Wednesday, January 8, 2014

ராஜீவ் காந்தி சாலை

விநாயக முருகனின் ”ராஜீவ் காந்தி சாலைக்கு” ஒரு நல்ல நாவலுக்கான சில குணங்கள் உள்ளன. ஒன்று பிரம்மாண்டம். தமிழில் பிரம்மாண்டத்தை கதைத்தளத்தில் உருவாக்க ஆயிரம் வருட குடும்ப / ஜாதி வரலாற்றை புனைவில் கொண்டு வருகிறார்கள். இது சற்று மூச்சு வாங்க வைக்கக் கூடியது. நல்ல நாவல்கள் மாற்றுப் பார்வைகள் அல்லது விவாதங்கள் வழி பிரம்மாண்டத்தை தொனிக்க வைக்கும். உ.தா “விஷ்ணுபுரம்”. வாழ்வின் அர்த்தத்தை காமம், இலக்கியம், ஞானத்தேடல் எனும் மூன்று வழிகளில் தேடுபவர்களின் பாதை ஒரேயளவு தீவிரமானது என விரிவாக பேசும் நாவல் அது. ”ராஜீவ் காந்தி சாலை” விஷ்ணுபுரம் வகையை சேர்ந்தது அல்ல என்றாலும் மாறுபட்ட பார்வையில் ஒரே விஷயத்தை பேசுவதன் வழி ஆசிரியர் ஒரு விரிவை சித்தரிக்கிறார்.

உதாரணமாய், பெண்கள், ஜாதி, திராவிட அரசியல், முன்னேற்றம் குறித்து மென்பொருள் நிறுவன முதலாளிகள், பொறியாளர்கள், அவர்களுக்கு கீழ் உள்ள தொழிலாளர்கள், கடை வியாபாரிகள் வரை எப்படி பேசுகிறார்கள் என திறமையாய் சித்தரிக்கிறார். பிராமணர்களும், சூத்திரர்களும் ஒருசேர பெரியாரை பாராட்டுகிறார்கள். சூத்திரர்கள் அவர் பிராமணர்களை “அடித்து விரட்டியதற்காக”, பிராமணர்கள் தாம் அவ்வாறு தமிழகத்தில் இருந்து துரத்தப்பட்டதால் வெளிமாநிலங்களும் நாடுகளுக்கும் சென்று முன்னேறியதற்காக. தேவர்களும், செட்டியார்களும் பிராமணர்களை தூஷிக்கும் அதே வேளையில் தலித்துகளை கீழாக நடத்துவதில் லஜ்ஜையற்று இருப்பதையும் காட்டுகிறார். இது ஒரு ஆழமான தனித்துவமான பார்வை அல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என வாசகனை வியக்க வைக்கிறது. இது முக்கியம்.
ஒரு நாவலில் அடுத்து முக்கியம் வாசிப்புக்கான சரளமும் சுவாரஸ்யமும். இந்த நாவல் அவ்விசயத்தில் முதல் மதிப்பெண் வாங்குகிறது. சுமார் ஒரே நாளில் இந்நாவலை நீங்கள் டாப் கியரில் வாசித்து முடிக்க முடியும். பெரிய களைப்பில்லாமல் இக்கதையை உள்வாங்க முடியும்.
நிறைய சிறு கதாபாத்திரங்கள் வருகிறார்கள். பாத்திரங்கள் அதிகமாக நாவல் மெல்ல மெல்ல தடுமாறி திசைமாறி சொதசொதவென ஆகி விடும். அல்லாவிட்டால் சில பாத்திரங்கள் ஒரு சில பத்திகளுக்கு என்று உதயமாகி காணாமல் போய் விடுவார்கள். வாசகன் நாவலில் மெல்ல மெல்ல ஆர்வமிழப்பான. இன்னொரு சிக்கல் நிறைய பாத்திரங்கள் வரும் போது ஒரு கட்டத்தில் ஆசிரியனுக்கு பாத்திரங்களும் பெயரும் நோக்கமும் மறந்து போக வாய்ப்புண்டு. ஒரு சில பாத்திரங்களுக்கு மட்டும் அதிக பக்கங்கள் ஒதுக்கி நாவலை அங்கங்கே வீங்க விட வாய்ப்புண்டு. விநாயக முருகன் இந்த விபத்துகளில் இருந்தெல்லாம் நாவலை திறமையாய் காப்பாற்றி இலக்கை சென்று அடைகிறார். முதல் நாவலுக்கு இது பாராட்டத்தக்கது.
சரி இந்த நாவலின் கரு அல்லது நோக்கம் என்ன எனக் கேட்போம். ஒன்று இன்றைய மென்பொருள் யுகத்தில் உருமாறும் ஆண் பெண் உறவுகளும், கட்டற்ற காமத்தின் சிக்கல்களும். முதலாளிகள், ஊழியர்கள், கீழ்த்தட்டு மக்கள் என எல்லா தட்டினருக்கும் பொருத்தி காமம் வர்க்கத்துக்கு வர்க்கம் ஒரே அழுத்தத்துடன் விகாரங்களுடன் வெளிப்படுவதை சொல்லுகிறார். ஏற்கனவே சொன்னது போல் ஒரு விரிவைத் தர இது பயன்படுகிறது. ஆனால் தட்டையாகவும் உள்ளது. பல முறைகேடான காம உறவுகளை கிசுகிசு போல் விவரிக்கிற விநாயக முருகன் நுணுக்கமான சித்தரிப்புகளை உருவாக்கி அவற்றை அணுகிப் போவதில்லை. பெரும்பாலான காட்சிகள் துவங்குகிற இடத்தில் முடிகின்றன. சுஜா தன் திருட்டு காதலன் கௌஷிக்கின் உடலை அறிகிற இடத்தை சொல்லலாம். அந்த கள்ள உறவு அனுபவம் அவளுக்கு எப்படியான வியப்புகள், புதுமைகளை தருகிறது என்பது ஒரு நாவலாசிரியனுக்கு அல்வா போன்ற இடம். ஆனால் விநாயக முருகன் இவர்களின் உறவுகள் விகாரமானவை அல்லது திசை இழந்தவை என சொன்னால் போதும், அதற்கு மேல் அதன் புது கோணங்களை விசாரிக்க வேண்டியதில்லை என முடிவெடுத்து நகர்ந்து விடுகிறார். அவர் இது போல் பல ஜன்னல்களை திறக்கிறார். வெளியே என்ன இருக்கிறது என அவசர பார்வை விட்டு விட்டு அடுத்த ஜன்னலை திறக்க அவசரமாய் கிளம்பி விடுகிறார்.
 கௌஷிக் ஒரு முக்கிய பாத்திரம். அவன் ஒரு ஜிகோலா – ஆண் விபச்சாரி. பெண்களின் மேல் கடும் வெறுப்பு கொண்டவன். சிவப்பு ரோஜாக்கள் கமலின் இன்னொரு இலக்கியத்தனமான வடிவம். சம்பிரதாயமான மென்பொருள் நிபுணர்களான பிரணவ் அல்லது கார்த்திக்கிற்கு கொடுக்கிற இடத்தை நாவலில் கௌஷிக்கு அளித்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏனெனில் பிரணவோ கார்த்திக்கோ நாவலில் வளர்வதில்லை. ஆனால் கௌஷிக் போன்று அடிப்படையில் சிக்கலான பாத்திரம் தானும் வளர்ந்து பிற பாத்திரங்களின் பாதையையும் குழப்பி நாவலுக்கு மாறுபட்ட கோணங்களை தந்திருக்கக் கூடும். ஆனால் விநாயக முருகன் இந்நாவல் மென்பொருள் துறை வாழ்வின் சீரழிவுகளை பேசுவது என்பதில் கராறாக இருக்கிறார். ஆம், இது நாவலின் இன்னொரு கரு.
மென்பொருள் யுகத்தின் அக மற்றும் புற சீரழிவுகளும் நாவலில் பேசப்படுகின்றன. ஆனால் இச்சித்தரிப்பு தட்டையாகவே உள்ளது. ஒரு விரிவான கான்வாஸ் உள்ளது. அங்கு ஆசிரியர் சில கோடுகளை கிழிக்கிறார். வண்ணம் இல்லாமல் ஜீவன் இல்லாமல் அது வெறும் கான்வாஸாகவே நிற்கிறது. ஆனாலும் நாவல் உருவாக்கும் பிரம்மாண்டமான கட்டமைப்பு, குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் நமது புறநகர் பகுதிகளில் வந்துள்ள பொருளாதார மாற்றங்கள், முன்னேற்றம் எனும் பேரிலான பண்பாட்டு அரசியல் சீரழிவு, அநியாயங்கள் இது குறித்த சித்தரிப்பு, தமிழுக்கு புதிது. நாவலின் தனிச்சிறப்பு இது.
வேலையிழப்பு, அதன் நெருக்கடி காரணமாக பிரணவ் எனும் பொறியாளன் மெல்ல மெல்ல மனச்சிதைவுக்கு ஆளாகும் இடம் அழகாக வந்துள்ளது. இதையும் இறுதியில் கொண்டு வராமல் கொஞ்சம் முன்னே அறிமுகப்படுத்தி சாலையில் கைவிடப்படும் பைத்தியங்களுடன், சமூகத்தில் ஒரு மேல் தளத்தில் பிரணவ் மனநிலை பிறழ்ந்து பயணிக்கையில் வரும் விபரீதங்களை சித்தரித்திருக்க முடியும். உ.தா, “பின் தொடரும் நிழலின் குரலில்” அந்த தோழரின் மனச்சிதைவின் சித்திரம் போல் ஒரு அழுத்தமான் பதிவை இங்கு கொண்டு வந்திருக்க முடியும்.
இந்நாவலில் இன்னொரு அழகான பகுதி ரியல் எஸ்டேட் வியாபாரிகள் நிலத்தை எப்படி விழுங்கி கணக்குப்போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது. இது நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு இடம்.
ஆண் பெண் உறவுகளில் வந்துள்ள சிக்கலுக்கு ஆசிரியர் ஒரு விளக்கம் தருகிறார். கடினமான வேலைப்பளு, குடும்பத்துக்கு நேரமின்மை, இதனால் வரும் காமவறட்சி, பொருட்களை வாங்கிக் குவிப்பதிலே திருப்தி அடைந்து விடுவது – சுருக்கமாக வேலையும் பொருள் ஆசையும். நாவலின் ஊடாக மீள் மீள தரப்படும் இந்த விளக்கம் வாசகனை யோசிக்க விடாமல் செய்கிறது என்பது ஒரு பிரச்சனை. மேலும் மென்பொருளில் இல்லாதவர்களுக்கும் தான் விநாயக முருகன் குறிப்பிடும் தாம்பத்திய அதிருப்தியும் அநிச்சயமும் உள்ளது. இது ஒட்டுமொத்தமாக நாம் இன்று சந்தித்து வரும் ஒரு பண்பாட்டு பிரச்சனையும் தான். இந்த பிரச்சனையின் பற்பல சிக்கல்களை நோக்கி, விடை காண முடியா புதிர்மையை நோக்கி நம்மை தள்ளி இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். நாவலில் தற்கொலை செய்யும் காதலர்களின் விசயத்தில் இந்த நுட்பத்தை கையாண்டிருக்கிறார். நாவல் முழுக்க இந்த மௌனம் வந்திருந்தால் இன்னும் அடர்த்தியாக வந்திருக்கக் கூடும்.
நாவலின் இன்னொரு பிரச்சனை முதலாளி-தொழிலாளி ஏற்றத்தாழ்வு, வர்க்க வேறுபாடு தான் சமூகப்பிரச்சனைகளின் அடித்தளம் எனும் இடதுசாரி கோணம். இது தமிழில் பலமுறை அழுத்தமாக பேசப்பட்டு விட்ட ஒரு கோணம். காலம் வந்து பேசும் இடங்களும், குரான் மேற்கோள்களும் செயற்கையான பயன்பாடுகளாக தோன்றுகின்றன.
இன்னும் மேலாக செய்திருக்கலாம் என நான் குறிப்பிட்டுள்ள விசயங்களை இந்நாவலை ஒரு ஜாலியான வாசிப்புக்கான நாவலாக பார்க்கையில் அவசியமற்ற பரிந்துரைகள் என்றும் கூறலாம். அதாவது இந்நாவலை எந்த வகையிலானது என தெளிவுபடுத்துவது அது குறித்த குழப்பங்களை அகற்றும். “ராஜீவ் காந்தி சாலையை” ஒரு வணிக நாவல் என வகைப்படுத்தினால் நான் கூறியுள்ள விமர்சனங்கள் கிட்டத்தட்ட அவசியமற்றவை ஆகும். இலக்கிய நாவல் என்றால் சாரு செய்தது போல் கராறாக பல இடங்களில் நீங்கள் நிராகரிக்கவும் மறுக்கவும் முடியும். ஆனால் இது ஒரு இடைநிலை நாவல். நா.அசோகனின் “போதியின் நிழலில்” அல்லது சேத்தன் பகத்தின் One Night at Call Center, மனு ஜோசப்பின் Serious Men அல்லது குஷ்வந்த சிங்கின் The Company of Women போல் ஒரு படைப்பு. இலக்கிய நயமும் தீவிரமும் கொண்ட ஆனால் கதையை அதிகம் சிடுக்காக்காமல் சரளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை எழுத்து. அதனாலே இந்நாவலை சாரு செய்தது போல் கராறாக விமர்சிப்பதும் அநியாயம். ஏனென்றால் இடைநிலை நாவல்களில் நிச்சயம் தேய்வழக்குகளும், கொஞ்சம் பொதுபுத்திக்கு தோதான மிகைகளும் இருக்கும். எழுத்தாளன் தன் ஆளுமையை தன்னை அழுத்தமாக கதைகூறலில் வெளிப்படுத்த மாட்டான். உ.தா, போரும் அமைதியும் நாவலில் ஒரு இளம் சீமாட்டி வருவாள். ஒரு விருந்தில் அமர்ந்திருப்பாள். அவள் கர்ப்பிணி. அதற்கான புஷ்டியும் மிளிர்வும் பூரிப்பும் அவளிடத்து தெரியும். அவளை சந்தித்து பார்க்கும் யாரும் வாழ்க்கை குறித்த ஒரு உற்சாகத்தை, நேர்மறை எண்னத்தை அடைகிறார்கள் என்கிறார் தல்ஸ்தாய். இது தல்ஸ்தாயின் ஒரு தனிப்பட்ட பார்வை. பெண்மையின் உச்சம் தாய்மை என அவர் நம்பினார். தாய்மையை கொண்ட பெண் ஒரு தனித்துவமான நிறைவுடன் இருப்பதாய் கூறினார். இந்த இடத்தில் அதைத் தான் உணர்த்துகிறார். ஒரு இலக்கிய எழுத்தாளன் தான் இப்படி சிறு சித்தரிப்பிலும் தன் பார்வையை நிறுவுவான். இலக்கிய எழுத்தாளனிடம் தேய்வழக்குகள் இருக்கும். ஆனால் அவன் அதை கதைகூறலில் தெரியும் தன் ஆளுமையின் ஆதிக்கம் மூலம் கிட்டத்தட்ட மறைத்து விடுவான். இடைநிலை எழுத்தாளன் இது போன்ற இடங்களில் சத்தமில்லாமல் மறைந்து நின்று எளிமையாய் கதை சொல்லி நகர்ந்து விடவே நினைப்பான். உண்மையில் தேய்வழக்கு என்பது “துக்கம் தொண்டையை அடைக்கிறது” என சில வழமையான வாக்கியங்களை உருவாக்குவது அல்ல. அது ஒரு பொதுவான மொழியில் இயங்குவது. ஒரு சின்ன அப்பாவித்தனத்துடன் எழுதுவது. விநாயக முருகன் நாவலின் இறுதி அத்தியாயங்களில் இலக்கிய மொழியை பயன்படுத்துவதை கவனிக்கலாம். அங்கெல்லாம் தேய்வழக்குகள் தெரியாது.
இடைநிலை நாவலுக்கு விமர்சனமே தேவையில்லை என்பதும் நாவலை தன் நிலையில் இருந்து வெகுவாக கீழிறக்குவதாகும். ஒரு மையமான மனநிலையில் இருந்து ரசித்தும் யோசித்தும் இத்தகைய நாவல்களை வாசிப்பது நலம். அப்படிப் பார்க்கையில் விநாயக முருகன் இன்னும் பல கவனிக்கத்தக்க நாவல்களை எழுதக் கூடியவர் எனத் தோன்றுகிறது. அவருக்கு ஒரு கணிசமான நாவல் வாசகர்களின் தரப்பும் உருவாகும். இந்த வருடம் “ராஜீவ் காந்தி சாலையுடன்” வேறு சில இடைநிலை நாவல்களும் வெளியாகின்றன. அடுத்த சில வருடங்களில் நாவல் தளத்தில் பல முயற்சிகள் நிகழ இருக்கின்றன. புது உலகங்கள் பதிவாகப் போகின்றன.
 ராஜேஷ் குமாருக்கு அடுத்து சுஜாதா. சுஜாதாவுக்கு அடுத்த நிலை பாலகுமாரன், அவருக்கு அடுத்த நிலை தி.ஜா என்றும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். விநாயக முருகன் தன் சமூக நிலைப்பாடு, அழுத்தமான அரசியல் நம்பிக்கைகள், பார்வைகள் காரணமாய் பாலகுமாரனுக்கும் தி.ஜவுக்கும் இடையிலான ஒரு இடத்தை நிரப்புகிறார். தமிழ் வாசகர்கள் ஒரு சுவாரஸ்யமான காலத்திருப்பத்தில் நிற்கிறோம் எனத் தோன்றுகிறது.

1 comment:

Dinesh said...

பெண்கள், ஜாதி, திராவிட அரசியல், முன்னேற்றம் குறித்து மென்பொருள் நிறுவன முதலாளிகள், பொறியாளர்கள்,எப்படி பேசுகிறார்கள், உருமாறும் ஆண் பெண் உறவுகளும்,வேலையிழப்பு, மனச்சிதைவு, ரியல் எஸ்டேட், வேலைப்பளு, குடும்பத்துக்கு நேரமின்மை...

# Abilash Chandran விடற build up பார்க்கும் போது எனக்கு இது வரைக்கும் இல்லாத கெட்ட பழக்கம் நாவல் வாசிப்பு. IT eco system பற்றி பேசற இந்த ராஜீவ் காந்தி சாலையில் பயணிக்கும் போது இந்த போதையும் தொதிக்குமொன்னு பயமா இருக்கு..

முருகா..என்னோட ஒரே ஆசை எல்லாம் இந்த book fair முடிஞ்சதும் IT கம்பெனில வேலை செய்யற அம்மணி'ஸ் cab wait பண்ற gap ல
Sidney Sheldon பதிலாக ராஜீவ்காந்தி சாலையை புரட்டுவதை sight அடிக்கணும்