Monday, April 8, 2013

குடிக்கலாமா?
டி.வி விவாதங்களில் மதுப்பழக்கத்தை கடுமையாக கண்டித்து ஆவேசப்படுபவர்களைப் பார்க்கும் போது ஒரு சின்ன சந்தேகம் தோன்றும்: இவர்கள் எல்லாம் விவாதம் முடித்து கிளம்பும் போது குடிக்க மாட்டார்களா? அப்படி குடிப்பழக்கம் கொண்டவர்கள் என்றால் மதுவை கண்டிக்க உரிமை உண்டா?

மதுப்பழக்கத்தை கண்டிக்கிற சிலராவது குடிப்பவர்கள் என தனிப்பட்ட முறையில் அறிவேன். இது லஞ்சம் கொடுப்பதை போன்ற பிரச்சனை தான். ஊழலை சில சந்தர்ப்பங்களில் ஏனும் நாம் பயன்படுத்தி இருப்போம் அல்லது பயன்படுத்துவோம். ஆனால் பொது அரங்கில் நிச்சயம் ஊழலை எதிர்ப்போம். அதற்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுப்போம்.
குடியினால் வருகிற கேடுகள் ஒரு பக்கம் இருக்க, ஊழலைப் போல் அது நமது கலாச்சாரத்தின் ஒரு லகுவான பகுதி ஆகி விட்டது தான் மேற்சொன்ன முரண்நிலைக்கு காரணம். எனக்கு பல சமயங்களில் ஏன் குடிக்கிறோம் என்கிற குழப்பம் உண்டாகும். குறிப்பாக பாதியில் குடித்துக் கொண்டிருக்கையில் இதனால் என்ன பயன் எனத் தோன்றும். மகிழ்ச்சியை பொறுத்தவரையில் நான் குடிக்காத போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் மது ருசியை பழகினேன். இப்போது 13 வருடங்களாகிறது; இன்னும் மது ஒரு விடமுடியாத பழக்கமாக ஆகவில்லை. எனக்கு பல விதமான மதுக்களின் கசப்பான, காரமான, வாசனையான, வாசனையற்ற, இனிப்பான, இனிப்பும் புளிப்பும் கலந்த சுவைகள் பிடிக்கும். நண்பர்களுடனான அரட்டையில் ஒரு நல்ல முகாந்திரம் மது. ஆனால் அவை நினைவில் தங்கும் சாமர்த்தியமான சுவாரஸ்யமான உரையாடல்களாக இருக்காது. அபத்தமான உளறல்கள். அப்படி உளற விருப்பம் வரும் போது குடிக்கலாம் எனத் தோன்றும்.
சிலவேளை ஹாலிவுட் படங்கள் பார்க்கும் போது அல்லது முராகாமி, ஹெமிங்வே நாவல்கள் படிக்கும் போது குடிக்க ஆசை வரும். மாணவப்பருவம் தொட்டே பார்களில் பல சுவாரஸ்யமான நபர்களை சந்தித்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது பாரில் ஒருவர் எங்களிடம் வந்து விசிட்டிங் கார்டு தந்து அடுத்து நாள் வந்து பார்த்தால் வேலை தருவதாக சொன்னார். நாங்கள் அதை கிழித்து போட்டு விட்டோம். பின்னர் பாய்ஸ் படம் பார்க்கும் போது விவேக்கின் பாத்திரம் அவரை நினைவுறுத்தும். அது போல் ஒரு ஊனமுற்றவர். இளமையில் கிரிக்கெட் ஆடியவர். அவர் தன் மகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பின்னர் யோசித்த போது நான்கு இளைஞர்களிடம் ஒரு அப்பா மதுக்கடையில் வைத்து எப்படி தன் மகளைப் பற்றி விகற்பமில்லாமல் பேச முடிகிறது என வியந்திருக்கிறேன். கல்லூரி விடுதியில் கோபால் என்றொரு நண்பன். அறையை மிக நேர்த்தியாக வைத்திருப்பான். குளித்தவுடன் துண்டை கொடியில் தான் காயப் போடுவான். அறையை மூன்று வேளை பெருக்குவான். இரவில் அவன் அறையை கலைக்கும் பொருட்டே நாங்கள் மது பொத்தல்களுடன் போவோம். அது போல் ஒரு முறை தாம்பரத்தில் ஒரு பாரில் உள்ள வாஷ் பேஸினில் ஏறி மூத்திரம் கழித்ததும் வேடிக்கையான நினைவு. பின்னர் கல்லூரி ஆசிரியராக சேர்ந்த பிறகு ஒரு நாள் மதுக்கடையில் ஒரு தெரியாத மத்திய வயதுக்காரருடன் டேபிளை பகிர்ந்து கொண்டிருந்தேன். பல விசயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து நான் என் தொழிலை குறிப்பிட்டதும் அவர் அதிர்ச்சியாகி விட்டார். “நீங்க எல்லாம் குடிக்கக் கூடாது சார்” என்றார் கசப்பாக. இன்னொரு முறை பாரில் ஒரு நகராட்சி துப்புறவு தொழிலாளியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது சம்பளம் எனக்கு நிகராக இருந்தது. ஒரே அனுகூலம் அவர் தினமும் வேலைக்கு போக வேண்டியதில்லை. சூப்பர்வைஸர் அவருக்கு பதிலாக கையெழுத்துப் போட்டு 30% எடுத்துக் கொண்டு மீதி சம்பளம் அவருக்கு தந்து விடுவதாக ஒரு ஏற்பாடு.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, குடி ஏன் என்னோடு ஒட்டவில்லை என்று தான் தொடர்ந்து வியக்கிறேன். என் கல்லூரி நண்பர்களில் கணிசமானோர் குடி அளவில் நன்றாக முதிர்ந்து வந்திருக்கிறார்கள். தொடர்ந்து நிதானமாக குடிக்கிறார்கள். என் அப்பா தினமும் மூன்று வேளை குடித்தவர். எனக்கு குடிக்காமல் இருக்க குடும்ப அளவிலும் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனாலும் மாதம் இரண்டு முறை குடித்தால் அதிகம். இந்த நிலைக்கு இரண்டு காரணங்கள் தோன்றுகின்றன. ஒன்று பிரக்ஞையுடன் இருப்பதை நான் மிகவும் ரசிக்கிறேன்.
நான் ரசிக்கும் பிரக்ஞை எழுதும் போது, படிக்கும் போது, பிடித்த வேலை செய்யும் போது, நண்பர்களுடன் பேசும் போது தோன்றுவது. அதை கொஞ்சம் தளர்வான பிரக்ஞை எனலாம். ரொம்ப சின்ன வயதில் இருந்தே நான் என்னோடு மட்டும் தான் இருந்திருக்கிறேன். சுயத்தை சகித்துக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழி கண்டுபிடிப்போம். எனக்கும் ஒரு வாழ்வு முறை உள்ளது. எனக்கு போரடிப்பதே இல்லை. அதாவது தனியாக இருக்கும் போது. பொருந்தாத சூழலில் ஒட்டாத மக்களோடு இருக்கும் போது சலிப்பாகும். அப்போது பிடிவாதமாக எழுதவோ வாசிக்கவோ செய்வேன்.
எரிக் புரோம் அன்பு என்பதை வாழ்வின் மீது நமக்கு உள்ள விருப்பத்தை வெளிப்படுத்தும் மார்க்கம் என்கிறார். அன்புக்கு ஆள் முக்கியமில்லை. வாழ்வில் இருந்து அடையும் மகிழ்ச்சி தான் அன்புக்கு அடிப்படை. அதனால் பிறரையோ பிறிதையோ நேசிக்கும் ஒருவன் அடிப்படையில் தன்னை நேசிக்கிறான். பிறரை வெறுப்பவன் தன்னைத் தான் முதலில் வெறுக்கிறான். மது வாழ்வின் கட்டாயமாக ஆகிப் போனவர்கள் தம்மோடு இருக்க முடியாதவர்கள். மதுவின் துணையின்றி கடுமையான தனிமையை, கலாச்சார வறுமையை எதிர்கொள்பவர்கள்.
மதுவுக்கும் நம்முடைய கலாச்சார வெறுமைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. வாசிப்பு, எழுத்து, இசை, நடனம், பேச்சு போன்ற கலாச்சார நடவடிக்கைகள் பிறரோடு உறவாட மட்டுமல்ல நம்மோடு தொடர்புறுத்தவும் சொல்லித் தருகின்றன. சும்மா ஒரு நாற்காலியில் அல்லது குட்டைச்சுவரில் அமர்ந்து இருக்கும் போதை விட ஒரு நடனம் ஆடும் போது உங்களை நீங்கள் புதிதாக புத்துணர்வுடன் புத்தழகுடன் பார்க்க முடியும். ஆனால் கலாச்சார கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு சமூகத்தில், வேலையையும், குடும்ப ரீதியான சடங்குகளையும் தவிர வேறெந்த பற்றுதலும் இல்லாத சமூகத்தில் மனிதன் தனக்குள் ஒரு பெரும் ஓட்டையை பார்க்கிறான். குடி அவனுக்கு ஒரு மாற்று உலகை திறந்து விடுகிறது. அது போலியானது என்றாலும் அவனுக்கு வேறு வழியில்லை.
நம்முடைய பண்பாடு நம்மை நாமே ரசிக்க சொல்லித் தரவில்லை. விளைவாக ஏதாவது ஒரு கூட்டத்தில் சதா இருக்க விரும்புகிறோம். அல்லாவிட்டால் பதற்றமாகிறோம். இன்று சமூகமாக்கலுக்கு வேறு இடமோ சூழலோ இல்லாத நிலையில் மது தான் அதற்கான ஒரே முகாந்திரம் குடி தான். பண்பாட்டு வறுமையின் இன்னொரு சிக்கல் சலிப்பு. பலரும் சலிப்பை கடக்கத் தான் குடிக்கிறார்கள்.
களைப்பு, வலி, வாழ்வின் நிலையின்மை குறித்த கவலைகள் என மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. மரபியலும் ஒரு வலுவான காரணி என தோன்றுகிறது.
குடியால் அழிந்த அழிகிற எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. அப்பா குடிகாரர் ஆவதன் அவலங்களை சிறுவயது முதலே தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். நான் அப்பாவை என்றும் ஒரு உதாரணமாக பார்ப்பேன். அவர் குடித்ததற்கு என்னுடைய ஊனம் ஏற்படுத்திய கவலை முக்கிய காரணம் என பலரும் சொன்னார்கள். ஆனால் அது உண்மை அல்ல. முப்பது வயதுக்குப் பிறகு அவருக்கு தன் வாழ்வை வைத்து என்ன பண்ணுவது எனத் தெரியவில்லை. கடுமையான கசப்பு கொண்டவரானார். தன்னுடைய திறமைக்கு ஏற்றபடி வாழ்வில் முன்னேறவில்லை என்ற ஏமாற்றம் அவருக்கு உண்டு. என் அப்பாவைப் போல் பலரும் இருந்து வருகிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கு பொத்தலாக இருக்கிறது. வெறும் சடங்கு போல் வாழ்ந்து முடிக்க வேண்டிய வாழ்க்கை அவர்களுக்கு பிடிக்கவில்லை. நாம் குடியினால் அழிகிற குடும்பங்கள் பற்றி பேசி வந்திருக்கிறோம். குடியை நோக்கி போக நேர்கிற தனிமனிதர்கள் பற்றியும் இனி தீவிரமாக யோசிக்க வேண்டும். தமிழ் சமூகம் இன்று ஆவேசமாக மூர்க்கமாக குடியை நோக்கி செல்கிறது என்றால் இந்த சமூகத்தில் ஏதோ ஆதார பழுது உள்ளது என பொருள்.
மகிழ்ச்சியாக இருக்கத் தான் குடிக்கிறார்கள். ஆனால் குடித்த பின் ஏதோ ஒன்று குறைவதாக தோன்றுகிறது. அதை சரி செய்ய மீண்டும் குடிக்கிறார்கள். இப்படி போகிறது வாழ்க்கை!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த மனநோய் உள்ளவர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு...

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

Selvakumar said...

குடி மயக்கம் சிந்தனையின் கூர்மையான பகுதிகளை மழுங்கடித்து ஒரு தற்காலிக நிம்மதியைத் தருகின்றது. இதன் மூலம் நிலையின்மை, தன்னிரக்கம் தனிமை போன்ற பல பிரச்சினைகளுக்கும் தற்காலிக விடிவு கிடைக்கிறது. அல்லது மனம் அதை கூர்ந்து கவனித்து வேதனையில் ஆழ்வதை தவிர்க்கிறது நீங்கள் சொல்வது போல சலிப்பான வாழ்வின் பகுதிகளை கடக்க உதவுகிறது இதே மாதிரியான தற்காலிக பலன்களைத் தரும் இன்னொரு விஷயம் கடவுள் நம்பிக்கை. இரண்டிலும் அறிவு மயங்கி யதார்த்தத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒன்றை மனிதன் பற்றிக் கொள்கிறான். மது ஒழுங்கின்மையின் அடையாளமாகவும் பக்தி ஒரு உயர்ந்த விழுமியமாகவும் கருதப்படுவது விவாதத்திற்குரியது

Devathi Rajan said...Yaethachum Bothai onnu eppoadhum thevai kanna....

illaatti

Manushanukku Sakthi ille....

Yela machi machi.....