Saturday, February 16, 2013

விஷ்வரூபம்: யாரை யார் பழிவாங்குகிறார்கள்?

இஸ்லாமிய எதிர்ப்பு, விஷ்வரூபத் தடை ஆகிய பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டது கமலஹாசனாக தோன்றினாலும் உண்மை அதுவல்ல. கமலுக்கும் ஜெயலலிதா அரசுக்கும் இடையிலான ஈகோ மோதலில் இஸ்லாமிய எதிர்ப்பு ஒரு கொல்லை பொம்மை போல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பில் இருந்து தடை வரை எழுந்த சர்ச்சைகள் மற்றும் நடத்தப்பட்ட கண்டனக் கூட்டங்களின் விளைவாக தமிழக இஸ்லாமியர் பிம்பம் சகிப்பின்மையின், பண்பாடற்ற முரட்டு எதிர்ப்பினுடைய சித்திரமாக தேசிய ஊடகங்களில் திரிக்கப்பட்டதே நடந்துள்ளது. இந்த நீண்ட ஒடுக்குமுறை நாடகத்தின் இறுதிக் காட்சி ஒரு முத்திரை வசனத்துடன் நிறைவடைந்துள்ளது. அது கமல் பேசுவது: “தமிழ்நாடு என்னை துரத்துகிறது. நான் மதசார்பற்ற வேறாதவதொரு மாநிலத்துக்கு அல்லது நாட்டுக்கு எம்.எப்.ஹுசேனைப் போல போய் விடப் போகிறேன்”.
ஆரம்ப கால தமிழ் நவீன சினிமாவின் முக்கிய முகமான கமல் நமது பண்பாட்டு மனதின் ஒரு பகுதி. அவர் இவ்வாறு தான் துரத்தப்படுவதாக தன்னை சித்தரித்ததும் பலதரப்பு மக்கள் வேதனைக்குள்ளானார்கள். கமல் மீது ஒரு தீவிரமான இரக்கவுணர்வு அலையாக எழுந்துள்ளது. சகசினிமா நண்பர்கள், அரசியல்வாதிகள், மீடியா, இணையப்பயனர்கள், பொது ரசிகர்கள் என கூட்டங்கூட்டமாக கமலுக்கு ஆதரவளிக்க திரள்வதை காண்கிறோம். ஒடுக்கப்படுபவர்களின் கண்டனத்துக்கு ஆளான நபர் இறுதியில் தன்னை ஒடுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட அநியாயமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு கலைஞனாக சித்தரிப்பதில் வெற்றி கண்டு விட்டார். “தமிழகம்-என்னை-துரத்துகிறது” பத்திரிகையாள சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு ரியாலிட்டி ஷோ போன்றே இருந்தது. கமல் என்றுமே தனக்கு ஒரு நிரந்தரமான அரசியலோ தரப்போ இல்லாதவர் என மீண்டும் நிரூபித்து விட்டார்.
உண்மையில் கமல் சித்தரிப்பது போல் தமிழகம் மதவெறி பிடித்த, கலைஞர்களுக்கு கருத்துச்சுதந்திரம் அற்ற மாநிலமா என்ன? இல்லை இந்தியாவில் அப்படி எந்த மாநிலமும் இல்லை. கருத்துச்சுதந்திரத்தை மத அமைப்புகளோ பொதுமக்களோ முடக்குவதாக எழும் சித்திரம் போலியானது. இங்கே கருத்துச்சுதந்திரத்துக்கு என்றும் அரசு தான் எதிரியாக் இருந்து வருகிறது. காஷ்மீர், மேற்குவங்காளத்தில் இருந்து தமிழகம் வரை இது தான் உண்மை. சல்மான் ருஷ்டி, எம்.எப்.ஜுசேன், இப்போது ஆஷிஸ் நந்தி மற்றும் கமலஹாசன் ஆகியோரை கண்டித்து தடைசெய்யப் போராடியவர்கள் பல்வேறுபட்ட சிறு தரப்புகளை சேர்ந்த குழுக்கள் மட்டுமே. தீவிர நிலைப்பாடு கொண்ட இச்சிறு குழுக்கள் என்றுமே இந்தியாவின் அசல் பிரதிநிதிகள் அல்ல. தமிழகத்தில் கமலுக்கு எதிராக போராடிய முப்பது சொச்சம் இஸ்லாமிய அமைப்புகள் நிச்சயம் இங்குள்ள இஸ்லாமியரின் பிரதிநிதிகள் அல்ல. பெருவாரியான இஸ்லாமியருக்கு சினிமாவில் தம்மைப் பற்றிய சித்தரிப்பு பிறழ்வானது என்கிற எண்ணம் இருந்தாலும் அவர்கள் அதற்காக ஒரு படவெளியீட்டை முடக்க கோருபவர்களோ கலைஞர்களை நெரிக்க உத்தேசிப்பவர்களோ அல்ல. மேலும் அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு கவலைப்பட ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ள போது உண்மையில் “விஷ்வரூபத்தை” ஒரு அரசியல் பிரதியாக அவர்கள் பார்ப்பார்களா என்பதே சந்தேகம் தான். மேலும் இந்திய வாழ்க்கை என்பதே எண்ணற்ற அபத்தங்களை ஒரு பொருட்டே அல்லாதது போல் “சகித்து” வாழ்வது தானே. இங்கே யாருக்கும் யாரும் “சகிப்புத்தன்மையை” சொல்லித் தர வேண்டியதில்லை.
பொதுவாக நமது சினிமாவில் இஸ்லாமியருக்கு உள்ள சிக்கல் பிரதிநுத்துவப்படுத்தல் தான். இஸ்லாமியர் மட்டுமல்ல தலித்துகள், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என விளிம்புநிலை மக்கள் பற்றின அர்த்தமற்ற தட்டைச் சித்திரங்களைத் தான் ஆண்டாண்டு காலமாய் நம் சினிமா முன்வைத்து வருகிறது. தமிழ் சினிமா ஓரளவு எதார்த்தமயப்பட்டு சேபியார் டோனில் சதா ஒருவாரத்தாடி கொண்ட நாயகனைக் கொண்டு எடுக்கப்படும் சூழலிலும் கூட நம் இயக்குநர்கள் மேற்சொன்னவர்களை அதே போன்று ஒற்றைபட்டையாகத் தான் காட்டுகிறார்கள். ஏனென்றால் தன்னை ஒரு அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்வதில் விருப்பம் கொண்ட கமலஹாசனை உட்பட்டு பல தமிழ் இயக்குநர்களுக்கு சமூக அறிவோ விரிவான தீவிரமான அரசியல் அக்கறையோ கிடையாது. அவர்களின் குறைபட்ட புரிதல் தான் ஹேராம், உன்னைப் போல் ஒருவன், தேவர் மகன், துப்பாக்கி போன்ற படங்களின் சமூகப்பிரச்சனை சித்தரிப்புகளில் தெரிகிறது.
“உன்னைப் போல் ஒருவனில்” தீவிரவாதம் செய்பவர்கள் மதவெறி மற்றும் தேசப்பற்றின்மை காரணமாக அவ்வாறு இயங்குவதாக காட்டினார் கமல். “துப்பாக்கி” படத்தில் அன்றாட மத்திய வர்க்க குடும்ப வாழ்க்கை வாழும் இஸ்லாமியர் பலர் தங்கள் ஹாண்டிலர்களிடம் இருந்து உத்தரவு வரும் வரை சமூகத்தை வெடிகுண்டு வைத்து ரணமாக்கும் வெறியுடன் ஸ்லீப்பர் செல்களாக தவமிருப்பதாக முருகதாஸ் காட்டினார். ”விஷ்வரூபத்தில்” இதே போல் தீவிரவாதிகள் நமாஸ் செய்து விட்டு அல்லாவின் பெயரில் தாக்குதல் நடத்துவதாகவும் தமிழகத்தில் இஸ்லாமியர் லஷ்கர் இ தொய்பா உறுப்பினர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் காட்டுகிறார் கமல். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்லாமியரற்ற பொதுஜனம் ஒரு பதில் வைத்திருக்கிறது. அது தீவிரவாதிகள் இஸ்லாமியர் என்பதும், அவர்கள் மதத்தின் பெயரால் கொல்லுகிறார்கள் என்பது உண்மை தானே என்பதும். இந்த எளிமைப்படுத்தப்பட்ட வாதம் நமது மீடியா உருவாக்கின தட்டையாக சித்திரத்தில் இருந்து திரண்டு வந்த ஒன்று தான். இதே பொதுமக்கள் தான் நமது நகரங்களில் இஸ்லாமியருக்கு வாடகை வீடு தயங்குகிறார்கள்; அவர்களை சதா சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். இஸ்லாமியருக்கும் தீவிரவாதத்துக்குமான தொடர்பு தான் என்ன?
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மேற்குலகுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் ஒரு மூன்றாம் உலகப் போர் நடந்து வருவதை அறிவோம். உலக அளவில் இஸ்லாமிய அந்நியப்படுத்தலின் காலகட்டம் இது. இந்தியாவில் இது பிரிவினைக் கலவரங்களில் துவங்கி காஷ்மீர், பாபர் மசூதி இடிப்பு பிரச்சனைகளில் தீவிரமடைந்தது. அது மட்டுமல்ல இந்திய இஸ்லாமிய சமூகம் புவிசார் அகண்ட இஸ்லாமியத்தின் பகுதியாக தன்னை கருதி பல்வேறு அரசியல் சிக்கல்களின் ஒரு கண்ணியாக தன்னை கருத ஆரம்பித்தது. மும்பை தாக்குதலின் போது பாலஸ்தீனிய அரசியல் சார்பில் சம்மந்தமற்ற ஒரு யூத தம்பதி கொல்லப்பட்டதும், சென்னையில் சமீபமாக அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதும் இந்த உலக சமூக அரசியலின் இருவேறு துருவங்கள் எனலாம். உலக இஸ்லாமிய சமூகத்தின் பிரச்சனைகளுக்கு விரைவில் முடிவு வரப் போவதில்லை. இந்திய முஸ்லீம்கள் தம்மை முழுமுதல் இந்தியர்களாக கருதிடலாமே; அவர்கள் ஏன் இஸ்ரேல், ஈராக, அப்கானிஸ்தான் குறித்து கொதிப்புற வேண்டும்?
யோசித்துப் பார்த்தால் மத அடிப்படையில் உலக சமூகப் பிரக்ஞையாக இஸ்லாமியர் தம்மைப் பார்ப்பதும் இயல்புதான். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்து/வெள்ளாள அடையாளத்தின் கீழ் இந்திய தமிழர்கள் ஒன்றிணைந்து புலிகளை ஆதரிக்கவில்லையா? அதுவும், இலங்கைத் தமிழர் தம்மை இந்திய தமிழரில் இருந்து வேறுபட்டவர்களாக கருதும் பட்சத்திலும் கூட. சல்லிசான சாதி இணக்கம் இங்கு பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ்தேசியவாதிகளிடத்து நீண்டதொரு ஆதரவுக் கண்ணியை தோற்றுவிக்கும் போது இஸ்லாமியர் தம்மை புவிசார் சமூகப் பிரஜையாக கருதுவதிலும் ஒன்றும் வியப்பு கொள்ள வேண்டியதில்லையே!.
புவிசார் இஸ்லாம் குறித்து இங்கு பேசுவதன் காரணம் Innocence of Muslims படத்துக்கும் விஷ்வரூபத்துக்கும் இங்கு ஒரே புகாரின் கீழ் கண்டனப் போராட்டங்கள் நடப்பது தான். இது வெறும் தமிழ் சினிமா பிரச்சனை மட்டுமல்ல தான். “விஷ்வரூபமும்” லஷக்ர் இ தொய்பாவைப் பற்றிப் பேசும் போது அதனை இந்திய இஸ்லாமியருக்கு சம்மந்தமில்லை என்று கருத முடியாது. இங்கு நாம் இந்திய இஸ்லாமியரின் எதார்த்தம் பற்றி மட்டுமல்ல உலக அளவிலான மேற்குலகின் மீதான் இஸ்லாமிய சமூக எதிர்ப்பின் (அதன் வன்முறையும் உள்ளிட்டு) அரசியல் பின்னணியையும் சேர்த்து சரியாக விளங்கிக் கொண்டு சித்தரிக்க வேண்டும். எப்படி விடுதலைப்புலிகளை போராளிகளாக காணும் உரிமை தமிழ்தேசியவாதிகளுக்கு உள்ளதோ அதைப் போன்று லஷ்கர் இயக்கத்தையும் தனதான அரசியல் முறை கொண்ட போராட்ட இயக்கமாக பார்க்கும் உரிமையும் பிறருக்கு உள்ளது. மிகைப்படுத்தாத வரை அனைத்து அரசியல் தரப்புகளையும் அதனதன் நியாயத்துடன் நமது சினிமா காட்ட முயல வேண்டும்; மீடியா புரிய வைக்க எத்தனிக்க வேண்டும்.
இப்போது இந்திய தீவிரவாதத்துக்கும் இஸ்லாமியருக்குமான உறவுக்கு வருவோம். இந்தியாவில் தீவிரவாதத்திற்கு துணை போகும் இஸ்லாமியர் மிகச்சிறு பகுதி தான். அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களோ, சூழல் காரணமாய் வன்முறைக்குட்பட்டவர்களோ, சமூகத்தின் மீதான பழிவாங்கல் உணர்வால உந்தப்பட்டவர்களோ ஆக இருக்கலாம். ”இஸ்லாமிய சமூகத்தின் துணையின்றி இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த முடியுமா?” எனக் கேட்கும் பொதுஜனமும் “விஷ்வரூபத்தை எதிர்க்கும் இஸ்லாமியரும் தீவிரவாதிகளே என்று மறைமுகமாக புலனாவதாக” தெரிவித்த பாரதிராஜாவும் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. இஸ்லாமிய சமூகம் முழுமையாக தீவிரவாதிகளை ஆதரித்திருந்தால் இந்தியா இன்று பாகிஸ்தான் அல்லது அப்கானிஸ்தானைப் போன்று தான் இருந்திருக்கும். உதிரியான செயல்பாடுகளைக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தை அளவிடுவது முட்டாள்தனமான போக்கு. இந்தியா அமைதியான தேசமாக இருப்பதற்கு இங்குள்ள பொறுப்பான இஸ்லாமிய பிரஜைகளும் ஒரு காரணம்.
இந்தியில் வந்த A Wednesday படத்தை கமல் இங்கு மறு ஆக்கம் செய்தார். இப்படம் தீவிரவாதத்தின் அரசியலை முழுக்க தவறாக காட்டும் ஒரு எளிய மசாலா படம் மட்டுமே. மக்கள் ஏன் தீவிரவாதம் நோக்கி வருகிறார்கள், அதன் அரசியல் சமூகப் பின்னணி என்ன என்பது பற்றி எல்லாம் இந்த படத்துக்கு அக்கறை இல்லை. இன்று மத்திய வர்க்கத்திடம் உள்ள கையாலாகாத, வஞ்சிக்கப்பட்ட உணர்வை சுரண்டுகிற ஒரு வணிக முயற்சி. இதை தமிழில் கொண்டு வர விரும்பிய கமல் ஏன் இந்தியில் வந்த அனுராக் காஷ்யப்பின் Black Friday படத்தினால் கவரப்படவில்லை என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். அப்படம் தான் மும்பை தாக்குதலில் இஸ்லாமியரில் சிலர் பங்களித்ததன் அசலான எதார்த்தமான காரணங்களைப் பேசுகிறது. விளிம்புநிலை இஸ்லாமியர் எவ்வாறு மேமனின் கைப்பாவைகளாக ஆயினர், மேமன் எவ்வாறு தனது கடைகளும் சொத்துக்களும் அயோத்தியா கலவரத்தின் போது அழிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த தாக்குதலில் ஈடுபட்டார், இதற்கு தன் தொடர்பு வலையை பயன்படுத்தும்படி எவ்வாறு தாவூத் இப்ராஹிம் வற்புறுத்தப்பட்டார் ஆகிய பல்வேறு கோணங்களை இப்படமும் இதே பெயரிலான ஹுசைன் சைதியின் புத்தகமும் விவரிக்கின்றன. இப்படத்தில் தீவிரவாதிகள் அச்சமும் குழப்பமும் மிக்கவர்களாக மாறி தமது ஹாண்டிலர்களால் கைவிடப்பட்டு நாடெங்கும் போலிசாரால் துரத்தப்படுவதன் காத்திரமான சித்திரமும் வருகிறது. தீவிரவாதிகள் ரத்தமும் சதையுமாக நம்முன் வருகிறார்கள். தீவிரவாதிகள் தொடர்ந்து ஏதோவொரு சூழ்ச்சியின் பகுதியாக மாறி தம் உயிரையும் வாழ்வையும் பணயம் வைத்து ஒரு ஆட்டத்துக்கு தயாராகிறார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் இதற்காக இரங்கவும் செய்கிறார்கள். காஷ்யபின் இந்த கூர்மையான பார்வையும் மனிதநேய சித்தரிப்பும் நம்மூர் கமலஹாசன், முருகதாஸ்களிடம் இல்லை என்பதே உண்மையில் வருந்தத்தக்கது.
