Wednesday, March 21, 2012

கால்கள் என்பவை மனதின் சிறகுகள் - உமா சக்தி

ஆர்.அபிலாஷ் எழுதியுள்ள “கால்கள் நாவலை வாசித்து முடித்ததும் நினைவுக்கு வந்தது பிரமிளின் கவிதையொன்று.  “திரை இரைச்சல் என்ற அக்கவிதை (நீண்ட கவிதை)

கால்கள் நாவலுக்கும் இக்கவிதைக்கும் தொடர்பிருக்கிறது. “கால்கள் செயல் இழந்தவர்களின் உலகம் அஸ்தமனமுற்றதாகவே பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அந்தக் கால்களின் கீழே உள்ள சிறகுகளை பலரும் உணர்வதில்லை. ஆர்.அபிலாஷ் எழுதியுள்ள “கால்கள் எனும் இந்நாவலின் மையப் பாத்திரமான மதுக்‌ஷராவின் சிறகுகள் அவளுடைய மனதில் இருக்கிறது. அவள் அவற்றின் மூலம் பெரும் பயணம் செய்கின்றாள்.

இநாவலைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் Ravishing. ஆங்கில இலக்கணத்தில் oxymoron என்று உண்டு. அதாவது Dark Light, Noisy Silence, Bitter Sweet என்று அடுத்தடுத்து முரண் வார்த்தைளை கொண்டது. கால்கள் நாவலின் வாசிபானுபவம் painful pleasure என்று சொல்ல வேண்டும்.

இந்நாவல் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று கதை நாயகி மதுக்‌ஷராவுக்கும் அவளைச் சுற்றி உள்ளவர்களுக்குமான உரையாடல்களின் வழியே. மற்றது மதுவுக்குள் இயங்கும் அவளது அந்தரங்கமான அக உலகம்.

முதல் தளத்திலும் இரு வகைப்பாடுகள். அதாவது மதுவுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் அவளுடன் நெருங்கிய close circle people. நெருங்கிய வட்டத்தில் பேராசிரியர் மதுசூதனன், அவர் மகன் பாலு, மெக்கானிக் கண்ணன், உடன் படிக்கும் கார்த்திக், கோஷி, சுமா, ஷீனா போன்றவர்கள். இவர்களில் சிலர் மதுவுடன் நெருக்கமாக இருப்பதைப் போல தோன்றினாலும் மது மிகவும் தனிமையானவள். அவளது எளிய உலகத்தில் நெருங்கிய நட்பு இல்லை. அவளை உணர்வுபூர்வமாக நெருங்குபவர்களை மது தள்ளியே வைக்கிறாள். அறிவுபூர்வமாக நெருங்க முயன்றாலோ ஆவேசமாக தடுக்கிறாள். தனது தனிமையை மிகவும் தந்திரமாகவும் பத்திரமாகவும் பாதுகாக்கின்றாள். யாருடைய அங்கிகாரமும் அவளுக்குத் தேவை இருக்கவில்லை. தன்னைச் சுற்றியுள்ள ஆணுலகத்தை கூர்மையாக அவதானித்தாலும் தன்னை நெருங்கி வரும் ஆணை எப்படி எதிர்கொள்வது என்று பலமுறை குழப்பம் அடைந்திருக்கிறாள். பிறரால் தொடப்படுவது அவளுக்கு கிளர்ச்சியை அல்ல, பெரும்பாலும் அயர்ச்சியும், ஆசூசையையுமே ஏற்படுத்துகிறது. அவள் வயதையொத்த கார்த்திக்கிடமும் கண்ணனிடமும் மெல்லிய ஈர்ப்பிருந்தாலும் அதை எந்த சந்தர்ப்பத்திலும் வெளிக்காட்டவோ எவ்வித செய்கையின் மூலமோ அதை பகிர்ந்து கொள்ளவோ மது முயன்றதில்லை. கார்த்திக் அவனது காதலியுடன் ஐஸ் க்ரீம் பார்லரில் கைப் பிடித்து உரையாடிக் கொண்டிருக்கும் காட்சி அவளுள் வலியை ஏற்படுத்தி இருந்தாலும் கண்டும் காணாமல் கடந்து போய்விடுகிறாள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முதன் முறையாக மது சேலை உடுத்தியுள்ளாள். கார்த்திக்கின் அந்தக் காதலியும் விலை உயர்ந்த சேலையை அணிந்து அதைப் பற்றிய நுண் விபரங்களை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த விபரங்கள் பிடித்ததோ இல்லையோ கார்த்திக் தன் வாழ்வின் முக்கியமான பேச்சு அதுதான் என்பதைப் போல உலகையும் சுற்றுப் புற சூழலையும் மறந்து அவள் பேச்சில் லயித்திருந்தான். இதை சற்று தூரத்திலிருந்து பார்த்த மதுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வலிய கார்த்திக்கின் வீட்டுக்கு அவள் போக ஆசைப்பட்டதும், அவனின் வீட்டினரை சந்திக்க ஆசைப்பட்ட அவளின் காதல் மனசு அங்கே அழிந்தது. சொல்லப்படாத காதலொன்றின் கடைசி அத்யாயத்தை முதல் அத்யாயம் தொடங்கும் முன்பே கண்முன்னே முடிந்துவிட்ட காட்சி அவளுக்குள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் அவள் மனம் உடைந்து சுக்கு நூறாய் போகவில்லை. ஐஸ்கீரிம் சாப்பிட தயாராக தான் இருந்தது. ஊமை வலிகளைத் தாங்கிய பழக்கம் அவளுக்கு இயல்பாய் அமைந்துவிட்டது.

கார்த்திக் மதுவை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லும் போது நமக்கு அவன் மீது நம்பிக்கை வந்தது. கடைசியில் மதுவைவிட நாமே இவ்விஷயத்தில் ஏமாற்றம் அடைகிறோம். ஏனென்றால் மது புத்திசாலி. எளிதில் உணர்ச்சி வசப்பட்டுவிடமாட்டாள். கார்த்திக்கிடம் அவள் நிறுவ முயன்றது தான் ஒரு புத்திஜீவி என்பது மட்டும்தான். அவனறியாத இந்தப் பக்கத்தை அவள் திறக்கவே இல்லை.

கார்த்திக்குடனும், கண்ணனிடமும், பேசாசிரியரிடமும் மது அடிக்கடி வாதம் செய்வாள். மதுவைப் பொருத்தவரை ஆணித்தரமான கருத்துக்களும், தெளிவான சிந்தனையும், தானே தேடிக் கண்டடைந்த உண்மைகளும் அவளுடைய வாதப் பிரதிவாதங்களுக்கு பக்க பலம். சில சமயம் வீணாக வாதம் செய்கிறோம் என்று தெரிந்திருந்தாலும் எளிதில் compromise ஆகமாட்டாள். அவளுடைய மூர்க்கமான பிடிவாதம் எதிராளியின் சமன் நிலையைக் குலைக்கும் சக்தி உடையது. மதுவின் இயல்பை அறிந்த நண்பர்கள் அவளுடன் அதிகம் முட்டி மோத மாட்டார்கள். ஒரு கட்டத்தில் சரெண்டர் ஆகிவிடுவார்கள். மதுவுக்கு அதுவும் உவப்பானது இல்லை. தன்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல மதுவின் எதிர்ப்பார்ப்பு. அவளின் சுயத்தைக் காயப்படுத்தாமல் இருந்தால் போதும் என்பதை தனது செய்கைகள் மூலம் சொல்கிறாள். ஆனால் முன்கோபி என்றும், பிடிவாதக்காரி என்றும் எப்போதும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறாள். அப்பா நம்புவது போல எதாவது மிராக்கிள் நடந்து மறுநாள் காலையில் தன்னால் நடக்க முடியும் என்றாகிவிட்டால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி கனவில் ஏங்குகிறாள். கனவு மெய்ப்படும் என்கிறார்கள் ஏன் நடக்க வேண்டும் என்ற தனது சாதாரண கனவு மட்டும் கனவாகவே இருக்கிறது, எல்லோருடைய வாழ்விலும் இயல்பாக இருக்கும் ஒரு விஷயம் தனக்கு மட்டும் கனவாக இருந்து கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி அவளைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.

புத்தகங்களும் ஜன்னல் வழியே பார்க்கும் உலகின் அனுபவங்களும் அவள் வாழ்வின் போக்கை கட்டமைக்கின்றன. வீட்டின் ஒரு அறைக்குள் அரை மயக்கத்திலும் தூக்கத்திலும் அவளின் நாளும் பொழுதும் கரைந்து கொண்டிருந்தாலும் அவளுடைய தன்னுணர்வு எப்போதும் விழிப்பு நிலையிலேயே தான் இருக்கும். டாக்டர் ஆப்ரஹாம் மதுவை ஷார்ப் கேர்ல் என்று பாராட்டிப் பேசிய போது நாமும் ஆமோதித்து மகிழ்கிறோம். மதுவின் extra ordinary observation and brilliance நாவல் முழுவதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நாம் ஒரு கோணத்தில் நினைக்கையில் அதற்கு முற்றிலும் வேறான புதிய கோணத்தில் சிந்திப்பவள் மது. அதெப்படி என்று ப்ரபசரோ கார்த்திக்கோ கேட்க முயன்றால் ஏன் அப்படி இல்லாம இருக்கக்கூடாதா என்று அடுக்கடுக்காய் விளக்கத்தை அவர்கள் வாயடைத்து போகும் வரை கொடுப்பாள். ப்ரபஸர் தவறாக நினைத்தாலும் கூட பரவாயில்லை அவர் தன் மகனை நடத்திய விதமும் அவர் சேர்த்திருந்த அந்த ஹாஸ்பிடலும் சரியில்லை என்ற தன் கருத்தை பல தடவை அவரிடம் நேரடியாக சொல்லி இருக்கிறாள்.

மதுவின் அக உலகம் மிகவும் ஆழமானது. அவளின் நுட்பமான அறிவு கடவுளில் ஆரம்பித்து கால்கள் வரை நிறைய கேள்விகளை உள்ளடக்கியது. அவள் மனதின் கேள்விகளுக்கு யாராவது எப்படியாவது பதில் சொல்லிவிடுவார்கள். ஒரே ஒரு துரத்தும் கேள்வி மட்டுமே அவளிடம் எப்போதும் எஞ்சியிருக்கும். அதற்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் அவளது வாழ்வு வெற்றி பெற்றுவிடும். எல்லாத் துயரிலிருந்தும் தனக்கு விடுதலைக் கிடைத்துவிடும் என்றே நம்புகிறாள்.

