Monday, August 5, 2013

ரத்தம் என்னை கடவுளாக்கியது...[ஆறு வருடங்களுக்கு முன் எழுதி “புதிய காற்றில்” வெளிவந்த கட்டுரை. இது ஒரு மீள்பதிவு]

நான் சிவனாயிருக்கிறதினாலெ

இத (சிவபானம் -- கஞ்சா) குடிக்க வேண்டியிருக்குநைந்த பழைய ரூபா நோட்டுக்கு டிக்கெட் தர மறுத்த ஒரு ரயில்வே குமாஸ்தாவை கொன்ற ரத்தம் தோய்ந்த தன் கைகளை அலட்சிய புன்னகையுடன் பார்த்தவாறு நிமிரும் பிரபாகர் எனும் அந்த இளைஞன் தான் கடவுளாகி விட்டதாய் உணர்கிறான். குருதி சுற்றி குழுமியுள்ள மக்களிடமும், சகபயணிகளிடமும் அச்சம் கலந்த விலகலை அவன் பால் உருவாக்குகிறது. அவன் பயணம் அங்கிருந்து ஆரம்பமாகிறது.

சிங்கம் பொல் சிங்கிளாக வந்து எதிரிகளை ஹீரோ நொறுக்கி நிமிரும் வழக்கமான சினிமா காட்சி போல் இக்காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க, கைத்தட்டி ஆரவாரிக்க வைக்கவில்லை என்பது இதை நம் படவரலாற்றில் ஒரு மைல்கல் காட்சியாக்குகிறது. பார்வையாளர்களிடையே ஒரு கனத்து உறைந்த மௌனம். ஆணியில் தலை அறையப்பட்டு செத்த அப்பிராணி அரசு ஊழியனைக் கண்டு பொறியில் தட்டும் அதிர்ச்சியும், உள்ளார்ந்த ஒவ்வாமையும். பிரபாகரின் மேல் அனுதாபமோ, அவனது வன்முறையின் மேல் அபிமானமோ உருவாமல் போவதே இக்காட்சியை முக்கியமாக்குகிறது. தொடர்வண்டியில் சிகரெட் புகைத்ததனால் காவலாளியுடன் ஏற்படும் சச்சரவில் அவனை பிரபாகர் கொல்கிறான். கடற்கரையில் சல்லாபிக்கும் ஜோடிகள், உள்ளார்ந்த ஈடுபாடின்றி உரையாடும் உளவியல் மருத்துவர் என்று அடுத்தடுத்து அற்ப காரணங்களுக்காய் அவன் பலரைப் போட்டுத் தள்ளுகிறான். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாய், உள்நோக்கத்துடன், இயக்குனர் வன்முறையை நியாயப்படுத்தாமல் செல்கிறார். இதுவே சுஹாசினி போன்ற வழவழகொழகொழ விமர்சகர்கள் எதிர்மறையானவையாய் சுட்டிக் காட்டும் படம் "நிறைய பேரை முணுமுணுக்க வைத்த விஷயங்கள்". அஞ்சு பைசாவை ஆயிரம் முறை லஞ்சமாய் வாங்கியதாய் சாம்ர்த்தியமாய் பேசியோ, இளம் ஹிரோயினை...அல்லது குறைந்த பட்சம் ஒரு கிழவியை சீண்டியதற்காகவோ பிரபாகர் கொலைகள் செய்திருந்தால் இவர்கள் முணுமுணுத்திருக்க மாட்டார்கள். ஆனால் முரண்பாடாய் விபச்சார விடுதியில் தன் காதலியை வதைக்கும் மழமழ இளைஞனையும், பேருந்தில் ஆபாசமாய் செயல்படும் மத்திய வயது போலீஸ் மாமா ஒருவரையும் சாந்தமாய் விட்டு விடுகிறான். என்ன கொடுமை அல்லவா? ஹீரோ பொங்கியெழுந்து வில்லனை புரட்டி அடித்து வதம் செய்வதற்கு நம் சினிமா இலக்கணம் சிபாரிசு செய்யும் காரணங்கள் பெண்ணை மானபங்கம் செய்ய முயலும்\ ஏழை எளியோரை சிதைக்கும்\ தாயை அவமானப்படுத்தும்\ அரசியல் அதிகாரத்துக்காய் ஊழல், கொலைகள் செய்யும் வில்லனின் செயல்கள். இலக்கணத்தை மீறும் பிரபாகரின் இடம் பொருள் புரியாத வன்முறை நிச்சயம் விஜயகாந்த், சரத்குமார், விஜய் எனும் ஒரு பெரும் செவ்வியல் ஹீரோ பரம்பரையை வழிபட்டு வளர்ந்த ரசிகர் பெரும்படையை சற்றே உலுக்கும், குழப்பும் விஷயங்கள். ஆனால் படத்தை நுட்பமாய் அவதானிக்கும் பார்வையாளன் நிச்சயம் இந்த வன்முறையின் காரணம் சார்ந்த முரண் ஒரு மனித ஆளுமையை உருவாக்கும், இயக்கும் உளவியல் சரடை படம் பூரா அடையாளம் காட்டுவதை உணர்வான்.

