Wednesday, January 29, 2014

நண்பேண்டா: ரெண்டாயிரத்தின் சினிமா காலகட்டமும் புரொமான்ஸும்

தொண்ணூறுகளில் தமிழ் சினிமா ஒரு மேற்தட்டு பெண் மீதான் தீராத ஏக்கத்தை சித்தரித்து, சமநிலையற்ற காதல் உறவை பேசுவதில் மிகுந்த சிரத்தை காட்டியது. பொருளாதார, சாதிய காரணங்களால் உருவாகும் சமநிலை காதலிலும் இருப்பதால் தமிழ் சினிமாவில் என்றும் சுமூக முடிவுள்ள காதல் படங்கள் பெரிதாய் கொண்டாடப்பட்டதில்லை. சராசரி தமிழ்க் காதலனுக்கு காதல் என்றுமே எட்டாக்கனி தான்

 இந்த எதிர்மறைத்தன்மையை ஈடுகட்ட இக்காலகட்ட சினிமாவில் காதல் மிகைப்படுத்தப்பட்டு லட்சிய வடிவில் பேசப் பட்டது. ரெண்டாயிரத்தின் தமிழ் சினிமாவை காதல் மீதான அவநம்பிக்கையின் வேறு வடிவில் பேசியது. தாராளவாதம் பொருளாதாரக் கொள்கையளவில் மட்டுமல்லாமல் நம் பண்பாட்டையும் பாதித்தது

 மக்கள் அதிகளவில் நகரங்களுக்கு செல்வதும், நகர மய விழுமியங்களை ஏற்றுக் கொள்வதும் ஒரு சிறு மாற்றத்தை காதலுறவிலும் ஏற்படுத்தியது. ஆண் பெண் பழகுவதற்கான வெளிகள் பரவலாகின. அரசியல், சமூகம், லட்சியங்கள் என எல்லா தளங்களிலும் மக்கள் சுயநலத்தின் நிழலை பார்க்கத் தொடங்கினர். எல்லாவற்றிலும் நம்பிக்கை இழக்க துவங்கினர். எந்தளவுக்கு காதலுக்கான சாத்தியங்கள் திறந்து கொண்டனவோ அந்தளவுக்கு காதல் மீதான நம்பிக்கையும் மூடிக் கொண்டது.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆரம்பித்த பிற்போக்கு சக்திகளின் எழுச்சிக்கும் இந்த காதல் அவநம்பிக்கையும் ஒரு மறைமுக தொடர்பு உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் மக்களிடையே கடுமையான சாதி, மத வெறி தூண்டப்பட்டு தொடர்ச்சியான மோதல்களும் ஒடுக்குமுறைகளும் நடந்து வந்துள்ளன. காதல் போன்ற நவீன உறவுகளுக்கு சமூகம் இடம் அதிகம் அளித்ததும், சாதிய அமைப்பில் சிறு நெகிழ்வுகள் நடந்ததற்கும் இந்த பிற்போக்குவாதத்தின் எழுச்சிக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இன்று காதலிப்பது நிறைய அதிகமாகி உள்ளது; அதோடு காதலை ஒரு நடைமுறை செயல்பாடாக பார்ப்பதும் தான். காதல் இன்று வெறும் ஒரு பரிசீலனை என்ற அளவில் பார்க்கப்படுகிறது. ஒரு நடைமுறைவாத காதலின் காலகட்டம் இது. மேலும் காதலின் பொருட்டு பெண்கள் மீது மிக அதிகமாக வன்முறை செலுத்தப்படுவதும் இப்போது தான் நடக்கிறது. யார் வேண்டுமானாலும் யாரையும் காதலிக்கலாம் என்கிற சமூக அனுமதி ஒரு பரவலான அச்சத்தை, பதற்றத்தை மக்களிடையே, குறிப்பாக ஆண் வர்க்கத்தின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா இந்த காதல் குறித்த அச்சத்தை வேறு விதத்தில் கையாண்டது.
கடந்த பத்தாண்டுகளில் உலகமயமாக்கல் காரணமாக நகரங்களை நோக்கி பெயரும் இளைஞர்கள் அறையெடுத்து கூட்டமாக வாழ்வதும் புதிய பொருளாதார வசதி காரணமாக தடையற்று வாழ்வை அனுபவிப்பதும் அதிகமாகியது. டாஸ்மாக் கடைகளின் பரவலும் இந்த இளைஞர்களுக்கு ஒரு தோதான சந்திப்பு இடத்தை, வெளிப்பாட்டு வெளியை உருவாக்கி கொடுத்தது. வெளியே போய் கொண்டாடுவது என்றால் சினிமா கொட்டகை என மட்டும் அறிந்திருந்த தமிழ் சமூகம் இப்போது டாஸ்மாக் பார்களை கையில் எடுக்கிறது. டாஸ்மாக் வெளி முழுக்க முழுக்க ஆண்களின் பிராந்தியம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களின் நட்பு பரிமாற்றமும், புரோமேன்ஸும் கணிசமாக பேசப்படுகிற சமகால சினிமாவில் அதற்கான தளமாக டாஸ்மாக் இருப்பது எதேச்சையானது அல்ல.
இன்றைய சினிமாவில் உள்ள மற்றொரு பிரதான பண்பு பெண் வெறுப்பு. பெண் புரிந்து கொள்ளப்பட முடியாதவள், குழப்பமானவள், வாழ்வை சிக்கலாக்குபவள், துரோகம் செய்பவள், அடங்காப்பிடாரி, சுருக்கமாக பிரச்சனைகளின் துவக்கப்புள்ளி என்பதே சமகால சினிமாவின் அழுத்தமான நம்பிக்கை. தொண்ணூறுகளில் பெண் கிட்டத்தட்ட ஒரு தெய்வமாக கருதப்பட்டு, நாயகன் தொடர்ந்து அவள் கடைக்கண் பார்வை வேண்டி அலைகிற (இதயம்) சித்திரத்துக்கு இது முற்றிலும் மாறானது. அன்றைய காதலன் பெண்ணிடம் காதலை சொல்லும் தன்னம்பிக்கை அற்றவனாக வந்தான். இன்றைய காதலன்இவளுக இம்சை தாங்க முடியல்என்று திரும்ப திரும்ப கூறுகிறான். சமகாலத்தில் வேலை, குடும்பம், மீடியா என பெண்களின் ஆதிக்கமும் தடையற்ற வெளிப்பாடும் ஆண்களின் மனதில் உருவாக்கியுள்ள ஒரு கசப்பின் நோய்க்குறியாக இந்த போக்கை பார்க்கலாம். இன்றைய ஆண் பெண்ணை வெறுக்கிற ஆனால் தவிர்க்க முடியாது நேசிக்க நேர்கிற ஒருவனாக இருக்கிறான். அதனாலே பெண்ணை தட்டையாக வெறும் காமப் பண்டமாக பார்ப்பது அவனுக்கு வசதியாக இருக்கிறது.

