Saturday, January 26, 2013

அடிப்படைவாதத்தின் கையில் தமிழ் இஸ்லாம்

இந்திய இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில் பி.ஜெ.பி மட்டுமல்ல தவ்வீத் ஜமாத் போன்ற வஹாபிய அமைப்புகளும் தீங்கானவை என்பதை சமீப காலத்தில் உணர்ந்து வருகிறோம். எப்படி இந்து மதத்துக்கு ஆச்சாரமான ஆதிக்க சாதிகள் எதிரோ அதைப் போன்று இஸ்லாத்துக்கும் இதே பிராமணியத்துடன் இயங்கும் வஹாபிகளும் எதிர் தான். குறிப்பாக நவீனம், வளர்ச்சி ஆகியவற்றுக்கும் கல்வி பண்பாட்டு மேன்மைக்கும் ஊறு விளைவிப்பவையாக இந்த சக்திகள் தத்தமது சமுதாயத்துக்கு உள்ளன.

யோசித்துப் பார்த்தால் தூய மதவாதத்தை ஏற்கும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆகவோ ஜமாத் ஆளாகவோ இருக்கலாம். இதில் சிக்கல் இந்த அமைப்புகள் தம் சமூகத்தை இன்று உலகம் செல்லும் திசைக்கு எதிராக திருப்புகின்றன என்பது தான். இவை பெண்களுக்கு, சிறுபான்மையினருக்கு, வளர்ச்சிக்கு, ஜனநாயகத்துக்கு, தனிமனித சுதந்திரத்துக்கு, பகுத்தறிவுக்கு எதிரான சிந்தனைகளை கொண்டுள்ளன. வரலாற்றில் மிகப்பெரும் அழிவுகளை அடிப்படைவாத கோட்பாடுகள் தாம் ஏற்படுத்தி உள்ளன என்பதை அறிவோம்.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வஹாபி சிந்தனை மேலாதிக்கம் பெற்று வருவதை காண்கிறோம். இவர்களுக்கு எதிராக முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் இச்சமூகத்துக்கு உள்ளே பலர் உள்ளனர். இவர்களை ஜமாத் அமைப்புகள் கடுமையாக ஒடுக்குகின்றன. எப்படி முன்னர் நிலவுடைமை சமூகத்தில் சாதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் விலக்கி வைக்கப்பட்டார்களோ அதே போல் இன்று இந்த வஹாபிகளால் எதிர்குரலாளர்கள் மூர்க்கமாக “ஜாதிபிரஷ்டம்” செய்யப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டு எதிராக கூட்டங்களும் பிரச்சாரங்களும் நடத்தப்படுகின்றன. முன்னர் ஹெச்.ஜி ரசூல் இஸ்லாத்தில் மது அனுமதிக்கப்படுகிறதா என்ற விவாதத்தை ஏற்படுத்தியதற்காக கடுமையாக தாக்கப்பட்டார். இத்தனைக்கும் அன்று ரசூலை கண்டித்து விமர்சகர்கள் தனிவாழ்க்கையில் மொடக்குடிகாரர்கள். ஆனால் குரானை அவர் பழித்து விட்டதாக போலி குற்றச்சாட்டு வைத்து அவரை சமூகவிலக்கம் செய்யப்பார்த்தார்கள். எதிர்ப்பாளர்களில் ரசூலின் கட்டுரையை மிகச்சிலர் தான் படித்தார்கள். சல்மான் ரஷ்டியை எத்தனை வஹாபிகள் வாசித்திருப்பார்கள்? இப்போது மனுஷ்யபுத்திரன் விசயத்திலும் இது தான் நடக்கிறது.
ரிசானாவின் தலையைத் துண்டித்தது அநியாயம் என இங்குள்ள அநேகம் இஸ்லாமியர் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இது நக்கீரன் போன்ற ஒரு பத்திரிகையில் எழுதப்படும் போது, அதுவும் வலுவான வாதங்களுடன் தாம் முஸ்லீமாக கருதும் மனுஷ்யபுத்திரனே எழுதும் போது அடிப்படைவாத இஸ்லாமியர் பதற்றமாகிறார்கள். ஷரியத் சட்டங்களை எதிர்ப்பதா என்று கொதிக்கிறார்கள். கோட்பாட்டளவில், அறத்தின் அடிப்படையில் மனுஷ்யபுத்திரன் சொன்னது தான் சரி என அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த விமர்சனம் இந்த இஸ்லாமியர்களுக்கு தம் அடையாளத்தையும், படிநிலை அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாக அச்சம் ஏற்படுகிறது. ஜெய்னுலாப்தீன் போன்றவர்கள் வெறியேறி மனுஷ்யபுத்திரனின் உடலை குறிப்பிட்டு அவரை அவமானப்படுத்துகிறார்கள், கொலை மிரட்டல் விடுக்கிறார்கள், அதுவும் பொதுவெளியில் முகநூலில் அவ்வாறு எழுதுகிறார்கள். இது இரண்டு பிரச்சனைகளை சுட்டுகிறது.
ஒன்று இந்த அரசு இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம் அளிக்கிறது. அவர்கள் இன்று தமக்கு எதிரானதாய் நம்பப்படும் படைப்புகள், கருத்துக்கள் எதுவும் வெளிவரக் கூடாது என வன்முறைப் போராட்டம் நடத்தி சமூகத்தில் அச்சத்தை விளைவிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இஸ்லாமியரை விட அதிகமான ஒடுக்குமுறையை அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து மதுரைக்கார படங்களில் மட்டம் தட்டப்படுவதைப் பார்க்கிறோம். அதை யாரும் எதிர்க்க முடியாது. கூடங்குளத்தில் ஒரு நியாயமான போராட்டத்தை நடத்த விடாமல் அரசு எப்படி மக்களின் ஜனநாயக உரிமையை முடக்கியது என்று பார்த்தோம். ஆனால் இந்த அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்களை பொறுத்த மட்டில் தமிழக அரசு கட்டுப்படுத்த தயங்குகிறது. அவர்கள் எப்படி வன்முறை மூலம் சென்னை மவுண்ட் சாலையை ஸ்தம்பிக்க வைத்தார்கள் எனப் பார்த்தோம். இது தற்போது ஒரு மோசமான போக்குக்கு வழிகோலி உள்ளது. தமக்கு மாறுபட்ட கருத்துக்களை யாரும் முணுமுணுத்தாலே மக்களின் மதவுணர்வுகளை தட்டி எழுப்பி கூட்டங்களை கூட்டி வன்முறையை காட்டி அச்சுறுத்தும் தைரியத்தை இந்த அமைப்புகளுக்கு அளித்துள்ளது. “இன்று போய் நாளை வா” படத்தில் டியூசன் வாத்தியாரை பாடமெடுக்க விடாமல் பேரனுக்கு சாப்பாடு ஊட்டும் பாட்டியை போல் தமிழ முதலமைச்சர் நடந்து கொள்கிறார். இதை பயன்படுத்தி பா.ம.க ராமதாஸின் பாணியில் மிரட்டல் அரசியல் நடத்த ஜமாத் அமைப்புகளை ஊக்குவிக்கிறது.

இன்னொரு புறம் அமைதிப் பூங்காவான இந்த மாநிலத்தில் இஸ்லாமியர் மீதான நல்ல பிம்பத்தில் வகுப்புவாத சாயம் பூசவும் பயன்படுகிறது. அதனால் தான் இந்த வஹாபி அமைப்புகளின் வளர்ச்சி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாக்க அல்ல அவர்களின் மேலும் சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தவும் பி.ஜெ.பி போன்ற அமைப்புகளை இங்கு வளர்த்து விடவுமே இங்கு பயன்படப் போகிறது. தற்போது வரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமக்குள் உள்ள “புல்லுருவிகளை” மட்டும் தான் “வேரோடு பிடுங்க” முனைகிறார்கள். ஏதாவதொரு மத நம்பிக்கை பொறுத்த சர்ச்சையில் நாளை இவர்கள் இந்து அமைப்புகளோடு மோதப்போகும் நாள் இந்த போக்கை கவனிக்கையில் வெகுதொலைவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதோடு பி.ஜெ.பியும் இங்கு வலுவாக வேருன்றி விடும். நீண்ட காலம் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தின கேரளாவில் தான் தற்சமயம் பி.ஜெ.பி வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த நிலை இங்கும் வர வேண்டுமா சொல்லுங்கள்?

இஸ்லாமிய சமூகம் பிராமணர்களைப் போன்று ஆச்சாரமானவர்களாக மத ஈடுபாடு மிக்கவர்களாக இருக்கிறார்கள். பெண்களை நடத்தும் விசயத்தில் கூட ஒரே மாதிரி தான் அடிப்படைவாதிகளாக இருக்கிறார்கள். சடங்கு புனஸ்காரங்களிலும் அப்படியே. தொடர்ந்து இருதரப்பினரும் தத்தம் வேதங்கள் இந்த நவீன வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளன என பிடிவாதமாக அறிவிக்கின்றன. நவீன சிக்கல்கள் ஒவ்வொன்றுக்கும் பூதக்கண்ணாடி கொண்டு தம் வேதபக்கங்களுக்குள் விடை தேடுகிறார்கள். உதாரணமாக ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கலாமா என்கிற கேள்வி வரும் போது இந்து மதத்திலும் பலதார மணம் அனுமதிக்கப்பட்டதே என்று நியாயம் சொல்லுகிறார்கள். அதாவது நீங்கள் பிற்போக்காக ஏன் இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் தான் பிற்போக்கு என்கிறார்கள். இது பிழையான தர்க்கம். இங்கு யாரும் இந்து மத விழுமியங்களை நவீன வாழ்வுக்கான அடிப்படையாக கொள்வதில்லை. இந்து மதத்தின் மனுதர்மம் சரியானது பின்பற்றத்தக்கது என யாரும் இங்கு மீடியாவில் தர்க்கம் செய்து எளிதில் தப்பிக்க முடியாது. இந்துக்களில் பலரே இதை கடுமையாக எதிர்ப்பார்கள். குறைந்தபட்சம் ஒரு மேலெழுந்தவாரியாக ஏனும் இந்துக்கள் இன்று நவீனத்தை நோக்கி வரத் தலைப்படுகிறார்கள். மேலும் ஒரு விவாதத்தில் தமது எதிர்தரப்பினர் அனைவரும் அடிப்படைவாதிகளே என்ற அடிப்படையில் எப்படி வஹாபிகள் பேச முடியும்? இந்துக்களில் பகுத்தறிவாளர்களும், நவீன சிந்தனையாளர்களும், ஜனநாயகவாதிகளும் இருக்கிறார்கள். அவர்கள் மதவாத அதிகாரத்தை, ஆணாதிக்கவாதத்தை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறார்கள்?

இஸ்லாமிய சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் படித்து முன்னேறுவதற்கு அந்த சமுதாயம் நவீன விழுமியங்களை ஏற்றுக் கொண்டு மையநீரோட்ட வாழ்வுக்கு வருவது முக்கியம். அதற்கான மாற்றம் உள்ளிருந்து தான் வர முடியும். அந்த மறுமலர்ச்சியை இடதுசாரி தாக்கம் கொண்ட முற்போக்கான இஸ்லாமியர் தான் ஏற்படுத்த முடியும். இந்த வஹாபி போர் உண்மையில் இந்த முற்போக்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானது. அவர்களை தாக்கி அழித்த பின் தான் ஒரு பிஜெபி போன்ற மதவாத இயக்கமாக தாம் சுதந்திரமாக இயங்க முடியும் என இவ்வமைப்புகள் புரிந்து வைத்துள்ளன. நாம் ரசூல்களையும், மனுஷ்யபுத்திரன்களையும் பாதுகாக்க வேண்டும். அதற்கான தருணம் இது.
சிறுபான்மையினர் என்ற வகையில் பாதிக்கப்பட்டவர் என்ற வகையில் தமிழ் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், இடதுசாரிகள் பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கண்டும்காணாமல் தான் இருந்து வந்துள்ளார்கள். பி.ஜெ.பிக்கு நிகராக இந்த வஹாபிகளையும் கடுமையாக எதிர்க்க வேண்டிய காலம் வந்து விட்டது.

1 comment:

poornam said...

//இஸ்லாமிய சமூகம் பிராமணர்களைப் போன்று ஆச்சாரமானவர்களாக மத ஈடுபாடு மிக்கவர்களாக இருக்கிறார்கள். பெண்களை நடத்தும் விசயத்தில் கூட ஒரே மாதிரி தான் அடிப்படைவாதிகளாக இருக்கிறார்கள். சடங்கு புனஸ்காரங்களிலும் அப்படியே.//
இன்றைய பிராமண சமூகம் பற்றி உங்களுக்கு சரியான புரிதல் இல்லை. பெண்களைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்புவது, கலப்புத் திருமணத்துக்கு அனுமதி அல்லது நடந்த பின் மனமாற்றம் எல்லாவற்றிலும் மற்ற சாதிகளை விட முன் நிற்பது பிராமணர்கள் தான். சைவ உணவு உட்பட எத்தனையோ விஷயங்களில் நீங்கள் நினைப்பதை விடப் பல மடங்கு முற்போக்காளர்கள் (பகுத்தறிவுப் பாசறையில் இருப்பத விடவும் அதிக அளவில்) இருப்பது பிராமண சாதியில் தான்.
அவ்வளவு ஏன், இத்தனை வருட சினிமா வரலாற்றில் பிராமணர்களை, குறிப்பாக பிராமணப் பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் எத்தனை வந்திருக்கின்றன? எதையாவது தடை செய்ய பிராமணர்கள் கோரியதுண்டா? கோரும் அளவு அவர்களுக்கு வலிமையோ சமூகத்தில் மதிப்போ உண்டா? எந்த அடிப்படையில் பிராமணர்களையும் முஸ்லிம்களையும் ஒப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.