ஜப்பானிய மரணக் கவிதைகள்: சிறு அறிமுகம்ஜப்பானியர்கள் மரணத்தை வாழ்தலுக்கு நிகராக நிறைவு தரும் செயலாக பார்க்கிறார்கள். அதனால் நாட்டுக்காக, மன்னனுக்காக செய்யும் உயிர்த்தியாகங்கள் ஆகட்டும், தனிநபர் தற்கொலைகள், ஜீவசமாதிகள் ஆகட்டும் அவை துர்சம்பவங்களாக பார்க்கப்படுவதில்லை. இலையுதிர் காலத்தில் ஒரு இலை உதிர்வது எவ்வளவு இயல்போ அவ்வளவு இயல்பே அவர்களுக்கு உயிர்நீத்தலும். மேலும் சீனாவில் இருந்து அங்கு பரவிய பௌத்தம் இவ்வுலகம் ஆசை, அநித்யம் ஆகியவற்றாலான துக்கம் நிரம்பியது என்றும், மனிதன் மரணத்துக்குப் பின் மேற்சொன்ன மனக்களங்கங்கள் அற்ற சுவர்க்கத்தை சென்றடையலாம் என்ற ஒரு மித்தை உருவாக்கியது. அதனாலே அங்கு இறந்தவனை பிணம் என்றல்ல புத்தன் என்றழைக்கவே பிரியப்படுகிறார்கள். இறக்கும் தறுவாயில் மோட்சம் கிடைக்க புத்தரை வாய் விட்டு அழைக்க வேண்டும் என்று அவர்களின் மரபு கூறுகிறது. வானில் மேகங்களின் வடிவில் புத்தர் இறந்தவனை அழைத்துப் போக எழுந்தருள்வார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மற்றொரு பக்கம் நாகார்ஜுனரின் மத்தியம பௌத்தம் ஆகட்டும் சாமுராய்கள் மத்தியில் பின்னர் பிரபலமான ஜென் பௌத்தமாகட்டும் ஆன்மீகப் பேறை அடைவதற்கான தடையாக தர்க்க சிந்தனையை கண்டன. சிந்தனையின் பாரமற்ற தெள்ளத்தெளிந்த மனநிலையே மெய்யறிவு. வாழும் போதை விடவும் இறந்தநிலையில் தான் முழுமையான சிந்தனை விடுவிப்பு சாத்தியம். ஆக மனமற்றுப் போகும் மரணத்தை ஒரு முக்தியாக ஜென் மரபு கருதியதிலும் வியப்பில்லை. சுவர்க்கம் வானத்திலோ ஆழ்மனதிலோ, மரணம் எப்படியும் அவர்களுக்கு வரவேற்புக்குரியதே. இறக்கும் முன் ஒரு கவிதை எழுதி விட்டுப் போவது ஜப்பானியரின் மரபு. இதன் நோக்கம் மேற்சொன்ன ஏற்பு நிலையை சென்றடைய, தனக்குத் தானே உறுதி செய்ய அல்லது பிறருக்கு அறிவிக்க.

ஜப்பானியர் குழுமனப்பான்மை மிக்க ஒரு சமூகம். எதிரே வருபவரிடம் பணிவாக முகமன் சொல்வதற்கும் பதில்கள் உரைப்பதற்கும் அவர்களிடம் நூற்றுக்கணக்கான சொல்லாடல்கள் உள்ளன. ஒரு விரோதியிடம் கூட மிக பணிவாக “உங்களை நேசிக்க என் மனம் அனுமதிக்கவில்லை என்று சொல்பவர்கள் ஜப்பானியர்கள் என்று ஒருமுறை கிண்டலாக சொன்னார் ஜார்ஜ் லூயி போர்ஹெஸ். அத்தனைக்கும் காரணம் அவர்களுக்கு மரபின் மீதுள்ள விடாப்பிடியான பற்று. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பதினாலாவது நூற்றாண்டு வரை நீடித்த காமகுரா காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கமும் அத்துடன் ஜென் தத்துவத்தின் எழுச்சியும் நிகழ்கிறது. உள்நோக்கிய ஜென்னும் சமூகவயமான அவர்களின் மரபும் ஒரு புள்ளியில் இணைகிறது. பதினாறாவது நூற்றாண்டில் இருந்து பத்தொம்பதாவது நூற்றாண்டு வரையிலான இடோ காலத்தில் ராஜவிசுவாசத்தின் பெயரிலான மரணம் என்பது மெச்சப்பட்டது. மன்னனுக்காக தன் வயிற்றைக் கிழித்து கராஹரா எனும் தற்கொலை புரிந்தனர். பல படைத் தளபதிகள் மன்னர் மரணமுற்ற உடனே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தம் கடமையாக எண்ணினர். இதன் நீட்சியாகவே இரண்டாம் உலகப்போரின் போது பல ஜப்பானிய ராணுவ இளைஞர்கள் வெடிகுண்டுகள் நிரம்பிய விமானங்களில் தன்னிச்சையாக எதிரிநாட்டு படைத்தளங்கள் மீது மோதி தம்மை தம்மை அழித்துக் கொண்டனர். அவர்கள் புத்தருக்காக அல்ல மன்னருக்காக தம்மை அழித்துக் கொண்டாலே போதும், சொர்க்கம் செல்லலாம் என நம்பினர். காதல் தோல்வியுற்றோர் மரணம் தமது பிரச்சனைகளுக்கான ஒரு நியாயமான தீர்வு என நம்பினர். சமூகம் தம் மீது ஏற்படுத்தும் களங்கத்தை துடைக்கவும் தற்கொலை உதவும் என்று நினைத்தனர். அவர்களும் ஒரு மரணக் கவிதையை விட்டுச் சென்றனர். ஆக துறவிகள், சாமுராய்கள், படைத்தளபதிகள் போன்றே காதலர்களும் வீரமரணம் உற்றவர்களும் கூடத் தான் அங்கு மரணக் கவிதைகள் எழுதினர். ஜப்பான் மரணத்தை கொண்டாடும் ஒரு சமூகம் என்கிற நம்பிக்கை இப்படித் தான் மெல்ல மெல்ல ஏற்பட்டது. இதற்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது.

இந்தியாவில் இருந்து சென்ற பௌத்தத்தின் இகவுலக மறுப்பை அவர்கள் தமது இயல்பான இயற்கை நேசிப்பின் வழியிலே உள்வாங்கிக் கொண்டனர்.  ஜப்பானியர்கள் உலகத் துயரத்தை அழுகும் உடலின் உக்கிர வலியில் காணவில்லை. அவர்கள் அதை அழிந்து மீண்டும் தோன்றும் இயற்கையின் பேரழகில் கண்டனர். ஆரம்பகால மரணக் கவிதைகளில் நிலையாமையின் குறியீடாக மலர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தபட்டது. பருவச் சுழற்சி எப்படி தவிர்க்க முடியாததோ அதே போன்றே மனித வாழ்வின் நிலையாமையும். இதில் நன்மையும் தீமையும் உண்டு. அழிவும் பிறப்பும் உண்டு. மனிதன் ஒரு பனித்துளியைப் போன்றவன் என பல மரணக் கவிதைகள் சொல்கின்றன. ஒரு பருவத்தில் உறைகின்ற பனி, மற்றொரு பருவத்தில் ஆவியாகிற பனி மீண்டும் வசந்தத்தில் திரும்பும். ஆக இழப்புக்கு துக்கப்படுவதற்கு இணையாக அவர்கள் வாழ்வின் கொடைகளுக்கும் ஆனந்தப்பட தயங்குவதில்லை. முக்கியமாக பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு மனிதன் உள்ளாகிறானே அன்றி அதைக் கட்டுப்படுத்தவோ அறியவோ அதற்கு பொறுப்பாகவோ அவனால் முடியாது. இந்திய விதி தத்துவத்தை ஜப்பானியர்கள் இவ்வாறு மேலும் பௌதிகமாக நேர்மறையாக இயற்கைச் சுழற்சியாக புரிந்து கொண்டனர். ஒரு ஜப்பானிய ஜென் துறவியால் உடலை வெறுக்க முடியாது. ஏனென்றால் உடல் அவனுடையதல்ல. அது பிரம்மாண்டமான இயற்கையின் ஒரு பகுதி. அவன் பணி தன்னை இயற்கையிடம் ஒப்பிவித்து தோன்றும் போது தோன்றி மலரும் போது மலர்ந்து உதிரும் போது தன்னை உதிர்ப்பதே. அதனாலே பிளாத் போன்ற அமெரிக்க கவிஞர்கள் எழுதிய மரணக்கவிதைகளின் நிராகரிப்பும் மனநெருக்கடியுமோ, அல்லது கீட்ஸ் போன்ற கற்பனாவாதிகளின் சாஸ்வத விருப்பமோ இவர்களிடம் இல்லை. மேற்கத்திய மரபு மனநெருக்கடியின் பக்கம் நின்று ஒன்று மரணம் இல்லை என்றோ அது மட்டுமே உண்டு என்றோ மிகையாக பேசுகிறது. ஜென் மரபு மரணம் வேறுபட்ட ஒன்றல்ல, அதுவும் வாழ்வே என்கிறது.

ஆனால் ஜப்பானிய மரணக் கவிதைகள் அத்தனையும் ஜென்மரபை சார்ந்ததோ அதில் இருந்து தோன்றியவையோ அல்ல. அவை ஜப்பானியரின் ஆதிப்பண்பாட்டில் இருந்து தோன்றியவை. பௌத்தமும் ஜென்மரபும் அவற்றுக்கு ஒரு உயர்ந்த தத்துவார்த்த ஆன்மீக நிலையை அளித்தன. அதனாலேயே காதலர்களும் போர்வீரர்களும் எழுதியவற்றில் இருந்து துறவிகளும் ஹைக்கூ கவிஞர்களும் ஜென்மரபை சேர்ந்த சாமுராய்களும் இயற்றியவை மேலும் தரமானவையாக உள்ளன. அவற்றையே நாம் இங்கு காணப் போகிறோம்.

ரெங்கா மற்றும் தாங்கா ஆகியன ஜப்பானியரின் இரு முதன்மை கவிதை வடிவங்கள். ரெங்கா எனும் கூட்டுக் கவிதையின் முதல் சில வரிகளை தனித்தெடுத்து வளர்ந்ததே ஹைக்கூ. ஜப்பானிய மரணக் கவிதைகள் தாங்கா மற்றும் ஹைக்கூவில் தாம் அதிகம் எழுதப்படுகின்றன.

மரணத்துக்கு முன் கவிதை எழுதுவதென்பது வாழ்வை அதன் போக்கில் வாழ அறிவுறுத்தும் ஜென்னுக்கு எதிரானதில்லையா? இந்த கேள்வி மரணக் கவிதைகளின் மீது ஒரு ஐயத்தை தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. கவிதை ஆசான்களிடம் தம் மனைவிக்கு மரணக் கவிதை எழுதித் தரக் கேட்கிற கணவன்கள் அங்கு உள்ளனர். பொதுவாக இக்கவிதைகள் மரணத்துக்கு சற்று முன்னர் எழுதப்படுகின்றன. போர் வீரர்களும் தற்கொலை புரிபவர்களும் ஏற்கனவே எழுதி எடுத்துச் செல்கின்றனர். எழுத முடியாத நிலையில் மரணப்படுக்கையில் இருப்பவர்கள் படுத்தபடியே சொல்ல பிறர் எழுதிக் கொள்கிறார்கள். நருஷிமா சுஹாசிரோ என்பவர் மரணக் கவிதை எழுதும் முன்னர் தாம் இறந்து விடக் கூடும் என்கிற பயத்தில் 50வது வயதில் இருந்தே மரணக் கவிதைகள் எழுதி அவற்றை தம் ஆசான் ரெய்செய் தமெயெசுவிடம் கொடுத்து கருத்து கேட்டு வந்தார். பல வருடங்கள் கடந்தும் சுஹாசிரோவுக்கு வேளை வரவில்லை. ஆசானும் அலுத்துப் போனார். எண்பதாவது வயதில் சுஹாசிரோ இப்படி எழுதி ஆசானிடம் கொடுத்தார்:

எண்பது வருடங்களுக்கு மேலாக
மன்னர் பெருமான் மற்றும்
பெற்றோர்களின் கிருபையால், வாழ்ந்து விட்டேன்
சாந்தமான இதயத்துடன்
பூக்களுக்கும் நிலவுக்கும் நடுவே

ஆசான் பார்த்து விட்டு சொன்னார் “உனக்கு 90 வயதாகும் போது முதல் வரியை மட்டும் மாற்றி விடு

மற்றொரு கவிஞர் சாகும் முன் ஒரு அங்கத மரணக் கவிதை எழுதினார்
“இந்த கவிதையை இன்னொருவரிடம் இருந்து
கடன் பெற்றேன்
நான் செய்கிற கடைசி இலக்கிய திருட்டு இதுதான்

மரணக்கவிதை எழுதும் சடங்கை எதிர்க்கிற ஜென் துறவிகள் ஒரு பக்கம் இருக்க பலர் தயங்காமல் ஜப்பானிய மரபின் தொடர்ச்சியாக மரணக் கவிதைகளை விட்டுச் செல்கிறார்கள். சில மரணக்கவிதைகள் கவிதைகள் ஜென் போதிக்கும் ஞானத்தை மறுப்பவையாக, இறக்கும் போது முக்தி வாய்க்கும் எனும் தேய்வழக்கை கேலி செய்பவையாகவும் உள்ளன. மரணக்கவிதைகளின் சிறப்பே இது தான். அவை மரணத்தை ஏற்றுக் கொள்ளவும் அப்படி ஏற்றுக் கொள்ளும் மனித மனத்தின் அகங்காரத்தை கேலி பண்ணவும் செய்யும். இதற்கான முழுமுற்றான சுதந்திரத்தை அவை கொண்டுள்ளன.
கீழ்வரும் கேலிக் கவிதையில் உள்ள களங்கமின்மையை பாருங்கள்.
ஹனாபுசா இக்கெய் (இறந்த வருடம் 1843)

இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள்
வாழலாம் என்று தான் எண்ணினேன்
ஆனால் இதோ வருகிறது மரணம்,
எண்பத்தைந்தே வயதான
ஒரு குழந்தையிடம்.

சுவர்க்கம் பற்றின தேய்வழக்கை கேலி பண்ணும் மொரியா செனனின் (இ. 1838) கவிதை:

நான் செத்தால்
ஒரு கள்ளுக்கடையில்
வைன் பீப்பாய் அருகே புதையுங்கள்
அதிர்ஷ்டமிருந்தால்
பீப்பாய் கசியட்டும்.

சிலர் மரணக் கவிதை எழுதி விட்டு சாவில் இருந்து மீண்டும் சங்கடமான சூழ்நிலையில் இருப்பதுண்டு.

“பிழைத்த பின் அவர் தன்
மரணக் கவிதையின் நடையை சீர்செய்கிறார்

இன்னொரு நகைச்சுவை கவிதை.

“மருத்துவர்கள்
அவன் மரணக்கவிதை பாராட்டி
கிளம்புகிறார்கள்

பின்நவீனத்துவ கூறுகளும் காணக் கிடைக்கின்றன.
பாஷோ

“ஒரு பயணத்தில், நோயுற:
என் கனவு திரிகிறது
வறண்ட வயல்களின் மேலாக

இதை ஒருவர் இப்படி பகடி செய்கிறார்:
“அறைக்குள் பூட்டப்பட்டு:
என் கனவு திரிகிறது
விபச்சார விடுதிகள் மேலாக

1.பெய்க்கொ (இறந்த வருடம் 1903)
Baiko
(p.138)

பிளம் பூவிதழ்கள் வீழ்கின்றன
நிமிர்ந்து நோக்க வானம்,
ஒரு துல்லியமான தெளிவான நிலவு.

2.பைர்யு (இ. 1863)
Bairyu

ஓ ஹைடிராங்கியா புதரே
மாறி மாறி அடைகிறாய்
மீண்டும் உன் ஆதிநிறத்தை

குறிப்பு: ஹைடிராங்கியா புதர் கோடையில் பூ பூக்கும். இப்பூக்கள் ஏழுமுறை தொடர்ந்து வண்ணங்கள் மாறும்.

3.பைசெய் (இ. 1745)
Baisei
(p.140)

நித்தியத்தின் தீவு
ஒரு ஆமை தன் ஓட்டை காய வைக்கிறது
வருடத்தின் முதல் சூரிய ரேகைகளில்.

குறிப்பு: இங்கு குறிப்பிடப்படும் ஹொராய் தீவு சொர்க்கத்தின் தீவு என்று கருதப்படுகிறது.
4.பெக்கொ (இ. 1751)
Bako

பள்ளத்தாக்கை திரும்ப நோக்கும் போது:
எந்த வாழ்விடமும் இல்லை,
குயில் கூவல்கள் தவிர


5.பங்கொங்கு (இ. 1748)
Bankoku

ஆக நீண்டதொரு மழைக்கால இரவு.
பிளம் பூவிதழ்கள் உதிர்கின்றன; முடிவாய்
அந்த மேற்குத்திசை நிலா


6.சென்செகி (இ. 1742)
Senseki

ஒருவழியாய் கடைசியில் கிளம்புகிறேன்:
மழையற்ற வானில், ஒரு குளிர்நிலா
என் இதயம் பரிசுத்தமானது

7.செட்சுடொ (இ. 1776)
Setsudo

ஆக இப்போது,
அவ்வுலகுக்கான என் யாத்திரைக்கு
அணிவேன் பூப்போட்ட கவுன் ஒன்று

குறிப்பு: பூப்போட்ட கவுன் ஜப்பானியர் செர்ரிப்பூ பூக்கும் வசந்தத்தில் அணியும் ஒரு அழகான கிமோனொ ஆடை.

8.ஷகாய்(இ. 1795)
Shagai

எதார்த்தம் ஒரு மலரைப் போன்றது:
அந்தியின் ஊடே
மூழ்குகின்றன குளிர்மேகங்கள்

9.ஷியெய்(இ. 1715)
Shiei

இது போன்ற ஒரு வேளையில்
இப்பழமொழி நிஜமாகிறது
இதுவும் கடந்து போகும்

10.கொஹொ கென்னிச்சி (இ. 1316)
Koho Kennichi

இருந்தபடியோ நின்றபடியோ உயிர்நீத்தல் என்பது ஒன்றுதான்
நான் விட்டு விட்டுப் போவதெல்லாம்
எலும்புகளின் குவியலே
வெற்று வெளியில் முறுகி மேலெழுந்து
கீழிறங்குகிறேன் கடலை நோக்கிய
இடியின் முழக்கத்துடன்.

குறிப்பு: ஜென்னில் அமர்ந்தபடி அல்லது நின்றபடி இறப்பது உயர்ந்ததாக கருதப்பட்டது.

11.கொகெய் சொச்சின் (இ. 1597)
Kokei Sochin

அறுபது வருடங்களுக்கு மேலாய்
அடிக்கடி கூவினேன் “கட்சு என, எந்த பயனும் இன்றி.
ஆக இப்போது சாகும் தறுவாயில்
மீண்டும் ஒருமுறை “கட்சு எனக் கூவுதல்
மாற்றி விடப் போவதில்லை ஒன்றையும்

குறிப்பு: ஜென் துறவிகள் விழிப்புணர்வு அடையும் போது “கட்சு எனக் கூவுவார்கள்.

12.நம்போ ஜொம்யொ (இ. 1308)
Nampo Jomyo

காற்று தொலைந்து போகட்டும்!
மழை நாசமாய் போகட்டும்!
நான் கண்டுணரவில்லை எந்த புத்தனையும்.
மின்னல் தாக்கியது போல் ஒரு அடி
உலகம் தனதச்சில் சுழல்கிறது

13.செய்கன் சொய் (இ. 1661)
Seigan Soi

வாழ்க்கையின் களிப்பு,
வாழும் களிப்பு...
ஜென் கொள்கைகள் அர்த்தமிழக்கின்றன
மரணிக்கும் முன்
என் போதனையின் ரகசியம் இதுவே
என் கைத்தடி தலையசைத்து ஆமோதிக்கிறது
“கட்சு

14. ஷிக்கி (இ. 1902)
Shiki

14. பீர்க்கு செடி பூக்கிறது
நான், சளியால் நிறைந்து,
புத்தனாகிறேன்

15. 180 லிட்டர் சளி,
பீர்க்கை நீர் கூட காப்பாற்றாது
என்னை இனி

குறிப்பு: பீர்க்கை கொடியின் சாற்றை காசநோய்க்கு மருந்தாக பயன்படுத்தினார்கள். 1890களில் சீன-ஜப்பானிய போரைப் பற்றி எழுத நிருபராக ஷிக்கி சீனா சென்றார். அங்கு அவருக்கு காசநோய் தொற்ற பல வருடங்கள் படுத்தபடுக்கையாகி இறந்தார். தனது நோயின் பல்வேறு கட்டங்களை கவிதைகளாக எழுதினார். மரணம் நிச்சயமான கட்டத்தில் ஷிக்கி பீர்க்கை சாற்றை நிராகரித்தார்.

16. டைகன் சொஃபு (இ. 1555)
Taigen Sofu

என் வாழ்வின் கண்ணாடியை
என் முகத்துக்கு நேரே உயர்த்துகிறேன்: அறுபது வருடங்கள்.
ஒரே வீச்சில் என் பிரதிபிம்பத்தை நொறுக்குகிறேன்
உலகம் வழக்கம் போல
அனைத்தும் அதனதன் இடத்தில்

17.டெட்டோ கிக்கோ
Tetto Giko

உண்மை ஒருபோதும் மற்றொன்றில்
இருந்து எடுக்கப்படுவதில்லை.
ஒருவன் அதை
எப்போதுமே சுமக்கிறான் தனக்குள்ளே.
கட்சு!

18. தொசுய் உன்கெய் (இ. 1683)
Tosui Unkei
எழுபது வருடங்களுக்கு மேலாக
வாழ்வை உச்சபட்சமாக சுவைத்து விட்டேன்
மூத்திர வாடை என் எலும்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளது.
இதனால் எல்லாம் என்ன ஆகிவிடப் போகிறது?
ஹோ! நான் திரும்பப் போகிற இடம் எங்கே?
சிகரத்துக்கு மேல் வெளுக்கிறது நிலாவெளிச்சம்
தெளிவாய் ஒரு காற்று அடிக்கிறது.

19. இன்று தான் சமயப் பணிகளின் முடிவு
திரும்பச் செல்லுங்கள், நீங்கள் எல்லாரும், உங்கள் வீடுகளை நோக்கி.
உங்களுக்கு முன் கிளம்புகிறேன்,
கிழக்கு அல்லது மேற்குதிசையில்,
காற்று என்னை எங்கே சுமந்து போகிறதோ அங்கே

20. இச்சிமு (இ. 1854)
Ichimu

நொறுங்கின கனவு
எங்கே செல்லும்
இந்த பட்டாம்பூச்சிகள்


21. இச்சிஷி (இ. 1746)
Ichishi

என்ன புரிகிறது உனக்கு?
ஒரு சப்தம்,
இலையுதிர் பருவத்தின் குரல்

22. இப்பு (இ. 1731)
Ippu

என் குருவின் பாதையில்
நான் தயங்கிச் செல்லும் போதும், எங்களுக்கு மேல் ஜொலிக்கிறது
ஒரு நிலவு.

23. இஸ்ஸோ (1899)
Isso

விலையை குறைக்கக் கூடாதா!
வயது ஐம்பத்தேழு ஆனால் தான் என்ன?
வருஷம் தான் அநேகமாய் முடிந்து விட்டதே!

24. ஜிக்கோ (இ. 1791)
Jikko

குடும்பத்தினர் முணுமுணுக்கிறார்கள்
மருத்துவருடன் அவர்களின் சட்டைக்கைகளின் ஊடே
கடந்து போகின்றன குளிர்கால மழைகள்

குறிப்பு: ஜப்பானியர்க்கு ரகசியம் சொல்லும் போது சட்டைக்கைகளை முகத்தின் மேல் உயர்த்திக் கொள்ளும் வழக்கம் உண்டு.

25. ஜொமெய் (இ. 1766)
Jomei

சொற்களாலான இலைகள்:
இலையுதிர்பருவ வண்ணங்கள்
நிச்சலமாய் ஒரு மலை

26. ஜொவா (இ. 1785)
Jowa

ரெண்டாவது மாதம்:
ஒரு புது மூங்கில் தொப்பி அணிந்து
வீடு திரும்புகிறேன்

குறிப்பு: ஜப்பானிய மொழியில் ரெண்டாவது மாதமான பனிக்காலத்துக்கு கிஸாரகி எனும் சொல் பயன்படுகிறது. அதற்கு ஒன்றின் மேல் மற்றொன்றாய் ஆடை அணிதல் என்று ஒரு பொருள் உண்டு. இங்கு பனியால் தன்னை போர்த்திக் கொள்ளும் இயற்கையும் ஓரு சிறு தொப்பி அணிந்து நடக்கும் ஜொவாவும் ஒன்றாகிறார்கள்.

27. கஃபு
Kafu

செத்து தான் ஆகவேண்டும் என்றால்
சாக அனுமதியுங்கள்
மழைக்காலத்துக்கு முன்னர்

குறிப்பு: ஜப்பானிய பண்பாட்டு மரபில் நான்கு பருவங்கள் வாழ்க்கைச்சுழலுக்கான குறியீடுகளாகின்றன. மழைக்காலத்துக்கு முன் வரும் இலையுதிர் பருவம் மரணத்துக்கானது.

28. ககாய் (இ. 1778)
Kagai

வெற்றுக் கிளைகள்:
இலையுதிர்காலம் விட்டுச் சென்றது
ஒரு சிள்வண்டின் உள்ளீடற்ற கத்தலை

29. கைகா (இ. 1718)

விநோதம் இடம் வலம் என
பறக்கின்றன மின்மினிகள்
தூதுவர்களைப் போல்

30. கைஷோ (இ. 1914)
Kaisho

மாலைநேர செர்ரிப் பூக்கள்:
மைக்கல்லை என் கிமோனோக்குள் சொருகுகிறேன்
ஒரு கடைசிமுறையாய்

குறிப்பு: மைக்கல்லில் மைக்குச்சியை உரசி கவிதை எழுதுவதற்கான கரைசலை செய்வார்கள். கிமோனோ உடையின் இரண்டு மடிப்புகள் இணையும் முன்பகுதியில் பொருள் வைப்பதற்கு ஒரு பை உண்டு.

31. கன்கியு (இ. 1861)
Kangyu

இது நிஜத்தில் இப்படித்தான்
மேலும் நான் முன்னெப்போதும் கவனித்ததில்லை
புற்களில் பனித்துளிகள்

32. கன்ஷு (இ. 1772)
Kanshu

இலையுதிர் நிலா
அஸ்தமித்து விட்டாலும் கூட, இதயத்தில்
தேங்கியுள்ளது அதன் வெளிச்சம்

33. கரி (இ. 1770)
kari
என்னவொரு துக்கம்: செர்ரிப் பூக்கள்
என்னை வரவேற்கும்
மேகங்கள் ஆகின்றன

குறிப்பு: பௌத்த மரபுப்படி மரணத்தறுவாயில் ஒருவரை மேலுலகத்துக்கு அழைத்துப் போக மேற்கில் மேகங்கள் தோன்றும். கரி செர்ரிப்பூக்கள் மலர்கின்ற வசந்தத்தில் இறந்தார். இறுதியாய் அவற்றை காண நேர்ந்த போது அவர் துக்கமுற்றார்.

34. கசான் (இ.: 1818)
Kassan
கோடையில்
இருக்கிறேன்:
ஒரு தாமரை இலை

35. கெய்டொ (இ.: 1750)
Keido

குயிலின் குரல்
இன்னும் புதிரானதாகிறது
என் மரணத்தறுவாயில்

36. கினு (இ. 1817)
Kin’u
எவ்வளவு சாவகாசமாய் பூக்கின்றன
இவ்வருடத்து செர்ரி பூக்கள்
வரும் அழிவு குறித்து அவசரமின்றி

37. கியு (இ. 1820)
Kiyu
மாலை:
என்னைப் பெற்றவர்களின் பனித்துளியாகிய நானும்
அந்தியே

38. கிஸான் (இ. 1851)
Kizan

நான் போன பிறகு
யார் பார்த்துக் கொள்வது
கிரிசேந்தியச் செடிகளை

குறிப்பு: கிரிசேந்தியப் பூக்கள் இலையுதிர் காலத்தின் முடிவிலும் கூட உதிராதவை. இலையுதிர் காலம் இங்கு மரணத்தை குறிக்கிறது.

39. நகமிச்சி (இ. 1893)
Nakamichi

என் வாழ்வு மற்றும் மரணத்தின்
குறுக்குச் சாலையில்
ஒரு குயில் கத்துகிறது.

40. ஒகெனொ கினெமொன் கனெஹைட் (இ. 1703)
Okano Kine’mon Kanehide

நேற்றைய இரவின் பனி
அடர்ந்த வயல்களில்
பிளம் வாசனை

41. ஒனிட்சுரா (இ. 1738)
Onitsura

என் கனவைத் திரும்பத் தா,
அண்டங்காக்கையே! என்னை எழுப்பி நீ காட்டின
நிலவு மூடுபனியில் மறைந்து விட்டது.

42. ரைராய் (இ. 1780)
Rairai

இலையுதிர் பருவத்திலிருந்து விடை பெறுகிறேன்
கோடையின் பிண ஆடை
அணிந்து

குறிப்பு: பௌத்த ஈமச்சடங்குப் படி இறந்தோர் உடலை சணலால் நெய்த துணியால் பொதிவர். கோடைக்காலத்திலும் சணல் ஆடையணியும் வழக்கம் மக்களிடம் உண்டு. இதை ரைராய் குறிப்புணர்த்துகிறார்.

43. Rando
ராண்டோ (இ. 1686)

ஒரு நொடி
படர்கொடி சிவப்பாக வண்ணமேற்றியது
மாறாப் பசுமரத் தடியை

குறிப்பு: ஜப்பான் முழுக்க பரவராக காணப்படும் இக்கொடி இலையுதிர்பருவத்தில் உதிரும் முன் செந்நிறமாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மரம் தேவதாரு.

44. ரான்செக்கி (இ. 1782)
Ranseki

ஒவ்வொரு நாளும் காணாமல் போனவை
எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன உறைந்துள்ள
மரக்கிளைகள்

45. ரான்செட்சு (இ. 1707)
Ransetsu

ஓரிலை விட்டு விட
மற்றொன்று பிடித்துக் கொள்கிறது
காற்றை

46. ரொக்குஷி (இ. 1881)
Rokushi

எழுபத்தைந்து வருட கனவில் இருந்து
விழித்தெழுகிறேன்
வரகுக் கஞ்சியின் முன்

குறிப்பு: ஒரு சீன நாட்டுப்புறக்கதையில் ஒருவன் தான் வாழ்வில் உயர்ந்து பெரும் பணக்காரனாவதாய் கனவு காண்கிறான். சட்டென்று விழித்துப் பார்த்தால் தனது வரகுக் கஞ்சி விறகு மூட்டாததால் இன்னும் கொதிக்கவில்லை என்று தெரியவருகிறது.

47. ரையுசை ((இ. 1895)
Ryusai

சல்லிசான பாம்பாஸ் புற்கள்
பிரகாசமானது
சாலை

48. ரையுஷி (இ. 1764)
Ryushi

மனிதனே புத்தன்
பகலும் நானும்
சேர்ந்தே இருள்கிறோம்

49. சைபா (இ. 1858)
Saiba

முழுநிலவுக்கு
பக்கமாய்
தலையணை நகர்த்துகிறேன்

50. சருவொ (இ. 1923)
Saruo

செர்ரிப் பூக்கள் உதிரும்
பாதி தின்ற
அரிசிக் கொழுக்கட்டை மேல்

குறிப்பு: ஜப்பானில் வசந்தத்தில் நிகழும் செர்ரிப் பூ விழாவில் அரிசிக் கொழுக்கட்டை உண்பது சடங்கு.

51. செய்ஜு (இ. 1776)

ஒருநொடி கூட
எதுவும் அசையாது இருப்பதில்லை பாருங்கள்
மரங்களில் நிறங்கள்

52. செய்ரா (இ. 1791)
Seira

படகில் ஏற
செருப்பை கழற்றுகிறேன்:
நீரில் நிலவு

குறிப்பு: ஜப்பானிய மரபுப்படி இறந்தவர்கள் படகில் ஏறி ஒரு நதியைக் கடந்து மறு உலகம் செல்வார்கள்.

53. சென்ச்சொஜொ (இ. 1802)
Senchojo

டியுட்சியா பூக்களில்
பொருத்துகிறேன் என் காதுகளை
குயிலோசை கேட்கத் தவறிடுமோ என

54. டெய்ஷிட்சு ( இ. 1673)
Teishitsu

புத்தாண்டு-
என்னை வாழ்வோடு பிணைப்பது
அரிசிக் கஞ்சி

55. தடாடொமொ (இ. 1676)
Tadatomo

இந்த பனியடர்ந்த மாதம்
சூனியமே ஆனாலும் மீதமுள்ளது
என் பிணத்தின் நிழல்

குறிப்பு: தடாடொமொ ஜப்பானிய மரபான முறையில் தற்கொலை செய்தார். அதற்கு முன் எழுதின ஹைக்கூ இது.

56. டோகோ (இ. 1795)
Toko

மரணக்கவிதைகள்
வெறும் மாயை
மரணம் என்பது மரணம். 
  (இந்த மாத உயிர்மையில் வெளிவந்தது)

Comments