தமிழில் காதல் சினிமாவின் முற்றுப்புள்ளி என பாலாஜி சக்திவேலின்காதலைசொல்லலாம். நடைமுறைவாத காதலை அது மனிதநேயத்தோடு முடிச்சுப் போட்டது. உயர்சாதிப் பெண்ணுடனான காதல் ஏற்படுத்தும் பிரச்சனைகளும், வன்முறையும், அதற்கு தீர்வு காதல் ஏற்பு அல்ல, மனிதநேயமும் கருணையும் தான் எனும் முடிவு தமிழர்களால் ஒருமித்த மனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வாழ்க்கையில் காதல் ஒன்றும் முக்கியமில்லை என்பதே இப்படத்தின் சாரம். இப்படத்தோடு காதல் காலகட்டம் முடிகிறது.  

பிறகு ஆண் நட்பு படங்களின் ஒரு பெரிய அலை தோன்றுகிறது. இந்த ஆண் நட்பு காலகட்டம் சென்னை 28உடன் ஆரம்பமாகிறது. வெங்கட் பிரபு தமிழின் முதல் ஒருபாலின காதல் படத்தை எடுத்தவர் என்பதும் முக்கிய தகவல் (கோவா). ”கோவாபடத்தில் உள்ள ஒருபாலின ஈர்ப்பின் ஒரு மட்டுப்பட்ட வடிவைத் தான் நாம் சென்னை 28இல் பார்க்கிறோம்.

 இந்த மட்டுப்பட்ட ஒருபாலின ஈர்ப்பை தான் புரொமான்ஸ் (bromance) என்கிறார்கள். நாம் புரொமான்ஸை ஆண் ரொமான்ஸ் என அழைக்கலாம்.
ஆண் ரொமான்ஸ் படங்களில் நாம் மிக அந்நியோன்யமான நண்பர்களைப் பார்க்கிறோம். கணிசமான திரைநேரம் இவர்களின் உறவாடலை காட்டுவதில் கழிகிறது. பிறகு இவர்களிடையே ஒரு பெண் வருகிறாள். அவளால் நண்பர்களிடையே சிறிய விரிசல்கள் தோன்றுகின்றன. ஆனால் படத்தில் காதலின் வலியை விட நட்பின் வலிக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். காதலி ஒரு வில்லியை போலத் தான் தோன்றுவாள். அல்லது நண்பர்களிடையே ஒரு கவனச்சிதறலைப் போல். நண்பர்கள் சேர்ந்ததும் இப்பெண் கிட்டத்தட்ட காணாமலே போய் விடுவாள்.

ஆண் ரொமான்ஸின் காலகட்டம் கதிரின்காதல் தேசத்துடன்ஆரம்பிக்கிறது எனலாம். ஒரு கட்டற்ற காதலின் சூழலில் உக்கிரமான நட்புறவை மேலோட்டமாய் காட்டிய படம். முஸ்தபா முஸ்தபா பாடலில் வரும் சில காட்சிகள் தமிழ் சினிமாவில் முன்பு எப்போதும் காட்டப்படாதவைநண்பர் இருவர் கடற்கரையில் மணல் வீடு கட்டுவது, அலையில் விளையாடுவது, தனியாக மலைப்பகுதியில் நடப்பது, ஒருவர் மார்பில் இன்னொருவர் தூங்குவது போன்று இக்காட்சிகள் இதுநாள் வரை ஆண் பெண் உறவுக்காக பிரத்யேகமாய் பயன்படுத்தப்பட்டு வந்தவை


 இப்பாடலை சரியாக கவனிக்க மௌனமாக்கி பார்க்கவேண்டும். பாடலின் வரிகள் ஒரு புறம் நட்பை கொண்டாட, காட்சிகள் ஒருவகையான உடல் ரீதியான அணுக்கத்தை சித்தரித்துக் கொண்டிருக்கும். தமிழில் ஒரு புரட்சிகரமான பாடல் இது எனலாம். கதிர் தான் ஆண் ரொமான்ஸின் அச்சை தமிழில் தோற்றுவித்தவர் எனலாம்ஒருவன் மென்மையாக பெண்களின் குணத்தோடு இருப்பான், இன்னொருவன் முரட்டுத்தனமாய் தோன்றுவான்.  

