Thursday, June 20, 2013

கல்லூரிக்கால அபத்தங்கள்


கல்லூரியில் படித்த காலம் வாழ்வின் சிறந்த பருவம். ஒவ்வொரு நாளையும் அதன் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ்ந்தேன். ஒரு வகுப்பு கூட எனக்கு சலிப்பாக இருந்ததில்லை. ஆனால் பரீட்சையை பொறுத்தமட்டில் படுமுட்டாளாக இருந்தேன்.

கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக புது சிந்தனைகளை எழுத வேண்டும் என நினைப்பேன். மற்ற மாணவர்களைப் போல மனப்பாடம் செய்தவற்றை தொகுத்தெழுத பிடிக்காது. ஒருமுறை ஒரு நீண்ட கட்டுரை ஒரே பக்கம் மட்டும் எழுதினேன். அதற்கு மேல் தேவையில்லை என்றொரு நினைப்பு. துறைத்தலைவர் எனக்கு மிக அதிகமாக மதிப்பெண் தந்து பாராட்டிப் போக சகமாணவர்கள் கொந்தளித்து விட்டார்கள். அவர்கள் எல்லாம் பக்கம் பக்கமாக மேற்கோள்களோடு எழுதி இருந்தார்கள்.
ஆனால் இன்னொரு பரீட்சையில் தலைகீழாக நடந்தது. திருத்தின ஆசிரியர் வேறு ஆள். அவர் வகுப்பில் நான் அடிக்கடி மறுத்து பேசு கடுப்பேற்றுவேன். பரீட்சையில் ஒரு கேள்விக்கு ஒரே ஒரு பத்தி தான் எழுதினேன். அதற்கு மேல் எனக்கு மூட் இல்லை என்று கொடுத்து விட்டேன். அவர் நான் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்தி அப்படி எழுதியதாக நினைத்துக் கொண்டார். ஆசிரியர் என்னை வீட்டுக்கு அழைத்து கடுமையாக கண்டித்தார். நான் எனக்கு மூட் போச்சு சார் என்று அபத்தமாக நியாயப்படுத்தேன். அவர் “நீ என்ன பெரிய கவிஞனா? அப்படி என்றால் ஏதாவது ஒரு காகிதத்தில் கிறுக்கி புதரில் எறிந்து விட்டுப் போ. ஆனால் என் பரீட்சையில் அதையெல்லாம் அனுமதிக்க மாட்டேன்” என்றார். அவர் அந்த வெறுப்பில் இறுதிப் பரீட்சை மற்றும் இண்டெர்னல் மதிப்பெண்களில் கைவைத்து விட்டார். பிறகு பிற பரீட்சைகளில் கடுமையாக போராடி அதிக மதிப்பெண் பெற்று மொத்த சராசரியில் முதலிடத்தை பெற நாய்ப்பாடு பட்டேன்.

அந்த காலத்தில் ஜெயமோகனின் இணையதளம் எல்லாம் வரவில்லை. அவர் திண்ணை தளத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தார். ஒருமுறை மகாராஜபுரம் சந்தானத்தைப் பற்றி ஒரு குறிப்பெழுதியிருந்ததை படித்து அவரை கேட்டேன். மனிதர் ஆரம்பத்திலேயே என்னை சுண்டி இழுத்து விட்டார். அறையில் சதா சந்தானம் தான் உருகிக் கொண்டிருப்பார். அதிலும் ”சின்னஞ்சிறு கிளியே” எனக்கு உயிர். அவரது பாரதியார் பாடல்கள் கேஸட்டை திரும்பத் திரும்ப போட்டு பக்கத்து அறை நண்பர்களை இரவில் தூங்க விடாமல் டார்ச்சர் கொடுப்பேன். எங்களுக்கு இந்திய இலக்கியம் பாடத்தில் பாரதியாரும் இருந்தார். அந்த பாட பரீட்சைக்கு வெகு சீக்கிரம் காலையில் எழுந்து சுமார் ரெண்டு மணிநேரம் சந்தானம் பாரதி வரிகளை பாடுவதை திரும்பத் திரும்ப கேட்டு ஒரு ”சன்னத” நிலைக்கு போய் அப்படியே பரீட்சை ஹாலில் நுழைந்தால் அன்று பாரதியார் கவிதை பற்றி ஒரு கேள்வி. நான் அன்று எழுதியதை பின்னர் அதைத் திருத்திய பேராசிரியர் குறிப்பிட்டு பாராட்டினார். எம்.ஏயில் நான் மிக அதிகமாக மதிப்பெண் வாங்கியதும் அந்த பரீட்சையில் தான். பேராசிரியர் பாராட்டுகையில் மகாராஜபுரம் சந்தானத்தை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.
பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் போதும் ஹெட்போன் மாட்டி பாட்டுக் கேட்டுத் தான் பளு தெரியாமல் உழைப்பேன். ஆசிரியர் ஆன பிறகு மட்டும் எப்படி பாட்டுக் கேட்டபடி பாடம் நடத்துவது என தெரியவில்லை. ஆனால் இப்போதும் எதாவது எழுதும் மனநிலை கூட வேண்டுமென்றால் கேட்பதற்கு சில பாடல்கள் வைத்துள்ளேன். அதைக் கேட்டால் என் மனைவி தெறித்து ஓடி விடுவாள்.
திரும்ப இன்று மகாராஜபுரத்தை கேட்கும் போது கல்லூரிப் பருவத்தில் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் என புரிகிறது. அவ்வளவு ஈடுபாடும் தவமும் வீண். அந்த ஆத்மார்த்த ஈடுபாட்டில் விளைந்த மதிப்பெண்களும் வீண். சும்மா கிடைக்கிற நேரத்தில் உருப்போட்டதை வைத்து ஏதாவது கிறுக்கி இருந்தாலும் இன்று என் வாழ்க்கை ஒன்றும் அதிகம் மாறி இருக்காது. 

கல்லூரியில் வேலையின் போது எத்தனையோ விடைத்தாள்களை திருத்தியிருக்கிறேன். எல்லாமே ஒப்பித்தல் வகை தான். ஆனால் என்னைப் போல் ஒரே ஒரு பைத்தியத்தை மூன்றாவது வருடத்தில் பார்த்தேன். ஹைதராபாதை சேர்ந்த தால்ஸ்தாய், நீட்சே வாசகனான ஒரு மாணவன். சொந்த கருத்துக்களை சொந்த மொழியில் எழுதியிருந்தான். தான் எழுதியதன் மீது அவனுக்கு மதிப்பு இருந்தது. நாங்கள் நண்பர்கள் ஆனோம். கல்லூரியில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று “இப்போது இந்த மொத்த வளாகத்தில் தால்ஸ்தாய் பற்றி பேசுகிறவர் நாமாக மட்டும் தான் இருப்போம்” என வியப்பாக நினைத்துக் கொள்வேன். அது ஒரு தனி உணர்வாக இருக்கும். மொத்த உலகத்துக்கும் எதிர் அச்சில் நாங்கள் சுழல்வது போல். பிற மாணவர்களும் ஆசிரியர்களும் எங்களை விசித்திர ஜீவிகள் போல பார்த்து செல்வார்கள். அவனுடைய தனித்துவம் காரணமாகவே ஆசிரியர்கள் மட்டத்தில் இருந்து பல பிரச்சனைகள் அவனுக்கு வந்தன. நான் அவனிடம் பேசக் கூடாது என்று கூட தடை போட்டார்கள். அது தான் நடப்பியல் உலகம். நீட்சே, தால்ஸ்தாய், முராகாமி பற்றி பேசினால் தடை. எனக்கு அவனை பார்க்கையில் என்னுடைய மாணவப் பருவத்து லட்சிய கனவுகளும் அதைப் பின் தொடர்ந்த என் ஆவேசமும் நினைவு வரும்.
 

ஆனால் நாம் அப்படித் தான் என்றும் நடைமுறைக்கு விரோதமான முட்டாள்களாக இருந்திருக்கிறோம்! நமக்காக நாமே நம்மை ஏமாற்றிக் கொள்வது இனிமையான காரியம் தானே!

1 comment:

அகலிக‌ன் said...

பல காரியங்கள் பின் நாளின் அசைபோடுதலில் அபத்தமாகத்தான் தோன்றுகிறது, ஆனால் 20 வயதில்தான் ரௌத்திரம் பழக வேண்டும் 60 வயதில் ரௌத்திரம் அபத்தம் இல்லையா?