Sunday, December 9, 2012

துப்பாக்கிப் பட விமர்சனமும் பசுமட விளம்பரமும்
சாருவின்ஓய்வுக்குபிறகு இலக்கிய மொழியில் சினிமா விமர்சனத்தை காரசாரமாக கௌதம சித்தார்த்தன் தான் எழுதி வருகிறார். இதற்கான ஒரு தேவை நிச்சயம் உள்ளது.
இந்த மாத தீராநதியில் அவரது துப்பாக்கிப் படக் கட்டுரை நன்றாக இருக்கிறது. இப்படத்தின் சிக்கலை தெளிவாக முன்வைக்கிறார். அதுவும் ஏன் தலைமை தீவிரவாதியை ஒரு இந்திய முஸ்லீமாக காட்டுகிறார்கள் என்கிற கேள்வி முக்கியம்.
ஸ்லீப்பர் செல்களில் சாமான்யர்கள் இருந்தாலும் ஹாண்டிலர்கள் எனப்படும் தலைமை வெளிநாட்டில் தான் இருக்கும். அவர்களின் உத்தேசம் மற்றும் அரசியல் எல்லாம் முருகதாஸ் காட்டுவது போல் சாதாரண சமூகக்கோபம், இந்திய தேசிய பகை ஆகியவை அல்ல. மாறுபட்டது. அவற்றுக்கு பல சர்வதேச  கணக்கிடல்கள் பின்னே உள்ளன. இங்குள்ள இந்துத்துவா, ஒடுக்குமுறை பயங்கரவாத சட்டங்களால் இஸ்லாமியருக்கு தாம் அந்நியப்பட்டதாக பழிவாங்கப்படுவதாக உணர்வு ஏற்பட்டால் அது புரிந்துக் கொள்ளக் கூடியது தான். இந்த கோபத்தை, தனிமைப்படலை தான் வெளிநாட்டு தீவிரவாத சக்திகள் பயன்படுத்துக் கொள்ளுகின்றன. சில சமயங்களில் இளைஞர்கள் முழு உண்மை தெரியாமலே இந்த வலையில் மாட்டிக் கொள்கிறார்கள். போலிசார் அவிழ்த்து விடும் வன்முறையும் அவர்களை எதிர்மறையாக இத்தேசத்துக்கு எதிராக கிளம்ப வைக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இந்த அரசியல் பின்புலம், சமூகப்பிரச்சனைகளை அறியாமலே ஒற்றைபட்டையாக சித்தரித்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் பெரும்பாலான இந்திய இஸ்லாமியர் தீவிரவாதத்தை, மத அடிப்படைவாதத்தை எதிர்க்கிறவர்கள் தாம். இவ்விசயத்தை காட்டாமல் எல்லோரையும் ஸ்லீப்பர் செல் என்பது போல் சித்தரிப்பது எவ்வளவு பெரிய அநியாயம் என கௌதம சித்தார்த்தன் சரியாகவே கேள்வி எழுப்புகிறார்.
இந்த அரசியல் விவாதத்துக்கு திருஷ்டிப் பொட்டு போல இதே தீராநதியின் பின்னட்டையில் ஒரு பசுமட விளம்பரம் வந்துள்ளது. வயதான பசுக்களை கசாப்புக் கடைகளில் இருந்து காப்பாற்றி சிலர் பரிபாலனம் செய்து வருகிறார்கள். மொத்தம் 110 பசுக்கள். 14 வருடங்களாக இவ்வாறு பசு முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காஞ்சி ஸ்ரீ மகா பெரியவாளின் “ஆசியோடு” நடத்தி வருகிறார்கள். இந்த மாடுகள் வரும் பொங்கலை கொண்டாடும் விதமாய் நீங்களும் நன்கொடை அளிக்கலாம் எனக் கோருகிறது. சும்மா அல்ல ஒரு வாரத்துக்கு 150 ரூபாய் அளித்தால் வீட்டுக்கு ஒரு கோமாதாவின் படம் அனுப்பின்வைப்பார்கள். 2300 அனுப்பினால் கொமாதாவின் வெள்ளி விக்கிரகம் இப்படி பல வெகுமதிகள் உண்டு. எனக்கு இந்த விளம்பரத்தை படித்த போது சில விசயங்கள் தோன்றியது.
“பசுக்கள் பன்றிகள் மற்றும் சூனியக்காரிகள்” படித்திருப்பீர்கள். அதில் மார்வின் ஹாரிஸ் நமது பசுநேசத்துக்கு ஒரு விவசாய வரலாற்றுக் காரணம் உண்டு என்கிறார். 18, 19ஆம் நூற்றாண்டில் இருந்து இந்தியா நவீனப்படும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பசு என்பது நமக்கு இன்று நவீன கல்வி போல் முக்கியத்துவம் கொண்டதாக இருந்திருக்கிறது. வீட்டில் ஒரு பசு இருந்தால் அதைக் கொண்டு ஒரு குடும்பமே பிழைக்கும். பால், சாணி, உழும் உபகரணம் என அது பல விதத்திலும் பயன்பட்டிருக்கிறது. வடமாநிலங்களில் பஞ்சத்திலும் குறைந்த உணவில் தாக்குப்பிடிக்கும் ஒருவகை பசு வளர்த்து பேணப்பட்டதாக ஹாரிஸ் சொல்கிறார்.


ஒரு காலத்தில் பசுவின் பயன்பாடு காரணமாய் அதனை கொல்லுவது ஒரு சமூகக்குற்றமாக கருதப்பட்டிருக்கலாம். பின்னர் அது ஒரு தொன்மமாக மதத்துக்குள் வளர்க்கப்படிருக்கலாம். இன்று தமது சைவ உணர்வு மற்றும் மிகை பாரம்பரிய ஈடுபாடு காரணமாயும் நவீன காலத்தில் தமது சாதிய பண்பாட்டு அடையாளம் நொறுங்குகிறது என்ற அச்சம் காரணமாயும் பிராமணர்கள் பசு வதையை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களுடன் இந்துத்துவா சக்திகளும் இணைகின்றன. இதை கேலி பண்ணும்படியாய் ஆங்கிலத்தில் holy cow எனும் சொல் ரொம்ப வருடங்களாய் பயன்பாட்டில் இருக்கிறது.
என் அப்பா சிறுவயதில் அவர்கள் வீட்டுப் பசுவை பராமரித்திருக்கிறார். அவருக்கு பிற்பாடு ஒரு பசு வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தன்னால் சாணி அள்ள முடியாது என்று அம்மா கண்டிப்பாக மறுத்தார். நான் நீர் சேர்க்காத செயற்கையாய் சுத்தப்படுத்தப்படாத பசும்பால் குடித்திருக்கிறேன். அதன் சுவை இன்றைய ஆவின் பாலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என எனக்குத் தெரியும். எனக்கும் கூட பசு வளர்க்க ஆசை உள்ளது. பசு நாயைப் போன்றே இனிமையான மனிதர்களோடு ஒட்டிக் கொள்ளும் (அசுத்தத்தில் புரளும்) ஒரு சோம்பேறி மிருகம். எனக்கு அதன் குஞ்சலம் போன்ற வால், கொம்பு, கருணை மிளிரும் கண்கள், அது மூச்சு விடும் பாணி, நின்ற வாகில் அசட்டையாக ஒன்றுக்கு போவது எல்லாமே பிடிக்கும். ஆனாலும் எனக்கு பசுவதை ஒரு தீமையாக தவறாக படவில்லை.
சாப்பிடுவதற்காக பசு, நாய், பூச்சி எதை வேண்டுமானாலும் கொல்வதில் தவறில்லை. நாம் சில பசுமாடுகளைத் தின்பதனால் விவசாயம் மற்றும் பால் உற்பத்திக்கான பசு மாடுகளின் எண்ணிக்கை ஒன்றும் குறைந்து போவதில்லை. பசு கடவுள் என்பதெல்லாம் சும்மா உதார் என்று அதை சொல்லுபவர்களுக்கே தெரியும். பசுவதையை தடுப்போம் என்பது அசைவத்தை எதிர்ப்போம் என்கிற கூட்டுணர்வால் வரும் ஒன்று. பிராமணர்கள் பசுவின் பால், தயிர், நெய், வெண்ணெய் ஆகியவற்றை பிரதானமாக உட்கொள்ளுகிறார்கள். அவர்களுக்கு புரதச்சத்து அதில் இருந்து தான் முக்கியமாய் வருகிறது. அதுவும் சத்துமிக்க மிருகப்புரதம். தம் உணவுக் கலாச்சாரத்தோடு பசு ஒன்றியதாக அவர்களுக்கு இருக்கிறது. இந்த ஒன்றுதல் அசைவ வெறுப்போடு சேர்ந்து எளிதில் பசுவதை எதிர்ப்பாக கட்டமைக்கப்படுகிறது. இதனால் தான் அவர்கள் கோழி அல்லது ஆடு கொல்லப்படுவதை எதிர்ப்பதில்லை.
ஆனால் இந்த பசுவதை எதிர்ப்பு போராளிகள் மாட்டுகறி புசிப்பது ஒரு சமூகத்தின் உணவுப்பண்பாடு என்பதை ஏற்க வேண்டும். இந்த நாட்டில் எல்லா சமூகத்தினரும் தான் வாழ்கிறார்கள். பிராமணர்கள் மட்டுமல்ல. பிற சமூகத்தினரின் விருப்பங்கள், பண்பாட்டு நம்பிக்கைகளை அவர்கள் மறுத்தல் ஆகாது. பசுவதை எதிர்ப்பு என்பது பிற சமூகத்தினரை அவமானப்படுத்தும் பண்பாட்டு ரீதியாக ஒடுக்கும் காரியமாக உள்ளது.
தீராநதியில் இப்படியான விளம்பரங்கள் வருவதையும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாது. துப்பாக்கிப் படத்தை புதிய தலைமுறை டி.வியில் மறுத்தும் விமர்சித்தும் மனுஷ்யபுத்திரனும் ஷாஜியும் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை அதே துப்பாக்கி விளம்பரத்தை தான் உற்சாகமாக ஓட்டினார்கள். இந்த வாடிக்கையாள யுகத்தில் ரொம்ப லட்சியவாதமெல்லாம் பார்க்க முடியாது.
இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது என் மனைவி “பசு எல்லாம் பாவம், அதையெல்லாம் கொல்லக் கூடாது” என்று வருத்தமாக சொல்லுகிறாள். விளம்பரத்தில் வருகிற பசுவின் படத்தை காட்டி “எவ்வளவு பாவமா இருக்கு பார்” என்கிறார். பசு மட்டுமல்ல, பசுவை சாப்பிடக் கூடாது என நீங்கள் சொல்லுகிற நாங்களும் பாவம் தான்!

5 comments:

Selvakumar said...

ஆடு, கோழி வெட்டு வெட்டு என்று வெட்டுபவர்களுக்கு கூட மாட்டுக்கறி சாப்பிடுவது ஏதோ தாழ்மையானது போன்ற ஒரு மனநிலை உள்ளது ஒரு சாரார் பசு புனிதம் என்றும், ஒரு சாரார் அநாகரீகம் என்றும் அதை ஒதுக்கியே விட்டனர் ஆட்டுக்கறி கிலோ 400 க்கு விற்கும் இக்காலத்தில் ஏழை எளியோருக்கான ஒரு நல்ல மாற்று மாட்டுக்கறி. தொடர்புடைய ஒரு பதிவு

http://www.athishaonline.com/2011/10/blog-post_07.html

poornam said...

மற்ற விஷயங்களை நிதானமாக அணுகுகிற நீங்கள் சாதி தொடர்புள்ள விஷயம் என்று வரும் போது மட்டும் ஒரு தலைப் பட்சமாக கருத்துக் கூறுவதாக எனக்குத் தோன்றுகிறது. இது பிராமணர்கள் தொடர்புள்ள விஷயம் என்று எப்படிப் பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.
ஆடு, கோழியை விட பசு மாட்டின் பால் பரவலாகவே உபயோகமாகிறது. சாதி வேறுபாடற்ற ஒரு விஷயம், ஆட்டுப்பாலை விட அதிக அளவில் பரவலாக பசும்பாலே குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்று உணர்வாக விளங்குகிறது என்பதைத் தான் இதில் கருத்தில் கொள்ள வேண்டும். தாயில்லாத குழந்தைகள், தாய் இருந்தும் பால் கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு இரண்டாவது தாயாக இருப்பது பசுதான், ஆடு அல்ல.
நமது நாட்டில் மட்டும் தானே சாதி இருக்கிறது? ஆனால் மற்ற சில நாடுகளிலும் ஏதோ ஒரு மிருகம் புனிதம் அல்லது அருவருப்பு உணர்வு காரணமாக உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லையே?
மலிவாக இருக்கிறது என்றால் நாய், குரங்கு போன்ற மிருகங்களின் மாமிசம் ஏன் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது?
அவ்வளவு ஏன், மனிதர்களின் இறந்த உடலைக்கூட ஏன் வீணாக மண்ணுக்கு அல்லது நெருப்புக்கு இரையாக வேண்டும்? யாரும் இல்லாத அநாதைப் பிணங்களை ஏன் உணவாகக் கொள்ளக்கூடாது? படிக்கும் போதே முகம் சுளிக்கத் தோன்றுகிறது அல்லவா? மூன்றாயிரம் வருஷங்களாக நம்மையும் அறியாமல் நம் ஜீன்களில் கலந்திருக்கும் சாதியம் தான் என்று சொல்லி விடாதீர்கள். சென்டிமென்ட் இல்லாத அதி நவீன materialistic சமூகங்கள் கூட இதற்கு முகம் சுளிக்கவே செய்வார்கள். உணவு மட்டுமின்றி உடை, சமூகப் பழக்க வழக்கங்களிலும் கூடப் புனிதம், அருவெருப்பு எல்லாம் சமூக பாரம்பரியங்களில் இருந்து கொண்டே இருக்கும். காரணம் மனிதனின் ஆறாவது அறிவு. அதைக் கழற்றி வைத்து விட்டால் ரொம்பவே வசதி. மலிவாக எங்கு எது கிடைக்கிறதோ அதை உண்ணலாம். ஆனால் மனிதன் அந்த லட்சியத்தை அடையும் போது துப்பாக்கி போன்ற படங்கள், தீராநதி போன்ற பத்திரிகைகள் வந்து கொண்டிருக்குமா என்பதுதான் ஐயம்.

Abilash Chandran said...

பூர்ணம்
1. எனக்கு பிராமணர்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை
2. அவர்களும் பிற வலதுசாரிகளும் தான் அதிகமாக பசுவதைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். மற்ற தர்ப்பினரிடையே பசுவதை எதிர்ப்பு இவ்வளவு வலுவாக இல்லை.
3. தெற்காசிய நாடுகளில் குரங்கு, பாம்பு, நாய் எல்லாம் உண்ணுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போன்றே food tabooவும். இது இந்தியர்களுக்கு உரித்தானது என நான் சொல்லவில்லை. ஆனால் இந்த வெறுப்புக்கு பின்னார் நடைமுறைவாத காரணங்கள் உள்ளது. ஏன் இஸ்லாமியர் பன்றியை சாப்பிட தடை உள்ளது என மார்வின் ஹாரிஸ் அவ்வாறு விளக்கி உள்ளார்.
4. இந்த விசயங்களை நாம் செண்டிமெண்டலாக பார்க்கக் கூடாது. அது நமக்கு தெளிவு தராது.
4.மனிதனைத் தின்னுவதை மனிதர்கள் ஏற்க மாட்டார்கள். அது ஆபத்தானது என்பதாலே. அதனால் தான் அநாதைப் பிணங்களை புசிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு இனம் மற்றொன்றை மட்டுமே தின்னலாம். தன்னையே தின்றால் அழிந்து போகும் எனும் எளிய நடைமுறைக் காரணம் மட்டுமே இதற்கு உள்ளது

Abilash Chandran said...

உண்மை செல்வகுமார். ஆனால் ஆட்டுக்கறி விலை அதிகமாவதற்கு வேறு நடைமுறைக் காரணங்கள் இருப்பதாக கருதுகிறேன். அதை மலிவாக்க பரவலான பெரிய முதலீடு கொண்ட ஆட்டுப்ப்ண்ணைகளும் மேய்ச்சல் வெளிகளும் வேண்டும்.

poornam said...

1) //எனக்கு பிராமணர்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை//
வெறுப்பு இருப்பதாக நான் கூறவில்லை. அப்படி எண்ணியிருந்தால் தங்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கவே மாட்டேன், துவேஷம் நிறைந்தவர்களிடம் பேசுவது வீண் என்பதால். பல விஷயங்களில் உங்களது பல கருத்துகள் நடு நிலையாக நிதானமாக இருப்பதால் தான் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து எனது கருத்துகளை எழுதியும் வருகிறேன். எனது முந்தைய பின்னூட்டம் உங்கள் மீதான தனிப்பட்ட விமர்சனம் அல்ல. எவ்விதத்திலாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

2)நான் பிராமணர்களுக்காக வக்காலத்து வாங்கவும் வரவில்லை. பொதுவாக இவ்விஷயத்தில் பிராமணர்களின் நிலைப்பாட்டை மட்டும் சுடிக்காட்ட விரும்புகிறேன். பிராமணர்கள் தாங்கள் உண்பதில்லை என்பதால் யாருமே உண்ணக்கூடாது என்று கூறவுமில்லை.பசு மாமிசம் சாப்பிடுபவர்களை நிந்திப்பதில் பொழுது போக்குவதும் இல்லை. பராமரிக்க இயலவில்லை என்ற காரணத்தால் பசுக்களைக் கொலைக்களத்துக்கு அனுப்புவதை இயன்ற அளவு தடுக்க ஆக்க பூர்வமான முறையில் கோசாலைகளை அமைத்துக் காத்து வருவதே பிராமணர்களின் பங்கு.இந்த விஷயத்தில் நிறைய குளறுபடிகளில் ஈடுபட்டு வருவது இந்துத்துவ சக்திகள் தாம். இந்துத்துவ சக்திகள் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள். இது மட்டுமின்றி இன்னும் பல விஷயங்களையும் அரசியலாக்கிக் குளிர்காய்வதே அவர்களின் பொழுதுபோக்கு. எல்லா பிராமணர்களும் இந்துத்துவா ஆதரவாளர்கள் அல்லர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

3) நான் அழுத்தம் தர விரும்பியது பலருக்குப் பால் தந்து பசு இரண்டாவது தாயாக இருக்கிறது என்பதை மட்டுமே. மற்ற நாடுகளில் பசுவின் பால் குழந்தைகளுக்கு உபயோகப் பட்டாலும் அதைப் புனிதமாக்கவில்லை. நாம் ஏன் புனிதமாக்கியுள்ளோம் என்றால் அது நமது இயல்பு. அடிப்படையில் இந்தியர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள், நன்றி, விசுவாசம், அதனால் எழும் ஆராதனை உணர்ச்சி போன்ற குணங்கள் மற்றவர்களை விட மிக அதிகம். அது பசு விஷயத்திலும் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.