Tuesday, December 31, 2013

ஒரு கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது?
நான் பொதுவாக வாசகர் கடிதங்களை வெளியிடுவது அபத்தம் என நினைப்பவன். பொதுவெளியில் எழுத நினைத்தால் அதை வாசகர்களே செய்யலாம். ஆனால் மாறாக ஒரு சுவாரஸ்யமான கேள்வியை நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். படிப்பதற்கு ஒரு நல்ல கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது? என் பதில் ஒரு பொது விவாதத்திற்கு தேவையானது என தோன்றுவதால் பிரசுரிக்கிறேன். இனி…

பேராசிரியர் அவர்களுக்கு,

நான் ஒரு குறிப்பிட்ட பல்கலையில் பட்ட படிப்பில் சேர்வதற்கு முன் தங்களின் ஆலோசனையைப் பெற விரும்புகிறேன். அப்பல்கலை, பட்டபடிப்பு, பாடத்திட்டம் பற்றிய குறிப்பேட்டை இதனுடன் அனுப்பியிருக்கிறேன். தங்களின் கருத்தினைக் கேட்க அலைபேசியில் அழைக்கலாம் எனில், அலைபேசி எண், எப்போது அழைக்கலாம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.இப்படிக்கு,
சூ. தோமஸ் சூசன்
உயிர்மை வாசகன் &
முகநூல் நண்பன்

அன்புள்ள தோமஸ் சூசன்
பாடத்திட்டத்தை பார்த்தேன். பழைய ஒன்று தான். ஆனால் பொதுவாக அது எப்படி இருந்தாலும் ஒரு துறையை கல்லூரி அளவில் ஆழமாகவோ ஆத்மார்த்தமாகவோ கற்பது சிரமம். கல்லூரிப் படிப்பு படிப்புக்கானது அல்ல. படிப்பை நாம் தான் சுயமாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் கல்லூரி நமக்கு கல்விச் சூழலில் மூழ்குவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை அளிக்க வேண்டும். அங்குள்ள பண்பாட்டில் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும். எனக்கு காலிகட் பல்கலையை பற்றித் தெரியாது. ஆனால் எந்த கல்லூரியை தேரும் முன்னரும் பாடத்திட்டத்தை பார்க்காதீர்கள் - பாரம்பரியத்தை பாருங்கள். நீண்ட பாரம்பரியம் கொண்ட கல்லூரிகள் சட்டதிட்டங்களை விட சுதந்திரமான ஆளுமை வளர்ச்சிக்கு அதிக இடம் அளிக்கும்.

விரிவாக சொல்வதானால் சாக்ரடீஸ் தன் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தது போல் நம் கல்லூரி வகுப்புகள் இராது. சாக்ரடீஸ் விவாதங்கள் வழி கருத்துக்களை வளர்த்தெடுக்க விரும்பினார். அதற்கு நான்கு அடிப்படை தேவைகள்:

1, குறைவான எண்ணிக்கையில் ஆர்வமுள்ள மாணவர்கள்
2. நேரக் கட்டுப்பாடு இல்லாமல் வகுப்பை எப்போதும் ஆரம்பித்து எப்போதும் முடிக்கும் சாத்தியம்
3. பாடத்திட்டம் இல்லாமல் ஆசிரியரின் தீட்சண்ணியப்படி வகுப்பை நடத்தும் சுதந்திரம் (மேலை நாடுகளில் சிந்தனையாளர்களே தம் பாடத்திட்டத்தை வகுத்த வரலாறு உண்டு. உ.தா: பூக்கோ)
4. சொந்த கருத்துக்களும் ஆழமான வாசிப்பும் கொண்ட ஆசிரியர்கள்

நம் கல்லூரிகளில் மேற்சொன்ன நான்கில் ஏதாவது மூன்று இருக்காது. பாடத்தை முடிப்பதும், மாணவர்களை கட்டுப்பாட்டில் வைப்பதுமே ஆசிரியரின் பிரதான அக்கறையாக இருக்கும்.

மேலும் கல்லூரிப் படிப்பு மிக மிக விரிவானது. தத்துவம், இலக்கியம், வரலாறு, சமூக அறிவியல் துறைகள் எல்லாம் மிக மிக பரந்து பட்டவை. கராறாய் பாடத்திட்டத்தின் படி நீங்கள் ஒரு வரலாற்று பூர்வமான புரிதலை மட்டுமே எந்த துறை பற்றியும் பெற முடியும். அதாவது ஒரு டி.வி மேனுவலை வாசிப்பது போல – ஆனால் டி.வி எப்படி இயங்குகிறது என உங்களுக்கு ஒரு போதும் தெரியாமல் இருக்கும்.
ஒரு துறையை ஆழமாக படிக்க விரும்புபவர்கள் அதனால் அதற்கு முதலில் ஒரு கல்லூரியையும் அதன் ஆசிரியர்களையும் நம்பி செல்லக் கூடாது. கணிசமான வகுப்புகள் சராசரி மாணவர்களை பரீட்சையில் தேற வைக்கும் நோக்கில் தான் நடக்கும். திறமையான மாணவர்கள் கைவிடப்பட்டதாகவே உணர்வர்.
தொடர்ந்து ஐந்தில் இருந்து பத்து வருடங்கள் தொடர்ந்து சுயமாய் பயில்வதன் வழி தான் நீங்கள் ஒரு துறையை சரியாய் அறிய முடியும். பெரும்பாலும் உங்கள் ஆசிரியர் காட்டுகிற வழிக்கு நேர்மாறாக நீங்க போக வேண்டி இருக்கும்.
நான் இளங்கலை ஆங்கிலம் படிக்கும் போது முதல் மூன்று மாதங்கள் வகுப்புகளுக்கு சென்று தேவையான வருகைகளை பெற்று விடுவேன். அடுத்த மூன்று மாதங்கள் என் விருப்பத்திற்கு ஏற்ப வகுப்புகளுக்கு தேர்ந்தெடுத்து செல்வேன். வீணான ஆசிரியர்களின் வகுப்பு என்றால் நூலகம் செல்வேன் அல்லது என்.டி ராஜ்குமார் போன்ற கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள் வீட்டுக்கு அல்லது ஜெயமோகன் அலுவலகம் போய் இலக்கியம் பேசி கேட்டுக் கொண்டிருப்பேன். நான் இலக்கியம் பற்றி கணிசமாக கல்லூரிக்கு வெளியே தான் கற்றுக் கொண்டேன்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலை படிக்கும் போது இலக்கிய நண்பர் வட்டம் இல்லை. ஆனால் அந்த பிரம்மாண்டமான கல்லூரியின் சிறப்பு நீங்கள் கண்காணிக்கப்பட மாட்டீர்கள் என்பது. தத்துவம், வரலாறு ஆகிய துறைகளின் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளலாம். கல்லூரி வனத்தில் அமர்ந்து புத்தகம் வாசிக்கலாம்; நண்பர்களுடன் விவாதிக்கலாம். சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் விரும்பும் ஒரு அபாரமான தனிமை அங்கு எனக்கு வாய்த்தது. கட்டுப்படுத்தப்படாமல் சும்மா இருப்பது மாணவர்களுக்கு மிக அவசியம். அது அவர்களின் புது சிந்தனை வளர்ச்சிக்கு வாசல்களை திறக்கும். பின்னர் நான் சில இடைநிலை கல்லூரிகளில் வேலை செய்த போது இந்த வித்தியாசத்தை குறிப்பாக உணர்ந்தேன். மாணவர்கள் வகுப்பை விட்டு வேறெங்கு போனாலும் எளிதில் கண்காணிக்கப்படுவார்கள். கராறான சட்டதிட்டங்கள் அவர்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்காது. மாணவர்கள் எல்லா வகுப்புகளிலும் அமர்வதை ஒரு அபத்தமாக சீரழிவாகத் தான் பார்க்கிறேன். தொடர்ந்து ஐந்து மணிநேரங்கள் யாராவது பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பது ஒரு பாலியல் வன்கொடுமைக்கு சமம். அதுவும் கலைத்துறைகளில் இந்த வகை கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை.
கல்லூரி என்பது சுயகல்விக்கான இடம். பேராசிரியர்கள் வழிகட்டுபவர்கள், அவ்வளவு தான். அங்கு நீங்கள் புது நண்பர்களை கண்டடைந்து நிறைய விவாதித்து கற்றுக் கொள்ள வேண்டும். வெற்று அரட்டைகள் கூட என்னைப் பொறுத்தவரையில் ஆசிரியர் மட்டுமே பேசும் வகுப்புகளுக்கு மேல். ஏனென்றால் கல்லூரியை நீங்கிய பின் நீங்கள் நிரந்தரமாக மௌனமாக போகிறீர்கள். அலுவலகம், வீடு, திரையரங்கு, டி.வி என நீங்கள் பேச ஆளோ சந்தர்ப்பமோ இனி வாய்க்காது. உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைகான பேச்சையும் கல்லூரியில் தான் நீங்கள் பேசித் தீர்க்க வேண்டும். பேச்சு ஒரு வாழ்க்கைக் கலை. பேசத் தெரியாதவர்கள் வாழ்க்கையையும் சேர்த்தே இழக்கிறார்கள்.

