பணம் தானே எல்லாமே! 
அப்பாடா ஒருவழியா முடிஞ்சுது!
ஒருவழியாய் இந்தியா ஆஸ்திரேலியா போட்டித் தொடர் முடிந்து விட்டது. ஒவ்வொரு போட்டி முடிவிலும் தோனி அதே புகாரை தான் வாசித்தார். தோற்றாலும் பெய்லி ரொம்ப ஏமாற்றம் இல்லாமல் எளிதாக எடுத்துக் கொண்டார். தோனி எப்போதும் அப்படித் தான் என்பதால் தனியாக தெரியவில்லை. ஆனால் வெற்றி தோல்விகளுக்கு கிட்டத்தட்ட மதிப்பே இல்லாமல் போன ஒரு தொடர் என இதை சொல்ல வேண்டும். எதிரணி 350 அடித்தாலும் அவ்வளவு தானே எனும் அசட்டை. இந்திய அணி முதலில் 350 அடித்தால் இவ்வளவு தானா எனும் பயம். யார் ஜெயித்தாலும் இவ்வளவு பிரம்மாண்டமான ஸ்கோர்களை அடித்ததில் பரஸ்பர திருப்தி. எல்லைக் கோட்டுக்கு வெளியே நாற்காலிகளில் இருக்கும் வீச்சாளர்களின் முகங்களில் மட்டும் கலக்கம். 


தோனி பொதுவாக சொற்களை பொறுக்கிப் பார்த்து பத்து தடவை யோசித்து பயன்படுத்துவார். இம்முறை தொடர்ச்சியாக பந்து வீச்சின் அவலத்துக்கு 4 களத்தடுப்பாளர்கள் மட்டுமே எல்லைக் கோட்டில் நிற்க வேண்டும் என்கிற ஐ.சி.சி விதியை மட்டுமே கடிந்து கொண்டார். ஒருமுறை கூட ஐ.பி.எல், சுருங்கிய எல்லைக் கோடு மற்றும் ஆடுதளம் ஆகிய சொற்கள் அவர் வாயில் இருந்து உதிரவில்லை.
மட்டையாளர்கள் துவம்சம் செய்யும் போது தாக்குப்பிடிக்க ஒன்று பந்து வீச்சாளரிடம் நல்ல வேகம் அல்லது விநோதமான பாணி வேண்டும். 145 கி.மீ வீசுபவர்களையோ அஜ்மல் போன்ற சிக்கலான சுழலர்களையோ ஊகித்து எள்தில் ஓவருக்கு 25 ஓட்டங்களுக்கு அடிக்க முடியாது. இறுதி ஆட்ட முடிவில் தோனி கேட்டார்: “ஆஸி பந்து வீச்சாளர்களும் தான் அடி வாங்கினார்கள். தொடர்ந்து அவர்களுக்கு எதிராய் 300 ஓட்டங்கள் எடுத்தோம். இன்று 380 அடித்தோம். ஆனாலும் ஏன் இந்திய வீச்சாளர்களை மட்டும் குற்றம் காண்கிறார்கள் என புரியவில்லை?”. அதற்கான பதில் இது மட்டுமே. ஆஸி வீச்சாளர்கள் வேகமாக கட்டுப்பாட்டுடன் வீசீயதால் அவர்களை அவ்வளவு எளிதாக துச்சமாக நம்மவர்களால் அடிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் இந்தியர்களை விட அதிக விக்கெட்டுகளை முக்கியமான நேரங்களில் வீழ்த்தினார்கள். முழுநீளத்தில் வீச அஞ்சவில்லை. உயரப்பந்துகளை தோளுக்கு மேல் எகிறும் படி வீசினார்கள். வினய் குமார் போல் இடுப்புக்கு கீழ் வீசவில்லை. ஆஸி பந்துவீச்சை இந்தியர்கள் அன்றி பிறர் இப்படி விளாசியிருக்க முடியாது. இந்திய பந்து வீச்சை வங்கதேசம் கூட இதே போல் துச்சமாக அடித்து கிழிக்கும். 2012 உலகக் கோப்பை முதல் போட்டி நல்ல உதாரணம்.

இம்முறை ஐ.பி.எல் நம் மிதவேக வீச்சாளர்கள் மட்டுமல்ல அஷ்வினை கூட கடுமையாக அச்சுறுத்தி இருந்தது இந்த தொடரில் தான் தெரிந்தது. தொடர்ந்து மட்டையாளர்கள் உங்களை சிக்சர்களாய் விளாசுவதும், அவர்களை கட்டுப்படுத்துவது என்கிற கவலையே ஒரே சிந்தனையாய் இருப்பதும் 50 ஓவர் ஆட்டத்துக்கு உகந்த மனநிலை அல்ல. 20 ஓவர் ஆட்டத்தில் பல்வேறு வகை பந்துகளை வீசி கட்டுப்படுத்துவதும், அடி வாங்கத் தான் போகிறோம் எப்படியும் என்கிற தயார் மனநிலையுடன் இருப்பதும் உதவலாம். ஆனால் வினய் குமார் போன்றவர்கள் முழுநீளப் பந்தை மட்டையாளர்கள் நாலுக்கு அடித்த மறுநொடியில் இடிந்தே குறைநீளத்தில் மட்டுமே வீசத் துவங்குகிறார்கள். அதுவும் 125 கி.மீ வேகத்தில். இங்கிலாந்தில் முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கைக்கு எதிராக வினய் தன் முதல் ஓவரிலேயே 100 கி.மீ மிதப் பந்தை போட்டார். அதைக் கண்ட வாசிம் அக்ரம் ஒரு பந்துவீச்சாளர் தன் முதல் ஓவரிலேயே இவ்வளவு எதிர்மறையாய் யோசிப்பது ஆபத்தானது என்றார். ஆனால் வினய் குமார் முன்னர் 135-140 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருந்தார். பின்னர் தொடர்ந்து பல ஐ.பி.எல் தொடர்களில் ஆடி ஆடி தன்னை தக்க வைத்துக் கொள்ள வேகத்தை 15 கி.மீ குறைத்து கிட்டத்தட்ட விக்கெட் எடுக்கும் எண்ணத்தையே மறந்து முழுக்க ஓட்டங்களை கட்டுப்படுத்தும் மனநிலைக்கு இப்போது போய் விட்டார். இனி அவர் சர்வதேச ஆட்டங்கள் ஆடாவிட்டாலும் பரவாயில்லை. ஐந்து வருடங்கள் ஐ.பி.எல் ஆடி பல கோடிகள் சம்பாதித்து விடுவார். அதற்கு வேகமோ விக்கெட் வீழ்த்தும் திறனோ தேவையில்லை.
அஷ்வினுக்கும் இது தான் நடந்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் பந்துக்கு இன்னும் அதிக ஆற்றலும் சுழலும் அளித்தார். ஒவ்வொரு பந்தும் சுழன்று எகிறியது. ஆனால் ஐ.பி.எல் வந்ததும் சுழலை குறைத்து வேகமாய் பந்தை எறியத் துவங்கினார். வேறுபட்ட பந்துகளை நுழைக்கும் அவசரம் காட்டினார். விக்கெட் எடுக்கும் எண்ணத்தை துறந்தார். அடுத்து 50 ஓவர் போட்டிகள் ஆஸிகளுக்கு எதிராக துவங்கியதும் அவருக்கு ஆட்டப்போக்கை உடனடியாக மாற்ற முடியவில்லை. ஆறாவது போட்டியில் மிஷ்ராவை நுழைத்ததும் அந்த அதிர்ச்சியில் மீண்டும் சுழல் மற்றும் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தி தன் திறனை மீட்டார். ஆனால் இப்படி ஆட்டவகைமைக்கு ஏற்றபடி பந்துவீச்சு பாணியை மாற்றுவது நல்லதல்ல. எளிதும் அல்ல. சிறந்த வீச்சாளர்கள் – அஜ்மல், நரேன் போன்றவர்கள் – இந்த தவறை செய்வதில்லை. அஷ்வினை பெய்லி ஸ்வீப் செய்து நான்கு அடித்தால் உடனே அவர் அஞ்சி பந்தை குறைநீளாக்க துவங்கினார். முன்பு அஷ்வின் இதை ஒரு சவாலாக எடுத்து முழுநீளத்தில் மேலும் வீசுவார். அப்படித் தான் அவர் ஆரம்பத்தில் விக்கெட்கள் எடுத்தார். ஆனால் ஐ.பி.எல் அவரை கோர விபத்தை பார்க்க நேர்ந்த குழந்தை போல் மாற்றி விடுகிறது.

ஆடுதளங்கள் இம்முறை இவ்வளவு தட்டையாக இருந்ததற்கு நிச்சயம் வியாபார நோக்கம் உள்ளது. முதல் சில ஆட்டங்களில் மைதானங்கள் பாதி காலியாக இருந்தன. ஆனால் போக போக அவை நிரம்பி வழியத் துவங்கின. ரசிகர்களை ஈர்க்க வேண்டுமானால் 700 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக் கூடிய ஆடுதளங்கள் தான் வேண்டும் என கிரிக்கெட் வாரியம் நினைத்திருக்கலாம். அத்திட்டம் வெற்றியும் பெற்றது. ஆனால் விளைவு படுமோசமாக பந்துவீச்சாளர்களை மட்டும் பாதித்திருக்கிறது. தோனி இதை ஏற்கனவே நன்கு உணர்ந்திருந்தார். அவர் ஜடேஜா, அஷ்வினை அதிக ஆபத்தில்லாத நேரங்களில் வீச செய்தார். ஆனால் வேறு வழியில்லாமல் ஆன போது மட்டும் இறுதி ஓவர்களில் வீச அழைத்தார். உனக்தத் தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பில் மிக நன்றாக வீசினார். ஆனால் அவரை இந்த ரணகளத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு பிற ஆட்டங்களில் ஆட வைக்கவில்லை. புவனேஸ்வரையும் தோனி பாதுகாக்கவே முயன்றார். ஆனால் வினய் குமாரும் இஷாந்தும் மிக சிரமமான பவர் பிளே மற்றும் இறுதி ஓவர்களை வீசும் துர்பாக்கியத்தை திரும்ப திரும்ப பெற்றனர். விளைவாக அவர்களது பெயர் மிக மோசமாக கறைபடிந்தது. ஆனால் தோனியால் எவ்வளவு வீச்சாளர்களை தான் பாதுகாக்க முடியும்?

இந்தியா குறைந்தது சுழல் சாதகமான ஆடுதளங்களை உருவாக்கி இருக்கலாம். அவற்றில் அஷ்வினுடன் மிஷ்ரா, ராகுல் ஷர்மா, தாம்பெ, ஹர்மீத் சிங் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம். எதிர்காலத்தில் ஆட சாத்தியம் உள்ள நல்ல சுழலர்களுக்கான சோதனைக்களமாக இத்தொடரை பயன்படுத்தி இருக்கலாம். 
நம்ம ஊர் சைனாமேன்

குறிப்பாக குல்தீப் யாதவ். அவர் ஒரு இடது கை கால்சுழலர். சைனாமேன் என்பார்கள். பிரேட் ஹோக் போல. அவர் இன்னும் ரஞ்சி ஆடவில்லை. 18 வயது தான் ஆகிறது. இன்னும் முதிராமல் இருக்கலாம். ஆனால் இப்போது இந்திய பந்துவீச்சு உள்ள நிலையில் நமக்கு அஜந்தா மெண்டிஸ் போல் ஒரு விநோதமான சுழலர் தேவைப்படுகிறார். இத்தொடரில் வாய்ப்பளித்திருந்தால் நிச்சயம் கலக்கி இருப்பார்.

இப்படி ஏற்கனவே நல்ல மட்டையாளர்களாக அறியப்பட்ட ரோஹித், தவான், தோனி போன்றவர்கள் ஓட்டங்கள் குவித்ததாலோ ஏற்கனவே மோசமான வீச்சாளர்கள் என திட்டப்பட்ட வினய், இஷாந்த் போன்றவர்கள் அடித்து நொறுக்கப்பட்டதாலோ யாருக்கு என்ன பயன்? ஆஸ்திரேலியாவும் இந்த ஆடுகளங்களில் பாக்னர், மேக்ஸ்வெல், பெய்லி அடித்த ஓட்டங்களை வைத்து ஆஷஸ் தொடருக்கான தேர்வுகளை செய்வது அபத்தமாக இருக்கும்.

யாருக்கும் பயனில்லாத வெறும் அசட்டு பொழுதுபோக்கு மதிப்பு மட்டும் போதுமா? நம் கிரிக்கெட் வாரியத்துக்கு போதும். தரம், திட்டமிடல், எதிர்காலம் இதெல்லாம் யாருக்கும் வேண்டும். ஐ.பி.எல் பாணியில் ஒரே ஆட்டத்தில் 38 சிகஸர்கள் அடித்து மக்கள் கவனம் பெற்று ரசிகர்கள் கூட்டத்தை பெருக்கி கஜானாவை நிரப்ப வேண்டும். பணம் தானே எல்லாம்!

Comments

manjoorraja said…
நல்லதொரு கட்டுரை.

ஆடுகளங்கள் அனைத்துமே மட்டையாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதனால் இரு அணி பந்து வீச்சாளர்களும் மிகவும் திணறினார்கள் என்பதே உண்மை. இப்படி தொடர்ந்து செய்வது இந்த விளையாட்டுக்கே தீமையாய் முடியும்.
Dinesh said…
கொஞ்சம் மொழி'பெயர்ப்பு' இல்லமால் இருக்கலாமே..readability நல்லாஇருக்கும்.

ஜெயமோகன் அளவுக்கு தமிழ் எழுத்தை ஆங்கிலத்தில் எழுத வேண்டாம். அதற்காக full lenght, short pitch என்ற பதத்திற்கு முழுநீளத்தில், குறைநீளத்தில் என்றும் medium pacers மிதவேக வீச்சாளர்கள் , batsman மட்டையாளர்கள் என வாசிக்கும் போது வரும் இடையுருகள் connect ஆகல சார்.
ஆமாம்...! இந்த விளையாட்டைப் பொறுத்தவரை பணம் தான் எல்லாமே...! ஆடுகளம், பந்து வீச்சாளர்/மட்டை பிடிப்பாளரின் நிலை என கிரிக்கெட் தொடரை நீங்கள் அலசிய விதம் அருமை! எனக்குத் தெரியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி!
தினேஷ், கொஞ்ச நாளில் பழகி விடும் உங்களுக்கும் எனக்கும். இல்லையெனில் ஆங்கிலத்தில் தொடர்வோம்
நன்றி மஞ்சூர் ராஜா, பாலகணேஷ்
Tamil Bloggers said…
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.
உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.. வாழ்த்துகள்.