Tuesday, October 23, 2012

பெண் உயரதிகாரிகளும் வீட்டு மனைவி மனப்பான்மையும்


கடந்த வாரம் ஒரு கல்லூரியின் துறைத்தலைவர் வேலைக்கு ஆண் பேராசிரியர்களை குறிப்பாக தேடிக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு பெண் விண்ணப்பித்திருப்பதாகவும், ஆனால் அவரை வேலைக்கு எடுக்க தயக்கமாக உள்ளதாகவும் கூறினார். காரணம் விசாரித்தால் பெண்கள் ரொம்ப அரசியல் பண்ணுகிறார்கள் என்று விநோதமான காரணம் ஒன்றை கூறினார். பின்னர் நான் வேலைக்கு சேர்ந்த இடத்திலும் இன்னும் சில ஆண் பேராசிரியர்களை குறிப்பாய் தேடுவதாகவும் சொல்லி என்னை பரிந்துரைக்க கேட்டார்கள். இது இப்போது ஒரு பாணியாக உருவெடுக்கிறதா? பெண்கள் வேலையிடங்களில் அதிகம் தொல்லை தருகிறார்களா?பெண்களிடத்து ஒற்றுமை இல்லை என்பதை கவனித்திருக்கிறேன். அதாவது பத்து ஆண்கள் சகஜமாக சேர்ந்து பணியாற்றுவார்கள். கருத்துவேறுபாடுகள், பரஸ்பர வெறுப்பு இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் பத்தை மூன்று நான்கு பிரிவுகளாக்கி பரஸ்பரம் ஜென்மப் பகை பாராட்டுவார்கள். இதற்கு உயிரியல் பின்னணி ஒன்று உள்ளதை அறிவோம். அதைப் பற்றி பிறகு பேசலாம்.

பொதுவாக அமர்ந்து செய்யும் மேஜை வேலைகளுக்கு பெண்களை அமர்த்தவே நிர்வாகங்கள் விரும்புகின்றன. பெண்கள் பொறுமையானவர்கள், கனிவானவர்கள் என்கிற பொதுப்புத்தி காரணமாய் கல்வித்துறையிலும் அவர்கள் கணிசமாக அமர்த்தப்படுகிறார்கள். நாம் இங்கு இரண்டு கேள்விகளை கேட்க வேண்டும்.

ஒன்று பெண்கள் இருக்கும் இடங்களில் சண்டை சச்சரவுகள் எளிதில் மூள்கின்றன. பொதுவாக பெண் உயரதிகாரிகள் கொடுங்கோலர்களாக இருப்பதாக உலகம் முழுக்க இன்று புகார் எழுகிறது. இதைப் பெண்களே ஏற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் பெண் மேலதிகாரிகளிடத்து விட ஆண்களின் கீழ் தான் வேலை பார்க்க விரும்புகிறார்கள். பெண் உயரதிகாரிகள் பெண் ஊழியர்களை கீழ்த்தரமாய் நடத்துவதாய், தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாய், அவர்களுக்கு பதவியுயர்வு மறுப்பதாய் சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஆயுவுகள் கூறுகின்றன. இதற்கும் பெண்கள் பொதுவாக குழுக்களுக்குள் பரஸ்பரம் பகைமை பாராட்டுபவர்களாய் இருப்பதற்கும் தொடர்பு உண்டா? இந்த கேள்விகளை பரிசீலிப்போம்.

பெண்கள் அரசியல் தலைமைக்கு வரும் போது எளிதில் சகிப்புத்தன்மை அற்றவர்களாக, பண்பற்றவர்களாக மாறிப் போவதற்கு நம் நாட்டிலேயே ஜெயலலிதா, மம்தா பேனர்ஜி, மாயாவதி என உதாரணங்கள் பார்க்கிறோம். பெண் மேலதிகாரிகளின் இந்த மனப்பான்மைக்கு ஆய்வாளர்கள் ராணித்தேனீ நோய்க்குறி (queen bee syndrome) என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது இன்றும் வேலையிடங்களில் ஆண்களின் ஆதிக்கம் தான் அதிகம். பெண்கள் உயர்பதவிகளுக்கு வருவதற்கும் ஆண்களை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. அதனால் ஒரு பெண் உயரதிகாரி நிலைமைக்கு வருவதற்கு கடுமையாக போராட அதிக திறமை படைத்தவராக இருக்க வேண்டும். மேல் பதவியை எட்டியதும் அவர்களுக்கு பாதுகாப்பின்மை மனநிலை ஏற்படுகிறது. கீழிருக்கும் பிற பெண்களை அவர்கள் போட்டியாளர்களாக நினைக்கிறார்கள். அதனால் அவர்களை தொடர்ந்து மட்டம் தட்டி நெருக்கடி அளித்து வளர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். கேலப் வாக்களிப்பு ஆய்வின் படி 32% பெண்கள் ஆண் மேலதிகாரியின் கீழ் வேலை பார்க்கத் தான் விரும்புகிறார்கள். பெண் மேலதிகாரிகளை ஏற்கும் பெண்கள் 23% தான். ஒரு தேனீக் கூட்டுக்குள் ஒரே ஒரு ராணித்தேனீயும் அதற்குக் கீழ் எண்ணற்ற அடிமை ஆண் தேனீக்களும் இருப்பது போல் தான் இருக்க வேண்டும் என பெண் உயரதிகாரிகள் நினைக்கிறார்கள். இது தான் சமூக உளவியலாளர்களின் கணிப்பு.

ஆனால் இந்த கணிப்பு பிரச்சனையின் ஒரு பக்கத்தை மட்டுமே பரிசீலிக்கிறது. போட்டியும் பாதுகாப்பின்மையும் மனிதர்களை கசப்பானவர்களாக வன்மமானவர்களாக மாற்றும் என்பது உண்மை தான். ஆனால் பெண்ணதிகாரிகளின் சர்வாதிகார மனநிலைக்கு இது மட்டும் காரணம் அல்ல. முக்கியமாக இந்த கணிப்பு மேலோட்டமாக இருக்கிறது. பிரச்சனை உண்மையில் ஆழமானது.

பொதுவாக தமக்கு கீழுள்ள பெண்களை ஊக்குவித்து மேலே கொண்டு வரும் பெண் உயரதிகாரிகளை பார்த்துள்ளேன். ஒரு குழுவை மிகத்திறமையாக வழிநடத்தும் பண்பாக பெண் உயரதிகாரிகளும் சமமாக உள்ளார்கள். ஆக நாம் பெண் உயரதிகாரிகளின் பிரச்சனையை பொதுமைப்படுத்தல் ஆகாது. சில பெண்கள் முழுக்க சகிப்புத் தன்மை அற்றவர்களாக வன்மம் மிக்கவர்களாக ஆகி தனக்கு கீழுள்ளவர்களை பழிவாங்கும் போக்கில் வேட்டையாடுகிறார்கள். இது பல அலுவலகங்களில் நடக்கிறது. இன்னொரு புறம் பல பெண்கள் தமது சகிப்பின்மை, பதற்றத்தை கடந்து சிறந்த உயரதிகாரிகளாக் உருவெடுக்கிறார்கள். இதுவும் நடக்கிறது தான். முதலில் மோசமான உயரதிகாரிகளின் உளவியலை பார்ப்போம். இறுதியில் நல்ல பெண் உயரதிகாரிகளின் மன-அமைப்பை அலசுவோம்.


சகிப்பின்மை, பதற்றம், தொடர்ந்த வன்மம் ஆகியவை பொதுவான பெண் பண்புகளாக உள்ளன. இது உண்மையில் பெண்கள் பற்றிய பொதுபிம்பத்துக்கு மாறாக உள்ளது. பெண் பொறுமையின் உறைவிடம், அன்பின் உருவானவள் என்பதெல்லாம் ஆண்களின் பகற்கனவு மட்டுமே. பெண்கள் அவர்களுக்கான மனச்சிக்கல்களை கொண்டவர்கள். இவை தான் அவர்களின் வேலையிடத்து நடவடிக்கைகளுக்கு அடிப்படை காரணம். சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பெண்கள் அழகான பெண்களை வெறுக்கிறார்கள். ஆண்கள் அழகான ஆண்களை வெறுப்பது குறைவு. அதை விட பல மடங்கு அதிகமாய். ஆண்களுக்கு பொதுவாய் பிற ஆண்களின் அந்தஸ்தும் அதிகாரமும் தான் பொறாமையை வயிற்றெரிச்சலை கிளப்புகிறது. ஆனால் பெண்களுக்கு உடல் தோற்றம் பற்றின பிரக்ஞை அதிகம். அவர்களை உடல் அடையாளம் சஞ்சலப்படுத்துகிறது. என் மனைவியின் அலுவலகத்தில் ஒரு பெண் கவர்ச்சியாக ஆடை அணிந்து வரும் ஒரே காரணத்துக்காக சக பெண் ஊழியர்களை அவளை தனிமைப்படுத்தி பகைமை பாராட்டி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வேலையை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு கொண்டு போனார்கள். அந்த பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் மன-அழுத்தம் முற்றி அலுவலகத்திலெயே மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். பள்ளிகளில் கல்லூரிகளில் காதலை அதிக ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் பெண் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கண்கள் சதா எந்த ஆண் விழிகள் எந்த பெண்ணுடலை தீண்டுகிறது என்பதை கவனித்தபடியே உள்ளன. பெண்கள் நவீனமாய் ஆடையணிவதை பெண் ஆசிரியர்கள் உக்கிரமாய் எதிர்க்கிறார்கள். இதற்குக் காரணம் சக பெண்ணுடல் மீதான (ஆணின் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான) பெண்ணின் அக்கறையா அல்லது பாலியல் பொறாமையா என்கிற விவாதத்துக்குள் இப்போது செல்ல வேண்டாம். பெண்கள் பாலியல் நெருக்கடி மற்றும் பதற்றம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். பாலியலை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உடல்களை அஞ்சுகிறார்கள்.

சுதந்திரமான பாலியலை ஆண்களும், குறிப்பாக வலதுசாரி ஆண்கள், எதிர்க்கிறார்களே, அது ஏன் என்ற கேள்வியும் வருகிறது. அதற்குக் காரணம் அவர்களுக்குள் உள்ள பெண்மை தான். இந்த பெண்மையை நாம் வேறு பெயரால் அழைக்க வேண்டும்.

பெண்களின் இந்த ஒழுக்கப் போலீஸ் மனநிலைக்கும் குடும்ப அமைப்புக்கும் ஒரு தொடர்புள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக பெண்கள் குடும்பத்தை நிர்வகிப்பவர்களாக இருந்து வந்துள்ளதால் குடும்ப கட்டமைப்பின் பாதுகாப்பு அவர்களுக்கு அதிமுக்கியமாய் இருந்துள்ளது. வேட்டையாடியும் வேலை செய்தும் குடும்பத்துக்கு பொருள் கொண்டு வரும் ஆணை அவர்கள் தக்க வைத்தாக வேண்டும். பிற பெண்களை அவர்கள் போட்டியாளர்களாக நினைப்பது இங்கிருந்து துவங்கி இருக்க வேண்டும். அடுத்து நவீன காலத்தில் பெண்கள் வேலைக்கு வரும் போது அவர்கள் வேலை இடத்தை ஒரு குடும்பமாக பாவிக்கிறார்கள். அங்கு அவர்கள் முழுமையான அதிகாரத்தை ஸ்தாபிக்க, கட்டுபாட்டை நிறுவ முயல்கிறார்கள். பிற பெண் போட்டியாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற தூண்டுதல் இயல்பாகவே ஏற்படுகிறது.

பொதுவாக பெண்களை வேலைக்கு வைப்பதில் உள்ள அனுகூலம் அவர்கள் எதையும் கவனத்துடன் அக்கறையும் சின்ன சின்ன தகவல்களில் ஆர்வம் காட்டி செய்வார்கள் என்பது. சுருக்கமாக அவர்கள் ஆண்களை விட பொறுப்பானவர்கள். இது உண்மையே. ஆனால் பிரச்சனை பெண்கள் இந்த சின்ன விசயங்களின் மீதான பொறுப்புணர்வை பல சமயங்களில் மிகைப்படுத்தி பதற்றமாகிறார்கள் என்பது. குழந்தையின் சட்டைக்காலரில் உள்ள அழுக்கைப் பற்றி இடிந்தகரை அணு உலை அளவுக்கு கவலைப்படும் பெண்களை பார்த்திருக்கிறேன். ஒழுங்கில் சின்னதாய் குலைவு ஏற்பட்டாலே பெண்கள் மிகவும் பதற்றமாவார்கள். அனைத்தும் மிக ஒழுங்காக கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதை ஒரு பள்ளிக்கூட ஆசிரிய மனநிலை எனலாம்.

பொதுவாக பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாணவர்களை முழுக்க கட்டுப்படுத்தலாம் எனும் கற்பனையோடு இருப்பார்கள். குழந்தை என்பது அவர்களுக்கு ஒரு இயந்திரம். அதை தொடர்ந்து முறுக்கேற்றி சரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். பல ஆசிரியர்கள் வகுப்புகளில் கட்டுபாட்டை இழந்து கத்துவது, மாணவர்களை பெருங்குற்றம் இழைத்தது போன்று தண்டிப்பது எதற்கென்று பார்த்தோமானால் ஒரு சின்ன விசயமாக இருக்கும். பெண்கள் மேலதிகாரியனதும் இந்த “பள்ளி ஆசிரியர் மனநிலையை” அலுவலகத்துக்கு கொண்டு வருவார்கள். பல சமயங்களில் ஒரு அலுலகத்தில் பீதிச் சூழலை ஏதாவது அற்பக் காரணத்துக்காக ஏற்படுத்துவார்கள். நிலநடுக்கம் வந்தது போல் ஊழியர்கள் கையை பிசைந்தபடி நிற்பார்கள். சர்வாதிகார பெண் மேலதிகாரிகள் இது போன்ற பீதிச் சூழல்களில் திளைக்கக் கூடியவர்கள். அவர்கள் தமக்கு மேல் கூரை பற்றி எரியும் போது உள்ளூர அமைதியை உணர்கிறார்கள்.

இப்படியான பெண்கள் சின்ன சின்ன ஒழுக்கப்பிசகுகள் ஒரு வேலையின் பெரிய இலக்கை பாதிப்பதில்லை என்பதை உணர்வதில்லை. வேலையிடத்தில் தவறு நேர்வது இயல்புதான், தவறிழைத்தவரை ஒரு சட்டைக்காலரைப் போல போட்டு தேய் தேயென்று தேய்க்க வேண்டியதில்லை என்று புரிந்து கொள்வதில்லை. பல மாதிரியான மனிதர்கள் ஒரு வேலைக்குழுவில் இருப்பார்கள். அவர்கள் இயந்திரத்தனமாக துல்லியமாக இயங்க வைப்பது சாத்தியமல்ல. அவரவர் கோணலுடன் தனித்துவ பாணியுடன் வேலை பார்த்தாலும் இறுதியில் இலக்கை எப்படியும் எட்டி விட முடியும் என்ற உண்மையை ஏற்பதில்லை. மருமகள் சமையலை சதா குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார் போல பெண் உயரதிகாரிகள் நீதிவான் மனநிலையில் எப்போதும் இருக்கிறார்கள். வேலைக்காரி பெருக்கி விட்டுப் போன தரையை மீண்டும் ஒருமுறை பெருக்கி திருப்தி அடையும் வீட்டு மனைவி போல் அவர்கள் அனைத்து வேலைகளை தம்மால் மட்டுமே சரியாக செய்ய முடியும் என விடாப்பிடியாய் நம்புகிறார்கள். அற்பமான காரியங்களை மிகைப்படுத்தி அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆவேசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக சுத்தம் செய்யும் பொருட்கள் பற்றிய விளம்பரங்கள் (தரை துடைக்கும் லோஷனில் இருந்து துணி துவைக்கும் பொடி வரை) ஏதோ பாக்டீரியாவால் குடும்பமே அழிந்துபடும் எனும் பீதியை பெண் வாடிக்கையாளரிடத்து உருவாக்குவதைப் பாருங்கள். பெண்கள் ஒரு அலுவலகத்தில் நுழைந்ததும் அங்குள்ள மாறுபட்ட ஊழியர்களை பாக்டீரியாக்களாக நினைக்கிறார்கள். அவர்கள் மனதில் ஒரு மூடி டார்மெக்ஸ் ஊற்றி அவர்களை அழித்து இடத்தை சுத்தமாக்கும் கற்பனை தோன்றுகிறது. பெண்களின் சர்வாதிகாரமும் சகிப்பின்மையும் வீட்டு மனைவியின் கட்டுப்பாட்டு வெறியில் இருந்து தோன்றுகிறது. இது ஒரு அடிப்படையான உளவியல்/உயிரியல் பிரச்சனை.

பெண்கள் உயரதிகாரிகளாக இருக்க தகுதியானவர்களா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஒரு ஊழியனாக நான் ஆண்களின் கீழ் வேலை பார்க்க விரும்புவேன் என்றாலும் நான் ஒரு நிறுவனம் நடத்தினால் நிர்வாகப் பொறுப்பை ஒரு பெண்ணை நம்பித் தான் ஒப்படைப்பேன். தொண்ணூறு சதவீதம் பெண்கள் கராறாக அக்கறையாக எந்த வேலையையும் செய்து முடிக்கக் கூடியவர்கள். ஆக இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா என யோசிக்க வேண்டி உள்ளது.

ஒரு கலாச்சார அளவில் பெண்கள் குடும்பப் பொறுப்புகளில் இருந்து மெல்ல மெல்ல விலகி சமூகப் பொறுப்புகளை ஏற்பவர்களாக மாறும் போது அவர்கள் மேற்சொன்ன பள்ளி ஆசிரியர் மனநிலையில் இருந்து விலகக் கூடும். நிர்வாகம் என்பது தனிமனிதர்களை அவர்கள் போக்கில் பணி செய்ய அனுமதித்து இலக்கை எட்டச் செய்யும் உத்தி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடும். தமக்குப் தொழிலில் போட்டி பெண்கள் அல்ல ஆண்கள் தாம் எனும் முடிவுக்கு அவர்கள் வரக் கூடும். தோற்றத்தை விட அதிகாரமும் அந்தஸ்துமே முக்கியம், பாலியல் அச்சுறுத்தல் வெறும் கற்பிதம் என அவர்கள் உணரக் கூடும். நிஜமான பெண் விடுதலை என்றால் பெண்கள் ஆண்களிடம் இருந்து விடுபடுவதல்ல; பெண்கள் தம் மிகுதியான “பெண்மை” மனநிலையில் இருந்து கொஞ்சம் வெளியேறி கொஞ்சம் ஆண்மையை வரிப்பது தான். இங்கிருந்து நாம் ஒரு உளவியல் தீர்வுக்கு செல்வோம்.

பெண்மை என்பது மனநிலை மற்றும் பௌதீகமாக பெண்கள் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. “குடும்ப மனைவி மனப்பான்மை” பல ஆண்களிடம் இருப்பதை காண்கிறோம். சச்சின் அணித்தலைவராக இருந்த போது அப்படித் தான் இருந்தார். அவர் பதினோரு பேரின் வேலையையும் தன் பாணியில் தானே செய்ய நினைத்தார். செயற்கையான பதற்றத்தை உருவாக்கினார். தோனி அமைதியாக சற்று விலகல் மனநிலையுடன் அணியை சுலபமாக கட்டுப்படுத்துகிறார். அவரது நிர்வாகத்தின் சிறப்பு கீழிருப்போர் அவரது அதிகாரத்தின் கடுமையை உணர்வதில்லை என்பது. சச்சினிடம் பெண்மை மிகுதி. தோனியிடம் ஆண்மையும் பெண்மையும் சமநிலையில் இருக்கிறது. இந்த் சமநிலை குலையும் போது மனிதன் தன்னம்பிக்கையை அமைதியை இழக்கிறான், நெருக்கடிக்குள்ளாகி பலவீனமாகிறான். ஆண்கள் எந்தளவு தமக்குள் ஆண்மையை மிகுதியாக விடக் கூடாதோ பெண்களும் அதுபோல் பெண்மை அதிகமாக அனுமதிப்பது ஆகாது. அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களைப் போல் நடக்க முயல்கிறார்கள் என்பது பொய். அவர்கள் மிகுதியான பெண்மையுடன் இயங்குகிறார்கள், “பெண்மை” என்பது நாம் கற்பனாவாதமாய் புரிந்து கொள்வது போல் அத்தனை சாதகமானது அல்ல என்பதே உண்மை.

பெண்கள் முதலில் முழுக்க ”பெண்ணாவதில்” இருந்து தம்மை பாதுகாக்க வேண்டும். அதற்கு அவர்கள் நவீன விழுமியங்களை ஏற்க வேண்டும். சுதந்திர சிந்தனை கொண்ட பெண்களை நிர்வாகங்கள் உயர்பதவிகளில் அமர்த்துவது மேற்குறிப்பிட்ட பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க உதவும். ஒரு பக்கம் ஏற்கனவே வேலையில் உள்ள சர்வாதிகார பெண் உயரதிகாரிகளுக்கு பக்குவம் ஏற்படுத்தும்படியான மேலாண்மை பட்டறைகளை நிர்வாகங்கள் நடத்த வேண்டும். கீழுள்ள ஆண் பெண்களை கனிவாக நடத்தி அடிப்படை மரியாதை நல்கியே கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை கற்பிக்க வேண்டும். இந்த அடிப்படை அறத்தை நிறுவன விதிகளில் ஒன்றாக வலியுறுத்த வேண்டும். பெண்களை வேலைக்கு தேர்வு செய்யும் போது அவர்களுக்கு உளவியல் தேர்வு வைத்து அவர்களது ஆளுமையை அளவிடுவதும் உதவும்.

ஆண்கள் உலகை ஆண்டதால் தான் இத்தனை போர்கள், வன்முறை, உயிரிழப்புகள் என்று பெண்ணியவாதிகள் இதுவரை பேசி வந்தார்கள். ஆனால் இப்போது பெண்கள் விடுதலை பெற்று ஒரு சின்ன அளவில் உயரதிகாரி நிலையை அடையும் போது பிற பெண்கள் அவர்களிடம் இருந்து தலைதெறிக்க ஓடித் தப்ப பார்க்கிறார்கள். இன்று இந்தியாவை ஆளும் ஒரு பெண் மிகக் குரூரமாக ஈழப்போரை நடத்தி லட்சோபலட்சம் மக்கள் கொன்று அதைப் பற்றி எந்த அக்கறையும் குற்றவுணர்வும் இன்றி இருக்கிறார். ஜெயலலிதா இங்கு அவிழ்த்து விட்ட சர்வாதிகாரத்தை, இரக்கமின்மையை பார்த்தோம். ஆக ஆண்மை அளவுக்கு பெண்மையும் ஆபத்தானது தான்.

இனி இந்த உலக சமூகத்துக்கு ஆண்மையும் பெண்மையும் மிகாதவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களால் தான் மற்றொரு உலகப்போரை தடுக்கவும் மானுட அறத்தை தக்க வைக்கவும் முடியும்.

1 comment:

மைந்தன் சிவா said...

என்ன ஒரு பதிவையா...!!
ஆழமான அர்த்தமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் நீங்கள்..
உங்கள் எழுத்து பலரை சென்றடைய வேண்டும்!