ஆரம்பித்து பத்து அல்லது இருபது வருடங்களான கல்லூரிகள் எப்போதும் பதற்றமாகவே இருக்கும். ஏனென்றால் அவற்றுக்கு என ஒரு பாரம்பரியம் இல்லை. ஆகத்திறமையான ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கு சேர மாட்டார்கள். ஆக வழிகாட்ட அக்கல்லூரிகளுக்கு ஆளுமைகளும் இல்லை. விளைவாக இக்கல்லூரிகள் விதிமுறைகளை கடுமையாக்குவதிலும் சடங்குகளை பின்பற்றுவதிலுமோ அதிக ஆர்வம் காட்டும். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு கேடானவை இக்கல்லூரிகள்.

ஆனால் நீண்ட பாரம்பரியம் கொண்ட சென்னை பல்கலைக்கழகம், சென்னை கிறித்துவக் கல்லூரி அல்லது ஜெ.என்.யூ போன்ற இடங்கள் இயல்பாகவே அமைதியாக நம்பிக்கையோடு இயங்கும். நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் எனும் பதற்றத்தில் மாணவர்களின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்க மாட்டார்கள். மேலும் மாணவர்கள் தவறு செய்தாலோ அல்லது நிர்வாக ரீதியாக கோளாறுகள் ஏற்பட்டாலோ அவை அக்கல்லூரிகளின் வலுவான பிரம்மாண்டமான நிர்வாக அமைப்பு வழி திறமையாக எளிதாக கையாளப்படும். ஒரு இடைநிலைக் கல்லூரியில் மாணவர்கள் இடையே சண்டை வந்தால் எல்லோருக்கும் தெரிய வரும். ஆனால் ஒரு பெரிய கல்லூரியில் அது காற்றில் கரைந்து போகும். சிறுசிறு அதிர்வுகளே காலமும் பாரம்பரியமும் அமைப்பும் தாங்கிக் கொள்வதால் மாணவர்களுக்கு நடைமுறைக் கவலை இல்லாமல் அறிவின் உலகில் சஞ்சாரிப்பது எளிதாகும். சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்த காலத்தில் சென்னை மாநகருக்குள் சென்று வரும் போது இன்னொரு உலகத்துக்குள் புகுவது போல் இருக்கும். கல்லூரிக்குள் மாற்றமே அற்ற அமைதியான உறைந்த காலம் இருக்கும். ஆனால் மாநகரம் பதற்றமாக அவசரமாக சத்தமாக ஓடிக் கொண்டிருக்கும். நகரின் மையத்தில் உள்ள கல்லூரிகள் கல்விக்கான மன லயத்தை அழித்து விடும். ஒரு கல்லூரி ஒரு பெரும் ஆசிரமம் போல் குழந்தையின் தொட்டில் போல் இருக்க வேண்டும்.

கல்லூரி என்பது ஒரு வீடு போல. வீட்டிற்கு குடும்பச் சூழல் முக்கியம். அது போல் கல்லூரியிலும் படிப்பை விட மனிதச் சூழல் தான் அதிக முக்கியம்.
நன்றி
அன்புடன்
ஆர்.அபிலாஷ்

கூட இந்த இணைப்பில் வரும் One the Need for a Quiet College என்கிற அட்டகாசமான பகடிக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். வேளை வாய்க்கும் போது நானே இதை தமிழாக்கி பிரசுரிக்கிறேன்: http://www.gutenberg.ca/ebooks/leacock-model/leacock-model-00-h.html

No comments: