Monday, August 5, 2013

ரவீந்திர ஜடேஜா: திறமை என்றால் தான் என்ன?

முன்னர் கும்பிளேவுடனான ஒரு பேட்டியில்கிரிக்கெட்டில் முன்னேற அடிப்படை தகுதி என்ன?” என கேட்டார்கள். “திறமைஎன்றார் கும்பிளே. வியப்பாக இருந்தது. ஏனென்றால் கும்பிளே ”திறமையானவராக” அல்ல கடுமையாக உழைப்பவராக ஒழுக்கமாக நேர்த்தியாக ஆடுபவராக அறியப்பட்டவர். ரவீந்திர ஜடேஜா தன் பந்து வீச்சு பாணியால் கும்பிளேவுடன் ஒப்பிடப்படுபவர். அதே போல் வேகமாக வீசுபவர். அதே போல் பந்தைப் திருப்பும் அபரித திறமை அற்றவர். அப்படி என்றால் திறமை என்றால் என்ன? கூர்மையாக வேகமாக வீசுவது கூட ஒரு திறமை தானா? 

இன்றுள்ள பல சிறந்த சுழலர்கள் – பனேசர், அப்ரிடி, ஹபீஸ் – இந்த வகை தான். சுழற்றாத சுழலர்கள். வேகமாக வீசும் சுழலர்களில் நன்றாக சுழற்றுபவர்களான ஸ்வான், நரைன், அஜ்மல் இன்னும் மேலான நிலையில் உள்ளவர்கள். ஆனால் இன்று பொதுவாக வேகமாக நிதானமாக வீசும் சுழலர்கள் அதிக வெற்றி பெறுகிறார்கள். கனத்த மட்டையை ஆவேசமாக வீசி அடிக்க துணியும் மட்டையாளர்கள், குறுகிப் போன எல்லைக் கோடுகள் மற்றும் மெத்தனமான ஆடுதளங்கள் காரணங்கள் எனலாம். பந்தை மெல்ல காற்றில் மிதக்க விட்ட good lengthஇல் விழ வைப்பவர்கள் பெரும்பாலும் விக்கெட் எடுப்பதோ ஓட்டங்களை கட்டுப்படுத்துவதோ இல்லை. ஓஜா நல்ல உதாரணம். அவர் மெல்ல மெல்ல காலாவதி ஆகி வருகிறார். மிஷ்ரா மீதான பிரதான குற்றச்சாட்டு கூட அவர் மிக மெல்ல வீசுகிறார் என்பது தான்.
யோசித்துப் பார்த்தால் நமக்கு வேக சுழலர்களின் ஒரு மரபு உள்ளது. முன்னர் சந்திரசேகர், பின்னர் கும்பிளே, அடுத்து ஹர்பஜன். நமது ஆட்டநாய சுழலர்கள் சற்று வேகமாக வீசுபவர்கள் தாம். ஜடேஜா இவர்களுக்கு வெகுகீழ் தான் வருகிறார். டெஸ்டுகளில் நன்றாக சுழலும் ஆடுதளத்தில் போல் அவரால் ஒரு தட்டையான தளத்தில் விக்கெட் வீழ்த்த முடியுமா? ஜடேஜா முன்னேறி வரும் ஒரு நேர்த்தியான வீச்சாளர். பிரமாதமான களத்தடுப்பாளர். சுமாரான ஆனால் கடப்பாடுள்ள மட்டையாளர்.
ஜடேஜாவை நான் முதலில் பார்த்தது சென்னையில் ஒரு ஆட்டத்தில். தென்னாப்பிரிக்க ஏ அணியும் இந்திய ஏ அணியும் ஆடிய ஆட்டம். அப்போது தான் முதன்முறை மோர்னெ மோர்க்கலை பார்த்தேன். தொலைவில் இருந்து பார்க்க பொலாக் வீசுவது போன்றே இருந்தது. ஜடேஜாவை பற்றி அப்போது பரபரப்பு இருந்தது. அதாவது உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்தில். அவர் 19 வயதினருக்கு கீழுள்ள வீரர்களுக்கான ஆட்டங்களில் இருந்து நல்ல பெயருடன் இருந்தார். திறமையான ஆல்ரவுண்டர் என்றார்கள். ஆனால் அவர் என்னை எந்த விதத்திலும் கவரவில்லை. அடுத்து