"நான் சிவனாயிட்டேன்" என்பதற்கு பிரபாகர் தரும் காரணம் உளவியல் கோணத்தில் முக்கியமானது. இந்த உலகத்தில் யார் உயிரோடிருக்க வேண்டும், யார் சாக வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அவனுக்கு உள்ளது. அதனால் அவன் கடவுள். அழிவுக் கடவுளான சிவன். இதன் ஆன்மீகத் தளத்திலிருந்து விலகி, அழிவு எப்படி ஒருவனை ஆண்டவனாக்கும்---உலகின் சகல அசைவையும் கட்டுப்படுத்துவதாய் சொல்லப்படும் அதிகாரத்தை அளிக்கும் என்ற கேள்வியைக் கேட்கலாம். அழிவுக்கும் அதிகாரத்திற்குமான தொடர்பே இங்கு கவனத்திற்குரியது. வன்முறை கொண்டு பொதுமக்களிடையே உருவாக்கப்படும் பீதி அதிகாரத்தை நிறுவ எப்போதும் பயன்படுத்தப்பட்டு வருவது. அழிவுக்கு மற்றொரு நோக்கமும் உண்டு. கொலை\அழிவை பயன்படுத்தி மனிதனின் இருப்பு சார்ந்த பல நெருக்கடிகளை, உளவியல் சிக்கல்களை தள்ளிப் போடலாம், தவிர்க்க முயலலாம். ஜெர்மனியில் அப்போதைய மக்களின் பொருளாதார, நம்பிக்கை சார்ந்த, தார்மீக சீர்குலைவை சமாளிக்க ஹிட்லர் யூதர்களை பொது எதிரிகளாய் மாற்றினான். இந்தியாவில் வெடிகுண்டு வெடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பலியாகும்போது ஏற்படும் அதிர்ச்சி அரசு இயந்திரம் மீதான, நீதி, பாதுகாப்பு அமைப்புகள் மீதான ஆதார நம்பிக்கையை குலைக்கிறது. நாம் வாழும் தேசம் எத்தனை பாதுகாப்பானது என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. இந்த நம்பிக்கை குலைவை சரி செய்ய அரசு இயந்திரம் பொது எதிரிகளைக் கட்டமைக்கும்---பாகிஸ்தான் ஊடுருவல் தீவிரவாதிகள், அவர்களுக்கு ஆதரவான உள்ளூர் முஸ்லீம்கள். அரசை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு இதுவரை அன்னியோன்யமாய் பழகிய நண்பர்களையும், அண்டை வீட்டாரையும் சந்தேகமாய் பார்க்க ஆரம்பிப்போம். நாமே உருவாகிக்கிய அரசின் கையாலாகாத்தனத்தை கேள்வி கேட்பது நம்மையே நாமே விசாரணைக்குட்படுத்துவதற்கு சமம். இது கடுமையான மனநெருக்கடியை ஏற்படுத்தும். ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் நிகழ்ந்தது போல் நாம் சுயவெறுப்பை இந்திய முஸ்லீம்கள் மேல் திருப்புகிறோம். இந்த திசை திரும்பும் வெறுப்பு ஒருவித மறைமுக வன்முறை. குடும்பம், சமூகம், பிரபஞ்சம் என அனைத்து வெளிகளிலும் நம் இருப்பை கேள்விக்குட்படுத்தும் உள்ளார்ந்த சிக்கல்களை நேரடியாய் சந்தித்து தீர்வு காணும் உரிமை நமக்குண்டு. ஆனால் இந்த சுதந்திரத்தை செயல்படுத்தும் தீவிர மனவலிமையும், உத்வேகமும் பெரும்பாலும் யாருக்கும் இருப்பதில்லை. கடுமையான மனநெருக்கடியும், பதற்றமும் ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்க மறைமுக\ நேரடி வன்முறையை செலுத்துவதும், அதன் மூலம் அதிகாரத்தை கட்டமைப்பதுமே இந்த சுதந்திரத்தைத் தவிர்க்க மனம் மேற்கொள்ளும் தந்திரங்கள். இவ்வாறு அழிவு, அதிகாரம் மற்றும் இருப்பு சார்ந்த கேள்விகள் ஒரே நேர்கோட்டில் இணைகின்றன.

மிக இளவயதிலிருந்தே பிரபாகரால் அம்மாவை, தாத்தா பாட்டியை விபத்தில் இழப்பதன் காரணமாய் உறவுகள் வழியாய் சமூகத்துடன் தொடர்புறுத்த முடியாமல் போகிறது. குடும்பம் எனும் உள்அமைப்பிற்கு வெளியே, அவனுக்கும் சமூகத்திற்குமான தொடர்புப் பாலங்கள் தமிழய்யா, ஆனந்தி என்று மிகச் சிலவே. அவர்களை இழந்த\ தொலைத்த பின், தனித்தீவாகிறான். தமிழ் படித்ததற்காய் பல முனைகளிலிருந்து அவமானத்திற்கு உள்ளாகையில், காவல் துறை எனும் அராஜக கும்பலிடம் மாட்டி வதைபடுகையில், வறுமையால் மேலும் நெருக்கப்படுகையில் சமூகத்தால் தூக்கி வீசப்பட்ட குப்பைப் பொருள் போலாகிறான் பிரபாகர். தன்னை விலக்கி வைத்த சமூகத்துடன் தொடர்புறுத்த பிரபாகர் பயன்படுத்தும் கருவியே வன்முறை. வன்முறையை அவனது குரல் எனலாம். அவனது பொருளாதார விழைவற்ற கொலைகள் அவன் சமூகத்துடன் நிகழ்த்தும் ஒருவித எதிர்மறை உரையாடலே. மேலும் கவனித்தோமானால் பிரபஞ்சத்தில் தன் இருப்பை நிறுவிக் கொள்ளும் வேட்கையும் இதன் பின்னுள்ளது. படைப்பு மூலமாய் உலகுடன் நாம் மேற்கொள்ளூம் உரையாடலின் மறுபுறமே அழிவு மூலம் தொடர்புறுத்துவது. பிரபாகரின் இந்த பயணம் பால்ய கால விபத்து எனும் அழிவில் தொடங்குகிறது. விடுதித் தோழனான கனகசபாபதியை உக்கிரமாய் தாக்குவது, பள்ளி நண்பர்களை, ஆசிரியரை என ஒருவர் விடாமல் சட்டையில் மை தெளிப்பது என வன்முறை மூலமாய் தன்னை நிறுவிக் கொள்ளும் போக்கை அவன் இளமையிலேயே கொண்டிருப்பதை படம் குறிப்பாய் சொல்கிறது. இழப்புகள், போலீஸ் வன்முறை, வறுமை, அவமானம், ஏமாற்றம் என வாழ்வு அவனை கொஞ்சம் கொஞ்சமாய் பலவிதங்களில் அழிக்கிறது. வாழ்வின் சீரழிவை தடுக்க முடியாத பதற்றம் காரணமாய், ஒரு கட்டத்தில் அவன் சமூகத்தை திரும்ப அழிப்பதன் வழி தன் சுயஅழிவை தடுக்க முயல்கிறான். வாழ்வெனும் பிரம்மாண்ட இயக்கத்தில், தன்னை மீண்டும் மீண்டும் நிராகரிக்கும் அதன் அபத்த சட்டகத்தில், தன் இடமென்ன என்பதை அவன் தீர்மானித்தாக வேண்டும். சமூக விளிம்பில் வாழ்ந்து கொண்டே, கொல்வதன் மூலம், பிறரது இறப்பை தீர்மானிப்பதன் வழி, அதனுள் தனக்கானதொரு இடத்தை, உரையாடலை உருவாக்குகிறான். இதன்வழி கடவுளின் அதிகாரம் தனக்குக் கிடைத்து விட்டதாய் நம்புகிறான். "சிவனாயிட்டேன்" என்று நமக்கு அறிவிக்கிறான். அகவுலக இயலாமையை, குறையை புற உலகை அழிப்பதன் மூலம் நிவர்த்தி செய்வதாய் பாவித்து ஆழ்மனம் மேற்கொள்ளூம் உபாயமாகவும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இதோ பார் ஆனந்தி ... நான் சிவனாயிருக்கிறதினாலே என்னாச்சு

