எந்த சக்தியும் அற்றவராக தோன்றிய, காவல்துறையை கட்டுப்படுத்த முடியாத ஷீலா தீக்‌ஷித்தின் நிலை தான் அவருக்கும் ஏற்படும். போலீஸ் மீது உள்துறை அமைச்சகத்துக்கு உள்ள கட்டுப்பாட்டை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என அவர் கேட்பது நியாயம் தான். எதிர்காலத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுக்க முயலும் போது மத்தியில் ஆளும் பெரிய கட்சிகள் முட்டுக்கட்டை இடுவார்கள். கேஜ்ரிவாலின் முன் ஒரு சாத்தியம் தான் உண்டு. மக்களைக் கொண்டே மைய அரசை எதிர்ப்பது. அதற்கான ஒரு சரியான தருணத்துக்கு அவர் காத்திருந்திருக்க வேண்டும். இளம்பெண் கற்பழிக்கப்பட்ட்து போல் ஒரு துர்சமபவம் மீண்டும் நிகழக் கூடாது. ஆனால் அப்படியான ஒரு கொடுமை நடந்தால், போலீசாரின் கவனமின்மை அதற்கு காரணமாக இருந்தால் அப்போது கேஜ்ரிவால் மக்கள் ஆதரவை நாடி தெருவில் இறங்கி போராடலாம்.
மக்களின் அதிகார வர்க்கம் மீதான கோபம் எப்போதும் புகைந்து கொண்டே இருக்கும். ஆனால் அது பற்றி எரிய ஒரு தூண்டுதல் வேண்டும். அப்படியான ஒரு சம்பவத்தை வரலாறே அவர் கையில் கொண்டு ஒப்படைக்கும். திராவிட கழகத்துக்கும், கலைஞருக்கும் மொழிப்போரும், மிசாவும் அப்படித் தான் வாய்த்தன. அந்த வரலாற்று பின்புலம் இல்லாமல் நேருவையோ இந்திராவையோ எதிர்த்து புதிய கட்சியை நிறுவுவதை அவர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் கேஜ்ரிவால் பிரச்சனைகளை தோற்றுவித்து மக்களை ஒருங்கிணைக்கப் பார்க்கிறார். அவரது மந்திரியான சோம்னாத் பார்த்தி ஒரு கும்பலுடன் சென்று நான்கு உகாண்டா பெண்களின் வீட்டுக்குள் நுழைந்து அடித்து உதைத்து வெளியே இழுத்து வந்து, அவர்கள் போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, விபச்சாரிகள் என பெயர் கொடுத்து மருத்துவ பரிசோதனைகள் செய்ய செய்தனர். அப்பெண்கள் விபச்சாரிகள் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ரத்த பரிசோதனையும் அவர்கள் போதை மருந்து பயன்படுத்தியதாய் காட்டவில்லை. ஒரு பெண்ணின் வீட்டிற்குள் இரவில் வாரண்ட் இன்றி நுழையக் கூடாது என்பது சட்டம். அதனால் இதற்கு போலீஸ் ஒத்துழைக்கவில்லை. முழுக்க ஆம் ஆத்மியினரே செய்த ரெய்ட் மற்றும் கைது இது. 

நவீன பெண்களை அற்பமான காரணங்களுக்காக தாக்கும் ராமசேனையினரை விட கேவலமாக நடந்து கொண்ட்து ஆம் ஆத்மி கட்சி. கேஜ்ரிவால் நியாயமாக தன் மந்திரியை கண்டித்து தற்காலிக நீக்கம் செய்திருக்கலாம். பொது மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் சட்டத்தை கையில் எடுத்து செய்த குற்றத்தை பெரிது படுத்தாமல் போலீசாருக்கு எதிராக தன் போராட்ட்த்தை துவங்கினார். இப்போது கேஜ்ரிவால் அளித்த நெருக்கடி காரணமாக மைய அரசு இரு போலிசாரை விடுப்பில் அனுப்பி இருக்கிறது. குற்றம் செய்த மந்திரியை அவர் பாதுகாப்பது முதல் குற்றம். பெரும் தலைவராக வளர்ந்தால் அவர் இனி யாரையெல்லாம் பாதுகாப்பார், அவரது நேர்மை வெறும் வெளிப்பூச்சா என்கிற கேள்வியை இது எழுப்புகிறது. இப்படியான அற்ப விசயத்துக்காக தில்லியை இருநாள் ஸ்தம்பிக்க வைத்தது கேஜ்ரிவாலின் பொறுப்பின்மையை, குருட்டுத்தனமான அணுகுமுறையை காட்டுகிறது.  
ஒருவேளை விபச்சாரமோ, ஊழல் குற்றமோ நடப்பதாய் தகவல் கிடைத்தால் ஆம் ஆத்மியினர் அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டும். இந்த பிரச்சனையில் கூட போலிசார் தம்மை தாக்கியதாய் ஆம் ஆத்மி தலைவர்கள் மீள மீள கூறினார்கள். ஆனால் ஆதாரம் எங்கே? இதையெல்லாம் வீடியோ எடுக்க ஆட்களை நியமிக்கலாம். தெஹல்கா பாணியிலனான ஸ்டிங் ஆபரேசன் செய்ய ஒரு தனி அமைப்பை அவர் துவங்கலாம். அதைக் கொண்டு அதிகார மட்டம், போலீஸ் மற்றும் தொழிலதிபர்கள் செய்யும் குற்றங்களை வெளிக்கொணர்ந்து வீடியோ ஆதாரங்களை மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கி மைய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஒரு போலீஸ் கமிஷ்னரை ஒரு பெட்டி வாங்க வைத்தோ பாலியல் தொழிலாளியிடம் போக வைத்தோ வீடியோ எடுப்பது ரொம்ப சிரம்ம் அல்ல. அது போல் ஒரு வீடியோ கிடைத்தால் அதைக் கொண்டு தர்ணா செய்து காவல் துறையை தில்லியிடம் ஒப்படைக்க நெருக்கடி கொடுத்தால் அப்போது மக்கள் ஏகோபித்த ஆதரவை போராட்டத்துக்கு அளிப்பார்கள். இது ஒன்றும் புது விசயம் அல்ல. பா.ஜ.கவும் காங்கிரசும் இந்த தந்திரத்தைக் கொண்டு பல பேரை கவிழ்த்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பொறுமையும் புத்திசாலித்தனமும் வேண்டும். இப்போதைக்கு தாம் அரசியலில் ஸ்கூல் பாய்ஸ் என நிரூபித்திருக்கிறார்கள். அடுத்த தர்ணாவுக்கு முன் நிறைய ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டும்!


No comments: