Saturday, August 10, 2013

இன்றிரவு நிலவின் கீழ் – ஒரு விமர்சனம் (கரிகாலன்)
இந்த கவிதை மொழிபெயர்ப்பில் உலகப் புகழ் பெற்ற ஹைக்கூ கவிஞர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். அபிலாஷ்.  


ஹைக்கூ, ஈரடி வெண்பாக்களைப் போல, சில வார்த்தைகளிலேயெ , ஒரு காட்சியை, ஒரு தருணத்தை, ஒரு படிமத்தை, ஒரு தரிசனத்தை, சட்டென்று உங்கள் மனதில் நிறுத்தும் சக்தி கொண்ட ஜப்பானிய கவிதை வடிவம்உதாரணமாக

நிலவொளி -
அந்தரத்தில்
உறைந்து

Moonlight
frozen
in mid air
      ஸெயீஷி, ஜப்பான்.
என்ற வரிகள் நமக்கு அளிக்கும் அகக் காட்சி மிகவும் அழகானது


 நேரடியானது. எல்லோராலும் ரசிக்க முடியும்பல ஹைக்கூ கவிதைகள், மிக ஆழமானவைகவிதை எழுதப்பட்ட கலாசார சூழலின் குறியீடுகளைப் புரிந்து படிக்கும் போது வாசிப்பின் சுவை இன்னும் கூடும்.
 
உதாரணமாக, இரண்டு கவிதைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்குறைந்தது ஓரிரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறுந்தொகையில், தலைவன் வருகையை இரவு முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவி வருமாறு சொல்கிறாள்:

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே  
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே (1)
.

சுருக்கமாக, “ஊரே உறங்கிய பின்னரும், நொச்சி மரம் மலர்களை உதிர்க்கும் ஓசையைக் கேட்டபடி நான் உறங்காமல் இருக்கிறேன் ”, என்பது தான் இந்தப் பாடலின் அர்த்தம்

மலர்கள் உதிரும் ஒசைஎப்படிக் கேட்க முடியும்? தலைவன் வருகைக்காக அவ்வளவு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாளா தலைவி? ஒரு மலர் உதிர்ந்து, அடுத்த மலர் உதிரும் இடைவெளியில் தலைவியின் மனதில் எழும் எண்ணங்கள் தாம் என்ன? மலர்கள் உதிர்வது எதைக் குறிக்கிறது? பகலின் வெளிச்சத்தில், தலைவன் வருவான் என தலைவியின் நெஞ்சில் பூத்த நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாக இரவின் தனிமையில் தளர்வதையாஇந்தப் பாடல் வெறும் ஏமாற்றத்தை மட்டும் சொல்வது போல் தெரியவில்லை. அதே வரிகளின் இடையில் எத்தனை மலர்கள் இன்றிரவு வீழ்ந்தாலும் நாளையும் மலர்கள் பூக்கத்தானே செய்யும், என்ற நம்பிக்கையின் கீற்றும் உள்ளது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.  என்ன நுட்பமான வரிகள்?


இந்த அற்புதமான சங்கப் பாடலை, ஷெல்லி சாங்க் (Shelly Chang) என்ற சீனக் கவிஞர் இந்த எழுதிய ஹைக்கூவோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

என் காதலனுக்காக காத்திருக்க
சிள்வண்டின் பாடல்
ஒருபோதும் மாறுவதில்லை

Waiting for my lover
the song of the cicada
never changes
ஷெல்லி சாங்க், சீனா.

     முதல் வாசிப்பில் இந்த ஹைக்கூ மிக எளிதான ஒன்றாகப் பட்டது.   சிள்வண்டுகளின் இரைச்சலில் என்ன பாடலை தலைவி கேட்டு விட முடியும்? இந்த ஹைக்கூவின் சுவை, இந்தப் பாடல் எழுதப்பட்ட சீனக்
கலாசாரத்தின் குறியீடுகளை புரிந்து கொண்ட போது பல மடங்கு கூடியது.


சீனக் கலாச்சாரத்தில், சிள்வண்டு ஒரு குறியீடுசிள்வண்டு, தன்னை மண்ணில் புதைத்துக் கொண்டு, வேனில் காலத்தில் மட்டும் (சில வகைகள் 12 அல்லது ஆண்டுகளுக்கு ஒரு முறை) தான்  வெளி வரும், வெளிவந்த உடன் தன் உடலைப் உடலைப் போர்த்தியிருக்கும் கூட்டை கழற்றி எறிந்து விட்டு, ஆண் சிள்வண்டுகள், பெண் துணையைத் தேடிப் பாட ஆரம்பிக்கும்பழங்கால சீனப் போர்முறைகளில் (jīnchán tuōqiào)  சிள்வண்டு, என்பது எதிரியை ஏமாற்றும் ஒரு உத்திகளில் ஒன்று (முப்பத்தி ஆறு உத்திகளில் ஒன்று).  தன் சட்டையைக் (சிள்வண்டைப் போல) கழற்றி எறிந்து விட்டு எதிரியை அலைய வைக்கும் உத்திஆக, ஒரு குறியீடு ஏமாற்றுவதுஇரண்டாவது குறியீடு, நமக்கு இராமாயணம் போல், சீனர்கள் அனைவருக்கும் தெரிந்த கதை, “மேலைப் பயணம் (Journey to the West)”.  இந்தக் கதையின் நாயகன், ஒரு துறவிபுத்தரின் ஏடுகளை இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்காக, ஒரு திறமை வாய்ந்த குரங்குடனும் (நம் அனுமார் போல - பெயர் சன் வூ கூன்), ஒரு பன்றியுடனும் வரும் பயணத்தைப் பற்றிய கதைஇந்தக் கதையில், புத்த துறவி, தங்க்ச் சிள்வண்டு (Golden Cicada) என்று அழைக்கப்படுகிறார்சிள்வண்டுகள் தன் கூண்டைப் உதிர்த்து மண்ணில் இருந்து மீண்டும், மீண்டும் எழுவது போல, மனிதன் உயர் நிலையை அடைய, பல படி நிலைகளை கடக்க வேண்டும் என்பதைக் குறிப்பது. ஆக, சிள்வண்டுவளர்ச்சிக்கான சாத்தியத்தின் குறியீடும் கூட.

 இதை மனதில் வைத்துக் கொண்டு, மேலே உள்ள ஹைக்கூவை மீண்டும் படித்துப் பாருங்கள்.  சிள்வண்டின் பாடல் ஒரு போதும் மாறுவதே இல்லை என்ற சொற்றொடரில் காதலியின் ஏமாற்றம், கோபம், பெரும் துயரம் துலங்குகிறதுநாளையும் நொச்சி மரம் பூக்கும் என்ற நம்பிக்கை குறுந்தொகையின் தலைவிக்கு உள்ளதுஅதே போல், சிள்வண்டின், பாடல் மாறா விட்டாலும், நாளை அது பிறிதொன்றாக மாறும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை சீனத் தலைவிக்கு உள்ளதுஏமாற்றமும்/துயரமும் வெளிப்படையாகவும், நம்பிக்கையும்/நப்பாசையும் அடித்தளத்திலும் ஒருங்கே இணைந்து இருக்கும் பாடல்கள்


      குறுந்தொகைத் தலைவிக்கும், இந்தத் தலைவிக்கும் இடையே குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு கால இடைவெளி, பல்லாயிரக்கணக்கான மைல் தூர இடைவெளி, கணக்கற்ற கலாசார  இடைவெளிஆனால், இரு கவிதைகளும், ஒரே துயரத்தை எவ்வளவு உக்கிரத்துடன் சொல்கின்றன


     
சரி, இந்தக் குறியீடுகளை வலிந்து எடுத்து இந்தத் தொடர்பை ஏற்படுத்துவதாக சிலர் நினைப்பது நியாயமே.  ஆனால், அந்தக் குற்றச் சாட்டை சொல்லுமுன், சிள்வண்டு பல கலாச்சாரங்களில் ஒரு குறியீடாக அடிக்கடி சீனக் கலாசாரத்தில் சொல்லப்படுவதுஅதே போல்,   சிள்வண்டு மேலைக் கலாசாரத்தில் சோம்பேறித்தனம் அல்லது அசட்டைத் தனத்தின் குறியீடாகவும், ஜப்பானிய கலாசாரத்தில் காலத்தின், நிரந்தரமற்ற வாழ்வின் குறியீடாகவும் பயன்படுத்தப் படும் ஒன்று.

சரி, இப்படிச் சிக்கல்கள் இல்லாத ஒரு நேரடியான கவிதையைப் பார்ப்போம்.


கோமமைல் பூக்கள்
என் கோப்பையின் அடியில்
ஒரு முழுத் தோட்டம்.

Camomile Flowers –
a whole garden
in the bottom of my cup
Alan Spence (Seasons of my heart)

உலர்ந்த கோமமைல் பூச்சருகுகள் தேநீர் கோப்பைக்குள் புத்துயிர் பெற்று ஒரு புதிய தோட்டத்தையே உருவாக்குகின்றன. இந்தக் கவிதையின் அழகு நேரடியானது. வடிவமும், பொருளும், கவித்துவமும் இயல்பாக பொருந்தி வரும் கவிதை.


இப்படி இந்தத் தொகுப்பில் உங்களை ஒரே கணத்தில் வசியப்படுத்தும் பல கவிதைகள் உள்ளன. திரு. அபிலாஷ், ஆலன் ஸ்பென்சின், இதயத்தின் பருவங்கள் தொகுப்பில் உள்ள, அனைத்துக் கவிதைகளையும் மொழி பெயர்த்துள்ளார். நவீன அமெரிக்க பீட் தலைமுறையைச் சார்ந்த கவிஞர்களான, ஆலன் கின்ஸ்பெர்க், ஜாக் கெரவெக் முதல், ஜப்பானிய ஜென் புத்த துறவியான டானேடா சண்டோகா, வரை, பலதரப் பட்ட ஹைக்கூ கவிஞர்களை இந்தத். தொகுப்பில் அறிமுகப் படுத்தி உள்ளார்

இந்தப் புத்தகத்தில், திரு. அபிலாஷ், தன் தமிழ் மொழிபெயர்ப்புகளுடன், ஆங்கில மூலத்தையும் தந்துள்ளது சிறப்புஒரு சில வார்த்தைகள், சட்டென்று புலப்படாவிட்டால், ஆங்கில மூலங்களை ஒப்பு நோக்கி புரிந்து கொள்ள வசதியாக இருக்கிறதுஇது நல்ல அனுகுமுறைகுறை என்று சொல்லப் போனால், இங்குமங்கும் சில தட்டச்சுப் பிழைகள் உள்ளனஅடுத்த பதிப்பில் திருத்தி வெளியிட வேண்டும்.

          
கவிதைகளை மொழிபெயர்ப்பது கடினமான செயல்அதுவும் ஹைக்கூ போன்ற குறுகிய வடிவங்கள் கொண்ட கவிதைகளை மொழிபெயர்ப்பது இன்னும் கடினமானதுகத்தியின் கூரிய முனையில் நடக்கும் சர்க்கஸ் காரனின் திறமையுடன், கவனத்துடன் செய்ய வேண்டிய வேலைபல நூறு கவிதைகளை பெரும் முனைப்புடன், கவனமாக மொழிபெயர்த்துள்ளார். திரு. அபிலாஷ்பாராட்டுக்குரிய முயற்சிஇந்தப் புத்தகம், ஹைக்கூ, படிக்க விரும்புவர்களுக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


1.
இந்தப் பாடல் பற்றி சித்தார்த், அனிலாடு முன்றில் தளத்தில் மிக அழகாக எழுதி உள்ளார்.
 நன்றி: http://baski-reviews.blogspot.in/2013/08/blog-post.html

------------------------------------------------------------------------------------------------------------


இந்த புத்தகம் வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. இதற்காக எந்த promotion சந்தைப்படுத்தலும் செய்யவில்லை. ஆனாலும் தொடர்ந்து யாராவது வாசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான் இதை முன்னர் ஒரு பதிப்பாளரிடம் எடுத்து சென்ற போது கவிதையெல்லாம் விற்காது அவர் என்னை கிட்டதட்ட தன் அரங்கில் இருந்து துரத்தியே விட்டார். பின்னர் உயிர்மை வெளியிட்டது. நூறு கவிஞர்களை மொழியாக்க சொன்னதும் அவர்களின் குறிப்புகளை சேர்க்க தூண்டியதும் மனுஷ்யபுத்திரன் தான். தலைப்பும் அவர் தந்தது தான். கவிதைக்கு வாசகர் இடையே என்றும் ஒரு தனி இடம் உண்டு என அவர் உணர்ந்தது தான் இந்நூலின் இருப்புக்கு பிரதான காரணம். இதன் வழியாக நான் மொழிபெயர்ப்பு அடிப்படையில் ஒரு நடைமுறை சார்ந்த வேலை, முழுக்க உள்ளுணர்வை நம்பி இறங்கக் கூடாது என அறிந்தேன். முதல் பிரதியை படித்து பல தேவையற்ற சொற்களை அகற்றி நேரடியாக அர்த்தமுள்ள சொற்களை நுழைத்தேன். முடிந்தவரை எளிமையாக்கினேன். என்னுடைய வாசனை அற்றதாக்கினேன். இன்றும் ஏதாவது ஒரு கவிதையை மொழியாக்கும் போது இவ்வனுபவம் கை கொடுக்கிறது. இத்தொகுப்பில் உள்ளதற்கு இன்னொரு மடங்கு ஹைக்கூ மொழியாக்கங்கள், இன்னும் மேலான கவிதைகள் கூட, அடுத்த பாகத்திற்கு தயாராக உள்ளன. உயிரோசையில் பிரசுரமானவை தான். கணிசமாய் அமெரிக்க ஹைக்கூக்கள். இயற்கை படிமங்களை விட அன்றாட வாழ்வின் பதிவுகள் நிறைந்த ஹைகூக்கள். என் கவிதை நம்பிக்கைக்கும் இந்த இரண்டாம் தொகுப்பின் கவிதைகளுக்கும் தொடர்பிருக்கும். அந்நாளை எதிர்பார்த்து...
                                                                                                         -ஆர்.அபிலாஷ்
 

2 comments:

Karikalan said...

உங்களுடைய அடுத்த தொகுதி விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.

எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்களை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சி மிகவும் தேவையானது.

Abilash Chandran said...

நன்றி கரிகாலன்