Friday, February 8, 2013

இந்திய டெஸ்டு அணியின் அவலமும் எதிர்காலமும்: கசப்பான எதார்த்தங்கள்

இந்திய டெஸ்டு கிரிக்கெட் ஏன் இப்படி அதலபாதாளத்துக்கு போய் அங்கேயே கொடி நாட்டி இது தான் உலகின் மிக உயரமான சிகரத்தின் உச்சி என பெருமூச்சு விட்டு கற்பனைப் புன்னகை பூக்கிறார்க்ள் என பலரும் கேட்கிறார்கள். அதாவது ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்கிறார்கள். நாமும் கேட்கலாம். எனக்கு சில காரணங்கள் தோன்றுகின்றன.
முதலில் நமது மட்டையாட்டம் படுமட்டமாக மாறி வருகிறது. ரெண்டாயிரத்துக்கு பிறகு மேற்கத்திய டெஸ்டு அணியில் இருந்து சீனியர்களை நீக்கி வெள்ளாந்தி வழிபோக்கர்களை அவர்களின் நிர்வாகம் கொண்டு வந்த போது இருந்த மே.இ மட்டையாட்டத்தை நமது அணியின் ஆட்டமும் ஒத்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஓவரும் யாராவது அவுட் ஆகும் தோற்றம் ஏற்படும். அது எந்த ஆடுதளம், எவ்வகை பந்து வீச்சானாலும் சரி. பிறகு மெல்ல மெல்ல இந்த நடுக்கம் வளர்ந்து ஒவ்வொரு பந்தும் யாராவது வெளியேறக் கூடும் என்று தோன்றும். ஆனால் மே.இ தீவுகளின் பந்து வீச்சாவது கொஞ்சம் வலுவாக தோன்றியது. இந்தியாவின் பந்து வீச்சோ வங்க தேசத்தின் தரத்தில் இருக்கிறது. எதிரணி மட்டையாடினால் அவர்கள் எப்போது டிக்ளேர் செய்வார்கள் என நம் களத்தடுப்பாளர்கள் நெட்டி முறித்து கண்களைக் கசக்கும் நிலை வந்துள்ளது. ஒரே மாறுபாடு நாம் மிகப்பெரும் உயரங்களைத் தொட்டு விட்டு இப்போது பொத்தென்று கீழே விழுந்திருக்கிறோம்.
அத்தோடு இன்னும் மேலேயே மிதந்து கொண்டிருப்பதாக காற்று கொஞ்சம் வலுவாக அடித்தால் ஒருவேளை மேலே திரும்ப போய் விடலாம் என்று தோனியும் இந்திய கிரிக்கெட் வாரியமும் பிடிவாதமாக நம்புகிறார்கள். இவர்களின் இந்த பரிதாப மறுப்பு மனநிலையை மீடியாவில் தொடர்ந்து கிண்டலடித்தும் கண்டித்தும் வருகிறார்கள். மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்திடம் தோற்ற நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி “இன்னும் எவ்வளவு மோசமாக ஆடினால் இந்த அணியில் மாற்றங்கள் செய்யப்படும்?” என்பது. தோனி இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார்.
கங்குலி, திராவிடின் தலைமைகளில் நாம் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மே.இ தீவுகளில் அவர்கள் மண்ணிலேயே டெஸ்டு போட்டிகள் வென்றோம். இதன் தொடர்ச்சியாக தோனியின் கீழ் தென்னாப்பிரிக்கா சென்று ஒரு டெஸ்டை வென்றோம். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அப்போது நமது மட்டையாட்டம் அதன் உச்சத்தில் இருந்தது என்பது. சரி தான். அப்போது குறிப்பாக ரெண்டாயிரத்தின் ஆரம்ப கட்டத்தில் நமக்கு வலுவான பந்து வீச்சும் இருந்தது. இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக அரிதான காரியம். சஹீர், ஆர்.பி சிங், பதான், ஸ்ரீசாந்த், முனாப் ஆகிய வீரர்கள் நன்றாக வீசி வந்தார்கள். வேக வீச்சாளர்கள் ஒருவர் காயமுற்றால் இன்னொருவர் அதே தரத்தில் எளிதாக கிடைத்தார். சுழலில் நமக்கு கும்பிளே, ஹர்பஜன் இருந்தார்கள். ஆனால் ரெண்டாயிரத்தின் இறுதியில் வேக வீச்சாளர்கள் பலரும் காயம் காரணமாக வெளியேறினார்கள் அல்லது துவண்டு போனார்கள். அது மட்டுமல்ல, நமது உள்ளூர் கிரிக்கெட்டிலும் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்தது.
தொண்ணூறுகளில் நமது உள்ளூர் கிரிக்கெட் இன்னும் வலுவாக இருந்தது. அப்போது எல்லா அணியிலும் இருபது சதங்களுக்கு மேல் எடுத்த மட்டையாளர்களும் இருநூறு விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த சுழலர்களும் இருந்தார்கள். இரண்டாயிரத்தில் காம்பிர், சேவாக் மற்றும் மேற்சொன்ன வேக வீச்சாளர்கள் உள்ளிட்ட பல தரமான புதிய முகங்கள் தோன்றினார்கள். ஆனால் அதே போன்ற தரமான வரவு ரெண்டாயிரத்துக்கு பிறகு நேரவில்லை.
முன்னிருந்த தரமான வீரர்களில் பலரும் ஓய்வுற்ற நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக உண்மையில் நமது உள்ளூர் அணிகள் ஒரு திறமைப் பஞ்சத்தை சந்தித்து வருகின்றன. உள்ளூர் அணிகளிலேயே மிக வலுவானதாக கருதப்படுகிற மும்பை, கர்நாடக அணிகளைப் பாருங்கள். அவை பலவீனமாகி விட்டன. ஒரு காலத்தில் மும்பை அணி எந்த ஒரு சர்வதேச அணியுடனும் மோதும் தரத்தில் இருந்தது. அவர்கள் இங்கு பயணம் வந்த ஆஸி அணியினரை இரு பயிற்சி ஆட்டங்களில் முன்பு தோற்கடித்ததை நாம் மறக்க முடியாது. ஆனால் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் ரஞ்சி கோப்பை போட்டிகளை ஆதிக்கம் செலுத்துவது ரயில்வேஸ், பரோடா போன்ற பலவீனமான அணிகள் தாம். இந்த அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட தேசிய அணிக்கு தேற மாட்டார்கள். ஆனால் பிற அணிகளின் தரவீழ்ச்சி இவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை அளித்தது. வெறும் அணி ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியான உழைப்பு மூலம் முந்தைய சாம்பியன்களை முறியடித்து முன்னேறி விட்டார்கள். சுருக்கமாக இன்று இந்திய உள்ளூர் கிரிக்கெட் ஒரு சராசரித்தனத்தின் போட்டிக்களமாக மாறி விட்டது.
ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில், குறிப்பாக கடந்த சில வருடங்களில், மெல்ல மெல்ல சீனியர்கள் வெளியேறி விட்ட நிலையில் இந்தியா சந்தித்த முக்கிய சிக்கல் புது வீரர்களை எங்கிருந்து கொண்டு வருவது என்பது. ஒரு காலத்தில் கும்பிளே உச்சத்தில் இருந்த போது அவரது அடுத்த நிலையில் உள்ளூரில் பகுதுலே, நிலேஷ் குல்கர்னி, ரமேஷ் பொவார், ராஜேஷ் பொவார், கன்வல்ஜித் சிங், சரந்தீப் சிங், ஜோஷி, ராஜு, சௌஹான் போன்று தரமான சுழலர்களின் ஒரு நீண்ட வரிசையே இருந்தது. இவ்வளவு பேர் இருந்தும் கூட ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னால் கும்பிளேவுக்கு காயம் ஏற்பட்ட போது அவருக்கு பதில் வீரர் கிடைக்காமல் தேர்வாளர்கள் திணறினார்கள். பலரையும் முயன்று யாரும் சோபிக்க வில்லை. அந்த இடைவெளியில் தான் ஹர்பஜன் சிங் கங்குலியின் பரிந்துரையால் தேர்ந்தெடுக்கப்பட்டு நம் வரலாற்றை மாற்றியமைத்தார்.
இதற்கிடையே அப்போது யாருமே அவ்வளவாய் கேள்விப்பட்டிருக்காத பாலாஜி என்றொரு வயதான தமிழக கால்சுழலரை திடீரென்று யாரோ பரிந்துரை செய்ய ஆஸிகளுக்கு எதிரான ஒரு பயிற்சி ஆட்டத்தில் முயன்று பார்த்தார்கள். பிறகு அவரையும் கைவிட்டார்கள். ஆனால் நிலைமை இன்று தலைகீழாக ஓஜா, அஷ்வினை விட்டால் வேறு யாருமே இல்லை என்பதாக உள்ளது. இவர்கள் இருவரும் கூட மேற்சொன்ன இரண்டாம் வரிசை சுழலர்களை விட கொஞ்சம் திறமையும் அனுபவமும் குறைந்தவர்கள் தாம்.
நமது மூத்த வீரர்கள் ஓய்வுறும் போது உள்ளூர் கிரிக்கெட் ஒரு பெரும் பஞ்சத்தை சந்திப்பது துரதிர்ஷ்டம் தான்! அதுவும் இளைய வீரர்களை மெல்ல மெல்ல அணியில் அறிமுகப்படுத்தி வளர்த்தெடுக்கும் போது மூத்த வீரர்கள் நல்ல ஆட்டநிலையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த பஞ்சத்தின் போது தான் இந்திய மூத்த வீரர்களும் பெரும் சறுக்கை சந்தித்து வருகிறார்கள் என்பது மற்றொரு துரதிஷ்டம்.
அவர்களின் வயது கூட ஒரு முக்கிய பிரச்சனை அல்ல. தென்னாப்பிரிக்காவில் காலிஸ், ஸ்மித் போன்ற மூத்த வீரர்கள் வயதான நிலையிலும் தொடர்ந்து அணியின் பிரதான மட்டையாளர்களாக உள்ளார்கள். அவர்களின் ஸ்திரத்தன்மை ஆம்லா, பீட்டர்ஸன், டூமினி போன்ற இளைய வீரர்களை அணியில் நிலைப்பட காலமும் வசதியும் அளித்தது. சொல்லப் போனால் தென்னாப்பிரிக்கா தொண்ணூறுகள் முழுக்க தரமான மட்டையாளர்களை கண்டடைய போராடி வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவர்களின் அணியில் கலினன் மட்டுமே ஒரே திறமையான மட்டையாளர். பின்னர் காலிஸ் நிலைப்பெற்றார். அதற்குப் பின் ஸ்மித். அதற்குப் பின் எ.பி.டிவில்லியர்ஸ். இதற்கிடையே ருடோல்ப், பிரின்ஸ் உள்ளிட்ட எண்ணற்ற வீரர்களை தென்னாப்பிரிக்க தேர்வாளர்கள் வாய்ப்பளித்து ஏமாற்றம் அடைந்து வந்தனர். ஆனால் அவர்கள் பொறுமையாக இருந்தனர். அவர்களின் அதிர்ஷ்டம் டூமினியும் ஆம்லாவும் கிட்டத்தட்ட ஒரே வேளையில் அறிமுகமாகி அற்புதமாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது தான். இத்தோடு வேகவீச்சாளர்கள் மார்க்கலும் ஸ்டெயினும் சேர்ந்து கொள்ள தென்னாப்பிரிக்க மிக வலுவான முழுமையான ஒரு அணியாக மாறியது. ஒரே குறை தரமான சுழலர் இல்லாதது தான். ஆனால் அதை ஈடுகட்டும் அளவுக்கு அவர்களுக்கு கூட்டான பந்து வீச்சு தரம் உண்டு. இப்படி திறமையான இளைய வீரர்களும் அனுபவம் வாய்ந்த ஸ்திரமான மூத்த வீரர்களும் ஒரு அணியில் இணைவது எப்போதாவது நிகழும் ஓர் அற்புதம். ஆஸ்திரேலியாவுக்கு இது தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் முற்பகுதி வரை நிகழ்ந்தது.
ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் இந்திய ஒருநாள் அணியில் இத்தகைய ஒருங்கிணைவு ஏற்பட்டது. அதனாலே நாம் உலகக் கோப்பை வென்றோம். ஆனால் டெஸ்டு அணியில் நம்மால் இதனை சாதிக்க இயலவில்லை. ஏனென்றால் நாம் டெஸ்டு போட்டிகளில் குறைவான ஆர்வமே செலுத்துகிறோம். நமது மட்டையாளர்கள் ஒருநாள் மற்றும் 20-20 போட்டிகளுக்காகதே தம்மை தயாரித்து வருகிறார்கள். டெஸ்டுகளை நாம் பின்னுக்கு தள்ளி விட்டோம். அதனாலே அந்த வடிவில் வெகு பின்னால் இருக்கிறோம்.
நமது நட்சத்திர மரபு மூத்த வீரர்களுடன் சேர்த்து இளைய வீரர்களை வளர்த்தெடுக்க அனுமதிக்கவில்லை. டெஸ்டு அணியை அப்படியே மாற்றமின்றி விட்டு விட தோனி தான் அணித்தலைவரான புதிதில் முடிவெடுத்தார். ஆனால் ஒருநாள் அணியில் பலர் அறிமுகமாகி வலுப்பெற்றனர். இப்போது ஓய்வுகள், மோசமான ஆட்டநிலை என டெஸ்டுகளில் நாம் பெரும் சங்கடங்களை சந்திக்கும் போது இளைய வீரர்களைத் தேடினால் அவர்கள் எங்கும் காணக் கிடைக்கவில்லை.
கடந்த மூன்று வருடங்களாக நாம் மோசமான ஆட்டநிலையில் மட்டையாடி வருவதையும் இப்போதுள்ள தேர்வின் எதார்த்தத்தையும் புரிந்து கொண்டு தான் இப்பிரச்சனையை நாம் அணுக வேண்டும். தொடர்ந்து நீண்ட சதங்கள் அடிப்பது ஒரு பழக்கம். கடந்த சில டெஸ்டுகளில் நாம் மனக்குவிப்பை, பொறுமையை, போராட்ட குணத்தை இழந்து விட்டிருப்பதை காண்கிறோம். இது ஆட்டநிலை சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. வயதும் ஒரே காரணம் அல்ல. ஏனென்றால் காலிஸ் இந்த வயதிலும், காலில் காயமுற்ற நிலையிலும் கூட சமீபத்தில் தன் அணியை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்டில் காப்பாற்ற மணிக்கணக்காய் போராடினார். ஆனால் மாறாக இங்கிலாந்தின் குக், டுராட், பீட்டர்ஸன், பிரையர், ஸ்வான், ஆண்டர்ஸன் ஆகியோர் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறார்கள். இடையிடையே சொதப்பினாலும் அவர்களின் சமீப சாதனை வரலாறு, அது தரும் தன்னம்பிக்கை, அந்த பழக்கம் அவர்களுக்கு நன்றாக இந்திய தொடரின் போது பயன்பட்டது. நாட்கணக்காய் மட்டையாடுவதை இரட்டை சதங்கள் அடிப்பதை குக் கடந்த சில வருடங்களாகவே தன் இரண்டாம் இயல்பாக்கிக் கொண்டுள்ளார். ஒரு நெருக்கடி வரும் போது இந்த வரலாறும் நல்ல பழக்கங்களும் தாம் உங்களைக் காப்பாற்றும்.
இங்கிலாந்து இங்கே வரும் போது அவர்களின் எதிர்காலம் அவ்வளவு இருட்டாக தோன்றியது. ஆனால் ஒரே மாதத்தில் தம் விதியை மாற்றி எழுதி விட்டார்கள்.
முதலில் பீட்டர்ஸன் சர்ச்சை. அதற்குப் பின் பாகிஸ்தானுடன் மூன்று டெஸ்டிகளை தோற்றது. தொடர்ந்து 20-20 உலகக் கோப்பை வீழ்ச்சி. இதனால் பயந்து போன இங்கிலாந்து வாரியம் பீட்டர்ஸனுடன் சமரசம் செய்து அவரை மீண்டும் கொண்டு வந்தது. அணியில் பாதி பேருக்கு பீட்டர்ஸனை பிடிக்காது. குறிப்பாக உதவி அணித்தலைவர் புராடுக்கு. இதனால் இத்தொடரில் அணிக்குள் சச்சரவும் பிரிவினையும் ஏற்படும் என்றார்கள். இதற்கிடையே தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அவர்களின் தலைமை சுழலர் கிரேம் ஸ்வான். “என்னால் இந்த நிலையில் இந்தியாவின் இருபது விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்” என அவர் ஒரு பேட்டியில் சொன்னார். முதல் டெஸ்டுக்கு முன் அவரது குழந்தைக்கு உடல் நலமில்லாமல் ஆக அவர் இங்கிலாந்துக்கு பறந்து விட்டு ஆட்டத்துக்கு முந்தின நாள் திரும்பினார். அத்தோடு அவர்களின் வேக வீச்சாளர் ஸ்டீபன் பின் காயமுற்றார். கடந்த நாற்பது வருடங்களில் இங்கிலாந்து இங்கு டெஸ்டு தொடர்களே வென்றதில்லை என்றது வரலாறு. அதனாலே ஜெப்ரி பாய்க்காட் “இத்தொடரை இங்கிலாந்து நிச்சயம் வெல்லாது. தோற்காமல் இருந்தால் சரி” என்றார். ஆனால் அவரது ஊகம் பொய்த்து விட்டது. இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து எப்படி இங்கிலாந்தால் இரண்டு டெஸ்டுகள் வெல்ல முடிந்தது?
முதலில் அவர்களின் அணிக்கலாச்சாரம் நன்றாக உள்ளது. பீட்டர்ஸன் பிரச்சனையை நன்றாக சமாளித்தது, பட்டேல், டுரோட் போன்ற திணறும் வீரர்களை ஆதரித்து கூட கொண்டு சென்றது ஆகியன இதைக் காட்டுகிறது. இன்னொரு பக்கம் அவர்களின் தயாரிப்பு, கடப்பாடு, தெளிவான திட்டமிடலும் அதனை கராறாக நிறைவேற்றுவதும். முக்கியமாக மூத்த வீரர்களான குக், ஸ்வான், பீட்டர்ஸன் ஆகியோர் பொறுப்பெடுத்துக் கொண்டு அணியை அநேகமான வேளைகளில் காப்பாற்றி மேலெடுத்தது. கடந்த முறை ஆஸ்திரேலியாவை ஆஷஸில் தோற்கடித்ததில் இருந்து இதே பண்புகளைத் தான் இங்கிலாந்தின் வலிமைகளாக டெஸ்டுகளில் கண்டு வருகிறோம். அவர்களும் அணியையும் மேலாண்மையையும் அதிகம் மாற்றவில்லை என்பதால் நிச்சயம் இந்த வெற்றிக்கலாச்சாரத்தை தொடர்வதும் அவர்களுக்கு சாத்தியமாகிறது. ஆனால் இந்திய அணி இப்போது ஒரு மாற்றத்தின் பாதையில் உள்ளது. அதற்கு தெளிவான எதிர்காலத் திட்டங்களும் இல்லை. அதன் கலாச்சாரமும் எதிர்மறையாகவே உள்ளது.
இங்கிலாந்தில் நாம் எந்த வித உடற்தகுதியும் தயாரிப்பும் இன்றி ஏதோ சுற்றுலாவுக்கு போவது போல் சென்றோம். ஆஸ்திரேலியாவில் அணித்தலைமைக்கு சேவாக் உள்ளிட்ட மூத்த வீரர்களிடம் இருந்து போட்டி ஏற்பட்டு ஒரு கலகத்தில் போய் முடிந்தது. தற்போது இந்தியாவில் ஆடும் போதும் சேவாக், காம்பிர் போன்றவர்களின் பொறுப்பில்லாத ஆட்டம் இளைய வீரர்களாக கோலியையும் பாதிப்பதை காண்கிறோம். இன்னொரு பக்கம் சஹீர்கான் ஒரு பந்து தன் திசையில் வந்தால் அதனை நோக்கி ஓடிச் செல்லக் கூட யோசிக்கிறார். அருகில் வந்தால் குனிந்து பொறுக்க தயங்குகிறார். இப்படியானவர்களை அணியில் வைத்திருக்கும் போது அது மொத்த அணிக்கும் மோசமான ஒரு சமிக்ஞையை அளிக்கிறது.
இந்திய மூத்த வீரர்களுக்கு இனிமேல் சாதிக்க ஒன்றும் இல்லை. அவர்களின் ஒரே பணி இளைய வீரர்களுக்கு பயிற்சியும் பாதுகாப்பும் அளிப்பது. ஆனால் அவர்கள் தென்னாப்பிரிக்க மூத்தவீரர்களை போலன்றி சுயநலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக சேவாக், காம்பிர், சச்சின் ஆகியோரில் யாராவது ஆட்டவரிசையில் இறங்கி வர சம்மதித்தால் ரஹானே போன்று புது வீரர் ஒருவரை துவக்க இடத்தில் முயன்று பார்க்க முடியும். தென்னாப்பிரிக்காவில் காலிஸ் இப்போது தன் மூன்றாம் இடத்தை ஆம்லாவுக்கு விட்டுக் கொடுத்து நான்காவதாக தோன்றி ஆடுகிறார். பொறுப்பான வீரர்கள் இப்படித் தான் இருப்பார்கள். அவர்கள் இளைஞர்களின் இடங்களை தம் களைத்துப் போன பிருஷ்டங்களால் மூடி மறைக்க மாட்டார்கள்.
அதேவேளை தேர்வாளர்களால் ஒரேயடியாக மூத்த வீரர்களை விலக்கவும் முடியாது. நமது அடுத்த கட்ட வரிசை அவ்வளவு காலியாக உள்ளது. ஒரே வழி பொறுமை காப்பது தான். அடுத்த தென்னாப்பிரிக்க தொடர் வரை சச்சின் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு முன் அழுத்தம் அதிகமாகி அவர் ஓய்வுறவும் வாய்ப்புண்டு. அது சுயநலமான முடிவாகவே இருக்கும். சஹீர்கானின் நிலைமையும் அப்படியே. ஆஸ்திரேலியா அடுத்து இங்கே ஆடும் தொடரையும் தென்னாப்பிரிக்க தொடரையும் நாம் இழக்கும் பட்சத்திலும் இந்த அணியில் அதிக மாற்றங்கள் இருக்காது. ஒரு காரணம் தோனி. அவர் அணியில் தொடர்ச்சியான மாற்றங்களை பரிசோதனைகளை விரும்புபவர் அல்ல. அவர் இருக்கும் வரை இந்த அணி மாலை நேர நாகேஸ்வரராவ் பார்க் நடைபயணிகள் போலத் தான் இருக்கும். அவர் ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவராக இருக்கும் வரை, குறைந்தது இந்தியா அடுத்த உலகக் கோப்பையை 2015இல் ஆடும் வரை அணித்தலைவராக நிலைப்பார். இடையே எவ்வளவு தொடர்களை அவர் இழந்தாலும் அவரை மாற்றுவது ராகுல் காந்தி அரசியல் தலைவராவது போல ஒரு அநிச்சயமான, கற்பனை செய்யவே திடுக்கிட வைக்கிற ஒன்று தான். அதாவது இன்னும் மூன்று வருடங்கள் நாம் இந்திய அணியில் தொடர்ச்சியான சீரழிவை சகித்து தான் ஆக வேண்டும். இடையிடையே சில ஒருநாள் போட்டிகளில் வெற்றி, ஐபிஎல் என கொஞ்சம் ஆறுதல்கள் இல்லாமல் போகாது.
மூன்று வருடங்களில் உள்ளூர் அளவிலும் சில நல்ல வீரர்கள் தோன்றி சோபிக்க வாய்ப்பு அதிகம். அப்போது ஒரு இளமையான, உடலளவில் வலுவான, சாதிக்கும் ஆவேசம் மிக்க ஒரு புது அணி மற்றும் கண்ணில் நம்பிக்கை மின்னிடும் ஒரு இளைய அணித்தலைவர் நமக்குக் கிடைப்பார். அதுவரை போகிப் பொங்கல் தான். நாற்றத்தை பொறுத்துத் தான் ஆக வேண்டும். 
(ஜனவரி மாத அமிர்தாவில் வெளிவந்தது)

No comments: