Friday, August 9, 2013

அசோகமித்திரனை வசைபாடும் சாருவின் வண்டவாளங்கள்
தன்னை பாராட்டவில்லை என்கிற காரணத்துக்காக அசோகமித்திரனுக்கு சாகும் வயது வந்து விட்டதென்றும் அவர் சமகால வாசிப்பற்ற தாத்தா என்றும் சாரு பழித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுவும் சுஜாதாவின் “கனவித்தொழிற்சாலையுடன்” அசோகமித்திரனின் படைப்புலகை ஒப்பிடுவது சுத்த அபத்தம். அசோகமித்திரன் தமிழ் நவீனத்துவத்தின் உச்சம் என நமக்கு நன்றாகவே தெரியும். சாருவுக்கும் கூடத் தான். சாரு ஒருவரை ஏற்பதிலோ நிராகரிப்பதிலோ எந்த விழுமியமும் பாராட்டதவர். நாளை மார்க்வெஸ் ஒரு பேட்டியில் “தமிழில் ஜெயமோகன் என்றொருவரது எழுத்தை மொழிபெயர்ப்பில் படித்து வியந்தேன்” என்று கூறினால் (அப்படி கூறமாட்டார் என்றாலும் ஒரு உ.தா-வுக்கு) சாரு அப்படியே பல்டி அடித்து ”மார்க்வெஸ் நன்றி அறியாதவர், அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதே நான், அவர் என்னோடு ஒப்பிடுகையில் படுமொக்கையான எழுத்தாளர்” என்றும் கூறுவார். 


சாரு தான் பல புதிய எழுத்தாளர்களை, இயக்குநர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார். இது தான் அவரது பங்களிப்பு என்றால் அது இணையத்தின் வருகையோடு காலாவதியாகி விட்டது. சாருவின் விமர்சனம் அல்லது அறிமுகங்களில் ஒரு சொந்தக் கருத்து கூட இருக்காது. ஒன்றை படித்து அல்லது பார்த்து தான் எப்படி வியந்தேன் என சில !!! உதிர்த்து விட்டு அதை வேறொரு படைப்போடு ஒப்பிட்டு காட்டி விட்டு விடுவார். இது ஏனென்றால் அவருக்கு அந்த படைப்பு உணர்வு ரீதியில் எங்கோ பிடித்திருந்தது அன்றி அவருக்கு புரியவில்லை என்பதே. இதனால் தான் எதைப் பற்றியும் அவருக்கு எந்த அவதானிப்பும் இருப்பதில்லை. இன்னொரு காரணம் அவரது இயல்பே எந்த விசயத்தோடும் கோட்பாட்டு அல்லது கொள்கை அல்லது விழுமிய ரீதியான ஒட்டுதல் இல்லாமல் இருப்பது தான். ஒட்டுதல் இல்லாதவர்களுக்கு சொந்த கருத்துக்களோ நிலைப்பாடுகளோ இருக்காது.
சாரு இந்த காரணங்களுக்காக தொண்ணூறுகளின் இறுதி வரை புறக்க்கணிப்பட்டவர். யாருமே அவரை பொருட்படுத்தவில்லை. பின்னர் இணையத்தின் வருகை நேர்ந்தது. தினமலர் ரமேஷின் உதவியோடு இணையதளம் ஆரம்பித்தார். அப்போது நுண்ணுணர்வற்ற பலர் கும்பலாக இணைய வாசிப்பு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாருவின் வெற்று அரட்டை வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால் இணைய உரையாடலின் ஆதர சுருதியே அரட்டை தான். சுவாரஸ்யம் தான். ஆக சாரு தன்னை இணையத்துடன் மறுகண்டுபிடிப்பு செய்தார். நடுநிலை இதழ் வாசகர்களுடனான சாருவின் உறவையும் இப்படித் தான் பார்க்க வேண்டும். நடுநிலை இதழ்களை வாசிக்கும் வாரமலர் வாசகர்கள் சாருவின் நேரடியான அலசலோ அறிவார்த்தமோ அற்ற உணர்ச்சிகரமான பதிவை விரும்பினார்கள். சாருவுக்கும் விகடன், வாரமலர் எழுத்தாளருக்குமான ஒரே வித்தியாசம் கலாச்சாரம் தான். அவர் ஒரு எதிர்கலாச்சாரத்தை முன்வைத்தார். அதனால் ஜனரஞ்சக வாசகர்களுக்கு தமக்கு பழக்கமான ஜாலி எழுத்தை வாசிக்கவும் முடிந்தது, அது மேலானது வித்தியாசமானது என்கிற பெருமையும் தம்மீது தோன்றியது. பெரியவர்கள் சொல்லுவதை தூக்கி எறிந்து பேசும் ஒரு பக்கத்து வீட்டு குழந்தையை போல அவரை ரசித்தார்கள். ரெண்டு விசயங்கள்: ஒன்று அவர் எல்லாவற்றையும் எடுத்தெறிகிறார். அதை நாம் ஏற்க வேண்டியதில்லை, ஏனென்றால் அவர் குழந்தை. இப்படித் தான் பலர் சாருவை சீரியஸாக ஏற்காமலே விரும்பி படித்தார்கள். ஆனால் தீவிர வாசகர்கள் என்றுமே அவரிடம் அதிருப்தியாகத் தான் இருந்தார்கள்.
மற்றொரு விசயம் பேதைமை. ரஜினியின் படங்களில் அவர் அப்பாவியாக தொடர்ந்து வருவார். சகல திறமைகளும் சக்தியும் கொண்டவர் ஆனாலும் பேதை. சாருவின் இலக்கிய பாத்திரமும் அப்படித் தான். சாருவை பற்றின பொதுவான பிம்பம் சாரு அறிவாளி அல்ல, அதனாலே எதையும் ஒளிக்க தெரியாது; அவர் பொய் சொல்ல முயன்றாலும் பட்டவர்த்தமாக புலப்பட்டு விடும். இந்த பேதை நேர்மை சாருவின் முக்கிய வசீகரம். ஆனால் இந்த அபத்த நேர்மையை தாண்டி அவரிடம் எதிர்பார்த்தவர்கள் அதிருப்தியே உற்றார்கள்.
மேலும் சாருவின் மன அமைப்பும் மிக எளிமையானது. இலக்கியம் சிக்கலானது. ஆனால் சாரு எளிய உணர்ச்சிகளைக் கொண்டு சிறு சிறு கவித்துவ தெறிப்புகளை நிகழ்த்துபவர் மட்டுமே. அதனாலேயே அவரது எழுத்தும் வெறும் அரட்டையாக இருக்கிறது. அவருடைய நாவல்களில் நாம் சில அருமையான தருணங்களை பார்க்கலாம். ஆனால் 500 பக்கங்களில் மின்னஞ்சல், காதல் கடிதங்கள் போன்ற ஜல்லியடிப்புகள் போக நாவலே ஐம்பது பக்கமிருக்க இந்த சிறந்த தருணங்களை நாம் ஐந்து பக்கங்களில் தான் காண முடியும்.
இதனால் தான் அசோகமித்திரன் சாருவை ஒரு அறிவார்ந்த ஆளுமை என குறிப்பிடவில்லை. இது சாருவுக்கும் அவரது வாசகர்களுக்கும் அவரது வட்டத்தில் உள்ள கலாச்சார ஒட்டுண்ணிகளுக்கும் போலிகளுக்கும் தெரியும். இதிலென்ன பிரச்சனை?
சாருவின் கட்டுரைகள் அரட்டைகள் மற்றும் தகவல்கள் என பிரிக்கலாம். அரட்டை கிட்டத்தட்ட முகநூல் வகை. தகவல் விக்கிபீடியா வகை. முகநூல் + விக்கிபீடியா = சாரு என கட்டுரையாளர். பெர்க்மேன் அல்லது மார்க்வெஸ் பற்றி விக்கிபீடியா சொல்வதை விட சாரு என்ன அதிகமாய் சொல்லி விட்டார்?
அறிவார்ந்து யோசிப்பதும் எழுதுவதும் மட்டுமல்ல அத்தகைய விசயங்களில் ஈடுபடுவதற்குமான ஆற்றல் சாருவுக்கு இல்லை என நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி செய்வதை ஒரு பக்கம் “போர்” என சாருவே மறுதலிப்பார். இன்னொரு பக்கம் தான் அறிவார்ந்த கலைசேவையை தமிழுக்கு செய்ததாய் மார் தட்டுவார். சாரி சாரு, நீங்கள் தமிழுக்கு செய்ததெல்லாம் ஒரு டி.வியாகவும் பிரிண்டராகவும் விளங்கியது தான். நீங்கள் இன்றும் நல்ல பொழுதுபோக்கு தரும் டி.வி தான். ஆனால் விக்கிபீடியா தகவல்களை அச்சடிக்கும் பிரிண்டர் வேலை காலாவதியாகி விட்டது. உங்களது இசை பற்றிய நூல் ஒரு சிறு மொழிபெயர்ப்பு முயற்சி மட்டுமே.
ஜெயமோகனின் கருத்துக்களோடு எங்களில் பலருக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் அவர் தப்பு தப்பாய் சொன்ன பல விசயங்களும் கூட சொந்த கருத்துக்கள் தாம். அவருக்கு சொந்தமாக சொல்ல ஏதோ ஒன்று உள்ளது. ஒரு கற்பனை உண்டு. ஒரு கட்டுரையாளர் என்ற அளவில் அவர் உங்களை விட அறிவு படைத்தவர். கடுமையாக உழைக்கக் கூடியவர். நீங்கள் செய்ததெல்லாம் வெறும் பெயர்கள் உதிர்ப்பதே. அதை இன்று மாதம் நூறு ரூபாய்க்கு இணையம் உள்ள ஒரு மொபைல் போன் செய்யுமே!
சாரு தொடர்ந்து தன்னை உலகின் ஆகப்பெரிய அறிவாளியாகவும் எழுத்தாளனாகவும் மிகைப்படுத்துவது ஒரு சந்தைப்படுத்தல் உத்தியும் தான். ஒரு கொக்கோ கோலா விளம்பரத்தை பாருங்கள். கோக் குடித்தால் தான் நீங்கள் இந்த கால பண்பாட்டை சேர்ந்தவர் என்கிற எண்ணத்தை தோற்றுவிக்கும். நீங்கள் பத்து ரூபாய்க்கு வாங்கி பொதுவில் ஸ்டைலாக குடிப்பீர்கள். சாருவின் வாசகர்களும் அவரை இப்படித் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அவரும் வழிவகை செய்கிறார். அவர் தன்னை உச்சத்தில் ஏற்றி வைக்கும் போது அவரை படிக்கும் வாசகனுக்கு ஒரு கிளுகிளுப்பு கிடைக்கும். இந்த கிளுகிளுப்பு இருக்கும் வரை தான் அவனும் படிப்பான். அவன் அடிப்படையில் ராஜேஷ்குமார், பாலகுமாரன் வாசகன். ஆனால் இன்று ராஜேஷ் குமார் படித்தால் அந்தஸ்து இல்லை. ஆனால் சாரு வாசகன் என்றால் படிப்பதும் எளிது, அந்தஸ்தும் கிடைக்கும். கோக்குக்கு பத்து ரூபாய் செலவு செய்வது போலத் தான் இதுவும்.
சாருவின் கட்டுரையில் அசோகமித்திரனை பற்றி மிக மோசமான வசைகள் உள்ளன. அவரை சாகக் கிடக்கும் கிழவர் என்றும், அடக்கப்பட்ட பாலியல் இச்சையை மட்டும் எழுதிய மத்தியவர்க்க தாத்தா என்றும் தொனிக்கும் ரீதியில் எழுதி இருக்கிறார். இதையெல்லாம் படிக்கும் போது ஒரு இலக்கிய வாசகனாக நமக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுகிறது.