அவர் இந்திய அணிக்குள் வந்த போது மட்டையாட்டம் தான் பிரதானமாக பார்த்தார்கள். கால் ஸ்பூனுக்கு மேல் கடவுள் இவருக்கு திறமை அளிக்கவில்லை என நினைத்தேன். பின்னர் பல ஆட்டங்களில் தோனி அவரை பாதுகாத்து வாய்ப்பளிக்க பல ரசிகர்களையும் போல நானும் எரிச்சலுற்றேன். பிறகு ஜடேஜாவின் பந்து வீச்சு மேம்பட்டது. ஆனால் ஐபிஎல்லில் தடை செய்யப்பட்ட பின் அதுவும் கடுமையாக வீழ்ந்தது. அவர் ஒழுங்காய் மட்டையாடவும் பந்து வீசவும் முடியாதவரானார். அணியில் இருந்து விலக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட வந்தார். இன்னும் கூர்மையாக வேகத்தில் சின்ன சின்ன மாறுபாடுகளுடன் சிறப்பாக வீசினார். அடுத்து போக போக ஜடேஜாவின் பந்துவீச்சு மேம்பட்டுக் கொண்டே வந்தது எனலாம். திருப்புமுனை ஆஸி தொடர் தான். தன்னால் டெஸ்டிலும் விக்கெட்கள் வீழ்த்த முடியும் என நிரூபித்தார். குறிப்பாக கிளார்க்கை அவர் வீழ்த்தியது உள்ளுக்குள் ஒரு தனி போட்டியாக நடந்தது. கிளார்க்கால் ஜடேஜாவை ஆப் பக்கமும் அடிக்க முடியவில்லை கால் பக்கமும் திருப்ப முடியவில்லை. அவர் பந்தை இடையிடையே கொஞ்சமாய் திருப்பினார். அதனால் நம்பி நேராகவும் ஆட முடியவில்லை. தொடர்ந்து கிளார்க் அவரை ஆப் பக்கமாய் அடிக்க முயன்று வெளியேறினார். இன்னொரு முறை நேராக அடிக்க இறங்கி வந்து ஸ்டெம்பிங் ஆனார் – பந்து திரும்பி விட்டது. இவர் பந்தை திருப்புவாரா மாட்டாரா எந்தளவுக்கு திருப்புவார் என புரியாமல் கிளார்க் தொடர்ந்து அவரிடம் வெளியேறினார்.
வேகமாய் முழுநீளத்தில் வீசியதால் அவரை பிற மட்டையாளர்களால் வாரியடிக்கவும் முடியவில்லை. கணிசமான விக்கெட்டுகள் ஜடேஜாவை மட்டையாளர்கள் மதிக்காததனாலும் அவர் இறுக்கமாய் வீசி ஏற்படுத்திய நெருக்கடியினாலும் வீழ்ந்தது. என்னுடைய கேள்வி இனி மட்டையாளர்கள் அவரை சீரியஸாக பொறுமையாக ஆடினால் என்னவாகும் என்பது? ஜடேஜா நெருக்கடிக்கு உள்ளாவாரா?
இதெல்லாம் வருங்கால சவால்கள். ஆனால் இப்போதைக்கு ஐ.சி.சி தரவரிசைப்படி அவர் தான் ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் சுழலர். 96இல் கும்பிளேவுக்கு பிறகு இதை சாதித்த ஒரே இந்திய சுழலர். வெற்றிக்கு தேவையான திறமை என்பது வேறு ஏதோ ஒன்று என இந்த இளைஞர் நிரூபிக்கிறார். உழைப்பு, கவனம், பொறுமை, உன்னிப்பு இதெல்லாம் கூட திறமை தானே. இதெல்லாம் இல்லாமல் அபரிதமான ஆட்டத்திறமை மட்டும் கொண்ட ரோஹித் ஷர்மாவை விட ஜடேஜா தான் நம்பர் ஒன்.
கடவுள் நமக்கு என்ன தருகிறார் என்பதல்ல, நாம் நம்மை வைத்து என்ன செய்கிறோம்? அது தான் திறக்காத கதவுகளையும் திறக்கிறது.

No comments: