Tuesday, September 3, 2013

உன் மீதான அன்பு குறித்து சில சொற்கள்
நான் பலசமயம் திருமணமாகி எத்தனை வருடங்களாகின்றன என்பதை மறந்து விடுவேன். பெரும்பாலும் ஐந்து ஆறு என மாற்றி மாற்றி சொல்வேன். ஒரு விதத்தில் எனக்கு திருமணமான உணர்வே இத்தனை நாளும் ஏற்பட்டதில்லை. 

அதற்கு என் மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவள் என் மீது எந்த பாரத்தையும் சுமத்தியதில்லை; கண்காணித்து கேள்விகள் எழுப்பியதில்லை. அவள் எனக்காக மாறிக் கொண்டதோ என்னை தனக்காக மாற்ற முயன்றதோ இல்லை. இப்போதும் காதலிக்கும் போது நடந்தது போல நிறைய கோபிக்கிறாள்; சண்டை போடுகிறாள்; அட்டகாசமாய் அன்பை காட்டுகிறாள். அதே குழந்தைத் தனத்துடன் இருக்கிறாள். அதனாலே தான் நான் திருமணமானது பற்றி வருந்தியதோ யாரிடமும் புலம்பியதோ இல்லை. 
திருமணத்துக்கு அதற்கான பொறுப்புகள் உள்ளன தான். ஆனால் அவற்றை தலைமேல் பாரமாக்க நான் அனுமதித்ததில்லை.
பொதுவாக திருமணமான பின் மனைவி அல்லது கணவன் மீது பல ஏமாற்றங்கள் ஏற்படும். எனக்கு அப்படி ஏற்பட்டதே இல்லை. என் மனைவியை இன்னும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி அவள் என் ஆரம்ப அவதானிப்பை பொய்க்க செய்ததே இல்லை. இன்னும் அவளிடம் அந்த ஒரு களங்கமின்மையும் கனிவும் இதயத்தின் ஆழத்தில் சுரந்து கொண்டு தான் இருக்கிறது. அது தான் ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் என்னை கவர்ந்தது என நினைக்கிறேன். இப்போதும் தன் கண்முன்னே ஒரு உயிர் வேதனைப்படுவது கண்டால் கண் கலங்கி உதவ முற்படுபவளாக இருக்கிறாள். சட்டென்று அழக் கூடியவளாக சிரிக்கக் கூடியவளாக இருக்கிறாள். அந்த நன்மை தான் என்னை தொடர்ந்து ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நான் நேர்மாறானவன். வாழ்வு தீமையாலானது என கராறாக நம்புபவன்.
எங்கள் உறவு பல பெரும் நெருக்கடிகளை சந்தித்து வந்திருக்கிறது. மனஸ்தாபம், கோபங்களின் போது வரும் அவநம்பிக்கையும் கசப்பையும் கடந்து ஏதோ ஒன்று அவள் மீது என்னை கட்டி வைத்திருக்கிறது. நான் என்றுமே அவளை முழுமையாக வெறுத்ததில்லை, மிகுந்த கோபத்தில் இருக்கையில் கூட என் நெஞ்சின் ஒரு பகுதி அவளை ரசித்தபடியே தான் இருந்துள்ளது.
மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்போம். பரஸ்பரம் பேச எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். என்னுடைய நாவலில் அவளிடம் பேசியும் வாழ்ந்தும் கவனித்த பல தகவல்களை பயன்படுத்தி இருக்கிறேன். பல நல்ல படங்களை, நாடகங்களை என்னை பார்க்க வைத்தது, நல்ல புத்தகங்களை வாங்கி அளித்தது, தொடர்ந்து எழுத ஊக்குவிப்பது எல்லாமே அவள் தான். புகைப்பட கலையின் நுணுக்கங்கள் சிலவற்றை அறிந்ததும் அவளிடம் இருந்து தான். சில எழுத்தாளர்களின் மனைவியை போல் அவள் எழுத்து சார்ந்த குற்றவுணர்வு அடைய விட்டதில்லை. 
ஒரு நல்ல மனைவி வீட்டு வேலை, தாம்பத்யம் சம்மந்தப்பட்டவளாக மட்டும் இருக்கக் கூடாது. அதையெல்லாம் கடந்த விசயங்கள் அவளிடம் இல்லாமல் போகையில் தான் உறவு கசக்கிறது என நினைக்கிறேன். 
நாங்கள் பெரும்பாலும் வீட்டைப் பற்றியோ காசு, சொந்தங்கள் பற்றியோ பேசுவதில்லை. அதனாலே எங்களுக்கு பேசவும் ஏகத்துக்கு தீராமல் இருந்து கொண்டே இருக்கிறது. கோபத்திலும் சலிப்பிலும் உரையாடல்கள் ஸ்தம்பிப்பதில்லை. எங்கள் வீட்டில் மௌனங்களே இல்லை. நான் எழுதிக் கொண்டிருக்கும் போது கூட அவள் என்னிடம் பேசிக் கொண்டிருப்பாள். நானும் எழுதியபடி நிறுத்தாமல் பேசிக் கொண்டிருப்பேன்.
இதை அன்பென்றோ காதல் என்றோ பிரியம் என்றோ எப்படி விளக்க என தெரியவில்லை. ஆனால் என் உடலின் உறுப்பு ஒன்றை போல் அவளை விட்டு விலகுவது அசாத்தியமாக தோன்றியிருக்கிறது.
உண்மையில் அன்புக்கும் வெறுப்புக்கும் விளக்கமாக எழுதப்பட்ட அத்தனை சொற்களும் பொய்யானவை. இருவர் ஏன் ஒன்றாக இருக்கிறார்கள் என கடைசி வரை அவர்களுக்கே தெரியாது.
இன்று என் அன்பு மனைவிக்கு பிறந்த நாள். பொதுவாக ஒரு கவிதை எழுதி சமர்ப்பிப்பேன். இன்று நான் இதுவரை எழுதின அத்தனை சொற்களையும் உனக்கு சமர்ப்பிக்கிறேன்.

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

அன்பு மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!.

நஜி said...

சூப்பர்...

abdul said...

எங்கயோ கேட்டது!
ஒவ்வொரு காதலுனும் தன் காதலி மாறவே மாட்டாள் என்று நினைத்திருப்பான்
ஒவ்வொரு காதலியும் தன் காதலனை தன் வழிக்கு மாற்றி விடுவோம் என்று
நினைதிருப்பாள்
ஆனால் இருவருமே பெரும்பாலும் தோற்பார்கள்
ஆனால் நீங்கள் வித்தியாசமானவர்கள்
மிக்க வாழ்த்துக்கள்