Sunday, December 1, 2013

தெய்வம் நின்று கொல்லும் (1)


நாள் 1
காட்சி 1
செவிலிகள் வீணா, நதியா மற்றும் ஜொவினா.
நதியா உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாள். போனை எடுத்து “வார்டு G2க்கு ரெண்டு செலைன் சொல்லி இருந்தோமே ஆங் ஆள் இல்லியா, ஆள் அனுப்புங்க, யாரும் இல்லேனா நீங்களே எடுத்து வாங்க, கடைசியில நான் தான் டாக்டருக்கு பதில் சொல்லணும். பேஷண்டுக்கு அடுத்த பாட்டில் மாத்திட்டு தான் நான் கிளம்பனும். அரைகுறையா விட்டுட்டு போக சொல்றீங்களா? ஒரு பொறுப்பு வேணாமா, அரை மணி முன்னே கூப்டேன் இதையே சொல்றீங்க, ஹலோ ஹலோ”, எதிரில் லைன் கட்டான ஒலி கேட்க கோபமாக போனை வைத்து விட்டு வேலையை தொடர்கிறாள். அடுத்த போனை எடுத்து “ஹவுஸ் கீப்பிங் தானே, பத்து நிமிசத்துக்கு முன்னாடி கூப்டிருந்தேனே? அதான் பில்லோ, பெட்ஷீட் கவர் மாத்தனும், பெட் நம்பர் 38, அவங்க கேட்டு ஒரு மணிநேரம் ஆகுது. என்னது பத்து நிமிஷம் தானே ஆச்சா? ஹலோ நான் அதுக்கு முன்னாடி ரெண்டு தடவை கூப்பிட்டாச்சு. நீங்களே கணக்கு போடுங்க, இல்ல நானே ஹவுஸ் கீப்பிங் வேலையையும் பண்ணனுமா? நான் இன்னும் டாக்டர் வேல மட்டும் தான் பாக்கல”. மீண்டும் போனை வைக்க நினைத்து திரும்ப எடுத்து “வருவீங்களா இல்லியா? நான் ரிப்போர்ட்” அப்போது அங்கு வரும் வீணா அவள் கையில் இருந்து போனை பிடுங்கி வைத்து “செம பசிடி” என்கிறாள்.
நதியா: “உனக்கு பசிக்குதுன்னா நான் என்னடி பண்ணனும்?”
வீணா: “சாப்பிடுற நேரத்துல என்ன போன்ல பஞ்சாயத்து?”
நதியா: “யாரும் இங்கே ஒழுங்கா வேலையை பண்றது இல்ல. ஒண்ணு லேட்டு, இல்ல ஒண்ண சொன்னா இன்னொன்ன எடுத்து வரது. அங்க பாரு பிளட் சாம்பிள் எடுத்து வச்சாச்சு, ஆனா கலக்ட் பண்ணதா சொன்ன ஆள் வரல. பாத்ரூம் குழாய் ஒழுகிக் கிட்டே இருக்குது. அப்புறம் 24 பெட் பேஷண்டுக்கு ஹாட் வாட்டர் கேட்டாங்க. அதுவும் வரல. இங்க யாராவது வேல பார்குறாங்களான்னே சந்தேகமா இருக்கு. எல்லார் பின்னாடியும் நான் ஓட வேண்டி இருக்கு”
வீணா டிபன் பாக்ஸை திறந்தபடி: “ஆமா மொத்த ஆஸ்பத்திரியும் உன் தலையில இருக்கிற மாதிரி பேசுற. நீ வேணும்னா நாளைக்கு லீவ் எடுத்து பாரேன், எல்லாம் இங்கே ஒழுங்கா அதது பாட்டுக்கு நடக்கும்”
நதியா: “இந்த சோம்பேறிங்கள எல்லாம் சப்போர்ட் பண்றியா? இவங்க வேலையை ஒழுங்கா செஞ்சா நான் ஏன் கத்துறேன்?”
வீணா: “நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா?”
நதியா: “நான் என்ன பண்ணீட்டேன்”
மற்றொரு செவிலியான ஜோவினாவும் வந்து சேர்ந்து கொள்கிறாள். மலையாள கொச்சையுடன்: “என்ன ரெண்டு பேரும் சண்டை போட ஆரமிச்சாச்சா?”
வீணா: “ஒரு பொட்டு வக்கிறியா? நகை நட்டு போடுறியா? நல்ல செருப்பு போடுறியா?”
ஜோவினா: “அதானே”
நதியா ஜோவினாவிடம்: “கோள் மூட்டி விடுறியா? நாங்க சண்டை போடுறதுக்கு உன் ஹெல்ப் தேவையில்ல”
வீணா ஸ்பூனில் சாப்பிட்ட படியே: “அட்லீஸ்ட் சமைக்கிறியா? சொந்தமா ஒரு கப் காப்பி போட்டிருக்கியா? ஒரு பொண்ணுன்னா இதெல்லாம் பண்ணனும்டி”
ஜோவினா: “அது பாயிண்ட். நல்லா சமைச்சாலே பாதி பிரச்சனை சரியாயிடும்”
நதியா: “போடி”
ஜோவினா: “எனக்கு சரியா சமையல் பண்ண வரலேன்னு தான் நர்ஸிங் கத்துக்க அனுப்பிச்சாங்க”
வீணா: “உனக்கு நர்ஸிங்கும் வரலியே”
ஜோவினா: “ஆனா என்ன? அடுத்த ஜூன்ல அமெரிக்கா போறேனே, அதுக்கு முன்னாடி கல்யாணம்”
நதியா: “அதுக்கும் நர்ஸிங்கும் என்ன சம்மந்தம்?”
ஜோவினா: “நீ ஒரு பேக்கு. நர்ஸுங்கறதுனால அமெரிக்கா போறேன். அமெரிக்கா போறதுன்னால எனக்கு வரன் கிடைச்சுது.”
வீணா: “உன் ஆளை அமெரிக்கா கூட்டிப் போயிருவியா?”
நதியா: “அவரை சமையல் கத்துக்க சொல்லு”
ஜோவினா: “சேச்சே அது நம்ம சொல்லக் கூடாது. ஆம்பிளைங்க சமைக்கலாமா?”
நதியா: ”ஏன் பொண்ணுன்னா பூ பொட்டு வச்சு சமைச்சுக்கிட்டு உட்காந்திருக்கணுமா”
வீணா: “ஆரம்பிச்சிட்டியா. நீ ஆம்பிளை மாதிரியே இரும்மா. இதோ ஒரு வாய் சாப்பிடு” அவள் நதியாவுக்கு சாப்பாடு ஊட்டுகிறாள்.
நதியா: “செமையா இருக்குடீ. உன்னை கட்டிக்கிறவன் இந்த விசயத்துல கொடுத்து வச்சவன். நான் அம்பிளைன்னா உன்னை உடனடியா கட்டிப்பேன்”. அவள் வீணாவை இடுப்பில் அணைத்துக் கொள்கிறாள்.
வீணா: “அதுக்குத் தான் சொன்னேன். இப்பிடி பேய் மாதிரி மூளியா உட்காந்திருக்காம நாளையில இருந்து தோடு, செயின் எல்லாம் போட்டிட்டு வா. உனக்கும் பாய் பிரண்டு கிடைப்பான். எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா. இப்பிடியே இருந்த உனக்கு ஒருக்காலும் கல்யாணம் ஆகாது. உனக்கு. பொண்ணு மாதிரி மாறீட்டா சமையல் தானே வரும்”
நதியா: “புளோரன்ஸ் நைட்டிங்கேல் தெரியுமா? அவங்க கல்யாணமே பண்ணிக்கல. அவங்கள உலகமே போற்றல? கல்யாணம் பண்ணிக்காம இருந்தா என்ன பெரிய பாவமா?”
வேணி: “extreme examples எடுத்துக்காதே! அவங்க ஏன் கல்யாணம் பண்ணிகலன்னு உனக்கு தெரியுமா? இல்ல கல்யாணம் பண்ணிக்காம நீ இந்த பாடாவதி ஆஸ்பத்திரியில டெம்பரேச்சர் செக் பண்ணி மருந்து கொடுத்து அவங்கள மாதிரி ஆயிடுவியா?”
ஜோவினா: “வேணி நீ பேயின்னதும் தான் ஞாபகம் வருது, நேத்து நைட்டு இவ பேய்ன்னு சொல்லி கத்தி எழுப்பி விட்டதுல இருந்து தூக்கமே போச்சு. இப்ப கூட பாத்ரூம் தனியா போகக் கூட பயமா இருக்கு”. அவள் கொட்டாவி விடுகிறாள்.
வீணா: “ஏண்டி நதி, ஏன் உன் கண்ணுக்கு மட்டும் எல்லாரும் கெட்டவங்களா தெரியுறாங்க. அதே மாதிரி உனக்கு மட்டும் பேயெல்லாம் தெரியுது?”
Flashback – இருட்டான ஒரு ஹால். பெண்கள் வரிசையாக கட்டிலில் தூங்க ஜன்னல் அருகே கிடக்கும் வீணா மீது ஒரு கரம் ஊர்கிறது. அதைப் பக்கத்தில் இருந்து பார்க்கும் நதியா கத்துகிறாள்