மது ஒவ்வொரு முறை கீழே விழும் போது உள்ளுக்குள் நொறுங்கிப் போகிறாள். தன்னால் உடல் வலியைத் தாங்க முடியவில்லை என்கின்ற மன அவசம் பெரும் வலியை அவளுக்கு தந்து கொண்டே இருக்கிறது. மதுவின் அப்பாவின் அலுவலக நண்பரின் மகள் பவித்ராவும் போலியோ அட்டாகினால் பாதிக்கப்பட்ட பெண். மது அவளைச் சந்தித்துப் பேசினாள் நம்பிக்கையடைவாள் என்ற நம்பிக்கையில் மகளை அழைத்துப் போகிறார் அப்பா. பவித்ராவை உற்றுப் பார்த்தால் தான் கால்களை லேசாய் சாய்த்து நடப்பது தெரியும். மிகவும் அலட்சியமாக வண்டி ஓட்டுகிறாள், தன்னம்பிக்கையுடன் பெரிய வங்கி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேல் இனிமையாகவும் சந்தோஷமாகவும் குறையற்றவள் போன்ற இயல்புடையவளாகவும் அவள் இருப்பதைப் பார்த்து அப்பா அவளை புகழ்கிறார். மதுவும் அப்படி ஆகவேண்டும் என்ற ஆசையில் அவளைப் பற்றி பவித்ராவிடம் சொல்கிறாள். மதுவுக்கு இது பெரும் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. அப்பாவிடம் தீர்மானமாக என்னால் இனி ஒரு போதும் நடக்கவே முடியாது என்று முகத்தில் அடிப்பதைப் போல சொல்லிவிட்டு வெளியே வந்து நின்றுவிடுகிறாள். மதுவுக்கு உள்ளுக்குள் பவித்ராவின் ஆளுமை பிடித்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது பிரச்சனையை அடுத்தவர்கள் முன்னால் அப்பா போட்டு உடைப்பதை அவள் சுய மரியாதை உள்ளத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மது தன் அப்பா அம்மாவிடம் காட்டும் மூர்க்கத்தனமான பிடிவாதம் மற்றும் adamancyக்கு காரணம் தன்னுடைய போலியோ பாதிப்புக்கு ஏதோ ஒரு வகையில் அவர்களின் அலட்சியம் காரணமாக இருக்கக் கூடும் என்ற வெளியே சொல்ல முடியாத அவளால் வகைப்படுத்த முடியாத ஒரு கோபம். தடுப்பூசி என்ற ஆப்ஷன் இருந்தும் அவர்கள் அதைக் கடைபிடிக்காமல் இருந்து விட்டதன் விளைவு வாழ்நாள் முழுவதும் அவள் தன்னுடலை சிலுவையாய் சுமக்க நேரிட்டுவிட்டது. டாக்டர் ஆப்ரஹாமின் விளக்கத்துக்குப் பிறகு பெற்றோர் அவளுடைய பிரச்சனைக்கு காரணமல்ல என்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனசுக்குத் தெரியாமல் போகிறது. ஒரு love-hatred relationship தான் அந்த மூவர் உலகில் நடந்து கொண்டிருக்கிறது. தன்னை அடித்து துவைக்கும் குடிகார கணவனுக்கு குற்றேவல் செய்வதிலிருந்து போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் ஒரே மகளுக்கு, அவள் தன்னை எந்த அளவு காயப்படுத்தியிருந்தாலும் அதை கவனம் கொள்ளாமல் மகளின் ஒவ்வொரு தேவையையும் மிகப் பரிவுடன் நிறைவேற்றுகிறாள் மதுவின் தாய். சில சமயம் சலிப்பில் மதுவைத் திட்டினாலும் தன் கடமையை ஒரு நாளும் அவள் செய்ய மறந்ததில்லை. மது அவர்களிடம் total dependant ஆக இருப்பதை வெறுத்தாள். ஆனால் அவளுக்கு வேறு வழியே இல்லை. எல்லாக் கதவுகளும் ஜன்னல் உட்பட ஆரம்பம் முதலே அவளின் வாழ்வில் அடைத்துவைக்கப்பட்டது. மேலும் அவள் நடக்கும் வரை அவள் வாழ்வை நடத்துவதை அவர்கள் நிறுத்தப் போவதில்லை என்ற பயம் மதுவை பிடித்து ஆட்டுகிறது. என்ன ட்ரெஸ் போடவேண்டும் என்பதில் ஆரம்பித்து சிகிச்சை முறைகளில் தொடந்து வண்டி ஓட்டியே ஆக வேண்டும் என்பது வரையில் பல விஷயங்கள் கட்டாயமாக்கப்பட்டிருந்ததை வெறுத்தாளோ. அவளது நன்மைக்கே என்றாலும் தன் விருப்பு வெறுப்புகளை தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்படும் போது படிப்பாளியான மது ஆவேசம் கொள்கிறாள், சில சமயம் மனசுக்குள் ஒடுங்கிப் போகிராள். அதன் எதிரொலியே அம்மாவை பல சமயம் ill-treat செய்வது, பெரும் மழையில் தனியாக வெளிநடந்து செல்வதும், அடிக்கடி எங்கேயோ எதைத் தேடியோ மனம் வெறுமையுற்றுக் கிளம்பிச் செல்வது போன்ற நடவடிக்கைகள் எல்லாம்.

மேலும் பல தளங்களுக்கு நம்மை நோக்கி பயணிக்கும் இந்நாவலின் மூலம் நாமும் பல திசைகளுக்கு செலுத்தப்படுகின்றோம். நாவலின் பலவீனமான அம்சம் எதுவென்று கூற வேண்டுமாயின் ஏகபட்ட சம்பவங்கள் அடுக்கப்படுதலும் ஏராளமான பாத்திரங்களின் பிரசன்னமும் ஆகும்.   
குறிப்பாக மதுவின் அப்பா பற்றிய விரிவான நினைவுக் குறிப்புகள், எழுத்தாளர் மார்க்கண்டேயனின் விஷயங்கள், இரண்டு பஸ் பயணத்தின் சம்பவங்கள், செளதாமினி பற்றிய விரிவான விளக்கங்கள் இன்னும் சில விஷயங்கள் இந்த நாவலுக்கு தேவை இல்லையோ என்று தோன்றுகிறது.

பெண்களின் உலகிற்குள் பல நுட்பமான விஷயங்களை அபிலாஷ் பதிவு செய்திருந்தாலும் சில இடங்களில் நெருடலாக உள்ளது. குறிப்பாக சுயப்புணர்ச்சி செய்த ஒருவனது விந்து போன்றது என்ற உதாராணம் ஓரிடத்தில் வரும். எவ்வளவு படித்த பெண், அனுபவம் மிக்கவள் ஆணுடனே வாழ்பவள் என்றிருந்தாலும் ஒரு பெண்ணால் விந்தின் கொழகொழப்பை எல்லாம் கற்பனை செய்து கம்பேர் பண்ண முடியாது. மது திருமணம் ஆகாத பெண். அவளுக்கு எப்படி இந்த மாதிரி ஒரு தாட் வரும்?

மதுவுடன் சேர்ந்து நாமும் ஆங்கில இலக்கியம் படிப்பதைப் போன்ற பிரம்மை நாவல் முழுவதும் நமக்கு ஏற்படுகிறது. எழுத்தாளர் ஆங்கில விரிவுரையாளர், சைக்காலஜி தெரிந்தவர் என்பதால் அவரின் கூற்று பல இடங்களில் மதுவாகத் தென்படுகிறது. இது அவரின் முதல் நாவல் என்று அறிவதால் அதை குறையாக நினைக்கவில்லை.

இன்னொரு நெருடல் மது தன் அப்பாவை கூட சில இடங்களில் வியந்து அவரிடம் இணக்கமாக இருந்திருக்கிறாள். ஆனால் தன் அம்மாவை ஆரம்பம் முதல் நாவலின் முடிவு வரை எரிச்சல் படுத்திக் கொண்டே இருக்கிறாள். அம்மா திட்டும் போது கூட அதைக் கண்டு கொள்ளாமல் பல தடவை சைலண்ட் டார்ச்சர் கொடுத்திருக்கிறாள். சில சமயம் குற்றவுணர்வு பொங்கி எழும் போது மட்டும் அம்மாவுக்கு கிச்சன் வேலைகளை அதுவும் அவள் தூங்கும் போதோ அல்லது உடல் நலம் சரியில்லாத போதோ செய்து தருகிறாள். மற்றபடி வழமையாக அம்மாவிடம் எரிச்ச்லுடனும் கோபத்துடனுமே தான் இருக்கீறாள். இதன் உளவியல் காரணம் புரிந்தாலும் தாய் மகளுக்கு இடையே intimate ஆக ஒரு தருணம் கூடவா இல்லாமல் போகும்?  அம்மாவின் தியாகம் பல சமயங்களில் மதுவுக்கு பிடிக்காமல் போகிறது. அவள் தருபவளாகவும் இவள் பெறுபவளாகவும் இருப்பது அவள் மனதை வாடிப் போகச் செய்கிறது. மிக நுட்பமாக வளர்ந்து வந்த வன்மம் சில சமயம் கொடூரமான வார்த்தைகள் மூலம் செய்கைகள் மூலமும் வெளிப்பட்டு விடுகிறது. மேலும் அம்மா அவள் கண் எதிரே நடமாடும் பெண். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல தோற்றமுடையவள். எத்தனை புத்தகங்கள் படித்து அறிவினை கூர்மை படுத்தியிருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் நமக்கு இல்லாதது நம் நேரிதிரில் உள்ளவர்களுக்கு இருந்தால் பெரும்பாலோர்க்கு பொறாமை வந்துவிடும். ஆனாலும் தன் அப்பாவையோ அம்மாவையோ பெரிதாக டார்ச்சர் கொடுப்பதில்லை. தன்னுடைய அதிருப்தியை மட்டுமே மது பதிவு செய்கிறாள். அவர்கள் தமது ஆசையை தன் தலைமேல் தூக்கி வைப்பதை மது ரசிக்கவில்லை. அம்மாவின் அழுகைகள், பிரார்த்தனைகள். அப்பாவின் பழைய பாடல்கள், அவரின் குடிப்பழக்கம், அவரது விருப்பம் எல்லாம் மதுவுக்கு பழகிவிட்டது, அவளின் நடக்க முடியாத கால்களைப் போலவே....ஏதோ ஒரு வகையில் தன்னையொத்த தன்யா, பாலு ஹாஸ்பிடலில் பார்த்த சிறு குழந்தை ஆகியோர் மதுவை சலனப்படுத்துகிறார்கள். அவர்களுக்காக அவள் நிறைய யோசிக்கிறாள். அவளால் தீர்வு சொல்ல முடியாவிட்டாலும் தன்னை மறந்து அவர்கள் நலனுக்காக ஏங்குகிறாள். அவளின் தாயுள்ளத்தைக் கண்டு நாம் நெகிழ்ந்து கரைகிறோம்.

நாவல் முழுவதும் கவித்துவமான வரிகள் தென்படுகின்றது. மெல்லிய அங்கதம் ஆங்காங்கே நம்மை புன்முறுவலுடன் வாசிக்க வைக்கிறது. நாகர்கோவில் வட்டார வழக்கு அருமையாக கையாளப்பட்டுள்ளது. மொழிநடை சிக்கலாகவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாகவும் இல்லாமல் இடைப்பட்ட விதத்தில் எளிமையின் அழகியலுடன் நகர்ந்தோடுகிறது. இதுவரை யாரும் உட்செல்லாத ஒரு பிரத்யேக உலகுக்குள் நம் கையைப் பிடித்து மெதுவாக மிக மெதுவாக அழைத்துச் செல்கிறது. நாம் வேகமாகச் சென்றால் இடறிவிடுவோம், மதுவை புரிந்து கொள்ள முடியாமல் போய்விடக் கூடும், எனவே நாவல் கொடுக்கும் மொழ்நடையில் அதன் ரிதத்தில் நாமும் உடன் சென்றால் அது நமக்கு வியப்பளிக்கும். டாக்டர் ஆப்ரஹாமின் வார்த்தைகள்
சற்று மிகையாக இருந்தாலும் அவர் கூறிய உண்மையை உள்வாங்கிக் கொள்கிறாள் புத்திசாலியான மது.

அபிலாஷின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் “நிஜத்தின் பிரச்சனை மிக எளிய விஷயம் தான். என்றாலும் யாருக்கும் இது பிடிப்பதில்லை. ஆர்.அபிலாஷின் இந்நாவல் கூறும் ஒட்டு மொத்த விஷயங்களின் சாரம் இதுதான்.

கால்கள் பரந்த வாசிப்பைப் பெற்று மேலும் பல சிறந்த ஆக்கங்களை ஆர் ஆபிலாஷ் தருவார் என்ற நம்பிக்கையில் அவரை வாழ்த்துகிறேன்.1 comment:

Prof. T. Ajith said...

All the best Abilash, I have not yet completed your book, still reading...

Uma Sakthi's review is good.

Ajith
Your Classmate