இவ்வகை ஆண் ஜோடியின் அன்பை வன்முறையின் மொழி மூலம் மிக தீவிரமாக காட்டியவர் பாலா தான். அவருடைய படங்களின் ஆண்வாசனை தனி ஆய்வுக்குரியவை. பாலாவின் நந்தா”, “பிதாமகன்”, மற்றும் அவன் இவனைஆண் ரொமான்ஸ் வகையறைக்குள் கொண்டு வரலாம்.
பன்னிரெண்டில் இருந்து பதினைந்து வயது வரை ஆண்கள் தம்மை விட வயதில் மூத்த ஆண்களின் பால் ஈர்க்கப்படுவார்கள். மூத்த ஆண்களின் வழிகாட்டுதல் மற்றும் அண்மை இவ்வயதில் ஆண்களுக்கு மிக முக்கியமாக இருக்கும். பண்டைய கிரேக்கத்திலும் சரி சில தென்னமெரிக்க பழங்குடிகளிலும் சரி சிறுவர்களை பாலியல் உறவுக்காய் மூத்த ஆண்களுடன் வாழ விடும் பழக்கம் இருந்தது. இச்சிறுவர்கள் வளர்ந்து சுயமாய் ஆரம்பிக்கும் நிலை வரும் வரும் வயோதிக நண்பரின் ஓரினத் துணையாக இருந்து வாழ்க்கைப் பயிற்சி பெறுவர். நந்தாவில் ஓரின ஈர்ப்பு இல்லை என்றாலும் ஒரு மிகையான ஈர்ப்பை நந்தாவுக்கும் பெரியவருக்கும் இடையே காணலாம். நந்தா பெரியவரை போன்றே மாற விரும்புகிறான். பின்னர் அவன் அவரது மரணத்துக்கு பழிவாங்க கொலை செய்வதோடு படம் முடிகிறது

நந்தா பலவிதங்களில் நுணுக்கமான திரைக்கதை கொண்டது. குறிப்பாக மனித உடல் எப்படி அந்நியப்படுத்தப்படுகிறது; அவ்வாறு அந்நியப்படுத்தப்படும் அவன் எவ்வாறு மீண்டும் மனித உறவாடலுக்கு மீள்கிறான் என்பதை காட்டுகிறது. நந்தா படம் முழுக்க தன் தாயின் தொடுகைக்காக, பிரியமான பார்வைக்காக ஏங்குகிறான். அம்மா இங்கு ஒழுக்கவியலின் வடிவமாக இருக்கிறாள். அவளும் அவன் இருந்த வந்த சீர்திருத்தப்பள்ளியும் ஒன்று தான். அம்மாவின் இந்த அந்நியத்தன்மை காரணமாக அவனால் பெண்களிடம் எளிதில் நெருங்க முடிவதில்லை. “முன்பனியா முதல் மழையாபாடலின் காட்சிப்படுத்தல் இவ்விதத்தில் மிக முக்கியமானது.  தொடர்ந்து அவன் தன் காதலியிடம் தள்ளியே இருந்த படி அன்பை உணர்த்த முயல்வான். பெரியவர் அவனுக்கு வாழ்க்கையை மீண்டும் அணுகுவதற்கு ஒரு வழிமுறையை, வழிகாட்டலை தருகிறார். முழுக்க முழுக்க அவர் கண்ணோட்டத்தில் தான் அவனால் உலகுடன் உறவாட முடிகிறது. வாழ்வில் செயல்படுவதில் உள்ள தயக்கமும், இடர்பாடும் புரோமேன்ஸ் படங்களின் ஒரு தனித்த பண்பு. ஒரு ஆண் வழியாகத் தான் மற்றொரு ஆணால் உறவுகளின் உலகின் கதவைத் திறக்க முடிகிறது. “பிதாமகனிலும்இதே போல் தான் சித்தனுக்கு வாழ்க்கைத் திறன்களை ஒவ்வொன்றாக சக்தி கற்பிக்கிறான். ஒரு அழகான காட்சியில் சக்திக்கு காதலி பரிசளிப்பதை கண்டு சித்தனும் தன் காதலிக்கு பரிசளிக்கிறான். அதே வேளையில் சக்தி தன் நண்பனுடன் நெருங்கிப் பழகுவதால் பொறாமையும் கொள்கிறான். தன் பெயரை சக்தி நெஞ்சில் பச்சை குத்தியுள்ளது கண்டு அவன் காதலி கோபிக்க சக்தி புளகாங்கிதம் அடைகிறான். அவனுடைய காதல் நண்பனுக்கும் காதலிக்கும் இடையே மாட்டி உள்ளது.
நந்தாவில்வரும் ஆண் குறி வெட்டும் சம்பவமும் இவ்விதத்தில் முக்கியமானது. ஆண்மையை பெண்களிடம் காட்டுவதன் அற்பத்தனத்தை சாடி, ஆண்மை என்பது ஆண்களுக்கிடையே வெளிப்பட வேண்டியது எனச் சொல்லும் ஒரு முக்கியத்துவம் இக்காட்சிக்கு உள்ளது. மகாபாரத அர்ஜுன-கிருஷ்ண உறவை கவனிப்பவர் எவரும் அதில் ஒரு இருபாலினத் தன்மை உள்ளதை ஊகிக்க முடியும். கிருஷ்ணன் நித்திய காதலன். ஆனால் அவனுக்கு குழந்தை இல்லை. அர்ஜுனன் சில காலம் பெண்ணாக அஞ்ஞான வாசத்தின் போது இருக்கிறான். கிருஷ்ணன் தன் படைகளை துரியோதனனுக்கு அளித்து விட்டு அர்ஜுனனுக்காக பாண்டவர் படையில் தேரோட்டியாக இயங்குகிறான். அதாவது அரசியல் சூழலுக்கு எதிராக தன் நாட்டுக்கே எதிராக கண்ணன் இங்கு செயல்படுகிறான். ஒரு நாட்டு மன்னன் தன் நாட்டையும் படையையும் கைவிடுவது என்பது சாதாரண காரணமல்ல. எதற்காக அவன் அர்ஜுனனுக்காக இதை செய்கிறான்? அக்காலத்தில் இம்முடிவை எடுத்ததற்காக கண்ணன் தன் அரசியல் ஆலோசகர்களை எதிர்க்க, அதனாலே நாட்டில் இருந்து விலகி இருக்க நேர்ந்ததா? இவையெல்லாம் ஊகங்கள் தாம். ஒரு காட்சியில் போருக்கான ஆதரவு தேடி வரும் துரியோதனன் தூங்கும் கண்ணனின் தலைப்பக்கம் அமர்கிறான். அர்ஜுனன் கால்பக்கம் அமர்கிறான். எழுந்ததும் அர்ஜுனனை பார்க்கும் கண்ணன் முதலில் பார்த்தது அர்ஜுனனை என்பதால் அவனுக்கு தான் ஆதரவு என துரியோதனனிடம் தெரிவிக்கிறான். குறியீட்டு அர்த்தத்தில் துரியோதனின் கண்ணனின் மூளைப்ப்பக்கம் இருக்கிறான்; ஆனால் அர்ஜுனன் கண்ணனின் உடல் அருகே, நெருக்கமாய் இருக்கிறான். கண்ணன் தன் உடலை அவனுக்கு தருகிறான். ஒரு மூத்த ஆண் துணையாக கண்ணன் அர்ஜுனனுக்கு முக்கியான நேரங்களில் ஆலோசனைகள் தந்து, பாதுகாத்து, ஆற்றுப்படுத்தி, வழிகாட்டுகிறான். நந்தாவில் பெரியவர் பகவத் கீதையை மேற்கோள் காட்டும் இடத்தில் இருவரும் அர்ஜுனன் கண்ணனாக ஒரு புராணிக ஓரின ஜோடியாக நமக்கு தோன்றுகின்றனர்.

இச்சரடில் மிக முக்கியமான படம்பிதாமகன்தான். சக்தியின் (சூர்யா) நெஞ்சில் பச்சை குத்தியுள்ள சித்தன் ஒரு காட்சியில் சக்தி தன் காதலியுடன் கோயிலில் பேசிக் கொண்டிருக்கும் போது ஊடல் கொண்டு அங்கிருந்து அகல்கிறான். இன்னொரு இடத்தில் காதலி சக்தியை அடிக்க போகும் போது சீறுகிறான். இப்படத்திலும் காதல் தான் அழிவுக்கு காரணமாகிறது. இரவில் காதலியை வீட்டில் கொண்டு விட சக்தி போகும் போது சித்தன் கூடப் போக அடம்பிடிக்கிறான். ஆனால் சித்தனை விட்டு விட்டு அவர்கள் போக சக்தி கொல்லப்படுகிறான். சித்தன் கூட இருந்தால் காப்பாற்றி இருப்பான் என்று உணர்த்தப்படுகிறது. சக்தி தாக்கப்படும் போது ஓடிப் போய் உதவி பெற முடியாத அளவுக்கு பலவீனமானவளாக அவன் காதலி மாறிப் போகிறாள். மிச்ச படம் முழுக்க அவள் ஊமையாக இருப்பது காதலின் மொண்ணைத்தனத்தை காட்டத் தான். இறுதிக் காட்சியில் சேதுவைப் போல் சித்தன் காதலைத் துறந்து தனியாக போகிறான். காதலின் அற்பத்தனமும் ஆண் நட்பின் தூய்மையும் பாலா படங்களில் திரும்ப திரும்ப வலியுறுத்தப்படுகிறது. காதலில் வெறும் உணர்ச்சிகளும், லட்சியமும் தான் பிரதானமாக இருக்கிறது. ஆண் நட்பு உடல் மீதான அக்கறையை பிரதானப்படுத்துகிறது. சேதுவில் தன் நண்பனின் உடல் நலத்தை மீட்க ஸ்ரீமான் இறுதி வரை விசுவாசமாக முயன்று கொண்டே இருக்கிறான். அவன் அன்பு பௌதிகமாக இருப்பதாலேயே இறுதி வரை அது மாறாமல் இருக்கிறது என்கிறார் பாலா. மூளையின் உணர்ச்சிகள் நம்மை வழிதவற செய்கின்றன. “பிதாமகனில்சித்தன் சிறையில் கடுமையாக தாக்கப்படும் போது அவனை அரவணைத்து பாதுகாக்கிறான் சக்தி. அதே போல் சக்தி சித்தனுக்காக அடிவாங்கும் போதும் சித்தன் அவன் மீது அக்கறை காட்டி உடல் தேற பராமரிக்கிறான். உடல் பராமரிப்பும் அக்கறையும் தான் பாலாவின் நண்பர்களுக்கு அன்பை காட்டும் ஒரே வழியாக இருக்கிறது. அவர்களின் அன்பு உடலின் அன்பாக இருக்கிறது. அதனாலே அது ஸ்திரமாக வலுவாக வேர்கொண்டதாக இருக்கிறது.
சக்தி என்கிற பெயர் பார்வதியை குறிக்கிறது என அறிவோம். இப்படத்தில் சூர்யாவின் பாத்திரமும் மிகுதியாக பேசுகிற, சண்டையில் விருப்பமில்லாத, குடித்ததும் மனம் உடைந்து அழுகிற, வெகுளித்தனம் மிக்க பெண்மை கொண்ட ஆணாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மாறாக சித்தன் உணர்ச்சிகள் அறியாத, பேச வராத, வெகுளித்தனம் அற்ற ஆணாக வருகிறான். சக்தியின் பாத்திரத்துக்குள் பெண்மை மிக நுணுக்கமாக ஏற்றப்பட்டு உள்ளது. அதனாலே அவன் சித்தனுக்கு மிக ஏற்ற ஜோடியாக மாறுகிறான். சித்தனுக்கு அறிவுரை தந்து வழிகாட்டுகிறான்அர்ஜுனனுக்கு கண்ணன் போல், நந்தாவுக்கு பெரியவர் போல்.
அவன் இவனில்நந்தாவும் பிதாமகனும் பரிணமிக்கிறது. பெரியவர் ஜமீந்தார் ஆகிறார். வணங்காமுடிக்கும் சாமிக்கும் அடைக்கலம் தந்து வழிகாட்டுகிறார். இப்படத்திலும் பெண் உறவுகள் பெயரளவுக்கு தான். நந்தா, மற்றும் சக்தி பாத்திரத்தின் நீட்சியான வணங்காமுடி மூன்றாம் பாலினமாகவும் இதில் சித்தரிக்கப்படுகிறான். ஜமீந்தார் இருவருக்கும் இடையே உள்ள அன்பை புரிந்து கொள்ள உதவுகிறார். இப்படத்தின் இறுதியிலும் ஆண் காதலனின் இழப்புக்கு பழிவாங்கவே ஹீரோ கொலை செய்கிறான்.
புரோமேன்ஸ் படங்கள் தமிழில் காதலை எப்படி பார்க்கின்றன என்பது சுவாரஸ்யமானது. தொடர்ந்து காதல் உறவுக்காக பரிதவித்தபடியே இதன் நாயகர்கள் இருப்பார்கள். நண்பர்களின் உரையாடல்கள் காமத்தை சுற்றியே இருக்கும். காமச்சுவையை நேரடியாக அன்றி சொற்கள் மற்றும் கற்பனை வழி சுகித்தபடி இருப்பார்கள். காதல் தான் கதையை நகர்த்துகிற காரணியாக இருக்கும். ஆனால் காதல் உக்கிரமாகவோ நிறைவானதாகவோ இருக்காது. வெறும் ஒரு பொருட்டாக தான் காதல் இப்படங்களில் இருக்கும். காதலை முன்னிட்டு நண்பர்கள் இடையிலான கிளர்ச்சியான பேச்சுகளும், பொறாமை பரிதவிப்புகளும் தான் படத்தின் பெரும்பகுதியை நிறைக்கும். பொதுவாக ஆண்கள் தாம் மோகிக்கிற பெண்ணை பொதுவில் விவரிக்கவோ அப்பெண்ணுடனான உறவை நண்பனிடம் சித்தரிக்க விரும்பவோ நாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபுவின் சென்னை 28”, “கோவாபோன்ற படங்களில் நண்பர்கள் ஒன்றாக ஒரு பெண்ணைக் குறித்த சித்தரிப்புகளில் லயித்து ஜொள்ளு விடும் காட்சிகள் பல வரும். கோவாவில் ஒரு வெள்ளைக்காரிக்கு நண்பர்கள் மூவருமாய் எண்ணெய் தேய்த்து விட முயலும் காட்சியை சொல்லலாம். ஒருவன் காலை எடுத்துக் கொள்ள இன்னொருவன் கைகளையும் உடலின் மேற்பகுதியையும் தேர்ந்து கொள்கிறான். இதை வக்கிரம் என நாம் எளிதில் ஒதுக்கி விட முடியாது. வெங்கட் பிரபுவின் நாயகர்களுக்கு பெண்களுடனான உறவில் ஏதாவதொரு தயக்கமோ தடையோ இருந்து கொண்டிருக்கிறது. ஆண்கள் தம்முலகில் இருப்பது போல் பெண்களுடன் சகஜமாக இருக்க முடிவதில்லை. நேரடியாக இயலாமல் போகிற காமத்தை நண்பர்களுடன் பேசியும் பார்த்தும் கற்பனை செய்தும் மறைமுகமாக அனுபவிப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. நண்பனின் கண்கள் வழி பெண்ணை காண்பதும், ரசிப்பதும் அவனுக்கு இன்னும் லகுவாக இருக்கிறது.
ஆண் நண்பர்கள் இடையிலான பிணக்கும் ஊடலும் விரிவாக இப்படங்களில் காட்டப்படும். “சென்னை 28” முழுக்க முழுக்க ஆண் ஊடல் பற்றின படம் தான். பொதுவாக ஆண்களுக்கு செய்யும் வேலையும், சமூக அங்கீகாரமும் தான் உணர்ச்சிரீதியான திருப்தியை விட முக்கியமாக இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதாவது ஆண் மூளையால் வாழ்கிறான்; பெண் இதயத்தால் வாழ்கிறாள். புரோமேன்ஸ் படங்களில் நண்பர்களுக்கு லட்சியங்களை அடைவதை விட பரஸ்பரம் திருப்திப்படுத்துவதும் மகிழ்ச்சியாக இருப்பதுமே முக்கியமாக இருக்கிறது. இந்த அர்த்தத்தில் புரோமேன்ஸ் நட்பை ஒரு பெண்மை கலந்த நட்பு எனலாம்.
கோவாபடத்தில் வரும் பல புரட்சிகர சமாச்சாரங்களில் ஒன்று மல மல மருதமல பாட்டை நினைவுபடுத்தும் நண்பர்கள் வெறும் ஜட்டி போட்டபடி அறைக்குள் நடனமாடி மனம் திறந்து உல்லாசமாக இருக்கும் காட்சி. பெண்கள் இல்லாத உலகம் அவர்களுக்கு இப்படித் தான் தடையற்றதாக இருக்கிறது. என் வகுப்புகளில் பெண்கள் இல்லாமல் போகும் போது ஆண்கள் இடையே இந்த மனச்சுதந்திரத்தை கவனித்திருக்கிறேன். பெண்கள் ஒரு கிளுகிளுப்பை தந்தாலும் அவர்களின் அருகாமை தொடர்ந்து ஆண்கள் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியபடி இருக்கிறது. பெண்கள் நீங்கியதும் அவ்விடம் மேலதிகாரி இல்லாத அலுவலகம் போல் விழாக்கோலம் பூணுகிறது.
புரோமேன்ஸ் படங்களின் பெண்களும் ஆய்வுக்குரியவர்கள். இவர்கள் பொதுவாக ஆண்மை மிக்கவர்களாக, அடாவடியானவர்களாக, ஆண்களை மயக்கும் மோகினிகளாக வருகிறார்கள். ஆண்கள் ஒப்பிடுகையில் பலவீனமான எளிதில் கட்டுபடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதாவது பெண் ஆணாகவும், ஆண் பெண் போலவும் இருக்கிறார்கள். “பிதாமகன்படத்தில் இளங்காத்து வீசுதே பாடலில் சங்கீதா பாத்திரம் சைக்கிள் மிதிக்க சக்தியும் சித்தனும் உட்கார்ந்து வரும் பிம்பத்தை இங்கு நினைவுபடுத்தி கொள்ளலாம்.
புரோமேன்ஸ் படங்களில் தொடர்ந்து பெண்கள் மீதான மட்டற்ற சிலாகிக்கும் மோகமும் தொடர்ந்து சித்தரிப்புகளில் இருந்து கொண்டிருக்கும். ஆனால் ஆணும் பெண்ணும் சந்திக்கும் இடங்கள் கொண்டாட்டமாக இருக்காது. ஆண்கள் தனித்திருக்கும் இடங்களே உற்சாகம் ரொம்பி வழிவதாக இருக்கும். “காதல் தேசம்படத்தில் வரும்இன்பத்தை கருவாக்கினாள் பெண்பாடலையும் கோவாவின்டூபீஸெல்லாம்பாடலையும் உதாரணம் காட்டலாம். இப்பாடல்களில் ரகசியாய் பெண்ணை வேவுபார்க்கிற voyeuristic தன்மை இருக்கும். பெண்கள் பொம்மைகளாக, குறிப்பான ஆளுமை அற்றவர்களாக, செயலூக்கம் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் மட்டும் வருகிற பாடல்கள் நிறைய செயல்களுடன் சாகசங்களுடன் இருக்கும். புரோமேன்ஸ் படங்களில் பெண் மோகம் என்பது ஆண்களின் பகற்கனவு சமாச்சாரமாக மட்டுமே இருக்கும்.
புரோமேன்ஸ் படங்களின் இன்னொரு பொதுவான அம்சம் நாயகன் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவதும், அதற்கு ஏதாவது ஒரு விநோத காரணம் இருப்பதும். நந்தாவில் சிறுவனாக இருக்கையில் அப்பாவை கொன்றதற்காக நாயகன் தன் அம்மாவால் அந்நியப்படுத்தப்படுகிறான். பிதாமகனில் சித்தன் சுடுகாட்டில் வளர்ந்ததால் சமூகத்தோடு தொடர்புறுத்த முடியாமல் ஆகிறான். கோவாவில் நண்பர்கள் சினிமா பார்க்க வெளியூருக்கு போன காரணத்துக்காக கிராமத்துக்குள் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு அந்நியமாகிறார்கள். பின்னர் சாமி ஆபரணம் திருடிய நிலையில் கோவாவுக்கு தப்பித்து போகிறார்கள். இந்த காரணங்கள் எல்லாம் தர்க்கத்துக்கு புறம்பாக இருப்பதை கவனியுங்கள். ஆனால் வெளியே சொல்ல முடியாத காரணத்தால் சமூக வெளியேற்றத்துக்கு ஆளாகிற ஒரு உணர்வு இப்படங்களின் தொனியாக இருக்கிறது. இந்த காரணம் மிகையான ஒருபாலின ஈர்ப்பா என நாம் யோசிக்க வேண்டும். அல்லது அற்பமான ஏதோ காரணத்துக்காக ஒடுக்கப்படும் ஆண் உடல் இவ்வாறு நட்பு சார்ந்த அணுக்கத்துக்குள் அடைக்கலம் தேடுகிறதா?
இந்த வகை ஆண் ரொமான்ஸ்களின் இன்னொரு பக்கமான வெறுப்பு கலந்த அன்பை நகைச்சுவையாக வெளிப்படுத்திய படங்கள் ராஜேஷுடையவை. குறிப்பாக, “பாஸ் என்கிற பாஸ்கரன்மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி”.


தளபதியைநாம் புரோமேன்ஸ் வகைக்குள் சேர்ப்பது சிரமம் என்றாலும் அப்படத்தை அங்கதம் செய்யும் நோக்கத்துடன் ராஜேஷ் உருவாக்கிய நகைச்சுவை நண்பர் ஜோடிகள் ஆண் ரொமான்ஸ் வகை தான். “சிவா மனசுல சக்தியில்நாயகி படுகிற அவஸ்தை பார்க்கையில் நமக்கே பரிதாபம் தோன்றும். சக்தியை வதைப்பதிலும் கலாய்ப்பதிலும் தான் சிவாவுக்கு ஒரு திருப்தியும் நிறைவும் கிடைக்கிறது. இறுதியில் அவளை நிறைய அவமானித்து காக்க வைத்து தன்னை வேலை பார்த்து அவள் காப்பாற்றுவாள் என உறுதியான பின்னர் தான் அவன் திருமணத்துக்கு ஒப்புகிறான். இப்பட நாயகியின் பாத்திர சித்தரிப்பு மற்றும் திரைவெளியில் அவளுக்குள்ள குறைவான முக்கியத்துவம் புரோமேன்ஸ் வகைக்கு பொருந்துவதாக உள்ளது. ராஜேஷின் நண்பர்கள் சதா பரஸ்பரம் குழிபறித்தபடி, மென்மையான துரோகங்கள் செய்தபடி இருக்கிறார்கள். இப்படங்களின் சிறப்பு காதல் வெறும் பாவனை என்று வலியுறுத்தப்படுவது தான்.
பாஸ்கரன் சந்திரிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறான். ஆனால் உதவாக்கரையான அவன் காதலிக்காக வேலைக்கு போக மறுக்கிறான். அவள் தான் தன்னை சம்பாதித்து காப்பாற்ற வேண்டும் என்கிறான். தன் வேலையின்மையால் காதலியை இழக்கக் கூடும் எனும் நெருக்கடி வரும் போது கூட அவன் அதை பொருட்படுத்துவது இல்லை. டியூட்டோரியல் ஆரம்பிப்பது கூட நண்பனுடன் பொழுதுபோக்காகவும் குடும்பத்துக்கு தன்னை மேம்போக்காக நிரூபிக்கவும் தான். வீடும் குடும்பமும் காதலியும் அவனை துறக்கும் போதும் படம் முழுக்க பாஸை எப்போதும் கைவிடாமல் காப்பாற்றுபவனாக அவன் நண்பனே இருக்கிறான்.
இது களவாணிபடத்தில் வருவது போல் வெறும் விட்டேத்தியான ஒரு நாயகனின் சாகசமாக இங்கு இல்லை. ராஜேஷின் நாயகனுக்கு தன் நண்பனை சிக்கலில் மாட்டி விடுவதும், அவனை வைத்து விளையாடுவதும், வேடிக்கைகள் உருவாக்குவதும் காதலிப்பது, சாதிப்பதை விட முக்கியமாக இருக்கிறது. அவரது படங்களில் காதல், வாழ்க்கையில் முன்னேறுவது போன்றவை வெறும் தோரணைகள் தாம். “சிவா மனசில சக்தியில்சிவா தன் காதலியை தேடிச் சென்று ஷக்கீலாவிடம் மாட்டிக் கொள்ளும் காட்சியில் சந்தானம் அந்த இக்கட்டை நீண்ட நெடுநேரம் சிரித்து ரசிப்பார். ”பாஸ் என்கிற பாஸ்கரனில்நல்லதம்பியை பாஸ் அஜித், விஜய் ரசிகர்களிடையே மாட்ட வைத்து அடிவாங்க வைக்கிறான். பிறகு கடன் வாங்கி டியோட்டோரியல் ஆரம்பிக்க செய்து அவன் குடும்பத்தை நடுத்தெருவுக்கு தள்ளுகிற நிலைக்கு கிட்டத்தட்ட கொண்டு வருகிறான். தொடர்ந்து பாஸினால் தனக்கு நேர்கிற தொல்லைகளைப் பற்றி அவன் அங்கலாய்க்கும் போதும் அதை பாஸும் அவனும் உள்ளூர ரசிப்பதையும் உணர்கிறோம். இரு நண்பர்களுக்கும் இடையிலான இந்த வெறுப்புக்கும் அன்புக்கும் இடையிலான உறவு நகைச்சுவை மோதல் வழியாக ஒரு அன்னியோன்யம் கொள்கிறது. நம் சமூக அமைப்பில் காதலும், தொடர்ந்து குடும்ப உருவாக்கமும் நட்புக்கான வெளியை கிட்டத்தட்ட இல்லாமல் செய்து விடுகிறது. ஒருவேளை ராஜேஷின் நண்பர்கள் முடிந்தவரை பரஸ்பரம் இன்னொருவரின் காதலை பிரித்து வைப்பதில் அவ்வளவு அக்கறை காட்டுவது அதன் வழி மட்டும் தான் தம் நட்பு தொடர முடியும் என்பதால் இருக்கலாம்.
பாஸ்படத்தின் முதல் காட்சியே பாஸ் தன் நண்பனான நல்லதம்பியை ஒரு கத்தியுடன் தெருவில் துரத்துவதில் தான் துவங்குகிறது. காதல் கைகூடி திருமணத்தில் முடியப் போகிற தருணத்தில் நல்லதம்பி பெண்ணின் அப்பாவை கலாய்த்து ஒரு முட்டுக்கட்டையை உருவாக்குகிறான். இதை அவன் வேண்டுமென்றே செய்கிறானா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடிமுழுக்க முழுக்க நண்பர்கள் ஒருவர் இன்னொருவரின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டபடியே இருக்கிறார்கள். இதனாலே பிரிகிறார்கள், காதலியோடு சேர்கிறார்கள்; பிறகு உடனே காதலியை பிரிந்து நண்பனோடு சேர்கிறார்கள். இந்நண்பர்களுக்கு எது முக்கியம்நட்பா, காதலா? சரவணனும் பார்த்தசாரதியும் தத்தமது காதலிகள் நண்பனை கைவிட கேட்க மறுத்து காதலை துறக்கிறார்கள். ஆனால் அடுத்த காட்சியில் காதலிக்காக நண்பனையும் துறக்கிறார்கள். இதில் எங்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று சொல்வது கடினம். இந்த மென்மையான பூடகம் தான் இப்படத்தின் அழகு எனலாம். காதலியை இழக்கும் போது சரவணன் துயரம் கொள்கிறான். ஆனால் எந்த சூழலிலும் அவன் நண்பனை இழப்பதில்லை. ஊடல்கள் காட்சிக்கு காட்சி தோன்றினாலும் அதை எளிதில் கடந்து போக முடிகிறது. ஆனால் காதலில் புரிந்துணர்வும் ஊடலை தீர்ப்பதும் அவ்வளவு எளிதாக இல்லை. இதனால் தான் அவனுக்கு நண்பனின் அருகாமை இன்றி காதலை எதிர்கொள்வது சிரமமாக இருக்கிறது. ”பாஸில்நல்லதம்பி தன் நண்பனுக்கு காதல் வகுப்பெடுப்பது ஆகட்டும், “ஒரு கல் ஒரு கண்ணாடியில்பார்த்தா தொடர்ந்து நண்பனின் காதலில் குறிக்கிடுவது ஆகட்டும் பெண்ணுறவை நேரடியாக அணுகுவதில் ஒரு பெரும் தயக்கம் வெங்கட் பிரபுவின் படங்களில் போல் இப்படங்களிலும் உள்ளது. “சென்னை 28”, “கோவாபோல் ஒரு கல் ஒரு கண்ணாடியிலும்சரவணனும் பார்த்தாவும் தம் காதலிகளான இரு பெண்களையும் சேர்ந்து தான் சைட் அடித்து ரசித்து வெறுத்து பிரித்து கொள்கிறார்கள்.
ஆனால் ஓரினக் காதலர்களைப் போல் அல்லாது புரோமேன்ஸ் நண்பர்களுக்கு பெண்கள் நிச்சயம் தேவைப்படுகிறார்கள்; அதேவேளை தேவையில்லாமலும் இருக்கிறார்கள். அவர்களின் காதல் இதற்கு இடைப்பட்டு எங்கோ இருக்கிறது. “ஒரு கல் ஒரு கண்ணாடியில்வரும் காதலைப் போல் அதுவும் புதிராக இருக்கிறது.

நன்றி: காட்சிப்பிழை, ஜனவரி 2014

2 comments:

Dinesh said...

//“பிதாமகன்” படத்தில் இளங்காத்து வீசுதே பாடலில் சங்கீதா பாத்திரம் சைக்கிள் மிதிக்க சக்தியும் சித்தனும் உட்கார்ந்து வரும் பிம்பத்தை இங்கு நினைவுபடுத்தி கொள்ளலாம்.

# வாசகருக்கு காட்சிப்படுத்தும் உதாரணங்கள்

dinesh.88560 said...

இந்த வரிசையில் முக்கியமாக நான் கருதுவது "சுப்ரமணியபுரம்", "என்றென்றும் புன்னகை", ஆகிய படங்களை.....மேலும் மலையாளம், ஹிந்தி ஆகிய படங்கள் இதன் உச்சத்தை எட்டி உள்ளன....தமிழில் நாம் பார்க்கும் சமூகத்தின் பிரதிபலிப்பு சினிமாவில் குறைவு....இங்கு ஆண்களுக்கு இடையேஉள்ள துரோகம் போன்றவற்றை "சுப்ரமணியபுரம்" மட்டுமே தெளிவாகக் காட்டியது...பெண்கள் உலகம் இதுவரை துளியளவு கூட பதிவு செய்யப்படவில்லை....."உன்னாலே உன்னாலே" தவிர.....உங்கள் கட்டுரை இது குறித்த விவாதத்துக்கு ஒரு திறப்பாக அமையட்டும்....