Wednesday, October 9, 2013

இதோ பாருங்க சார் ஒரு குறியீடு


அஞ்சாதே


தமிழில் பொதுவாக சொல்லப்படுவது போல் அசலான மாற்று சினிமா என ஒன்று உண்டா என்கிற சந்தேகம் எனக்கு நிரந்தரமாகவே உண்டு. கடந்த பத்தாண்டுகளில் பல நல்ல சுவாரஸ்யமான அசலான ஆழமான நவஎதார்த்த படங்கள் வந்துள்ளன. பின்நவீனத்துவ கூறுகளுள்ள பகடிகள் தோன்றியுள்ளன. ஆனால் இவையும் கணிசமாய் வாழ்வின் காத்திரமான பிரச்சனைகளை அலச முயல்பவை அல்ல. வித்தியாசமாக, சமூக, உளவியல் பார்வையுடன் சொல்லப்பட்ட பழைய கதைகளே.
முன்னரும், அதாவது தொண்ணூறுகளிலும், நல்ல படங்கள் வந்தன. இயக்குநர்கள் எந்த ஒளிவட்டமும் இன்றி வெறும் கதைசொல்லி என்கிற பட்டத்துடன் திருப்தி உற்றனர். ஆனால் இன்றைய இயக்குநர்களுக்கு தாம் கலைஞர்கள் என்று தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய ஒரு அநாவசிய கட்டாயம் உள்ளது. அதனால் படங்களில் தேவையற்ற அலங்காரங்களை நுழைப்பார்கள். ஜீரணிக்காத பெரும் தத்துவ பிரச்சனைகளை திணிப்பார்கள். 

ஒரு காலத்தில் வெறும் நேர்த்தியான கதைசொல்லி என்கிற கோரலுடன் திருப்தியுற்றிருந்த மணிரத்னம் கூட கடந்த பத்தாண்டில் மனதின் அகங்காரங்கள், தீமை மீதான மோகம் (“ராவணன்”), நன்மை தீமைக்கு இடையிலான இடையறாத பிரபஞ்ச போராட்டம் (”கடல்”) ஆகிய விசயங்களை பேசும் அழுத்தத்துக்கு உள்ளாகி கல்வாரி மலையில் சிலுவை தூக்க முடியாமல் சுமந்து சிரமப்பட்டார். இது எளிய கதைகள் எனும் நோஞ்சான் குதிரை மீது கலை எனும் மலையை ஏற்றி துன்புறுத்தும் நட்சத்திர இயக்குநர்களின் காலகட்டம். சாதாரண காட்சிகளில் கூட உச்சியில் இருந்து பம்பரம் போல் படக்கருவியை சுழற்றி இறக்கி காட்டும் (”அரவான்”), தேவையில்லாமல் கிராமத்து படங்களில் பியோனா இசையும், சேப்பியார் வண்ணமும் கொண்டு உலகத் தரம் காட்ட முயலும் காலகட்டம். இந்த இயக்குநர்களின் ஒரு குறிப்பிட்ட உபாதை தேவையில்லாமல் குறியோடு அல்லது உருவகங்களை காட்டுவது – அதோடு நின்றால் பரவாயில்லை. நீங்கள் அவற்றை கவனிக்கவில்லை என்றால் அவர்களே “இதோ பாருங்க சார் குறியீடு, இதன் பொருள் இது, இது, இதையெல்லாம் நீங்க கவனிப்பீங்கன்னு ராப்பகலா யோசித்து வச்சது சார்” என மைக் பிடித்து பேச ஆரம்பிப்பார்கள். குறியீட்டை கவனிக்கவில்லை அல்லது பார்க்கவில்லை என்றால் அது யார் தவறு?
குறியீடு, உருவகம், உவமை போன்றவை டி.வி, மின்விசிறி போன்று உபகரணங்கள். சில பேர் டி.வியை போட்டுக் கொண்டே போனில் பேசிக் கொண்டே நகம் வெட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் குறிப்பாய் எதைத்தான் பண்ணுகிறார்கள் என சொல்ல முடியாது. ”மிருகம்” மற்றும் ”விருமாண்டி” போன்ற படங்களில் காளையை காட்டித் தான் நாயகனின் ஆண்மையை, வீரியத்தை, வலிமையை வலியுறுத்த வேண்டிய அவசியம் இல்லை. சும்மா அலங்காரத்துக்காக காளை சுற்றிக் கொண்டிருக்கும்; பார்வையாளர்கள் அதை ஒரு உருவகமாகவே பார்க்க மாட்டார்கள். கொசு பறப்பதை என்றாவது உன்னிப்பாக பார்ப்பீர்களா? ஆனால் சுர்ரென்று கடிக்கும் போது தான் கவனிப்போம். அது போலத் தான் இந்த அலங்கார உருவகங்களை நீங்கள் இயக்குநரே பேட்டியில் விளக்கும் போது தான் ஒரு எரிச்சலுடன் கவனிப்பீர்கள். மிஷ்கினின் “நந்தலாலாவில்” நகராட்சி குப்பை தொட்டியை கவிழ்த்து விட்டது போல் எங்கு நோக்கினும் உருவகமாய் சிதறிக் கிடக்கும். மற்ற படங்களில் அங்கங்கே சொருகி இருப்பார். அவர் தனது “அஞ்சாதே” பற்றி பேசும் போது இடைவேளையின் போது வரும் ஒரு உச்சி கோண காட்சியில் நாயகன் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிற்பதை காட்டி அது அவன் வாழ்க்கையில் நேரும் சிக்கலுக்கு ஒரு குறியீடு என்றார். அக்காட்சி பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அந்த சிக்கல் தான் ஏற்கனவே படத்தில் அதுவரை விரிவாக விளக்கப்பட்டு ஆயிற்றே! பிறகு எதற்கு திரும்பவும் அழுத்தி சொல்ல ஒரு குறியீடு? இயக்குநர்களுக்கு தம் கலையறிவு பற்றி சிலாகிப்பதற்கும், அடிக்கடி “இதோ பார்” என்ற பார்வையாளனுக்கு வகுப்பெடுப்பதற்கும் அன்றி இந்த மாதிரி குறியீடுகளுக்கு கடற்கரை ஜோசியக்காரிகள் வைத்திருக்கும் குச்சி அளவுக்கு கூட மதிப்பு கிடையாது.
இந்த மாதிரி உருவகங்களை இலக்கியத்தில் சர்வசாதாரணமாக ஆரம்ப நிலை எழுத்தாளர்களே அங்கங்கே தூவி வைத்திருப்பார்கள். உதாரணமாய் தன் விவாகரத்தான மனைவியின் வீட்டுக்கு நாயகன் வருகிறான் என கொள்வோம். அப்போது வருகிற பாதை, வீட்டின் கதவு, ஜன்னல், அல்லது பூனை, காக்கா, எச்சில் தட்டு எதையாவது குறியீடாக்க எழுத்தாளனின் கை பரபரக்கும். ஆனால் நேரடி கூறலில் இயலாது போகிற ஒரு விசயத்தை சுட்டத் தான் குறியீடுகள் அவசியம். பெரும்பாலும் அரூபமான, காட்சிப்படுத்த சிக்கலான மனநிலை, ஒரு தத்துவார்த்த நிலை ஆகியவை. மௌனி இதில் விற்பன்னர். அவர் கதை கூற அல்ல, ஒரு அரூப நிலையை பேசவே எழுதுகிறார் என்பதால் அவர் ஒரு நிலப்பரப்பையோ சும்மா வீட்டுக்கு வந்து போவதையோ குறியீடாக மாற்றும் போது நியாயமாக இருக்கிறது. மௌனியால் அவர் உத்தேசிக்கிற விசயங்களை எதார்த்த மொழியில் சித்தரிப்பது மிக மிக கடினம். ஆனால் மிஷ்கினிக்கோ “எலிப்பத்தாயத்தில்” அடூருக்கோ இந்த சொல்லமுடியாத அரூப நிலையை சித்தரிக்கும் பிரச்சனை இல்லை. ஒரு கெத்துக்காகத் தான் எலிப்பொறியை அடூர் படத்தில் கொண்டு வருகிறார்.
குறியீட்டை கதையின் ஒரு பகுதியாக பார்வையாளனுக்கு தனியாய் தெரியாத படி பயன்படுத்துவதற்கு கீஸ்லாவஸ்கியின் “வெள்ளை” படத்தின் ஒரு காட்சி நல்ல உதாரணம். நாயகன் தொடர்ந்து தன் மனைவியால் உதாசீனிக்கப்படுகிற எல்லாராலும் கேலிக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிற ஒரு பாத்திரம். அவன் தன்னை விட்டுப் போன மனைவியை தேடி புது ஊருக்கு போகிறான். நன்றாக அடையணிந்து கவனமாக படிக்கட்டு ஒன்று ஏறுகையில் மேலே இருந்து புறா அவன் மீது எச்சமிடுகிறது. அங்கதமும் அவலமும் கலந்த ஒரு உணர்வை இது நம்மிடம் தோற்றுவிக்கிறது. இது வழக்கமான ஒரு சம்பவம் என்பதால் குறியீடாக தனித்து நிற்பதில்லை. ஆனால் உன்னிப்பாய் பார்ப்பவர்களுக்கு இது ஒரு குறியீடும் தான்.
உம்பர்த்தோ ஈக்கோவின் “ஒரு டி.வி நிகழ்ச்சியை நடத்துவது எப்படி?” என்கிற பகடிக் கட்டுரையில் அவர் ஒரு புது ஊருக்கு போயிருந்த போது அங்குள்ள மக்களின் ஒரு விநோத பழக்கத்தை கவனித்ததை கூறுகிறார். அந்த மக்கள் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் கதவை திறந்ததும் “இதோ கதவை திறந்து விட்டேன்” என்பார்களாம். அது போல் நாற்காலியை காட்டி “இதோ நாற்காலி, இதோ உட்கார்ந்து விட்டீர்கள், இதோ தண்ணீர், இதோ குடித்து விட்டீர்கள்” என்று எல்லாவற்றையும் விளக்கி கூறுவார்களாம். அந்த ஊர் நாடகங்களில் “இப்போது நகைச்சுவை காட்சி ஒன்று வரப்போகிறது, இப்போது அழகான நடனம் ஒன்று பார்க்கப் போகிறீர்கள்” என அறிவிப்பார்களாம். இதைப் படிக்கிற போது “அட நம் டிவி நிகழ்ச்சிகளிலும் இதே குரங்குத் தனம் தானே பண்ணுகிறார்கள்” என நமக்குத் தோன்றும். “இப்போது சூப்பரான காமெடிக் காட்சி ஒன்று வரப் போகிறது” என்று ஆதித்யா சேனல் போன்று முழுநேர நகைச்சுவை அலைவரிசையிலே சொல்லுவார்கள். அதில் நகைச்சுவை காட்சி அல்லாமல் பாட்டா வரும்? என்னுடைய அம்மா ஊரில் இருந்து வந்தால் எங்க வீட்டில் உள்ள ஏதாவது ஒரு காலி டப்பாவை பார்த்தால் போதும் அதை துடைத்தபடி “இது காலியாக இருக்கிறது, இதில் ஏதாவது பிஸ்கட்டோ சிப்ஸொ மிக்சரோ இருந்தால் போட்டு வைக்கலாம்” என டி.வி ஒருங்கிணைப்பாளர் போலவே பேசுவார். நான் “நீயா நானா” நிகழ்ச்சிக்கு போகும் போதெல்லாம் அவர்கள் மைக்கில் கிளாப்ஸ் என்று கத்தும் போது மொத்த கூட்டமும் கைத்தட்டுகையில் “என்ன அபத்தம், எதற்காக யாருக்காக கை தட்டுகிறோம்” என யோசிப்பேன். வகுப்பில் ஆங்கில ஆசிரியர் வந்ததும் கரும்பலகையில் மேலே “ஆங்கிலம்” என கொட்டையாக எழுதுவார். கிரிக்கெட் வர்ணனையில் ரவிசாஸ்திரி ஒவ்வொரு ஓவர் முடிந்ததும் 55க்கு 1 என்றோ 98க்கு 2 என்றோ சொல்லாமல் முடிக்க மாட்டார். பல சமயங்களில் திரையில் உள்ளதை அப்படியே வாசித்து காட்டுவதன்றி வர்ணனையாளர்களுக்கு பேச ஒன்றும் இருக்காது அல்லது அப்படி சொல்லுவது ஒரு தவிர்க்க இயலாத சடங்காகவும் இருக்கலாம். என்னுடைய ஒரு நண்பன் போன் பண்ணி “நீ தான் என்னை அழைப்பதில்லை; அதான் நானே கூப்பிட்டேன்” என்பான். நானும் “ரொம்ப வேலையாய் போயிடுச்சு. அதான் கூப்பிடலடா” என்பேன். நான் கூப்பிடவில்லை, காரணம் அவகாசமில்லாமல் போய்விட்டது என்பது இருவருக்கும் தெரியும்; ஆனாலும் இந்த வசனங்களை ஒவ்வொரு முறையும் சொல்லுவோம். காப்பி பொடி பாக்கெட்டின் மேல் இங்கே கத்தரிக்கவும் என கோடு போட்டிருப்பார்கள். சரியாக அங்கே வெட்டாமல் கொஞ்சம் மேலே கீழே வெட்டினால் காப்பித் தூள் வராதா? சில எழுத்தாளர்களுக்கு என்று “ ‘ஒரு வாசகர் என்னிடம் இப்படி…’ அல்லது ’வாழ்க்கையில் நாம்’” என்கிற மாதிரி ஆரம்பிக்காமல் எழுதவே முடியாது. பெரும்பாலான பத்திரிகை கட்டுரைகளை நான் பாதியில் தான் படிப்பேன், அது போல் பாதியிலே நிறுத்தியும் விடுவேன். முன்பும் பின்பும் வெறும் அலங்காரம் தான். விஷயம் பாதியில் தொடங்கி பாதியிலே முடிந்து விடும். எழுத்தாளர் தான் சொல்ல வந்ததற்கு சின்ன குற்றவுணர்வுடன் முகாந்திரம் அமைத்து சாஷ்டாங்கமாய் ஆரம்பித்து “இவ்வளவு தூரம் நான் சொன்னதை சரியாய் புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள், அதனால் கடைசியாய் மன்னித்து கொள்ளுங்கள்” என்கிற கணக்கில் ரெண்டு பத்தியை முடிவில் பின்ன்யிருப்பார். முதல் ரெண்டு பத்தியில் இறுதி ரெண்டு பத்தியும் வழுக்கைத் தலையர் ஈடுகட்டுவதற்கு பங்க் முடியும் கட்டாய் மீசையும் தாடியும் வளர்ப்பது போல். இதைப் போல் ”தோசை சாப்பிடுங்க” என தட்டை நீட்டுவது போல, “குட்டித் தூக்கம் போடப் போறேன்” என்று விட்டு அடுத்த நொடி அசந்து தூங்குவது போல் குறட்டை எல்லாம் விட்டு பாவனை பண்ணுவது போல பல சந்தப்பங்களில் நாம் தினமும் எத்தனையோ அர்த்தமற்ற சொற்றொடர்களை கூறிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எதுவும் நம் தமிழ் சினிமாவின் நட்சத்திர “உலகப்பட” இயக்குநர்கள் வகுப்பெடுப்பது போல் வராது

6 comments:

dinesh.88560 said...

"பாம்பே" உயிரே பாடலில் மநீஷாவின் பர்தா மாட்டிக் கொள்ளும்...அவர் அதை விடுவித்து நாயகனை நோக்கி ஓடுவார்...இது வேண்டுமானால் சொல்லலாம்..."மௌனராகத்தின்" கறுப்பு, வெள்ளை AMBIENCEகூட...

இன்னும் பாலச்சந்தர் தான் உச்சகட்ட குறியீட்டு கொடூரம் நிகழ்த்தியவர்

dinesh.88560 said...

மௌனி தரை மீது ஓரு ஆகர்ஷன மனடலத்தை, வேறு ஓரு உலகத்தை காதலும் சாதலும் சார்ந்து உருவாக்க முயன்றார்....மிஷ்கினும் அதே போல தான் ஓரு கதை உலகம் நிறுவ முயல்கிறார்...அங்கே நன்மை, தீமை இடையே ஊசலாடும் மாந்தர்கள் இருக்கிறார்கள்...வாழ்வின் நிகழ்வுகள் அவர்களை எந்தப் பக்கமும் சாய்க்கும்..அவை வெளிவர இரவு ஏதுவாக காட்டப்படுகிறது...ஆனால் ராம் சொல்லும் "உலகமயமாக்கல்" குறியீடுகள் ஏற்றுகொள்ள முடியாதவை...வலிந்து திணிக்கபட்டவை...

Imsai Arasi said...

//பெரும்பாலான பத்திரிகை கட்டுரைகளை நான் பாதியில் தான் படிப்பேன், அது போல் பாதியிலே நிறுத்தியும் விடுவேன். முன்பும் பின்பும் வெறும் அலங்காரம் தான். விஷயம் பாதியில் தொடங்கி பாதியிலே முடிந்து விடும்.//
இங்கையும் அதே தான் செய்திருக்கிறிகள்... இவ்வளவு உதாரணம் தேவையா?! பாதியில் படித்து முடித்து விட்டேன் :)

மைந்தன் சிவா said...

நல்ல கட்டுரை :)

பினாத்தல் சுரேஷ் said...

ரவி சாஸ்திரி ஓவரின் இறுதியில் 98/2 என்று சொல்வது மட்டும் மற்ற தேய்வழக்குகளோடு ஒப்பிடக்கூடாது - அது இந்த ஓவர் முடிந்துவிட்டது, விளம்பரம் போடலாம் என்பதற்கான cue.

எனவே, அது நிஜமான குறியீடேதான்.

மற்றவைகள்.......

சேக்காளி said...

விடுங்க.இதையெல்லாம் சுமந்துக்கிட்டு அலையற மாதிரியா நெலம இருக்கு.மிஷ்கின் அடுத்த படத்துல வர்ற குறியீடுகளை பற்றி பேசமாட்டாருன்னு நம்புவோம்.(வேற என்ன செய்ய)