Monday, January 7, 2013

தில்லி கற்பழிப்பு: ஒழுக்க மனநிலையின் பின்னுள்ள குரூரம்
16 டிசம்பர் அன்று தில்லியில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் 23 வயது மாணவி ஒருவர் கற்பழிப்பக்கப்பட்டு இரும்புக்கம்பியால் கடுமையாக தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட சம்பவம் தேசத்தை ஒட்டுமொத்தமாக கொந்தளிக்க வைத்துள்ளது. அப்பெண்ணின் பாலுறுப்பு சிதைந்து உருமாறி விட்டது. கம்பியால் குத்தப்பட்ட அவளது குடல் அழுகி, மாரடைப்பு நேர்ந்து அப்பெண் சிகிச்சை பயனளிக்காமல் உயிர் விட்டாள்.
எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள் என பலரும் கண்டித்து பேசியதோடு நில்லாமல் குற்றவாளிகளை தூக்கிலிடக் கேட்டுள்ளனர். இன்னொரு புறம் கிரண்பேடி காவல் துறையினரை எண்ணிக்கை அளவில் வலுப்படுத்தவும் சமூக காவல்துறையினரை ரோந்துக்கு அதிக அளவில் பயன்படுத்தவும் கோரியுள்ளார்.
ஆனால் இப்பெண் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட போது பேருந்து இதே காவல்துறையினரின் ஐந்து சோதனை முனைகளை எந்த தடையும் இன்றி சுலபத்தில் கடந்து சென்று போய்க் கொண்டிருந்தது. இக்குற்றத்திற்கான சமபொறுப்பு இதனை தடுக்காத தில்லி போலிசாருக்கும் உண்டு. அதே போன்று இன்று பல பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு போலிசாரின் மறைமுக ஆதரவும் ஒரு காரணம்.
தில்லியில் ஷீலா தீட்சித்தின் வீட்டு முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மனித உரிமை அமைப்புகள், பெண்ணுரிமை அமைப்புகள், மேல்மத்திய உயர்வர்க்க சமூக ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இந்தியா முழுக்க இந்த போராட்டம் பரவி வருவதாகவும் சேதி உள்ளது.
மத்திய, உயர்வர்க்கங்களை மீண்டும் ஒரு சமூக நீதிக்காக இணைத்துள்ள இச்சம்பவம் நிச்சயம் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் உள்ளிட்ட ஊழல் போர் நடந்த காலகட்டத்தை நினைவுபடுத்துகிறது. ஆனால் பிரச்சனைக்கு சரியான தீர்வு என்னவென அப்போதும் இப்போது போராடும் அமைப்புகள், மீடியா, மக்களுக்கு தெரியவில்லை. ஆனாலும் தடாலடியாக ஒரு தீர்ப்பை அதன் வழி ஒரு பெரும் மாற்றத்தை அவர்கள் கோருகிறார்கள்.
ஒரு பக்கம் தூக்குத்தண்டனை கோரிக்கை என்றால் மற்றொரு பக்கம் கற்பழிப்பவர்களின் விதைப்பையை அகற்றும் தண்டனையை வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் ஒன்றி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காமினி லு பரிந்துரைத்துள்ளார். ஊடகங்களிலும் இந்த கொடூர தண்டனைக்கு ஆதரவு பெருகி வருகிறது. அமெரிக்காவில் சில மாகாணங்களில் இத்தண்டனை நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்படி காயடிக்கப்பட்டவர்களில் 17 சதவீதத்தினர் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாய் ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இப்படி இருக்கிற பட்சத்தில் ஏன் காயடிக்கும் தண்டனைக்கும் இத்தனை ஆதரவு? இங்கு நாம் கவனிக்க வேண்டியது இத்தண்டனையின் உள்ள காட்சிபூர்வ கொடுமை மற்றும் வன்மத்தை தான்.
விதைப்பையை அகற்றுவது என்பது குற்றவாளியின் கை காலை வெட்டுவதைப் போன்றது. நமது பண்டைய சமூகங்களில் பொதுவில் கழுவேற்றுவது, ஆசனவாயில் சூலத்தை ஏற்றிக் கொல்வது போன்ற தண்டனைகள் இருந்தன. இத்தண்டனைகளில் நியாயம் வழங்குவதை விட மக்களுக்கு அச்சம் ஏற்படுத்துவது பிரதான நோக்கமாக இருக்கும். சகிப்புத்தன்மையும் கருணையும் அற்றதாக மாறி வரும் நம் இந்திய சமூகம் இப்படியான கொடூர தண்டனைகளை ரசிக்கும் மனநிலைக்கு வந்து விட்டதையே இது காட்டுகிறது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை உலகம் முழுக்க நடைபெறுகிறது. இந்தியாவிலும் மிக அதிகமாக நடைபெறுகிறது. 65 நாடுகளின் பட்டியலில் நாம் 56வது இடத்தில் இருக்கிறோம். 54 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் இங்கு கற்பழிக்கப்படுகிறாள். தில்லியில் தான் இத்தகைய குற்றங்கள் மிக அதிகம். 2011 புள்ளி விபரப்படி 572. ஆனால் ஆங்கில ஊடகங்கள் சித்தரிப்பது போல இந்தியாவில் உள்ள பாலியல் வன்முறைக்கு திட்டமிட்ட ஆணாதிக்க அஜெண்டா ஏதும் இல்லை. பெண்களை இனி வெளியே செல்லவோ வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது என திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றி இங்கே கற்பழிப்புகள் நிகழ்வதில்லை. ஒரு பெண்ணை நள்ளிரவில் மட்டுமல்ல தனியாக பட்டப்பகலில் பொதுவெளியில் காணும் போது கூட ஒரு இந்திய ஆணின் மனதில் அவள் ஒழுக்கங்கெட்டவள் என்கிற எண்ணம் எளிதில் தோன்றுகிறது. இது தான் ஆதாரப்பிரச்சனை. ஒரு பெண் இரவு வாழ்க்கையை அனுபவிப்பதில் சாலையிடங்களில் புழங்குவதில் எந்த ஒழுக்ககேடும் இல்லை என பாரம்பரிய இந்திய மனதுக்கு எளிதில் புரிவதில்லை.
நம் சமூகம் பெண்களுக்கான அந்தஸ்தை மிக நுட்பமான வகையில் பிரித்து வைத்திருக்கிறது. எல்லா பெண்களும் காமப்பொருளாக பார்க்கப்படுவதில்லை. குழந்தை அல்லது கணவனுடன் வரும் குடும்பப் பெண்கள், கூட்டமாக பயணிக்கும் பெண்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு எளிதில் ஆளாவதில்லை. ஆனால் ஒரு காதலனுடன் செல்லும் பெண் அல்லது இரவுப்பணி முடித்து வரும் பெண்கள் நம் ஆண்களின் கண்ணுக்கு ஒரு பாலியல் தொழிலாளியைப் போன்று தோன்றுகிறார்கள். பிரச்சனை எங்கிருக்கிறது?
நாம் ஒழுக்கப் பிரக்ஞை இல்லாதவர்கள் தாம் கற்பழிப்பு உள்ளிட்ட பெண் ஒடுக்குமுறைகளில் ஈடுபடுவதாக நம்புகிறோம். ஆனால் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின்னால் ஒழுக்க விழுமியங்கள் தாம் செயல்படுகின்றன. இந்திய ஆண் மனம் கராறான ஒழுக்க அளவுகோல்களைக் கொண்டது. நம் ஆண்கள் முதலில் ஒரு பெண்ணை ஒழுக்கங்கெட்டவள் என தீர்மானிப்பார்கள், பிறகு குற்றச்செயலில் இறங்குவார்கள். தில்லி கற்பழிப்பில் கூட குற்றவாளிகளுக்கு பெண்களை மதிக்கக் கற்றுத்தராத குடும்பத்தையும் கல்வி அமைப்பையும் சீர்படுத்த வேண்டும் என் சில அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் நகைமுரணாக அப்பெண்ணை அவர்கள் கற்பழிக்க எத்தனித்ததன் முதல் காரணமே அவள் குடும்பப்பெண் இல்லை என்பது தான். அப்பெண் தன் காதலனுடன் இரவு ஒன்பதரைக்கு படம் பார்த்து விட்டு பேருந்தில் ஏறுகிறார். ஓட்டுநரும் நண்பர்களும் அவளிடம் “இரவு தனியாய் ஒரு ஆணுடன் வருகிறாயே உனக்கு ஒழுக்கமில்லையா” என்கிற வகையில் தான் வம்பு பண்ண துவங்கி இருக்கிறார்கள். மனதளவில் இவர்களுக்கு இந்த ஒழுக்க விழுமியம் தான் தீமைக்கான ஒரு நியாயத்தையும் வழங்குகிறது.
