Friday, December 14, 2012

அஷ்வின் ஒரே நாளில் எப்படி மட்டமான சுழல் வீச்சாளர் ஆனார்?
ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் வாழ்வு இரண்டே வாரங்களில் தலைகீழாய் சரிந்து விட்டது. எங்கிருந்தோ வந்து உலகை வெற்றி கண்ட ஒரு இளம் சுழலர் மீண்டு வந்த இடத்திலேயே சென்று நிற்கிறார். கடந்த ஆஸ்திரேலிய பயணம் மற்றும் தற்போதைய இங்கிலாந்து டெஸ்டு தொடர்களில் அஷ்வினால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல அவரை ஆடுவது எதிரணியினருக்கு அநியாயத்துக்கு சுலபமாகி உள்ளது.
நூற்றுக்கணக்கான ஓட்டங்களை கொடுத்து ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்துவதே அவரை மூச்சு வாங்க வைக்கிறது. இரண்டு விசயங்கள் இந்த விக்கெட் வறட்சியை இன்னும் கசப்பானதாக்குகின்றன.
ஒன்று ஆஸ்திரேலிய தொடருக்கும் இங்கிலாந்து தொடருக்கும் இடையே மே.இ தீவுகள் மற்றும் நியுசீலாந்துக்கு எதிராக அஷ்வின் மிக ஆபத்தான வீச்சாளராக தோன்றினார். ஆனால் ஆஸி மற்றும் ஆங்கிலேய மட்டையாளர்களை எதிரிடுகையில் அவர் முற்றிலும் மாறுபட்ட அல்லது குறைபட்ட சுழலராக தோன்றுகிறார். வெளிப்படையாகவே இதிலிருந்து பார்வையாளர்கள் பெறும் செய்தி அஷ்வினால் தரமான மட்டையாளர்களை வீழ்த்த முடியாது; மே.இ தீவுகள் மற்றும் நியுசிலாந்தினரின் தரமின்மையே அஷ்வினின் மிகையாக உயர்த்திக் காட்டியது என்பது. இந்த அவதானிப்பில் ஓரளவு உண்மை உள்ளது.
முதலில், ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மட்டையாளர்கள் சரளமாக இயல்பாக சுழல்பந்தை ஆடுபவர்கள் அல்ல. ஆனால் அவர்களால் அஷ்வினை திட்டவட்டமான முறையில் எதிர்கொண்டு சமாளிக்க மட்டுமல்ல அவரை குழப்பவும் மனதளவில் முறியடிக்கவும் முடிந்தது. நியுசிலாந்துத் தொடரில் அஷ்வினுக்கு பல மலிவான விக்கெட்டுகள் கிடைத்தன. நியுசிலாந்தினரால் அதிக நேரம் மனம் குவித்து ஆடவோ பொறுமை காக்கவோ முடியவில்லை. ஆனால் இங்கிலாந்து இங்கு வந்து மட்டையாடத் துவங்கிய போது அலிஸ்டர் குக், பீட்டர்ஸன், பிரையர் போன்ற மட்டையாளர்கள் அவரை வெவ்வேறு விதங்களில் வெற்றிகரமாக கையாண்டனர். அவர்கள் விக்கெட்டை சுலபமாக தரவில்லை என்பது மட்டுமல்ல, அஷ்வினுக்கு வசதியான முறையில் தொடர்ந்து வீசவும் அனுமதிக்கவில்லை. அவரது ஒவ்வொரு அஸ்திரமாக பறித்தெடுத்து முறித்தனர். அவர் பெரியவர்களின் விளையாட்டில் நுழைந்த குழந்தை போல் முழிக்கத் தொடங்கினார். அதெப்படி ஒரு சுழலரின் அத்தனை தந்திரங்களும் ஒரே நாளில் உதவாமல் போக முடியும்?
அதற்குக் காரணம் அஷ்வின் சம்பிரதாயமான சுழலர் அல்ல என்பதே. பொதுவாக இந்தியாவில் இவ்வளவு உயரமான சுழலர்களை காண இயலாது. நடுத்தர உயரம் தான் பந்தை மட்டையாளனின் கண் அளவுக்கு மேலே மிதக்க விட நல்லது. ஆனால் உயரத்தில் இருந்து வீசும் போது பந்துக்கு நல்ல துள்ளல் கிடைக்கும். தமிழக அணியில் அறிமுகமாகிய புதிதில் அஷ்வின் இவ்வாறு தன துள்ளலின் மூலமாகத் தான் ஷாட் லெட், சில்லி பாயிண்ட் பகுதிகளில் காட்ச் பெற்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் அவர் மெல்ல மெல்ல தன் ஆட்டத்தில் நுட்பங்களை சேர்க்கத் துவங்கினார். ஆனால் அஷ்வினின் பந்து வீச்சில் நாம் ஹர்பஜனிடம் பார்க்கும் லூப் எனப்படும் பந்தின் மிதப்பை காண முடியாது. ஹர்பஜன் பந்தை சில நொடிகள் உபரியாக காற்றில் நிற்க வைப்பார். விளையாக பந்து உள்ளே வருவது போல தோன்றி சட்டென்று வெளியே போகும். 2001இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டு தொடரில் இவ்வாறு தான் அவர் மட்டையாளர்களை திணறடித்தார். தற்போது இங்கிலாந்து சுழலர் கிரேம் ஸ்வானிடம் ஒருவித driftஐ காண முடிகிறது. வித்தியாசம் இந்த drift காற்றின் திசையை நம்பி உள்ளது என்பது. இங்கிலாந்தில் வீசும் வலுத்த காற்றும் ஸ்வான் பொதுவாக பந்துக்கு தரும் அபரிதமான சுழற்சிகளும் இதற்கு உதவுகின்றன.
ஆனால் இப்படியான மாயங்களை அஷ்வினிடம் எதிர்பார்க்க இயலாது. அவர் ஒரு நடைமுறைவாத தந்திரமான சுழலர். நடு மற்றும் கால் குச்சிகளை நோக்கி பந்தை நேராக வீசுவதே அவர் பாணி. அவர் பொதுவாக இரண்டு விதங்களில் விக்கெட் வீழ்த்துவார். பந்தை பிளைட் செய்து நல்ல நீளத்தில் வீசி மட்டையாளனை அடித்தாட செய்து வீழ்த்துவார். இந்த இங்கிலாந்து தொடரில் மட்டையாளர்கள் அவ்வாறு அவரது பொறியில் எளிதில் விழவில்லை. அவர்கள் அஷ்வினை பெரும்பாலும் ஸ்வீப் செய்தார்கள். அவர் நேராக வீசுவதன் மூலம் பல எல்.பி.டபிள்யோக்களை முன்னர் பெற்றிருக்கிறார். ஆனால் இங்கிலாந்தின் குக்கும் பிரையரும் அதற்கு அனுமதிக்காமல் அவ்வளவு முழுமையாக சுத்தபத்தமாக ஸ்வீப் செய்தார்கள். சரி, ஆப் குச்சிக்கு வெளியே வீசலாம் என அஷ்வின் முயலும் போதெல்லாம் கடுமையாக வெட்டி ஆடினார்கள். இவ்விசயத்தை இங்கிலாந்தினர் மிக தெளிவாக திட்டமிட்டே செய்தார்கள். பொதுவாக பிற அணிகள் அஷ்வினை எப்படி கையாள்வது, தடுத்தாடுவது, ஒற்றை ஓட்டங்கள் எடுப்பது என வியந்த போது குக் வேறொரு திட்டம் வைத்திருந்தார். அவர் அஷ்வினின் பந்தை ஒற்றை ஓட்டங்களை எடுக்க பிரயத்தினிக்க்கவில்லை. அவர் தன்னை விரட்டி அடிக்க தூண்டும் பந்துகளை குக் தடுத்தாடினார். ஏனென்றால் அஷ்வின் பந்தின் நீளம், வேகம் மற்றும் திசையை தொடர்ந்து மாற்றுவதால் அவரை மட்டைக்கு குறுக்கே போய் ஒற்றை ஓட்டம் எடுக்க முயல்பவர்கள் வெளியேற சாத்தியங்கள் அதிகம். அதனால் குக் அஷ்வினின் பொறுமையோடு விளையாடினார். அவர் பந்தை எக்ஸ்டுரா கவர் பகுதிக்கு அடிக்காததால் பொறுமை இழந்த அஷ்வின் பந்தை கொஞ்சம் குறை நீளத்தில் வெளியே வீசுவார். அதற்காகவென காத்திருக்கும் குக் அவரை வெட்டி நாலு அடிப்பார். குக்கின் பெரும் சிறப்பு என்னவென்றால் அவர் பிற அணி மட்டையாளர்களை போலன்றி வெட்டி அடிப்பதற்கான ஒரு வாய்ப்பை கூட தவற விடவில்லை. போனமுறை இங்கிலாந்து இங்கே வந்த போது அவர்களது அப்போதைய தலைவரான அண்டுரூ ஸ்டுராஸ் இதே போன்று தொடர்ந்து square மற்றும் point பகுதிகளில் பந்தை இடைவிடாது வெட்டி நாலு அடித்து மட்டுமே சென்னையில் இரட்டை சதம் அடித்தார். குக்கும் இதே பாணியை பிற்பற்றினார். அப்போது ஹர்பஜன் என்றால் இம்முறை இலக்கானது அஷ்வின். ஆனால் ஸ்டுராஸின் பாணியில் இருந்து குக் ஒரு முக்கியமான விதத்தில் மாறுபட்டார்.
அகமதாபாதில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் குக்கை அஷ்வின் ஒருவழியாய் பந்தை விரட்ட வைத்து ஸ்லிப்பில் பிடிக்க வைத்து வெளியேற்றினார். இதனால் குக் இரண்டாம் இன்னிங்ஸில் அஷ்வின் பந்தை வெளியே சுழற்றி வீசிய போது அற்புதமாக இரண்ரொரு முறை கவர் பகுதியில் விரட்டி நாலு அடித்தார். இந்த நாலுகள் அஷ்வினை குழப்பவும் தளர்த்தவும் செய்தன. ஏனென்றால் குக் பொதுவாக ஆப் பகுதியில் பந்தை விரட்டவே மாட்டார். அது அவரது வலிமை அல்ல. அது அவரது பலவீனம். ஆனால் எப்படி கடந்த நியுசிலாந்து பயணத்தொடரில் தன் மீது வீசப்படும் உயரப்பந்துகளை எதிர்கொள்ள சேவாக் பந்துகளை புல் செய்து ஆறுகள் அடித்தாரோ அதே போன்றே குக்கும் அஷ்வின் விசயத்தில் நடந்து கொள்கிறார். சேவாக் அத்தொடர் முடிந்ததும் புல் செய்வதை மறந்தே விட்டார். ஏனென்றால் அது அவரது பலவீனம் – ஆனால் எதிரியை வீழ்த்துவதற்கு நாம் பல சமயம் நமது பலவீனங்களை பலமாக மாற்றிக் காட்ட நேரிடும். குக் இந்த அற்புதத்தை தான் நிகழ்த்திக் காட்டினார்.
அத்தோடு அவர் அஷ்வின் பந்தை நேராக விரட்டும் நீளத்தில் வீழ்த்திய போது ஸ்வீப் செய்தார். வலுவான ஸ்வீப். அதன் உக்கிரத்தில் சில்லி பாயிண்டில் நின்ற ரஹானேவின் முதுகில் பட்டு காயம் ஏற்பட்டு விட்டது என்றால் பாருங்களேன். ஏனென்றால் இங்கும் அவரது உத்தேசம் ஒன்று இரண்டு ஓட்டம் எடுப்பதல்ல. அஷ்வினை அந்த குறிப்பிட்ட நீளம் மற்றும் திசையில் வீச விடாமல் செய்வது. அதாவது நாம் பொதுவாக குக்கை ஒரு தடுப்பாட்டக்காரர் என்று கற்பனை செய்தால் அவர் இங்கிலாந்து அணியில் பீட்டர்ஸனுக்கு அடுத்தபடியாக அதிரடியாக ஆடக் கூடியவராக இருக்கிறார் – என்ன கொஞ்சம் பவிசாக, நுணுக்கமாக, மென்மையாக ஒரு அதிரடி.
மேற்சொன்ன இரண்டு ஷாட்கள் காரணமாய் அஷ்வின் குறைநீளத்தில் அல்லது மிக முழு நீளத்தில் குக்குக்கு வீசத் தொடங்கினார். அதுதான் குக்குக்கும் வேண்டும். ஏனென்றால் அவர் பின்காலாட்டத்தில் வித்தகர். அஷ்வினின் முதல் வீழ்ச்சி இங்கிருந்து துவங்கியது. அவர் தொடர்ந்து தன்னை கவர் டிரைவ் செய்ய அனுமதிப்பதன் மூலம்  குக்கை வீழ்த்த முயலவில்லை. ஒருநாள் பந்து வீச்சாளரைப் போல ஓட்டங்களை குறைப்பதே அவரது இலக்காக இருந்தது. அவர் பதற்றப்பட துவங்கினார். ஏனென்றால் குக் மேற்சொன்ன உத்திகளை தொடர்ந்து இரண்டு நாட்கள் மனம் தளராமல் அக்கறை இழக்காமல் உடல் களைக்காமல் பிரயோகித்தபடியே இருந்தார். இப்படியான ஒரு மராத்தான் மனக்குவிப்பை, சுயகட்டுப்பாட்டை ஒரு மட்டையாளரிடம் இருந்து அஷ்வின் இதற்கு முன் பார்த்ததில்லை. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய அஷ்வின் முற்றிலும் வேறொருவராக இருந்தார். இரண்டாம் இன்னிங்ஸில் குக்கின் மராத்தான் சதம் முடிந்த நிலையில் அஷ்வின் தன் தன்னம்பிக்கையை, ஆட்டத்திறனை முற்றிலும் இழந்து விட்டவராகத் தோன்றினார்.
விக்கெட் வீழ்த்துவதில் அஷ்வினின் இரண்டாவது உத்தி மாறுபட்ட பந்துகளான நேர்ப்பந்து, காரம் பந்து ஆகியவற்றை தொடர்ந்து எதிர்பாராத வேளைகளில் வீசுவது. தூஸ்ரா அவருக்கு சரியாக வராது. நடந்து வரும் இங்கிலாந்து தொடரில் அவர் ஒரு கால்சுழல் பந்து கூட வீச முயன்றார்; அது படுகண்றாவியாக வீழ்ந்து என்னை அடி அடி என்று இறைஞ்சியது. மட்டையாளர்கள் வேடிக்கையாக அந்த பந்தை அடித்து துரத்தினார்கள். மெண்டிஸுக்கு அடுத்தபடியாக இவ்வளவு மாறுபட்ட பந்துகளை ஒரே ஓவரில் பயன்படுத்துவது அஷ்வின் தான். அவரது முறை இது: ஒரு பந்தை சம்பிரதாயமான முறையில் உள்ளே சுழலும் படி அனுப்புவார். இரண்டு அல்லது மூன்றாவது பந்து சற்று வேகான நேர்ப் பந்தாக இருக்கும். அப்புறம் மட்டையாளன் அவரை நேராக அல்லது