Saturday, September 14, 2013

புத்தகங்களுக்கும் விற்பனைக்கும் இடையே


ஒருமுறை ஓப்பன் மேகஸினில் ஒரு வெளிநாட்டு பதிப்பகத்தின் எடிட்டரின் பேட்டியை போட்டிருந்தார்கள். புத்தகத்தை எப்படி சந்தைப்படுத்துகிறார் என்பது பற்றி அவர் கூறின விசயங்களை படிக்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது.


அவர் அப்போது வெளிவந்த ஒரு யுத்தகால அனுபவங்கள் பற்றின கட்டுரை நூலை பற்றி சொன்னார். அந்நூல் வெளியாவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான பிரதிகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற தேசங்களின் ராணுவ அதிகாரிகள், ராணுவம் சம்மந்தப்பட்ட முன்னாள் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு அனுப்பி விட்டார். இது நூல் குறித்து ஒரு பரபரப்பை குறிப்பிட்ட அறிவுத்தளத்தில் எழுப்ப உதவியது. இவர்களுக்கான ஒரு நீண்ட பட்டியலை தயாரித்து, தனித்தனியாய் கடிதம் எழுதி, அதில் நூல் பற்றி விளக்கி, அனுப்பி, அவர்களின் கருத்தை அறிய தொடர்ந்து முயல்வது வரை எடிட்டரே செய்கிறார்.
அடுத்து அவர் இணையம், டி.வி, பத்திரிகை எங்கும் அப்புத்தகம் பற்றி அறிமுகங்கள் தோன்ற செய்து ஒரு சின்ன அலையை கிளப்பினார். இதையெல்லாம் பல ஆண்டுகளாய் செய்வதால் அவருக்கு மீடியாவில் நல்ல தொடர்புகள் இருக்கின்றன.
அடுத்து எழுத்தாளர்கள். நாவல் என்றால் சல்மான் ரஷ்டி, ஜும்பா லஹரி போன்ற பிரபலங்களிடம் அனுப்பி கருத்து கேட்டு அதையும் பத்திரிகையில் விமர்சனமாக அளித்து பிறகு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துவார். நானோ நீங்களோ அனுப்பினால் ரஷ்டி திருப்பிக் கூட பார்க்காமல் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவார். ஆனால் சம்மந்தப்பட்ட எடிட்டர் ரஷ்டியின் நூல்களை பிரசுரிக்கும் பதிப்பகத்தில் நூல் தேர்வு பொறுப்பில் இருப்பார். பதிப்பகம் மூலம் ரஷ்டிக்கு கோடிக்கணக்கான பணம் முன்பணமாகவே வரும். ஆக எடிட்டரின் தயவு ரஷ்டிக்கு தேவை. அதனால் அவர் புத்தகம் பிடிக்குதோ இல்லையோ “மிக முக்கியமான அற்புதமான நூல்” என முத்திரை குத்தி விடுவார். ஆனால் தமிழில் ஒரு நட்சத்திர எழுத்தாளர் தன் நூல்களை பதிப்புக்கும் அதே பதிப்பகத்தில் வரும் மற்றொரு புதிய எழுத்தாளரின் புத்தகத்துக்கு இது மாதிரி விமர்சனமெல்லாம் தர மாட்டார். ஏனென்றால் அவர் நிலையே பரிதாபமாகத் தான் இருக்கும்.
அடுத்து நம் எடிட்டர் புத்தகத்தின் ஆயிரக்கணக்கான பிரதிகளை உலகம் பூரா உள்ள விமர்சகர்களுக்கு அனுப்புவார். இவர்களுடனும் அவருக்கு நல்ல தொடர்பு இருப்பதால் அவருக்காகவேனும் நல்லவிதமாக நூல் குறித்து எழுதுவார்கள். இதையடுத்து உலகம் பூரா உள்ள புத்தகக் கடைகளை தொடர்பு கொண்டு புத்தகம் மிக முக்கியமானது என பரிந்துரைத்து அதற்கு தனி கவனம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வார். எடிட்டர் மீதுள்ள நம்பிக்கையால் அவர்களும் தனி கவனம் கொடுத்து புத்தகம் வருமுன்னே அதற்கு விளம்பரம் எல்லாம் பண்ணி விட்டு வந்ததும் பத்து பிரதிகளையாவது அழகாக முன்வரிசையில் அடுக்கி வைப்பார்கள். அதாவது புத்தகம் வெளியாகி ஒரு வாசகர் படிக்கும் முன்னரே இத்தனையும் நடந்து ஒரு பெரும் பரபரப்பு தோன்றி விடும். இந்த பரபரப்புக்கும் புத்தகத்தின் தரத்துக்கும் சுவாரஸ்யத்துக்கும் சம்மந்தமில்லை. அடுத்து புத்தக பயணம் துவங்கும். உலகம் முழுக்க சென்று ஒவ்வொரு ஊராய் கூட்டம் போட்டு புத்தகத்தில் இருந்து எழுத்தாளரை ஒரு அத்தியாயம் படிக்க வைத்து யாரையாவது பாராட்ட செய்வார்கள். அத்தனையும் பதிக்கத்தின் செலவு.