உதாரணமாக குவாஹாத்தியில் 17 வயதுப் பெண் ஒருவள் கும்பலாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற சந்தர்பத்தில் அப்பெண் நவீன கிளர்ச்சியான ஆடையில் பப்புக்கு சென்று விட்டு வந்தது தான் குற்றத்துக்கு காரணம் என பலரும் நியாயப்படுத்தினர். குறிப்பாக கர்நாடகாவின் குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை (!) அமைச்சர் சி.சி பட்டேல் பெண்கள் தம்மை பாதுகாக்க கவர்ச்சியான ஆடைகளை தவிர்க்க வேண்டும் என அறிவித்தார். இதே அமைச்சர் தான் பின்னர் சட்டசபையில் விவசாயிகளின் வறுமை குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது செல்போனில் ஆபாச காணொளி பார்த்து மாட்டிக் கொண்டார். நம்மூரில் பாலியலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களில் இருந்து அக்குற்றங்களை செய்பவர்கள் வரை கராறான ஒழுக்கவாதிகள் மற்றும் ஒழுக்கக்காவலர்களாக இருக்கிறார்கள்.
இலங்கை, காஷ்மீரில் இருந்து வாச்சாத்தி வரை நமது இராணுவமும், போலீசும் இவ்வாறு எதிரிகள், குற்றவாளிகள், ஒழுக்கமற்றவர்கள் என முத்திரை குத்தித் தான் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். சாலையிலோ தெருவிலோ அல்லது மக்கள் கூடும் கடற்கரையிலோ தனியாக நடந்து செல்லும் பெண்ணுக்கும் இதே குற்றப்பத்திரிகை தயாரித்து விட்டு தான் நம் ஆண்கள் பாலியல் குற்றங்களை துவங்குவார்கள்.
இந்த “ஒழுக்கங்கெட்ட பெண்களின் வரிசையில்” தான் அடுத்து வேலை பார்த்து தாமதமாகவும் இரவு ஷிப்ட் செய்பவர்களுமான இளம் தலைமுறைப் பெண்களும் வருகிறார்கள். வேலைக்களைப்பைப் போக்க, பொழுதுபோக்க, சமூகமாக்கலில் ஈடுபட டான்ஸ் கிளப், பப்புகளுக்கு வரும் பெண்கள் அடுத்து வருகிறார்கள். இவர்கள் குறைந்த ஆடை அணிவதும் இரவில் தென்படுவதும் பாலியல் குற்றங்களைத் தூண்டுவதாக கூறும் பலர் இங்குள்ளார்கள். இந்த பலரில் போலீசும் அடக்கம்.
கடந்த பதினைந்து வருடங்களில் தாம் உலகமயமாக்கம் காரணமாக பெண்களுக்கு உரிமை, சமத்துவம், நவீனத்துவம் ஆகியவை வாய்த்தன. எத்தனையோ குடும்பங்கள் பெண்களை இரவுப்பணிக்கு பி.பி.ஓக்களில் அனுப்பி வறுமை கடன் தொல்லைகளில் இருந்து தப்பித்தன. ஒரேயடியாக அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. பெண்களுக்காக அல்ல பெண்கள் கொண்டு வந்த உயர் வாழ்க்கைத்தரத்துக்காகத் தான் அவர்களின் சமத்துவம் பொறுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நாட்டின் ஒரு பெரும்பகுதியினருக்கு பெண்கள் இரவில் ஏன் தனியாக சென்று சம்பாதிக்கிறார்கள், இரவில் ஏன் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என விளங்கவில்லை. இதைப் புரிந்து கொள்வதற்கான கலாச்சார அறிவும் புரிதலும் அவர்களுக்கு இல்லை.
இப்போது நம் முன் உள்ள தேர்வுகள் இந்த தேசத்து ஆண்களுக்கு உலகமயமாக்கத்தால் இந்த நாடு எப்படி மாறி வருகிறது என பண்பாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சிவில் அமைப்புகளை பரவலாக ஏற்படுத்தி அதன் மூலம் சமூகப்போராட்டங்களை முன்னெடுப்பதுமே. இப்போதும் இத்தகைய போராட்டங்களே சமூக நீதிக்கான அழுத்தத்தை அரசுக்கு சற்றேனும் அளித்து வருகின்றன. அறுபதுகளில் அமெரிக்காவில் நிகழ்ந்தது போல இங்கும் ஒரு சிவில் உரிமை புரட்சி நிகழ்ந்து நன்மை விளையும் என எதிர்பார்ப்போம்.
(அந்திமழை ஜனவரி 2013 இதழில் வெளியான கட்டுரை)

No comments: