Friday, January 24, 2014

புத்தக பரிந்துரை பட்டியல்களின் மூன்று பிரச்சனைகள்வாசகனுக்கு பட்டியல் நீட்டி வழிநடத்தும் பண்பாட்டுக்கு எதரானவன் நான். இதற்கு மூன்று காரணங்கள்.
11)  வாசிப்பு என்பது இலக்கியமோ அல்லது ஒரு துறை பற்றி அறிய அல்ல. சுய அறிதல் தான் வாசிப்பின் உண்மை நோக்கம். வாசகனாக அந்தஸ்தை பெற படிப்பவர்கள் போலி படிப்பாளிகள். விரிவாக கூறுகிறேன். சிறுவயதில் இருந்தே வாழ்வு குறித்த நம்பிக்கைகளும் அபிப்ராயங்களும் ரசனையும் நமக்குள் உருவாகிறது. ஆனால் இவற்றை நம்மால் நேரடியாக அறிய முடியாது. வாசிப்பு நம் ரசனைக்கு ஒரு முகம் அளிக்கிறது. அரைகுறையாய் தோன்றிய எண்ணங்களுக்கு தர்க்கமும் கூர்மையும் அளிக்கிறது. சரியான வாசிப்பை கண்டடைவது என்பது நம்மை கண்டடைவது தான். அதனால் தான் வாசகர்கள் தம் தேர்வு பற்றி என்றுமே பிடிவாதமாக இருப்பார்கள்.

 உங்களுக்கு ஆன்மீக நாட்டம் சிறுவயது முதலிலே உண்டென்றால் சிறு ஆன்மீக வெளிச்சம் இல்லாத எதுவும் ஈர்க்காது. காதல் கதையோ துப்பறியும் நாவலோ தத்துவ நோக்கு இருந்தால் தான் ரசிப்பீர்கள். அது போல் சிலருக்கு உறவுகள் மீதும், உணர்ச்சிகள் மீதும் ஒரு பிரேமை இருக்கும். வாழ்க்கை உல்லாசமானது, கொண்டாட்ட்த்துக்கு உரியது என நம்புவார்கள். என்னதான் எதிர்மறை அனுபவங்கள் நேர்ந்தாலும் ஆழ்மனது மீண்டும் மீண்டும் வாழ்க்கையை கொண்டாடுவதையே ஏற்கும். அதனால் அப்படியான புத்தகங்களையே தேடுவர். எனக்கு சிறுவயது முதலே மனிதன் அடிப்படையில் தீமையானவன் என்கிற கருத்து பிடிக்கும். அதனாலே யாரும் பரிந்துரைக்காமலே தாக்கரே எனும் எழுத்தாளரின் Vanity Fair எனும் நாவலை ரசித்து படித்தேன். அந்நாவல் முழுக்க பலவகை மனிதர்களின் பாசாங்கும் தீங்குகளும் தான் விவரிக்கப்பட்டிருக்கும். அதே வயதில் அகிலனின் சித்திரப்பாவையும் பிடித்திருந்த்து. ஆனால் அதன் மேல் நம்பிக்கை வரவில்லை. போலி என நினைத்தேன். தரம் என்பதை இப்படி நம் நம்பிக்கைகள் அல்லது வாழ்க்கை தத்துவம் பொறுத்து தான் தீர்மானிக்கிறோம். புத்தகங்களை தேடி வாசிக்க நேரமில்லை என்பவர்கள் தன்னை அறிய நேரமில்லாதவர்களே. இவர்களுக்கு ஒரு “நல்ல” புத்தகம் படிக்க வேண்டும்; தனக்கு பாதை காட்டுகிற நூல் வேண்டாம். புண்ணியம் கிடைக்கும் என புனித நூல் வாசிப்பது போன்றது இது.
இந்த புத்தகக் கண்காட்சியில் நான் சில மணிநேரங்கள் ஒரு அரங்கில் அமர்ந்து பத்து கவிதை புத்தகங்களை எடுத்து வைத்து பொறுமையாக படித்துப் பார்த்து அவற்றில் மூன்றை தேர்ந்தெடுத்தேன். என் நண்பர்கள் மிக முக்கியமானவை என சொன்ன சில நூல்கள் என்னைக் கவரவில்லை என்பதால் வாங்கவில்லை. ஒரு புத்தகத்தை அப்படியே அட்டையை பார்த்து காசு கொடுத்து வாங்குபவர்கள் வாசிப்பிற்கு முற்றிலும் அந்நியமானவர்கள். ஒரு நாய் அல்லது பூனைக்கு சாப்பிட புது பொருள் கொடுத்து பாருங்கள். முகர்ந்து நக்கிப் பார்த்து பரிசீலித்து தான் தின்னும். உணவை முகர்ந்து ரசித்து எச்சில் ஊறி உண்ணத் தயாராவது போலத் தான் நாம் வாசிப்புக்கும் தயாராக வேண்டும். புத்தகத்தை எடுத்து பின்னட்டை வாசகம், சில பக்கங்கள் என வாசித்து அது உங்கள் இதயத்தை நெருங்குகிறதா என பார்க்க வேண்டும். சில நூல்களை அவற்றின் விநோத்த்தன்மை காரணமாய் கூட வாங்கலாம். ஆனால் பிரியமான வாசிப்பு எப்போதும் அந்தரங்கமான தேர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
புத்தகங்களை தேர்ந்தெடுத்து அறிய சிறந்த பயிற்சிக் களம் பழைய புத்தக கடைகள் தாம். அங்கு அவசரமின்றி ஒவ்வொரு நூலாக எடுத்து வாசித்து யோசித்து தேர்ந்தெடுக்கும் வேளையில் நமக்கான ரசனை தானே உருவாகும். இதற்கு நேரம் ஒரு குறையே அல்ல. ஏனெனில் நம் நோக்கம் நூற்றுக்கணக்கான நூல்களை வாங்கி குவிப்பது அல்ல. தேவையான குறைந்த நூல்களை வாங்கி ஆழமாய் அவற்றில் பயணிப்பது.
நீங்கள் புத்தகங்கள் கடலாய் பிரவாகித்துக் கிடக்கும் ஒரு கடையில் இருக்கிறீர்கள். அங்கு என்ன வாங்க எனத் தெரியவில்லை. அப்போது பட்டியல் இல்லாமல் எப்படி தேர்ந்தெடுப்பது? முதலில் இன்ன நூலைத் தான் வாங்குவேன் எனும் உங்கள் பிடிவாதத்தை கழற்றி வையுங்கள். முடிந்தளவுக்கு புத்தகங்களை கையில் எடுத்துப் பார்த்து புரட்டி அங்கிங்காய் வாசியுங்கள். எதையும் வாங்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லாமல் வெறுமனே தேடுங்கள். தேடி முடித்ததும் ஏதோ ஒரு புத்தகம் உங்களை மீண்டும் அழைக்கும். அதை வாங்குங்கள். இல்லை என்றால் அடுத்த கடைக்கோ அடுத்த சந்தர்பத்துக்கோ காத்திருங்கள். இந்த புத்தகக் கண்காட்சியில் ஒருவர் வந்தார். பிடல் காஸ்டிரோ வாசித்த ஒரு நாவல் தமிழில் மொழியாக்கப்பட்டு வந்திருக்கிறது. அது தான் வேண்டும் என்றார். என்ன நாவல் என தெரியவில்லை. கடலும் கிழவனுமா என கடைக்கார்ர் கேட்க அவர் தன் நண்பனிடம் போனில் அழைத்து கேட்டு உறுதி செய்தார். கடைக்காரர் அவரை இன்னொரு கடைக்கு போக சொன்னார். அந்த கடையில் என்னென்ன புத்தகம் இருக்கிறது எனப் பார்க்காமலே அவர் கராறாக கிளம்பி விட்டார்.
எனக்கு இரண்டு கேள்விகள் தோன்றின.
ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் நாவலை அவர் எப்படி உதிரியாக எடுத்து படிக்க முடியும்? படிப்புற்கு ஒரு தொடர்ச்சி வேண்டும். ஒரு காலகட்டத்தில் பண்பாட்டில் தோன்றுகிற நாவல்கள் ஒரு தொடர்ச்சி கொண்டவை. அதை அறியாமல் அந்நாவலின் ஆன்மாவை புரிய முடியாது. “கடலும் கிழவனும்” வெறும் கதை அல்ல. பிடல் காஸ்டிரோ படித்தார் என்பதற்காக இவருக்கும் அது பிடிக்க வேண்டும் என்றோ புரிய வேண்டும் என்றோ தேவையானதாக இருக்க வேண்டுமென்றோ அர்த்தமில்லை. ஒருவேளை அவருக்கு பொருத்தமான நூல்கள் வேறாக இருக்கக் கூடும். அவர் நின்று விசாரித்த கடையிலேயே அவை இருந்திருக்கலாம். ஆனால் அவர் தான் கண்ணைத் திறக்காமல் கடிவாளம் பூட்டியபடி அல்லவா ஓடினார்!
