தமிழில்
வெற்றி பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி கேட்கும் போது எனக்கு அண்ணாமலை ரஜினிகாந்த நினைவுவருவார்.
அதை விடுங்கள்! உண்மையான வெற்றி எது? அதிக வாசகர்களா? பணமா? பிரபலமா? அல்லது சாஸ்வத
படைப்புகளை உருவாக்குவதா?
முதலில்
கடைசிக்கு வருவோம். 18 வருடங்களுக்கு முன் ஜெயமோகன் என்னிடம் ஒன்று சொன்னார்: “இன்னும்
நூறு வருடங்களுக்கு பின்னும் தமிழில் நிலைக்க போகிற எழுத்தாளர்கள் இருவர். ஒன்று நான்,
இன்னொன்று எஸ்.ரா. எஸ்.ராவுக்கும் இது தெரியும் என நினைக்கிறேன்”. அப்போது இருவரும்
சினிமாவிலோ விகடனிலோ இணையத்திலோ பிரபலமாகவில்லை. இலக்கிய அங்கீகாரம் தான் இருந்தது.
ஆனால் புனைவில் தனித்தடங்களை ஆழமாக பதித்தவர்கள் என்ற முறையில் இப்படி கூறுகிறார் என
கணித்தேன். பிறகு அவர் சொன்னது தான் விசேசம்: “ஒரு எழுத்தாளனுக்கான மிகப்பெரிய பேறு
அவன் மரணத்துக்கு பின்னரும் நிலைத்து இருக்கப் போகிறான் என்பது”. இந்த கூற்றில் ஒரு
அடிப்படை முரண் உண்டு. செத்த பிறகு நம்மை வாசித்தாலோ கொண்டாடினாலோ நாம் அறியப் போவதில்லை.
அதில் என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது?
காலத்தில்
நிலைக்கப் போகிறோம் என்கிற உணர்வு ஒரு மனிதனுக்கு ஒரு ஆழமான திருப்தியை தருமா? தெரியவில்லை.
நான் அறிந்தவரையில் நம் பண்பாட்டுக்கு ஒரு முக்கியமான பணி ஆற்றுகிறோம், ஒரு பெரிய கலாச்சார
பணியின் பகுதியாக இருக்கிறோம் எனும் உணர்வு பெரும் உவகையை, அமைதியை ஒருவருக்கு தரலாம்.
க.நா.சுவும், சு.ராவும் தாம் வாழ்கிற காலத்திலேயே அதை உணர்ந்திருக்கலாம். அவர்கள் அளவுக்கு
வீச்சுடன் இயங்காதவர்களும் கூட அந்த ஆத்ம திருப்தியில் இருந்திருக்கலாம்.
நிறைய
வாசகர்களைப் பெற்றவர்களுக்கு வருவோம். இணையத்தில் பிரபலமாக நாளுக்கு முவாயிரத்துக்கு
மேல் ஹிட் வாங்கிற நபர்களை சொல்லலாம். நிறைய பிள்ளைகள், அத்தனையும் தறுதலைகள் என்கிற காந்தாரியின் நிலைதான் இந்த பிரபல எழுத்தாளனுக்கு. ஆனால் பரவலாய் எழுத்தை கொண்டு
சேர்க்கிறோம் என்கிற மகிழ்ச்சி இருக்கும். அது ஒரு பாதுகாப்புணர்வைத் தரும். மேலும்
எழுத்தின் முக்கிய நோக்கம் உரையாடல் தானே. தகவலை அல்லது கருத்தை கடத்துவது தானே. ஆனால்
இந்த எழுத்தாளர்கள் சராசரி மனிதனை பிரதிபலிப்பவர்களாக இருப்பார்கள். இளம்பெண் ஜாலியாக
கட்டித் தூங்குகிற டெடிபேராக வாழ்வார்கள். இளம்பெண்ணுக்கு ஜாலி, டெடிபேருக்கு? அது
ஒன்றுமே அறியாது, அதனால் ”ஒன்றுமே” செய்ய இயலாது.
பிரபல எழுத்தாளன் தெரிந்தோ தெரியாமலோ சராசரி உணர்வுகளை,
எண்ணங்களை பிரதிபலித்தாக வேண்டும். மோடி பிரபலம் என்றால் அவரை ஆதரிப்பான். பிரச்சனைக்குரிய
கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பது நலம் எனும் சராசரி மனநிலையை கொண்டிருப்பான். மக்கள்
நம்புவதையே தானும் நம்ப வேண்டும் என நினைப்பான். இத்தகையவர்கள் வாசகர்களின் சிந்தனையை
மயிலிறகால் வருடுவார்கள். ஆனால் மாற்றுசிந்தனை தரமாட்டார்கள். மக்கள் எண்ணப் போக்கில்
தாக்கம் செலுத்த மாட்டார்கள். விளைவாக மக்கள் மனநிலை மாறும் போது மாறி விடுவார்கள்.
மக்களோடு இருப்பார்கள், மக்களோடு போய் விடுவார்கள். ரஜினிகாந்த் அளவுக்கு போக வேண்டியதில்லை.
இன்றும் பாண்டியராஜ், பாக்கியராஜுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சரத்குமார்,
ராம்கிக்கு இல்லை. இரு தரப்பினரும் வெற்றியை தந்தவர்கள். ஆனால் போக்கில் சிறு மாற்றத்தை
ஏனும் கொண்டு வராதவர்களை மக்கள் மறக்க சாத்தியம் அதிகம். இது இயல்பாக நடக்க வேண்டும்
என்பது வேறு விசயம்.
நிறைய
வியாபாரம் ஆகிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய் கிழக்கு பதிப்பக எழுத்தாளர்கள்
சொக்கன், செல்லமுத்து குப்புசாமி, யுவகிருஷ்ணா இவர்களின் எழுத்து வருமானம் தெரியாது.
ஆனால் சம்பாதிக்கிறார்கள். ஆனால் கிழக்கில் மேலும் மாதம் பத்தில் இருந்து இருபது வரை
ராயல்டி வாங்கும் சில எழுத்தாளர்கள் உண்டென்று கேள்விப்பட்டேன். வருமானம் இதற்கு மேலும்
கூட இருக்கலாம். பா.ராகவன் ஒரு நட்சத்திர உதாரணம். இதுவும் நல்லது தான். முழுநேர எழுத்தாளராய்
இருப்பது ஒரு பாக்கியம். இணைய பிரபல எழுத்தாளர்களை விட எனக்கு இவர்களை சற்று அதிகம்
பிடிக்கும். சோம்பல் இல்லாமல் நிறைய தயாரிப்புடன் சரளமாய் எழுதியிருப்பார்கள். போலித்தனம்
இராது. சொக்கனுக்கு ஒரு தனி ஸ்டைல் உண்டு என நினைக்கிறேன். 2005இல் படிக்கையில் சொக்கனின்
நூல்களை வாங்கி மாலையில் எங்காவது பூங்காவில் அமர்ந்து இருட்டுவதற்குள் படித்து முடித்து
விடுவேன். சச்சின், சார்லி சாப்ளின் ஞாபகம் இருக்கின்றன. குப்புசாமியின் பிரபாகரன்
பற்றின நூலும் தேவையானது. அதில் இருந்து எடிட்டர் முன்னூறு பக்கங்களை வெட்டி விட்டதாக
கேள்விப்பட்ட போது “அட ஒரு கிளாசிக்காக வர வேண்டிய நூலை பிட்டு படம் போல் ஆக்கி விட்டார்களே”
என வருத்தம் ஏற்பட்டது. ஒரு இரவில் தொடர்ச்சியாக இந்த நூலை படித்தது நல்ல அனுபவம்.
பா.ராகவனின் “டாலர் தேசம்” மிக வியப்பான ஒரு நூல். அமெரிக்க வரலாறு குறித்த ஒரு ஒட்டுமொத்த
புரிந்துணர்வு இல்லாமல் அது போல் தன்னம்பிக்கையாக விரிவான சித்திரம் வரைய முடியாது.
நான் அலுவலகத்துக்கு விடுப்பெடுத்து கீழே வைக்காமல் படித்த மிகச்சில குண்டு புத்தகங்களுள்
ஒன்று.
சரி இவற்றி
எவ்வகை எழுத்து உன்னதமானது? இது முழுக்க முழுக்க எழுத்தாளனின் தீர்மானம் தான். என்
நண்பர் ஒருவர். திறமையான கூர்மையான கவிஞராக அறிமுகமானார். திடீரென கவிதையை நிறுத்தி
விட்டு ஜாலியாக தினம் இணைய கட்டுரைகள் எழுதி பிரபலமாகி விட்டார். பாதை மாறாமல் இருந்தால்
அவர் இன்னும் மேலான கவிஞராக உருவாகி இருக்க முடியுமா?
இப்படி
வெளியே இருந்து இவரை மதிப்பிடுவது நியாயம் அல்ல. நாம் என்னவாக வேண்டும் என்பதை மனம்
தான் தீர்மானிக்க வேண்டும். எது பிடிக்கிறதோ அதை செய்ய வேண்டும். நாம் யாருக்கும் இப்போதோ
பிறகோ பதில் சொல்ல வேண்டியதில்லை. ஜெயகாந்தன் சு.ரா பற்றி இப்படி ஒருமுறை சொன்னார்:
“இவர் கொஞ்சம் தன்னை மாற்றிக் கொண்டிருந்தால் பிரபல இதழ்களில் எழுதி நிறைய பேர் வாங்கி
இருக்கலாம். அழகான மொழி நடை கொண்ட திறமைசாலி”. ஆனால் ஜெ.கா சு.ராவாக மாறி இருக்க முடியாதா?
நாம் ஏன் இப்படி யோசிக்க கூடாது? தேவையில்லை என்பதே பதில்.
சுஜாதாவுக்கு
இறுதி வரை தனக்கு இலக்கிய அங்கீகாரம் இல்லையே எனும் சின்ன ஏக்கம் இருந்தது என நினைக்கிறேன்.
தன் சிறுகதைகள் சில உலக இலக்கிய தரத்திலானவை என அவரே சொல்லி இருக்கிறார். சு.ராவின்
சாகித்ய அகாதெமி எதிர்ப்பு கூட மற்றொரு வகையான ஏக்கம் தான். எல்லோருக்கும் ஏதாவது ஒரு
ஏக்கம் இறுதி வரை இருந்து கொண்டிருக்கும். ஆனால் நம் ஆசைகளை நிறைவேற்ற எழுதுகிறோம்.
இந்த பணியை முடிக்க முடிந்தால், அதுவே மனதுக்கு நிறைவு தந்தால் அதுவே ஆகச்சிறந்த பரிசு.
பணம்,
பிரபலம், இலக்கிய அங்கீகாரம் தாண்டிய முக்கியமான விசயங்கள் உண்டு. குடும்ப வாழ்வு,
ஆரோக்கியம், பிரசுர வாய்ப்பு – இவை சரியாக அமையாமல் முழுமையாக தன் லட்சியங்களை அடைய
முடியாதவர்கள் உண்டு. அதுவும் வயதாக வயதாக குடும்பமும், உடலும் நமக்கு பெரும் தடைகளாக
மாறிக் கொண்டு போகும்.
நான்காவதாய்
ஒரு தரப்பு எழுத்தாளர்கள் உண்டு. டிவிட்டரில் ஏதாவது பாலியல் ஜோக் எழுதிக் கொண்டு,
யாரையாவது கலாய்த்தபடி பொழுதை ஓட்டுவார்கள். இவர்களுக்கு என்று ஒரு “வாசகர் படை” கூட
இருக்கும். வருட இறுதியில் மட்டும் கிரீடம் வைத்து, லிப் ஸ்டிக் போட்டு, அட்டைக்கத்தியை
தூக்கியபடி மேடையில் அம்ர்ந்து பிறரை தன் கீர்த்திகளை பேச வைத்து எல்லா வித அங்கீகாரங்களையும்
ஹைஜேக் செய்வார்கள். இவர்களும் இயற்கையின் ஒரு பகுதி தான். ஒரு குறிப்பிட்ட பூச்சியைப்
பற்றி படித்திருக்கிறேன். எறும்புகள் சாரி சாரியாக உணவுத்துகள்களை தூக்கி நடக்கும்
போது இது நடுவே வந்து “எனக்கும் ஏதாவது கொடு” என பிச்சை எடுக்கும். எறும்பும் கொடுக்கும்.
இப்படித் தான் அந்த பூச்சி இனமே பிழைக்கிறது. எந்த வகை எழுத்தாளன் ஆனாலும் சரி அவனுக்கு
பின்னால் நிறைய உழைப்பும், கனவும், நம்பிக்கைகளும் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து
தான் அந்த மதிப்பு உருவாகிறது. Tamiloola.com என்றொரு இணையதளம் இருக்கிறது. அதில் இருந்து
நூறு பக்கங்களை உருவி வித்தியாசமான அட்டைப்படம் போட்டு பிரசுரித்து, மேடை அமைத்து நான்கு
பிரபலங்களை அழைத்து கூட்டம் சேர்த்து வெளியிட்டு புகழ்ந்தால் மேற்சொன்ன மதிப்பு அந்த
உழைப்பு, நம்பிக்கைகள், திறமை ஏதும் இல்லாமலே அப்புத்தகத்துக்கு கிடைத்து விடும். போகட்டும்!
இயற்கையில் எல்லாவகையான உயிர்களும் தாம் இருக்கின்றன.
2 comments:
அச்ட்ஃப்
கிழக்கில் நான்கைந்து நூல்களை எழுதியிருக்கிறேன் அபிலாஷ். 2009-2010 ஆண்டுகளில் நான் பொருளாதாரரீதியாக கடினப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கிழக்கு கொடுத்த ராயல்டி செக்குகள்தான் வாழ்ந்துவிட முடியுமென்ற நம்பிக்கையை தந்தது.
துரதிருஷ்டவசமாக கிழக்கு நிறைய நூல்களை வெளியிடுவதை குறைத்துவிட்டது. இல்லாவிட்டால் இன்னேரம் பல லட்சம் சம்பாதித்திருப்பேன் :(
Post a Comment