Monday, June 10, 2013

நாய்ப் பிரியர்களும் நாய் வெறியர்களும்
சென்னை மாநகராட்சி நாய்களுக்கான புகலிடம் அமைக்கப் போவதாய் கூறி மறைமுகமாய் மொத்த தெருநாய்களையும் ஒழித்துக்கட்ட திட்டமிட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் வரவேற்பையும் இன்னொரு பக்கம் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நாய், பூனை போன்ற பிராணிகளுக்கு வளர்ந்த சமூகங்களில் வளர்ப்பு பிராணி என்கிற அளவில் மட்டுமே இனி இடம் இருக்கும். “லண்டனில் சிலுவைராஜ்” நாவலில் ராஜ்கௌதமன் லண்டனில் ஒரு காகம் கூட காணக் கிடைக்கவில்லையே என புலம்பியிருப்பார். அமெரிக்காவில் கூட பிராணிகளை நகரத்தில் இருந்து துப்புரவாக அகற்றி உள்ளார்கள். இந்த பிராணிகள் நகரங்களுக்கு அப்பால் உணவுக்காக மைல் கணக்கில் அலைந்து படாதுபாடு பட்டு வாழ்ந்து சாகின்றன. மாநகரங்கள் உச்ச வளர்ச்சியை அடைகிற நிலையில் மக்களுக்கு அச்சம் அதிகமாகிறது. கிருமிகள், மிருகங்கள், பிற மனிதர்கள் என யாரைப் பார்த்தாலும் பயம். இதன் விளைவு தான் சுத்தமான மிருகங்கள் இல்லாத தெருக்களும், அந்நியர்கள் நுழைய முடியாத gated சமூகங்களும். இன்னொரு விளைவு மிகையான தீவிரவாத பயம். சின்னதாய் குண்டு வெடித்தால் அமெரிக்கா பதறி விடும். இங்கு இந்தியாவில் அதைவிட பத்து மடங்கு பாதிப்புடன் தாக்குதல் நடந்தாலும் மக்கள் ஒன்றுமே நடக்காதது போல் பையைத் தூக்கி வேலைக்கு கிளம்பி விடுவார்கள்.
இந்தியா வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதற்கும் தெருப்பிராணிகளின் சுகஜீவிதத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதனால் தான் சென்னை மாநகராட்சி தெருநாய்களை முழுக்க அழித்து விடாது என ஒரு நாய் பிரியன் என்கிற நிலையில் எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது. நம்முடைய மாநகராட்சி எதையும் முழுமையாக உருப்படியாக செய்யாதது என்பதில் அனுகூலங்களும் இது போல் இருக்கிறதே.
மக்கள் நாய்களை வெறுப்பதற்கும் நேசிப்பதற்கும் அவர்களின் வர்க்க நிலை மற்றும் இளவயது அனுபவங்களுக்கும் தொடர்புள்ளது. அதே போல் நாய் ஒருவரை கடிக்குமா இல்லையா என்பதற்கும் இதற்கும் கூட தொடர்புள்ளது.
பொதுவாக உயர்வர்க்கத்தினரும் கீழ்த்தட்டினரும் நாய்களை நேசிக்கிறார்கள். மத்திய வர்க்கத்தினர் வெறுக்கிறார்கள். இன்று சென்னையிலும் பொதுவாக எல்லா உலக நகரங்களிலும் நாய் பூனை பாதுகாப்புக்காக உரிமைக்காக செயல்படுபவர்கள் கணிசமாக உயர்தட்டினர் தாம். இவர்களுக்கு உள்ள நேசம் இந்த பிராணிகளை வளர்த்து அவற்றுக்கு அணுக்கம் பாராட்ட இள வயது முதலே உள்ள வாய்ப்புகளின் விளைவு.
நாய் அல்லது பூனை வளர்க்க செலவாகும். மேலும் அது ஒரு பொழுதுபோக்கும் தான். ஒரு மனவிரிவும் அதற்கு வேண்டும். மேல்தட்டில் உள்ளோருக்கு இதெல்லாம் எளிதில் சாத்தியமாகிறது. அன்றாட நடப்பியல் அவஸ்தைகள் பதற்றங்கள் அதிகம் இல்லாவிட்டால் பிறர் மீது அல்லது பிற உயிரினங்கள் மீது பிரியம் காட்டுவது எளிதாகும் தானே.
இதே தினசரி நடப்பியல் பதற்றங்கள் மத்தியதர வாழ்வை சூழ்ந்து அரிக்கின்றன. இதன் விளைவாய் ஒரு குறுகின மனப்பான்மை அவர்களுக்குள் தோன்றுகிறது. நான்கு சுவர்களுக்கு வெளியே உள்ள அத்தனை பேரும் தமக்கு எதிரி, போட்டியாளர் எனும் எண்ணம் வலுவாக தோன்றுகிறது. தமக்குள்ளே சதா முடங்கிப் போவது ஒரு மத்திய வர்க்க நோய்மை. வெளிநபர்களை வெறுக்கும் மத்திய வர்க்கம் ஒரு பிராணியை நேசிப்பது நடக்குமா என்ன? பிராணிகளை வளர்ப்பதை கடுமையாக எதிர்ப்பவர்கள் மத்திய வர்க்கத்தினர். இந்த நாட்டில் உள்ள மிச்ச சொச்சமுள்ள வளங்களை பிற வர்க்கத்தினர் சுரண்டி தம்மை தவிக்க விடுகிறார்கள் என்கிற அச்சம் சதா அவர்களுக்கு. அப்படி இருக்க நாய் கூட அவர்களுக்கு ஒரு நடப்பியல் போட்டியாகத் தான் தோன்றும். இது நாய் மீதான அச்சமாக வெளிப்படும்.
கணிசமான மாநகர மத்திய வர்க்கத்தினர் சின்ன வயதில் நாயுடன் பழகி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நாய் மீதுள்ள பயம் அறியாததன் பால் உள்ள பயம் தான். சில கட்டுப்பெட்டியான குடும்ப பையன்களுக்கு பெண்கள் மீது அச்சம் ஏற்படுவது போல. இவர்கள் நாயைப் பார்த்தாலே ஸ்பைடர் மேன் போல் பத்தடி தாவுவார்கள். இந்த எதிர்வினை கண்டு நாய் தன்னை இவர்கள் தாக்கப் போகிறார்களோ என பயந்து குரைக்கும். அது மட்டுமல்ல நாய்களால் அச்சத்தின் வாசனையை உடல் மொழியை சுலபமாய் உணர முடியும். அதனால் பயப்படுகிறவர்களை தான் முதலில் துரத்தும். கடிக்கும். பொதுவாக நாய் வளர்த்து பழக்கமில்லாதவர்கள் தாம் தெருநாய்களிடம் அதிகம் கடி வாங்கியோ துரத்தப்பட்டோ இருப்பார்கள். நாய்ப்பிரியர்களைப் பார்த்தால் புது நாய் கூட வாலைக் குழைத்துக் கொண்டு வரும்.
