Friday, February 1, 2013

வசவதா எனும் இளைய கங்குலியும் சச்சின் எனும் குட்டிப் பையனும்

26-01-13அன்று ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள். சௌராஷ்டிரா vs மும்பை. மும்பை வழக்கம் போது இறுதிப்போட்டி எதிராளியை நாலாய் மடித்து வாயில் போட்டுக் கொண்டது. சௌராஷ்டிரா முதலில் மட்டையாடி நூற்று நாற்பத்து எட்டுக்கு ஆட்டமிழந்தது. இந்த நிலச்சரிவில் ஒரே ஒருவர் தனியாக நின்று சமநிலையுடன் ஆடினார். அவரது ஆட்டம் நிறைய கங்குலியையும் கொஞ்சம் முன்னாள் வங்கதேச அணித்தலைவர் ஹசனையும் கலந்தது போல இருந்தது. அவர் பெயர் வசவதா.


கண்ணாடி போட்டு இளமையான முகத்துடன் வீட்டுப்பாடம் செய்யும் ஒரு சிறுவனின் மனக்குவிப்புடன் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவருக்கான சரளத்துடன் ஆடினார். ஒவ்வொரு முறையும் அவர் தடுத்தாடும் போது கூட பந்தை மட்டையில் முழுவதுமாக பட்டு விழுவது பார்க்க பார்க்க இந்த ஆள் தனி ரகம் என்று தோன்றியது. தளர்வான நிலையமைதி, லகுவான காலாட்டம் என அவர் பலவகையில் கவர்ந்தார். முக்கியமாக கங்குலியைப் போன்றே தோன்றினார். கங்குலியைப் போன்று துல்லியமாக பந்தை களத்தடுப்பாளரிடையே தூரிகை இழுப்பது போல் விரட்டவில்லை என்றாலும் கவர் பகுதியை நோக்கிய ஷாட்கள் கங்குலியின் மாந்திரிகத்தை கொண்டிருந்தன.

இப்படியான டைமிங்கில் கில்லாடியான மட்டையாளர்களை பார்ப்பது இப்போது இந்திய உள்ளூர் அளவில் கூட அரிதாகி வருகிறது. இதே சௌராஷ்டிராவை சேர்ந்த புஜாராவோ தில்லியின் தவானோ கூட பந்தை வலுவாக அடிக்கத் தான் முனைகிறார்கள். ஒருநாள், டி20 பாதிப்பு டைமிங்கை காணாமல் அடித்து விட்டது.

சௌராஷ்டிரா மும்பைக்கு தகுதியான அணியே அல்ல. ஆனால் இது தான் தற்போதைய ரஞ்சி அணிகளின் நிலை. ராஜஸ்தான், பரோடா, உத்தர்பிரதேஷ், சௌராஷ்டிரா போன்ற சின்ன சின்ன அணிகள் தற்போது உள்ளூர் சூழலை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டன. இதில் கவனிக்க வேண்டிய விசயம் இந்த அணிகள் ஒரு கோப்பையை வென்றவுடன் காணாமல் போய் விடுகின்றன என்பது. ராஜஸ்தானோ சௌராஷ்டிராவோ தொடர்ந்து தரத்தை தக்க வைக்கும் அளவுக்கு வலுவானவை அல்ல. தற்காலிகமாக அவர்கள் கூட்டாக ஆடி சில ஆட்டங்களில் பெரிய அணிகளை முறியடிக்கின்றன. பொதுவாக சராசரி வீரர்களுக்கு அணிக்காக ஒன்றிணைத்து உழைக்க வேண்டிய ஒரு தேவை ஏற்படுகிறது. அவர்கள் அவ்வாறு செய்து தான் வெற்றியை ஈட்ட முடியும். அவர்களுக்கு தம்மால் நட்சத்திரமாகவோ தேசிய அணி, ஐ.பி.எல் அணியில் நுழையவோ முடியாது என தெரியும். அதனால் அவர்களுக்கு பஞ்சாப், தில்லி, கர்நாடகா போன்ற அணி வீரர்களுக்கு உள்ள கவனச்சிதறல் ஈகோ சிக்கல்கள் கிடையாது.
இன்னொரு காரணம் இந்த அணிகள் கடந்த சில வருடங்களில் ராஜஸ்தான் பரோடா செய்தது போல பிற அணிகளின் மூத்த வீரர்களை freelance வீரர்களாக தம் அணியில் சேர்த்துக் கொண்டதும் தான். ஆகாஷ் சோப்ரா, முஜும்தர் போன்ற பலர் இவ்வாறு எளிய அணிகளுக்கு வலு சேர்க்கிறார்கள். கோப்பையை வென்ற பிறகு இவர்கள் விலகியதும் இந்த அணிகள் வீழ்ந்து விடும்.
மூன்றாவதும் ஆக முக்கியமானதுமான காரணம் தில்லி, மும்பை, கர்நாடகா போன்ற அணிகள் கடந்த பத்து வருடங்களில் மெல்ல மெல்ல மூத்த வீரர்களை இழந்து பலவீனமாகி விட்டது. கர்நாடகா அணியில் இருந்து தொண்ணூறுகளில் ஆறு ஏழு வீரர்கள் இந்திய அணியில் ஆடிக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த அணி உருத்தெரியாமல் ஆகி விட்டது. வலுவான கட்டமைப்பு வசதி இருந்தாலும் இந்த அணிகளால் அனுபவஸ்தர்களின் ஓய்வை சமாளிக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி சின்ன அணிகள் முன்னுக்கு வந்தன. அவர்களின் வெற்றிகள் ஒருவிதத்தில் இன்று உள்ளூர்ச் சூழலில் உள்ள தரமின்மையை தான் சுட்டுகின்றன. எளிய அணிகளுக்கு சவாலளிக்கும் நிலையில் பெரிய அணிகள் இல்லை.
தேர்வாளர்களும் இந்த சின்ன ரஞ்சி கோப்பை சாம்பியன்களை ஏதோ குடுகுவென ஓடி வந்து நாற்காலியில் அமர்ந்த எலிகளை போலத் தான் பார்க்கிறார்கள். விளக்கு போட்டதும் அவை பழைய படி பொந்துக்குள் ஓடி விடும் என அனைவருக்கும் தெரியும். அதனால் தான் ரஞ்சி ராம்பியன் அணிகளில் இருந்து யாரும் சுலபத்தில் இந்திய அணிக்கு தேர்வாவது இல்லை. அப்படியான தகுதியிலானவர்களும் இத்தகைய சாம்பியன் அணிகளில் குறைவு.
இன்று இந்திய அணியில் பல சின்ன அணிகளில் இருந்து வீரர்கள் இடம் பிடித்து ஆடுவது நமக்குத் தெரியும். ஆனால் இதன் பொருள் இவர்கள் ஆடின அணிகள் வளர்ந்து விட்டது என்பதல்ல. சௌராஷ்டிராவை எடுத்துக் கொள்ளுங்கள். புஜாரா தனி நபராகவே தனது அணியை விட பல மடங்கு உயர்ந்து நிற்கிறார். இந்திய அணி கடந்த சில வருடங்களில் வீழ்ச்சி அடைந்து வருவதற்கும் இந்த உள்ளூர் சூழலின் சோனித்தன்மை ஒரு காரணம். பதில் வீரர்களை ஏற்றுமதி செய்வதற்கு ரஞ்சி அணிகளுக்கு சக்தி இல்லை. விளைவாக ரஞ்சி வெல்லாத சின்ன அணிகளில் இருந்து வீரர்கள் தேர்வாகிறார்கள். தோனி, ரெய்னா, புவனேஷ்வர் குமார், பிரவீன் குமார் ஆகியோர் நல்ல உதாரணம். உத்தர் பிரதேசமும், ஜார்கண்டும் இவர்கள் அணியில் நுழையும் போது கோப்பையை வெல்லாத அணிகளே.
ஆனாலும் பலவீனமாகி விட்ட மும்பை அணி எப்படி கடந்த பத்து வருடங்களில் கூட நிமிர்ந்து நின்று போராடி வெல்கிறது என்பது வியப்பு தான். மும்பை அணி இது வரை 39 தடவை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. இந்த வரலாறு தரும் தன்னம்பிக்கையும் பொறுப்பும் கடப்பாடும் அபாரமானது. சொல்லப் போனால் ஒரு மும்பை அணி வீரருக்கு தன் அணி மீதுள்ள கடப்பாடு இந்திய அணி வீரர்களுக்கு உள்ளதை விட பலமடங்கு அதிகமானது. மும்பை தோற்பது என்பது ஒரு வீரருக்கு தன்னுடைய வீடு பற்றி எரிவதற்கு சமானமானது. 92இல் ஹரியானா 2 ஓட்ட வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்த போது அப்போது மும்பைக்காக ஆடின வெங்சார்க்கர் எப்படி அரைமணிநேரம் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்து அழுதார் என்று இன்றும் மும்பை ஆதரவாளர்கள் நினைவு கூர்கிறார்கள். சச்சின் ஒவ்வொரு முறையும் தன் அணி ரஞ்சி இறுதிப் போட்டிக்குள் நுழையும் போது எப்படியாவது நேரம் ஒதுக்கி சிரமம் பார்க்காமல் மும்பைக்காக ஆடி விடுவார். முன்னர் ஒருமுறை சச்சின் ஆடுவதற்காக தமிழ்நாடுனான மும்பையின் ரஞ்சி இறுதிப் போட்டியின் தேதியை கூட தள்ளி வைத்தார்கள். அன்றைய ஆட்டத்தில் சச்சின் சதம் அடித்து மும்பையை காப்பாற்றினார். அல்லாவிட்டால் தமிழ்நாடு முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றிருக்கும். இம்முறையும் நாற்பது வயதில் சச்சின் சிரமம் பாராமல் இறுதிப் போட்டியில் மும்பைக்காக ஆடுகிறார். அடிக்கடி மைதானத்தில் கூட்டம் போட்டு இளைய வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். எத்தனையோ சர்வதேச ஆட்டச்சூழல்களைப் பார்த்த சச்சினுக்கு இந்த ஆட்டம் வெறுமனேயான ஒரு உள்ளூர் ஆட்டம் அல்ல. அவருக்கு மும்பை அணி மீதுள்ள கடப்பாடு மிக ஆழமானது. சச்சின் மும்பைக்கு ஆடும் போது ஒரு குட்டிப் பையனைப் போல் உற்சாகம் கொள்கிறார். மாறாக சேவாகை பாருங்கள். ஒருநாள் அணியில் இருந்து விலக்கப்பட்ட பின் அவருக்கு வாய்ப்பிருந்தும் அவகாசமிருந்தும் அவர் தில்லி அணிக்காக ஒருமுறை கூட சமீபத்தில் ஆடவில்லை. ஒருமுறை அவர் கோபித்துக் கொண்டு தில்லி அணியில் இருந்து விலகப் போவதாக கூட மிரட்டினார். சேவாகின் அணி உணர்வு அணி தனக்காக ஆடுகிறதா என்பதைப் பொறுத்தது தான்.
ஐ.பி.எல், சேம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நீங்கள் காணும் மும்பை அணி இதுவே அல்ல. அசலான மும்பை அணி நட்சத்திரங்கள் இல்லாத அணி. அசலான மும்பை அணியை நீங்கள் தனது பாரம்பரிய அந்தஸ்தை பாதுகாக்க போராடும் இந்த போட்டிகளில் தான் காண முடியும். இந்திய அணி வீரர்கள் கூட இவ்வளவு ஆவேசமாக ஆடுவார்களா என நீங்கள் வியப்படைவீர்கள். இந்திய அணியிலும் கூடத் தான் சச்சின் இவ்வளவு ஈடுபாட்டுடன் பந்து வீச்சாளருக்கு பந்தைப் பொறுக்கிக் கொடுத்து அறிவுரை சொல்லி ஊக்கப்படுத்துவார். மிச்ச பேர் எல்லாம் எனக்கென்ன …வா போச்சு என பின்னால் தட்டிக் கொண்டு நகத்தைக் கடிப்பார்கள். ஒருவேளை இந்தியர்களால் என்றுமே பிராந்திய அடையாளத்தை கடந்து ஒருமித்து ஆட முடியாதோ? இந்த சின்னத்தனம் நம் ரத்தத்திலே இருக்கிறதோ?

No comments: