பிடிக்காத ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருப்பது
பிடிக்காத ஒருவர்
பக்கத்தில்
அமர்ந்திருப்பது
ஒரு சுகந்த மலரை
பறிக்க
மனம் தடுமாறுவதைப் போல.

பிடிக்காத ஒருவர்
வெகுவெகு அருகில்
அமர்ந்திருக்கிறார்
ஒரு விரலை வளைத்தால்
தொட்டு விடலாம்.

இதயம் விம்ம
நினைவுகள் ததும்ப
இனம்புரியா இழப்பும்
தீராத வலியும்.

பிடிக்காத ஒருவரை
இவ்வளவு நேசித்திருக்கிறோமா
என்று வியக்கிறோம்.

பிடிக்காத ஒருவரை
பிடிக்காமல் போன நொடி
பிடித்திருக்கிறது என அறிந்ததற்கு
முன்னா பின்னா.

பிடிக்காத ஒருவரை
பிடிப்பதற்கு
இவ்வளவு பிடிக்காமல் போக
வேண்டியிருக்கிறது.

பிறகு
நாங்கள்
பேச ஆரம்பிக்கிறோம்
அடிக்கடி கைகளை
தொட்டுக் கொண்டு
கண்களால் ஆறுதல்
தெரிவித்தபடி.

அவ்வளவு அமைதியாய்
சின்னதொரு இமைத்துடிப்பு கூட
பிசகாமல்
நேர்த்தியாய் அமைந்த
தெளிவான வாக்கியங்களுடன்.

மீண்டும்
வெகுஅருகில் தான்
இருக்கிறோம்
எங்களிடையேயான
கசப்பு மட்டும்
சற்றும் நிறமற்றதாய்
வாசம் அற்றதாய்
பெயர் அற்றதாய்
எங்களிடையே
அது இருக்கிறது
இரு பறவைகளிடையே
வானம் போல.

அழகான நிதானமான தெளிவான
இவ்வுலகில்
சாத்தியங்கள் எல்லையற்றவை
சுதந்திரமும் முடிவற்றது -
இங்கு
ஒரு இனிமையான பகல்
பிரித்தறிய முடியாமல்
ஒரு மெல்லிய கசப்பை கலந்ததாய்
இருக்கிறது
ஒரு சுகந்தமான
பறிக்க முடியாத
மலரைப் போல்.

Comments

உண்மையான
உணர்வுகளுடன் கூடிய
அவதானிப்பு
நன்றி தியாகு