நீயென் பக்கத்தில இல்லேண்ணாலும்

என் பாதியாயிட்டே! பார்வதியாயிட்டே!
தலைக்குப் போடும் ஜெல்லிலிருந்து, காலுக்குப் பொட்டும் வுட்லாண்ட் ஷூ வரை மேற்கை அட்டைக்காப்பி அடிக்கும் நாம் சாதி, மதம், திருமணம், பெண்கள் என்று வந்தவுடன் ஏன் கட்டுப்பெட்டியாகிவிடுகிறோம்? பி.பி.ஓக்கள் வருகையால் மத்திய தர வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது; கனவுகள் விரிந்துள்ளன --- ஆனால் சிந்தனை? வர்ணாஸ்ரம முறை, மதம் பற்றிய நம் மனப்போக்கை மேற்கத்திய சிந்தனை மரபு எந்த அளவிற்கு பாதித்துள்ளது? உலகமயமாக்கலுக்குப் பின் நம் மனவெளி மேலும் மேலும் சுருங்கியே உள்ளது. முந்தைய தலைமுறை மேற்கின் பாலியல் விடுதலைச் சிந்தனைகள் இளைஞர்களிடையே பாதிப்பேற்படுத்தக்கூடாது என்னும் உச்சகட்ட பதற்றத்தில் உள்ளது. உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ள நம் இளைஞர்களை மூன்று வகைகளாய் பிரிக்கலாம். (1) உயர் மத்திய வர்க்க இளைஞர்கள்----உள்ளுக்குள் குடுமிகட்டி, பட்டையிட்டு வெளியே கோட் சூட், ஷூ அணிந்த அம்பிகள்; (2) கிராமத்திலிருந்து பெர்முடாஸ் சகிதம் பி.பி. வாசல் தேடி மாநகரம் நோக்கி  வரும் கீழ்மத்திய வர்க்க இளைஞர் படை--- இவர்கள் சந்திக்கும் கலாச்சார அதிர்ச்சிகளும், அதற்கு அவர்கள் எதிர்வினையாற்றும் முறையும் இருள் மண்டிய, சாதியமும், ஆணாதிக்கவாதமும் களிம்பு படிந்த விளக்குகளாய் தொங்கும் சம்பிரதாய கர்ப்பகிரகத்தினுள் அவர்கள் மனம் வவ்வாலாய், மேற்கின் வசதிகளும், பகட்டும் நோக்கிப் பறந்து தடுமாறப் போவதை சுட்டுகின்றன. (3) உலகமயமாக்கல் வாழ்க்கைத் தரத்தை இம்மியும் உயர்த்தாது மூன்றாவது தட்டில் தேங்கிய ஏழைகள் (கனகசபாபதி, முருகன்). பொருளாதார விடுதலையும், புது உலக சிந்தனைகளின் வரவும் பழம் சிந்தனை மரபை மறுபரிசீலனை செய்யவும், மெருகூட்டவுமான வாய்ப்புகளை வழங்கும். இந்த வாய்ப்பையும், சுதந்திரத்தையும் எதிர்மறையாய் நெருங்குகையில் பதற்றம் உருவாகும். இந்த பதற்றம் காரணமாகவே மேலோட்டமாய் நவீனத்தின் உச்சத்திற்கு சென்றாலும், அட்டை சுருள்வது போல் உள்ளுக்குள் புராதான எண்ணங்கள் நோக்கி திரும்பிப் பாய்கிறோம். இதனாலேயே பீட்சா தின்றே உயிர்வாழத் தயாராயிருக்கும் தமிழன் சனிப்பெயர்ச்சியின் போது கோவில்களில் கால் கடுக்க க்யூ வரிசையில் நின்று கன்னத்தில் போட்டுக் கொள்வது. லண்டனில் பணி புரிந்து விட்டு இந்தியாவுக்கு வந்து இரண்டு லட்சம் சம்பளம் வாங்கினாலும் நெற்றியில் பெரிதாய் நாமம் இட்டுக் கொண்டு "என்ன இருந்தாலும் நம்ம கல்ச்சர விட்டுர முடியுமா?" எனும் அனந்தரங்கன் முதல் வகை. "காட்டுத்தனமாய்" தோன்றினாலும் "இங்கிலீசுல காட்டு காட்டுண்ணு" காட்டும் பிரபாகர் இரண்டாம் வகை. தமிழ் மொழி வளர்ச்சி சார்ந்த கவனத்தை அவனது பேச்சு மொழியில் நாம் காண இயலாது. தமிழ் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் வகுப்பிலும், பிற உரையாடல்களிலும் தமது ஆங்கில அறிவை காட்ட முயல்வதை கவனித்திருக்கிறேன். இது அவர்களுக்கு ஒருவித பெருமிதத்தை அளிக்கலாம். தமிழ் மொழி உதாசீனம் காரணமாய் நம்மிடையே உருவாக்கப்பட்ட தாழ்வுணர்வே இதற்குக் காரணம். ஆங்கிலத்தில் அரைகுறையான ஆனந்தரங்கனுக்கு ஆங்கிலம் கற்பித்ததும், பையோடேட்டா எழுதித் தந்ததும் தானே என படத்தில் ஓரிடத்தில் பிரபாகர் பெருமைப்பட்டுக் கொண்டு, ரங்கனை மட்டம் தட்ட முயல்கிறான். ஆங்கிலம்---மொழி அறிவு---அறிவின் குறியீட்டு. இதே தளத்தில் சிந்தித்தால் மராத்தியும், தமிழும் பேசத் தெரிந்த ஆனந்தி கூட புத்திசாலிதான். என் சகோதரியின் ஏழு வயது மகன் நான்கு மொழிகள் பேசுகிறான். அவன் பிரபாகரை விட புத்திசாலியா? மொழியின், அறிவுத்துறையின், தகவல் தொகுப்பின், மனித திறனின் மதிப்பு பொருளாதார ரீதியிலானது எனும் பொது புத்தியில் பதிந்துள்ள கருத்து மிக அபத்தமானது. இரண்டாயிரம் ஆண்டுப் பழக்கமுள்ள தமிழைக் கற்றுள்ள பிரபாகரின் அவலம் இதனாலேயே நிகழ்கிறது. இந்த அபத்தமான கருத்துத் தளத்திலே இயங்கி தன் புத்திசாலித்தனத்தை நிறுவ பிரபாகரும் முயல்கிறான்.  
இதே போன்ற கொலைவெறி கொண்ட புதுப்பேட்டையின் "கொக்கி குமார்" பாத்திரத்திலிருந்து பிரபாகர் வேறுபடும் பல விஷயங்களில் நுட்பமான ஒன்று கலாச்சார ரீதியிலானது. மொட்டை மாடி தண்ணி பார்ட்டியின் போது நண்பர்கள் முழு தந்தூரி சிக்கன் புசிக்க, ஒடுங்கி அமர்ந்து "சைவ" மிக்சர் கொறிக்கும், தன்னை சிவனாகவும், தன் காதலியை பார்வதியாகவும் கற்பித்துக் கொள்கின்ற பிரபாகரின் கலாச்சார பின்னணி கவனிப்புக்குரியது. குமார் பாலியல் மீறல்கள் கண்டு மனம் மறுகுவதில்லை. அரசியல் தலைவரின் மகளை போதையில் கற்பழித்த இளைஞர்களை அவன் புரிந்து கொள்ளும் விதம் மனிதர்களை ஆசைகளால் அலைகழிக்கப்படும், சூழலுக்கு ஏற்றவாறு எதிர்வினையாற்றும், விலங்குகளாய் பார்க்கும் பார்வையை அவன் கொண்டிருப்பதை சொல்கிறது. மாறாய், பிரபாகர் ஒழுக்கவாதி. "பொண்ணுங்களப் பத்தி தப்பா பேசாதீங்க" என்று காவல் உதவி ஆய்வாளரை கண்டிக்கிறான். மார்புக்குக் குறுக்காய் "தில்லிருந்தால் தொட்டுப்பார்" போன்ற கிளர்ச்சியூட்டும் வசனம் எழுதித் திரியும் பெண்கள் அவனை கொதிப்பூட்டுகிறார்கள். தான் ஆனந்திக்கு எழுதுவதாய் எண்ணி எழுதிய 'புனிதக்' காதல் கடிதத்தை ஒழுக்கம் மீறிய கலவிக்காக  பயன்படுத்திய மேன்சன் நண்பன் சூர்யநாராயணன், கடற்கரையில் சல்லாபிக்கும் காதலர்கள் போன்றோர் மீது கொலைவெறி கொள்கிறான். டீஷர்ட்டில் கவர்ச்சிகரமாய் வசனம் எழுதுவதென்ன, ஒருவேளை ஒரு பெண் திறந்த மார்புடன் தெருவில் சென்றாலோ, ஆணும் பெண்ணும் மணம் புரியாமலே விருப்பம் போல் புணர்ந்தாலோ என்ன தவறு? காமம் தங்கள் இறை தியானத்தை கலைக்கும் என்றெண்ணும் வெங்காயம் சாப்பிடாத வைதீக மனப்பான்மையே இந்த சிக்கல்களுக்கெல்லாம் காரணம். தன் ரத்தவழியை கலப்பின்றி காப்பாற்றுவதற்கான ஒரு உயிரியல் பின்னணியும் இதற்குண்டு. பெண்கள் பற்றிய பிரபாகரின் கருத்துரு அவனது ஆளுமை பற்றிய துல்லியமான சித்திரத்தை அளிக்கும். ஆண்கள் இதுவரை தங்களுக்கானது மட்டும் என்று பாவித்து வந்த சுதந்திரங்களை திடீரென்று 3 லட்சம் சமபளம் வாங்கும் பி.பி. பெண் எடுத்துக் கொண்டால் என்னவாகும்? இருவிதங்களில் ஆண்கள் இதற்கு எதிவினையாற்றலாம்: ஆனந்தரங்கன் போன்றோர் பச்சோந்தி வகை. மோஸ்தருக்காக மேலோட்டமாய் பெண் சுதந்திரத்தை அனுமதித்து விட்டு, வீட்டுக்குள் தன் மனைவி மடிசார் கட்டி, வடை தட்டி, காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். ஜெர்மானிய சிந்தனையாளர் எரிக் ப்ரோம் இந்த ரக மனிதர்களின் போக்கை "எந்திர மனித அடிமைப் போக்கு" என்கிறார். ரங்கன் தயிர்சாதமென்றால், பிரபாகர் காரக்குழம்பு. அவன் தன்னால் வரலாற்றின் திருப்பத்தில் நிகழும் கலாச்சார மாற்றத்தை பரிசீலித்து, பதில் கண்டடைய முடியாது போகையில், வன்முறையால் எதிர்வினையாற்றுவான். நவீன மாற்றம் தரும் சுதந்திரத்தை உள்வாங்க முடியாது பிரபாகர் மேற்கொள்வது ஒரு பின்னோக்கிய பயணமே. பிரபாகர் தன் மனதினூடே களங்கமின்மை பற்றிய ஒரு கருத்துருவை உருவாக்கி, ஆனந்தியை தன் பாரம்பரிய சிந்தனை வழியாய் தரிசிக்கிறான்; ஆன்மீக உச்சங்களுக்கு இதை எடுத்துச் செல்கிறான். பெண்ணை சக்தி வடிவாய் தரிசிக்கும் புராதான மரபை நோக்கி அவன் செல்வது நவீன சமூகம் சந்திக்கும் கலாச்சார திறப்பை அவன் சந்திக்கும் விதத்தை சொல்கிறது. அதனாலேயே ஆனந்தியை "பார்வதி", "A divine piece of God" (இறை வடிவம்) என்றெல்லாம் வர்ணிக்கிறான். ஆனந்தியை சந்திப்பதே தன் பாவங்களைத் துறக்க, களங்கமின்மையை மீட்டெடுக்க ஒரே வழி என்று நம்புகிறான்.

"எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நேர்கிறது" என்று பிரபாகரைப் போல் நாமெல்லோரும், வாழ்வில் ஏதாவதொரு கட்டத்தில், ஆதார நம்பிக்கைகளெயெல்லாம் நொறுங்கும்படியாய் அவலங்களும், இழப்புகளும் நேரும்போது யோசித்திருப்போம். வாழ்வெனும் பிரம்மாண்ட அர்த்தமின்மையின் முன் இக்கேள்வியை யோசிக்கும் நாம், பதிலை மரபான சிந்தனைகளில், சடங்குகளில் நாடலாம், அல்லது மரபின் புள்ளியிலிருந்து பதிலை\தீர்வை, ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் நாவலில் திமிங்கலத்தை கிழவன் இழுத்துச் செல்வது போல், சுயமாய் கண்டறிந்து வாழ்வின் இறுதி வரை பரிசீலித்துச் செல்லலாம்.

      


No comments: