Wednesday, December 5, 2012

சச்சின் ஓய்வு: நாம் சொல்லி அவர் போகலாமா?
கிரெக் சாப்பல் இந்திய பயிற்சியாளராக இருந்த போது இளைஞர்கள் அணிக்குள் சுதந்திரமாக இயங்கும் சூழலை உருவாக்க முயன்றிருக்கிறார். அப்போது அணிக்குள் இருந்த மூத்த வீரர்கள் முன்னிலையில் பேசக் கூட இளைய வீரர்களுக்கு பெரும் தயக்கம் இருந்தது. ஒரு ஜனநாயக நவீன ஆட்டத்தில் இப்படியான படிநிலை அச்சம் ஏன் என அவருக்கு குழப்பமாக இருந்தது.
குறிப்பாக இளைய வீரர்கள் ஒரு கூட்டத்தில் சச்சின் இருக்கும் பட்சத்தில் வாயே திறக்க மாட்டார்கள். இது ஒரு மரியாதை கலந்த அச்சமாக இருக்கலாம். ஆனால் இந்த அச்சமும் தயக்கமும் இளைய வீரர்களோடு அடங்குவது அல்ல.
கடந்த தேர்வுக்குழு தலைவர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு இருந்த முக்கிய பொறுப்பு மூத்த வீரர்களை சுமூகமாக விடைபெறச் செய்து அணியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிவகை செய்வது. ஆனால் மூத்த வீரர்கள் தம் ஓய்வை பற்றி சிந்திப்பதை விட அவர்களிடத்து அது பற்றி பேச சீக்காவுக்கு அதிக தயக்கம் இருந்தது. அவர் அதிகமும் மூத்த வீரர்களை மீடியாவின் கடும் கண்டனங்களுக்கு ஆளாக விட்டு விட்டு நெருக்கடியில் அவர்கள் மாட்டிக் கொண்டு தாமாகவே ஓய்வை அறிவிக்கும் வரை விலகி நின்று வேடிக்கை பார்ப்பாரே அன்றி துணிச்சலாக முடிவெடுக்க மாட்டார்.
கங்குலியின் ஓய்வும் மீடியா நெருக்கடியினால் தான் நேர்ந்தது. அப்போது ஊடகங்களில் தோன்றிய ஸ்ரீகாந்த் கங்குலி போன்ற ஒரு மகத்துவமான தியாகி எவ்வாறு டி.வி, பத்திரிகை விமர்சனங்களில் அநியாய நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார் என வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அவர் கங்குலி நீடித்து ஆட வேண்டும் என வெளிப்படையாக சொல்லவும் மாட்டார். லஷ்மண் விசயத்திலும் இவ்வாறே நடந்தது. சச்சின் ஓய்வையாவது அவர் ஒழுங்காக கையாள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. சச்சின் 15 வயதில் பாகிஸ்தான் பயணம் போன போது அணித்தலைவராக இருந்தது ஸ்ரீகாந்த் என்பதால் சச்சினிடம் பேச அவரே பொருத்தமானவர் ஒரு பலவீனமான நியாயமும் வைக்கப்பட்டது. ஆனால் தேர்வாளர் பணியில் இருந்து விலகிய பின் அளித்த பேட்டியில் தன்னால் சச்சினிடம் ஓய்வு குறித்து பேச இயலவில்லை என அவர் சொல்லி உள்ளார். அந்த சிக்கலான வேலையை அவர் தற்போது விக்ரம் ரத்தோர், கரீம், சந்தீப் பட்டேல் ஆகியோருக்கு அளித்துள்ளார்.