புத்தகம் விற்பதற்கு அது நட்சத்திர எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்க வேண்டும், நன்றாக தரமாக சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என தமிழில் ஒரு மாயை உள்ளது. ஆனால் உண்மையில் உலகம் முழுக்க புத்தகங்களின் ஐம்பது சதவீத விற்பனையாவது முழுக்க விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தலால் நடக்கிறது. ஆனால் தமிழில் புத்தக சந்தைப்படுத்தல் பற்றி யாருக்கும் அக்கறையோ அவகாசமோ அதற்கான பண கட்டமைப்பு வசதிகளோ கிடையாது. மேற்சொன்ன அத்தனை வேலைகளையும் எழுத்தாளனே தனக்குள்ள ஓய்வு நேரத்தில் கொஞ்ச நஞ்ச பணத்தில் செய்ய வேண்டும். மேற்சொன்ன எடிட்டர் செய்வதில் 1 சதவீதம் தான் அவனால் சாதிக்க முடியும். அதையும் செய்து முடித்த களைப்பில் கசப்பில் அவநம்பிக்கையில் அவன் இனி புத்தகமே எழுதக் கூடாது என்கிற முடிவை எடுத்து, அதற்கு அடுத்த நாளே அதையும் மீறி விடுவான். எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் பிரசுரிப்பது என்பது ஒருவரை கல்லறையில் அடக்கம் செய்வது போல என்றார். தமிழின் அவலம் இது.
கோடிக்கணக்கான புத்தகங்கள் பிரசுரமாகும் குழப்பத்தில், இணையம், டி.வி என கருத்துப்பரிமாற்றத்துக்கும் பொழுதுபோக்குக்கும் ஆயிரம் வழிகள் உள்ள சூழலில் ஒரு புத்தகம் தன் புகழை தானே தேடிக் கொள்ளும், காலத்தில் நிலைக்கும் எனும் கருத்து அபத்தமானது. திடீரென்று நம்மூரில் உள்ள அழகான பெண்களின் எண்ணிக்கை நூறு மடங்கு அதிகரிக்கிறது என கொள்வோம். மிக அழகான பெண்கள் கூட தம்மை டி.வியில் விளம்பரப்படுத்தி ஆணை தேடும் நிலை ஏற்படும். தொடர்ந்து பல்வேறு தகவல்கள், பிம்பங்கள் பார்த்து பார்த்து மக்களுக்கு மரத்து விட்டது. அவர்களின் ஆர்வத்தின் கவனத்தை வேறுவழிகளில் தூண்டாவிட்டால் வாசிக்க மாட்டார்கள்.
மேலும், புத்தகம் வாங்குவது அறிவுத் தேடலுக்காக மட்டும் அல்ல. புத்தகம் வாங்குவது வாங்கும் பெருமைக்காகவும் திருப்திக்காகவும் தான். புத்தகம் வாங்குவது ஒரு பண்பாட்டு நடவடிக்கை. புத்தகம் உயர் பண்பாட்டின் அடையாளம். ஆக இன்று மக்களுக்கு அந்தஸ்துக்காக உள்ள தொடர் பதற்றத்தை பயன்படுத்தி பதிப்பாளர்கள் நிறைய புத்தகங்களை வாங்கவும் ஓரளவு படிக்கவும் வைக்கிறார்கள். சில சமூக மட்டங்களில் செயல்பட சில புத்தகங்களை படித்தே ஆக வேண்டும் எனும் கட்டாயத்தை உருவாக்குகிறார்கள். அதனாலே மக்களின் பொருளாதார நிலை உயர்ந்ததும் அவர்கள் புத்தகங்களை வாங்குவதும் அதிகரிக்கிறது.
நான் புத்தகக் கடைக்கோ நூலகத்துக்கோ போகும் போது அங்கு வந்து திருதிருவென முழிக்கும் ஆட்கள் பலரை பார்ப்பேன். அவர்களுக்கு ஆகப்பெரும் குழப்பம் எதை வாங்குவது அல்லது எடுத்து பார்ப்பது என்பது. ஏனென்றால் அந்த புத்தகங்களோ அதன் பின்னணியோ வரலாறோ அவர்களுக்கு பரிச்சயம் இல்லை. வரலாறு தெரியாமல் அருங்காட்சியகத்துக்குள் நுழைவது போலத் தான் இது. பலரும் அதனால் தான் புத்தகங்களை கையில் எடுத்துக் கூட பார்க்காமல் திருவிழா கூட்டம் போல் கடந்து போய் விடுகிறார்கள். ஒரு நூலை எடுத்து பிரிப்பது ஒரு அந்தரங்க தொடுகை போல. அதற்கு பரிச்சயம் அவசியம். மக்களுக்கு நிச்சயம் படிக்கும் ஆசை உள்ளது. ஆனால் எதை என தெரியவில்லை.
சமீபமாய் ஒரு நீயா நானா நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். மாணவர்களையும் கல்லூரி ஆசிரியர்களையும் வைத்து கால்பந்தாட்டம் நடத்தினார்கள். திடீரென்று ஆசிரியர்களை நோக்கி ஒரு கேள்வி: “சமீபமாக படித்த புத்தகங்களின் பட்டியலை சொல்லுங்கள்”. பலரும் திணறி விட்டார்கள். பாடம் சம்மந்தமான புத்தகங்களை சொல்லை “இல்லை வேறு பண்பாட்டு புத்தகங்களை சொல்லுங்கள்” என கேட்டார்கள். (இது ஒரு அபத்தமான கேள்வி. இது குறித்து பின்னொரு சந்தப்பத்தில் எழுதுகிறேன்.) எனக்கு கவனத்தில் பட்டது மக்களுக்கு சமீபமாய் வந்த நல்ல நூல்களின் பரிச்சயம் அவ்வளவாய் இல்லை என்பது. அவர்கள் விகடன், குங்குமம் தவிர அதிகம் படிப்பதில்லை. டி.வியிலும் புத்தக அறிமுகங்கள் இல்லை. பெரும்பாலும் வைரமுத்து, ஜக்கி வாசுதேவ் தவிர அதிக பெயர்கள் விழவில்லை. எனக்கும் பதிமூன்று வயது வரை முக்கிய நூல்களின் பெயர்கள் தெரியாது. பின்னர் கலை இலக்கிய பெருமன்றம் மூலம் தான் தீவிர இலக்கிய பரிச்சயம் கிடைத்தது. எத்தனை பேருக்கு இதற்கான மனநிலையும் சந்தர்ப்பமும் வாய்க்கும் கூறுங்கள். எல்லோருக்கும் இலக்கிய பேரார்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் படிக்கும், அறியும் ஆசை பெரும்பாலானோருக்கு உள்ளது. புத்தகங்கள் அவர்களுக்கு அணுக்கமாய் இல்லை என்பதே சிக்கல்.

சமீபமாய் வந்த சிறந்த பத்து செல்போன்களின் பெயர்களை கேளுங்கள் பட்டென்று சொல்வார்கள். ஏனென்றால் அப்பெயர்கள் தொடர்ந்து அவர்களின் மூளைக்குள் பிம்பங்களாக விழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த மாதிரி சந்தர்பங்களில் நீங்கள் புத்தகங்களின் பெயரை அறிந்திருந்தாலே போதும். புத்தக சந்தைப்படுத்தல் குறைந்தது இதற்காவது மக்களுக்கு உதவும்.

3 comments:

balachandar muruganantham said...

Tamil Book Sales from seller point of view.
http://beyondwork.wordpress.com/2013/06/27/running-a-online-tamil-book-store/

- Bala

Bagawanjee KA said...

செயற்கையான விளம்பரம் மூலம் பணம் வரலாம் ,சரக்கு இல்லாமல் புகழ் பெற முடியாதே ,அபிலாஸ் சந்திரன் !
ஒரு முறை வாசகனை ஏமாற்றலாம் ...அப்புறம் ?

giridharan Venkatachalam said...

Again I am surprised to see your un matured Comments....
1.There is now Big Scam in Department of Justice & fully controlled by Politicians..only few genuine peoples are there in this Dept too ...
2.Media - Most of the media is funded by Foreign countries and acting accordingly...Few of them controlled by politicians...so from here too we can't get genuine Result...
3.I think you are not aware of what happening in practical....Only few Minority groups are doing genuine help, remaining are working for spreading their community & illegal activities....
4.Finally without Stopping Scam you cant do anything..try to give useful Tips to avoid Scam & improve self discipline....without doing this nothing going to happen in our country.