மாநகரத்தின் சின்ன வீடுகளில் ஒடுங்கின வெளிகளில் நாய் வளர்ப்பதும் எளிதல்ல. வளர்க்கலாம் என்றாலும் வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு மேற்சொன்ன பீதியிருக்கும். மேலும் குடியிருப்பில் வசிக்கும் பிற மத்திய வர்க்க குடும்பங்களும் பரம்பரை பரம்பரையாக நாய் வளர்ப்பை கடுமையாக எதிர்ப்பவர்களாக இருப்பார்கள். அவர்களும் அனுமதிக்க மாட்டார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் போல செல்லும்.
வளர்க்க முடியாததனால் பயம், பயத்தினால் நாயால் கடிக்கப்பட்டு, இன்னும் பயமும் வெறுப்பும் ஏற்பட்டு தாம் வசிக்கும் பிரதேசத்தில் இருந்து நாய்களையே அழித்தொழிக்க முயற்சி எடுக்க வைக்கும். ஆனாலும் இவர்கள் எங்காவது ஏதாவது ஒரு இடத்தில் வைத்து நாய்க்கடி மீண்டும் வாங்குவது உறுதி. நோய் வராமல் இருக்க தற்காப்பு சக்தி அதிகமாக வேண்டும் – நாய் கடிக்காமல் இருக்க பயம் அகல வேண்டும். நோய் வந்தால் அரோக்கியம் குன்றி தற்காப்பு சக்தி குறையும். நாய் கடித்தால் பயம் கூடி மீண்டும் கடி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். இது ஒரு (மத்திய வர்க்க) சுழல்.
கீழ்த்தட்டினர் பொதுவாகவே நாய் மீது அதிக பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரோட்டோர தற்காலிக குடிசைகளில், சேரிகளில் மிக இயல்பாக பல பிராணிகள் வளர்க்கப்படுவதை காணலாம். நாய் வளர்க்கும் செலவில் குழந்தைக்கு பால் பௌடர் வாங்கலாம் அல்லது கோயிலுக்கு நன்கொடை வழங்கலாம் அல்லது சேர்த்து வைத்து பழனிக்கு மொட்டை போடலாம் என்றெல்லாம் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். நான் டீக்கடை, மீன்கடை போன்ற இடங்களில் என் நாயை அழைத்து செல்வேன். அது என் கூட வந்து காலருகே அமர்ந்து கொள்ளும். அங்கிருப்பவர்கள் புகார் சொல்ல மாட்டார்கள். மாறாக ஆர்வமாக நாயின் இனம் குணம் குறித்து விசாரிப்பார்கள். என்னுடைய நாய் மிக குள்ளம். அதனால் தன் உயரத்தில் உள்ள குழந்தைகளைப் பார்த்தால் பயத்தில் குரைக்கும். கணிசமான மத்திய வர்க்க அம்மாக்கள் இந்த நாய்க்கு குழந்தைகளைப் பார்த்தால் ஏதோ கொலைவெறி என நினைத்து அய்யோ குய்யோவென்று ஏதோ புலியை பார்த்தது போல குதிப்பார்கள். நேற்று ஒரு மீன்கடைக்கு கொண்டு போயிருந்தேன். அங்கே ஒரு குழந்தை அருகே வந்து சீண்ட என் நாயும் உறுமியது. குழந்தை பயந்து அழ அந்த மீன்கடைக்கார அம்மா குழந்தையை முதலில் துரத்தி விட்டார். அடுத்து அவர் சொன்னது தான் ஆச்சரியம்: “ரெண்டும் ஒரே ஒசரமா, அதான் நாய் அந்த குழந்தை தன்னை அடிச்சிடுமோன்னு பயப்பட்டு குலைச்சது”. இது போன்ற ஒரு புரிதலை ஒரு மத்திய வர்க்க பெண்ணிடம் இருந்து நான் எதிர்பார்க்க முடியாது. மத்திய வர்க்கத்தினர் இந்த உலகில் தம்முடைய குடும்ப உறுப்பினர்களான மூவர் தவிர மிச்ச அத்தனை பேரும் தம்மை கொல்லவோ பணம் பிடுங்கவோ தொந்தரவு செய்யவோ திரியும் குற்றவாளிகள் எனும் எண்ணத்தோடு இருப்பவர்கள். அடுத்த மனிதனை நம்பாத அவர்கள் நாயை எப்படி புரிந்து கொள்வார்கள்? அதனால் தான் என்னால் ஒரு மத்திய வர்க்க சூப்பர் மார்க்கெட்டுக்குள்ளோ அதன் வாசல் வரையிலோ கூட நாயை கொண்டு போக முடியாது.
பெசண்ட் நகர் போன்ற பகுதிகளில் நாயை அழைத்து செல்லும் போது கிட்டத்தட்ட அத்தனை பேரும் நாயிடம் ஆர்வம் காட்டி கொஞ்ச பழக வருவார்கள். இது போன்ற மேற்தட்டு பகுதிகளில் அழகான பெண்களின் கவனத்தை உங்கள் பால் திருப்ப ஒரு சுட்டியான நாயை கையில் வைத்திருந்தால் போதும். நாயை ஒட்டி நிறைய பரிச்சயங்கள் வாய்க்கும். இவர்கள் செல்லப்பிராணிகளை வளர்த்து பழகியவர்கள். அதனாலே அதன் மீது அதிகம் அச்சம் இல்லாதவர்கள்.
இந்தியா மாநகரங்களில் எதிர்காலத்தில் தெருநாய்க்களின் பாதுகாப்பு கீழ்/மேல் தட்டினரை நம்பித் தான் உள்ளது. உணவு இல்லாமல் போகும் போது தான் நாய்கள் வெறி பிடித்து மனிதர்களை வேட்டையாடும். ஒன்று நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். அடுத்து, அவற்றை முழுக்க அழிக்காமல் கீழ்/மேல் தட்டினர் தத்தெடுத்து வளர்க்க வேண்டும். வேளாவேளைக்கு உணவு கிடைக்கும் நாய்கள் அமைதியாக தூங்குமே அன்றி தெருவில் யாரையும் விரட்டாது. வீட்டிலும் உணவகங்களில் ஏகப்பட்ட சாப்பாடு வீணாகிறது. அதை இந்த நாய்களுக்கு கொடுத்தால் போதும். கசாப்புக்கு போகும் மாடுகள், திருடிப் பிடுங்கும் குரங்குகள் மேல் உள்ள பரிவில் கொஞ்சம் நாய்கள் மீதும் காட்டுவதில் தீங்கில்லை. இந்த உலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் இடமுண்டு. 
என்னுடைய நாய் ஜீனோ

ஜாதி நாய்களை வளர்ப்பதற்கும் தெருநாய்களை கவனிப்பதற்கும் சம்மந்தமில்லை. அவரவர் தேவை தான் முக்கியம். உதாரணமாக் பக், டாக்‌ஷ்ஹண்டு போன்ற குட்டி நாய்களை வீட்டுக்குள் வைத்துக் கொள்வது குளிப்பாட்டுவது கவனிப்பது எளிது (மருத்துவ செலவு அதிகம் என்றாலும்). இன்று சென்னையில் வீடுகளுக்குள் பல முதிய ஜோடிகள், தனித்திருக்கும் பெண்கள் பணத்துக்காக அல்லது சொத்துக்காக கொல்லப்படுவதை பார்க்கிறோம். இவர்கள் ரெண்டு ராட்வீலர் நாய்களை வைத்திருந்தால் அவை தனியே நாலு கொலைகாரர்களை சமாளிக்கும். மேலும் அவை படு ஆபத்தான கொலைகார நாய்கள். ஆனால் தனித்திருக்கும் முதியவர், பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு இவை.
என்னுடைய நாய் சின்னது. ஆனால் என் நாயின் முன்னிலையில் உங்களது சுண்டு விரல் என் மீது படக்கூட அனுமதிக்காது. ஒருமுறை நான் ஜுரமாக கிடக்கையில் என் மாமியார் ஒரு கிளாஸ் பால் கொடுத்தார். என் மாமியாரிடம் அதிகம் பழகவில்லை என்பதாலும் எனக்கு உடல் நலமில்லை என்பதை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டதாலும் என் நாய் அவரை என்னை அண்டவே விடவில்லை. பால் கோப்பை நீட்டிய கையை கவ்வி தடுத்து விட்டது. நாய் இருப்பதால் நான் பல சமயம் வீட்டுக்கதவை சாத்துவதில் கூட அக்கறை காட்டுவதில்லை.
 