ரத்தோரும் கரீமும் சச்சினின் நிழலில் ஜூனியர்களாக அணியில் இருந்தவர்கள். அவர்களால் சச்சினிடம் முகத்துக்கு நேராக பெட்டியை கட்டு என சொல்ல முடியுமா என்ன. அவர்கள் மட்டுமல்ல நம்மாலும் தான். இன்று இந்திய கிரிக்கெட்டுக்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம், உயர்வு ஆகியவற்றுக்கு சச்சின் தான் ஆதாரம். 90களில் இருந்து 2000வரை இந்திய வீரர்களுக்கு வரலாற்று ரீதியான தன்னம்பிக்கையும் துணிவையும் அளித்தவர் அவர். சச்சின் இல்லையென்றால் அவரது அடுத்த தலைமுறையின் கங்குலி திராவிட்களும், அதற்கு பின் வந்த சேவாக், கோலிகளும் இல்லை. இன்றும் சச்சின் ஆடுவதைக் காண ஆட்டத்துக்கு போகும் எண்ணற்ற பார்வையாளர்கள் உண்டு. சச்சினை வீழ்த்தினால் மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கும் பந்து வீச்சாளர்கள் உண்டு. சச்சினை வீழ்த்திய பந்தை பாதுகாக்கும் வெளிநாட்டு வீரர்கள் உண்டு. இன்றும் சச்சினின் விக்கெட்டை மிக முக்கியமானதாகவே எதிரணிகள் கருதுகின்றன. சச்சின் இந்திய கிரிக்கெட்டையும் கடந்து மேலெழுந்து நிற்கும் ஒரு தனி இருப்பு.
 சொல்லப்போனால் இந்தியர்கள் தம் அணியை விட சச்சினை கருதியே அதிகம் பெருமைப்பட்டிருப்பார்கள். ஆக நமக்கு நம் அணியின் நலனை விட சச்சினின் நிலைப்பும் இருப்புமே முக்கியம். அதனாலேயே இன்று அவர் ஓய்வு பெற வேண்டிய தருணத்தில் அதை அவரிடம் வெளிப்படையாக கூறுவதில் இந்திய கிரிக்கெட் வாரியம், அணித்தலைவர், சகவீரர்கள், முன்னாள் வீரர்கள், முக்கியமாக தேர்வாளர்கள் அனைவருக்கும் பெரும் தயக்கமும் கூச்சமும் ஏற்படுகிறது. ஓய்வுற்று படுக்கையில் முடங்கின அப்பாவை மரணத்தை எதிர்பார்க்கும் மகனுக்கு தோன்றும் குற்றவுணர்வுக்கு நிகரானது இது.
பிராயிட் இது ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கிற சிக்கல் என்கிறார். சில பழங்குடிகளில் வயதான நோயுற்ற அப்பாவை தனியாக போகிற வழியில் கைவிட்டு போய் விடுவார்கள். அவராக ஆதரவின்றி கிடந்து இறந்து போவார். நாமெல்லாம் இந்த இனக்குழுக்களில் இருந்து பரிணமித்து வந்தவர்கள் தானே. நமக்குள்ளும் இந்த கேள்வி எப்போதும் அரும்பி நிற்கிறது: அப்பாவை கொல்லவா வேண்டாமா? இந்த குற்றவுணர்வு மகன்களுக்குள் அப்பாவை வெறுக்கிற அதேவேளை நேசிக்கிற ஒரு மனநிலையை உருவாக்குகிறது. சச்சினை வெறுப்பதும் மறுப்பதும் ஒருவித கசப்பை ஏற்படுத்துகிறது.
நமக்கு எல்லாம் பிரியமான அதேவேளை தற்போது தனது மோசமான ஆட்டத்தால் அணியை கீழுக்கு தள்ளுகிற சச்சினை போகச் சொல்லவா வேண்டாமா? அப்படிச் சொல்வது அவர் நம் கிரிக்கெட்டுக்கு இதுவரை செய்த மாபெரும் பங்களிப்புக்கு தியாகங்களுக்கு செய்கிற அநியாயம் அல்லவா? அவரை போகச் சொல்வதற்கு ஈடானவர் இந்திய கிரிக்கெட்டில் யாரும் இல்லையே. சச்சினே ஒருமுறை சொன்னது போல் நூறு சதம் அடித்தவர்களுக்குத் தானே நூறாவது சதம் அடிப்பதன் நெருக்கடியும் சிரமமும் புரியும். சச்சினை போன்று அல்லாத ஒருவரால் அவரது நேரம் நெருங்கி விட்டது என எவ்வாறு உறுதியாக கணிக்க முடியும்? சச்சினை விமர்சனம் செய்யும் உரிமை இந்தியாவில் யாருக்குமே இல்லையே! இருபத்தைந்து ஆண்டுகள் ஆடி பங்களிப்பு செய்தவருக்கு தன் ஓய்வை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லையா? தொடர்ச்சியாக ஓராண்டு கூட இந்திய அணியில் ஆட முடியாத ரத்தோருக்கும் சபா கரீமுக்கும் சச்சினை வெளியேறச் சொல்லும் அதிகாரம் உண்டா? இப்படியே தான் யோசிக்கிறது இந்திய மனம். சச்சினின் ஓய்வு குறித்து எழுதிய பேசிய அத்தனை இந்திய ஊடக பத்தி எழுத்தாளர்களும் விமர்சகர்களும் வர்ணனையாளர்களும் நேரடியாக அவர் ஓய்வுற வேண்டும் என ஒருமுறை கூட சொல்லவில்லை. ஆனால் பார்வையாளர்கள் தொடர்ச்சியாக சச்சின் அணிக்கு ஒரு தேவையற்ற சுமை என இணையங்களில் பேசி வருகிறார்கள். அது ஒரு தரப்பு. யாரையும் துச்சமாக பேசும் சுதந்திரம் கொண்ட இணைய கருத்துமரபின் தரப்பு. ஆனால் சச்சின் இன்று ஒரு ஊடக பிம்பம் என்ற நிலையில் இருந்து ஒரு மித்தாக புராணிக பாத்திரமாக மாறி விட்ட நிலையில் தர்க்க ரீதியாக் இந்த ஓய்வு குறித்து யோசிப்பது இந்தியர்களுக்கு எளிதல்ல.
இங்கு தர்க்கரீதியாக சச்சினின் ஆட்டமுறையின் சீரழிவை முதலில் பேசியவர் மஞ்சிரேக்கர். அவர் அதற்காக கடும் கண்டனங்களுக்கு உள்ளானார். ஆனால் சச்சின் பிற்பாடு தன் ஆட்டத்தை வெகுவாக மெருகேற்றி ஒரு மறுவரவு நிகழ்த்தினார். ஆனால் 32 வயதுக்கு மேல் அந்த காயங்களாலும் உடல்சோர்வாலும் மாறுபட்டிருந்த சச்சினால் பந்து வீச்சாளர்களை முன்பு போல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவரது வெளியேற்றம் அணியின் போக்கை முன்பு போல் தீர்மானிக்கவில்லை. ஆனால் கடந்த 8 வருடங்களில் சச்சின் மாறாக மலைமலையாக ஓட்டங்களை குவித்து விட்டார். அவரது ஆதிக்கம் எண்ணிக்கையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இருந்தது. நிச்சயம் அணியின் வெற்றிக்கு அவரது ஆட்டம் அடித்தளமாகியது. ஆனால் ஒருநாள் வடிவில் சேவாகும் தோனியும் டெஸ்டில் திராவிடும் லஷ்மணுமே வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். பொருத்தமாக 2011 உலகக்கோப்பையின் போது யுவ்ராஜ் சச்சினை இந்திய அணியின் தாத்தா என்று அழைத்தார்.
தர்க்கப்படி கடந்த உலகக்கோப்பையுடன் சச்சின் விடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் தன் ஆட்டத்தில் ஈடுபாடும் ஒட்டுதலும் கொண்டுள்ளார். தன் மனம் விரும்புகிறவரை ஆடப் போவதாய் சச்சின் அறிவித்துள்ளார். ஆனால் இது ஒரு சிக்கலான அளவுகோல். ஏனென்றால் சச்சினுக்காக இந்திய அணி இல்லை. ஆனால் இந்த தர்க்கத்துக்கும் நடைமுறையில் மதிப்பில்லை. மாதக்கணக்காய் ஒருநாள் வடிவில் ஆடாமல் இருந்து விட்டு சச்சின் நூறாவது சதம் அடிப்பதற்காக அவர் கடந்த ஆசியக் கோப்பை அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனென்றால் அவரால் அப்போது டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிப்பது சாத்தியமாகப் படவில்லை. ஒருநாளில் சதம் எளிது என்பதாலும் அப்போது மீடியா கடும் அழுத்தத்தை இந்த நூறு சதங்கள் இலக்கை ஒட்டி ஏற்படுத்தி வந்ததாலும் தயாரிப்பாளர்களும் அரசியல்தலைவர்களும் தன் பிள்ளைகளை நாயகனாக்கவென்றே ஓடாத படம் எடுப்பதைப் போல சச்சினுக்காக ஒரு ஆட்டத்தை தாரை வார்த்து நாம் ஆசியக் கோப்பை இறுதியாட்டத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவற விட்டோம். சதம் அடித்த பிறகு அவர் ஒருநாள் ஆட்டம் ஆடுவதை மீண்டும் நிறுத்திக் கொண்டார். உண்மையில் தர்க்கம் என்பது கங்குலி, திராவிட், லஷ்மண் போன்ற மானுடப் பிறவிகளின் ஓய்வு குறித்த விவாதங்களுக்குத் தான் பொருந்தும். நாம் மீண்டும் மீண்டும் சச்சின் ஓய்வை அவரே தீர்மானிக்கும் படி விடுவதே மரியாதை என சொல்லி வருகிறோம்.
அவரிடம் போய் ஓய்வைப் பற்றி பேசலாமா என்கிற வாதத்தின் பின் சச்சின் ஆடினால் ஓட்டங்களும் தானே வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவரது இருபத்தைந்து கால ஆட்டவாழ்வில் இருபது வருடங்களும் அவ்வாறே தான் இருந்தது. எந்த சூழல், பந்து வீச்சு, ஆட்டநிலை, ஆடுதளம் என்றாலும் சச்சினுக்கு பொருட்டில்லை. அவர் முதல் பந்தை சந்திக்கும் போது அமைதியானவராக தோன்றினால் அன்று சதம் அடிப்பார் என்பது உறுதி. சச்சினை யாரும் வீழ்த்துவதில்லை, அவராகவே மிகைஆர்வம் காரணமாய் ஆட்டமிழக்கிறார் என நம்பப்பட்டது. ஆனால் தன் இறுதிப் பருவத்தில் சச்சின் மேலும் தன்னம்பிக்கையற்றவராக தோன்றத் தொடங்கினார். ஓட்டமெடுப்பது சரளமாக இல்லை. பந்து வீச்சாளரை ஆதிக்கம் செலுத்தவும் அவர் முனைவதில்லை. தொடர்ந்து ஆடுதளத்தில் இருந்தால் தானாக ஓட்டம் வரும் என ஒரு சாதாரண மட்டையாளரைப் போல யோசிக்க ஆரம்பித்தார். மிக சரளமாக ஆடி வரும் போது சட்டென்று திணறத் துவங்குவார். அல்லது குறிப்பிட்ட பந்துவீச்சாளர் அவரை குறி வைத்து வேட்டையாடுவது நடக்கும். சச்சின் தன் இயலாமையை ஏற்றுக் கொள்ளும் பணிவு பெற்றவராக தோன்ற ஆரம்பித்தார். மிகவும் திட்டமிட்ட முறையில் பொறுமையாக ஆட ஆரம்பித்தார். எந்த அளவுக்கு என்றால் மதிய உணவு அல்லது தேநீர் இடைவேளைக்கு முன் சில ஓவர்கள் முன்பு மைக்கேல் ஹஸி போன்ற பகுதிநேர வீச்சாளர் சுமாராக வீசும் போது கூட அவர் தடுமாறத் துவங்கினார். முன்னர் இதே வீச்சாளரை எவ்வளவு நான்குகள் அடிக்கலாம் என ஆவேசப்படும் சச்சின் இப்போது இவரிடம் அவுட் ஆகி விடுவோமா என பயப்பட ஆரம்பித்தார். கடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் சச்சினுக்கு திடீரென்று இவ்வாறு சுயசந்தேகம் வந்து ஆட்டம் தத்தளிக்க ஆரம்பிக்கும். முன்னர் தன் மிகைஆர்வத்தினால் ஆட்டம் இழந்தவர் இப்போது தன் மிகைஅச்சத்தினால் வெளியேறத் துவங்கினார். இரண்டு கட்டங்களிலும் சச்சின் தன்னைத் தானே வெளியேற்றிக் கொண்டார். அவரை வீழ்த்தினது பெரும்பாலும் சுமாரான பந்துகள் தாம். முன்பு ஷேன் வார்னையே திசையெங்கும் சிதற வைத்தவர் இப்போது பனேசரைப் பார்த்தால் ஒரு படத்தில் மாலைக்கண் கொண்ட கவுண்டமணி சாலையில் மனைவியை பின்னால் வைத்து இரவில் பைக் ஓட்டுவது போல் நடந்து கொள்கிறார். ஒரே மாற்றம் பைக்கை பார்த்தால் அவர் கண்ணுக்கு லாரி தெரிகிறது.
இதே காரணத்தினால் தான் சச்சின் முன்னை விட அதிகம் எரிச்சல்படுபவராக ஊடகங்களில் பிறரிடம் தன் காழ்ப்பை காட்டுபவராக மாறி இருக்கிறார். நூறு சதங்கள் அடித்த தன்னால் இன்னும் சில சதங்கள் அடிக்க முடியாதா என அவர் வியக்கிறார். திடீரென்ற தன் மீது நம்பிக்கை இழந்த ஆதரவாளர்களைப் பார்த்தால் அவருக்கு புரியவில்லை. அவர் சதம் அடித்து இருவருடங்கள் ஆகின்றன. கடந்த மூன்று தொடர்களில் சொற்ப ஓட்டங்களில் எளிய பந்துகளுக்கு அநேகமாய் வெளியேறி வருகிறார். ஆனால் சச்சினின் ஆட்டஞானம் அளப்பரியது. அவரது அனுபவமும் தான். அவர் அணியின் இளையவீரர்களை விட கடுமையாக பயிற்சி செய்யக் கூடியவர். ஒவ்வொரு ஆட்டத்தையும் துல்லியமாக திட்டமிட்டு ஆடுபவர். இவ்வளவும் செய்தோம் என்றால் கூடிய விரைவில் சதங்களும் வந்து தானே ஆக வேண்டும் என்று நினைக்கக் கூடும் அவர். “நான் இளைஞனாக இருக்கும் போது இது போன்ற வறட்சிக்காலங்களை பார்த்திருக்கிறேன்; அப்போதெல்லாம் மீண்டுவருவேனா என யாரும் ஐயப்படவில்லை. இப்போது வயதாகி விட்டதால் நம்பிக்கை இழக்கிறார்கள் என் மீது” என்கிறார் சச்சின். உண்மையில் சச்சின் மீதான பொறுமை யாவருக்கும் மெல்ல மெல்ல கரைந்து வருகிறது. அதற்கு இரு காரணங்கள்.
ஒன்று இளைய வீரர்களை அணிக்கு அறிமுகப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டிய கட்டத்தில் ஒரு மூத்த வீரர் அவ்விடத்தை பிடித்துக் கொண்டு ஓட்டமெடுக்காமல் வீணடிப்பது அணி நலனுக்கு எதிரானது என்கிறார்கள் ஒரு சாரார். இன்னொரு தரப்பான அணி மேலாண்மை சச்சின் இளைய வீரர்களுக்கு மூத்த வீரர் மட்டுமல்ல ஒரு வழிகாட்டியும் கூட, வரப்போகும் தென்னாப்பிரிக்க தொடரில் ஒரே மூத்த வீரராக அவரது அருகாமை இளைய வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் எனச் சொல்லுகிறது. ஆனால் இந்த வாதமும் சரி சச்சினின் வாதமும் சரி அவர் இயல்பாகவே ஓட்டம் எடுப்பார் என்பதை முன்கூட்டியே ஏற்றுக் கொண்டு விட்டவை. ஆனால் ஓட்டமெடுக்காத பட்சத்தில் சச்சின் அணிக்கு வீண்பாரமாக மாட்டாரா என்கிற கேள்விக்கு நெரடியாக பதில் அளிக்க யாரும் தயாராக இல்லை.
மேலும் ஊடக கண்காணிப்பும் விமர்சனங்களும் மிகுதியாகி உள்ள இன்றைய காலகட்டத்தில் மக்களை தொடர்ந்து திருப்திப் படுத்துவது என்பது எளிதல்ல. சச்சின் அடுத்து நன்றாக ஆட ஆரம்பித்து 200 டெஸ்டுகள் ஆடின சாதனையை செய்தால் அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்கள் போற்றி எழுதப்படும்; கோலாகல மீடியா கொண்டாட்டம் துவங்கும். பின் அவரை மீண்டும் தூற்றுவதற்கும் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு விரைவில் வரும். நூறு சதங்கள், 200 டெஸ்டுகளை மறந்து விட்டு அவருக்கு மீண்டும் சுயநலவாதி பட்டம் கொடுத்து விடுவார்கள். உண்மையில் இன்று சமூக தொடர்பாக்கல் ஊடகங்களில் இருந்து டி.வி விவாதங்கள் வரை வில்லன்களுக்கு தான் மவுசு அதிகம். ஹீரோ என்றால் வார்னெ, கெயில், பீட்டர்ஸன் போல் கோணலான ஆளுமைகளாக இருக்க வேண்டும். ஆக எப்படியும் சச்சின் தவுசண்ட் வாலா இனி அவர் ஓய்வுற்று வேறு தொழில் பார்க்க போவது வரை முடியப் போவதில்லை.
சச்சினால் இன்னும் சில வருடங்கள் ஆட முடியுமா? முடியும். அதற்கு அவர் வெளிநெருக்கடிகளை மறந்து திட்டமிடுதலில் மிகுதியாக ஆற்றலை இழக்காமல் தன் ஆட்டத்தை ரசித்து அதற்காக ஆடத் துவங்க வேண்டும். இனி சாதனைக்காகவோ அணிக்காகவோ அவர் செய்வதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை என்று அவர் முடிவு செய்ய வேண்டும். வெளியேறுவது வெறும் புள்ளியியல் விபரமே என ஏற்க வேண்டும். பந்தை கவனித்து பார்த்து நொறுக்கும் மகிழ்ச்சியை அவர் மீட்டெடுக்க வேண்டும். பத்து வயதுப் பையனாக அவர் இப்படி பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை பந்தடித்து நொறுக்கியும் மரங்களில் ஏறி விழுந்து சேட்டை பண்ணியும் அச்சமற்று இருந்ததனால் தான் அவரது அண்ணன் அவரை கிரிக்கெட் பயிற்சிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அந்த களங்கமில்லா வன்மத்தை தான் இந்த பள்ளிக்கூட பாலக முகம் கொண்ட நாயகனிடம் நாம் மீண்டும் எதிர்பார்க்கிறோம். நம்மை எல்லாம் மகிழ்ச்சியும் கண்ணீரிலும் ஆழ்த்தி விட்டு அவர் விடைபெற வேண்டும். நாம் சொல்லி அவர் போகக் கூடாது.    

2 comments:

மைந்தன் சிவா said...

இது அங்கு முதலே வந்த ஆக்கம் தானே சகோ??
என்னடா வாசித்தது போல இருக்கேன்னு பார்த்தேன் :)

கலக்கல் வழமை போல!

Abilash Chandran said...

நன்றி மைந்தன் சிவா