22)   இது என் இரண்டாவது பிரச்சனை. ஒவ்வொரு சிறந்த புத்தகமும் அது உருவாகிற சிந்தனைப் பரப்பின் ஒரு பகுதி. அந்த சிந்தனைத் தளம் உங்களுக்கு பரிச்சயமாக அல்லாத பட்சத்தில் உங்களுக்கு அந்த நூல் புரியாது. உதாரணமாக நீட்சேவின் “இவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரனை” எடுப்போம். இது ஒரு பிரபல நூல். தமிழில் வெளியானதும் முதல் பதிப்பு வேகமாய் காலியானதாய் சொன்னார்கள். எனக்கு வியப்பாக இருந்த்து. ஏனென்றால் மேற்கத்திய தத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல் அந்த நூல். அதுவரையிலான பல முக்கிய தத்துவ ஞானிகளுக்கான தன் பதிலை நீட்சே அந்நூலில் வைத்திருப்பார். அந்த தத்துவ்வாதிகள் யாரென தெரியாமல், அந்த நூற்றாண்டுகளின் சிந்தனை தடம் என்னவென விளங்காமல் உங்களுக்கு ஜாருதுஷ்டிரனின் கதையும் புரியாது. கருத்துக்களும் விளங்காது. வேகமாய் வாசித்து விட்டாலும் அது நுனிப்புல் மேய்தலாகவே இருக்கும். உள்ளே நுழைய அவ்வளவு சிரமமான புத்தகம் அது. கார்ல் யுங் எனும் உளவியல் ஆய்வாளர், பிராய்டின் மாணவர், ஜாருதுஷ்டிரன் நூல் பற்றி பத்து வருடங்கள் தொடர்ந்து கருத்தரங்குகள் நட்த்தினார். கருத்தரங்க உரைகளை 1000 பக்கம் வருகிற இரு தொகுதிகளாய் வெளியிட்டார் (அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ளன). பத்து வருடங்கள் பேச வேண்டிய நூலை எந்த மேற்கத்திய தத்துவ அறிமுகமும் அற்ற தமிழ் வாசகர்கள் பத்து நாளில் வாசித்து முடித்து விட்டார்களா? இது உண்மையில் ஒரு அபத்தம். நடக்கத் தெரியாதவன் ஓடுவது போன்றது இது. தமிழில் என்ன நடந்த்தென்றால் நீட்சே எனும் கவர்ச்சியான பெயர் காரணமாக அந்நூல் வேகமாய் விற்றது. வாங்கியவர்கள் அவசரமாய் படித்து அதை ஒரு கதை அல்லது கவித்துவமான விவரணை என்கிற அளவில் புரிந்து கொண்டு மூடி வைத்தனர். பெரும்பாலானோருகு புரியவில்லை; ஆனால் நீட்சே வாசித்ததாய் பாசாங்கான திருப்தி மட்டும் அடைந்தனர். இந்நூல் ஆங்கிலத்தில் உருவாக்கிய விவாதங்களில் நூற்றில் ஒரு பகுதி கூட தமிழில் நிகழவில்லை. ஏனென்றால் நாம் அந்நூலுக்கு இங்கு தயாராகி இருக்கவில்லை. நீட்சே பதிப்பிக்கும் முன் மேற்கத்திய தத்துவத்தை எளிதில் விளக்கும் கட்டுரைகளை வெளியிட்டு விவாதித்து வாசகர்களுக்க்கு புரிய வைக்க வேண்டும். ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். பிறகு நீட்சேவை அறிமுகப்படுத்தும் நூல்கள் வர வேண்டும்; அதற்கு பின்னரே நீங்கள் “ஜாருதுஷ்டிரனுக்குள்” பயணிக்க முடியும். எந்த புத்தகத்தையும் அந்தரத்தில் இருந்து கொய்யாக்காய் பறிப்பது போல் எடுத்து வாசிக்க முடியாது. அதற்கு ஒரு தொடர்ச்சி வேண்டும். தொடர்ச்சி அமைய நம் தனிப்பட்ட ரசனை அல்லது தேடல் காரணமாய் நாம் அந்த தளத்தில் பல நூல்களை வாசித்திருக்க வேண்டும். ஒரு புத்தகம் நம்மிடம் வர வேண்டும். நாம் புத்தகத்திடம் செல்லக் கூடாது. பட்டியல்கள் நம்மை தொடர்ச்சியற்று இவ்வாறு பின்னணி புரியாத நூல்களை படிக்க தூண்டுகிறது. மொழி தெரியாத பெண்ணை பெயர் கூட கேட்காமல் முகம் நன்றாக இருக்கிறதென்று கல்யாணம் செய்வது போன்றது இது.
33)  மூன்றாவதாய், புத்தக பரிந்துரை பட்டியல்கள் ஒரு அதிகாரத்தை கட்டுவிக்கின்றன. பத்து சிறந்த நாவல்களை வெளியிடுவது பத்து அடிமைகளை வைத்து உங்களை பல்லக்கில் வைத்து தூக்கி சுமக்க போவதற்கு சம்ம். பட்டியல் உங்களை மேலான அதிகாரமிக்க ஆளாக தோன்ற செய்கிறது. தமிழில் எழுதவும் வாசிக்கவும் துவங்குகிற பலரும் கூட சிறந்த புத்தக பட்டியல்கள் வெளியிடுவது இன்று ஒரு போக்கு. பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்கிற மேலான எண்ணத்தினால் மட்டும் அல்ல இது செய்யப்படுவது. பட்டியலில் இருந்து ஒரு நூலை நீக்குவது ஒரு பிளாக்மெயில். தமிழில் மிகக் குறைவாகத் தான் நூல்கள் வெளியாகின்றன. தொடர்ந்து புத்தக கடைகளுக்கு போகிறவர்க்ள் கண்ணில் நிச்சயம் எப்படியும் புது நூல்கள் படும். அவற்றை கவனிக்க வைக்க பட்டியல்களின் அவசியம் இல்லை. கணிசமான பட்டியல்கள் ஒரே நூல்களைத் தான் மீள மீள முன்வைக்கின்றன எனும் போது எதற்கு இத்தனை பட்டியல்கள் என நாம் கேட்க வேண்டும். தமிழில் பட்டியல் வெளியிடுவது மிக மோசமன கிரிமினல் நடவடிக்கையாகவே இருக்கிறது.

முடிவாக, நான் ஆரம்பத்தில் கராறான பட்டியல்களை வைத்து படித்தவன் தான். அதனால் கடும் ஏமாற்றமே எஞ்சியது. தமிழின் கணிசமான வறட்டு தகவல்கள் மட்டும் உள்ள எதார்த்தவாத நாவல்கள் என்னை ஈர்க்கவில்லை. போக போக வேறுபல விசயங்கள் பிடிக்கவில்லை. உதாரணமாய் கீராவின் ரொமாண்டிசிஸம். இப்போது நான் என் வாசிப்பில் யாரையும் குறுக்கிட அனுமதிப்பதில்லை. என் நண்பர்க்ள் அல்லது மதிக்கிறவர்களின் பேச்சில் தென்படும் புத்தகங்களை கவனிப்பேன். அவை கிடைத்தால் வழக்கம் போல் எனக்கானவையா என சோதித்துப் பார்த்தே படிப்பேன். எஸ்.ராமகிருஷ்ணன் இதற்கு நேர்மாறாக எல்லா புத்தகங்களையும் படித்து விட வேண்டும் எனும் நம்பிக்கை கொண்டவர். என் நண்பர் ஒருவர் அவரை புற்றுக்குள் கைவிட்டு பாம்பு பிடிப்பது போன்று வாசிப்பவர் என கூறுவார். ரசனை, விருப்பம், தேடல் ஆகியவற்றை கடந்து பொதுப்படையாய் வாசிக்கலாம். ஆனால் ஆய்வுக்கு மட்டுமே அது சரியாக இருக்கும். எனக்கு தேவதச்சன் பிடிக்கும். ஆனால் தேவதச்சனை விட கவிஞராக பசுவய்யா அதிகம் பிடிக்கும். தேவதச்சனின் கவிதையில் சமூகவியல், வரலாறு சார்ந்த விரிவு இல்லை என்பது என் புகார். இது குறித்து ஒரு முறை மனுஷ்யபுத்திரனிடம் வாதித்த போது அவர் ரொம்ப எரிச்சலாகி விட்டார். மனுஷுக்கு தேவதச்சம் ரொம்ப பிரியமான கவிஞன். மனுஷ் தேடும் ஏதோ ஒரு உலகை தேவதச்சன் திறந்து காண்பிக்கிறார். எனக்கு அதை பசுவய்யாவும், சச்சிதாந்தனும், அவரைப் போன்றவர்களும் செய்கிறார்கள். இரண்டு வாசகர்கள் சந்தித்தால் ஒரு போதும் இணங்க மாட்டார்கள். பொய்யான வாசகர்கள் மட்டுமே ஒரே பட்டியலை பரிமாறி புன்னகைத்து கைகுலுக்குவார்கள்.