என்னுடைய தோழி ஒருவர். உளவியல் மருத்துவர். நல்ல வாசகர். இங்கிலாந்தில் வாழ்கிறார். அவர் சாருவின் கட்டுரைகளை படித்து விட்டு “இவருக்கு narcisistic personality disorder” என உறுதியாக சொன்னார். இத்தகையவர்கள் ஒரு மலையுச்சியில் தனியாய் திரியும் பைத்தியம் போன்றவர்கள். ஒரு கலைஞர் அப்படி இருப்பதில் அனுகூலமும் உள்ளது. சாருவின் பிரச்சனை அவர் யார் கிடைத்தாலும் தூக்கி கிலி காட்டி விட்டு “கீழே போட்டிருவேன்” என பயமுறுத்துகிறார். அவருக்கு தெரியாது அவர் நிற்பது மலை முகடல்ல தன் வீட்டு படுக்கையறை கட்டில் என்று.

15 comments:

S.J.Murthy said...

Its me sent a mail to charu about
Ashoka Mithran"s interview.But i never expected charu will give this extent of pain to Ashoka Mithran.Sorry Mr.A.M.You are a great writer of our times

S.J.Murthy said...


kaThiRVnkAt said...

charu ashokamithranai noble parisu vanga thaguthi anavar endru kurippittu ullaar.Avarudaiya ilakiya pangalippai avar marukkavillai.avarudaya ikkaalithin avathanipaaithaan vimarsikiraar endru naan ninaikkren.

Travis Bickle said...

அப்போது நுண்ணுணர்வற்ற பலர் கும்பலாக இணைய வாசிப்பு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாருவின் வெற்று அரட்டை வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால் இணைய உரையாடலின் ஆதர சுருதியே அரட்டை தான். சுவாரஸ்யம் தான். ஆக சாரு தன்னை இணையத்துடன் மறுகண்டுபிடிப்பு செய்தார். நடுநிலை இதழ் வாசகர்களுடனான சாருவின் உறவையும் இப்படித் தான் பார்க்க வேண்டும் - So, If I am admirer of Charu than I will be certified as an shallow reader who doesnt have any reasoning or other qualities that are necessary for a good reader, Great, Keep it up. S.Ramakrishan, Jeyamohan followerskum will you say the same thing and what about reader who'll follow all of them - One doubt!

Travis Bickle said...

One Time a musician from Kolkata wrote a almost 5 page letter to Charu defending Ilayaraja, I couldnt able to understand almost half of the article as it was too much into musical, charu apologized, well thats kind of conversations have happened many times in Charuonline, I dont know why you skipped those things! His review for Inception in Uyirmmai can be made as lesson in movie critic in any university of USA, far more superior than the stupid reviews of Guradian,washingtonpost perhaps even Time, Believe me I have read reviews as much as I can about Inception!

If he was living in US, he would be more popular than Roger Ebert!

Abilash Chandran said...

Travis Bickle நீங்கள் குறிப்பிடுகிற இன்செப்சன் கட்டுரை வெறும் உணர்ச்சிகரமான விவரிப்பு. முழுக்க முழுக்க ஆச்சரியக்குறிகளால் ஆன பதிவு. அதில் அவர் இன்செப்சனின் தத்துவார்த்த மையம் பற்றி ஒரு வரி கூட எழுதி இருக்க மாட்டார். திரும்ப திரும்ப இது போல் இன்னொரு படம் இருக்க முடியாது என்றே எழுதி இருப்பார். அவரை ரோஜர் எபர்ட்டுடன் எல்லாம் ஒப்பிடாதீர்கள். எபர்ட்டின் ஆவி உங்களை மன்னிக்காது. சாருவுக்கு எபர்ட்டிடன் உள்ள தத்துவ சாரமோ வாசிப்போ இல்லை. சாரு ஒரு புனைவெழுத்தாளர். அவ்வளவு தான்.

Abilash Chandran said...

சாருவின் இணையதளத்தில் அறிவார்ந்த விவாதஙகளே நடக்கிறது என சொல்வது நகைப்புக்குரியது. அவர் திரிஷாவின் உள்ளாடை பற்றி எழுதியதை படிக்கவில்லையா?

Karikalan said...

Well said!

I am sure that there are going to be quite a few Charu apologists making a beeline to this blog entry. Before they start to spout nonsense about how great Charu is, let them do a simple experiment.
As someone who has read Charu’s three novels (Zero Degree, Existentialism and Fancy Banian, and Thegam), and read smany of his blog entries, I would request his readers to do the following simple experiment. Take any of his material, and strike out the following lines:
(a) Pseudo righteousness: This usally has the form of anger expressed by the protogonist against the perceived injustice of the society. His characters typically express this anger in a few well-worn methods: (a) The protogonist personifies the injustice by amplifying it; (b) The supposed villain exemplifies the righteous behavior within the scope of his work; and (c) B-movie meladromatic display of right/wrong, and emotional tugs.
( In his posts, it becomes very apparent, that much of the anger is just manufactured, and is displayed purely to appear as an intellectual, and do not stand even the slightest scrutiny. Charu, has never displayed the necessary understanding of the issues to have a well-thought out position. He acts simply as a prop for counter-culture thinking.)

(b) Name dropping, and meaningless cultural references: Charu is like your 60 year old uncle, who read a few books in English when he was in his twenties, and still keeps quoting them, and chastising everyone for not being as ‘well read’ as he is. His books are deliberately littered with (often unconnected) cultural references using simplistic devices such as naming his characters after historical characters.

(c) Self aggrandizement/promotion: This takes many, many forms, and is the hall mark of his blog postings. (My writing is better than xyz, I am xyz’s teacher, I gave up a potentially lucrative movie career because of my honest review, etc. etc.)

(d) Insults/Name calling: Attacks on individuals (Asokamithran, Jeyamohan, Manushyaputhran, Film Director, Film musicians etc. etc),society (Tamil Society) etc.

(e) Shock-Jock: Charu, desparately tries to ‘shock’ his audience by writing some explicit sexual/violent content in a matter of fact tone. This MAY be shocking to the old T-Nagar intellectuals, but the modern world has moved too far ahead to care. Unfortunately, he is not a nuanced enough writer to really shock people.

If you cut out all these hapless attempts at being a writer, what is left of Charu’s writing is very little. His only hope is the following. He is looking for a ‘Slumdog Millionaire’ type of hit in the eyes of western world by peddling the pornography of Indian condition to the west. It remains to be seen how well this would work.
Charu often complains about writing in Tamil. Fortunately for him, his blogs are only in Tamil. Had they been translated on a daily basis to English, more people would know that he stands. I wonder how English readers would react if they know that Charu prayed at three temples for the safe travel of his trip, followed god-man Nithyananda, suggests that his critics would be beset with spiritual problems, etc. etc. If Charu gets any awards, it would be ironic, because, the only reason that he would win it is because he writes in Tamil!

Abilash Chandran said...

அற்புதமாக எழுதி உள்ளீர்கள் கரிகாலன். இதுவே தனி கட்டுரை போலத் தான் உள்ளது. நீங்கள் சொன்னது போலுள்ள எளிய உத்திகள் தந்திரங்களை தான் பயன்படுத்துகிறார். எல்லோரும் இறுகின மொழியில் எழுதின போது அவர் சட்டென ஒரு சரளமான சுவாரஸ்யமான தமிழில் எழுதியது, மாறுபட்ட ஒரு கலாச்சார நுண்ணுணர்வை அறிமுகப்படுத்தியது சாருவின் சிறப்புகள். ஆனால் அவரால் இவற்றை ஆழமாகவோ நுட்பமாகவோ பண்ண முடியவில்லை. நிஜத்திலும் எதிலும் ஒட்டுதல் இல்லாத மிக போலியான ஆளூமை அவர் என்பதும் இதற்கு காரணம். சாருவும் அவரது எழுத்துக்களும் ஒன்று தான் என்பது இவ்விசயத்தில் சரி

manikandan s said...

@ karikalan

கரிகாலன், தமிழில் கமெண்ட்டை எழுதுங்கள். என்னைப் போன்ற சிலர் கமெண்ட்டையும் படிப்பார்கள்.

Karikalan said...

@மணிகண்டன்,
இந்தப் பதிவைப் படித்தவுடன், மனதில் பட்டதை எழுதி சட்டென்று விட்டேன். தமிழில் எழுதியிருக்க வேண்டும் தான். மீண்டும் படிக்கையில், கொஞ்சம் தொகுத்து எழுதியிருக்கலாம் என்று படுகிறது.

முதலில், இது சாருவின் எழுத்தைப் பற்றிய/எழுத்தைச் சார்ந்த என் கருத்துக்கள் மட்டுமே. அவரது தனிப்பட்ட நடத்தையைப் பற்றியது அல்ல.

அபிலாஷ் எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்தவுடன், சாருவின் ரசிகர்கள் வந்து சரமாரியாக தம் கருத்துக்களைக் கொட்டுமுன், ஒரு சின்னப் பரிசோதனையை செய்து பார்க்கலாம். இதற்கு ஒரு பேனாவும், சாரு எழுதிய புத்தகமோ, அல்லது பதிவின் அச்சுப் பிரதியோ இருந்தால் நல்லது.

சாருவின் எழுத்தைப் படியுங்கள். கீழ்கண்ட உத்திகளைக் கண்டால், அந்த வரிகளை அடித்து விடுங்கள்.

1. அநீதியைக் கண்டு கொள்ளும் போலித் தார்மீகக் கோபம்:

இது சாருவின் எழுத்தில் ஒரு குறிப்பிட்ட ஒரு சில வகைகளில் வரும். (அ) கதையின் வினையாளனே (protogonist) எந்த அநீதியை எதிர்ப்பதாக நினைக்கிரானோ, அந்த அநீதியின் வடிவமாக இருப்பது; (ஆ) கதையின் வில்லன், அதற்கு நேர் எதிராக, தான் செய்யும் காரியத்தில் நியாயத்தைக் கடைப் பிடிப்பது, (இ) தமிழ் திரைப்படங்களில் வரும் மெலொட்ராமா வகை –நல்லது/கெட்டது மூன்றாவது வகை.

தேசத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு, உண்மையான கோபம் எல்லாம் சாருவின் எழுத்தில் இருக்காது. இதை அபத்தமாக காண்பிக்கிறேன் பார் – என எழுத்தாளன் கையாளும் உத்தி மட்டுமெ தெரியும். வன்முறையில் வதங்கும் மக்களைப் பற்றிய மனிதாபிமானம், ஆரம்ப நிலை எழுத்தாளர்களின் எழுத்தில் கூட கண்டு விட முடியும். சாருவின் எழுத்தில் அவர்கள் வெறும் எழுத்து உத்திக்கான கச்சாப் பொருட்களாகத் தான் காணப் படுகிறார்கள்.

2. மேலை நாட்டு இலக்கிய குறியீடுகளை அங்குமிங்கும் தன் எழுத்தில் இரைப்பது:

கதைக்குச் சம்பந்தமே இல்லாமல், மேலை இலக்கிய குறியீடுகளை, அப்பட்டமாக முன் வைப்பது. இந்த வேலையை எந்தக் கவனத்துடனும் கூட சாரு செய்வதில்லை. மேலை நாட்டுக் குறியீடுகளை தன் பாத்திரங்களின் பெயராக, தெருவின் பெயராக, நாயின் பெயராக என்று வைத்து விடுவார். மேலை இலக்கியங்களில் இந்தக் குறியீடுகள், ஒரு நாவலை, ஏதோ ஒரு தளத்தில் ஒருங்கினைக்கும், அல்லது ஒரு பகுப்பைக் குறிக்கும்.

அதுவெல்லாம், சாருவின் படைப்பில் காண இயல்வதில்லை. எவ்வளவுக்களவு, புரியாத மாதிரி இருக்கிறதோ, அவ்வளவுக்களவு நல்லது – என்பது மட்டுமெ இலக்கு.

3. சுய தம்பட்டம்:

அவரது பதிவுகள் அனைத்துமெ, ஏறத்தாழ சுயதம்பட்டம் என்ற வகையைச் சார்ந்தது தான். இது பல வகைகளில் வெளிப்படும். நான் இன்னாருடைய ஆசிரியன். நான் இன்னாரை விட நன்றாக எழுதுபவன். நான் தமிழ் நாட்டில் மட்டும் பிறந்திருக்காவிட்டால், எங்கோயோ இருப்பேன். இத்யாதி. இத்யாதி. நான் படிக்கும் இந்தப் புத்தகம், உலகத்திலேயே சிறந்தது என்று கூறுவார். இதில், சாருவின், தனி முத்திரை என்னவென்றால், இவ்வாறு சொன்ன வரியிலேயே, அல்லது அடுத்த வரியிலேயே, தன்னைப் புகழ்ந்து கொள்வது/பிடிக்காதவரை மட்டம் தட்டுவது. இதை, உண்மையான சாருவிஸம் – எனக் கொள்ளலாம்.


== தொடரும்.

Karikalan said...

... contd..4. வசைகள்:

தனி மனிதர்களைப் பற்றி (அசோகமித்திரன், ஜெயமோகன், ரஜினி, கமல், மனுஷ்ய புத்திரன், என), சமூகத்தைப் பற்றிய ஆர்ப்பாட்டமான கண்டனங்கள். எளிய எதிர்வினைகளுக்கு, பெரும் தடாபுடல் செய்வது – இதுவும் சாருவின் ஸ்பெஷாலிட்டி. தம்பட்டமும், வசைகளும் கலந்து இலக்கிய உச்சத்தைத் தொட்டு விடுவது – அடிக்கடி நடக்கும் நிகழ்வு.

5. அதிர்ச்சி-எழுத்து:

பாலியலைச் சார்ந்தோ, வன்முறையைப் பற்றியோ, சாரு, எழுதுவது, ஒரு காலத்தில், தில்லை நகர் அறிவு ஜீவிகளுக்கு வேண்டுமானால், கொஞ்சம் திகைப்பை அளித்திருக்கலாம். காலம் எவ்வளவோ, மாறி விட்டது. இந்த வன்முறையைப் பற்றி நுட்பமாக எழுதும் திறனும், வன்முறையின்/பாலியல் வக்கிரத்தின் மூலங்ளை/பரிணாமங்களை விளக்கும் திறனும் சாருவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. வக்கிரங்களும்/வன்முறைகளும் வெறும் தகவல்களாக, அதிர்ச்சி அளிக்கும் உத்திகளாக மட்டுமே கையாளப் படுகின்றன.

சரி, இதையெல்லாம் அடித்து விட்டு விடுங்கள். எஞ்சுவது மிகவும் கொஞ்சமே. இன்னும், குறிப்பாகச் சொல்லப்போனால், சாருவின் திறமை, சிறு துணுக்குகளை ஒரு பத்தி எழுத்தாளரின் திறமையுடன், மனதைக் கவரும் தலைப்புடன் எழுதுவது தான். (அந்தத் துணுக்குகளில் சொல்லப் பட்ட தகவல்கள் சரியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. வாசகர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது.)

சாரு, அவ்வப்போது பிறரை வசை பாடிக் கொண்டு இருக்கிறார். இது, தன்னை ஒரு கலகக்காரராகக் காட்டிக் கொள்ளும் உத்தி மட்டுமே. இதில் ஆழம் எதுவும் கிடையாது.

சாரு, தன் பதிவில், எழுதுவதை, யாராவது அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் போட்டால் போதும். பயணம் செய்வதற்கு முன், மூன்று கோவில்களில் வேண்டிக் கொண்டதும், நித்யான்ந்தாவின் சீடராய் இருந்ததும், தன் எழுத்துக்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு இடைஞ்சல் வந்து விடும் என்று சாபமிடுவதும், தமிழ் தெரியாத ஆங்கில வாசகர்களுக்குத் தெரிந்தால், இவரது அறிவுஜீவித் தனம் அனைவருக்கும் தெரிந்து விடும். தமிழில் எழுதுவது பற்றி, சாரு அடிக்கடி, குறை பட்டுக் கொள்வது ஒரு நகைமுரண். தமிழில் மட்டுமெ எழுதுவதால் தான், அவருக்கு ஏதாவது பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது, என்று தான்எனக்குப் படுகிறது.

சாரு, திட்டும் போது, பலர் ஒதுங்கிப் போய் விடுவது உண்டு. அந்தப் பழக்கம் இப்போது, சாருவை அசோகமித்திரனை, வசை பாடும் அளவிற்கு வளர்த்து விட்டது, என்று எண்ணத் தோன்றுகிறது. இலக்கிய உலகில், அவரது இடம், அவரது எழுத்துக்களால் நிருவப்பட்ட ஒன்று. அது மட்டுமின்றி, சாருவைப் போல, தத்துப் பித்தென்று, சினிமாவைப் பற்றி வெத்துக் கதை அடிப்பவர் அல்ல அசோகமித்திரன். அ. மி. சினிமாத் துறையில் நெடுங்காலம், வேலை செய்தவர். கலை பற்றிய நுண்ணுனர்வு கொண்டவர். அவரைப் பற்றி தாறுமாறாக எழுதும் தகுதி,சாருவுக்கு முற்றிலும் கிடையாது. அதைப் பற்றிய கேள்வியை அபிலாஷ் எழுப்பியிருப்பது மிகவும் பொருத்தமானது.

ரௌத்திரம் பழகு.

shivaa said...

அவனெல்லாம் மனுசன்லே சேத்தியா மனநோய் பிடித்த மிருகம் அவனை பற்றி பதிவு எழுதுவதும் கமண்ட் போடுவதும் வீண் வேலை நண்பரே

Karikalan said...

உண்மை தான். நீங்கள் சொல்வது போல் பெரும்பாலும் ஒதுங்கிச் சென்று விடுவது சரி தான்.

சில, சமயம் வயதில் முதியவரும், சிறந்த தமிழ் இலக்கிய ஆக்கங்களை உருவாக்கிய முன்னோடியையும், அல்பமாகத் வசை பாட முனையும் போது, "உன் இலக்கியத் தகுதி என்ன?" என்ற கேட்க நினைப்பதையும் தவிர்க்க முடிவதில்லை.

ranjith said...

thanneer,pulikalaigan,otran,kaalamum 5 kulandhaigalum,thalaimurai,manal,
pondra athaniyum ethnai murai maru vasippu seidhalum unkalukku mrubadiyum oru seidhi kittum.charu pondravargalai innamum ilakiyavaadiyaga sila arai vekkadugal nambuvadhe ithagaiya pokkugaluku kaaranam.