Monday, July 22, 2013

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
கல்லூரியில் என் அலுவல் நிமித்தமாக ஒரு மேலதிகாரியை பார்க்க போயிருந்தேன். ஒரு பெண் அம்மாவுடன் வந்து முதல் வருட கட்டணம் செலுத்த வசதி இல்லை என்று காலநீட்டிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். வேறு எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்கவில்லை என்று வேறு வருந்தினார். மேலதிகாரி காலநீட்டிப்பு செய்ய முடியாதென்றும் ஒரு வருடம் ஏதாவது சான்றிதழ் படிப்பு படித்து விட்டு அடுத்த வருடம் அரசு கட்டணத்தில் படிக்கலாம் என்றும் பரிந்துரைத்தார். அடுத்து அவருக்கே மனம் தாங்காமல் இன்னொரு கல்லூரியில் தனக்கு பரிச்சயமுள்ள ஒரு பேராசிரியரை அழைத்து அங்கு ஆங்கில இலக்கியத்துறையில் ஒரு இடத்தை அப்பெண்ணுக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்பெண்ணுக்கு மருத்துவம் படிக்க ஆசை என்று கொஞ்சம் ஏமாற்றமாக போனார். அவர் போய் கொஞ்ச நேரமானதும் இவர் பின்னாலே ஓடிப் போய் இத்துறையில் படித்து பின்னால் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் கூட செய்யலாம் என்றெல்லாம் விளக்க ஆரம்பித்து விட்டார்


இந்த உயரதிகாரி பொதுவாகவே யாரிடமும் கடிந்து பேசி பார்த்ததில்லை. தானே கேட்டு போய் உதவிகள் பண்ணுவார். இப்படியான பிறவி நல்லவர்கள் எங்காவது ஒன்றிரண்டு பேர் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
அன்பும் பண்புமாக பேசுகிறவர்கள் அரிதாகி விட்டதால் எல்லோரிடமும் அடாவடியாக பேசுவது ஒரு பண்பாடாகவே மாறி விட்டது. முரண்படுவது, முட்டுக்கட்டை போடுவது, காயப்படுத்துவது இயல்பாகி விட்டது. அப்போது இது போல் மாய்ந்து மாய்ந்து நல்லது பண்ணுகிறவர்களை பார்க்கும் போது நமக்கு ஒரு சின்ன வெளிச்சம், வாழ்க்கையின் நம்மை மீது நம்பிக்கை கிடைக்கிறது.
இவர் ஏன் இப்படி ஆகிப் போனார் என யோசித்துக் கொண்டிருந்தேன். கெட்டவர்களை, கொடூரமானவர்களை பார்த்தால் எனக்கு ஒன்றும் கேள்விகள் தோன்றுவதில்லை. இயல்பாக இருக்கலாம். அல்லது வெறுப்பு, குரோதம் ஆகியவற்றில் இருந்து அவரை பாதுகாக்கிற ஒரு சூழல் இருக்கலாம் என நினைப்பேன்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். ஹாமீம் முஸ்தபா. பதினைந்து வயதில் இருந்து இருபத்திரண்டு வயது வரை ஊரில் அவரது புத்தகக் கடை தான் என் சரணாலயமாக இருந்தது. அங்கு தான் அத்தனை இலக்கிய நட்புகளும் பரிச்சயங்களும் முதன்முறை வாய்த்தன. ஆனால் அங்கு நான் முதலில் ஒரு டியூசன் வகுப்புக்கு தான் போனேன். டியூசன் தனியாக பின்னால் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருந்தது. அவரது மனைவி கணிதம் எடுத்தார். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். ஓரிடத்தில் போனால் சொன்னதை விட்டு இன்னொன்றை படிப்பேன். முன்பும் ஒரு வாத்தியாரிடம் கணக்கு கற்றுக் கொள்ள போனேன். ஆனால் அவரது மனைவி அருமையாக எனக்கு சில நாட்கள் சங்கீதம் கற்றுத் தந்தார். அதனால் கணக்கு வகுப்புகளை புறக்கணித்து சங்கீத வகுப்புகளை மட்டும் போக ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் சண்டையாகி ரெண்டுமே படிக்க முடியாமல் ஆனது. இங்கும் அப்படித் தான். கணக்கு வகுப்பை புறக்கணித்து புத்தகக் கடையின் இன்னொரு பகுதியில் நடக்கும் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ள துவங்கினேன். இது கணித ஆசிரியைக்கு அவமானமாக பட்டது. அவர் தன் கணவன் முஸ்தபாவிடம் புகார் செய்தார். அவர் என்னிடம் வந்து “நீ வகுப்புக்கு போகாமல் இருக்கலாம். உன் சுதந்திரம். ஆனால் முறையாக அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்” என்றார் மென்மையாக. அவ்வளவு தான். நான் அவர் மனைவியிடம் அனுமதி கேட்கவோ மன்னிப்பு கோரவோ எல்லாம் இல்லை. ஆனால் முஸ்தபா எனக்கு இனிய நண்பராகி விட்டார். அவர் புத்தகக்கடையை ஒரு நூலகமாகத் தான் பயன்படுத்துவோம். காலையில் அங்கு போனால் மாலை வரை உட்கார்ந்து படிப்போம். மாலையானால் சந்திப்புகள் கூட்டங்கள். முஸ்தபாவுக்கும் அதை ஒரு வணிகமாக நடத்தும் நோக்கமில்லை. விளைவாக கடை லாபமின்றி நலிவுற்றது. அதற்காக அவர் வருந்தவோ கசப்பாகவோ எல்லாம் இல்லை. இன்னும் பல வியாபாரங்கள் வேலைகள் செய்தார். அவர் நன்றாக பேசுவார். ஆனால் அதை பயன்படுத்தி சம்பாதிக்க மாட்டார். ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை இருந்தது. வேலை நிறுத்தம் செய்து அதை இழந்தார். அவருக்கு இருந்த திறமைகள் எதனையும் அவர் சம்பாதிக்கவோ வாழ்வில் நிலைப்படவோ பயன்படுத்தவில்லை. இப்போது ஒரு தனியார் கல்லூரியில் வேலை செய்கிறார். இன்னும் கொஞ்சம் சுயமுனைப்பு சாமர்த்தியம் காட்டி இருந்தால் அரசுவேலை கிடைத்து ரொம்ப வருடங்கள் முன்பு செட்டிலாகி இருப்பார். அவர் நிறைய ஆய்வுக்க்கட்டுரைகளை கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் முன்வைத்திருக்கிறார். அவற்றை ஒரு கல்லூரி ஆய்வுக் கூட்டத்தில் வைத்திருந்தால் அவருக்கு இன்னும் அதிக புகழும் பணமும் ஊர்சுற்றும் வாய்ப்புகளும் கிடைத்திருக்கும். அது போல் ஒரு பிரபல இடதுசாரி இதழில் ஆசிரியராக பணி செய்தார். ஆனால் பத்திரிகையில் அவர் பெயருக்கு பதில் ஒரு அரசியல் தலைவரின் பெயர் தான் இருக்கும். முஸ்தபாவுக்கு எந்த புகாரும் இல்லை. நான் இதையெல்லாம் சமீபமாக அவரிடம் சொன்ன போது “பணம் புகழ் சம்பாதிச்சு என்ன பண்ணப் போறோம்” என்றார் நிதானமாக.
இப்படியான மனிதர்களைப் பார்த்தால் கொஞ்சம் கோபமாகவும் கொஞ்சம் வியப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக சென்னை வந்த பிறகு. ஊரில் இது போல் எனக்கு நிறைய சாமியார் நண்பர்கள் இருக்கிறார்கள். திறமை என்பது சுயமுன்னேற்றத்துக்கு அல்ல; வேலை செய்வது சம்பாதிக்க அல்ல, விருப்பத்துக்கு என நம்புகிற சாமியார்கள். உதாரணமாக, என்.டி ராஜ்குமார். “மதுபானக்கடையில்” முக்கிய பாத்திரமேற்று நடித்து பாட்டெழுதி பாடி நிறைய கவனம் கிடைத்தது. அதையொட்டி நடிக்க வாய்ப்புகளும் வந்தன. மறுத்து விட்டார். பாட்டெழுத விருப்பம். ஆனால் அதற்காக சென்னைக்கு வர மாட்டார். ஊரை விட்டு குடும்பத்தை விட்டு வந்து அப்படி சம்பாதித்து என்ன ஆகப் போகிறது என்று ஒரு எண்ணம். நட.சிவகுமார் கொஞ்ச நாட்களுக்கு முன் சில கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பி, அவற்றில் தோதானவற்றை நானே தேர்ந்தெடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்க சொன்னார். சொன்னவர் தான். அதோடு பிறகு என்னை நினைவுபடுத்த கூட முனையவில்லை. இதுவே என் தலைமுறை நகர்வாழ் கவிஞர்கள் என்றால் பத்து கவிதைகளை இருபது பத்திரிகைகளுக்கு அனுப்பி தினமும் அந்த பத்திரிகை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு நச்சரித்து பிரசுரத்தை ஒரு புராஜக்ட் போல செய்வார்கள். என் ஊர் நண்பர்களுக்கு கவிதை எழுதுவது, ஆய்வு செய்வது எல்லாம் செய்கிற அளவில் முடிந்து போகிற விசயங்கள். சென்னையில் ஒரு சின்ன நூல் வெளியீட்டு கூட்டம் என்றால் எவ்வளவு சுய தம்பட்டம் இருக்கும் என உங்களுக்கு தெரியும். முகாமில் யானைகள் பிளிறுவது போலத் தான். ஒரு சின்ன மொட்டூசி இடம் கிடைத்தால் கூட அங்கொரு அறை போட்டு தங்க திட்டம் போடுகிறோம். ஆனால் இன்றும் ஊரில் நடக்கிற இலக்கிய கூட்டங்களில் அந்த ”தூய்மை”, தீவிரத்தன்மை, வியாபாரமின்மை எல்லாம் உயிரோடு இருக்கின்றன.
ஊரில் இருக்கும் போது இதெல்லாம் வித்தியாசமாக தெரியவில்லை. இப்போது இதெல்லாம் சாமர்த்தியமின்மை மற்றும் திறமை வீணடிப்போ என படுகிறது.
முஸ்தபா ”புதிய காற்று” என ஒரு பத்திரிகை நடத்தினார். என் கல்லூரிக் காலம். ஒரு நாள் வீட்டுக்கு என்னை பார்க்க வந்தார். நான் அவரை கூப்பிடவில்லை. அவராகவே வந்தார். அவர் பத்திரிகைக்கு படைப்புகள் கொடுக்க கேட்டார். எனக்கு வியப்பு. நான் வாழ்க்கையில் அப்படி ஒரு படைப்பும் எழுதி பிரசுரித்ததில்லை. ஆனாலும் ஒரு நம்பிக்கையில் கேட்டார். அதன் பிறகு ஒரு எட்டு வருடங்களேனும் அவர் வேலை பார்த்த பல்வேறு பத்திரிகைகளில் எழுதி இருக்கிறேன்.
முதன்முறை ஒரு இடதுசாரி அரசியல் கருத்தரங்குக்காக சென்னை வந்திருந்தேன். ஒரு பாடாவதி லாட்ஜில் தங்கி இருந்தோம். கூட்டமோ படுமொக்கை. முஸ்தபா என்னை வெளியே அழைத்துக் கொண்டு போனார். முதன்முறை மின்சார ரெயிலில் தொங்கி பயணித்து தண்டவாளங்கள் ஏறிக் குதித்து ஒரு வீட்டுக்கு போனேன். அது முஸ்தபாவின் தோழியின் வீடு. அவருக்கு கல்யாணமாகி கணவன் குழந்தையோடு இருந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்ணைச் சுற்றித் தெரிந்த கருவளையங்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. வழக்கமான ஞாயிற்றுக் கிழமை களைப்புடன் எங்களுக்கு உபசாரம் செய்தார். ரொம்பவொன்றும் பேசிக் கொள்ளவில்லை. பத்து நிமிடம் இருந்து விட்டு வந்து விட்டோம். முக்கியமாக திட்டமிட்டு ஒன்றையும் பேச பெற அவர் அங்கே போகவில்லை. எந்த ஊருக்கு போனாலும் அங்கு சின்ன பரிச்சமுள்ள ஆட்களைக் கூட தேடிப் பார்த்து பேசி விட்டு தான் வருவார். என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் எனக் கேட்டேன். “தனியே அமர்ந்து உனக்கு போரடிக்கும் என நினைத்தேன்” என்றார். எனக்கு போரடிக்கும் என வாழ்க்கையில் ஒருவர் அக்கறைப்பட்டு முதன்முறை பார்த்தேன். அதுவரை நான் மணிக்கணக்காய் தினமும் போரடித்து முகம் பார்க்க ஆளில்லாமல் தனிமையில் பல ஆண்டுகள் கழித்திருக்கிறேன். யாரும், என் பெற்றோர், உறவினர் என யாரும், அதை ஒரு பிரச்சனையாய் கருதியதில்லை. ஆனால் முஸ்தபா நினைப்பார். எளிய வெறும் பரிச்சயம் மட்டுமே உள்ள ஒருவரை கூட அப்படி முக்கியமாக நினைப்பார். எனக்கு மிகச்சின்ன வயதில் இருந்தே அவரைப் போன்ற ஆட்களின் அருகாமை கிடைத்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் நேர்மறையாய் யோசிக்கக் கூடிய ஆளாக இருந்திருப்பேனோ எனத் தோன்றும்.
பின்னர் சென்னை வந்து மேன்ஷனில் தங்கி இருந்த போதும் தேடிப் பிடித்து வந்து பார்த்து விட்டு போனார். ஒன்றையும் எதிர்பார்க்க மாட்டார். அது உறவுகளுக்கு அவர் அளிக்கும் மரியாதையின் வெளிப்பாடு என்பதைத் தவிர. ஒருநாள் அவர் சிங்கப்பூர் போன ஒரு கதையை சொன்னார். அங்கு முன்னர் அவரது அப்பா வசித்திருக்கிறார். அப்பாவை முஸ்தபா சின்ன குழந்தையாய் இருக்கையில் பார்த்த நினைவு. அவரோடு அதிகம் பழகினது இல்லை. சதா பயணங்களில் இருக்கும் ஊர்சுற்றி அப்பா. சிங்கப்பூரில் அப்பா இருந்த இடங்களைத் தேடிப் போயிருக்கிறார். அங்கு அப்பாவின் நண்பர்களிடம் பேசியிருக்கிறார். அதில் இருந்து தன் அப்பா இயல்பில் மிக நட்பானவர் என்றும், தேடி தேடி புது உறவுகளை அமைக்கும் பண்பு கொண்டவர் என்றும் அறிந்து கொண்டார். பிறகு என்னிடம் சொன்னார் “நான் ஏன் இவ்வளவு நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பவனாக, ஆட்களோடு பழக விருப்பம் கொண்டவனாக இருக்கிறேன் என அந்த பயணம் புரிய வைத்தது. நான் என் அப்பாவைப் போலவே இருக்கிறேன். இத்தனைக்கும் நான் என் அப்பாவோடு அதிகம் பழகவில்லை. அவரைக் குறிந்த எந்த நினைவும் இல்லை. ஆனாலும் என் குணம் அப்பாவினுடையது போலவே இருக்கிறது”
சில மனிதர்கள் இயல்பில் நல்லவர்களாக இருப்பதற்கு காரணம் சூழலா மரபியலா தெரியவில்லை. ஒருவர் கெட்டவராக இருப்பதற்கான காரணங்கள் சொல்வதைப் போல இது அத்தனை எளிதல்ல.
“கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?”
நல்லவராக இருந்து விட எல்லாருக்கும் ஒரு பக்கம் ஆசையாக இருந்தாலும் சூழலோ வேறு எதுவோ ஒன்றோ அனுமதிப்பதில்லை. அதனால் தான் தீமையை ஒரு எதார்த்தமாக ஏற்றுக் கொண்டு விட்ட என்னைப் போன்றோருக்கு ஏதோ ஒரு நல்லவனை அண்மையில் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு வெற்றுகிரக ஆளை தரிசிக்கும் சுவாரஸ்யத்தை அளிக்கிறது.

7 comments:

Sai Ram said...

அன்பு அபிலாஷ், இதைப் படித்த பிறகு நிறைய நேரம் யோசித்து கொண்டிருந்தேன். நாம் வாழும் சமூகம் இப்போது முன்பை விட கெட்டதாகவும் சுயநலம் மிகுந்ததாகவும் இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றியதில்லை. இந்தக் காலம், வேறுபாடு எல்லாமே ஒவ்வொருவர் நிற்கும் இடத்தைப் பொறுத்தும் அவரவர் கடந்த வந்து பாதையைப் பொறுத்தும் மாறுபடும் என நினைக்கிறேன். 'நல்லது' மற்றும் 'கெட்டது' என்பதற்கான 'அலசு' பொருளும் மாறுபடும் என்றே தோன்றுகிறது.

அதே போல அன்பு மற்றும் கரிசனம் மற்றும் அக்கறை கொண்ட மனிதர்கள் பற்றிய வியப்பு எப்போதும் எனக்கு உண்டு; கோபமும் கூட உண்டு. உதாரணத்திற்கு எனது சொந்தத்தில் உள்ள வயதான பெண்கள். தனக்காக வாழ்தல் என்பதே பெரும் பிழை, தனக்கு பிடித்தமான உணவினை அதிகமாய் சாப்பிடுவது என்பது கூட அவர்களுக்கு பாவமாய் தோன்றியது. அவர்கள் எழுபது, எண்பது வருடங்கள் வாழ்ந்து மாண்டு போனார்கள். கோபத்தைக் கூட வெளிப்படுத்த உரிமையில்லாத அவர்கள் தங்களது கோபத்தை உள்ளுக்குள் எங்குப் புதைத்து வைத்தார்கள், அது எப்போதாவது வெடித்ததா என்று நினைவினைக் கிளறி பார்த்தால் அப்படி எதுவுமே இல்லை.

திறமைகளைப் புதைத்து வைக்கும் நபர்களைப் பற்றி யோசித்தால் அப்படி தங்கள் திறமைகளை வைத்து பணமோ புகழோ சம்பாதிக்க தயங்குவதற்கு அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்குமா? அப்படி இருந்தால் நலம். இல்லையெனில் அது காலம் முழுக்க அவர்களைத் துரத்தியபடி தான் இருக்கும். ஒரு குடத்தைத் தூக்கிட்டு வர துப்பில்ல என வசை வாங்கி கொண்டிருக்கும் 'எழுத்தாளர்' சிறிது காலத்தில் தான் துப்பு கெட்டவன் என நினைத்து மாறி போகிறார்.

தங்களுடைய திறமை (அல்லது ஆர்வம்) என்ன என்பதை அறிவதற்கான கல்வி சூழலோ பால்ய பருவமோ நமக்கு வாய்ப்பதில்லை. பெரும்பாலான இளைஞர்களுக்குத் தங்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருப்பதில்லை. யாரோ உருட்டி விடும் பகடை காய்களாய் உருண்டு உருண்டு மூப்பினை நெருங்கும் போது அவர்களிடம் உரையாடல் என்பதே இருப்பதில்லை. கடவுள் பக்தியோ சாராயமோ புரணி பேசுதலோ அவர்களுக்கான நேரத்தைத் தின்று கொண்டிருக்கிறது. டீவியில் மக்கள் ஒன்றி போனதற்கான காரணமாக கூட இதை நினைப்பதுண்டு.

பள்ளிக்கூடத்தில் தனது மகன் நன்றாய் படிக்க வேண்டுமென்பதை மட்டும் குறிக்கோளாய் கொண்டு இயங்கும் படித்த ஆனால் வீட்டிலே முடங்கி கிடக்கும் பெண், எப்போதும் உம்மென்று இருக்கும் பெரியவர், சிடுசிடுவென இருக்கும் பெண் கிளார்க், அற்பதனமான ஜோக்குகளைத் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கும் முப்பது வயதுக்காரர், எங்கே நிலம் கிடைக்கும் என்பதை மட்டும் பேசும் நில தரகர் இப்படியாக இளமை பருவத்தைத் தாண்டியவர்களின் மேல் ஒரு மேகம் எப்போதும் சூழ்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இது தான் 'திறமை'(ஆர்வத்தை) மதிக்காத சமூகத்தின் மூப்பு காலம். இது நம் காலத்திற்கு மட்டுமான சாபகேடா? நம் சமூகத்திற்கு உரிதான பிரச்சனையா? நான் பார்க்கும் சமூகத்தில் மட்டும் இருக்க கூடிய என் கண்களுக்குப் பிரத்யேகமாக தென்படும் பிரச்சனையா?

மற்றொன்று பணம் மற்றும் புகழ் குறித்தான குற்றவுணர்ச்சி. குற்றவுணர்ச்சி என்பது பசி, காமம் போல மனிதனிடத்தில் தொடக்கத்திலே இருந்து இருக்கிற உணர்வு என்று நினைக்கிறேன். அதனாலே இங்கு மதங்கள் குற்றவுணர்ச்சியை தூண்டுபவையாக இருந்திருக்கின்றன. இன்று அந்த குற்றவுணர்ச்சியை உடைக்கிற 'சுயநலம் நல்லது' என்கிற மனநிலை வந்திருப்பது சக்கரத்தின் சுழற்சியாக இருக்கலாம். ஆனால் சக்கரம் சுழன்றபடி இருப்பதினால் இரு எதிர் எதிர் உணர்வுகளும் இருந்தபடியே இருக்குமென நினைக்கிறேன்.

Abilash Chandran said...

மிக அழகாக சொன்னீர்கள் சாய்ராம். இது தனியே ஒரு கட்டுரை படிப்பது போல் நன்றாக இருந்தது

sammuvam said...

அன்புள்ள அபிலாஷ்,
சமீப காலமாக நீங்கள் எழுதும் உளவியல் ரீதியான பதிவுகள் ஆழமானதாகவும், அந்தரங்கமானதாகவும் அமைவதாய் உள்ளது. உங்களுடைய இந்தப் பதிவும் சரி, அதற்கு சாய் ராமின் பின்னூட்டமும் சரி - அற்புதம். மேன்மேலும் தொடர்ந்து நீங்கள் இது போல எழுத என் வாழ்த்துக்கள், வந்தனங்கள்.

இப்படிக்கு,
சண்முகம்.

Karikalan said...

மிக சுவாரஸ்யமான பதிவு. திரு. சாய்ராமின் பின்னூட்டமும் சிந்தனையைத் தூண்டுவது.

திறமை இருந்தும், அதைப் பயன் படுத்திக் கொண்டு, பிழைக்கத் தெரியாமல் இருப்பவர்ளை சில வகைகளாக பகுக்கலாம். முதலாவது, உண்மையிலேயே வெள்ளந்தியானவர்கள். இவர்களை வெகு சீக்கிரத்திலேயே உலகம் உறிஞ்சி எடுத்து துப்பி விடும். டோடோ பறவையைப் போல காலாவதி ஆகி விடுவார்கள். இரண்டாவது ரகம், திறமை இருந்தும், தன்னம்பிக்கை இல்லாததாலோ, அவர்களை உலுக்கி எடுக்கும் குற்ற உணர்வின் காரணத்தினாலோ, அல்லது வாழ்க்கையின் வெற்றியோடு வரும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள விழையாததாலோ, தங்கள் முழு ஆற்றலையும் லௌகீக வெற்றிக்கு பயன் படுத்தாதவர்கள் (திரு. சாய்ராம் சொன்னது போல). இன்னொரு ரகம், திறமை இருப்பது நன்றாகத் தெரிந்தும், உலகத்தின் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள மறுத்து, தன் வழியே அமைதியாகச் செல்பவர்கள். இந்தக் கட்டுரையில், இந்த மூன்றாவது ரக மக்களைப் பற்றித் தான் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த மக்கள் வாழ்க்கையில் முன்னேறும் ஆசை இல்லாதவர்கள் (unambitious) என்று ஒதுக்கி விட முடிவதில்லை. இவர்கள், உலகத்தோடு ஒட்டி வாழ பிரயத்தனப் படும் பெரும்பாலனவரைக் காட்டிலும், அதீத தன்னம்பிக்கையும், தெளிவும், கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே இத்தகைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் சொன்னது போல, இவர்கள் வேறு கிரகத்துக்காரர்கள் தாம்.

"... இது போல் எனக்கு நிறைய சாமியார் நண்பர்கள் இருக்கிறார்கள்", என்று எழுதியுள்ளீர்கள். கொடுத்து வைத்தவர் தாம்!

Abilash Chandran said...

//திறமை இருப்பது நன்றாகத் தெரிந்தும், உலகத்தின் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள மறுத்து, தன் வழியே அமைதியாகச் செல்பவர்கள்.// சரியாக சொன்னீங்க கரிகாலன். உங்கள் பகுப்பு நன்றாக உள்ளது

Abilash Chandran said...

நன்றி சம்முவம்

சேக்காளி said...

"நம்ம கையில என்ன இருக்கு" என்ற சித்தாந்தத்தை உடைப்பவர்கள்