Friday, November 16, 2012

ஓசியில் எழுதலாமா?மனுஷ்யபுத்திரன் உடனான சச்சரவில் சில இடங்களில் ஓசியில் எழுதும் எழுத்தாளர்கள் என லீனா மணிமேகலை திரும்பத் திரும்ப கூறி வருகிறார். இது குறித்த சில விசயங்களை தெளிவு படுத்த வேண்டும்.

ஐம்பதுகளில் இருந்தே நமக்கு ஓசியில் எழுதி வரும் வரலாறு உண்டு. நான் ஜெயமோகனை பதினைந்து வயதில் சந்தித்த போது அவர் இருபது வருடங்களாக ஓசியில் தான் எழுதிக் கொண்டிருந்தார். மிக சமீபமாகத் தான் அவர் ராயல்டி மூலம் ஓரளவு பணம் பெற்றிருக்கிறார். என் கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களில் யாரும் இதுவரை எழுத்தின் மூலம் பத்து ரூபாய் கூட சம்பாதித்திருக்க மாட்டார்கள். அவர்கள் புலம்பியும் நான் கேட்க வில்லை. 

தமிழில் எழுதி அதிகம் சம்பாதிக்க முடியாது என தெரிந்து தான் வருகிறோம். எழுதி சம்பாதிக்கும் லட்சியபூர்வமான சூழலும் இங்கில்லை. நான் அடிப்படையில் நடைமுறைவாதி. இங்குள்ள பதிப்பக சூழல், படிநிலை, அதில் எப்படி ஏறி வருவது, மற்றும் சிறுபத்திரிகை போலித்தனங்கள், அசட்டுத்தனங்களில் ஒரு சிறுபகுதியேனும் அறிவேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் எழுத்தாள நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருக்கையில் என்னை கூட்டாக அவர்கள் அடிமை எழுத்தாளன் என்று தாக்கினார்கள். என்னை அடுத்தவர் பயன்படுத்துவதாக சொன்னார்கள். ஆனால் என் தொலைநோக்கு அவர்களுக்கு புரியாது என்பதால் கடந்த காலத்தில் இருந்து இரண்டு கதைகள் சொன்னேன்.
ஒன்று என் முதல் நூல் பற்றியது. ஐந்து வருடங்களுக்கு முன் தமிழினி வசந்தகுமாரை சந்தித்து மேற்கத்திய ஹைக்கூ மொழிபெயர்ப்புகளை பிரசுரிக்க கேட்டேன். அவர்கள் வெறுமனே மறுப்பதை விட்டு அற்பமாக நடத்தினார். நட்புரீதியாக அவரை தொடர்ந்த சந்திக்க விரும்புவதாக கேட்டேன். அதற்கு அவர் நான் அவரை தொடர்ந்து சந்தித்து ஒருவித இரக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் புத்தகம் பிரசுரிக்க முயல்வேன் என சொல்லி விரட்டி மேலும் அவமானப்படுத்தினார். இன்னொரு சம்பவம் தீராநதி பற்றியது. 

ஐந்து வருடங்களுக்கு முன் தீராநதிக்கு ஒரு நல்ல கட்டுரை எழுதிக் கொண்டு நேரில் சென்று ஆசிரியரிடம் கொடுத்தேன். வாங்கினார். பிறகு தொலைபேசியில் அழைத்து கட்டுரை பிரசுரமாகுமா எனக் கேட்டேன். அதற்கு அவர் என்னை இழிவாக திட்டி இனிமேல் போன் பண்ணாதே என்றார். இதில் தமாஷ் என்னவென்றால் நான் பிற்பாடு உயிர்மையில் இரண்டு வருடங்கள் எழுதியதும் என்னை தொடர்ந்து படித்து அவரே என் வாசகனானார். என்னை பாராட்டி தன் வலைப்பக்கத்தில் எழுதினார். ஆனால் நான் தான் அன்று கட்டுரை கொண்டு வந்த நபர், போனில் அழைத்து அசிங்கமாக திட்டப்பட்டவன் என மறந்து விட்டார். உண்மையில் மனுஷ்யபுத்திரனை விட எனக்கு இவர்கள் இருவரும் தான் அதிகம் முக்கியம். கடந்த நான்கு வருடங்களில் ஆயிரக்கணக்கான் பக்கங்கள் எழுதியிருக்கிறேன். எத்தனையோ இரவுகளில் கண்கள் களைக்கும் போது விரல்கள் சலிக்கும் போது நான் இவர்களை ஒரு நொடி நினைத்துக் கொள்வேன். எனக்கு கிடைத்துள்ள பிரசுர இடத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என நினைத்துக் கொள்வேன். மேலும் என்னை நிராகரித்தவர்கள் என் வளர்ச்சியை பார்த்து வருகிறார்கள் என்பதே உற்சாகமூட்டும் எண்ணம் தானே.

என்னை ஓசி எழுத்தாளன், அடிமை என நினைப்பவர்களை முட்டாள்கள் எனவே நினைப்பேன். ஏனென்று சொல்கிறேன். இங்குள்ள சூழலில் எழுதினால் பணம் கிடைக்காமல் போகட்டும், எழுத போதுமான பத்திரிகை இடமே எளிதில் கிடைப்பதில்லை. இரண்டு விதமான எழுத்தாளர்களுக்கு ஸ்திரமான, எந்த குப்பை எழுதினாலும் பிரசுரிக்க இடம் உள்ளது. முதலில், வயதான எழுத்தாளர்கள். அவர்களுக்கு ஒரு பிம்பம் உள்ளது. அவர்களை படித்து வளர்ந்தவர்கள், அல்லது கூட தோளில் கையிட்டு பழகியவர்கள் இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களாக இருப்பதால் பிரசுரம் அவர்களுக்கு கனவு அல்ல, ரோட்டில் போகிற பெண்ணை பார்த்து இளிப்பது போல எளிதானது. 

இரண்டாவது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போல நிறுவன பலம் உள்ள எழுத்தாளர்கள். அவர்களுக்கு பிரசுரத்தை விட பிரச்சார ஆதரவும் விருதுவாங்கும் வாய்ப்புகளும் வலுவான வலைதொடர்பும் உண்டு. இந்த இரண்டு பின்னணியும் இல்லாமல் எழுத வருபவர்களின் அடிப்படையான நெருக்கடி உண்மையில் முன்னூறு ரூபாய் பணம் சம்பாதிப்பது அல்ல. ஜடாயுக்களின் இடம் தமக்கு கிடைக்கும் என்றால் வேண்டுமானால் அவர்களே கூட பத்திரிகைக்கு பணம் தர தயாராக இருப்பார்கள். அது கூட உண்மையில் நல்ல ஏற்பாடு தான்.

இரண்டு தரப்பினருமே இருக்கக் கூடாதென்றோ அவர்கள் செய்வது தவறு என்றோ நான் கருதவில்லை. ஒரு இளைய எழுத்தாளனாக நான் மோத வேண்டியது அவர்களுடன் தான் என சொல்ல வந்தேன். அந்த போட்டி தான் நல்ல எழுத்தை உருவாக்கும்.உயிர்மையை எடுத்துக் கொள்வோம். நான் நாவல் எழுதினதாக சொன்னதுமே பிரசுரித்து விடுவோமே என ஆதரவாக முன்வந்தார். இத்தனைக்கும் என் புனைவுகள் அதிகம் பிரசுரமாகியதில்லை. ஆனாலும் மனுஷ்யபுத்திரனுக்கு என் மீது ஆபாரமான நம்பிக்கை இருந்தது. கடந்த மார்ச்சில் அவரிடம் போய் நான் புரூஸ் லீ பற்றி புத்தகம் எழுதப்போகிறேன், பிரசுரிப்பீர்களா என்றேன். தாராளமாக என்றார். 350 பக்கத்துக்கு புத்தகம் வந்திருக்கிறது. அவர் எந்த கேள்வியும் இன்றி ஊக்கப்படுத்தினார். ஒரு இளைய எழுத்தாளனுக்கு இது தான் அவசியம். இடமும் ஊக்கமும்.

சின்ன சின்னதாய் கவிதை எழுதி ஓய்கிறவர்களுக்கு இது பெரும் பிரச்சனை இல்லை. ஆனால் நிறைய உரை எழுதும் விருப்பம் கொண்ட என் போன்றவர்களுக்கு உயிர்மை ஒரு கனவு நிலம். உயிர்மையை எதிர்க்கும் பலரில் அப்பத்திரிகையில் பத்தி எழுத ஆசைப்படுகிறவர்களும் அடங்குகிறார்கள். 

கடந்த முறை இதே பிரச்சனையை ஒட்டி முகநூலில் சர்ச்சையை கிளப்பின நண்பர் உயிர்மையில் தன் நாவலை கொண்டு வர ஆசைப்பட்டார். மனுஷ்யபுத்திரன் நிராகரித்து விட்டார். நண்பரிடம் போனில் பேசும் போது கேட்டேன்: “சரி உயிர்மை தான் ராயல்டி தரவில்லை. ராயல்டி தருகிற, உயிர்மை அளவுக்கு வீச்சும் வாசகர் கவனமும் உள்ள இன்னும் நாலு பத்திரிகை சொல்லுங்கள். அதில் எழுதுவோமே” என்றேன். அவரிடம் பதில் இல்லை. நான் கடந்த நான்கு வருடங்களில் வேறு சில பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறேன். ஆனால் உயிர்மையில் எழுதும் போது கிடைக்கிற கவனமும் பாராட்டும் வேறெங்கும் இருப்பதில்லை. ஒரு இளைய எழுத்தாளன் தன் priority என்ன என்று சிந்திக்க வேண்டும். அவனைச் சுற்றி எந்த ஆதரவும் இல்லை. அவன் கிடைக்கிற ஒரு சின்ன மரத்துண்டையாவது பற்றிக் கொண்டு கரையேற வேண்டும்.

மனுஷ்யபுத்திரன் உன் நண்பர் என்பதால் ஆதரிக்கிறாய் என்று நீங்கள் சொல்லலாம். அப்படி நினைப்பவர்கள் ஒரு விசயத்தை பார்க்க தவறுகிறார்கள். கடந்த சில வருடங்களில் உயிரோசை உயிர்மை இரண்டிலும் மிக அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் எழுதி வந்துள்ளவர்கள் மாயா, முத்துக்கிருஷ்ணன், ஷாஜி, மற்றும் நான் உள்ளிட்ட மிகச்சிலரே. மனுஷ்யபுத்திரனிடம் எங்களுக்கு உள்ளது நட்பு கடந்த ஒரு கூட்டுறவு. இதன் மூலம் எங்களுக்கும் வாசகர்களுக்கும் பலன் உள்ளது.
எனக்கு எழுத்து குறித்து பெரும் கனவுகள் உள்ளன. அடுத்த முப்பது வருடங்களேனும் எழுத நினைக்கிறேன். அதற்கான தீர்மானமான திட்டங்கள் என்னிடம் உள்ளன. நான் லீனாவின் மொழியில் “ஓசியில்” எழுதுகிற எதுவும் ஓசி என நான் நினைக்கவில்லை. ஜெயமோகனும் எஸ்.ராவும் முப்பது வருடங்களாய் எழுதினது ஓசி இல்லை. இனியும் அப்படியே!நீட்சே சொன்னது போல் மனிதனுக்கும் அதிமனிதனுக்கு இடையிலான பாலமாக இருப்பவர்களே எழுத்தாளர்கள். எழுத்து மீது மிகப்பெரிய கடப்பாடும் காதலும் இருப்பவர்கள் தொடர்ந்து எழுதி வாசகனை அடைவதே பிரதானம் என நினைப்பார்கள். எழுத்து என்பது சினிமாவில் நுழைவதற்கு முன்பான இளைப்பாறலோ, வலைதொடர்பாக்கமோ அல்ல. அப்படி கருதுபவர்களுக்கு நான் சொல்வது புரியாது.

5 comments:

கே.ஜே.அசோக்குமார் said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்

Abilash Chandran said...

நன்றி கெ.ஜெ.அஷோக்குமார்

சர்வோத்தமன் said...

நீங்கள் எழுத்தாளர் என்பதால் அவ்வவ்போது சர்ச்சைகளிலும் ஈடுபடலாம்.அதுவும் நல்ல விஷயம் தான்.உயிர்மை குறித்து நீங்கள் சொல்வது உண்மை.உயிர்மையில் தொடர்ந்து பத்தி எழுதியவர்கள் எழுதுபவர்கள் அதிக அளவில் கவனிக்கப்படுகிறார்கள்.முக்கிய ஆளுமைகளாக உருவாகுகிறார்கள்.இயற்கை வேளாண்மை பற்றி சங்கீதா ஸ்ரீராம் என்பவர் எழுதிய கட்டுரைகள் தொடர்ந்து காலச்சுவடில் வந்தது.நல்ல கட்டுரைகள் தான்.ஆனால் அதிக அளவில் சென்றடைந்தது என்று சொல்ல முடியாது.புத்தகமாக வரும் போது வேறு மாதிரி இருக்கலாம்.ஆனால் பத்திரிக்கை என்ற அளவில் There is a difference.May be you know more.

Arupam said...

அருமையான கட்டுரை, அழகிய மொழி நடை ...

arivukkarasan p said...

good ..well said