இந்த பத்திரிகையாள சந்திப்பில் மீண்டும் மீண்டும் கமல் தன்னை ஒரு கலைஞனாக அல்லாமல் வியாபாரியாகவே அடையாளப் படுத்திக் கொண்டார். நான் எடுத்த படம் என்றல்ல நான் உருவாக்கிய பண்டம் என்றே அவர் விஷ்வரூபத்தை குறிப்பிடுகிறார். பிரக்ஞைபூர்வமாக இதை செய்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். ஒரு படத்தை வெறும் அர்த்தமற்ற பொழுதுபோக்கு என்றும் அடையாளப்படுத்தித் தான் பொதுவாக சினிமாக்காரர்கள் அதிலுள்ள அரசியல் பிரச்சனைகளை பொறுப்பெடுத்து விவாதிப்பதை தவிர்க்கிறார்கள். அதாவது கலைக்கு அரசியல் இல்லை என்னும் இடத்துக்கு வருகிறார்கள். கமல் இன்னும் ஒரு படி சென்று தனது வெறும் விற்பனைப் பண்டம் எனும் போது அதன் தார்மீகப் பொறுப்பில் இருந்து தன்னை முழுக்க விடுவித்துக் கொள்கிறார். ஆனால் அது அவர் நினைப்பது போல் அத்தனை சுலபமல்ல.
தீவிரவாதம் எனும் மிகப்பெரிய அரசியல் சமூகப் பிரச்சனையை எடுத்துக் கொள்ளும் போது அதை முழுமையாக மனிதநேயத்துடன் புரிந்து கொள்ள மட்டுமல்ல கமல் தயங்குவது. இப்பிரச்சனையில் ஜெயா டி.விக்கு ஒரு கோடிக்கு சாட்டிலைட் உரிமைகள் விற்கத் தயங்கியதற்கும், ப.சிதம்பரத்தைப் பற்றி அபத்தமாய் உளறியதற்கும் சேர்த்து தான் ஜெயலலிதாவால் கடுமையாக ஒடுக்கப்பட்ட உண்மையையும் சொல்லத் தான் அவர் தயங்குகிறார். பதிலுக்கு அவர் பழியை மொத்தமாக இஸ்லாமிய அமைப்புகள் மீது போடுகிறார். இதே இஸ்லாமிய அமைப்புகள் “துப்பாக்கியையும்” தான் எதிர்த்தார்கள். ஏன் அப்படம் மட்டும் தடை செய்யப்படவில்லை? தன்னை இஸ்லாமிய அமைப்புகள் தமது சகிப்பின்மை பிரச்சாரத்தால் தமிழகத்தில் இருந்து துரத்துவதாய் ஒரு பொய்ச் சித்திரத்தை தோற்றுவித்து கமல் தன் முகத்தையும் ஜெயலலிதா முகத்தையும் சேர்த்து தான் காப்பாற்றிக் கொள்கிறார்.
ஜெயலலிதாவுக்கும் கமலுக்குமான மோதலில் இருவருக்கும் ஒரு பொதுக் கேடயம் தான் – இஸ்லாமிய சமூகம்.

No comments: