Saturday, December 28, 2013

கருணையற்ற அந்த பெண் - கீட்ஸ்


தனியாய் வெளிறிப் போய் அலையும்
போர் வீரனே
உன்னை வாட்டுவது என்ன?
ஏரியின் செட்ஜ் புற்கள் காய்ந்து போயின
பறவைகள் மௌனமாயின

துரதிர்ஷ்டம் பீடித்தவனாய் தளர்ந்து தோன்றும்
போர்வீரனே அப்படி உன்னை என்ன ஏங்க செய்கிறது?
அணிலின் பொந்து நிறைந்து வழிகிறது
அறுவடை முடிந்து விட்டது


பதற்றத்தின் ஈரமும் ஜுரத்தின் பனித்துளிகளும் கொண்டு
லில்லி மலர் போல் வெளுத்துப் போய் விட்டது உன் நெற்றி
உன் கன்னத்தில் ஒரு வாடிய ரோஜாவின் தோற்றம்
வேகமாய் காய்ந்து சருகாகும் ரோஜாவின் தோற்றம்

புல்வெளியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்,
தீராத அழகு – தேவதையின் மகள்,
நீள்கூந்தல், காற்றில் மிதக்கும் கால்கள்,
ஆவேசக் கண்கள்.
அவள் அணிய ஒரு மலர்க்கிரீடம் செய்தேன்,
கையணிகளும் பூக்களாலே செய்தேன்,
அவளை வாசத்தின் வளையத்தில் வைத்தேன்
என்னோடு சேர்கையில் கண்களையே பார்த்தாள்
இனிமையாய் முனகினாள்.

விரையும் என் புரவியில் வைத்தேன் அவளை,
பகல் எல்லாம் என் கண்முன் வேறேதையும் காணேன்
சதா அவள் பக்கவாட்டாய் சாய்ந்து என்னை நோக்கி
தேவதைப் பாடல்கள் பாடி வந்தாள்.

இனிய கிழங்களை கண்டு தந்தாள்
காட்டுத்தேனும் பனித்த அமிழ்தும் தந்தாள்
பின் ஒரு விநோத மொழியில்
தன் உண்மைக் காதலைச் சொன்னாள்.

மனம் லயித்து தூங்கச் செய்தாள்
அப்போது ஒரு கனவு வந்தது – கொடூரமான கனவு
குளிரில் உறையும் மலைச்சரிவில்
சமீபமாய் நான் கண்டேன் அக்கனவில்
வெளிறிய அரசர்களையும் இளவரசர்களையும்,
வெளிறிய வீரர்களும் நின்றனர், மரண சோகை அவர்களிடம் கண்டேன்
அவர்கள் கத்தினர் ”கருணையற்ற அந்த பெண்ணின் வசியத்தில் கட்டுண்டு இருக்கிறாய்”
அவர்களின் பட்டினி உதடுகளை அந்தி ஒளியில் கண்டேன்
குரூரமான எச்சரிக்கை அகலமாய் பிளந்து தோன்ற.

விழித்துப் பார்க்கையில் இங்கு
குளிர்ந்து உறையும் மலைச்சரிவில் நான்.

அதனாலே நான் அலைகிறேன்
தனியாய் சோகையாய்
செட்ஜ் புல் சருகாகி வந்தாலும்
பறவைகள் பாடலை மறந்தாலும்
குறிப்பு:
மனம் வாடும் போதெல்லாம் கீட்ஸின் La Belle Dame Sans Merci நாடோடிப் பாடலின் வரிகள் நினைவு வர முணுமுணுத்துக் கொள்வேன். ஏனோ இப்பாடல் என்னை மீண்டும் மீண்டும் ஆற்றுப்படுத்துகிறது. காதல் பாடல் போல் தோன்றினாலும் இதன் பின்னே உள்ள கைவிடப்பட்டவனின் வலி, நிராசை, காலத்தின் முன் நிர்கதியாய் நிற்பது போன்ற தனிமை ஆகியவை அனைவருக்கும் பொதுவானவை. இதில் வரும் தேவதைப் பெண் வாழ்க்கை அல்லது லட்சியங்களின்/நம்பிக்கைகளின் குறியீடு என புரிந்து கொள்கிறேன். அதனாலே இப்பாடல் மீள மீள ஈர்க்கிறது – ஒன்றுமில்லாமல் தனியாய் புற்கள் காய்ந்த ஏரிக்கரையில் நிற்பவனின் வலி மறக்க முடியாதது.
மேலும் இப்பாடல் என் கல்லூரிக் கால நினைவுகளோடும் தொடர்பு கொண்டது. பேராசிரியர் ஜனார்த்தனன் மிகுந்த லயிப்போடு கருணையற்ற பெண்ணின் வஞ்சகத்தை வாசித்த குரல் நினைவில் இருக்கிறது. அந்த மஞ்சள் அட்டை புத்தகமும், அதன் சொரசிர தாள்களும் கூட மறக்கவில்லை. எனக்கு மனம் கனக்கும் சில வேளைகளில் இரண்டு மூன்று தடவையாவது இதனை மொழியாக்கி தொலைத்திருக்கிறேன். இம்முறை பதிவிடுகிறேன்.

No comments: