“தங்கமீன்கள்”: காக்கா சொல்லிச்சா மிஸ்?
தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்” ஒரு சிறப்பு அதைப் போல் மற்றொரு படம் தமிழில் இல்லை என்பது.


விட்டேத்தி நாயகர்கள்: கல்யாணியும் சங்கரன் குட்டியும்
இப்படத்தின் கல்யாணி பாத்திரமும் முன்மாதிரி தான். கடந்த பத்து வருடங்களில் நம் சினிமாவில் ஊதாரி நாயகன்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே சிக்கல் அவர்கள் வெட்டியானாக இருந்தாலும் ரௌடியாக இருந்தாலும் மகத்துவப்படுத்தும் ஏதாவது ஒரு நாயகப் பண்பு வந்து விடும். விட்டேத்தித் தனத்தை ஒரு உயர்குணமாக காட்டும் போக்கு இங்குள்ளது. ஆனால் உண்மையில் வித்தேத்தியான மனிதர்களுக்கு எந்த நியாயப்படுத்தலும் கிடையாது. அவர்களுக்கு தாம் ஏன் அப்படி இருக்கிறோம் என தெரியாது; வேறு எப்படி வாழ வேண்டும் என தெரியாது. தன்முனைப்பற்ற இத்தகைய மனிதர்களை என் ஊரில் நிறைய பார்த்திருக்கிறேன். கல்லூரிப் படிப்பு முடித்து விட்டு வேலைக்கு போக பிடிக்காமல் தயங்காமல் மாடுமேய்ப்பவர்கள், சின்னப் பையன்களோடு தெருவில் கிரிக்கெட் விளையாடியபடி சொந்த வருமானம் இல்லாமல், திருமணம் இல்லாமல், ஊரில் மரியாதை இல்லாமல் இதெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது என புரியாமல் அதன் போக்கில் வாழ்க்கையில் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். சென்னையிலும் இத்தகையவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மாநகர வாழ்க்கை இவர்களுக்கு ஒரு சின்ன தந்திரத்தை சொல்லிக் கொடுத்து விடுகிறது. மிகச் சரியாக சொல்வதானால் நம் விக்கிரமாதித்யன் வகை (மைனஸ் இலக்கியம்). இந்த வகை மனிதர்கள் தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததே இல்லை.
மலையாள சினிமாவில் தொடர்ச்சியாக இத்தகைய மனிதர்களை சித்தரித்திருக்கிறார்கள். அடூர் கோபாலகிருஷ்ணனின் “கொடியேற்றம்” படத்தை “தங்கமீன்களோடு” ஒப்பிடலாம். “கொடியேற்றத்தின்” நாயகன் சங்கரன் குட்டி நடைமுறை வாழ்வோடு எந்தவிதத்திலும் பொருந்திப் போக முடியாதவன். ஊரில் விழா என்றால் உற்சாகமாகி குழந்தைகளோடு திரிகிறவன். ஒரு காட்சியில் அவன் மனைவியோடு வெளியே போகும் போது தெருக்குழந்தைகள் அவனை விளையாட அழைக்கிறார்கள். அவன் “நான் விளையாடி விட்டு வரவா” என மனைவியிடம் கெஞ்சி கேட்கிறான். அவள் அப்பையன்களை கோபத்தில் துரத்தி விடுகிறாள். பின்னர் அவளுக்கு பிரசவ வலி எடுத்து தவிக்கும் போது சங்கரன் குட்டி அவளுக்கு உதவாமல் ஊரில் உள்ள ஒரு பெரியவரின் மகனை ஆஸ்பத்திரியில் ஒத்தாசை செய்ய போய் விடுகிறான். காரணம் அவர் அவனது தினசரி செலவுக்கு பணம் தருவதாக ஒப்புக் கொள்கிறார். சங்கரன் குட்டி தன் மனைவியின் பிரசவத்தை மறந்து போகிறான். பின்னர் அவள் குழந்தை பிறந்ததும் அவனிடம் திரும்ப மறுக்கிறாள். வீட்டுவேலைக்கு போய் பிழைக்கிறாள். கள்ளுக்கடையில் ஒரு பணக்காரர் “உன் மனைவியை நான் வைத்துக் கொள்கிறேன்” என்று சங்கரன் குட்டியிடம் நேரடியாக வம்பு பண்ண அவனுக்கு அவரை அடிக்க பாய்கிறான். சங்கரன் குட்டி பின்னர் வேறு வழியில்லாமல் லாரியில் கிளீனராக போகிறான். ஆனால் ஒரு கட்டத்தில் தன் தங்கையிடம் வந்து “வேலை ரொம்ப சிரமமாக இருக்கிறது, நான் இனி போகவில்லை” என்கிறான். “வேலை என்றால் அப்படித் தான் இருக்கும்” என்கிறாள் அவள். “ஓஹ் அப்படி ஒரு வேலை இப்போ எதற்கு?” என்கிறான் அவன். பின்னர் தன் தங்கையின் வீட்டில் தங்கி வெட்கமின்றி மச்சினனின் பணத்தில் சாப்பிட்டு தூங்குகிறான்.
கல்யாணி இந்த பாத்திரத்தில் இருந்து சின்ன அளவில் தான் வேறுபடுகிறான். அவனுக்கு மனிதர்களுடனான உறவு இன்னும் முக்கியமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தன் கையாலாகாத நிலையை உணர்ந்து கொள்ளுகிறான். ஆனால் இருவருக்கும் செயல்பாட்டு (functional) எதார்த்தத்துடன் ஒரு பிளவு இருக்கிறது. தத்தமது அகவயமான உலகில் பத்திரமாக இருக்கிறார்கள். புறவயமான உலகில் நாம் பண்ணுகிற அத்தனை காரியங்களும், நம் லட்சியங்களை அடைய படுகிற பாடுகளும் அவர்களுக்கு அபத்தமாய் படுகிறது.
Kodiyettam

உதாரணமாக வேலை என்பது சம்பாத்தியத்திற்காக மட்டும் அல்ல என நமக்குத் தெரியும். அடிப்படையான வசதிகளுடன் திருப்தியுறுபவர்களுக்கு பணமும் புகழும் தேவையில்லை – ஆனால் முதலாளித்துவ உலகில் பணத்துக்கு ஒரு குறியீட்டு மதிப்பு உள்ளது. நாய்க்கு பயிற்சியளிக்கையில் முதலில் சாப்பாடு கொடுத்து “வா” என்பார்கள். நன்றாக பயின்ற பின் அதனிடம் “வா” அல்லது “உட்கார்” என்றால் சாப்பாடு என்று தான் பொருள் படும். சாப்பாட்டு சுவை என்கிற ஒற்றைப் பொருளுக்காக வெவ்வேறு அர்த்தமுள்ள எத்தனையோ சொற்களை கற்கும். அதற்கு அந்த உணவு தேவையில்லாமல் போகும் போது கூட அந்த சொல்லுக்கு அடிபணியும். நவீன மனிதனுக்கு “சாதனை” என்ற சொல்லும் அப்படித் தான் மாறியுள்ளது. இந்த முதலாளித்துவ “பயிற்சி” இல்லாத கல்யாணி போன்ற மனிதர்களுக்கு வாழ்க்கைக்கு புறமே இருந்து மதிப்பேற்படுத்தும் ஆர்வம் இருக்காது. விட்டேத்தியாக வேலை இல்லாமல் சாமர்த்தியம் இல்லாமல் இருப்பது என்பது கழுத்தை சுற்றி நாய்க்கயிறு இல்லாமலும் இருப்பது தான்.
தொடர்ந்து இந்த மனிதர்களுக்கு புற உலகுடன் மோதல் இருந்தபடியே இருக்கும். நிலப்பிரபுத்துவ உலகில் இவர்கள் சமூக அமைப்பின் ஏதோ சிறுமூலையில் பாதுகாக்கப்பட்டார்கள். ஆனால் முதலாளித்துவ உலகில் அக உலகோடு மட்டும் பிணைந்திருக்கும் மனிதர்கள் கடும் நிந்தனைக்கு ஆளாவார்கள். அது இந்த காலகட்டத்தின் விதி. ஒவ்வொரு சிறு உணர்வும் விழுமியமும் இன்று ஏதாவது ஒரு பொருளோடு சம்மந்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தருணத்துக்கும் அன்பையும் வலியையும் கோபத்தையும் காட்ட ஏதாவது ஒரு பொருளை வாங்கி சொந்தமாக்கி காட்சிப்படுத்த வேண்டி உள்ளது. கல்யாணிகளின் அகவுலகம் நமக்கு அபத்தமாக படுகிறதென்றால் அது நாம் வாழ்கிற அதிலௌகீகமான காலகட்டத்தின் சிக்கலும் தான். “தங்கமீன்கள்” மீது வந்துள்ள கடுமையான விமர்சனங்கள் இந்த அகவுலகுக்கு என உள்ள தர்க்கத்தை ஏற்க முடியாததனால் தான்.
Ente Swantham Janakikutty

எம்.டி.வாசுதேவன் நாயரின் கதை மற்றும் திரைக்கதையில் உருவான “எண்டே ஸ்வந்தம் ஜானகிக்குட்டி” ஒரு குழந்தைக்கும் பருவப்பெண்ணுக்கும் இடைப்பட்ட நாயகியின் அகவுலகின் மிகுஎதார்த்த்ததை சித்தரித்த படம். எம்.டியின் படங்களின் தொடர்ந்து வெளி-அக உலகங்களின் மோதல்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவர்கள் “தங்கமீன்களின்” கல்யாணி போல் எதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பான பல முடிவுகள் எடுப்பார்கள். உதாரணமாக “சுகிர்தத்தில்” நாயகன் அபூர்வமாக புற்றுநோயில் இருந்து மீண்ட பின் ரயிலின் முன் விழுந்து தற்கொலை புரிவான். தொடர்ந்து வாழ்வதற்கு அவன் முன் பல பாதைகள் திறந்திருக்கும். ஆனால் அவன் புற-உலகில் முற்றிலும் நம்பிக்கை இழந்திருப்பான். “தங்கமீன்கள்” பார்க்கையில் கல்யாணி தேவையில்லாமல் ஏன் பிரச்சனைகளை கற்பனை செய்து உருவாக்குகிறான், அவன் பிரச்சனைகள் எதுவும் பிரச்சனையே இல்லையே என உங்களுக்கு தோன்றினால் “சுகிர்தத்தின்” முடிவும் உங்கள் தவறானதாக தோன்றும். இந்துப்பத்திரிகையின் பரத்வாஜ் ரங்கன் இப்படத்தின் பிரச்சனைகள் வலிந்து உருவாக்கப்பட்டவை என எழுதிய போதும் அவர் ஒரு நவமுதலாளித்துவ பிரஜையாகத் தான் குழப்பிக் கொள்கிறார்.
உதாரணமாக ஒரு அப்பா என்றால் சம்பாதிக்க வேண்டும்; வெறுமனே குழந்தையின் அகவுலகை பகிர்ந்து கொள்வது அப்பாவின் குணம் அல்ல என்று நினைப்பது பரத்வாஜ் ரங்கனின் தரப்பு. நம்முடைய அப்பாக்கள் எல்லாம் நன்றாக நம்மை லௌகீகமாக பார்த்துக் கொண்டவர்கள் தாம். ஆனால் அப்பா மீது நமக்குள்ள புகார்கள் எல்லாம் அவர் சம்பாதிக்கவில்லை என்பதல்ல நம் அகவுலகை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை – நம் மொழி அவருக்கு புரியவில்லை என்பதே.
தூய அகவுலகமும் எதார்த்தமும்
கல்யாணி தன் மகள் செல்லம்மாவுக்கு ஒரு சரியான தோழனாகவே மாறுகிறான். கல்யாணி தன் மகளின் அருகாமையில் அடையும் உற்சாகம் பார்க்கையில் அவன் அது நாள் வரை அடைந்திருந்த தனிமை நமக்கு புரிகிறது. இது மிக விநோதமான நிலை. ஒருவன் குழந்தையில் இருந்தே தனக்குள் உள்ள அந்தரங்கமான கவித்துவமான உலகை பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் தவிக்கிறான். வளர்ந்து குழந்தை பிறந்த பின் தான் அவனுக்கு தனிமை பகிர ஆள் கிடைக்கிறாள். செல்லம்மாவுக்கு அவன் தங்கமீன்களை குளத்தின் ஆழத்தில் உள்ளதாய் நம்ப வைக்கும் காட்சியை நாம் இவ்வாறு தான் புரிய வேண்டியிருக்கிறது. அதை ஒரு எதார்த்த காட்சியாக எண்ணி அதன் தர்க்கத்தை வினவுவது முட்டாள்தனம். தங்கமீனைப் பார்ப்பது வாழ்வின் ஒரு அந்தரங்க தரிசனத்தை அடைவது அல்லது குழந்தைத்தனமான ஒரு விடுகதையை அவிழ்ப்பது. செல்லம்மா பள்ளியிலும் வீட்டிலும் புறக்கணிக்கப்பட்டு நொந்து போகும் போது தன்னை மேலும் திடப்படுத்திக் கொள்ளவே குளத்தில் மூழ்கி தங்கமீனை தேடுகிறாள். கடும் மனநெருக்கடியில் ஒருவன் தேவாலயம் அல்லது கோயில் சந்நிதானம் நாடுவது போல அல்லது ஒரு கவிதையை தேடிப்படிப்பது, மூர்க்கமாக எழுதுவது, வரைவது, அல்லது மனம் நொறுங்கி பைத்தியமாவது போல. Karate Kid படத்தில் ஜாக்கிசான் தன் மாணவனை ஒரு மலை உச்சியில் இருக்கும் மடாலயத்துக்கு அழைத்து போவார். ஆயிரக்கணக்கான் படிகளை ஏறினதும் அந்த சிறுவனுக்கு ஒரு சின்ன நீரூட்டில் உள்ள நீரைக் காட்டி குடிக்க சொல்வார். “இதைக் குடிக்கவா இவ்வளவு தூரம் அழைத்து வந்தீர்கள்?” என்பான். அப்பிரயாணம் ஒரு சடங்கு என்பதால் அதன் குறியீட்டுத் தன்மை நமக்கு தனித்து தெரியவில்லை. செல்லம்மா தங்க மீனைத் தேடிப் போவது இந்த பிரயாணம் போலத் தான். உச்சத்துக்கு போவதோ ஆழத்துக்கு போவதோ எதையோ ஒன்றை அடைய அல்ல.
”கொடியேற்றம்” மற்றும் எம்.டியின் படங்களுக்கும் “தங்கமீன்களுக்கும்” உள்ள முக்கிய வித்தியாசம் அவலச் சுவை தான். “கொடியேற்றம்” நாயகனின் அபத்தங்களை துர்கதியை வெளியே இருந்து மௌனமாக பார்க்கிறது. “தங்கமீன்கள்” கல்யாணியின் கதையை அவன் தரப்பில் இருந்து அவனது நியாயங்களை வலியுறுத்தி பேசுகிறது. சங்கரன் குட்டியே தன்னை நியாயப்படுத்தி நம்மிடம் கதை கூறுவதைப் போன்றது இது. ராமின் இந்த உரத்த விவாத பாணிக்கு என்று சில குறைகளும் அனுகூலங்களும் உள்ளன. இவ்வளவு சன்னமான நுட்பமான ஒரு மன உலகை நேரடியான சினிமாவில் கூறுவது மிக மிக சிரமம். அதுவும் அந்த அந்தரங்க உலகின் தரப்பில் இருந்து. “தங்க மீன்களில்” கதைகூறலில் நமக்கு படும் பிரச்சனைகள் இந்த சிக்கலினால் தோன்றுவது தான். ஒருவிதத்தில் இது மௌனியின் கதை உலகம் போன்றது. மௌனியின் மொழியில் உள்ள நெருடல்கள் அந்த உலகை வெளிப்படுத்துவதில் உள்ள சிரமத்தினால் வருவதே அன்றி திறமையின்மையால் அல்ல.
“கண்ணன் பாட்டை” பல இடங்களில் உளவியல் ரீதியாக நினைவுபடுத்தும் முதல் படம் “தங்கமீன்கள்” தாம். செல்லம்மா தன் அப்பாவுக்கு தோழியாக, மனைவியாக, அம்மாவாக, அப்பாவாக கூட பல நிலைகளில் உறவாடுகிறாள். ஒரு போது அவர்களிடையே அப்பா மகள் உறவு தோன்றுவதில்லை. ஒரு காட்சியில் அவள் தன் பெயரை மாற்றி தனக்குப் பிடித்தமான ஆசிரியையின் பெயரான எவிட்டா என அழைக்கப்பட விரும்புகிறாள். கல்யாணி அவளை அப்பெயரில் அழைக்க அவள் மெல்ல திரும்பி வெட்கத்துடன் “நீங்க மட்டும் என்னை செல்லம்மான்னே கூப்பிடுங்கப்பா” எனும் இடத்தில் அவள் வளர்ந்த பெண்ணாகவும் குழந்தையாகவும் ஒரே நேரத்தில் தோன்றுகிறாள். குழந்தைக்கும் அப்பாவுக்குமான உலகின் பாலியலற்ற பாலியல் பரிமாணத்தை மிக நுட்பமாக தொட்டுக் காட்டும் காட்சி இது. தமிழில் இது போல் ஒரு அவதானிப்பு வேறெந்த படத்திலும் வந்ததில்லை. அதே போல் செல்லம்மா தன் அப்பாவுக்கு இருமல் என்றதும் ஜுரம் வந்து விட்டதாய் கற்பனை செய்து கொண்டு அடுத்த நாளே பஸ்ஸைப் பிடித்து தனியாய் அவர் ஊருக்கு போக முயலும் இடம். இதன் உக்கிரமான அழுத்தமான தொனியை நீக்கி விட்டு பார்த்தால் கூட நம் குழந்தைகளின் ஒரு தனியான குணம் புரியும். குழந்தைகளிடம் குழந்தைமையை நாம் தான் திணிக்கிறோம். அவர்கள் எப்போதும் குழந்தைத்தனத்துடன் அல்ல பெரியவர்களின் உளவியலுடன் தான் இருக்கிறார்கள்.
ராமும் நவீனத்துவ அரசியலும்
ராம் தொடர்ந்து தன் படங்களில் உலகமயமாக்கல் பற்றி உரக்க பேசினாலும் அவரது நுண்ணுணர்வு எழுபது எண்பதுகளின் நவீனத்துவ காலத்தின் உடையது. சி.சு.செல்லப்பா, மௌனி, லா.ச.ராவிடம் நாம் பார்த்த ஒரு செயலூக்கத்தை மறுத்த, தூய அகவுலகத்தை மட்டும் ஏற்ற பார்வையை நாம் ராமின் படங்களில் காண்கிறோம். நம் நவீனத்துவ முன்னோடிகள் வெளி உலகை பற்றி எழுதினால் அது உயர்-இலக்கியமாகாது என்று வாதிட்டனர். ஒரு கதவைப் பற்றி எழுதினால் கூட அது புற உலகிற்கும் அக உலகிற்கும் இடையிலான ஒரு அரணாக குறியீடாக மாறி விடும். அறைகள் எப்போதுமே மனதின் உருவகமாகவும், ஜன்னல் உலகினுடனான தொடர்பு கண்ணியாகவும் இருக்கும். ஐரோப்பிய நவீனத்துவத்தில் இந்த லௌகீகத்திற்கு எதிரான போக்கு இம்மானுவல் காண்டின் தத்துவ தாக்கத்தினால் ஏற்பட்டது.
ஆசை என்பது ஆசையில் இருந்து பிறக்கிறது

காண்ட் எப்படி ஆசையை விளக்குகிறார் என பார்த்தால் இது இன்னும் நன்றாக புரியும். நல்ல சாப்பாடு சாப்பிட, மதுவருந்த, அழகான பெண்ணை பார்த்ததும் புணர ஆசை. சரி இந்த ஆசை எங்கிருந்து வருகிறது? அந்த உணவிலிருந்து, மது அல்லது பெண்ணில் இருந்து தானே! இல்லை என்கிறார் இம்மானுவேல் காண்ட். ஏற்கனவே உங்களுக்குள் நல்ல சாப்பாடு பற்றி, மது பற்றி, பெண் பற்றி ஒரு கருத்துரு இருக்கிறது. அதை வெளியே தேடுகிறீர்கள். அமலா பாலையோ பரினீதி சோப்ராவையோ பார்ப்பதனால் ஆசை ஏற்படவில்லை, உங்களுக்குள் ஆசை எனும் கருத்துரு இருப்பதனால் அது தானாகவே அப்பெண்களின் வடிவை கொள்கிறது. நாம் ஆசைப்படும் உலகம் நம்மில் இருந்து தான் துவங்குகிறது என்கிறார் அவர். சீனாவில் பெண்கள் ஒரு காலத்தில் கடுமையான நிந்தனைக்குள்ளாகி கால்களை சின்னதாக்கினர். நம்மூரில் கூட பொதுவாக ஆண்களை விட பெண்கள் அதிக சிவப்பாக இருப்பதை பார்க்கலாம் ஒரு குடும்பத்தில் கூட சகோதரி சகோதரனை விட அதிக சிவப்பாக இருப்பாள். சிவப்பான பெண்ணே அழகு எனும் ஆணின் எண்ணம் பரிணாமத் தேர்வில் வலுப்பெற்று மெல்ல மெல்ல சிவப்பான பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. இம்மானுவல் காண்டின் இந்த நிலைப்பாடான ஒரு கருத்தில் இருந்து தான் எல்லாம் துவங்குகிறது என்பதைத் தான் கல்யாணியும் திரும்பத் திரும்ப சொல்லுகிறான்: “பணமில்லாதவனை முட்டாள்னு நெனக்காதே, காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுன்னு காக்கா வந்து சொல்லிச்சா” எனும் வசனங்கள் கேட்க அபத்தமான தொனித்தாலும் அவற்றின் பொருள் நடைமுறையை தாண்டி மற்றொரு காத்திரமான உலகம் உண்டு என்பது. அந்த துர்லபமான சன்னமான உலகம் கருத்துக்களால், உணர்வுகளால், நம்பிக்கைகளால் ஆனது. அங்கு கல்யாணி பல மாதங்களாய் சம்பளம் தராத முதலாளியை விட்டு விலக தயங்குகிறான். அவனுக்கு அம்மனிதர் மீதுள்ள அன்பும் மரியாதையும் முக்கியமாக இருக்கிறது; அப்பாவுடன் மோதல் வருகையில் மனைவியை தன்னுடன் வீட்டை விட்டு வெளியேற அழைக்கிறான். அவள் நடைமுறை புரிந்து முடியாது என்கிறாள். ஆனால் அன்பு எனும் கருத்தை கொண்டு மட்டுமே உலகை புரியும் கல்யாணிக்கு அவள் நிலைப்பாடு கோபமேற்படுத்துகிறது. வேலையிலும் அவன் அப்படித் தான். வெள்ளிப்பாத்திரம் துலக்குகையில் முகத்தில் படியும் துகள்களுக்காக அந்த வேலை பிடித்திருக்கிறது. அவனுடைய மகளுக்கு படிக்கும் திறனின்மை உள்ளது. ஆனால் அந்த கோளாறை அவன் ஏற்பதில்லை. ஏனெனில் அவனுக்குள் உள்ள கருத்து அவளுக்கு படிக்க வரும், ஆனால் பிறருக்கு சொல்லித் தர தெரியாது என்பது. இது வெறும் பாசத்தினால் அவன் கூறுவதல்ல. அவனுக்குள் உள்ள கருத்தை தான் உலகம் என நம்புகிறான். அதே போலத் தான் பக் நாய்க்குட்டிக்காக அவன் படும் பாடுகளும். அந்த நாய்க்குட்டி ஒரு லட்சியமான பின் கருத்துநிலையில் அதன் உண்மைத் தன்மை தான் கல்யாணிக்கும் செல்லாம்மாவுக்கும் முக்கியம். அந்த நாய்க்குட்டியோ அதற்கான 25,000 விலையோ பொருட்டல்ல. கல்யாணிக்கு அவன் அப்பாவுடனும், பள்ளி நிர்வாகத்துடனும் பின்னர் தன் மனைவியுடனும் ஏற்படும் தகராறுகளும் முரண்பாடுகளும் உலகை வெறும் எண்களாக தகவல்களாக பார்ப்பதா அல்லது கருத்தாக பார்ப்பதா என்பதில் தான் துவங்குகின்றன. வெறும் எண்களாக பார்க்கிற தரப்பை சேர்ந்த விமர்சகர்கள் பார்வையாளர்களுக்கு கதையின் இந்த போக்கு எரிச்சலூட்டுகிறது.
அலௌகிக உலகின் சாதியம்: ராமும் விக்கிரமாதித்யனும்
அடூர் மற்றும் எம்.டியின் படங்களோடு ராமின் இரு படங்களுமே இன்னொரு விதத்தில் ஒப்பிடத்தக்கவை: சாதிய சமூகவியல் கோணம். இரு மலையாள இயக்குநர்களும் இருபதாம் நூற்றாண்டில் சீரழிந்து தம் சமூக அந்தஸ்தையும் பொருளாதார வலிமையையும் கிறித்துவர்களுக்கும் பிற சாதியினருக்கும் பறி கொடுத்த, ஆனால் அந்த இழப்பை பண்பாட்டு ரீதியாய் ஏற்க மறுத்த நாயர்களின் உளவியலை அலசிய பல படைப்புகளை தந்தார்கள். “எலிப்பத்தாயம்”, “கதாபுருஷன்”, “நிர்மால்யம்” “அசுரவித்து” போன்ற படங்களில் உள்ள அளவு வெளிப்படையாக ராமின் படங்களில் சமூகவியல் அடையாளங்கள் இருப்பதில்லை. ஆனால் “கற்றது தமிழ்” நாயகனின் சைவ உணவுப் பழக்கம், சிவனை தன் அடையாளமாக அவன் காண்பது, வலுவான ஒழுக்கவியல், “தங்கமீன்களில்” உள்ள பேச்சுமொழி, பெயர்களின் பண்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் இருந்து பிள்ளைமார் பின்புலம் என ஊகிக்க முடிகிறது. (நேரடியான ஆதாரங்கள் இப்படத்தில் கிடைப்பது கடினம்) தமிழ் சினிமாவில் தேவர், கௌண்டர், பிராமணர் பண்பாட்டு, அரசியல் கதையாடல்கள் பதிவான அளவு பிள்ளைமார் மனநிலை வெளிப்படவில்லை எனலாம். ஒரு சமூகவியல் கோணத்தில் ராமின் படங்களில் தெரியும் ஒரு நூதனமான கலாச்சார கூறு முக்கியமானது.
ராம் தன் படங்களில் உலகமயமாக்கலை மட்டுமல்ல நவீன மாற்றங்கள் பலவற்றையும் எதிர்ப்பதை அறிவோம். இந்த நேரடியான எதிர்ப்பல்ல, அவரது மைய பாத்திரங்கள் காட்டும் உளவியல் ரீதியான எதிர்ப்பு தான் இன்னும் சுவாரஸ்யமானது. ராம் இப்படங்களுக்கு ஒரு அரசியல் சாயத்தை கொடுத்தாலும் “Full Metal Jacket” போல ஆழத்தில் இவை அரசியல் படங்கள் அல்ல. இவை முன்வைப்பது ஒரு “குடும்ப கலக அரசியல்”. இதே கலகத்தை நாம் விக்கிரமாதித்யனின் கவிதைகளிலும் பார்க்கலாம். விக்கிரமாதித்யனை புரிவது ராமை புரியவும் உதவும்.
“கற்றது தமிழில்” ஜார்ஜ் புஷ் வரை அரசியல் பேசப்பட்டாலும் அடிப்படை பிரச்சனை வேலையும் காதலும் தான். இன்னும் நுணுக்கமாக பார்த்தாலும் சமூகத்தோடு உறவாடுவதில் பிரபாகர் எனும் மரபார்ந்த மனதுக்கு உள்ள சிக்கல்களும், தான் காதலிக்கும் ஒரு பெண் மெல்ல மெல்ல சீரழிவதை தடுக்கும் சக்தி தனக்கு இல்லையே என்கிற அவனது ஆற்றாமையும். நாம் நம்புகிறதை சமூகம் நம்பாமல் போகும் போது முரண்பாடு வரும். அப்போது இருதரப்பிலுமே சமரசம் நடக்கும். அதற்கு நாம் அதிகாரம் செலுத்த வேண்டும். அது பணமோ அறிவோ சார்ந்த அதிகாரமாக இருக்கலாம். இந்த அதிகாரம் இல்லாததால் சமூகத்தை கட்டுப்படுத்த பிரபாகர் வன்முறையை பிரயோகிக்கிறான்.
பிரபாகரின் காதலி மிக சுவாரஸ்யமான பாத்திரம். அவள் ஆரம்பத்தில் இருந்தே ஒருவிதத்தில் “குடும்பத்தில்” இருந்து வெளியே தான் இருக்கிறாள். வைப்பாட்டியின் மகளாக, மாமாவின் செலவில் வாழ்பவளாக, பிறகு விபச்சாரியாக அவள் என்றுமே பலவீனமாகத் தான் காட்டப்படுகிறாள். “வெளியேறின பெண்” எனும் இவள் சமகாலத்தில் பொருளாதார விடுதலை பெற்ற, பாரம்பரிய குடும்ப விழுமியங்களை கேள்வி கேட்கிற பெண்ணின் ஒரு வடிவம் தான். பிரபாகரின் இன்னொரு பிரச்சனை பெண் குடும்பத்தை விட்டு வெளியேறுவதும், ஒரு ஆணாக அவளை எப்படி பாதுகாப்பது என்பதும். அவனுக்கு பொருளாதார அதிகாரம் இல்லை எனும் போதும் இப்பிரச்சனை தீர்க்க முடியாததாகிறது.
விக்கிரமாதித்யன் தொடர்ந்து குடும்பம் வலியுறுத்தும் விழுமியங்களை எதிர்பார்ப்புகளை எதிர்த்துக் கொண்டே இருப்பார்; ஆனால் சமூகப் புரட்சிகள் செய்யக் கூடாது என்பார். குடும்பத்தை விட்டு வெளியேறும் விக்கிரமாதித்தியன் சமூக அரசியல் பிரச்சனைகளில் ஈடுபட மாட்டார். அவரது ஆர்வம் முழுக்க “குடும்பம் எனும் சிறை” எனும் கருத்தாக்கத்தில் தான் இருக்கும். சமூக அமைப்பு அப்படியே இருந்து விட்டு போகட்டும், ஏனென்றால் அப்போது தான் “பிள்ளைமார் அந்தஸ்து” மிச்சமிருக்கும் என்று கருதுகிறார். சரி குடும்ப கலகம் ஏன்? ராஜ்கௌதமன் தனது “தலித்திய விமர்சனக் கட்டுரைகள்” நூலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிள்ளைமார் சமூகம் சந்தித்த முக்கிய நெருக்கடி ஒன்றைப் பற்றி எழுதுகிறார். அதுவரை நிலவுடைமை சமூகங்களாக தான் பிராமணர்களும் பிள்ளைமார்களும் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளையர்களின் வருகையுடன் சமூக அமைப்பிலும் ஆட்சி முறையிலும் பல மாற்றங்கள் வருகின்றன. சட்டம் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பல புது வேலைகள் தோன்றுகின்றன. பிராமணர்கள் நிலங்களை துறந்து விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து அந்த புது வேலைகளை கைப்பற்றுகிறார்கள். ஆனால் பிள்ளைமார்கள் நிலச்சுவான்தார்களாக்வே நிலைக்கிறார்கள். நிலத்தை குத்தகைக்கு விட்டு தின்றும் சைவம் வளர்த்தும் மெல்ல மெல்ல ஒரு சமூகமாக பின் தங்கிப் போகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் பிற சமூகங்கள் அவர்களை பின்னே தள்ளி மூன்னேற பிள்ளைமார் சமூகம் அடைந்த மனக்கசப்பும், அழுத்தமும் விக்கிரமாதித்யனிடம் வெளிப்படுகிறது. அதாவது அவர் ஒட்டுமொத்த ஒரு சாதியின் பிரதிநிதி அல்ல ஒரு சாதிய மனநிலையின் கூறு மட்டுமே.
நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு ரீதியாக தனக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய கௌரவம் ஏன் கிடைக்கவில்லை எனும் கோபம் விக்கிரமாதித்யனிடம் வெவ்வேறு விதங்களில் ஒரு கவிஞனின் விளிம்புநிலைவாதியின் கோபமாக வெளிப்படுகிறது. நிலமற்ற நிலச்சுவான்தாரின் இந்த கோபம் ஒரு பந்தைப் போல் திரும்பத் திரும்ப குடும்பத்தை நோக்கி தான் செல்கிறது. சமூகம் ஒரு புறம் அடுக்குகள் குலைந்தாலும் குடும்பம் பழைய இறுக்கத்துடன் தான் இருக்கும். அங்கு சாதிய கௌரவமும் பிரபுத்துவ விழுமியங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கும். அங்கு தான் நிலமற்ற நிலச்சுவான்தார் மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாவார். சமூகத்தில் போல அவர் முகமூடி அணிந்து இங்கு தப்பிக்க முடியாது. அங்கு அவர் ஒன்று நிலத்தை மீட்டு அதிகாரமுள்ள நிலச்சுவான்தார் ஆக வேண்டும் அல்லது வெளியேற வேண்டும். விக்கிரமாதித்யன் தொடர்ந்து குடும்பத்தையும் அதன் பொருளாதார பொறுப்புகளையும் எதிர்ப்பது போலத் தான் கல்யாணியும் “தங்க மீன்களில்” செய்கிறான். அவனது அப்பாவும், தங்கையும் மாறின உலகோடு ஒத்துப் போய் சம்பாதிக்கிறவர்கள். அவன் நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த தன் மூதாதையரின் மனநிலை கொண்டவன். பொருளைத் தவிர்த்த பிற கலாச்சார உணர்வுரீதியான விசயங்களில் மட்டும் அக்கறை கொள்ள விரும்புகிறவன். “கற்றது தமிழில்” பிரபாகரும் ஏன் தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லை என வினவும் போது அது தமிழ்ப் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டும் இல்லை; கலாச்சார வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கு ஏன் இங்கு அந்தஸ்தும் இடமும் இல்லை என்பதே அக்கேள்வி. முழுக்க முழுக்க பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் இயங்குகிற சமகால நவமுதலாளித்துவ சமூகத்தில் எங்கிருந்தோ இருநூறு முன்னூறு வருடங்களுக்கு முன்பிருந்து ஒலிக்கும் ஒரு முன்-நவீன குரல் அது.

விக்கிரமாதித்யனின் கவிதை ஒன்றில் ஒரு விபச்சாரி கவிஞருடன் ஓரிரவு கழித்ததும் மறுநாள் திருப்தி மற்றும் காதல் காரணமாக பணம் வாங்காமலே போய் விடுவாள். ஆனால் உறவு கொள்ளும் போது சதா பணம் அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியே அக்கறையில் இருக்கும் வேறு விபச்சாரிகள் பற்றியும் அக்கவிதையில் குறிப்பு வரும். கவிஞரை பொறுத்தவரையில் நல்ல விபச்சாரி என்பவள் பொருளைப் பற்றிய கவலைப்படாமல் சுகத்துக்கும் அன்புக்கும் மதிப்பளிப்பவளாக இருப்பாள். ஆனால் அப்படி ஒரு பெண் தொழில் செய்ய முடியுமா? அது அபத்தமில்லையா? பொருள் குறித்த கவலைப்பட வேண்டியிராத ஒரு நிலச்சுவான்தார் மனம் அப்படி சிந்திப்பதில் ஆச்சரியமில்ல. காலங்காலமாய் பணம் மடியில் வந்து விழுந்து பழகின பின் வாழ்க்கை பணத்திற்கு அப்பாற்பட்டது மட்டுமே என்கிற எண்ணம் வலுவாக ஊன்றி விடும். பின்னர் பணம் இல்லாவிட்டாலும் அப்படியே சிந்திக்க தோன்றும். “தங்கமீன்களில்” நாயகனை தொடர்ந்து சம்பாதிக்கும் படி பணத்தின் அருமை புரிந்து நடக்கும் படி பலரும் அறிவுரை புரிகிறார்கள். அது அவனை எரிச்சலூட்டுகிறது. கடன் கேட்டு செல்கிற போது நண்பன் ஒருவன் இதே அறிவுரை கூற அவனைப் பார்த்து கல்யாணி சொல்கிறான் “பணம் இல்லாதவனை முட்டாள்னு மட்டும் நினைக்காதே”. இந்த வசனத்தை நாம் மேற்சொன்ன சாதிய கண்ணோட்டத்திலும் பார்க்கலாம்.
“கொடியேற்றத்திலோ” அல்லது விக்கிரமாதித்யன் கவிதைகளிலோ போல் வெளிப்படையாக இந்த சமூகவியல் பார்வையை ராமிடம் காண முடியாது. அவரை சாதியவாதி என நாம் புரிந்து கொள்வோமானால் அது பெரும் அபத்தமாக இருக்கும். பிற இயக்குநர்களிடம் போல அவரிடம் எந்த மறைமுக அஜெண்டாவும் இல்லை. அவருடைய ஆளுமையில் உள்ள சிடுக்குகள் படத்தில் வெளிப்பட அவர் அனுமதிப்பதால் இத்தகைய விவாதங்கள் சாத்தியமாகின்றன. ராமின் படங்களின் ஒரு சிறப்பாகவே இதைப் பார்க்கலாம்.

Comments

King Viswa said…

One Word

Brilliant.
poornam said…
//நாய்க்கு பயிற்சியளிக்கையில் முதலில் சாப்பாடு கொடுத்து “வா” என்பார்கள். நன்றாக பயின்ற பின் அதனிடம் “வா” அல்லது “உட்கார்” என்றால் சாப்பாடு என்று தான் பொருள் படும். சாப்பாட்டு சுவை என்கிற ஒற்றைப் பொருளுக்காக வெவ்வேறு அர்த்தமுள்ள எத்தனையோ சொற்களை கற்கும். அதற்கு அந்த உணவு தேவையில்லாமல் போகும் போது கூட அந்த சொல்லுக்கு அடிபணியும். நவீன மனிதனுக்கு “சாதனை” என்ற சொல்லும் அப்படித் தான் மாறியுள்ளது.//
மனதைத் தொட்ட வரிகள்.
//காலங்காலமாய் பணம் மடியில் வந்து விழுந்து பழகின பின் வாழ்க்கை பணத்திற்கு அப்பாற்பட்டது மட்டுமே என்கிற எண்ணம் வலுவாக ஊன்றி விடும். பின்னர் பணம் இல்லாவிட்டாலும் அப்படியே சிந்திக்க தோன்றும்.//
கூர்மையான கருத்து. தங்கமீன்கள் விமர்சனங்களிலேயே உங்களது விமர்சனம்தான் ஆழமான அழகியலுடன் எழுதப்பட்டுள்ளது.
poornam said…
முந்தைய பின்னூட்டத்தில் சொல்ல விட்டுப் போனது உங்களது அழகான நடை. சிக்கலான வாக்கியங்களை உபயோகித்தாலும் சரளமாக இருக்கிறது. அதனால் நீண்ட பதிவுகள் கூட சலிப்பூட்டுவதில்லை.
dinesh.88560 said…
மிக மிக அருமையான முக்கியமான கட்டுரை!!! வாசித்தபின் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் இந்த கட்டுரை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது....மிக சிக்கலான வாசித்தால் எளிதில் விளங்காத படிமங்களைக் கூட கொஞ்சமும் திகட்டாத நடையில் எழுத உங்களுக்கு எளிதாக வருகிறது என்றால் அதற்கு நீங்கள் எவ்வளவு மெனக்கெட்டு இருக்க வேண்டும்????? சந்தேகம் இல்லாமல் நீங்கள் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களில் தனித்து விளங்குபவர்!!!!ஒரே ஓரு வேண்டுகோள்.....இதே போன்று மற்ற எழுத்தாளர்களின் படைப்புலகை அறிமுகப்படுத்தவேண்டும்....என்னைப்போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்கு அது ஏதுவாக இருக்கும்....வாழ்த்துக்கள்