கால் பக்கத்தில் அடிக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கையாக ஒரு காரம் பந்து. இந்த காரம் பந்து கால் பக்கம் விழுந்து மிடில் குச்சிக்கு சுழன்று துள்ளும். அஷ்வினை ஆடத் துவங்கிய புதிதில் பல எதிரணி வீரர்களுக்கு இந்த முறை தான ஆக சவாலாக இருந்தது. ஏனென்றால் பெரும்பாலான ஆப் சுழலர்கள் உலகம் முழுக்க பந்து ஒரே நீளத்தில் ஒரே திசையில் வீசுவார்கள். ஆனால் அஷ்வின் ஒன்றை உள்ளே, ஒன்றை நேராக மற்றும் இன்னொன்றை நேரெதிர் திசையில் வெளியே போகும்படியும் வீசுகிறார். ஒவ்வொரு பந்தும் வெவேறு வேகம் மற்றும் நீளம். கொஞ்சம் அசந்தால் குச்சிகள் சிதறும் அல்லது எல்.பி.டபிள்யோ முறையில் வெளியே. சற்றே கும்பிளேவை நினைவுபடுத்தும் பாணி வீச்சு இது. அஷ்வினுக்கு இந்தியாவில் உள்ள மெத்தன வேகத்தில் பந்து நின்று எழும் ஆடுதளங்களில் இந்த முறை நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த கைகொடுத்தது. இங்கிலாந்து வீரர்கள் இந்த முறையை வெற்றி கொள்ளவும் தந்திரம் வகுத்தனர்.
அவர்கள் அஷ்வினின் நேர் வரும் பந்துகளை எப்போதும் தடுத்தாடினர். இப்பந்துக்கு குறுக்கே சென்று எல்.பி.டபிள்யோ ஆகக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். அவரது சம்பிரதாயமான ஆப்சுழல் பந்து மையக்குச்சியில் விழும் கால்திசைக்கு செல்வது. இதை மட்டும் அதிக ஆபத்தில்லாமல் ஸ்வீப் செய்தார்கள். அஷ்வின் காரம் பந்துகளை இத்தொடரில் மிகவும் குறைநீளத்தில் வீசியதும் அவருக்கு உதவவில்லை. ஏனென்றால் ஸ்வீப் செய்த பின் அவர்கள் அவரை வெட்டி ஆட தயாராக இருந்தனர். அவரது ஒவ்வொரு மாறுபட்ட பந்தையும் முதலில் அவர்கள் அவரது கையில் இருந்தே சரியாக கணித்தார்கள். அதனால் குழப்பம் அதிகம் ஏற்படவில்லை. மேலும் பிரையர் பீட்டர்ஸன் போன்றவர்கள் ரொம்ப முன்னால் வருவது, ஒரேயடியாக பின்னால் போவது போன்ற உத்திகளால் அவருக்கு ரொம்ப நெருக்கடி கொடுத்தனர்.
தனது விக்கெட் வீழ்த்துவதற்கான இரண்டு வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் அஷ்வின் நிஜமாகவே அயர்ந்து போனார். முன்னர் இருபது ஓவர்களுக்கு அநாயசமாக ஐந்து விக்கெட்டுகள் எடுக்கக் கூடியவர் இப்போது ஐம்பது ஓவர்களுக்கு மேல் ஒரு இன்னிங்ஸில் வீசி ஒரு விக்கெட் பெறுவதே பெரிய காரியம் என்றாகியது. தனது பிரதான சுழலரின் இந்த உளவியல் வீழ்ச்சியை தோனி கவனித்திருக்கக் கூடும். அவர் அதனால் மும்பையில் நடந்த இரண்டாம் டெஸ்டில் அஷ்வினின் போட்டியாளரான ஹர்பஜனை அணிக்குள் கொண்டு வந்தார். இந்த புது நெருக்கடியும் தனக்கு அதிஷ்டம் போதவில்லை என்கிற நினைப்பும் அஷ்வினை கடுமையாக விக்கெட் வீழ்த்த பிரயத்தனிக்க வைத்தது.
பொதுவாக கிரிக்கெட்டில் ஒருவர் நினைத்தபடி விக்கெட் வீழ்த்த முடியாது. அதுவும் டெஸ்டில் பொறுமையும் கட்டுப்பாடும் முக்கியம். ஆனால் அஷ்வின் மிகுதியாக முயன்றதனால் அவர் கட்டுப்பாட்டை இழந்து மோசமான பல பந்துகளை எதிரணியினருக்கு பரிசளித்தார். நான் கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்ட அஷ்வினின் விக்கெட் வறட்சியை இன்னும் கண்டனத்துக்குள்ளாக்கும் இரண்டாவது காரணம் மும்பை டெஸ்டின் ஆடுதளம் சுழலுக்கு அபரிதமாக உதவியது என்பது. இங்கிலாந்தின் இடதுகை சுழலர் தனிமனிதராக இந்திய மட்டையாளர்களை ஊர்வலமாக வெளியேற்ற அஷ்வின் ஓட்டங்களை கட்டுப்படுத்தவே திணறினார்; விக்கெட் எடுப்பதை தற்காலிகமாக மறந்து விட்டவர் போன்று தோன்றினார்.
அஷ்வின் முன்னர் மிக வெற்றிகரமான T20 சுழலராக இருந்த போது அவர் டெஸ்டில் நன்றாக ஆடுவாரா என்கிற அவநம்பிக்கை இருந்தது. T20யில் அவரது முக்கிய வலிமை அதிரடியாக அடிக்கப்படும் போதும் மனம் தளராக கூர்மையாக சாகசமாக வீசுவது. ஆனால் டெஸ்டு போட்டிகள் இவ்வாறாக மட்டையாளர்கள் தாராள மனப்பான்மையுடன் விக்கெட்டுகளை வழங்க மாட்டார்கள்; அஷ்வினுக்கு டெஸ்டுக்கான பொறுமை இல்லை என ஒரு தரப்பினர் அவரை விமர்சித்தனர். மாறாக டெஸ்டு போட்டிகளில் அஷ்வினுக்கு அபாரமான துவக்கம் ஏற்பட்டது. முதல் ஐம்பது விக்கெட்டுகளை அவர் அவ்வளவு சுலபமாக வீழ்த்திய போது ஒரேயடியாக ஹர்பஜனின் ஆட்டவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என பலரும் கருதினார்கள். ஆனால் இன்று அஷ்வினின் திறனின்மை காரணமாகவே ஹர்பஜன் உள்ளூர் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் எடுக்காமலே இந்திய அணிக்கு திரும்பிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு போதுமான பொறுமை இல்லை என்கிற குற்றச்சாட்டை தானாக நிரூபித்தும் உள்ளார்.
அஷ்வின் தன்னளவில் ஒரு சிறந்த சுழலர் தான். மஞ்சிரேக்கர் உள்ளிட்ட பலரும் கூறுவது போல இந்த ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தொடர் அனுபவம் அவர் மேலும் முதிர்ச்சியான ஒரு சுழலராக எதிர்காலத்தில் பரிணமிக்க பயன்படலாம். அதேவேளையில் அவருக்கு ஒரு நேர்மையான சுயபரிசீலனையும் தேவை உள்ளது.
அஷ்வின் ஹர்பஜன் அல்லது கும்பிளேவின் தரத்திலான சுழலர் அல்ல. குறைந்த திறன்களை தனது உழைப்பு, மனவலு மற்றும் மன சமநிலை காரணமாக மேம்படுத்தி இந்தியாவின் முதல்நிலை சுழலராக உயர்ந்தவர் அவர். அதே வேளை அவர் பாகிஸ்தானின் அஜ்மல் போன்று அற்புதமான தூஸ்ரா மற்றும் போர்க்குணமும் கொண்டவரல்ல. அவரது மாறுபட்ட பந்துகளை ஊகிப்பதும் தற்போது மட்டையாளர்களுக்கு எளிதாகி வருகிறது. அதனால் முழுக்க தன் மாறுபாட்ட பந்துகளைக் கொண்டு விக்கெட் வீழ்த்தும் பாணியை நம்பியிருப்பதை அவர் கைவிட வேண்டும். அதை அவர் ஒருநாள் போட்டிகளில் செய்யலாம். ஆனால் டெஸ்டு போட்டியில் ஒரே நீளத்தில் திசையில் ஆறுபந்துகளை வீசத் துவங்க வேண்டும். ஒரு திட்டமிட்ட கள அமைப்புக்கு ஏற்றபடி தொடர்ந்து அலுக்காமல் வீசி ஓட்டங்களை வறண்டு போக வைக்க அவர் முயலவேண்டும். தொடர்ந்து கட்டுப்பாடாக வீசினால் விக்கெட்டுகள் தானாகவே விழும் என்பதே உண்மை. அஷ்வினின் முக்கிய பிரச்சனை அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் அவசரத்தில் தனக்கான திரைக்கதை ஒன்றை எழுதி அதில் ஏன் எதிரணியினர் நடிக்க மறுக்கிறார்கள் என குழம்புவதும் விசனிப்பதுமே, வாழ்க்கையில் மட்டுமல்ல ஒரு சிக்கலான கிரிக்கெட் போட்டிக்குக் கூட அதற்கான ஒரு போக்கு உள்ளது. அப்போக்குக்கு ஏற்றாற் போல் தன்னை அமைதியுடன் மனக்குவிப்புடன் ஈடுபடுத்த முயலவேண்டும்.
அத்தோடு அவர் தன் ஆட்டத்தை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். கிரேம் ஸ்வான் உள்ளிட்ட பல முக்கிய பந்து வீச்சாளர்களின் ஆட்டமுறை அடிப்படையில் எளிதானது. அவர்கள் வெற்றி பெறக் காரணம் அந்த எளிய முறையை சலிக்காமல் திரும்பத் திரும்ப பின்பற்றுகிறார்கள் என்பது. கிரிக்கெட்டில் அற்புதங்கள் ஒன்றும் இல்லை. அங்கு ஒருவர் தன்னை மந்திர வித்தைக்காரனாக கருதிக் கொண்டால் முகத்தில் அறையும் ஏமாற்றங்களே கிடைக்கும். சுருக்கமாக பெரும் சக்தி பெற துரியோதனன் பிறந்த மேனியில் தன் அம்மா முன் நின்றது போல் ஆகும்.

1 comment:

Rettaival's Blog said...

சுழற் பந்து வீச்சாளர்கள் தான் யோசிப்பதை விட பேட்ஸ்மேனை யோசிக்க விடாமல் செய்தால் தான் பேட்ஸ்மேனை தவறு செய்ய வைத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதுவும் தற்போது அணியில் காணப்படும் பயமும் அவநம்பிக்கையும் எந்த ஒரு எதிரணி மட்டையாளரையுமே உற்சாகம் கொள்ள வைக்கும். பந்துகளில் வெரைட்டி காட்டாமல் தட்டையாக ஒரே மாதிரி வீசினால் அதுவே அவரது வீழ்ச்சிக்குக் காரணம் என்பீர்கள்.

அஷ்வின் பந்து வீசும்போது அதிகம் யோசிக்காமல் டெக்னிக்கில் கவனம் செலுத்துவது அவருக்கும் இந்தியாவுக்கும் நல்லது. விக்கெட் விழாத தருணங்களில் ஷேன் வார்னும் முரளிதரனும் எப்படி பந்து வீசுவார்கள் என்பதை கவனிக்கவும்.அவர்களின் வேகம் கூடும். பேட்ஸ்மேனை தவறிழைக்கவைக்க எத்தனிப்பார்கள். அந்த வகையில் அஷ்வினுக்கு ஹர்பஜனோ கும்ப்ளேவோ முன் மாதிரிகள் அல்ல.