இந்த நாயைப் பாருங்கள். பெயர் கபாங். பிலிப்பைன்ஸில் தன் எஜமானனை ஒரு வாகன ஆபத்தில் இருந்து காப்பாற்ற குறுக்கே பாய்ந்து தன் மேல்வாயை உடைத்துக் கொண்டது
 இரவில் பேய் பயம் ஏற்படும் போது இருட்டில் போனால் நாய் கூட வருவது ஒரு நிம்மதி. தூங்கும் போது அதை அணைத்துக் கொண்டால் பயம் போய் விடும். மேலும் பேயை நாயால் காண முடியும் என்றொரு மூட நம்பிக்கை எனக்கு. வண்டியில் வெளியே போகும் போது வழித்துணை நாய் தான். அதனுடன் போகும் போது ஒரு நண்பனுடன் பயணிப்பது போல சலிப்பில்லாமல் இருக்கும். அது போல் கராத்தே பயின்ற ஆரம்ப கட்டத்தில் என் நாயிடம் தான் பயிற்சி செய்வேன். நான் குத்தும் போது அது வாயால் பிடித்தால் தோல்வி. படுவேகமாக அது எதிர்பார்க்கும் முன் அதன் கழுத்தை என் குத்தால் தொட்டால் வெற்றி. பெரும்பாலும் நாய் தான் ஜெயிக்கும். என்னுடைய கோணங்கித்தனங்கள் பழகி விட்டதால் அபார பொறுமை காட்டும். அதே போல என் மனைவி அசைவம் சாப்பிட மாட்டாள் என்பதால் கறி மீன் வாங்கினால் எனக்கு சாப்பாட்டு துணையும் நாய் தான்.
இப்போது நான் இதை எழுதுகையில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் கணினியை மூடி எழுந்து நிற்கும் முன் நொடியில் அது எழுந்து என் கூட வர தயாராகி விடும். எங்கு போனாலும் கூட ஒரு நிழலாக தொடரும். நான் எங்காவது பயணம் போனாலும் நான் முதலில் என் நாயைத் தான் மிஸ் பண்ணுவேன். அதற்குக் காரணம் மனிதர்களோடு இருந்தால் தோன்றுகிற ஒன்று எனக்கு நாயிடம் தோன்றுவதில்லை: தனிமை.
 

5 comments:

sarav said...

Fantastic i appreciate the contents i do have 3 kids(dogs) at my home, i belong to middle class only but somehow we have endless love and affection to dogs. Most of them are not aware that dogs are the best security guards .. most of my earlier flat residents opposed of having dogs that too 3 in their complex after we moved out of that place the tenants told us that they missed the presence of our kids as they used to bark whenever a new person comes into the complex

Karikalan said...

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே ஆன உறவு மிகத் தொன்மையானது என்று மரபியல் ஆராய்ச்சி தெளிவுபடுத்தி உள்ளது.

நாய்களில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது, தனி மனிதர்களால்/குடும்பக்களால் எடுக்கப் பட்டு வளர்க்கப் படும் நாய்கள். அவை பொதுவாக, ஒரு உணர்வு ரீதியான அடிப்படையிலோ, பொருளாதார அடிப்படையிலோ வளர்க்கப்படுகின்றன. உதாரணமாக, மேலை நாடுகளில் நாய்கள் பண்ணை வேலை செய்வதற்கு உதவும், பண்ணையில் இருக்கும் கோழி முதலியனவற்றை பிற விலங்குகளில் இருந்து காக்கும் வெளியைத் தான் செய்து வந்தன. நம் கிராமங்களிலும் அப்படித் தான். அதே நாய்கள் நகரங்களில், அந்த வேலையைச் செய்ய இயல்வதில்லை. அதனால், மேல்தட்டு மக்களின் வளர்ப்பு பிராணிகளாக கருதப்படுகின்றன. கீழ்தட்டு மக்கள், கிராமங்களில் மிருகங்களோடு (ஆடு, மாடு, கோழி, நாய், என) இயற்கையாக வளர்ந்தவர்கள். அவற்றின் பொருளாதாரப் பயனையும் உள்ளூர உணர்ந்தவர்கள். அதனால் மரியாதை செலுத்துகிறார்கள்.

இரண்டாவது வகை, பொதுச் சமூக நாய்கள். இவற்றுக்கு யாரும் உரிமை கொண்டாடுவது இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் இத்தகைய நாய்களுக்கு ஏதோ ஒரு அளவில் அந்தச் சமூகம் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. இந்த நாய்களுக்கு பெருநகர வாழ்வில் இடம் இல்லை என்பது உண்மையே. மேலை நாட்டு பேரு நகரத் தெருக்களில் வாகனப் போக்குவரத்து மிகுந்த கட்டுப்பாடுடன் நடக்கும் ஒன்று. பாதசாரிகள் அதிகம் இல்லாததால், தெருப் போக்குவரத்து பொதுவாக வாகனங்கள் விரைவாகச் செல்லும் ஒரு மார்க்கமாக மாறி விட்டது. இந்தச் சூழலில், தெரு நாய்கள் உலவுவது நாய்களுக்கும் ஆபத்து, வாகனங்கள் ஒட்டுவோருக்கும் ஆபத்து. நான் பார்த்த வரையில், பெரும்பாலானோர், நாய்/பூனை போன்ற விலங்குகள் மீது பெரும் அன்பு செலுத்துகிறார்கள். நகரங்களில், தெரு நாய்கள் இருந்தால், அவற்றை தத்து எடுத்துக் கொள்ள, தத்து எடுத்துக் கொள்ளப் படும் வரை பராமரிக்க பெரும் முயற்சிகள் எடுக்கப் படுகின்றன.
நடுத்தர மக்களைப் பொருத்தவரை, விலங்குகளைப் பற்றிய அவர்களது பயம் - நீங்கள் சொன்னபடி - அறியாமையில் இருந்து விளைவது தான். அந்த பயம் விளையாட்டுப் பருவத்தில், நாயை கல்லால் அடிக்கும் வக்கிரமாக பரிணாமிக்கிறது. நடுத்தர வர்க்கத்தினரைப் பற்றி, "வெளியே உள்ள அத்தனை பேரும் தமக்கு எதிரி, போட்டியாளர் எனும் எண்ணம் வலுவாக தோன்றுகிறது. தமக்குள்ளே சதா முடங்கிப் போவது ஒரு மத்திய வர்க்க நோய்மை", என நீங்கள் சொல்வது சிந்திக்கத் தக்கது. இதே நடுத்தர வர்க்கக் குழந்தைகள் ஒரு கிராமத்தில் வளர்ந்தால் இப்படி முடங்கி இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

நல்ல பதிவு. நன்றி.

Abilash Chandran said...

நல்ல அழகான பின்னூட்டம் கரிகாலம்

Abilash Chandran said...

நன்றி sarav

manikandan s said...

*ஒரு ஜாதி நாயின் குட்டியை crossஆ அல்லது originalலா என நாம் 'பார்த்தே' கண்டு பிடிக்க முடியுமா? முடியுமெனில் எப்படி?

(ஒருவர் தான் வளர்த்து வந்த 3 மாத dalmation puppyயை மேற்கொண்டு வளர்க்க முடியாததால் தந்து விட்டு போனார். அதன் உதடுகள் முழுமையாக கருப்பாக இருந்தன. உடலிலும் புள்ளிகளோடு சேர்ந்து கருப்பு பெயிண்ட்டினால் பட்டை தீட்டப்பட்டது மாதிரி கருப்பு நிறம் இருந்தது. ஒருவர் இது cross என என்னிடம் சொல்ல நம்பி விட்டேன். என் அண்ணனின் நண்பரிடம் குடுத்து விட்டேன்.)