3 comments:

Karikalan said...

நல்ல கட்டுரை. புத்தகப் பட்டியல்களைக் குறித்து நீங்கள் குறிப்பிட்ட மூன்று குறைகள் - தனி மனிதனின் அறிதல்/சுய ரசனையை கருத்தில் கொள்ளாத பொதுத் தன்மை,பரிந்துரைக்கப் பட்ட 'சிறப்பான' புத்தகங்களின் பின்புலம் அறியாமல் தேர்ந்தெடுக்கும் வாசகர்களின் சிக்கல், பட்டியல்களை உருவாக்குவதில் உள்ள அதிகாரம் - மிகப் பொருத்தமானவை.

என் அனுபவத்தில், புத்தகப் பட்டியல்கள் ஒரு குறுகிய எல்லைக்குள் உருவாக்கும் போது பயனுள்ளவையாக இருக்கின்றன. உதாரணமாக மிகச் சிறந்த பத்து புதிய பொழுதுபோக்குப் புத்தகங்கள் (Summer reads), வரலாற்றுப் புதினங்கள் (Historic fiction), சுயவரலாறுகள், பயணக் கட்டுரைகள், என பிரிக்கப்படும் போது, இவை பயனுள்ளவையாகின்றன. ஒரு ஆரம்ப நிலை வாசகனை, இந்தப் பட்டியல்கள், தீவிர வாசகனாக்க உதவும்.

தமிழ் நாட்டில், புத்தகப் பட்டியல்கள் வந்தால், எப்போதும் எஸ்.ரா, அல்லது ம.புத்திரன் என்ற ஒரு சில usual suspects, மட்டுமே செய்வது தான் குறை. இன்னும் பரவலான, எழுத்தாளர்களும், வாசகர்களும் உருவாக, உருவாக இந்தப் பிரச்னை தன்னாலேயே குறையும் என நினைக்கிறேன்.

goodreads.com போன்ற தளங்களும், பரவலான வாசகர் பார்வையிலான புத்தகப் பரிந்துரைகளும் வந்தால், புத்தகப் பட்டியல்களில் நீங்கள் குறிப்பிட்ட குறைகள் போகலாம். புத்தகப் பட்டியல் என்பது அதில் உள்ள புத்தகங்களைக் காட்டிலும், அதைத் தெரிவு செய்தவனின் ரசனையைத் தான் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை.

Sadaa Shiva said...

புத்தகத்தேர்வுகள் பற்றிய உங்களின் அபிப்ராயம் ஒரளவு எனக்கும் ஒத்துப்போகிறது. பின்னட்டை / அல்லது புத்தகத்தின் ஒரிரு பக்கங்கள் எடுத்துவாசிப்பதுதான் நல்லது. ஆரம்பகாலத்தில் நான் புத்தகத்தின் வடிவமைப்பு,தலைப்பு ஆகியவற்றைப் பார்த்துகூட வாங்கியிருக்கிறேன் மற்றும் நூலகத்திலிருந்து எடுத்து வந்து வாசிக்கிறேன். நான் நூலகளைத் தேர்ந்தெடுக்க கற்றுக்கொண்டது நூலகத்தில் மற்றும் பழைய புத்தகக்கடைகளில். நான் நூலகத்தில் புத்தகம் எடுத்து வாசிக்க ஆரம்பித்த காலத்தில் ஒரே ஒரு பாஸ்தான் வைத்திருப்பேன்.மேலும் நூலகம் என் வீட்டிலிருந்து 2கி.மீ சைக்கிள் கிடையாது.நடந்துதான் செல்லவேண்டும்.ஆக நான் எடுக்கும் ஒவ்வொரு புத்தகமும் எனக்கு மிக முக்கியம். அதனால் நூலகத்தில் நுழைந்தவுடன் சரமாரியாக புத்தகங்களை எடுத்து ஒரிடத்தில் அடுக்கிவைத்துவிட்டு பின்பு ஒவ்வொன்றாக எடுத்து அதன் தலைப்பு,ஆசிரியர்,உள்ளடக்கம் என படித்துப் பார்த்து எடுப்பேன். சமயத்தில் வெறும் தலைப்பை வைத்து மட்டும் நூலை தொடமாலேயே நிராகரித்த கதையுமுண்டு. ரப்பர் ,தேரோடும் வீதி போன்ற புத்தக்ங்களை.பின்பு சீரிய இலக்கியத்தில் கொஞ்ச கொஞ்சமாக நுழைய ஆரம்பித்த பிறகு இப்புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றி தெரிய வந்தது. இப்பட்டியல்களை ஆரம்பித்தது அனேகமாக க.நா.சு. தான் என்று நினைக்கிறேன். ஆனால் அன்று அதற்கான காரணமும்,அவசியமும் இருந்தது.பின்னாளில் அது புதிதாக வரும் வாசகர்கள் விரைவாக இலக்கிய வாசகன் அந்தஸ்தை அடைய அல்லது தன்னுடைய இலக்கிய வாசகன் என்கிற அந்தஸ்தை நிறுவ எளிதான வழியாக இந்த புத்தகப்பட்டியலை நாடுகிறான்.சுயமாக தேடி கண்டடைடுவது என்பது அனேகமாக சமீபமாக முற்றிலும் இல்லாமலாகிவிட்டது.என் ஆரம்பகாலத்தில் பா.சிங்கராம் பற்றி கேள்விப்படவேயில்லை. அப்போதே அவர் நூல் வந்துவிட்டிருந்தது என்றாலும். அதே போல ரமேஸ்-பிரேம் போன்ற பின் நவீனத்துவம் மட்டுமே சார்ந்து எழுதும் இவ்வெழுத்தாளர்களின் புத்தகமெல்லாம் இப்பட்டியல்களில் பெரும்பாலும் இருப்பதில்லை.ஆனால் அவர்களையும் நாம் வாசித்து கடக்கவேண்டும். பொதுவாக வாசிக்க ஆரம்பித்த காலத்தில் நான் என் ஆதர்ச எழுத்தாளர்கள் சொல்லும் புத்தங்கள் கண்ணில்பட்டால் உடனே வாங்கிவிடுவேன்.பிடித்திருந்தால் உடனே படிப்பது அல்லது என்னுடைய சேமிப்பில் வைத்திருந்து வாசிக்க ஒன்றுமில்லாத போது அப்புத்தங்களை வாசிக்க ஆரம்பிப்பது. சாருவை படித்த போது அவர் சொன்ன சல்மான் ருஸ்டி,டி.ஹெச்.லாரன்ஸ் புத்தகங்களையெல்லாம் பழைய புத்தகங்கடைகளில் தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறேன்.ஆனால் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.நிச்சயமாக பின்னாளில் படிக்க ஆரம்பிப்பேன்.ஆனால் அப்போது இப்புத்தகங்கள் இவ்வளவு எளிதாக கிடைக்குமா என்று தெரியாதல்லவா..

சு.கி.ஞானம் said...

உண்மையில் எனக்கு என்ன பின்னூட்டமிட வேண்டும் என்று தெரிய வில்லை இன்றைய தேதியில் நிறைய பேரை புத்தக வாசிப்பை நோக்கி ஈர்க்கவே பெரும் முயற்சி தேவைப் படுகிறது அப்படி இருக்கையில் ஒரு புத்தகத்தின் மீது ஒருவனுக்கு ஈர்ப்பு வரவழைக்க வைக்கவைப்பது மிகவும் சிரமம்.