Tuesday, December 17, 2013

தெய்வம் நின்று கொல்லும் (தொடர்ச்சி)நாள் 3
காட்சி 19


டீனின் அறை. தலைக்கட்டுடன் குமார், அவனது மனைவி, சில செவிலிகள் நிற்கிறார்கள்.
டீன்: “இது உனக்கு கடைசி வார்னிங் குமார். இதோட உன்னப்பத்தி ரெண்டாவது கம்பிளயிண்ட் வந்திருக்கு. ஆனால் உனக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்ல. அதோட சம்மந்தப்பட்ட பெண்கள் உனக்கு ஆதரவா தான் பேசி இருக்காங்க. ஸோ அதுனால் உனக்கு எதிரா எந்த ஆக்‌ஷனும் எடுக்கல. அது மட்டுமில்ல உன்னோட பொதுவான பிஹேவியர், வேலையில உன் ரெக்கார்டு நல்லா இருக்கு. பொதுவா நர்ஸஸ் மத்த ஸ்டாப் கூட உன்ன பத்தி நல்ல ரிபோர்ட் தான் குடுத்திருக்காங்க. உனக்கு இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு. குடும்பஸ்தனா ஒழுங்கா இருக்க பாரு”

குமார்: “சார் நான் எந்த தப்பும் பண்ணல. அந்த நர்ஸுக்கு என் மேல ஏதோ காண்டு. அன்னிக்கு நான் வீணா நர்ஸோட ரூம்ல எட்டிப் பார்த்தா சொன்னாங்க. ஆனா வீணா நர்ஸ எனக்கு தங்கச்சி மாரி. இப்போ இந்த சம்பவத்திலயும் நாம் சம்மந்தப்படலீங்க. எனக்கு பொண்ணுங்கன்னாலே ரொம்ப கூச்ச சுபாவம் சார். யார் கிட்ட வேணும்னா கேளுங்க.”
குமாரின் மனைவி: ”ஐயா அவரு எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டாருங்க. வீட்டாண்ட வந்து விசாரிச்சு பாத்தீங்கன்னா அவரப் பத்தி அவ்வளவு நல்ல விதமா சொல்லுவாங்க”
டீன்: “அது என் வேலையில்ல. ஏன் உன்னப்பத்தி மட்டும் இவ்வளவு கம்பிளயிண்ட்ஸ் வருது? இனிமே கவனமா இருந்துக்கோ”
குமார்: “சார் இந்த விசயத்தில் நான் தான் சார் பாதிக்கப்பட்டிருக்கேன். தலையில அஞ்சு தையல் போட்டிருக்காங்க சார். எப்போ பாத்தாலும் தலை வலி, தலை சுத்துது. என்னால கொஞ்ச நாளைக்கு டூட்டிக்கு வர முடியாது”
டீன்: ”கொஞ்ச நாளைக்கு நீ வராம இருக்கிறது தான் நல்லது. உனக்கு லீவ் பேய்மண்ட் தரச்சொல்றேன். அப்புறம் you can have free treatment here.”

காட்சி 20
மீண்டும் டீனின் அறை. டீன், டாக்டர் கணேஷ், வாணி, நதியாவின் அப்பா ஆகியோர்.
டாக்டர் கணேஷ் ஒரு கோப்பை டீனிடம் கொடுக்கிறார்: “சார் நான் நடத்துன டீடெயில்ட் ஸ்டடியோட ரிப்போர்ட் இது”
டீன்: “நியுரோலஜிஸ்ட் என்ன சொல்றார்?” என்றபடி ரிப்போர்ட்டை புரட்டி பார்க்கிறவர், “major neural disorder ஏதும் இல்லேங்குறார். பட் நதியாவுக்கு நினைவு மறதி அடிக்கடி வருது. That is to be noted. சரி what are your findings?”
கணேஷ்: ”மூணு நாள் அப்சர்வேஷன்ல வச்சிருந்து கவனிச்சேன். ஒரு psychiatrist கூட one-to-one செஷன் கூட நடத்துனோம். அப்புறம் நான் நதியாவோட பேரண்ட்ஸ், அவளோட பிரண்ட்ஸ் இவங்க கிட்டயும் விசாரிச்சேன். என்னோட இன்வெஸ்டிகேஷனோட முடிவு என்னன்னா நதியா ரொம்ப நாளா bipolar disorderனால அவதிப்பட்டுக்கிட்டு வராங்க. இப்போ தான் சிம்ப்டம்ஸ் மோசமாகி வயலண்ட் பிஹேவியரா வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு. ஆனால் இந்த நோயோட ஆரம்ப அறிகுறிகள் நதியாவுக்கு ரொம்ப சின்ன வயசில இருந்தே தெரிய வந்திருக்கு. குறிப்பா அவளுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது. அப்போது ஒரு விபத்து நடந்துது. In fact it has been quite a revelation for us. நதியா ஏன் இவ்வளவு கோபப்படுறாங்க, ஆண்களை வெறுக்கிறாங்க என்கிறதுக்கு ஒரு பதில் கிடைச்சுது”
ஒரு சிறு பெண் குழந்தை ஒரு நீண்ட வராந்தாவின் இருள் படிந்த முடிவில் அமர்ந்திருக்கிறது. அது பயந்து ஒடுங்கிப் போய் இருக்கிறது. கேமிரா அவளை நெருங்கி வருகிறது. நெருங்கி வர வர அவள் ஒடுங்கி கண்ணை மூடுகிறாள். காமிர குளோசப்பில் வர ஒரு கை அவளை பற்றுகிறது. அவள் கத்தி அலறுகிறாள். கணேஷின் குரல் பின்னணியில்.
“நதியாவோட குடும்பம் ஒரு கூட்டு குடும்பமா இருந்து. நெறைய சொந்தக்காரங்க, பெரியவங்க சேர்ந்து வாழ்ந்தாங்க. நதியாவோட அம்மா அவளுக்கு ஒரு வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க. அவ்வளவு பேரு சேர்ந்து வாழ்ந்த வீட்டில நதியாவை சரியா பார்த்துக்க ஆளில்லை. நதியாவோட அப்பா பிஸினஸ் விசயமா டூர்ல் இருப்பாரு. ஸோ அவராலயும் அவளை சரியா கவனிக்க முடியல. அதுனால அவளுக்கு சின்ன வயசில இருந்தே தன்னை யாரும் சரியா கவனிக்கல, அதனால் தன்னை யாருக்கும் பிடிக்காது அப்டீங்கிற எண்ணம் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. பிறகு அவங்க சொந்தத்தில் ,மூத்த ஒருத்தர், நதியாவோட அங்கிள் அவளை sexual abuse பண்ணுனாரு. இது இது ரொம்ப நாளா நடந்து வந்திருக்கு, ஆனால் ஒரு நாள் நிலைமை ரொம்ப மோசமாகி அவள் bleed பண்ண ஆரம்பிச்ச போது தான் எல்லாருக்கு விசயம் தெரிய வந்துது. ஆனால் கூட்டுக் குடும்பங்கிறதுனாலயும், அந்த ஆள் ஒரு மூத்தவர், எல்லாரும் மதிக்கக் கூடிய வருங்கிறதனாலயும் அவருக்கு எதிரா போலீஸ்ல கம்பிளயிண்ட் கொடுக்கல. குடும்பத்துக்கு உள்ளாடியே விசாரிச்சு முடிச்சிட்டாங்க. மூத்தவங்கள மீறி நதியாவோட அப்பாவாலயும் போலீஸுக்கு போக முடியல. வளர்ந்த பின்னாடி நதியாவால இந்த சம்பவத்தை மறக்க முடியல. தனக்கு ஆதரவா யாரும் இல்ல, தனக்கு நடந்த கொடுமைக்கு பழிவாங்குறதுக்கு யாரும் முன்வரலை அப்டீங்கிறது அவளுக்கு ரொம்ப ஆதங்கத்தை ஏற்படுத்துச்சு. சொந்த அப்பாவே தனக்கு சப்போர்ட் பண்ணல அப்டீங்கிறது அவளை ரொம்ப காயப்படுத்திருச்சு. முதல்ல அவ தன்னோட ஸ்கூல் டீச்சர்ட்ட தனக்கு நடந்ததை சொல்லி அழுதிருக்கா, அடுத்து ஸ்கூல்ல நிறைய பேர்கிட்ட இதையே சொல்ல ஸ்கூல் மேனேஜ்மண்ட் அவ வீட்டில ரிப்போர்ப் பண்ணினாங்க. அதோட அவளை ஸ்கூலை நிறுத்தி ரிஸடின்ஷியல் ஸ்கூலுக்கு அனுப்பி இருக்காங்க. அங்க படிப்பு முடிச்சதுக்கு அப்புறமா நதியா தானே வேலை பார்த்து மேற்படிப்பை தொடர்ந்தா. நர்ஸா வேலை கிடைச்சதுக்கு அப்புறம் அவ தன்னோட அப்பாவோட எல்லா தொடர்பையும் முறிச்சிட்டு தனியா வாழ ஆரம்பிச்சா. இத்தனையும் எனக்கு நதியா அப்பா சொல்லி தான் தெரியும்”
நதியா அப்பா: “ஆமா, ஆனா அந்த வயசுல எனக்கு நதியாவை இது இவ்வளவு பாதிக்குமுன்னு தெரியாது. என் குடும்பத்தை மீறி என்னால எதுவும் பண்ண முடியல. ஆனால் அதுக்கு நதியா கிட்ட எவ்வளவோ முறை மன்னிப்புன் கேட்டுட்டேன். அவ மனசுக்குள்ள அன்னிக்கு நடந்த கொடுமைக்கெல்லாம் நானும் தான் காரணமா இருக்கேன். அவன் என்னை பார்க்குறதுக்கு என் கூட பேசுறதுக்கு வெறுக்கிறா.” அவருக்கு குரல் தழுதழுக்கிறது. “நான் அவளை சின்ன வயசில சரியா பாத்துக்கல. அது என் தப்பு தான். அவ அம்மா சின்ன வயசில போகாம இருந்திருந்தா இப்பிடி எல்லாம் நடந்திருக்காது”
கணேஷ்: “சின்ன வயசில நதியாவுக்கு அவ்வளவா பிரண்ட்ஸ் யாரும் இருந்தது இல்ல. ரொம்ப மூடியான தனிமையை விரும்புற குழந்தையா இருந்திருக்கா. Probably இந்த நோய் அப்போலேருந்தே ஆரம்பிச்சிருக்கணும். ஆனால் அது முழுமையா அவளை தாக்கினது அவளது விவாகரத்து ஆன போது தான்”
டீன்: “அவ கல்யாணம் ஆனவளா?”
கணேஷ்: “ஆமா அந்த உண்மை இங்க யாருக்கும் தெரியாது. வேணியை தவிர. வேணி தான் இந்த விசயம் பத்தின தகவல்களை எனக்கு தந்தது. ஆனால் வாணிக்கே முழுகதையும் தெரியாது. நதியாவோட காலேஜ் மேட் தான் அந்த பையன். ரொம்ப தீவிரமான லவ். நதியாவோட வாழ்க்கையில அவளுக்கு கிடைச்ச முதல் true relationship, genuine love. அதுனால் அவ அவன் கிட்ட ரொம்பவே நெருக்கமா இருந்தா. வேணி சொல்றது படி அவன் ஒரு பைலட். எந்த ஊருன்னு அவளுக்கு தெரியாது. அவங்க கல்யாணம் எப்ப ஆனதுன்னும் தெரியாது. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறமா அவளுக்கு தன்னை முழுசா தன் கணவனுக்கு தரதுல சிக்கல் இருந்துது. அந்த மாதிரி சமயத்துல அவ ரொம்ப பயப்பட ஆரம்பிச்சா, அது தான் அவங்களுக்கு இடையே ஏற்பட்ட எல்லா சண்டைகளுக்கும் காரணம்.”
வேணி: “”இது நதியா என்னை நம்பி எங்கிட்ட மட்டும் சொன்ன சில அந்தரங்கமான விசயங்கள். இதை நான் அவளோட ட்ரீட்மெண்டுக்கு உதவுங்கிறதுனால தான் வெளியே சொல்ல துணிஞ்சேன். ஆனால் இந்த விசயங்களோ இந்த ரிப்போர்ட்டோ confidential ஆ இருக்கணும். வெளியே லீக் ஆகக் கூடாது ப்ளீஸ் டாக்டர்”
கணேஷ்: “நிச்சயமா நதியாவோட ரிக்கவரிக்கு இந்த உண்மைகள் உதவும். நதியாவுக்கு ஏன் டைவர்ஸ் ஆச்சுன்னு சொல்ல முடியுமா?”
வேணி: “ஆக்சுவலி அவங்க விவாகரத்து பண்ணினாங்களான்னு எனக்கு தெரியாது. நதியா சொன்னது படி அவளோட சின்ன வயசு sexual abuse பத்தி ஒரு நாள் அவன் கிட்ட சொல்லி இருக்கா. அவ எதிர்பார்த்த மாதிரி அவனால அதை சாதாரணமா எடுத்துக்க முடியல. அவன அவளை கெட்டுப் போன பொண்ணா பார்க்க ஆரம்பிச்சான். ஒருநாள் சொல்லிக்காம ஊருக்கு போய் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான்”
கணேஷ்: “ஸோ நதியாவோட வாழ்க்கையில இது ரெண்டாவது துரோகம். தன்னை முதல்ல அப்பா கைவிட்டாரு, பிறகு புருஷன். அதோட சேர்ந்து அந்த சின்ன வயசு அனுபவத்தோட அவமானம் பயம் எல்லாம் சேர்ந்து அவளுக்கு ஆம்பிளைங்க மேல ஒரு தீராத கோபம், வெறி, குரோதம் வந்திருச்சு. அவளுக்கு தான் பார்க்கிற ஆம்பிளைங்க எல்லாரும் அவளை சின்ன வயசுல பலாத்காரம் பண்ணின அந்த அங்கிள், அவரை தண்டிக்காத அப்பா, அப்பாவை மாதிரியே தனக்கு சப்போர்ட் பண்ணாம விட்டுட்டு ஓடின கணவன் இவங்களோட மொத்த உருவம் தான். எந்த ஆம்பிளைய பார்த்தாலும் சந்தேகம், கோவம், பயம். இது தான் அவளை இந்த bipolar depressionஐ நோக்கி தள்ளி இருக்கு. She was initially a victim, but now she is victimizing others”
வேணி: “ஆனால் நதியா இந்த ஆஸ்பத்திரியில மதிக்கிற நேசிக்கிற ஒரே ஆம்பிளை இருக்காரு. அது டாக்டர் கணேஷ்”
டீன்: “அது எப்படி?”
கணேஷ்: “அது டீயை வடிகட்டும் போது டீத்தூளும் டிகாஷனும் தனித்தனியா பிரியிற மாதிரி தான். அவளோட அப்பாவோட எல்லா மோசமான குணங்களும், தட் இஸ் அவ மோசமா நினைக்கிற குணங்களையும் குமார் மாதிரி சிலர்கிட்ட பாக்குறா. அவ கோபப்பட்டு அடிக்கும் போது குமாரை இல்ல அப்பாவை, அவளை பலாத்காரம் பண்ணி அங்கிளை தான் அடிக்கிறா. ஆனால் அதே வேளையில டீயோட டிகாஷன் மாதிரி அவள் அப்பா கிட்ட நேசிக்கிற நல்ல விசயங்களை எங்கிட்ட பார்க்கிறா. நான் அவளுக்கு தூய்மையான அன்போட உருவம்”
டீன்: “now that is some love. குமார் எந்தளவுக்கு அன்லக்கியோ நீ அந்தளவுக்கு லக்கீ கணேஷ். ஸோ எல்லாமே அவளோட பிரமை தான், குமார் வேணியோட ரூம்ல எட்டிப் பார்த்தது, நர்ஸ் குவாட்டர்ஸில ஒரு ஆள் நுழைஞ்சது, வேணியை கொல்ல பார்த்தது, அப்புறம் recently குமார் அந்த பேஷண்ட் குட்ட தப்பா நடந்துக்கிட்டதா சொன்னது இதெல்லாமே அவளோட கற்பனை, மனப்பிராந்தி”
கணேஷ்: “absolutely. அத்தனையும் அவளோட கற்பனை தான். இங்கே யாருக்கும் எந்த ஆபத்தும் இல்ல, எல்லாம் நதியாவோட கற்பனையில தான் நடந்திருக்கு. நாம எல்லாம அவளோட screenplayஇல சின்ன சின்ன characters”
டீன்: “நீ தான் அந்த கதையில ஒரே ரோமியோ. பாவம் குமாருக்கு மண்டை உடைஞ்சது மிச்சம். கணேஷ் நர்ஸஸ் அத்தனை பேரையும் ஒரு மீட்டிங் கூப்பிட்டு இந்த உண்மை அத்தனையையும் சொல்லீடுங்க. எல்லாரும் ரொம்ப பயந்து போயிருப்பாங்க. இப்பவே பத்து பேருக்கு மேல குவாட்டர்ஸை காலி பண்ணீட்டாங்க. அவங்க கிட்ட இங்க எந்த ஆபத்தும் இல்ல, எல்லாமே safeனு சொல்லுங்க.”
கணேஷ்: “சரி”
டீன் நதியாவின் அப்பாவை பார்த்து: “உங்க பொண்ணுக்கு இங்கியே நாங்க முழு ட்ரீட்மெண்ட் தரோம். நீங்க கவலைப்படாதீங்க. அவ குணமாயிட்டான்னா once we are convinced she is fully well அவ நிச்சயமா திரும்ப வேலையில ஜாயின் பண்ணலாம்”

காட்சி 21
நர்ஸிங் குவாட்டர்ஸ். நள்ளிரவு. வேணி தூங்கிக் கொண்டிருக்கிறாள். யாரோ கழுத்தை இறுக்குவதாக கனவு. அவள் கனவில் கழுத்தைப் பற்றியபடி துடிக்கிறாள்: “அம்மா அம்மா விடு விடு ஐயோ ஆ”. சட்டென்று வீறிட்டபடி எழுகிறாள். அவளது வலது பக்கத்து படுக்கை நதியாவினுடையது காலியாக உள்ளது. அதன் பக்கமாய் இன்னொரு படுக்கையில் ஜோவினா அசந்து தூங்குகிறாள். வேணிக்கு அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. அவள் விழித்துக் கிடக்கிறாள். அப்போது ஜன்னலில் ஒரு நிழல் கடந்து போகிறது. தொடர்ந்து தொப்பென்று ஒரு சத்தம் கேட்கிறது. அவளுக்கு பயமாகிறது. வேர்க்கிறது. பயத்தில் பக்கத்தில் உள்ள ஜோவினாவை எழுப்ப பார்க்கிறாள். ஜோவினா எழும்பவில்லை. அவளாக எழுந்து வெளியே போய் பார்க்கிறாள். யாரும் இல்லை. மீண்டும் ஒரு சத்தம்.
காட்சி 22
அவள் காரிடாரில் நடந்து போய் பார்க்கிறாள். காரிடார் முடிவில் உள்ள விளக்கு சட்டென்று அணைகிறது. வேணி அப்படியே நிற்கிறாள்: “யாரது?”. பதில் இல்லை. அவள் இன்னும் கொஞ்சம் நடக்கிறாள். அப்போது அவளுக்கு பின்னால் உள்ள விளக்கும் அணைகிறது. திரும்பி பார்க்கிறாள். இப்போது அவளைச் சுற்றி முழுக்க இருட்டு. அவள் நடக்கிறாள். யாரோ பின்னாடி வரும் சத்தம். பயந்து ஓடுகிறாள். தடுக்கி விழுகிறாள். இருட்டில் தரையை துழாவி பார்க்கிறாள். பின்னால் யாரோ சங்கிலியை தரையில் இழுபட வரும் ஓசை. வேணி பயந்து எழ முயற்சிக்கையில் அவள் தலையில் யாரோ கட்டையால் அடிக்கிறான். அடுத்து அவள் வாயை பொத்தி தூக்குகிறான். ஒரு கை அவள் வாய்க்குள் துணியை திணித்து ஒரு டேப்பால் வாயை ஒட்டுகிறது. அவளை தூக்கி தோளில் இட்டபடி அந்த உருவம் நடக்கிறது.
இருட்டான பாத்ரூம். வேணி அங்கு கிடத்தப்படுகிறாள். அந்த உருவம் அவள் மீது பாய் வேணி சட்டென்று அவனை தள்ளி விட்டு தட்டு தடுமாறி ஓடுகிறாள். பாத்ரூமுக்கு வெளியே வந்து ஒளிந்து நின்று மூச்சு வாங்குகிறாள். தன் வாய்க்கட்டை அவிழ்க்க முயல்கிறாள். வாயில் இருந்து துணியை அவள் எடுத்து விட்டு கத்த ஆரம்பிக்கும் முன் சட்டென்று அவள் பின்னிருந்து ஒரு இரும்பு சங்கிலி கழுத்தில் விழுந்து முறுக்க ஆரம்பிக்கிறது. அவள் துடிதுடிக்க அவளை இருட்டான ஒரு ஆள் கழுத்தில் கட்டி தரதரவென இழுத்து போகிறான். அவன் ஒரு கட்டையால் அவள் மண்டையை அடிக்கிறான். துடித்துக் கொண்டிருக்கும் அவள் கால்கள் அமைதியாகின்றன. கழுத்தில் இறுகிக் கொண்டிருக்கும் சங்கிலியோடு அவளை தொப்பென்று கீழே போடுகிறான். அவள் உடலை அவன் நின்று பார்த்துக் கொண்டிருக்க ஷாட் பின்னாடி போய் மங்குகிறது.
காட்சி 23
ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் வேணி கிடக்கிறாள். மூன்று டாக்டர்களும் சில நர்ஸுகளும் அவளை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு பரபரப்பாக நர்ஸுகள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். வேணியின் தோழி நர்ஸுகள் சிலர் சுவரில் சாய்ந்து நின்று அழுது கொண்டிருக்கிறார்கள். டீன், கணேஷ் உள்ளிட்ட சில டாக்டர்கள் சூழ, வேகமாக நடந்து அங்கு வருகிறார். அவர் வேணியின் அருகே போகிறார்.
 வேணியின் தலையிலும் கழுத்திலும் கட்டு போட்டிருக்கிறது. தனித்தனியாக ரத்தமும், சலைனும் டியூபுகளில் போகிறது. இதயத் துடிப்பு, உடலின் இன்னபிற நிலைகளை தொடர்ச்சியாக தெரிவிக்கும் கருவிகள் அவளுடலில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. டீன் அவருக்கு தரப்படுகிற மருத்துவ அறிக்கையை படிக்கிறார். இடையே ஒரு சின்ன ஏப்பம் விடுகிறார்.
டீன் கணேஷிடம்: “கேண்டீன் பொங்கல்ல டால்டா ஓவரா போடறான், அப்புறம் சாம்பார் சரியா கொதிக்காத பச்சை டேஸ்டு வருது. வயத்தை புரட்டுது” இன்னொரு ஏப்பம்.
கணேஷ்: “யு ஆர் ரைட் சார்”
டீன் மீண்டும் ரிப்போர்ட்டை படித்தபடியே: “கான்டீன் மானேஜர்கிட்ட பேசனும்” அடுத்து வேணியை பார்த்துக் கொண்டிருக்கும் டாக்டரை நோக்கி “…ம்ம்ம் brain stem contusion injury. ம்ம்ம் multiple microhemorrhages. சி.டி ஸ்கேன் அனுப்பிட்டீங்களா? அனுப்புடீங்க. மதியத்துக்குள்ள எனக்கு ஸ்கேன் ரிப்போர்ட் வேணும் ”
டாக்டர்: “ஒகெ சார். மூளையில வீக்கம் ஏற்பட்டுருக்குன்னு நெனக்கிறேன். அதுனால தான் பேஷண்ட் உடனே கோமாவுக்கு போய்ட்டாங்க”
டீன்: “எந்த லெவல்?” என்றபடி டீன் வீணாவின் முகத்தின் முன் விரல் சொடுக்குகிறார்.
டாக்டர்: “லெவல் 2”
டீன்: “வீணா ஸீ ஹியர், can you hear me?” அவர் வீணாவின் முகத்தின் முன் கையை அசைக்கிறார். வீணா கண்களை திறந்தபடி இருக்கிறாள். முகத்தில் சில சலனங்கள். இமைகள் சில முறை துடிக்கின்றன. ஒரு முறை கண்களை திறந்து மூடுகிறாள்.
டீன்: “that’s good. அவளால அடையாளம் காண முடியுது.”
டாக்டர்: “ஐ திங்க் அவளால உங்களை பார்க்க முடியாது. ஒருவேளை அரைகுறையா மங்கலா பார்க்க முடியலாம். May be she is partially contically blind”
டீன்: “இஸ் இட். இன்னும் நிறைய ஸ்டிமுலஸ் குடுங்க. அவளோட பிரண்ட்ஸ், அப்பா அம்மா, சொந்தக்காரங்க யாரையாவது வந்து பக்கத்துல நிக்க வைங்க. அவ ரெஸ்பாண்ட் பண்ண சான்ஸ் இருக்கு. அப்புறம் Cause? எதுனாலன்னு உங்களுக்கு எதாவது ஊகம் இருக்கா?”
டாக்டர் மெல்ல கசப்பாய் புன்னகைத்தபடி தோள்களை விரிக்கிறார். “காலையில பாத்ரூம் பக்கத்தில கிடந்திருக்காங்க. முதல்ல இவங்களை பார்த்த நர்ஸ் ஓரளவு வாணி அப்போ கான்ஷ்யஸா இருந்ததா சொல்றாங்க. அப்போ அவங்க கோமா லெவல் 5ல இருந்திருக்கலாம். வலியில அழுதிருக்காங்க, ஆனால் அவங்களால சத்தமா கத்த முடியல. obviously தொண்டை உடைஞ்சிருக்கு, அதுனால வேணி ரொம்ப நேரமா கத்திக்கிட்டு இருந்திருக்காங்க, ஆனால் ரொம்ப மெல்ல சத்தம் வந்திருக்கு. யாருக்கும் கேட்கல.” வாணியின் கழுத்தை சுட்டி சொல்கிறார்: “asphyxiation. கழுத்தை கயிறு இல்ல வேற ஏதோ ஒண்ணால நெரிச்சிருக்கலாம். அதுனால மூளைக்கு போற ஆக்ஸிஜன் கட் ஆகி …”
டீன்: “ஸோ நீங்க இது ஒரு தாக்குதல்னு ஊகிக்கிறீங்க. ஹெட் இஞ்சுவரி பார்த்து எனக்கு வந்த ரிப்போர்ட் வேணி பாத்ரூம்ல விழுந்து அடிபட்டிருக்குன்னு தான். அதனால கூட தலை வேகமா தரையில போய் அடிச்ச ஹீமரெஜ் வந்திருக்கலாமே? இந்த மூளை வீக்கம் கூட அதுனால ஆகி இருக்கலாம். ஒருவேளை ரத்தம் கட்டி இருக்கலாம்.”  அவர் கணேஷை பார்த்து சொல்கிறார்: “பொதுவா ஆக்ஸிடெண்ட் கேஸஸ் எல்லாம் அப்பிடித் தானே”. கணேஷ் ஆமோதிச்சு தலையாட்டுகிறார்.
டாக்டர்: “இருக்கலாம். பட் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுக்குழல் கட்டாயிருக்கு. அது தான் பிரதான cause. எனக்கு இது விபத்து இல்லன்னு தோணுறதுக்கு அது தான் காரணம்.”
டீன்: “ஓ ஒகெ. தூக்குப் போட்டு தற்கொலை பண்ண பார்த்தா கூட தடயம் இல்லியே. யாராவது கொள்ளைக்காரங்க கூட வந்து தாக்கி இருக்கலாம்.”
டாக்டர் மீண்டும் கசப்பாய் புன்னகைத்தபடி: “வேணியை கொண்டு வந்த நர்ஸஸ் இது ஒரு ரேப்னு நெனக்கிறாங்க.”
டீன்: “நோ நோ நீங்க அப்பிடி திடுதிப்புன்னு முடிவுக்கு வரக் கூடாது. வெளியே பல புரளி இருக்கும். வேணி ஒரு பொண்ணு. அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுது. அவ எதிர்காலத்தை நாம கருதணும். அது மட்டுமில்ல பலாத்காரமுன்னா உடம்புல வேற காயங்கள், scratches, bruises இருக்கணுமே. இது பார்க்க அப்பிடி தெரியல”
டாக்டர்: “வேணியை முழுக்க செயலிழக்க வச்சுட்டு பலாத்காரம் பண்ணி இருக்கலாம். அது தான் என் சந்தேகமும்.”
டீன்: “no no don’t speculate”
டாக்டர்: “சார் நானே இதை வெளியே சொல்லணுமா மறைச்சுடலாமான்னு பார்க்குறேன். அவளுக்கு கீழே கடுமையான ரத்தப் போக்கு இருக்கு. பிறப்புறுப்பு சிதைஞ்சிருக்கு”
டீன் முகம் சுளித்தபடி: “டெரிபிள். கடவுளே. ஆனால் டாக்டர் நாம இதையெல்லாம் ரிப்போர்ட் பண்ணனுமான்னு யோசிக்கணும். ஒரு பொண்ணோட எதிர்காலம் நம்ம கையில இருக்கு. போலீஸுக்கு கொடுக்க வேண்டிய ரிப்போர்ட்டை finalise பண்றதுக்கு முன்னாடி என்ன வந்து பாருங்க.”
அங்கிருந்து கிளம்பும் அவர் சட்டென்று திரும்பி “நாம பேசினதெல்லாம் பேஷண்டுக்கு கேட்டிருக்குமா? Can she hear?”
டாக்டர்: “அவளோட மனசுல எங்கேயோ ஆழத்தில நாம சொல்றதை அவ கேட்கிறா புரிஞ்சிக்கிறா”
டீன்: “ச்சே, நான் அதை யோசிக்கல. Poor girl. சில வேளை இப்பிடி பல கேஸ்களை பார்த்து பார்த்து நம்ம முன்னாடி இருக்கிறது ரத்தமும் சதையுமான உணர்ச்சியுள்ள ஒரு மனுஷன்னு மறந்து போகுது.” அவர் வேணியின் நெற்றியை தொட்டு சொல்கிறார்: ”I am sorry for you dear”. அவள் ஒரு முறை கண்ணசைக்கிறாள்.
ஒரு நர்ஸ் வந்து டீனிடம் சொல்கிறாள்: “டாக்டர் இன்ஸ்பெக்டர் வெயிட் பண்றார். பிரஸ்ல இருந்து சில பேர் வந்திருக்காங்க. வேணியோட படம் ஏதாவது இருந்தா கேட்குறாங்க. குடுக்கவா?”
டீன்: “வாட், பிரஸ்ஸா? அவங்களுக்கு யார் சொன்னது?”
நர்ஸ்: “தெரியல டாக்டர். வேணியோட பர்ஸில இருந்து ஒரு படம் கிடைச்சுது. பாஸ்போர்ட் சைஸ். கொஞ்சம் பழைய படம் தான். கொடுக்கவா?”
டீன் கோபத்தில் கத்துகிறார்: “நோ நோ. யாரும் இந்த விசயம் பத்தி வெளியே பேசக் கூடாது. இந்த நியூசெல்லாம் எப்படி லீக் ஆகலாம்? இந்த ஹாஸ்பிட்டலோட reputationன்னா என்னன்னு உங்களுக்கு எல்லாம் தெரியுமா? யாரோ ஒரு பொண்ணுக்கு அடிபட்டிருச்சுன்னா வெளியே சொல்லி ஹாஸ்பிட்டல் பேரை அசிங்கப்படுத்தி ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிறதா? உங்களுக்கு எல்லாம் பொறுப்பு வேணாம். ஒருத்தி போனா ஆயிரம் பேர் தலையில தொப்பி மாட்டிக்கிட்டு அந்த இடத்துக்கு வரலாம். ஆனால் ஒரு நிறுவனத்தோட பேர் கெட்டுப் போச்சின்னா போனது தான். உனக்கெல்லாம் அது புரியாது”. அவருக்கு கோபத்தில் வேர்த்து உடல் நடுங்குகிறது.
கணேஷ் அவரிடம் கர்ச்சீப் நீட்டி: “சார் ரிலாக்ஸ். நான் பார்த்துக்கிறேன்”
நர்ஸ் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறாள். அவள் கிட்டத்தட்ட அழுகிற குரலில்: “சார் எனக்கு ஒண்ணும் தெரியாது. இங்க என்ன நடக்குதுன்னே தெரியாது. நான் மூணு நாளா லீவு. எங்கிட்ட போட்டோ மட்டும் தான் கேட்டாங்க. நான் ஒண்ணுமே பண்ணல சார்”
கணேஷ்: “நீ போமா நான் பார்த்துக்கிறேன். நர்ஸஸ் எல்லாரையும் ஒரு மீட்டிங் கூப்பிடு”. அவள் போக கணேஷ் இன்னொரு ஜூனியர் டாக்டரை அழைத்து சொல்கிறான்: “மீட்டிங்க் நீங்க அட்ரஸ் பண்ணுங்க. இந்த கேஸ் சம்மந்தமா எந்த நியூஸும் வெளியே போகக் கூடாதுன்னு சொல்லுங்க. பிரஸ்ஸுக்கான ரிப்போர்ட் நாங்களே சாய்ந்தரம் குடுத்துருவோமுன்னு சொல்லுங்க. அதுவரை ஜர்னிஸ்ட், சேனல் ஆட்கள் யாரையும் உள்ளே விடாதீங்க”
அப்போது வேணி கத்தும் சத்தம் கேட்கிறது. எல்லோரும் உறைந்து போகிறார்கள்.
டாக்டர்: “எல்லாரும் வெளியே போங்க. பேஷண்ட் அஜிடேட் ஆகிறாங்க. க்ளியர் ப்ளீஸ்”
எல்லோரும் வெளியேற ஒரு பெரியவர் மட்டும் தனியே வாசலில் நிற்கிறார். பெரிய நரை மீசை வைத்த கிராமத்து மனிதர். வேணியின் அப்பா.
வேணியின் அப்பா டாக்டரிடம் போகிறார்.
டாக்டர்: “இங்கே நிக்காதீங்க. கிளம்புங்க. பேஷண்ட் டிஸ்டர்ப் ஆகுறாங்க. உங்களுக்கு சொன்னா புரியாது”
வேணியின் அப்பா: “டாக்டர் இது என் பொண்ணு. அவளுக்கு நினைவு வந்திருச்சா? அவளுக்கு சரியாயிடுமா?”
டாக்டர்: “ஐ ஆம் சாரி. பெரியவரே வேணி கத்துறாங்கன்னு நினைவு வந்திரிச்சுன்னு அர்த்தமில்ல. இவ்வளவு கூட்டமும் பார்த்து பயப்படுறாங்க. ஏதோ தொலைவில எங்கியோ நடக்குற மாதிரி தான் தெரியும். மத்த படி நீங்க நான் எல்லாம் யாருண்ணே இப்போ வேணிக்கு புரியாது. பட் யாரோ நிக்கிறாங்கன்னு புரியும் ”
வேணியின் அப்பா: “இல்ல டாக்டர் அவ என்ன பாக்குற மாதிரி இருக்கு”. டாக்டர் அவரது தோளை தட்டி சமாதானப்படுத்தி கிளம்புகிறார்.
வேணியின் அப்பா டீனை நோக்கி ஓடுகிறார். அவர் டீனின் முன் கும்பிடுகிறார்: “ஐயா என் பொண்ணை எப்பிடியாவது காப்பாத்துங்க, எங்கிட்ட இருக்கிறதை எல்லாம் வித்து கொடுக்கிறேன். ஐயா என் பொண்ணு பொழைச்சிடுவாளா”
டீன் நர்ஸை நோக்கி: “கன்சல்டேஷன் பேஷண்ட்ஸ ஏம்மா இங்கே அனுப்பறீங்க. பெரியவரே இங்கே வராதீங்க. கீழே இறங்கி போனீங்கன்னா சிவப்பா ஒரு கட்டிடம் இருக்கும் அங்க போங்க. உங்க பொண்ணை அங்க கூட்டிக்கிட்டு போங்க”
நர்ஸ்: “சார் இது வேணியோட அப்பா”
டீன்: “ஐ ஆம் சாரி. உங்க பொண்ணுக்கு ஒண்ணும் இல்ல. சின்ன அடி தான். கணேஷ் அந்த கருணைக்கொலை ஒப்புதல் கடிதம் கொண்டு வாங்க”
கணேஷ் ஒரு காகிதத்தை நீட்டுகிறார். அதைப் படிக்கும் டீன் வேணியின் அப்பாவிடம் நீட்டுகிறார்: “இதுல ஒரு கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்திருங்க.”
வேணியின் அப்பா: “என்னங்கய்யா இது?”
கணேஷ்: “உங்க பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ணனும்லா. அதுக்கானது இது. கையெழுத்து போடுவீங்களா, இல்ல கைரேகையா?”. கணேஷ் நர்ஸை நோக்கி: “பெரியவர் கிட்டயிருந்து வாங்கி எனக்கு அனுப்பிச்சிரு”
வேணியின் அப்பா அந்த காகிதத்தை கையில் ஏந்தியபடி தள்ளாடிக் கொண்டு வெளியே போகிறார்.
நாள் 4

காட்சி 24
காரிடார். டீன் மற்றும் கணேஷ் நடந்து போகிறார்கள்.
டீன்: “என்னய்யா இந்த டாக்டர் முத்துமோகன் இப்பிடி தெளிவா குழப்புறாரு? இவரு பாட்டுக்கு vaginal mutilation அது இதுன்னு கிறுக்கி வைக்க போறாரு. மீடியா இதை ஒண்ணையே புடிச்சு தொங்கும். Povery, malnutrition, illiteracyனு இந்தியாவுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு. ஒண்ணத்தையும் பத்தி எவனுக்கும் கவலை இல்ல. ஆனால் எங்கியாவது ஒரு சின்ன ரேப் நடந்தா போதும் நாடே கொந்தளிக்க ஆரம்பிச்சிரும். பாம் வெடிச்சா கூட நம்ம மக்கள் அடுத்த நாள் அமைதியா இட்லி சாப்பிட்டுட்டு பையை தூக்கீட்டு வேலைய பார்க்க கிளம்பிடுவாங்க. இப்போ இந்த ரேப் கேஸ் இது நம்ம தலையில வந்து விழுந்திட போவுது. இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம ஆஸ்பத்திரி பேரையே போட்டு நாறடிப்பானுங்க”
கணேஷ்: “ரிப்போர்ட் ரெடி பண்ற டீமில டாக்டர் மோகனை போட வேணாம் சார். ஜார்ஜ், அப்புறம் டாக்டர் ஸ்ரீனிவாசன், நியூரல் சர்ஜன் ஜோப். இவங்க மூணு பேரையும் போடலாம். நாம சொன்னா கேட்பாங்க”
டீன்: “அந்த இன்ஸ்பெக்டர் வாயில எதையாவது போட்டு அடைக்கணும். அந்த ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டை சுத்தமா அலம்ப சொல்லீடுங்க. அப்புறம் அங்க இருந்து எதையாவது கண்டெடுத்தோனுன்னு உயிர வாங்குவானுங்க. நான் சொல்லாம எந்த டாக்டரும் போலீஸ் கிட்ட பேசக் கூடாது”
கணேஷ்: “சார் வீணாவோட கழுத்து மாலை, அப்புறம் ரெண்டு வளைய கழற்றி வச்சிருக்கோம். வேணும்னா ராபரின்னு establish பண்ண வசதியாயிருக்கும்”
டீன்: “குட். அப்பிடியே சொல்லுவோம். நீயே பிரஸ் ரிப்போர்டஸ் கிட்டயும் பேசிடு. Nurse assaulted in robbery attempt அப்டீன்னு நியூஸ் கொடு”
கணேஷ்: “ஒகெ சார். ஆனால் சார் எல்லாத்தையும் சைலண்ட் பண்ணீரலாம். ஒரே ஒரு சிக்கல் தான்”
டீன்: “என்ன?”
கணேஷ்: “what if வீணா திடீர்னு முழிச்சுட்டா?”
டீன்: “இது புது தலைவலியா இருக்கே. ஆனா காயம் எல்லாம் கடுமையா இருக்கு. Brain cell death இருக்கும்னு சந்தேகப்படுறேன். அப்பிடியே கோமால இருந்து எழுந்தாலும் அவளுக்கு நெனைவு இருக்குமாங்குறது சந்தேகம் தான். பெரும்பாலும் எழுந்து நடக்கவோ பேசவோ முடியாம அவ வெறும் வெஜிட்டபிளா தான் இருப்பா. ஸோ ஏன் கவலைப்படனும்?”
கணேஷ்: “ஒருவேளை அவ எழுந்து பேசினா? அது மாதிரி miracles எல்லாம் முன்னெ நடந்திருக்கே?”
டீன் பெருமூச்சு விட்டபடி: “யு ஆர் ரைட். என்ன பண்ணலாம் இப்போ?”
கணேஷ்: “Life supportஐ மெல்ல மெல்ல எடுத்திரலாம். அதுவா உயிர் போன மாதிரி இருக்கும். ஒரு பாதுகாப்புக்கு அந்த கருணைக்கொலை ஒப்புதல் டாக்குமெண்டில அவளோட அப்பாகிட்ட சைன் வாங்கீரலாம்”
டீன்: “ஆமா சரி. பாரேன். ரேப் பண்ணினது எவனோ ஒரு pervert. ஆனா நாம ரெண்டு பேரும் ஏதோ கிரிமினல்ஸ் மாதிரி அதை மறைக்கிறதுக்கு பிளேன் பண்ண வேண்டி இருக்கு.”
கணேஷ்: “பகவான் கிருஷ்ணரே கீதையில சொல்லி இருக்காரே சார், ஒரு பெரிய நிஜத்தை காப்பாத்துறதுக்கு சின்ன தப்பு பண்லாம், தப்பில்லேன்னு”
டீன்: “disgusting! இதுக்கு போய் ஏன் கிருஷ்ணரை எல்லாம் இழுக்கிறே.”. அவர் அங்கிருந்து கிளம்புகிறார்.
காட்சி 25
டீனின் அறை. டீனுக்கு எதிராக போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து பல்லை குத்திக் கொண்டிருக்கிறார்.
டீன்: “இது ரொம்ப சென்சிட்டிவான கேஸ். ஏற்கனவே வெளியே மீடியா நின்னுக்கிட்டு இருக்கு. இனி எல்லாமே நீங்க எப்பிடி இதை ஹேண்டில் பண்றீங்கன்னு பொறுத்து இருக்கு. எங்க ஹாஸ்பிட்டலுக்குன்னு ஒரு ரெப்யூட்டேஷன் இருக்கு. அதை நாங்க இழக்க விரும்பல”
இன்ஸ்பெக்டர்: “நான் உங்க ஸ்பாப் அத்தனை பேரையும் விசாரிக்கணும். உங்க ஹாஸ்பிட்டல் ஆம்பிளை ஸ்டாப் எத்தனை பேரு, அவங்கள்ல எத்தனை பேரு நேத்து நைட் டூட்டி, அவங்கள பத்தின விபரங்கள் எல்லாம் வேணும்.”
டீன்: “ஏன் சார் எங்க ஸ்டாபை எல்லாம் இதுக்குளார கொண்டு வரீங்க. இது க்ளியரா ஒரு கொள்ளை முயற்சி. அது இந்த பொண்ணு தாக்கப்பட்டு நகை கொள்ளை போயிருக்கு. அந்த ஆங்கிள்ல ஏன் பார்க்க மாட்டேங்குறீங்க?”
இன்ஸ்பெக்டர்: “வேணியை ட்ரீட் பண்ணுன டாக்டர் மோகன் இது ஒரு கற்பழிப்புன்னு தெளிவா சொல்றாரு. பலாத்காரம் பண்றதுக்காகத் தான் அந்த பொண்ணோட கழுத்தை கயிறு இல்ல சங்கிலியால நெரிச்சிருக்கான். அப்புறம் அவளுக்கு மயக்கம் வரது வற கட்டையால அடிச்சிருக்கான். அப்புறம் வேணியை முதல்ல பார்த்து எடுத்து வந்த நர்ஸுங்க அவள் அப்போ நகைகளோட தான் இருந்ததா சொல்றாங்க. அதாவது நகையை யாரோ ட்ரீட்மெண்ட் நடக்குறச்சே தான் உருவியிருக்காங்க”, அவர் நக்கலாய் புன்னகைத்தபடி “அது யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிச்சிருவோம்”
டீன்: “This is atrocious. எங்க ஹாஸ்பிட்டல் பேரை கெடுக்கணுமுன்னு கேஸை தப்பான angleலயே கொண்டு போறீங்க. இதுக்கு அவனுங்க எங்க விரோதிங்க உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாங்க? சரி இந்த மெடிக்கர் ரிப்போர்ட் பாருங்க”, அவர் ஒரு காகிதத்தை நீட்டுகிறார், “மூணு ரெப்யூட்டட் டாக்டர்ஸ் கவுன்சில் செய்த இன்வெஸ்டிகேஷனோட ரிப்போர்ட். இதுல தெளிவா போட்டிருக்கு வெறும் தாக்குதல் தான்னு. கற்பழிச்சதுக்கான எந்த தடயமும் டாக்டர்கள் பார்க்கலியே”
இன்ஸ்பெக்டர் அந்த அறிக்கையை புரட்டியபடி: “உங்க டாக்டர்ஸ் சொல்றதுலயே இவ்வளவு முரண்பாடு இருக்கு. நாங்க வெளியே இருந்து ஒரு மெடிக்கல் டீம் கொணாந்து பார்க்க செய்வோம். அப்புறம் தான் முடிவுக்கு வர முடியும். அது வரையிலும் நாங்க எல்லா ஆங்கிளையும் பார்க்கணும்”
டீன்: “நீங்க ஏற்கனவே முன்முடிவோடத் தான் பேசுறீங்க. உங்களால இந்த கேஸை சரியா இன்வெஸ்டிகேட் பண்ன முடியுமான்னே சந்தேகமா இருக்கு.
இன்ஸ்பெக்டர்: ”அதுக்கு நீங்க ஒத்துழைச்சா தானே”
டீன்: “மத்திய அமைச்சர் பையன் எங்களோட பிஸினஸ் பாட்னர் தெரியுமா? நீங்க யார் கிட்ட விளையாடுறீங்கன்னு தெரியாம விளையாடுறீங்க”
இன்ஸ்பெக்டர் பல்லை நோண்டியபடி: “அசால்ட் விடிகாலை சுமார் ரெண்டரை மணிக்கு நடந்திருக்குது. மயக்கமா கிடக்கிற வேணியை நர்ஸ் ஒருத்தங்க காலையில ஆறு மணிக்கு பார்த்து எடுத்து வராங்க. ஆனா நீங்க டிரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்றது பத்து பத்தரை மணி போல. அதுவரைக்கும் பாடிய தொடக் கூடாதுன்னு நீங்க இஸ்டரக்‌ஷன் கொடுத்திருக்கீங்க. ஒருவேளை நீங்க முன்கூட்டியே சிகிச்சை கொடுத்திருந்தா அந்த பொண்ணு கோமா நிலைக்கு போகாம இருந்திருக்கும். உங்க மோட்டிவ் என்னன்னு எனக்கு தெரியணும். அப்புறம், எங்களுக்கு தகவல் சொல்ல தவறிட்டீங்க. நாங்க வரதுக்கு முன்னாடியே சம்பவம் நடந்த இடத்தை தண்ணி விட்டு அலம்பி இருக்கீங்க. வேணியோட நகையை உங்க ஹாஸ்பிட்டல் ஆட்கள் யாரோ திருடி இதை ஒரு கொள்ளை முயற்சின்னு போலீஸை திசை திருப்ப பார்க்குறீங்க. குற்றத்தை மறைக்க பார்த்தது, எவிடென்ஸ் அழிச்சதுன்னு உங்க மேலே கேஸ் போட்டு உள்ள வைக்க முடியும். அப்புறமா இது போல திமிரா பேச மாட்டீங்க”
டீன் ஒரு நொடி திகைக்கிறார். அடுத்து முகத்தை மென்மையாக்கி: “சார் இந்த பிரச்சனை என்னென்னே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க. இது ஒரு பொண்ணு சம்மந்தப்பட்ட விசயம். அவளுக்கு ஆறு மாசத்தில கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு. நாளைக்கே அவ கோமாவில இருந்து எழுந்திரலாம். காயம் ஒண்ணும் சிவியரா இல்ல. அவ சீக்கிரமா ரிக்கவர் ஆகி கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழப் போறா. ஆனா இந்த கேஸை நீங்க ரேப் அது இதுன்னு கொண்டு போனீங்கன்னா நாளைக்கு அந்த பொண்ணுக்கு ஒரு வாழ்க்கையே இல்லாம போயிடும். உங்க தங்கச்சிக்கு இப்பிடி நடந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க சொல்லுங்க?”
இன்ஸ்பெக்டர்: “சார் இதை உங்க ஹாஸ்பிட்டல் ஸ்பாப் எவனோ தான் பண்ணி இருக்கான். நீங்க ஒத்துழைச்சீங்கன்னா ரெண்டே நாள்ல ஆளை தூக்கீருவேன். ரேப் பண்றவன கண்டுக்காம விடுறது இல்ல அவனுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தரது தான் சார் பொண்ணுங்களுக்கு உண்மையான பாதுகாப்பு”
டீன் களைத்து போய் பெருமூச்சு விடுகிறார்.
இன்ஸ்பெக்டர்: “ஏற்கனவே இங்க பொண்ணுங்க மேல குமார்னு ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டதா புகார் வந்திருக்கு. அப்புறம் உங்க நர்ஸ் குவாட்டர்ஸில ரெண்டு தடவை யாரோ நுழைஞ்சதா இன்னொரு புகார். அதுக்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கல. போலீசுக்கும் ரிப்போர்ட் பண்ணல. குவாட்டர்ஸ் பின் மதில்ல ரெண்டு இடத்துல ஆள் நுழையற அளவுக்கு ஓட்டை இருக்கு. வாட்ச்மேன் ஒரு வாரமா வரல. கடந்த ரெண்டு வாரத்துல பதினைஞ்சு நர்ஸஸ் பயத்துல குவாட்டர்ஸை காலி பண்ணீட்டு போயிருக்காங்க. ஆனால் அப்போவும் நீங்க ஒண்ணும் பண்ணல. இப்போ அந்த பொண்ணுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறீங்க”
அப்போது கணேஷ் நுழைகிறான். அவன் தன் செல்போனை நீட்டி இன்ஸ்பெக்டரிடம்: “சார் கமிஷனர் லைன்ல இருக்காரு. உங்க கிட்ட பேசணுமாம்”
இன்ஸ்பெக்டர் போனை வாங்கியபடி குழைவாய் “எஸ் சார் ஆமா சார் ஒகெ சார்” என்றபடி வெளியேறுகிறார். கணேஷ் சிரித்தபடி டீனை நோக்கி பெருவிரலை உயர்த்தி வெற்றி என காட்டுகிறான். டீன் நிம்மதியாக நாற்காலியில் சாய்கிறார்.
காட்சி 26
ஆஸ்பத்திரி வார்டில் ஒரு பக்கம் ஓரமாய் வேணி படுத்திருக்கிறாள். அவளைச் சுற்றி உபகரணங்கள் குறைவாக இருக்கின்றன. நர்ஸ் யாரும் இல்லை. தலையில் ஒரு கட்டு, தொண்டை வழி ஒரு குழாய் போகிறது. இன்னொரு பக்கம் டிரிப்ஸ். வேணி கண்ணைத் திறந்து வைத்து கிடக்கிறாள். மற்றபடி எந்த சலனமும் இல்லை. அவளருகே நதியா ஒரு சுடிதார் அணிந்து தலையை குனித்து அமர்ந்திருக்கிறாள்.
நதியா: “இன்னிக்கு காலையில எழுந்ததுல இருந்தோ ஒண்ணுமே பண்ணல. சும்மா குளிச்சு சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருக்கேன். இன்னிக்கு உனக்கு புடிச்ச பியர்ஸ் போட்டுத் தான் குளிச்சேன்” அவள் தன் கையை வாணியின் மூக்கருகே வைக்கிறாள். “காலேஜ் ஹாஸ்டல்ல இருக்கிறச்சே நாம இப்படி குளிச்சதும் மோர்ந்து பாத்துப்போம் ஞாபகம் இருக்கா. என்ன சொல்றே?” கொஞ்சம் யோசித்து, “நான் இப்போ தனியா பேசுறேனா, உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனா? தெரியல. ஆனால் உனக்கு கேட்கும்னு டாக்டர் சொன்னார். உங்கிட்ட நிறைய பேசச் சொன்னார். ஜெனரல் வார்டு 3ல ஒரு பையன் வந்திருக்கான். பைக் ஆக்ஸிடெண்ட். ஆனால் செம கியூட்டா ஹேண்ட்சமா இருக்கான். முன்னெல்லாம் வேலை வேலைன்னு பேயா திரிவேனா இப்போ திடீர்னு சும்மா உட்கார்ந்திருக்கிறச்சே டல்லடிக்குது. ஆனால் சைட் அடிக்கிறேன், நல்லா சாப்பிடுறேன், டைம் எடுத்து பொறுமையா மேட்சிங் தோடு, வளையல் எல்லாம் போட்டுக்கிறேன். இதுவும் நல்லாத் தான் இருக்கு”, அவள் தன் வளையல்களை வேணிக்கு காட்டுகிறாள். வேணி கண்ணை மூடி திறக்கிறாள்.
“புடிச்சிருக்கா? நல்லா இருக்குல்ல”, அவள் சிரிக்கிறாள். அடுத்து பட்டென்று அழுகிறாள், “என்னை மன்னிச்சிடு வேணி எனக்கு ரொம்ப guiltyஆ இருக்கு. நான் மட்டும் அன்னிக்கு குவாட்டர்ஸில உங்கூட இருந்திருந்தா உனக்கு இப்பிடி ஆகியிருக்காது. உன்னை இப்பிடி குதறி போட்டுட்டானுங்களேம்மா. ரொம்ப வலிச்சுதா, ரொம்ப அழுதியாம்மா? நான் இருந்திருந்தா உன்னை எப்பிடியாவது காப்பாத்தி இருப்பேனே. எனக்கு அதை நினைச்சா நைட்டு தூக்கமே வர மாட்டேங்குது”. அவள் தொடர்ந்து கட்டிலின் முன் மண்டியிட்டு வாணியின் முகத்தருகே குனிந்து அழுகிறாள்.
                           காட்சி 27
காரிடாரில் வேணியின் அப்பாவை நதியா சந்திக்கிறாள். அவர் கையில் ஒரு காகிதம் வைத்திருக்கிறார். அதை நதியாவிடம் நீட்டி கேட்கிறார்.
வேணியின் அப்பா: “இதை யார் கிட்ட கொடுக்கணும்மா?”
நதியா அதை வாங்கிப் பார்க்கிறாள். அவள் முகம் மாறுகிறது. கோபத்தில் உதட்டை கடிக்கிறாள்: “நானே பாத்துக்கிறேன் அப்பா. நீங்க வேணி பக்கத்துல இருங்க”
நதியா முன்னே செல்ல ஜோவினா இன்னொரு பெண்ணுடன் எதிரே வருகிறாள்.
ஜோவினா: “நதியா மீட் மை கஸின் அச்சு. இண்டெர்வியுக்கு வந்திருக்கா.”
நதியா: “என்னை இன்னும் டிஸ்மிஸ் பண்ணலையே. அதுக்குள்ளாடியா?”
ஜோவினா: “உன் இடத்துக்கு இல்லம்மா. வேணியை அனுப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். அவ ரிக்கவர் ஆனாலும் இங்கே இருந்தா அவளுக்கும் மனசுக்கு கஷ்டம் மானேஜ்மெண்டுக்கும் பிரச்சன. அதான். அவ இடத்துக்கு தான் என் கஸின ரெகமண்ட் பண்ண போறேன்”
நதியா: “மனுசன் சாகிறதுக்கு முன்னாடியே கழுகுங்க சரியா வந்திடுது”. அவள் அங்கிருந்து கிளம்புகிறாள்.
காட்சி 28
டீன் அறை. கதவை ஆவேசமாய் தள்ளித் திறந்து கொண்டு நதியா நுழைகிறாள். டீன் வியப்பாய் அவளை பார்க்கிறாள்.
நதியா காகிதத்தை வீசி எறிகிறாள்: “சார் இதுக்கென்ன அர்த்தம்? ”
டீன்: “இது எப்பிடி உன் கைக்கு வந்துது. Useless fellows”
நதியா: “வீணாவை டிஸ்மிஸ் பண்றதுக்கு ஒரு பக்கம் ப்ளான் பண்றீங்க. இன்னொரு பக்கம் அவளை கருணை கொலை பண்றதுக்கு அவ அப்பா கிட்டயே கையெழுத்து வாங்கிறீங்க. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லியா?”
டீன்: “தோ பாரும்மா மேனேஜ்மெண்ட் ரொம்ப இரக்கத்தோட தான் நடந்துக்கிறோம். நீ சைக்யாடிரிக் சிகிச்சையில இருக்க. ஆனாலும் உன்னை டிஸ்மிஸ் பண்ணுனோமா? இல்லியே. வேணிக்கும் இலவசமா சிகிச்சை கொடுக்கிறோம். இந்த இண்டெர்வியு, கருணைக்கொலைக்கான அக்ரிமெண்ட் எல்லாம் சும்மா formality தான்”
நதியா: “எனக்கு அப்பிடி தோணல. இதுக்கு பின்னாடி ஏதோ சதித்திட்டம் இருக்கு”
டீன்: “ஹா ஹா ஒரு நர்ஸுக்கு எதிரா சதித்திட்டமா? மானேஜ்மண்ட் கோணத்தில புரிஞ்சுக்க டிரை பண்ணு. வீணா எப்போ ரெகவர் ஆவான்னு சொல்ல முடியாது. ஒரு நாளோ பத்து நாளோ பத்து வருசமோ கூட ஆகலாம். அதுவரைக்கும் அவ இடத்தை காலியாவே வச்சிக்கிட்டு இருக்க முடியுமா?”
நதியா: “சரி, நீங்க அவளை டிஸ்மிஸ் பண்ணின அடுத்த நாளே அவ கோமாவில இருந்து முழிச்சு எழுந்தா என்ன பண்ணுவீங்க? அது மட்டுமில்ல அவளை அவசரமா இங்கே இருந்து வெளியே அனுப்பத் தான் இதையெல்லாம் பண்றீங்கன்னு நினைக்கிறேன்”
டீன் நக்கலாக: “வீணா ரெகவர் ஆனா இதோ என் சீட்டை நான் காலி பண்ணீடறேன். வீணாவை டீன் ஆக்கிடலாம். What do you say?”
நதியா: “உங்க சீட்ல உட்கார்ற அளவுக்கு அவ கிரிமினல் இல்ல சார்”, அவள் கருணைக்கொலை அக்ரிமெண்டை கிழித்தெறிகிறாள்.
நதியா: “நதியாவை கொன்னுட்டு கேஸை சுத்தமா மூடிடலாமுன்னு நீங்க கனவிலயும் நினைக்காதீங்க. கருணைக் கொலையாம், குமார் மாதிரிப்பட்ட கிரிமினல்ஸை தான் கருணைக் கொலை பண்ணனும்”
டீன்: “திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா? குமார் நீ அடிச்சு மண்டைய உடைச்சதில இருந்து அவன் வேலையில இருந்தே நின்னுட்டான். அடுத்த யாரை பழி சொல்ல போறே? சரி, எத்தனை நாள் இப்பிடி வீணாவை நாங்க இலவசமா life supportல வச்சுக்க முடியும்? We have to move on from this”
நதியா: “அதுக்கு நான் உங்களை அனுமதிக்க போறதில்ல. உங்கள சும்மா விட மாட்டேன். எல்லாரையும் மொத்தமா ஜெயிலுக்கு அனுப்புவேன். வேணிக்கு ட்ரீட்மெண்ட் நடக்குதுங்கறதுனால தான் நான் அமைதியா இருந்தேன். இனி உங்களை சும்மா விட போறதில்ல”
டீன்: “ஹி ஹி என்ன பண்ணுவ? நான் ஏன் இவ்வளவு நேரம் உன்னை வச்சு பேசிக்கிட்டு இருக்கேன் தெரியுமா? நீ பேத்தறது பார்க்க ரொம்ப வேடிக்கையா இருக்கு, அதுக்கு தான்”
நதியா: “இங்க நடந்த ஒவ்வொரு அநியாயத்தையும் வெளியே கொண்டு வருவேன். இங்கே ஏற்கனவே வீணாகிட்ட குமார் தப்பா நடந்துக்கிட்டது, ஒரு பேஷண்டை பலாத்காரம் பண்ணினது, அதுக்கெல்லாம் நீங்க ஆக்‌ஷன் எடுக்காதது, குவாட்டர்ஸில தொடர்ந்து யாரோ ராத்திரியில வந்து தாக்க பார்த்தது, அதெல்லாம் தெரிஞ்சும் எந்த பாதுகாப்பும் எங்களுக்கு தராதது, வேணியை பலாத்காரம் பண்ணின தகவலை ரிப்போர்டில வராம பண்ணினது, அவளோட நகைகளை வேணும்னே எடுத்து மறைச்சு அதை வச்சு அவளை திருடுறதுக்காக தாக்கினதா ராபரி கேஸாக இதை மாத்துனது, சாட்சியங்களை வேணுமுன்னே அழிச்சது இப்பிடி உங்களுக்கு எதிரா ஆயிரம் குற்றசாட்டு இருக்கு”
டீன் திகைத்துப் போய் பார்க்கிறார். அடுத்து சுதாரித்து பத்திரிகைகளை எடுத்து காட்டி சொல்கிறார்: “நியூஸ் படிச்சியா? போலீஸ் இன்வெஸ்டிகேஷன் முடிவு வந்திருக்கு பாத்தியா? அவங்களே கொள்ளையடிக்கும் போது நடந்த தாக்குதல் அப்டீன்னு தான் சொல்லி இருக்காங்க. நீ சொன்ன அத்தனையும் பரிசீலிச்சு பாத்துட்டு அத்தனையும் சுத்த பொய்னு போலீசுக்கு கன்வின்ஸ் ஆனதுனால ரேப் இல்லன்னு முடிவுக்கு வந்திருக்காங்க. இப்போ போய் நீ ரேப்னு சொன்னாலும் யாரு நம்புவாங்க? நீ ஒரு மெண்டல் பேஷண்ட். அதுக்கு எங்கிட்ட ஆதாரம் இருக்கு”
நதியா: “போலீசை நீங்க விலைக்கு வாங்கீடலாம் சார். ஆனால் அதோட எல்லாம் முடிஞ்சு போறதில்ல. மீடியாவுக்கு போவேன். நடந்தது அத்தனையும் சொல்லுவேன். இந்த நாட்டில மனசாட்சி உள்ள அத்தனை பேர்கிட்டயும் கேட்பேன். நியாயம் கிடைக்கவரையிலயும் கேட்பேன்”
டீன் நக்கலாகவும் கோபமாகவும்: “நல்லா கேளு கேளு. ஒரு மெண்டல் சொல்றத யாரு நம்புறாங்கன்னு பார்ப்போம்”
நதியா: “என்னைய நீங்க மெண்டல்னு சொல்லலாம், ஆனா இவங்க அத்தனை பேரும் மெண்டலா?”. அவள் இதை சொல்ல நர்ஸுகள் அத்தனை பேரும் நதியாவுக்கு ஆதரவாக அறைக்குள்ளும் வெளியிலும் திரண்டு நிற்கிறார்கள்.
நதியா: “வேணியை வெளியே அனுப்பீட்டோ கொன்னுட்டோ நீங்க இந்த ஆஸ்பத்திரிய நடத்த முடியாது. நாங்க அத்தனை பேரும் சேர்ந்து போராடுவோம்”
டீன் ஆவென வாய் பிளக்கிறார்: “என்ன கேரோ பண்றீங்களா? What do you all think? இதென்ன டிரேட் யூனியன் கூட்டமா? கொடி புடிக்கிறீங்களா? கெட் லாஸ்ட். எல்லாரையும் இப்பவே பைர் பண்ணுவேன்”
நதியா: “நாங்க இப்பவே முதல்ல பிரஸ் கான்பிரன்ஸ் கூப்பிட போறோம்”
டீன்: “ஏம்மா ஏன் இப்பிடி நடந்துக்கிறீங்க? இதனால யாருக்கு என்ன லாபம்? அப்பிடி யோசிங்களேன். வெளியே போய் வேணியை பலாத்காரம் பண்ணீட்டாங்கன்னு சொன்னா யாருக்கு அசிங்கம்? அந்த பொண்ணுக்கு தானே? ஆங். அவளுக்கு என்ன என் பொண்ணு வயசிருக்குமா? இன்னும் ஆறு மாசத்தில கல்யாணம் நிச்சயமாயிருக்கு. எனக்கும் அவ எதிர்காலம் மேல அக்கறை இருக்காதா? அதனால தாம்மா இந்த ரேப் மேட்டரை மறைச்சு வச்சேன்.”
நதியா: “இதை நீங்க மீடியா கிட்டயே சொல்லுங்க சார்”
டீன்: “அதெல்லாம் எதுக்கும்மா வீண் வம்பு. மீடியான்னா என்னம்மா, சாக்கடை, அதில குதிச்சா நாம எல்லாருக்கும் தான் அசிங்கம். இப்போ என்ன வேணுங்கிறீங்க. வீணாவை நாங்க டிஸ்மிஸ் பண்ண மாட்டோம், of course no euthanasia, அதெல்லாம் வெறும் formality தான். நதியா நீயும் இங்க எத்தனை நாள் வேணும்னா வேலை பாரும்மா. I don’t hold any grudges”
நதியா: “வீணாவுக்கு இங்கியே எத்தனை வருசமானாலும் இலவசமா சிகிச்சை தரணும். அதை ஒப்புக்கிட்டு நீங்க கையெழுத்து போட்டு தரணும்.”
டீன் களைப்பாக “சரிம்மா”
நதியா எழுந்து வெளியே நிற்கும் நர்ஸ்களிடம் வெற்றி என கட்டை விரலை உயர்த்தி காட்டுகிறாள். அவள் போகும் முன் டீன் கேட்கிறார்: “எல்லாம் சரிம்மா, ஆனா ஒரு நர்ஸ் நீ, படிச்ச நாகரிகமான பொண்ணு, நியாயமெல்லாம் கேட்குற, நீ என்னை இப்பிடி பிளேக்மெயில் மட்டும் பண்லாமா?”
நதியா: “நான் பைத்தியம் தானே சார். பைத்தியம் பிளேக்மெயில் பண்ணலாம்”
காட்சி 29
காரிடார். பத்திரிகையாளர் தேன்மொழி சில நர்ஸுகளுடன் பேச முயல்கிறாள். அவர்கள் பேச மறுத்து விலகுகிறார்கள். இதை தொலைவில் நின்று நதியா பார்க்கிறாள். தேன்மொழி நதியாவிடம் வருகிறாள்.
தேன்மொழி: “என் பேரு தேன்மொழி. தினவேள்வி பத்திரிகையில இருந்து வரேன்”
நதியா: “அவங்க யாரும் உங்ககிட்ட ஏன் பேசலேன்னு தெரியுமா?”
தேன்மொழி புன்னகைத்தபடி: “தெரியும். வழக்கம் போல நமக்கு ஏன் வம்புன்னு நெனக்கிறாங்க. நான் வேணி கேஸ் பத்தி ஒரு follow up story பண்றேன். ஆக்சுவலி நதியா நான் உங்களைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன். நீங்க வேணியோட குளோஸ் பிரண்ட் இல்ல”. அவள் ஒரு ரிக்கார்டரை நீட்டுகிறாள்: “வேணிக்கு நீதி கிடைச்சிருக்குன்னு நம்புறீங்களா? இன்னும் போலீஸ் குற்றவாளியை பிடிக்கல. இது யாரையோ அவங்க காப்பாத்துறதுக்காக பண்ற முயற்சின்னு உங்களுக்கு தோணுதா?”
நதியா புன்னகைத்தபடி: “எனக்கு மட்டும் எதுக்கு வம்பு? எதுக்கு மேனேஜ்மெண்டை பகைச்சுக்கணும்?”
தேன்மொழி: “சாரி. ஆனா நீங்க முதுகெலும்புள்ள ஜாதின்னு நெனச்சேன். கற்பழிக்கப்பட்டு கிட்டத்தட்ட கொல்லப்பட்ட நிலையில கிடக்குறது உங்க பெஸ்ட் பிரண்ட். அதனால தான் நீங்க மட்டும் தைரியமா பதில் சொல்லுவீங்கன்னு நானே முடிவு பண்ணீட்டேன். சாரி. பரவாயில்ல இப்போ நீங்களும் வேணியை கைவிட்டுட்டீங்க”
நதியா: “வேணிக்காகத் தான் இந்த பிரச்சனையை திரும்பவும் கிளற வேணாமுன்னு பார்க்குறேன். இதுல அவளோட எதிர்காலம், சிகிச்சை எல்லாம் சம்மந்தப்பட்டிருக்கு.” அவள் தேன்மொழியின் கையை பிடித்து சொல்கிறாள்: “நாம பொண்ணுங்க இந்த இடத்துக்கு வந்து சேர்றதுக்கு எவ்வளவோ சமரசங்கள் பண்ணியிருக்கோம். ஆம்பிளைங்க மாதிரி எல்லாத்தையும் தூக்கி போட்டுக்கிட்டு நம்மளால போராட முடியாதுல்ல. இப்போ நான் வேணிக்காக ஒரு காம்பிரமைஸ் பண்றேன். புரிஞ்சுப்பீங்கன்னு நெனக்கிறேன்”
தேன்மொழி: “புரியுது. பொதுவான ஒரு கேள்வி கேட்கலாமா?”
நதியா: “கேளுங்க”
தேன்மொழி: “வேணி தாக்கப்பட்டது மாதிரி நாளைக்கு உங்கள்ல யாருக்கோ நடக்காதுன்னு சொல்ல முடியுமா?”
நதியா: “ஏன் எனக்கு கூட நடக்கலாம். இங்க எல்லாருக்கும் அந்த பயம் இருக்கு”
தேன்மொழி: “குத்தம் பண்ணினவங்களை தண்டிக்காம வெளியெ சுதந்திரமா உலவ விடுறது எல்லா பொண்ணுங்களுக்கும் ஆபத்து தானே. நான் ஏன் சொல்றேன்னா இந்த பேப்பர பாருங்க”
அவள் தினசரி ஒன்றை காட்டுகிறாள்.
“குமார்னு ஒருத்தர் மேல உங்களுக்கு சந்தேகம் இருக்குன்னு ஒரு தடவை மேனேஜ்மெண்டுக்கு புகார் கொடுத்திருந்தீங்க. அவர் கூட ஒரு தடவை இதே வேணி கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா கேள்விப்பட்டேன்.”
நதியா பேப்பரை பார்த்தபடி: “எனக்கும் அவன் மேல தான் சந்தேகம். அவன் தான் வேணி டிரஸ் மாத்துறப்ப எட்டி பார்த்தான். ஒரு பேஷண்ட் கிட்ட தப்பா நடக்குறதை நான் பார்த்து அவனை அடிச்சேன். அந்த கோவத்துல நான் இல்லாததுனால வேணியை தாக்கி இருக்கான்னு நினைக்கிறேன். ஆனால் நான் இதையெல்லாம் யார் கிட்ட சொல்லியும் பிரயோஜனம் இல்ல”
நதியா: “இதுல ஒரு சின்ன நியூஸ் ஐட்டம் பாருங்க, ஒரு ஆட்டோ டிரைவர் ஸ்கூல் பொண்ணை கற்பழிச்சதா, அது யாருன்னு விசாரிச்சேன். நீங்க சொல்ற அதே குமார் தான். அவன் இப்போ இங்க வேலையை ரிஸைன் பண்ணீட்டு ஆட்டோ ஓட்டறான். அவன் தான் எட்டாம் கிளாஸ் பொண்ணை ரேப் பண்ணியிருக்கான். ஆனால் போலீஸ் அவனை கைது பண்ணிக்கிட்டு ஆதாரம் இல்லன்னு வெளியே விட்டுட்டாங்க. அவன் அண்ணன் ஆளுங்கட்சியில பலமான ஆள். அது வேற எதுன்னாலும் பஸ்ஸை உடைச்சு ஊரை கொளுத்திற கட்சி. எதுக்கு வம்புன்னு போலீஸும் விட்டுட்டாங்க.”
நதியா: “இந்த சமூகம், போலீஸ் எல்லாரும் இப்பிடி கரெப்டா இருக்கிறச்சே நான் மட்டும் என்னங்க பண்ண முடியும். ரெண்டு துளி கண்ணீர் விடலாம். இல்ல பிராக்டிக்கலா என்ன பண்லாம்னு யோசிக்கலாம். இது பின்னாடி எல்லாம் ஓடிக்கிட்டு இருக்க முடியுமா? நான் இப்போ என் பிரண்டை எப்பிடி காப்பாத்துறதுன்னு பிராக்டிக்கலா யோசிக்கிறேன்”
தேன்மொழி: “எல்லாரும் பிரேக்டிக்கலா யோசிக்கிறதுனால தான் பதிமூணு வயசு குழந்தை எல்லாம் கற்பழிக்கப்படுது”
அப்போது ஒரு நர்ஸ் ஓடி வந்து நதியாவிடம் எதுவோ சொல்ல அவளும் கூட ஓடுகிறாள்

காட்சி 30

ஆஸ்பத்திரி படுக்கையில் வேணி அமர்ந்திருக்கிறாள். அவள் கோமாவில் இருந்து மீண்டு விட்டாள். அவளைச் சுற்றி சில நர்ஸுகள் நின்று மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். சிலர் டாக்டரை அழைக்க போகிறார்கள். நதியா அருகே போய் மகிழ்ச்சியில் ஆச்சரியத்தில் திகைத்து நிற்கிறாள். வேணி சாதாரணமாக எல்லோரையும் பார்க்கிறாள்.
வேணி: “டைம் என்னாச்சு. இன்னிக்கு சாயந்தரம் ஏழு மணிக்கு தலைவர் படமில்ல?”
நதியா சிரித்தபடி: “இன்னிக்கு என்ன தேதின்னு நெனக்கிறே?”
வேணி: “தேதி? ஆனா இன்னிக்கு சனிக்கிழமை இல்ல.”
நதியா: “வேணி நீ சொல்ற சனிக்கிழமை எல்லாம் முடிஞ்சு போய் மூணு வாரம் ஆச்சு”
வேணி: “மூணு வாரமா? எனக்கே தெரியாம எப்பிடி மூணு வாரம் ஆச்சு?”
நதியா: “நீ மயக்கமா இருந்தம்மா”
வேணி: “எவ்வளவு நாள்?”
நதியா: “எக்ஸாட்டா 22 நாள்.”
வேணி: “பரவாயில்ல. அந்த படத்தை இன்னோரு நாள் பாக்கலாம்”
நதியா: “எப்பிடி பீல் பண்றே இப்போ?”
வேணி: “லைட்டா டயர்டா இருக்கு. ஏய் இந்த டிரஸ் அழகா இருக்கு உனக்கு”
நதியா: “உன்னோட சுடிதார் தான்”
வேணி: “அதானே பார்த்தேன். ஆனால் பேண்ட் தான் தப்பா மாத்தி போடுருக்கே. சரி இதோட பேண்ட் எங்கே?”
நதியா: “அதான் நீ போட்டுக்கிட்டு இருக்கியே”
வேணி: “அட, அப்போ நீ பாதி நான் பாதி”
நதியா அவளை அணைக்கிறாள். அவளுக்கு சிரிப்பும் கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.
அங்கு தேன்மொழி வருகிறாள்.
நதியா: “தேன்மொழி எனக்கு ஒரு பிராக்டிக்கல் பிராப்ளம் சால்வ் ஆயிடுச்சு. இனி குமார் பிரச்சனையை கவனிப்போம். நான் என்ன பண்ணனும்?”
தேன்மொழி: “வேணி உங்களுக்கு அன்னிக்கு என்ன நடந்துது, யார் உங்களை தாக்கினாங்ககிறது ஞாபகம் இருக்கா?”
வேணி களைப்பாக சாய்ந்தபடி: “எல்லாமே மங்கலா இருக்குது. சரியா ஞாபகம் வர மாட்டேங்குது”
தேன்மொழி: “பரவாயில்லை”. அவள் நதியாவை நோக்கி: “நாம அவன் தப்பா நடந்துக்க டிரை பண்ணினானே அந்த பேஷண்ட் அவங்களை போய் பார்ப்போம். அவங்க கிட்டயிருந்து ஒரு கம்பிளயிண்ட் வாங்குவோம்”
நதியா: “நான் அட்ரஸ் எடுத்து தாரேன்.”
காட்சி 31
நதியாவும் தேன்மொழியும் ஒரு வீட்டின் கதவு தட்டுகிறார்கள்.
ஆரம்பத்தில் குமார் பலாத்காரம் பண்ண முயன்ற நோயாளியான ஒரு நடுத்தர வயது பெண்மணி கதவை திறக்கிறார். கையில் கத்தி வைத்திருக்கிறார்.
நதியா: “சைலஜா தானே?”
சைலஜா: “என்ன?”
நதியா: “என்ன ஞாபகம் இருக்கா? எஸ்.எம் ஹாஸ்பிட்டல். ஒரு மாசம் முன்னாடி பிளேடர் இன்பெக்‌ஷனுக்கு அட்மிட் ஆகியிருந்தீங்களே”
சைலஜா: “ஆமா நீங்க?”
நதியா: “நீங்க மூச்சு திணறுறதா துடிச்சப்போ வந்து காப்பாத்துனேனே?”
சைலஜா: “ஆமா நீங்க அந்த நர்ஸ் இல்லியா? சாரிங்க உங்களை மறந்துட்டேன் பாருங்க. உள்ளே வாங்க. அது யாரு?”
நதியா: “என் பிரண்டு. பத்திரிகையில இருக்காங்க”
தேன்மொழி: “கொஞ்சம் அந்த கத்திய தூக்கிட்டு கோவமா போஸ் கொடுக்குறீங்களா ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்”
சைலஜா: “ஐயே பாருங்க காய்கறி நறுக்கிற கத்தியோட உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். உள்ளே வாங்க”
உள்ளே போகிறார்கள்
நதியா: “நான் உங்களை வேறொரு விசயத்தில இருந்தும் காப்பாத்துனேன். நினைவிருக்கா? அந்த குமார் உங்களுக்கு என்ன பண்ணினான்னு இவங்க கிட்ட சொல்றீங்களா?”
சைலஜா: “அவன் எங்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான். எனக்கு அப்போ மூச்சு முட்டி சாகிற மாதிரி இருந்துது. அவன் என் மூஞ்சியை தலையணையால மூடி அழுத்திப் பிடிச்சுட்டு என் டிரஸ்ஸை தூக்கி அசிங்கமா பண்ணுனான். பேமானி அவனை கொல்லணும் போல இருக்குது”
நதியா: “ஆனா நாங்க அப்போ கேட்டதுக்கு ஒண்ணுமே நடக்கலேன்னு சொன்னீங்க”
சைலஜா: “நான் அப்போ சொல்லி இருந்தா இப்போ தெருவில தான் நிக்கணும். என் வீட்டுக்காரர் என் மானம் போச்சுன்னா பிறகு சேத்துப்பாரா சொல்லுங்க”
நதியா: “அந்த குமார் இன்னும் ரெண்டு பொண்ணுங்களை ரேப் பண்ணீட்டான். நீங்க அன்னிக்கே துணிஞ்சு சொல்லி இருந்தீங்கன்னா இதெல்லாம் நடந்திருக்காது. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல”
சைலஜா: “ஐயோ இல்லீங்க என்னால எல்லாம் வெளியே வந்து சொல்ல முடியாதுங்க. நீங்க எல்லாம் படிச்ச பிள்ளைங்க. வேலை பண்றீங்க. நான் எல்லாம் என் வீட்டுக்காரர் கைவிட்டுட்டா என்ன பண்ணுவேன் சொல்லுங்க?”. அப்போது அழைப்பு மணி அடிக்கிறது “போயிடுங்க ப்ளீஸ் போயிடுங்க. அவருக்கு ஒண்ணும் தெரிய வேணாம். நீங்க யாருன்னே எனக்கு தெரியாது. ப்ளீஸ் போங்க”.
அவர்கள் எழுந்து வெளியேறுகிறார்கள்.
நதியா: “எனக்கு நியாயம் கிடைக்குங்கிற நம்பிக்கை போச்சுங்க. இனி யார் கிட்ட போறது சொல்லுங்க. பாதிக்கப்பட்ட எந்த பொண்ணும் துணிஞ்சு வெளியே வந்து சொல்ல மாட்டா. எதுக்குங்க நம்ம ஊர்ல கோர்டு, போலீஸ் எல்லாம். வேஸ்டு. உங்கள மாதிரி ஆட்கள் எல்லாம் பத்திரிகையில உண்மையை கண்டுபிடிச்சு எழுதினா அதுனால பாதிக்கப்பட்ட பொண்ணுங்க தான் இன்னும் கஷ்டப்படுறாங்க. ரொம்ப வெறுப்பா இருக்குது தேன்மொழி. ”
தேன்மொழி: “எனக்கு எப்பவுமே உண்மை நியாயம் இது மேல எல்லாம் நம்பிக்கை உண்டுங்க. என்ன நடந்தாலும் அந்த நம்பிக்கையை இழக்க மாட்டேன். நாம தொடர்ந்து போராடுவோம். தப்பு பண்றவன் கடைசி வரை தப்பிச்சுக்கிட்டே இருக்க முடியாதுல்ல”
நதியா: “அதுக்குன்னு சாதாரண மனுஷங்க கடைசி வரை கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கணுமா. இப்போ கூட குமார் ஏதாவது ஒரு சின்ன பொண்ணை கற்பழிச்சிக்கிட்டு இருப்பான்”
தேன்மொழி: “எல்லாத்தையும் கடவுள் பாத்துக்கிட்டு தானே இருக்காரு. மனிதன் இன்று செய்வான், தெய்வம் நின்று கொல்லும்.”
நதியா நக்கல் சிரிப்புடன்: “நிறைய அம்மன் படம் பார்ப்பீங்க போல”
காட்சி 32
குறுகின ஒரு சாலையில் குமார் நடந்து வருகிறான். மது போதை தள்ளாட்டம். வெற்றிலையை அடிக்கடி புளிச்சென துப்புகிறான். எதிரே வருகிற ஒரு நடுத்தர வயது பெண்மணியை இடிக்கிறான். அவள் “பொறம்போக்கு எங்கியாவது இடிச்சு சாவ போற, மூஞ்சிய பாரு” என்கிறாள். அவளைத் திரும்பிப் பார்த்தபடி ரோட்டை கடக்கையில் அவனை ஒரு கார் வேகமாக மோதிட தூக்கி எறியப்படுகிறான்.
காட்சி 33
ஆஸ்பத்திரியில் குமாருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. யாரும் இல்லாத போது நர்ஸ் உடையில் அவனருகே நதியா வருகிறாள். அவள் அவன் கன்னத்தை தட்டுகிறாள்.
குமார் வலியில் முனகுகிறான்.
நதியா: “குமார் இது யாருன்னு தெரியுதா பாரு?”
குமார் “ஆங்?” அவனை கையை தூக்கி கும்பிட பார்க்கிறான். “நர்ஸ் அய்யோ என்னை காப்பாத்துங்க. நான் புள்ள குட்டிக்காரன். என் பொண்டாட்டிக்கு என்னை விட்டா யாரும் இல்ல”
நதியா: “இதையே லைசன்ஸா வச்சு ரேப் பண்றீங்கடா. ஹும். சரி நான் இப்போ உனக்கு ஒரு ஊசி போடணும். அதுக்கு பதிலா விஷ ஊசி போட்டுரலாமான்னு யோசிக்கிறேன்”
குமார்: “ஐயோ அம்மா என்னை ஒண்ணும் பண்ணீராதீங்க. நான் பண்ணின அத்தனை தப்புக்கும் உங்க காலில விழறேன். என்னை காப்பாத்துங்க”
நதியா: “நீ தான் வேணியை கழுத்தை நெரிச்சு ரேப் பண்ணினேன்னு ஒத்துக்கிறியா?”
குமார்: “எல்லாம் ஒத்துக்கிறேன்மா. தெரியாம பண்ணீட்டேன். இப்போ தான் எல்லாம் புரியுது. என்னை விட்டுடுங்க”
நதியா: “தப்புன்னாலே தெரியாம பண்றது தானே குமாரு. அதை நீ எனக்கு பண்ணினாலும் சரி நான் உனக்கு பண்ணினாலும் சரி. பண்ணினதுக்கு அப்புறம் தெரியாம பண்ணீட்டேன்னு சொன்னா சரியா போச்சு”
நதியா அவனுக்கு ஊசி போடுகிறாள். அவன் மெல்ல மயக்கமாகிறான்.
காட்சி 34
குமாரின் பிணம் உருட்டி கொண்டு வரப்பட அவன் உறவுகள் ஒப்பாரி வைக்கிறார்கள்.
காட்சி 35
குவாட்டர்ஸ். வேணியுடன் அவள் படுக்கையில் நதியா அமர்ந்திருக்கிறாள்.
நதியா: “இது மாதிரி உங்கூட சேர்ந்து உட்கார்ந்து பேசுவேன்னு கனவில கூட நினைக்கல. ஜாலியா இருக்கு. நீ ஏன் டல்லா இருக்கே”
வேணி: “தீலீப் இன்னிக்கு கூப்டிருந்தான். அந்த பொண்ணோட அடுத்த வாரம் நிச்சயதார்த்தமாம்.”
நதியா: “அது எப்டி உன்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணு கூட? நீ வேணும்னா சொல்லு அவன் மேல சீட்டிங் கேஸ் கொடுப்போம்”
வேணி: “வேணாண்டி. இதுனால அவன் எவ்வளவு ஏமாத்துக்காரன்னு தெரிஞ்சிருச்சில்ல. அன்னிக்கு நீ அவனை அந்த பொண்ணு கூட பார்த்ததா சொல்லும் போதே எனக்கு உண்மை தெரியும் நதியா. ஆனா என் ஈகோ ஒத்துக்கல. அவனும் அவளை தன் தங்கச்சின்னு சொல்லி என்னை ஏமாத்தீட்டான். நம்புறதா வேணாமான்னு தெரியல. அந்த கோபத்துல உன்னை கத்தீட்டேன். சாரி டீ”
நதியா: “ஆம்பிளை நாயை மட்டும் நம்பலாண்டி. விசுவாசமா வாலாட்டும்”
வேணி சிரிக்கிறாள். அடுத்து மீண்டும் கவலையாக தலை குனிக்கிறாள்.
நதியா: ”இப்ப என்ன யோசிக்கிற?”
வேணி: ”அந்த குமாரை பத்தித் தான். அவன் தான் அன்னிக்கு என்ன ரேப் பண்ணினான். எனக்கு கொஞ்ச கொஞ்சமா தான் நெனைவு வந்துது. உங்கிட்ட சொல்லலாமா வேணாமான்னு குழம்பிக்கிட்டு இருந்தேன். விஷயம் தெரிஞ்சா திலீப் என்னை விட்டு போயிடுவானான்னு பயந்தேன். இப்போ திலீப்பே போயிட்டான். கடைசியில அந்த குமாரும் செத்துப் போயிட்டான்”
நதியா பெருமூச்சு விடுகிறாள்.
வேணி: “கடவுள் இருக்காருன்னு இப்போ நம்புறியா? கொஞ்சம் லேட்டானாலும் கட்டாயம் தண்டனை கொடுப்பாரு”
நதியா: “நான் ஒண்ணு சொன்னா நமக்குள்ளயே வச்சுப்பியா?”
வேணி: “சரி”
நதியா: “என்மேல பிராமிஸ்”
வேணி: “பிராமிஸ்”
நதியா: “அவனுக்கு விஷ ஊசி போட்டு கொன்னது நான் தான்.”
வேணி: “நீயா?”
நதியா: “ஆமா ரகசியமா வச்சுக்கோ.”
வேணி: “சரி”
நதியா: “ஆமா கடவுள் இருக்கிறாரு வேணி, ஆனா நாம தான் அந்த கடவுள்.”
வேணி: “எப்பிடி?”
நதியா: “லேட்டா தானே தண்டனை கொடுத்தேன்”
முற்றும்

No comments: