Friday, March 29, 2013

ராஜூமுருகனின் “வட்டியும் முதலும்”: சுரண்டல் எழுத்து

ராஜூ முருகனின் “வட்டியும் முதலும்” படித்து விட்டு படத்தயாரிப்பாளர்கள் சாக்கு மூட்டை நிறைய பணத்துடன் அவரது வரவுக்காக காத்திருப்பதாக ஒரு இயக்குநர் சன் நியூஸின் “திரைப்படமும் இலக்கியமும்” என்கிற விவாதத்தின் போது குறிப்பிட்டார். உடனே அதன் ஒருங்கிணைப்பாளர் குறுக்கிட்டு அந்த பத்தியை அவர் ஏதாவது சிறுபத்திரிகையில் எழுதியிருந்தால் கவனித்திருப்பார்களா என்றார்.
அதை விட முக்கியமாக அடுத்து ஒன்று சொன்னார்” “ராஜு முருகனை விட செறிவாக பலர் சிறுபத்திரிகைகளில் எழுதுகிறார்கள். அவற்றை சில நூறு பேர் படித்து கடந்து போகிறார்கள். இது ஒரு அவலம்” என்றார். எனக்கு இதைக் கேட்க அந்த ஒருங்கிணைப்பாளர் மீது சட்டென்று ஒரு மரியாதை தோன்றியது. இப்படி பேச ஒரு தைரியம் வேண்டும். பொதுவாக வெகுஜன மீடியாவில் வெகுமக்கள் ரசனைக்குற்பட்ட விசயங்களை விமர்சிக்க மாட்டார்கள்.
சில மாதங்கள் முன்பு விஜய் டிவியில் இப்படித் தான் நான் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜூ முருகனை அமர வைத்து பூரண கும்பம் எடுத்தார்கள். அவர் மலைக்கு போகும் சீருடையில் இருந்தார். ஒரு எழுத்தாளன் அடிப்படையில் சுயசிந்தனை கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் சடங்குகளுக்குள் சிக்குபவனாக இருக்க முடியாது என்பது என் நம்பிக்கை. அப்படி சிக்குபவனுக்கு விழிப்புணர்வு இல்லை. அவன் உயர்வாக எழுதவும் முடியாது. உண்மையில் அந்த வேடத்தில் ராஜுமுருகனை பார்க்க எனக்கு சின்ன அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சிறுபத்திரிகை வட்டத்தில் ஒரு எழுத்தாளன் அது போல் நெற்றி முழுக்க பட்டையுடன் மேடையேறி நான் பார்த்ததில்லை. ஆனால் இவர் வேறு ரகம் என பட்டது. ஒரு மாதிரி குழப்பமாக இருந்தது.
ராஜூ முருகன் ஒரு மாதிரி கலவை எழுத்தாளர். தமிழ் வார இதழ் நிருபர்களின் ஜிலுஜிலுவென்கிற போலி நடை + எஸ்.ராவின் செண்டிமெண்டும் உருவக பாணியும் கலந்த இலக்கிய நடை. அவரது “வட்டியும் முதலும்” தொடர் நானூறு பக்க தொகுப்பாக வந்திருக்கிறது. அதைப் புரட்டிப் பார்க்கும் போது சில விசயங்கள் புலப்பட்டன.
இது ஒரு வணிக வெற்றிபெற்ற தொடர். விஜய் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது கூட இருந்த கவிதா முரளிதரனிடம் “நீங்க எப்பிடி இதை ரசிக்கிறீங்க? ரொம்ப செண்டிமெண்டலா இருக்கே” என்று கேட்டேன். அதற்கு அவர் “நாமெல்லாம் sentimental fools தானே” என்றார். நான் இதை ஒரு விமர்சன தரப்பாக அல்ல பொதுவாக முருகனின் வாசகர்களின் ரசனை தரப்பாக கருதுகிறேன். அதன் அடிப்படையில் பார்க்கும் போது இவ்விசயம் தோன்றுகிறது. அவரது கணிசமான கட்டுரைகள் தோல்வியுற்ற சீரழிந்த மனிதர்களைப் பற்றியது; ஆனால் அவர் சீரழிவின் ஆன்மீகத் தளத்தையோ உளவியலையோ தொடுவதில்லை. லௌகீக தோல்விகள். அவற்றின் பின்னுள்ள ஒழுக்கம். இழந்த கனவுகளின் நடைமுறை வருத்தம். அது தான் அவர் திரும்ப திரும்ப பேசுவது. இது நமக்கு ஏன் பிடித்திருக்கிறது என யோசித்தேன். ஒன்று, முப்பது நாற்பதுகளில் உள்ள பலரும் பற்பல சமரசங்கள், இயலாமைகளுடன் வாழ்பவர்கள். ஏதோ ஒரு வேலை, குடும்பம் என சமூக கட்டமைப்பில் அங்கங்கே ஒட்டிக் கொண்டிருப்பவர்கள். எல்லோருக்கும் தாம் வாழ்வில் வேறு ஒருவராக இருந்திருக்கலாம் என்கிற ஏக்கமும் பச்சாதாபமும் இருக்கிறது. இந்த பச்சாதாபத்தை தான் ராஜூ முருகன் தூண்டுகிறார். படித்ததும் கண்ணீர் விட்டு ச்சே நானும் இப்படித் தான் சீரழிந்து போனேன் என நினைத்துக் கொள்கிறோம்.
இது சுரண்டல் எழுத்து. ஏனெனில் முருகன் உங்கள் பிரச்சனைகளுக்கான விடை தேடுவதில்லை, காரணத்தை அலசுவதில்லை. அவர் உங்களது முரடு தட்டிப் போன புண்ணில் ஊசி கொண்டு குத்தி துளி ரத்தம் வரவழைக்கிறார். அவ்வளவு தான்.
நானூறு பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து எழுத நீங்கள் நிறைய வாசித்து தேடி கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் ராஜூ முருகன் ஒரு பயிற்சி பெற்ற உரைநடையாளர் அல்ல. அவர் அடிப்படையில் சிறுகதையாளர். ஒரு சின்ன மன உந்துதல், உணர்ச்சி வேகம் கொண்டு கதையை பின்னுகிறவர். இயல்பாகவே அவர் பாத்திர சித்தரிப்புகளை தான் இந்த பத்தியிலும் முயன்றிருக்கிறார். கணிசமானவை போலியாகவே தோன்றுகின்றன. சிறுகதையாளன் இப்படி கட்டுரை வடிவுக்கு வரும் போது ஒரு அடிப்படியான சிக்கல் உணர்ச்சிகளைக் கொண்டு ரொம்ப காலம் டீ ஆற்ற முடியாது என்பது. ஒரு கட்டத்தில் நிஜ வாழ்க்கை பதிவுகள் நமக்கு அலுப்பு தட்டுகின்றன. இந்த சின்ன வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு தான் பார்த்து எழுத முடியும்? அதனால் தான் “வட்டியும் முதலும்” தேய்ந்த ரெக்கார்டு போல ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே மாதிரி மனிதர்கள், ஒரே வாழ்க்கை, ஒரே பிரச்சனை, அதற்கு ஒரே மேலோட்டமான கண்ணீர் நியாயங்கள்.
பின்னட்டையில் ராஜூமுருகனின் படத்தோடு தொடருக்கு ஓவியம் வரைந்தவரையும் போட்டு ஏதோ பிரமாத உலக சாதனை போல் சிலாகித்திருக்கிறார்கள். ஆனால் கவனித்து பார்த்தால் அந்த ஓவியங்கள் எளிய வடிவ பிழை கொண்டவை, கற்பனை வறட்சி கொண்டவை என தெரியும். உதாரணமாய், சினிமாவில் பாடலாசிரியனாக வந்து பிம்பாக மாறியனுக்கு ஒரு படம். அவன் கையில் நான்கைந்து போன்களுடன் நிற்கிறான். விகடன் நிறுவனத்தாருக்கு உண்மையில் ஓவியம் பற்றிக் கூட ஒன்றும் தெரியாதா? இதற்கு தினத்தந்தி நிருபர்கள் பரவாயில்லை. அவர்கள் ஒன்றும் மேதாவிகள் இல்லை என்று அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.

9 comments:

Selvakumar said...

இயக்குனர் விக்கிரமன் ஒரே கதையை ஒன்பது முறை நடிகர்களை மாற்றி மாற்றி எடுக்கிறார் என்று கிண்டலாக சிலர் சொல்வதுண்டு. ராஜு முருகன் வெகு சில, சராசரியான உணர்வுகளைக் கொண்டாடும், சிலாகிக்கும் கதைகளை வித விதமாக எழுதித் தள்ளுகிறார். குடும்பப் பெண்களுக்கு மெகா சீரியல்கள் எப்படி ஒரு மலினமான கத கதப்பைத் தந்து திருப்திப் படுத்துகிறதோ அது போலவே ராஜுவும் பெரும்பாலானவர்களின் இலக்கிய தாகத்தை திருப்திப் படுத்துகிறார்

சேக்காளி said...

பத்திரிகை அதன் வளத்திற்காக அவரை தூக்கி விடுவதாக வைத்துக் கொண்டாலும், அந்த இடத்தில் இருப்பதற்கான தகுதி அவரிடம் இல்லையென்றால் எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியும்?.இன்று பத்திரிகைகள் வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த எஸ்ரா, ஜெமோ க்களால் இன்னும் திரையில் ஜெயிக்க முடியவில்லை.சமரசத்திற்கு சம்மதிப்பவர்களுக்கு வெற்றி எளிதில் வசப்பட்டு விடுகிறது.

ஜோதிஜி திருப்பூர் said...

சிறப்பான கோர்வையில் எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி.

ஜீவன்சுப்பு said...

//ஒரு எழுத்தாளன் அடிப்படையில் சுயசிந்தனை கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் சடங்குகளுக்குள் சிக்குபவனாக இருக்க முடியாது என்பது என் நம்பிக்கை. அப்படி சிக்குபவனுக்கு விழிப்புணர்வு இல்லை. அவன் உயர்வாக எழுதவும் முடியாது. உண்மையில் அந்த வேடத்தில் ராஜுமுருகனை பார்க்க எனக்கு சின்ன அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சிறுபத்திரிகை வட்டத்தில் ஒரு எழுத்தாளன் அது போல் நெற்றி முழுக்க பட்டையுடன் மேடையேறி நான் பார்த்ததில்லை. ஆனால் இவர் வேறு ரகம் என பட்டது. ஒரு மாதிரி குழப்பமாக இருந்தது.// விபூதி பூசிக்கொள்வது தனிநபர் ஒருவரின் விருப்பமாக இருக்கலாம் . அதை நாம் விமர்சிப்பது சரியா..?

நீங்கள் சொல்வது போல அவரது எழுத்துக்களில் எஸ்.ராவின் சாயல் இருப்பது உண்மைதான் . மற்றபடி இந்த தொடர் ஒரு ஆட்டோகிராப் போன்றதே. மனிதர்களையும் , சூழ்நிலைகளையும் , அவர்களின் ஞாபகங்களை மீட்டெடுக்கும் வரிகளும் ,வர்ணனைகளும் கொண்ட ஒரு
தொடர் கதை போல்தான் வட்டியும் முதலும் .

இதெல்லாம் உண்மையாக இருக்குமா ,இப்படிப்பட்டவர்கள் இருந்திருப்பார்களா என்றெல்லாம் தெரியவில்லை . ஆனாலும் பிடித்திருக்கிறது . நமக்கு விருப்பமானவர் நம் தோளில் கைபோட்டு பேசுவதை போல எளிய நடை எழுத்துக்கள் .
எனக்கு மிகப்பெரிய வாசிப்பு அனுபவம் கிடையாது. இலக்கியம் , ஓவியம் பற்றியெல்லாம் பெரிய அறிவில்லை . ஆனாலும் எனக்கு இந்த தொடர் பிடித்திருக்கின்றது .

Sagest Pages said...

இலக்கியவாதி என்பதற்கும், வெகுஜனப் பத்திரிகையில் எழுதுவதற்கான இலக்கணம் ஒன்றும் இருப்பதாக நீங்கள் கற்பனை செய்திருப்பது புதிராக இருக்கிறது. அப்படி ஒன்று என்றுமே இருந்ததில்லை. இலக்கியம் என்பது காற்று மாதிரி, அது அடைக்கப்படும் வடிவங்களின் உருவங்களைப் பெறும். நீங்கள் அதை ஒரு ப்ராண்டாக, ஒரு உருவகமாக்க முயற்சிக்கிறீர்கள். இயலாமையின் வெளிப்பாடா அல்லது பொறாமையா, அல்லது புரியும் வகையில் சொன்னால் வயித்தெரிச்சலா என்றும் கேட்கத் தோன்றுகிறது.

படிப்பவனின் மனதைத் தொடுபவன் யாராக இருந்தாலும் அவன் படைப்பாளி. படைப்பாளி இலக்கியவாதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

ராஜாஜியின் மேடைப்பேச்சுக்கும், அண்ணாவின் மேடைப் பேச்சுக்கும் என்ன வித்தியாசமோ, தினத்தந்தியின் நடைக்கும், கணையாழியின் நடைக்கும் என்ன வித்தியாசமோ அந்த வித்தியாசம் தான், நீங்கள் சொல்லும் இலக்கியவாதிகளுக்கும், ராஜூ முருகனுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆனால் அதிகம் பேரைச் சென்று வெகுஜன பாதிப்பு ஏற்படுத்தியது என்னவோ அண்ணாவின் பேச்சுக்களும், தினத்தந்தியின் செய்திகளும் தான். நீங்கள் கணையாழியாகவே இருங்கள், அது உங்களின் விருப்பம், தேர்வு. ஆனால், தினத்தந்திகளைப் பார்த்து பொறாமைப் படாதீர்கள்.

Sudharsan Haribaskar said...

எந்தவொரு விஷயத்துக்குமே ரீச் அதிகமா இருந்தா உடனே நம்ம மக்கள் அதனை மட்டம்தட்ட தொடங்கிடுவாங்க.சுஜாதா அவர்களையே வணிக எழுத்தாளர்னு சொன்னவங்க தான் இந்த தீவிர இலக்கியவாதிங்க.ஆனா அவங்கவங்க சொந்த பதிப்பகம் தொடங்கும்பொது மட்டும் ‘சுஜாதா’ பெயரை வைத்து எப்படி காசு பார்க்கலாம்னு யோசிப்பாங்க. ராஜுமுருகன் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ‘ரீச்’ என்பது உண்மையிலேயே அபரிமிதமானது. எல்லா மட்டத்திலும் ரசிகர்களை சம்பாதித்திருக்கின்றார்.நானெல்லாம் 17ரூபாய்க்கு விகடன் தொடர்ந்து வாங்க ஆரம்பித்ததே ‘வட்டியும் முதலும்’ வரும் நாலு பக்கங்களுக்காகத் தான்...! கட்டுரைகளும் கதைகளும் எப்போதும் தீர்வுகளையும் நிதர்சங்களையும் மட்டுமே சொல்ல வேண்டிய அவசியமே இல்லை... நீங்கள் நின்று ஓய்வெடுக்க கொஞ்சம் நிழல் தந்தாலே பொதும்.

Sudharsan Haribaskar said...
This comment has been removed by the author.
Sudharsan Haribaskar said...
This comment has been removed by the author.
stephen kulasekar said...

anbulla