நதியா: “நெஜமாவே ஒரு உருவத்தை பார்த்தேண்டி. ஜன்னல் வழியா ஒரு கை உன் மேல படறத பார்த்தேன். அதை பார்த்து கத்தினேன். உடனே அது ஓடிருச்சு”
வீணா: “அதெப்பிடி எனக்கு தெரியல? நீ கத்தினப்ப தான் நானே முழிச்சிக்கிட்டேன்”
நதியா: “ஆமா யானையே வந்து மிதிச்சாலும் தூக்கத்தில எழுந்துக்க மாட்டே”
வீணா: “அங்கே யாருமே இல்ல. நீ கூச்சல் போட்டு எல்லாரையும் எழுப்பி விட்டது தான் மிச்சம். நான் நல்ல ஒரு ட்ரீம்ல் இருந்தேன். கலைச்சு விட்டுட்ட”
ஜோவினா: “யாருடீ டிரீம்ல திலீப்பா?”
வீணா: “ஆமா நாங்க மால்தீவ்ஸ்ல ஒரு virgin beachல தனியா படுத்து கிடக்கிறோம். திலீப் அப்பிடியே திரும்பி என்ன…”
நதியா கோபமாக: “உன்ன?”
வீணா: “அப்போ தான் கூப்பாடு போட்டு கனவை கலைச்சுட்டியே. நீ உபகாரம் பண்றதா நினைச்சுட்டு எல்லோருக்கு உபத்திரம் பண்ற நதி. இன்னி நைட்டு பேய் வந்தா பேசாம என்னை எதுவோ பண்ணிக்கிட்டு போகட்டும். தூக்கத்தில் கத்தி எழுப்பி விடாத”
ஜோவினா: “ஆனா எனக்கு பேய்னா ரொம்ப பயம். நான் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்துல பேய் ரேப் எல்லாம் பண்ணும். எனக்கு பயமா இருக்குடீ. நதியா நான் இன்னிக்கு உன் பக்கத்தில படுத்துக்கிறேன். நீ தான் நைட்டெல்லாம் தூங்க மாட்டியே”
வீணா நதியாவை பார்த்து: “நீ தான் ரொம்ப முற்போக்கு ஆச்சே. மூச்சுக்கு முன்னூரு தடவை பெரியார் பெரியார்னு பேசுறியே? அப்புறம் ஏன் பேய் இருக்குன்னு மட்டும் சொல்றே”
நதியா: “பெரியார் கடவுள் இல்லைன்னு தான் சொன்னார். பேய் இல்லேன்னு சொல்லல. இதுக்கு மட்டும் பெரியாரை இழுப்பீங்களே, அவர் சொன்ன வேறெதையும் கேட்காதீங்க. அது பேயா இல்ல நிஜமான மனுசனான்னு முதல்ல கண்டுபிடிக்க ஒரு வழி பண்ணனும்”
ஜோவினா: “எப்பிடி?”
நதியா: “புது வாட்ச் மேனை போட டீன் கிட்ட வற்புறுத்த போறேன். அந்த பழைய ஆளு செத்ததுக்கு அப்புறம் புது ஆளு போடறதா சொல்லி ரெண்டு வாரம் ஆகுது. இவங்க வாட்ச் மேனை போட்டா ஏன் பேய் வருது? எல்லாரும் பொறுப்பா ஒழுங்கா இருந்தா ஏன் அசம்பாவிதம் நடக்கப் போவுது?”
வீணா: “வாட்ச்மேன் கண்ணுக்கு எப்பிடிடீ பேய் தெரியும்?”
ஜோவினா: “பேய் கண்ணுக்கு தான் மத்தவங்க தெரிவாங்க. ஆனா பேயா ஆசப்பட்டா மட்டும் தான் மத்தவங்க கண்ணுக்கு பேய் தெரியும். இப்போதைக்கு பேய் நதியாவை தான் choose பண்ணி இருக்கு”
நதியா: “சேச்சி நீ வாயை மூடு. வாட்ச்மேனை முதல்ல போடட்டும். அப்புறமும் ராத்திரி தொந்தரவு இருந்தா அது பேய். ஆனால் பேய் வரலைன்னா நேத்து வந்தது உண்மையான ஆள் தான்”

2 comments:

Sai Ram said...

நதியா நல்ல கேரக்டர் உருவாக்கம். கலகலவென தொடங்குகிறது.

Sai Ram said...

கொஞ்சம் bold, para format இதெல்லாம் செய்தால் படிக்க ஈஸியாக இருக்குமே!?