Monday, September 23, 2013

கௌரவக்கொலைகளின் அரசியல்: தெற்கும் வடக்கும்
கௌரவக் கொலைகளுக்கு என்றொரு பாணி உள்ளது. முதலில் ஓடிப் போன காதலர்களை சாதுர்யமாக பேசி அழைத்து வருவார்கள். பிறகு சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லுவார்கள். மொத்த ஊரின் பங்களிப்பும் ஆசீர்வாதமும் இதற்கு இருக்கும். அடுத்து ஒரு கொடூரமான அமைதி அங்கு கவியும். அரசியல்வாதிகளோ சம்மந்தப்பட்ட மக்களோ தெரியாமல் காரை ஒரு நாயின் மீதி ஏற்றி விட்டது போல் கண்டும் காணாதது போல் கடந்து போவார்கள். எந்த பிரதான அரசியல் கட்சியும் கண்டனங்கள் தெரிவிக்காது. 

சமீபமாக ஹரியானாவில் நிதி, தர்மேந்தர் எனும் இளம் ஜோடி பெண்ணின் குடும்பத்தாரால் மணிக்கணக்காய் சித்திரவதை செய்யப்பட்டு விவசாய கருவிகளால் அடித்து கொல்லப்பட்டனர். ஊர் மட்டுமல்ல அமைதியாக வேடிக்கை பார்த்தது. தர்மேந்தரின் குடும்பத்தினர் தம் மகனை காப்பாற்ற மட்டுமல்ல மனம் பதைக்க வைக்கும் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் இதில் தலையிட கூட மறுத்த விட்டனர். தர்மேந்தரின் வெட்டிய தலையை அவனது வீட்டின் முன் கொண்டு போட்டனர். அப்போதும் கூட அவன் பெற்றோர் “இது அவனுக்கு நியாயமான தண்டனை” தான் என அதனை ஏற்றனர்; அவர்கள் வழக்கு தொடுக்கவும் மறுத்து விட்டனர்.
ஒரு புறம் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெரும் குடியிருப்புகளும், வெளிநாட்டு கார்களும், மால்களும் தோன்றிக் கொண்டிருக்க பழங்குடித் தனமான இத்தகைய செயல்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஊடகங்கள் மீண்டும் மீண்டும் இந்த “காட்டுமிராண்டித்தனத்தை” கண்டிக்கையில் கௌரவக் கொலை நடக்கும் கிராமங்களில் மக்கள் பெருவாரியாக அதை இயல்பான ஒன்றாக ஏற்றபடியும் இருக்கிறார்கள். கௌரவக் கொலைகளுக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பும் அந்த இந்தியாவும் சமீப காலங்களில் கப் பஞ்சாயத்துகளால் காதலர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட நூற்றுக்கணக்கான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இந்தியாவும் வேறு வேறா? தர்மபுரியில் சாதிக் கலவரங்கள் நடத்தப்பட்ட சூழலிலும் கிராமப் பகுதியில் அங்கு நிலவிய சூழலும் இது போன்றது தான். முற்போக்கான எண்ணம் கொண்ட வன்னியர்களும் சாதிக் கொலைகளை வெளிப்படையாக கண்டிக்க தயங்கி ஊரின் பொதுப்புத்திக்கு தம்மை வளைத்துக் கொண்டனர். ஆக கௌரவக் கொலைகள் எனும் பிரச்சனையை தீர்க்க கிராமங்களுக்கு சமூகப் போராளிகள் பிரச்சாரங்களையும் ஒருங்கிணைப்பு பணிகளையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். நகரத்து ஊடகங்களின் பொழுதுபோக்கு பரபரப்புகளின், மனசாட்சி உறுத்தல்களின் பகுதியாக கௌரவக் கொலை விவாதங்கள் முடிவதில் பயனில்லை.
வட இந்தியாவில், குறிப்பாக உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில், தாம் கோத்திரத்துக்குள், சாதியை மீறி மணக்கும் ஜோடிகள் மீது கௌரக் கொலைகள் மிக அதிகமாக நடக்கின்றன. அங்கு தான் கப் பஞ்சாயத்துகள் வலுவாக சாதி ஓட்டுகளை திரட்டும் அமைப்புகளாக இருந்து அரசியல் கட்சிகளையும் ஆட்டுவிக்கின்றன. கப் பஞ்சாயத்துகளை எதிர்க்க எந்த கட்சிக்கும் திராணியில்லை. இத்தனை கொடூரமான கொலைகள் தொடர்ந்து நடந்தும், இக்கொலைகளுக்கு நிச்சயம் மரண தண்டனை தான் என நீதிமன்றம் அறிவித்தும் கூட பாராளுமன்றத்தில் கௌரவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் கொண்டு வர மத்திய அரசால் இயலவில்லை. தென்னிந்தியாவில் கப் பஞ்சாயத்துகள் இல்லை. ஆனால் அவற்றின் இடத்தை சில சாதிக் கட்சிகள் பிடித்துள்ளன. கப் பஞ்சாயத்து பாணியில் இவையும் சாதிமீறின காதலர்களுக்கு மிரட்டல் விடுத்து கௌரவக்கொலைகளை நடத்துகின்றன. இது ஒன்றை சுட்டுகிறது: கௌரவக் கொலைகள் வெளி அமைப்புகளும் ஒட்டுமொத்த சாதிய சமூகமும் குடும்பங்கள் மீது செலுத்துகிற பெரும் நெருக்கடியினால் நிகழ்த்தப்படுகின்றன. காதல் திருமணங்களை சாதிக் கட்சிகளோ கப் பஞ்சாயத்துகளோ தம் கௌரவப் பிரச்சனையாக மாற்றி ஒரு அசைன்மெண்டாகவே எடுத்துக் கொண்டு செய்கின்றன. தமிழகத்தில் எப்படி இரண்டு தனி நபர்களுக்கு எதிராக ஒரு பெரும் அரசியல்கட்சியும் அதன் நூற்றுக்கணக்கான வக்கீல் படையும் இயங்கியது எனப் பார்த்தோம் – மகாபாரதத்தில் சக்கரவியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யுவின் கதி தான் இங்கே ஒவ்வொரு சாதிமீறின காதலனுக்கும்.
கடந்த பத்தாண்டுகளில் சாதி, மதவாத சக்திகள் இந்நாட்டில் பெரும் எழுச்சி கண்டிருக்கின்றன. நாம் எந்தளவுக்கு நவீனப்படுகிறோமோ அந்தளவுக்கு பிற்போக்காகவும் மாறி வருகிறோம். அதுவும் நம் இளைஞர்கள் ஒருபுறம் தளுக்கான ஆங்கிலம் பேசிக் கொண்டு மேற்கத்திய ஆடைகளையும் ஆப்பிள் கைப்பேசியும் பூண்டபடி போன தலைமுறையை விட சாதி, மதவெறி மிக்கவர்களாக செயல்படுகிறார்கள். இந்த அவலத்தின் பின்னணியில் தான் நாம் கௌரவக் கொலைகளை பார்க்க வேண்டும். மக்களை அரசியல் லாபத்துக்காக திரட்டுவதற்கு இனிமேல் ஆகர்சம் மிக்க தலைவர்களும் சமூக லட்சியங்களும் உதவாது என அரசியல்வாதிகள் உணர்ந்து வருகின்றனர். ஒருபுறம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க பிராந்திய, சாதிய சமூகங்களின் தலைவர்களின் ஆதரவின்றி இயலாது எனும் நிலை ஏற்பட இத்தலைவர்களும் ஓட்டுக்களை திரட்டுவதற்கு சிறந்த வழி பிற்போக்கான உணர்ச்சிகளை மக்களிடம் தூண்டுவது என நம்ப துவங்கி உள்ளார்கள். இந்த அரசியல் பின்னடைவின் விளைவாகத் தான் பல மதவாத, சாதிய கலவரங்களும், அவற்றின் பக்கக் கிளையாக கௌரவக் கொலைகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
தமிழகத்திலும் மௌனமாக ஒரு புறம் கௌரவக் கொலைகள் நடந்தபடிதான் உள்ளன. உ.பி, ஹரியானாவுடன் ஒப்பிடுகையில் இங்கு வெளிப்படையாக எந்த எதிர்ப்பும் இன்றி கௌரவக் கொலைகள் செய்ய இயலாமல் இருப்பதற்கு ஒரு காரணம் சாதியமும் மதவாதமும் இங்கு ஓரளவு மட்டுப்பட்டு உள்ளது தான். அதற்கு நாம் இக்கணத்தில் பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களும் பெண்களும் தம் உரிமைகளை வலுவாக கோருவதன் ஒரு மறைமுக விளைவாகவும் இந்த வலதுசாரி எழுச்சியை நாம் காணலாம். ஒடுக்கப்பட்டவர்கள் திரும்ப கேள்வி கேட்கையில் இது போல் பதில் இல்லாதவர்கள் வன்முறையை கையில் ஏந்துவார்கள். ஏனென்றால் அவர்களிடம் நியாயமோ பதிலோ இல்லை. இந்திய பெற்றோர்களுக்கு தம் குழந்தைகள் தனிமனிதர்கள் என்கிற விழிப்புணர்வை வலுவாக ஏற்படுத்துவதும் முக்கியம். இந்தியா முழுக்க பெரியாரின் முற்போக்கு விழிப்புணர்வை இயக்கத்தை வளர்த்தெடுப்பது தான் தற்போது நம் முன்னுள்ள ஒரே வழி

1 comment:

Balendran Balachandramoorthy said...

"காதல் " என்றொரு படம் வந்து, தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கியது; அதில் கதாநாயகன் சாகாவிடினும், அதை ஒத்த மனப்பிறழ்வு நிலைக்குச் சென்று விடுவார். உண்மையில் என் மனைவியை கலங்க வைத்த படம் அது என்றால் மிகையில்லை! கவிதா என்கிற என்மனைவி, தன் பால்ய வயதில் ஒரு ஈழப் போராளியை காதலித்திருந்தார்கள்; ராஜீவ் காந்தியின் ஒப்பந்த காலத்தில், இந்தியக் கடல்ப் படையின் சதியால், கடலில் வைத்துக் கைது செய்யப்பட்ட பொழுது, கழுத்தில் இருந்த குப்பி என்கிற சயனையிட் விசத்தைக் கடித்து, என் மனைவியின் பால்ய வயதுக் காதலன் உயிர் துறந்திருந்தார். அந்த சம்பவத்தை என் மனைவி, எப்பொழுதுமே, காதல் படத்தில் வரும், "உனக்கென இருப்பேன்..உயிரையும் கொடுப்பேன்.."என்கிற பாடலுடன் பொருத்திப் பார்ப்பார்கள். இது நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், என் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்து, கலங்குவேன்...!